நிலமும் பொழுதும்

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 25, 2021
பார்வையிட்டோர்: 5,771 
 

“ஒரு குழி நிலம் ஐம்பத்துஏழாயிரம்ன,நம்ம மொத்த நிலம் ஐம்பது குழிகளும் எவ்வளவு வரும்?” என்று கேட்டார் தாத்தா திருநாவுக்கரசு, தனது பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வையும், நீட் தேர்வையும் முடித்து தேர்வு முடிவுக்காக காத்திருந்த பேத்தி ஆண்டாளிடம் . “ஊர்ல யார் நிலத்தை வித்தாலும் விலைய விசாரிச்சுட்டு வந்து இந்தக் கணக்கு போடுறத ஒரு வேலைய வச்சுருக்காரு தாத்தா என்று சலித்துக் கொண்டாள் பேத்தி ஆண்டாள். இருந்தாலும், தனது மனக்கண்ணில் கணக்கை போட்டு ” இருபத்து எட்டு இலட்சத்து ஐம்பதாயிரம்” என்றாள் பேத்தி. மீசையை முறுக்கிக் கொண்டார் தாத்தா திருநாவுக்கரசு. “வெறும் நான்காயிரத்தை இருபத்து எட்டு இலட்சமாக மாற்றத் தெரிந்த வித்தைக்காரன் உன்னோட தாத்தா ” என்று தனது சுய விளம்பர புராணத்தை பாடத் தொடங்கினார் திருநாவுக்கரசு. ஐம்பத்துஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வெரும் நாலாயிரம் ரூபாய் கொடுத்து இந்த ஐம்பது குழி நிலத்தையும் , அதில் இருந்த ஓட்டு வீட்டையும் அக்ரஹார சீனிவாச ஐயங்காரிடம் இருந்து வாங்கி இருந்தார் திருநாவுக்கரசு.

இன்றைக்கு, கீழத்தஞ்சை முழுவதும் உள்ள , எல்லா அக்ரஹாரங்களும் கதம்ப மாலை மாதிரி, இன்ன சாதிக்கு இந்த தெரு என்று இல்லாமல், அனைத்து சமூக மக்களும் பொங்கல் கூட்டுக்கறி மாதிரி கலந்து இருந்தாலும், ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை அப்படி அல்ல. ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு தெரு. ஒரு நாள் மழை பெய்தாலே, சாலைக்குள் தண்ணீர் ஓடுகிற மாதிரி பள்ளமான பகுதிகளில் இருந்த தெருக்கள் பெரும்பாலும் சேரிகளாகவே இருந்தன. கொஞ்சம் மேடான பகுதிகளில் இருந்த தெருக்கள் அக்ரஹாரங்களாகவே இருந்தன. மரத்தை துளைக்கிற வண்டு,மரத்தில் மட்டும் இல்லாமல், பழத்தின் எந்தப் பக்கத்திலும் துளையிடாமல், பழத்தின் உள்ளே இருக்கும் விதைக்குள் வாழ்க்கை நடத்துவதுபோல , சாதியின் கொடுங்கோண்மை தெரு அளவில் மட்டும் நின்றுவிடாமல்,தெருவின் உள்ளே எப்படி வீடு கட்டவேண்டும் என்ற கட்டுமானத்திலும் படர்ந்திருந்தது. ஆம், சேரிக்காரன் ஊர்த்தெருவில் வீடு கட்ட முடியாது என்பதல்ல,சேரிக்குள்ளே குடிசையை தவிர்த்து ஓட்டு வீடோ, மேத்தை வீடோ கட்டக்கூடாது என்பதே எழுதப்படாத விதி. சேரிக்குள் கட்ட முயன்ற சில ஓட்டு வீடுகள் பாதியளவிலே,குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல பிய்த்து எறியப்பட்ட வரலாறுகள் கீழத்தஞ்சை முழுவதும் சுதந்திர இந்தியாவில் நடைப்பெற்றன.

கீழத்தஞ்சை மாவட்டம், மாங்குடி அக்ரஹாரத்தில், 1965ம் ஆண்டு மொத்தம் ஒன்பது வீடுகள் இருந்தன, ஐந்து அய்யர் சமூக வீடுகளும் , மூன்று அய்யங்கார் சமூக வீடுகளும் ,ஒரு குறுக்கல் வீடும் இருந்தன. அன்றையக் காலக்கட்டத்தில்,கும்பகோணம் கலைக் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்த சீனிவாச ஐயங்கார் அருகில் உள்ள புலிவலம் பெருமாள் கோயிலின் மடப்பள்ளியில் கைங்கரியம் செய்துவந்தார். அந்தப் பெருமாளின் ஆசிர்வாதத்தால், சீனிவாசனுக்கு சென்னையில் செயல்பட்டுவத்த சுந்தரம் கேலட்டன் கம்பெனியில் கணக்களர் பதவி, மாத சம்பளம் ரூபாய் 100க்கு, கிடைத்தது.

சென்னையில் குடியேறுவதற்காக, மாங்குடி அக்ரஹாரத்தில் இருந்த ஐம்பது குழி நிலத்தையும் அதில் உள்ள ஓட்டு வீட்டையும் ரூபாய் நான்காயிரத்திற்கு விற்க முயன்றான். ஆனால், அவ்வளவு பணம் கொடுத்து வாங்க அந்த அக்ரஹாரத்தில் மட்டும் அல்ல சுற்றி உள்ள யாரிடத்திலும் பணம் இல்லை.

அதே காலக்கட்டத்தில், மாங்குடி ஊர் தெருவில் வசித்து வந்த திருநாவுக்கரசின் தந்தை பழநி இரணுவத்தில் பணிபுரியும் போது, 1965 ஆம் ஆண்டு இந்திய பாகிஸ்தான் போரில் வீரமரணம் அடைந்தார். அன்றைய மத்திய, மாநில அரசுகளும், இராணுவமும், மற்ற தனியார் நிறுவனங்களும் கொடுத்த இழப்பீடு மூலமாக ரூபாய் நான்காயிரம் திருநாவுக்கரசுக்கு வந்தடைந்தது. பணம் வரும் போது எப்போதும் தனியாக வருவதில்லை, கூட புதிய சொந்தப்பந்தங்களையும், ஆலோசகர்களை கூடவே அழைத்து வரும் என்பதற்கு இணங்க, இந்த நாலாயிரத்தை என்ன செய்லாம் என்று பல ஆலோசனைகள் வந்து குவிந்தன.

பித்தளைப் பாத்திரங்களை அடமானம் பிடித்து வட்டிக்கு பணம் கொடுக்கலாம் என்றார்கள் சிலர், கீழத்தஞ்சைக்கு புதிய வரவாக வந்திருந்த டிராக்டர் வண்டியை வாங்கலாம் என்றார் அந்த வண்டியை ஓட்டத் தெரிந்ந நண்பர், விலைக்கு வருகிற வயல்களை வாங்கலாமே என்றனர் சிலர், தங்கம் வாங்கலாம் என்றனர் குடும்பத்தினர், மெத்தை வீடு கட்டு என்றார் நண்பர் ஒருவர், பக்கத்து கிராமத்தில் உள்ள அரிசி ஆலையைக் குத்தகைக்கு எடுக்கலாம் என்றார் ஒருவர்.அதிக வட்டி தருவதாக கூறி கடன்கேட்டும் சிலர் வந்தனர். தந்தை இறந்து போன சோகம் மறைந்து, இத்தப்பணத்தை என்ன செய்வது என்றக் குழப்பம் குடிக்கொண்டது திருநாவுக்கரசின் மனதில்.

வட்டிக்கு பணம் கொடுப்பதும், வட்டிக்கு பணம் வாங்குவதையும் தனது வாழ்நாள் முழுவதும் தவிர்த்த தனது தந்தையை நினைத்தபோது, திருநாவுக்கரசு கடன் கொடுத்தல் மற்றும் அடகுக்கடை வைத்தல் போன்ற யோசனைகளைத் தவிர்த்தார். தனது தந்தையின் வீரமரணத்தால் கிடைத்த இந்தப் பணத்தை ஒருபோதும் அவரது வாழ்வியல் கொள்கைக்கு எதிராக செலவிட விரும்பவில்லை.

தனது வீட்டு வாசலுக்கு முன் ஒரு டிராக்டர் வந்து நிற்பதைப் பெரும் பெருமையாக கருதினாலும், காந்திய பொருளாதார அறிஞர் குமரப்பாவின் டிராக்டர் பற்றிய கேள்விகள் திருநாவுக்கரசின் டிராக்டர் வாங்கும் விருப்பத்தை களைத்தது. ” வயலில் உழவு மாடு போல டிராக்டர் சாணி போடுமா? அல்லது நிலம் இல்லா வேளாண் தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்குமா இந்த டிராக்டர்? இந்த இரண்டையும் செய்யாத டிராக்டர் நமக்கு எதுக்கு?

இந்த காரணங்களைக் கடந்து, திருநாவுக்கரசுக்கு இன்னுமொரு புரிதலும், டிராக்டர் பற்றியச் செய்தியும் அறிந்திருந்தார். ஒரு டிராக்டரை ஒரு போதும் சொந்தப் பணத்தில் வாங்கக் கூடாது என்றும், அரசின் மாணியத்திலோ, அல்லது வங்கி கடனிலோத்தான் வாங்க வேண்டும். இந்தக் காரணங்களால் டிராக்டர் வாங்கும் யோசனையையும் உதரித் தள்ளினார்.

அதிக அளவில் வயல்களை வாங்கி பெரிய அளவில் பயிர் சாகுபடி செய்யலாம் என்ற உள்ளக்கிடைக்கை இருந்தாலும். கீழத்தஞ்சையில் கவேரியாற்றின் தண்ணீரில் விவசாயம் செய்யும் திருநாவுக்கரசு. கர்நாடகாவில் புதியதாக கபினி ஆற்றில் அணை கட்ட நடைபெறும் ஆரம்ப கட்ட வேலைகளைப் பற்றிய செய்தி, விவசாயத்தின் வருகாலத்தின் மீது நம்பிக்கை இழக்கச் செய்தது. இதனால் வயல் வாங்கும் யோசனையையும் கைவிட்டார் திருநாவுக்கரசு.

தங்கம் வாங்குவது சிறந்த யோசனையாக தெரிந்தாலும், அன்றையத் தேதியில் ஒரு பவுனின் விலை ஐம்பது ரூபாய். ஆகையால் நாலாயிரத்தில் மொத்தம் எண்பது சவரன் வாங்கலாம். இந்த எண்பது சவரன் பவுனை வைத்துக்கொண்டு நாம் என்ன நகைக்கடையா வைக்கப் போகிறோம் என்ற கேள்வி வந்தது. மற்றும் இந்த எண்பது பவுனை பாதுகாக்க ஒவ்வொரு இரவின் தூக்கத்தையும் தொலைக்க வேண்டும் என்பதாலும், தங்கம் வாங்கும் யோசனையை மனதில் இருந்து கழற்றினார்.

அரிசி ஆலையைக் குத்தகைக்கு எடுப்பது நல்ல யோசனைதான். ஆனால் அதற்கு அந்த ஆலை முதலாளி அண்ணாமலைச் செட்டியார் ஒத்துக்கொள்வார என்ற சந்தேகத்தில், அந்த யோசனையையும் காற்றில் பறக்கவிட்டார்.

இவ்வாறாகத் தனக்கு வந்த அனைத்து யோசனைகளையும் புறந்தள்ளிய திருநாவுக்கரசு, இரண்டு நாட்களாக மனக் குழப்பத்தில் திரிந்து வந்தார். இந்திலையில் தனது மன அமைதிக்காக புலிவலம் பெருமாள் கோயிலுக்கு போய்வரலாம் என்று கோயிலுக்கு சென்றார். கோயிலில் மடப்பள்ளி வாசலில் எதேச்சையாக சீனிவாசனை சந்தித்தார். ” வாட – போட ” என கூறிக்கொள்ளும் அளவிற்கு நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும், பொது வெளியில் திருநாவுக்கரசு எப்போதும் சீனிவாசனை ” சுவாமி ” என்ற அழைப்பதையே வழக்கமாக வைத்திருந்தார். மடப்பள்ளி வாசலின் படிக்கட்டில் சீனிவாசன் அமர்ந்து கொள்ள, திருநாவுக்கரசு சீனிவாசனுக்கு எதிரே நின்று கொண்டு பேசத் தொடங்கினார்கள். சீனிவாசன் திருநாவுக்ஙரசின் தந்தையின் துக்க நிகழ்வை விசாரித்துவிட்டு தனது ஆறுதலை தெரிவித்தார். பிறகு சீனிவாசனுக்கு கிடைத்துள்ள புதிய வேலைக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார் திருநாவுக்கரசு.

இந்தப் பேச்சு நீண்டு கொண்டிருக்கும் வேளையில், சீனிவாசன் தனது ஓட்டு வீட்டையும், ஐம்பது குழி இடத்தையும் விற்கப் போவதாகவும், ரூபாய் நான்காயிரத்திற்கு யாரவது கேட்டால் கொடுத்துவிடலாம் என்று இருப்பதாக சொன்னார். அந்த வீட்டை நாம் ஏன் வாங்கக் கூடாது என பளிச்சிட்டது. அடுத்த வினாடியே ” நானே வாங்கிக் கொள்ளவா?” என்றார் திருநாவுக்கரசு. இதைச் சற்றும் எதிர்பார்க்காத சீனிவாசனுக்கு மகிழ்ச்சி கலந்த அதிர்ச்சியே. தனது சக அக்ரஹாரத்து குடும்பங்கள் இதை ஒரு போதும் இரசிக்க மாட்டார்கள் என்றாலும், மாங்குடி அக்ரஹாரத்தைவிட்டு காலிச்செய்யும் நமக்கு இங்கு உள்ளவர்களின் கவலை எதற்கு என்றும், கோயிலில் இருந்து இந்த எண்ணம் தோன்றியதால், நடப்பது எல்லாம் நாராயணணின் செயலாகவே கருதி, திருநாவுக்கரசுவிடம் தனது வீடு மற்றும் ஐம்பது குழி இடத்தையும் ரூபாய் நாலாயிரத்திற்கு விற்பதாக ஊறுதிக் கொடுத்தார். இந்தச் செய்தி வேகமாக மாங்குடி முழுவதும் பரவியது. அக்ரஹாரத்தில் கோபத்தையும், ஊர்பகுதியில் பெருமையையும், சேரிப் பகுதியில் எவ்வித தாக்கமும் இன்றி பரவியது.

அக்ரஹார குடும்பகளுக்கு திருநாவுக்கரசு என்ற குடியானவன் அக்ரஹாரத்தில் வீடு வாங்குவதில் துளியும் விருப்பம் இல்லாததால், இதை எப்படியும் தடுத்துவிட வேண்டும் என்று சதி ஆலோசனையில் ஈடுபட்டனர். இதை சட்டரீதியாக தடுக்க முடியாது என்பதால், ஊர் பெரியவர்களை கூட்டி பஞ்சாயத்து செய்து இதை தடுத்துவிட வேண்டும் என்று முடிவு செய்தனர்.

இதன்படி, மாங்குடி மணியக்காரர் குஞ்சுப் பிள்ளை மற்றும் அரிசி ஆலை அதிபர் அண்ணாமலைச் செட்டியார் முன்னிலையில், ஊர் முக்கிய நபர்களை அழைத்து வரும் ஞாயறு காலை பத்து மணிக்கு அண்ணாமலைச் செட்டியாரின் அரிசி ஆலையில் வைத்து பஞ்சாயத்து செய்வாதக முடிவு செய்யப்பட்டது.

இப்படி ஓரு எதிர்ப்பு வரும் என்று சீனிவாசனும் திருநாவுக்கரசும் எதிர்பார்க்கவில்லை எனலாம். இந்த பஞ்சாயத்தில் எப்படியும் வெற்றியை தமதாக்கிக் கொண்டு, வீட்டை விற்று விட வேண்டும் என்பதில் திருநாவுக்கரசைவிட மிகவும் ஆர்வமாக இருந்தார் சீனிவாசன். இதற்காக திருநாவுக்கரசுவிடம் ஓரு ஆலோசனையும் வழங்கினார். ” கீழத்தஞ்சை பகுதியில் இடதுசாரி மற்றும் திராவிட கொள்கைகளை பரப்பி வரும் நாகை A.G.கஸ்தூரிரங்கன் இந்த பஞ்சாயத்தில் உனக்கு ஆதரவாக கலந்துக் கொண்டால் நாம் வெற்றி பெற்றுவிடலாம்” என்று சாவி கொடுத்தார் சீனிவாச ஐயங்கார்.

பஞ்சாயத்து நடக்கப் போகும், ஞாயிற்று கிழமைக்கு முதல் நாளே, திருநாவுக்கரசு நாகை அந்தனப்பேட்டையில் உள்ள A.G.K வீட்டிற்கு சென்று, தனது வழக்கு விவகாரங்களை விவரித்தான் திருநாவுக்கரசு. பிற்காலத்தில் வரப்போகும் சமத்துவ புரங்களுக்கு, இது ஒரு தொடக்கமாக இருக்கட்டும் என்று A.G.K தனது ஆதரவையும், வாழ்த்துக்களையும் சொல்லி, நாளை தனது ஆதரவு தோழர்களை அனுப்புவதாக கூறினார்.

ஞாயிறு காலை பத்து மணிக்கு, அரிசி ஆலை வளாகத்தில், ஒருவர் ஒருவராக வரத் தொடங்கினர், அக்ரஹாரத்தில் இருந்து எட்டு ஆண்கள் திருநாவுக்கரசுக்கு வீடு கொடுக்க கூடாது என்றும், ஊர்பகுதியில் இருந்து பன்னிரண்டு ஆண்களும், நான்கு பெண்களும், திருநாவுக்கரசு அக்ரஹாரத்தில் வீடு வாங்க ஆதரவாகவும் வந்து சேர்ந்தனர். இந்த இரண்டு பிரிவினரும் எதிர் எதிர் திசையில் அமர்ந்தனர். திருநாவுக்கரசும் , சீனிவாசனும் ஒன்றாகவே உள் நுழைந்து, திருநாவுக்கரசு ஊர் மக்கள் அமர்ந்து இருந்தப் பக்கத்தில் முதல் வரிசையில் வந்து அமர்ந்தான். சீனிவாசனுக்கு எந்தப் பக்கம் அமருவது என்ற குழப்பத்தில், அக்ரஹார ஆண்ங்கள் எட்டு பேரும், நான்கு நான்காக இரண்டு வரிசையாக அமர்ந்திருந்தனர். இப்போது சீனிவாசன் அக்ரஹார ஆண்ங்கள் அமர்திருந்த இரண்டு வரிசையைக் கடந்து, மூன்றாவது வரிசையில் அமராமல், சற்று தள்ளி யாரும் இல்லாத நாலவது வரிசையில் போய் அமர்ந்தான். தனக்கு பக்கத்தில் சீனிவாசன் அமருவான் என்று எண்ணிய திருநாவுக்கரசுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

அண்ணாமலைச் செட்டியாரும், மணியக்காரர் குஞ்சுப் பிள்ளையும் கூட்டத்திற்கு வந்தனர். இருவரும் இரு தரப்புக்கும் வணக்கம் சொல்லியப் பின்.குஞ்சுப் பிள்ளை பேசத் தொடங்கும் போது, கருஞ்சட்டை அணிந்த பத்து தோழர்கள் கூட்டத்திற்குள் நுழைந்த போது, அனைவருக்கும் பயம் தொற்றிக் கொண்டது. இதை ஒற்றை வினாடியில் புரிந்து கொண்ட அண்ணாமலைச் செட்டியார், கூட்டத்தைப் பார்த்து, ” இன்றைய பஞ்சாயத்து மாங்குடியின் உள்ளுர் விடயம் என்பதால், மாங்குடி கிராம எல்லைக்குள் வாழும் நபர்கள் மட்டுமே கலந்து கொள்ளவும், வேறு ஊர்ச் சேர்ந்தவர்கள் கூட்டத்தை விட்டு வெளியே செல்லும்மாறும் பொதுவாக கேட்டுக்கொண்டார். கருஞ்சட்டை தோழர்களில் இரண்டு பேர் மாங்குடி கிராமத்தை சேர்ந்தவர்கள், இந்த இருவர் மட்டும் கூட்டத்தில் கலந்து கொள்ள, மற்ற எட்டு தோழர்களும் சற்று நாற்பது அடி தள்ளியிருந்த வேப்ப மர அடிக்கு சென்றனர். அங்கிருந்து கூட்டத்தில் யார் பேசுகிறார்கள்? என்ன பேசுகிறார்கள்? என்பதைக் கேட்கவும், பார்க்கவும் முடியும்.

இப்போது பஞ்சாயத்து தொடங்கியது, இரண்டு மணி நேரம் காரசார விவாதம் நடைப்பெற்றன. கடைசியாக, அண்ணாமலைச் செட்டியாரும் குஞ்சுப் பிள்ளையும் தங்களது தீர்ப்பை அறிவிக்க தொடங்கினார். அந்தத் தீர்ப்பு மூன்று பகுதிகளைக் கொண்டிருந்தது.

1. அக்ரஹாரத்தில் உள்ள சீனிவாசனின் நிலத்தையும், வீட்டையும் திருநாவுக்கரசு வாங்கிக் கொள்ள அனுமதியளித்தது.

2. ஆனால், திருநாவுக்கரசு மற்றும் அவரது குடும்பத்தார் அக்ரஹாரத்தில் அய்யர், அய்யங்கார் மக்களின் புழக்கத்தில் இருந்த குடிநீர் குளத்தைப் ( அய்யர் குளம்) பயன்படுத்தக் கூடாது என்றும், திருநாவுக்கரசு குடும்பத்திற்கான நீர் தேவையைப் பூர்த்தி செய்ய அவர்கள் ஊர் பகுதியில் உள்ள பொதுக் குளத்தையே பயன்படுத்த வேண்டும்.

3. அக்ரஹாரத்தில் உள்ள சிவன் மற்றும் பிள்ளையார் கோவிலில் அக்ரஹார மக்களுக்காக நடக்கும் நிகழ்வுகளில், திருநாவுக்கரசு மற்றும் அவரது குடும்பத்தார் கலந்துக் கொள்ளக் கூடாது.

இவ்வாறாக மூன்று பகுதிகளாக தீர்ப்பு வாசிக்கப்பட்டது.

இரு தரப்புக்கும் 100% தோல்வி இல்லாமல் தீர்ப்பு வழங்கியதாக அண்ணாமலைச் செட்டியாரும், குஞ்சுப் பிள்ளையும் திருப்தியடைந்தனர்.

ஊர் மக்கள் இந்தத் தீர்ப்பால் மகிழ்ச்சி கொண்டனர். கருஞ்சட்டை தோழர்கள் இதை குறைந்தபட்ச வெற்றியாக பார்த்தனர். அக்ரஹார மக்களுக்கு பெரிதும் சந்தோஷம் இல்லாமல் வீட்டை நோக்கி நடந்தனர்.

இந்த விவகாரத்தில் எதிலும் சேர்த்துக் கொள்ளப்படாத சேரி மக்கள் , ” இன்றைக்கு அக்ரஹாரம், நாளைக்கு ஊர்த் தெரு ” என்ற நம்பிக்கையோடு வயல்களில் தலையைச் குணிந்து களைச் செடிகளை வேரோடு பிடிங்கிக் கொண்டிருந்தனர்.

இத்தகையப் போராட்டங்களை கடந்து, 1965ம் ஆண்டு, திருநாவுக்கரசு நான்காயிரம் ரூபாய்க்கு அக்ரஹாரத்தில் உள்ள சீனிவாசனின் நிலத்தையும் வீட்டையும் வாங்கினார்.

அக்ரஹாரத்தில் வீடு வாங்கி, அங்கு குடியேறி, இந்த ஆண்டுடன் ஐம்பத்துஐந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனால், இந்த நினைவுகளை ஒவ்வொரு நாளும் மனக்கண்ணில் ஓட்டிப்பார்க்காமல் விடுவதில்லை திருநாவுக்கரசு. அன்றும், இந்த நினைவுகளை துமந்துக்கொண்டு சாய்வு நாற்காலியிலேயே கண் அசர ஆரம்பித்துவிட்டர். சிறிது நேரத்தில், அவரது பேத்தி ஆண்டாள் தாதாதாவை தட்டி எழுப்பி, ” தாத்தா, நான அய்யர் குளத்துக்கு போய், குளிச்சிட்டு , தூணிகளை துவைத்துவிட்டு அரை மணிநேரத்துல வந்துடுரேன், அதுவரைக்கும் வீட்ட பாத்துகுங்க ” என்று சொல்லி புறப்பட்டாள்.

ஒரு வாரம் கழித்து, ஆண்டாளின் தேர்வு முடிவுகள் வெளியாகின, பள்ளி பொதுத் தேர்வில் 1164 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் இரண்டாம் இடமும், நீட் தேர்வில் 424 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் இருபத்துஇரண்டாம் இடத்தையும் பெற்றாள். நீட் தேர்வில் கிடைத்த மதிப்பெண், ஆண்டாளுக்கு அரசு மருத்துவக்கல்லுரியில் இடம் கிடைத்துவிடம் என்று ஆசிரியர்கள் ஆண்டாளுக்கு வாழ்த்துக்களைக் கூறினார்கள்.

அடுத்த சில நாட்களில், மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான நேர்முக ஒற்றை சாளர கலந்துரையாடலுக்கு அழைப்பு வந்தது. தாத்தா திருநாவுக்கரசும் , பேத்தி ஆண்டாளும் சென்னையை நோக்கி கம்பன் தொடர்வண்டியில் திருவாரூரில் இருந்து புறப்பட்டனர். தொடர் வண்டிப் பயணத்திலும் தாத்தா தனது சுய புராணமான நான்காயிரத்தை, இருபத்து எட்டு இலட்சமாக மாற்றிய வரலாற்றை பேத்தியிடம் பெருமை பேசிவந்தார். எப்போது தனது நிலத்தின் மதிப்பு இருபத்து எட்டு இலட்சத்தை எட்டியதோ, அப்போதே அவருக்கு இளமை திரும்பியது போன்ற உணர்வு ஏற்பட்டு, உற்சாகத்தில் இருந்தார்.

அடுத்த நாள், தாத்தாவும் பேத்தியும், மருத்துவ கல்லூரி சேர்கை வளாகத்தை வந்தடைந்தனர். ஆண்டாளுக்கு அறை எண் நான்கில், பதினொரு மணிக்கு கலந்துரையாடலுக்கு நேரம் ஒதுக்கபட்டிருந்தது. அதே அறையில், அதே பதினொரு மணிக்கு சென்னை அடையாற்றைச் சேர்ந்த ஸ்ரீ லெட்சுமிக்கும் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஸ்ரீ லெட்சுமியும் தனது தாதாதாவுடன் வந்திருந்தாள். ஆண்டாளும் ஸ்ரீ லெட்சுமியும் ஒருவருக்கு ஒருவர் ஆங்கிலத்தில் தங்களைக் தாங்களே அறிமுகப்படுத்திக் கொண்டு உயையாடத் தொடங்கினர். இரண்டு மாணவிகளும் நீட் தேர்வில் சரியாக 424 மதிப்பெண் பெற்றிருந்ததால் அவர்களுக்குள் எவ்வித ஈகோவும் இல்லாமல் உடனடியாக தோழிகளாக மாறினார். இரண்டு பேத்திகளும் நட்பு பாராட்டும் போது, தாத்தாக்கள் ஏன் சும்மா இருக்க வேண்டும் என்று நினைத்த திருநாவுக்கரசு, ஸ்ரீ லெட்சுமியின் தாத்தாவிடம், ” ஐயா, உங்களுக்கு எந்த ஊர்?” என கேட்டார். திருநாவுக்கரசின் குரலைக் கேட்டதும், ஸ்ரீ லெட்சுமியின் தாத்தா ” நீங்க, மாங்குடி திருநாவுக்ரசா? ” என்று கேட்டார். திருநாவுக்கரசு ஆச்சரியத்தில் மூழ்கினார். தனது எதிரே இருப்பது வேறுயாரும் அல்ல, ஐம்பத்துஐந்து ஆண்டுகள் முன்பு, தனது அக்ரஹார நிலத்தையும், வீட்டையும் திருநாவுக்கரசிடம் விற்றுவிட்டு சென்னைக்கு குடியேறிய சீனிவாச அய்யங்கார் தான். இருவரும் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றனர்.தங்களது பேத்திகளிடமும் இத்தச் செய்தியை பகிர்துக்கொண்டனர். சிறிது நேர உரையாடலுக்குப்பின், ” எய் திருநா, நீ ரொம்ப அதிர்ஷ்டகாரன்டா, வெறும் நான்காயிரத்தை கொடுத்து எனது மூன்று கிரவுண்டு ( ஐம்பது குழி) நிலத்தை வாங்கிட்ட. அந்த நான்காயிரத்தை வைத்து சென்னை அடையாறு போட் ஹவஸ்ல ஒரு கிரவுண்டு தான் வாங்க முடிஞ்சுது. நீ மூன்று கிரவுண்டு நிலத்தில இருக்கிற, நானோ ஒரு கிரவுண்டுல கொள்ளைபுற தோட்டம்கூட இல்லாமல் புறா கூண்டுல இருக்கிறேன் ” என்று அலுத்துக்கொண்டார் சீனிவாசன். இதையும் திருநாவுக்கரசு தனக்கு கிடைத்த பெருமையாக கருதி தனது பேத்தியை பார்த்து புன்னகைத்தார்.

” இப்ப உங்க வீட்டு பக்கம் குழி எவ்வளவுக்கு போகுது ?” என்றார் திருநாவுக்கரசு. ” குழி கணக்கெல்லாம் சென்னையில கிடையாது, எல்லாம் சதுர அடி கணக்கு தான். 1965ல நான்காயிரத்துக்கு வாங்கின ஒரு கிரவுண்டு, இப்ப ஒரு சதுர அடி ரூபாய் ஒன்பது ஆயிரம் போகுது, என்னோட ஓரு கிரவுண்டு நிலம் சுமார் இரண்டு கோடிக்கு போகும்” என்றார் சீனிவாசன்.

Print Friendly, PDF & Email

2 thoughts on “நிலமும் பொழுதும்

  1. மிகவும் அருமை. 1960 களில் கீழத்தஞ்சை மாவட்டத்தில் இருந்து சென்னை மற்றும் மும்பை நகரங்களுக்கு இடம்பெயர்ந்த அக்ரஹார குடும்பகள் பற்றிய பதிவு தமிழ் இலக்கியத்தில் பெரிதும் பதியப்படவில்லை. இதைக் கதையின் கருவாக கொண்ட சிறுகதை சிறப்பு. ஒரு நாவலாக எழுத வேண்டிய கதை அமைப்பை அழகான சிறிய வடிவத்தில் கொடுத்த ஆசிரியருக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *