நில்-கவனி-செல்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 11,055 
 

ராஜினாமா கடிதம் எழுதிக் கொண்டிருந்த சொக்கலிங்கத்தின் கைகளை, உரிமையோடு பற்றித் தடுத்தார் வேலுச்சாமி.
பற்றிய கைகளை ஆவேசமாக உதறினான் சொக்கலிங்கம்.
என்றாலும், ராஜினாமா கடிதத்தை முடிக்க விடாமல், அவனை மீண்டும், மீண்டும் தடுத்து, அந்த கடிதத்தை பிடுங்கிக் கொண்டவர், “”என் கூட வா…” என்று வெளியில் அழைத்தார்.
“”வெளியில் போகத்தான் போகிறேன்; இனி, ஒரு நிமிஷம் இங்கே நின்றால், நான் மானமுள்ள மனுஷனில்லை. இங்க எழுத விடலைன்னாலும், வெளியிலிருந்து லெட்டர் எழுதியனுப்ப முடியாதா என்ன?” என்ற சொக்கலிங்கம், உணர்ச்சிப் பிழம்பாய் இருந்தான்.
நில்-கவனி-செல்!எல்லார் பார்வையும் தன் மீது திரும்பியிருப்பதும், அவர்களுக்கு தான் வேடிக்கைப் பொருளாய் மாறி விட்டதையும், நினைக்க அவமானமாக இருந்தது.
அவனை அந்த நிலைக்கு தள்ளிய மானேஜர், எதுவும் நடக்காதவர் போல, கண்ணாடி அறைக்குள், “ஏசி’யை அனுபவித்தபடி, பி.ஏ.,வுக்கு எதையோ, “டிக்டேட்’ செய்து கொண்டிருந்தார்.
காலில் சிக்கி நசுங்கிப் போகும் எறும்புகளைப் பற்றி, யானைகள் கவலைப்படுவதில்லை.
இந்த மானேஜர் யானை, எவ்வளவு அனாவசியமாய் அந்தக் காரியத்தை செய்து விட்டது. கிளார்க் என்றால் மட்டமா? இங்கே எல்லாமே, எப்போதுமே தப்பே இல்லாமல்தான் நடக்கிறதா? கேவலம் ஒரு சின்ன மிஸ்டேக். கூட்டலில் ஒரு இலக்க எண் விடுபட்டு விட்டது; மறு கூட்டலில் சரி செய்து விட முடியும். அப்படியே கண்ணை மறைத்து, அந்த தவறு ஆடிட்டிங்கிற்கு போனாலும், சுழித்து, சரி செய்ய போகின்றனர். அதிகம் போனால் சம்பந்தப்பட்ட கிளார்க்குக்கு, ஒரு மெமோ வரப் போகிறது; வந்து விட்டு போகட்டும். இந்த ஆபீசில் மெமோ வாங்காதவர் யார் இருக்கின்றனர். பெரிய தவறு செய்து, சஸ்பெண்ட் ஆனவர்களும் இருக்கின்றனர். அவர்கள், இப்போதும் தப்பும் தவறுமாகத்தான் வேலை செய்கின்றனர்.
வேலையில் சேர்ந்த மூன்று வருடத்தில், ஒரு ரிமார்க் கிடையாது. ஆண்டு விழாக்களில் பாராட்டுப் பெற்ற ஊழியன் என்ற கவனம் கூட இல்லாமல், வந்ததும் வராததுமாய், லெட்ஜரைப் பிடுங்கி, முடிக்காத கணக்கில் தவறை கண்டுபிடித்து, “கண்ணு, முன்னாடிதானே இருக்கு; முதுகில் இல்லையே… எதிர்ல அழகான டைப்பிஸ்ட் இருக்குறதால புத்தி தடுமாறுதோ. தண்ணியில்லாத காட்டுக்கு டிரான்ஸ்பர் செய்துடுவேன்; ஜாக்கிரதை…’ என்று எரித்துவிட்டு போவதை, எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்.
“நானா பெண்ணுக்கு அலைகிறேன். டைப்பிஸ்ட் அழகாயிருந்தால், உங்கள் கேபினில் ஒரு நாற்காலி போட்டு உட்கார வைத்துக் கொள்ள வேண்டியதுதானே…’ என்று கேட்க எவ்வளவு நேரமாகும். இந்த ஆபீஸ் என்ன, அவர் வீட்டு சொத்தா; நான் கொத்தடிமையா?
பதிலுக்கு என்ன கேட்டு விட்டேன்… “என்ன சார்… காலையில மனைவியோடு சண்டையா?’ என்று, ஜோவியலாகத் தானே கேட்டேன். அவர், அவ்வளவு காயப்படுத்தும் போது, கொஞ்சமாவது எதிர்வினையாற்றாமல் எப்படி விட முடியும். அதற்கு, வாய்க்கு வந்தபடி பேசிவிட்டு போகிறாரே… இதுவே, சட்டப்படி குற்றம். “வெளியில போனா சாப்பாட்டுக்கு லாட்டரி அடிக்க வேண்டியிருக்கும்…’ என்று மிரட்டல் வேறு.
“இதற்கு மேலும், கூழை கும்பிடு போட்டு, இங்கு இருக்க வேண்டுமா… இன்னைக்கு நடந்தது, நாளைக்கும் நடக்காது என்று என்ன நிச்சயம். தன்மானத்தை விட்டு வேலை செய்துதான் ஆகணுமா… நாட்டில் வேலைகளே இல்லையா?’ என்று தீர்மானித்து, கால் கடுதாசி எழுதும் போது, இந்த வேலுச்சாமி குறுக்கிடுவது, மேலும் எரிச்சலூட்டியது.
“”தடுக்காதீங்க… ஒப்புக்கறேன். இது, நீங்க வாங்கிக் கொடுத்த வேலைதான். அதுக்காக, மானேஜர் துப்புற எச்சிலை முகத்தில் ஏந்திக்கிட்டு உட்கார்ந்திருக்க என்னால முடியாது; விடுங்கண்ணே!”
“”ராஜினாமா வேணாம்; ஒரு வாரம் லீவ் எழுதிக் கொடு; நான் பார்த்துக்கறேன். வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடு. பிறகு பார்க்கிறேன்,” கெஞ்சும் பாவனையில் கேட்டார்.
“”ஒரு வாரத்துக்குப் பிறகும் இவர் முகத்திலதானே விழிக்கணும்; சரிப்படாதுண்ணே… என்னை விடுங்க. உலகம் பெரிசு; எப்படியும் பிழைச்சுக்கலாம்,” என்றவனை, சமாதானப்படுத்தி, லீவ் லெட்டர் எழுதி வாங்கி, அனுப்புவதற்குள் அவருக்கு போதும், போதும் என்றாகியது.
ஏதுங்கெட்ட நேரத்தில் வீடு திரும்பியவனைப் பார்த்து எல்லாருக்கும் ஆச்சரியமும், சந்தேகமும் வந்தது…
“”என்னப்பா ஆச்சு… சீக்கிரம் வந்துட்டே,” என்று, எல்லாரும் அவனை சூழ்ந்து கொண்டனர்.
அவனுக்கு இருந்த மன நிலையில், யாருக்கும் பதில் சொல்ல விரும்பவில்லை. “”தலைவலி,” என்று சொல்லி, அறைக்குள் போய், கதவு சாத்திக் கொண்டான்.
லீவ் லெட்டர் எழுதிக் கொடுத்துவிட்டு வந்தது கோழைத்தனம் என்று தோன்றியது. முகத்திலடித்தாற் போல், ராஜினாமா கடிதத்தை வீசிவிட்டு, அரிமா போல் கம்பீரமாக வெளியேறி இருக்கலாம்.
காயத்துக்கு களிம்பு போட்டுக் கொள்ள அவகாசம் கேட்பது போல, லீவ் லெட்டர் கொடுத்ததை, அவனால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. வேலுச்சாமி மீது கோபம் பாய்ந்தது.
கலெக்டர் வேலையா வாங்கி கொடுத்து விட்டார்… கிளார்க் உத்தியோகம்… “ச்சை’ என்று புரண்டு படுத்தவன், அப்படியே தூங்கி விட்டான்.
எவ்வளவு நேரம் உறங்கினானோ… அம்மாவின் சத்தமான பேச்சுக்குரல் கேட்டு, கண் விழித்தான்.
பேச்சு தொணியை வைத்து வேலைக்காரி வந்திருக்கிறாள் என்பதையும், தாமதமாக வந்ததற்காகவோ, ஏதாவது வேலையில் குறை வைத்ததற்காகவோ அம்மா அவளைக் கடிந்து கொண்டிருந்தாள்.
வார்த்தைகள் தடிமனாக வந்து விழுந்து கொண்டிருந்தன…
“”உனக்கு எத்தனை முறை சொல்றது… ஒழுங்கா வர்றதுமில்லை. வந்தால் ஏதோ கவர்னர் கையெழுத்து போட்டுட்டு போற மாதிரி பேர் பண்ணிட்டு போறது… என்ன நினைச்சுக்கிட்டிருக்கிற மனசுல. உன்னை விட்டால், வேற ஆள் கிடையாதுன்னு நினைச்சுட்டியா. நொடியில நாலு ஆட்களை சேர்க்க முடியும். “நான் வர்றேன்… நீ வர்றேன்…’ன்னு கேட்டுக்கிட்டிருக்காங்க. தினமும், இரண்டு வேளை வந்து செய்யவும் தயாரா இருக்காங்க. நீ வருவது ஒரு வேளை; அதுவும், நேரம் தவறி வர்றே.
“”உன்னை நம்பி துணி ஊற வைக்கற நாள், நீ வராம மட்டம் போடற. கடைசியில நாங்களே துவைச்சுக்க வேண்டியிருக்குது. உனக்கு சம்பளத்தையும் கொடுத்துட்டு, வேலையை நாங்க செய்துக்கணுமா… ஏதோ இரண்டு குழந்தைகளை வச்சுக்கிட்டு சிரமப்படறீயேன்னு நீ கேட்ட சம்பளத்தை கொடுத்துக்கிட்டிருந்தால், இப்படி ஆட்டம் காட்றீயே… நாளையிலிருந்து வேற வீடு பார்த்துக்க,” தீர்மானம் வாசித்துக் கொண்டிருந்தாள் அம்மா.
வேலைக்காரி என்ன செய்வாள் என்று, அறைக்குள்ளிலிருந்தே அனுமானித்தான் சொக்கலிங்கம்.
அங்கே அம்மா இருப்பதையோ, அவர்கள் திட்டிக் கொண்டிருப்பதையோ அவள் பொருட்படுத்தாமல், வந்த வேகத்தோடு துணிகளை துவைத்து, அலசிப் பிழிந்து கொண்டிருப்பாள். பாத்திரக் கூடையை இழுத்து வைத்து துலக்குவாள். துலக்கிய பாத்திரங்களை மேடையில் கவிழ்த்து வைப்பாள். பிழிந்து போட்ட துணிகளை கொண்டு போய், மாடி கொடியில் போடுவாள். மீந்ததை கொடுத்தால், வழித்து வாயில் போட்டுக் கொள்வாள். அதிகம் போனால், சிரித்துக் கொண்டே, “கோவிக்காதீங்க… பாப்பாவுக்கு திடீருன்னு காய்ச்சல். டாக்டர்கிட்ட போனால், டைபாயிடுன்னுட்டாரு. ஊசி போட்டு, மருந்து கொடுத்தாரு. நாள் எல்லாம் கண் திறக்காமல் படுத்திருந்திச்சு. விட்டுட்டு வர மனசில்லை. இன்னைக்குத்தான் கண் முழிச்சாள். பக்கத்துல பார்த்துக்கச் சொல்லிவிட்டு வந்தேன்…’ என்பாள்.
ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணங்கள்.
கோவிலுக்கு போயிட்டேன்… நாத்தனார் ஊரிலிருந்து வந்துட்டாள்… கணவனுக்கு காய்ச்சல்… மாமனாருக்கு சீரியஸ்…
ஒவ்வொரு முறையும் அம்மா அப்படி திட்டி தீர்ப்பாள். அவர் வாய்க்கு பயந்து எத்தனையோ பேர் பாதியில் நின்று விட்டனர். இந்த சாந்திதான், ரெண்டு வருஷமா தாக்கு பிடிக்கிறாள்; கின்னஸ் சாதனை.
“அம்மா… இது உனக்கே டூ மச்சா தெரியலை. நாம கொடுக்கறது, ஐநூறு ரூபாய். நீ, 4,000 ரூபாய் அளவு திட்டித் தொலைக்கிறே… அதுவும் பெண்தானே… நல்ல இடத்துல பொறந்திருந்தால், நாலு எழுத்து படிச்சுட்டு, கவுரவமா ஒரு வேலைக்கு போயிருக்கும். இல்லாத குறைக்கு வீட்டு வேலை செய்ய வந்தால், சின்ன தவறுக்கு கூட இப்படி பேசறீயே… அவ மனசு எப்படி கஷ்டப்படும்…’ என்று ஒரு முறை கேட்டதற்கு, கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல், “ஐநூறோ, வெறும் ஐம்பது ரூபாயோ… கொடுத்த சம்பளத்துக்கு, ஒப்புக்கிட்ட வேலையைச் செய்துட்டு போகணும். இப்படி அரை நாள், ஒரு நாள்ன்னு மட்டம் போடறவளை தட்டிக் கேட்கலைன்னா இன்னும் ஏறிடுவாங்க. திட்டினா பாதிக்குதுன்னா ஏன் மறுநாளைக்கு வர்றாள். இங்கே சலுகை அதிகம்ன்னுதானே. இதிலெல்லாம் நீ தலையிடாதே…’ என்று விரட்டினாள்.
இன்று வழக்கத்துக்கு அதிகமாக வசவு விழுவதைக் கேட்டு, பொறுமையிழந்து எழுந்து உட்கார்ந்தான் சொக்கலிங்கம்.
வேலைக்காரி வாசலைக் கடக்கும் போது, “”சாந்தி… நாளைலிருந்து வராதே… வேற இடம் பார்த்துக்குங்க. அம்மா உங்களை திட்றதை என்னாலயே பொறுத்துக்க முடியல,” என்றான்.
அவள் நின்று, அவனைப் பார்த்து,””என்ன தம்பி அப்படி சொல்றீங்க… அம்மா இன்னைக்கு நேத்தைக்கா திட்டுறாங்க. இதுக்கெல்லாம் கோவிக்கலாமா? திட்டுறவங்கதான் பாசத்தோடு தட்டுல சோறும் போடறாங்க. சும்மா திட்டுவாங்களா யாராச்சும். நான் செய்யற தப்புக்காக கண்டிக்கறாங்க. நானும், வேணும்ன்னா தப்பு செய்றேன். சூழ்நிலை அப்படி. ஒவ்வொன்றுக்கும் கோவிச்சுக்கிட்டு போனால் முடியுமா… மத்த இடத்துல இதை விட மோசமால்லாம் கேட்பாங்க தம்பி. அதுக்கு அம்மா தேவலை!” என்று முந்தானையில் முகத்தைத் துடைத்துக் கொண்டு போவதைப் பார்க்க மனது விண்டு போனது.
“”வாழ்க்கை இவளுக்கு பொறுமையை கற்றுக் கொடுத்திருக்கும். நாலு இடத்துல திட்டு வாங்கி பழகினதால பக்குவம் வந்திருச்சு. வீட்டுக்கு வீடு, வேலைக்காரர்கள் தேவைப்படற நிலையில, வேலைக்காரியே பொறுமையா இருக்காள்னா… அவ்வளவு சுலபமா கிடைக்காத கிளார்க் வேலையை அனாவசியமா தூக்கி எறிய இருந்தியே… அடுத்த மாசம் டிபார்ட்மென்ட் எக்சாம். எழுதி பாஸ் செய்தால், புரொமோஷன். அடுத்தது மேல போய் ஒரு நாள் நீயே மானேஜர் சீட்ல உட்காரப் போறே. வேலைக்காரியைக் காட்டிலும், எத்தனை பொறுமையாய் இருக்கணும்,” என்றபடி வந்தார் வேலுச்சாமி.
“”நல்ல வேளை… நீங்க தடுத்தீங்க,” என்று நன்றியுடன் கைகளைப் பற்றினான்.
“”வீட்டுக்கு விஷயம் தெரியாது,” என்றான் சொக்கலிங்கம். “”என்ன விஷயம் என்று கேட்டு வந்தாள் அம்மா. வேலுச்சாமி சுதாரித்து, “”என்னப்பா… தலைவலி எப்படியிருக்கு?” என்று நாசூக்காக விசாரித்தார்.
“”அதான் நீங்க உடனே மருந்து போட்டு அனுப்பினீங்களே… சரியாயிடுச்சு!”
“”உனக்கு தலைவலின்னதும், மானேஜர் கூட பீல் பண்ணாரு. “இருந்தாலும், நான் அப்படி பேசியிருக்கக் கூடாது. நான் அவர்கிட்ட சாரி சொல்லணும்…’ன்னாரு. “பரவாயில்ல சார்… சொக்கன் இந்த தலைவலியையெல்லாம் பெருசா எடுத்துக்க மாட்டான். அஞ்சு நாள் லீவை அரை நாளாய் குறைச்சுக்கிட்டு, நாளைக்கு வந்துடுவான்…’ன்னு சொன்னேன்; நான் சொன்னது சரிதானே…” என்றார்.
“”ஆமாம்ண்ணா… காலையில் வந்துடறேன்!” என்றவன், அம்மாவிடம், அவருக்கு காபி கொண்டு வரச் சொன்னான்.
“”இவன் திடீர்ன்னு தலைவலின்னு வந்து படுத்ததும், என்னவோ ஏதோன்னு நினைச்சு பயந்துக்கிட்டிருந்தோம். இப்ப தெம்பா இருக்கிறத பார்க்கும்போதுதான் நிம்மதியாயிருக்கு,” என்றபடி காபி கொண்டு வரப் போனாள் அம்மா.

– அக்டோபர் 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *