நிழல்களின் நினைவுகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 14, 2012
பார்வையிட்டோர்: 8,937 
 

நமது இறந்தகாலத்தின் குற்றங்கள் நீள நிழல்களாக நம்மைத் தொடர்கின்றன. அக்குற்றங்களுக்காக நாம் மனம் வருந்தினாலும், அவ்வருத்தம் அந்நிழல்களை அகற்றப் போதுமானதாயிருப்பதில்லை.

அப்பா சொன்னதில் எனக்கு நம்பிக்கையில்லை. செத்தவர்கள் எப்படி உயிருடன் வர முடியும்? எல்லாம் சுத்த பைத்தியக்காரத்தனம். சித்தப்பா ஏதோ குற்றவுணர்வால் அப்படி புலம்பியிருக்காரென்றால், அப்பா ஏன் அதை சீரியசாக எடுத்துக் கொண்டு நம்பிக் கொண்டிருக்கிறார்?

அன்றைக்குக் காலையில் தான் சித்தப்பாவின் டைரியைப் படித்திருந்தேன். சித்தப்பாவை நேற்று தான் தூக்கிலிட்டார்கள், மனித உரிமை அமைப்புகளின் வழக்கமான கோஷங்களுக்கிடையே. சீக்கிரத்தில் மரண தண்டனையை ரத்து செய்து விடுவார்கள் என்று நினைக்கிறேன். சித்தப்பா தான் கடைசியாக இருக்கக் கூடும்.

அப்பா காலையில் தான் சித்தப்பாவின் உடைமைகளை வாங்கிக் கொண்டு வந்திருந்தார். ஒரு பெட்டி நிறைய புத்தகங்களும், டைரிகளும். 2012ம் வருஷத்திலிருந்து 2030 வரைக்குமான டைரிகள்.

சித்தப்பாவை நான் அவ்வளவாகப் பார்த்ததில்லை. நான் கைக்குழந்தையாய் இருக்கும் போதே ஜெயிலுக்குப் போய்விட்டார். ஒரு தடவை பரோலில் வந்திருந்தார். ஆனால் அப்போது அம்மா என்னைப் பாட்டி வீட்டுக்கு அனுப்பிவிட்டார்.

அவரது டைரியைப் படிக்கத் தொடங்கினேன். 2012ம் வருடம்- அப்போது தான் அவன் எஞ்ஜினியரிங் முடித்திருந்தார். முடித்த கையோடு அந்தப் பெண்ணைக் கொன்று விட்டு ஜெயிலுக்குப் போய்விட்டார். அந்தப் பெண்ணின் போட்டோவை டைரியில் வைத்திருந்தார். அழகாகத் தான் இருந்தாள். அந்தக் கனவுகளைப் பற்றி எழுதியிருந்தார். அவள் வேறொருவனுடன் வாழ்வது போன்ற கனவுகள். அவர் ஒருவித மனநோயாளி என்றே எனக்குப் பட்டது. தன்னைக் காதலிக்கவில்லை என்ற காரணத்தால் மட்டும், இல்லை அப்படி கூடச் சொல்ல முடியாது, தன்னைக் காதலிக்கிறாளா இல்லையா என்று தெளிவாகச் சொல்லாததால் ஒரு பெண்ணைக் கொன்றவரைப் பற்றி வேறு என்ன சொல்ல?

இந்தக் காலத்தில் யாரும் அப்படிச் செய்வதில்லை. ஒத்துவரவில்லையென்றால் அடுத்தவருடன் டேட்டிங். நானும் கூட அப்படித்தான். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இது பிடிக்காது. பழையகாலத்து மனுஷர்கள். இருந்தாலும் பிடிக்காது என்பதை அவர்கள் வெளிப்படையாகச் சொன்னதில்லை. அப்படியே சொல்லியிருந்தாலும் நான் அதைப்பற்றிக் கவலைப்பட்டிருக்கப் போவதில்லை.

தொடர்ந்து சித்தப்பாவின் டைரிகளைப் படித்துக் கொண்டிருந்தேன். அவளைக் கொன்றதற்காக வருத்தப்படுவதாகத் தெரியவில்லை. சிறைச்சாலையில் நிம்மதியாக இருப்பதாக எழுதியிருந்தார். இப்போது அவரைக் கனவுகள் தொந்தரவு செய்வதில்லையாம். மனநோய் முற்றிய நிலை….

தொடர்ந்துள்ள பக்கங்களில் அவளைப் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை. அவளை ஒரேயடியாக மறந்து விட்டார் என்று தோன்றியது. தொடர்ந்து சிறைச்சாலையின் தினசரி வாழ்க்கைக்குள் முடங்கிப் போயிருந்தார். பத்துப் பன்னிரெண்டு டயரிகளில் இரண்டு வரி குறிப்புகள் மட்டும்.
2025ம் வருடம் ஒரு முழுப்பக்கம் நிரம்பியிருந்தது. எனக்குப் பின்னால் நின்ற என் அப்பா சொன்னார். “அவன் அன்னைக்குத் தான் பரோல்ல வந்தான்”.

ஜூன் 25,2025

இன்று காலையில் பரோலில் வெளியே வந்தேன். கேஸ் சுப்ரீம் கோர்ட்டுக்கு அப்பீலுக்குப் போயிருந்தது. அண்ணன் தான் தேவையில்லாமல் முயற்சி பண்ணிக் கொண்டிருந்தான். அவனைத் தான் போய்ப் பார்க்க வேண்டும். அவன் வீட்டுக்குப் போனேன். அண்ணன் சரியாகத் தான் இருந்தான். அண்ணி லேசாக என்னைப் பார்த்து பயந்ததாகத் தோன்றியது. பையன் வீட்டில் இல்லை.

அவளைக் கொன்ற இடத்துக்குப் போய் பார்க்க வேண்டும் போலிருந்தது. அண்ணனிடம் சொன்னேன். “நானும் வரேன்” என்று அவன் கிளம்பினான். அரை மணி நேரப் பயணம். அங்கே போயச் சேரும் போது ஐந்து மணியாகியிருந்தது. எதிரில் ஒருத்தன் பைக்கில் வந்தான். அவள் அண்ணன் தான். என்னைக் காரமாக முறைத்துக் கொண்டே போனான். பின்னால் ஒரு சின்னப்பையன். எல்லோருக்கும் அவரவர் வாழ்க்கை இருக்கிறது. எனக்கும் அவளுக்கும் தான் இல்லாமல் போய் விட்டது.

அதிர்ஷ்டமிருந்தால் நான் அவளுடன் வாழ்ந்திருக்கலாம். இல்லையென்றால் அவளை நினைத்துக் கொண்டாவது வாழ்ந்திருக்கலாம். சில தடுமாற்றங்களுக்கு நாம் கொடுக்கும் விலை அதிகமாகவே இருக்கிறது. அவள் இல்லாமல் போய்விட்டாள்.

சரியாக மணி 5:38. அந்த இடத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்தத் தார் ரோடு மெதுவாக மங்கி சிமெண்டு ரோடாக மாறியது. ரோட்டின் பக்கத்தில் அந்த செம்பருத்திப் புதரும் தோன்றியது. தூரத்திலிருந்து அவள் நடந்து வந்து கொண்டிருந்தாள். அன்றைக்குப் போட்டிருந்த அதே யூனிபார்ம் சுடிதார். கல்லூரியில் இருந்து வரும் மாலை நேரக் களைப்பு தெரிந்தாலும் தேவதையாகக் காட்சியளித்தாள். புதரிலிருந்து ஒருத்தன் வெளியே வந்தான். அது நான் தான்.

அவன் அவளுக்கு எதிரில் நடந்து போனான். அவளுடைய முகத்தில் மெல்லிய புன்னகை அரும்பிக் கொண்டிருந்தது. அவனின் முகத்தில் உணர்ச்சிகள் எதையும் காணோம். எதிராக நடந்து போய் அவள் கழுத்தை நெரித்தான். அவள் வேதனையில் திணறினாள். எனக்குப் போய் என்னைத் தடுக்க வேண்டும் போலிருந்தது! ஆனால் நின்றிருந்த இடத்திலிருந்து என்னால் அசையக்கூட முடியவில்லை. அவன் தொடர்ந்து அவள் கழுத்தை நெரித்துக் கொண்டிருந்தான். அவன் கண்களில் பய்முறுத்தக் கூடிய ஒரு வெறி இருந்தது. கொஞ்ச நேரத்தில் அவள் மூச்சு நிறுத்தப்பட்டது. அவளது உயிரற்ற உடல் கீழே விழுந்தது.

அந்தக் காட்சி மங்கத் துவங்கியது. சிமெண்டு ரோடு பழையபடி தார்ரோடாக மாறியது. அந்த செம்பருத்திப் புதரும் மறைந்து போயிற்று. என் அண்ணனைப் பார்த்தேன். அவனும் அதையெல்லாம் பார்த்திருந்தான். பதிமூன்று நீண்ட வருடங்களுக்குப் பிறகு அவள் முகத்தைப் பார்க்கிறேன். அதுவும் தோற்றமாக. எனக்கு அழுகை வந்தது. அடக்கிக் கொண்டேன். ஆண் பிள்ளைகள் அழக்கூடாது என்று எனக்குப் போதிக்கப்பட்டிருக்கிறது.

இது என்றைக்கும் நிகழுமா? ஒருவேளை நான் செத்துப் போய் விட்டால் அந்த நிகழ்வுக்குள் நுழைந்து, நான் அவளைக் கொல்வதை என்னால் தடுத்து நிறுத்த முடியுமா? முடியும் என்று நம்புகிறேன்.

அண்ணனிடம் சொன்னேன். “சுப்ரீம் கோர்ட்டோட நிறுத்திக்க. கருணை மனு, அது இதெல்லாம் வேண்டாம்”.

அந்த டைரியில் எழுதியிருந்ததைப் படித்த பிறகும் நான் புதிதான எதையும் நம்பவில்லை. செத்தவர்கள் எப்படி உயிருடன் எழும்ப முடியும்? அதுவும் பதினெட்டு வருஷத்துக்கு முன்னால் செத்துப் போனவர்கள் எப்படி?

அப்பா மணியைப் பார்த்தார். நாலரை ஆகியிருந்தது. “சரி, பைக்க எடு, அங்க போலாம்” என்றார்.

போயச் சேரும் போது மணி ஐந்தாகியிருந்தது, கிட்டத் தட்ட அரை மணிநேரக் காத்திருப்பு. அந்தத் தார் ரோடு மெல்ல மங்கத் தொடங்கி ஒரு சிமெண்டு ரோடாக மாறியது. பக்கத்தில் கம்பீரமாக எழுந்து நின்ற வீட்டுச்சுவர் மங்கி மறைந்து போய் அங்கே ஒரு செம்பருத்திப் புதர் தோன்றியது. கொஞ்சம் தள்ளி நிறுத்தியிருந்த பைக்கும் மெல்ல மறையத் தொடங்கியது. அதைத் தடுக்கலாமென்று முன்னேறினேன். முடியவில்லை. பைக் காற்றில் கரைந்தது போய் காணாமற்போய் ஒரு வெற்றிடம் உருவானது.

மெதுவாக ஒரு பெண்ணுருவம் நடந்து வருவது தெரிந்தது. சித்தப்பாவின் டைரியில் பார்த்த போட்டோவிலிருந்த அதே பெண். அந்த செம்பருத்திப் புதரிலிருந்து ஒரு உருவம் வெளிப்பட்டது. என் சித்தப்பா தான். அந்தப் பெண் என் சித்தப்பாவைப் பார்த்து மெலிதாகப் புன்னகைத்தாள். சித்தப்பா அந்தப் பெண்ணுக்கெதிரே நடந்து சென்றார். அவரது கைகள் உயரத் தொடங்கின. உயரத் தொடங்கின கைகள் அப்படியே தளர்ந்து விழுந்தன.

“நடந்துருச்சு”, அப்பா உற்சாகத்துடன் கூவினார். “அவன் நெனச்சத நடத்திட்டான். சீக்கிரமே அவன் டைரில போய் எழுதி வை. இத மறந்துராத”.

அந்தக் காட்சி தொடர்ந்தது. அவர்கள் இருவரும் சீரியசாக ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். மெல்ல மெல்ல அக்காட்சி மறைந்தது. என் பைக் திரும்ப உருவானது.

“மறப்பதா? சித்தப்பாவையும், சித்தியையும் எப்படி மற்கக முடியும்? சித்திக்கு என்மேல் ரொம்ப பிரியம். வீட்டுக்கு வரும் போது இனிப்பு ஏதாவது வாங்கி வராமல் இருக்க மாட்டாள். அம்மா தான் பயமுறுத்துவாள், “இப்பிடி இனிப்பா சாப்பிட்டா சீக்கிரமே தாத்தாவ மாதிரி ஷுகர் வந்துரும்”.

லீவில் சித்தப்பா வீட்டுக்குப் போவேன். அவர் ஒருமாதிரி. எனக்கு சித்தப்பாவை விட சித்தியைத் தான் பிடிக்கும். இதையெல்லாம் எப்படி என்னால் மறக்க முடியும்?”

அப்பா என்னைப் பார்த்தார், “வா, வீட்டுக்குப் போலாம். சித்தப்பாவும் சித்தியும் ஏழு மணிக்கு வீட்டுக்கு வரேன்னு சொல்லிருக்காங்க”.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *