கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 6, 2020
பார்வையிட்டோர்: 6,831 
 

எதோ கிருமியாம். ஊரெல்லாம் பரவுதாம். தொட்ட பரவுமாம். நெருங்கி நின்னா பரவுமாம்.உலகம் சுற்றும் வாலிபன் மாதிரி நாடு நாடா சுத்துபவனெல்லாம் வீடடங்கி உட்கார்ந்திட்டான் நாடு நாடாய் கடந்து எங்க நாட்டை நோக்கி வந்து கொண்டிருந்த அந்த கிருமியை பார்த்து.செய்திகளில் மட்டுமே கண்ணை விரித்து விரித்து பார்த்து வியந்த அந்த விசித்திர பெயர் கொண்ட கிருமி இன்று எங்கள் நாட்டையும் எட்டி விட்டது. ஒவ்வொரு உயிராய் பலி வாங்கும் அதன் ஆட்டத்தை ஆரம்பித்தது. என்னை வீழ்த்த எவன் என்று வீராப்பாய் நெஞ்சை நிமிர்த்தி திரிந்தவன் எல்லாம் இன்று கண்ணுக்கு தெரியாத அந்த கிருமியிடம் இருந்து தன்னை காத்துக்கொள்ள முடியுமா என நடுங்க ஆரம்பித்தான். ஊருக்கே ராஜாபோல் உலாவி திரிந்தவனெல்லாம் உயிர் பயத்தில் ஊசலாட துவங்கினான்.

உயிர் காத்துக்கொள்ள ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. உயர் சாதி உதாசின சாதி எல்லாருக்குமே தான் ஊரடங்கு. கட்டு கட்டாய் காசு சேர்த்தவனும் கட்டான் தரையில் உறங்குபவனும் கிருமிக்கு சமம் தான் என்பதால் உயிருக்கு பயந்தவர்களெல்லாம் உத்தரவை மதித்து வீட்டிற்குள் அடங்கினர்.

ஊர் அடங்க அடங்க ஊர் குருவிகளெல்லாம் சுதந்திரமாய் திரிய ஆரம்பித்தது. தன்னை யாரும் அசுத்தப்படுத்தாதனால் ஆசுவாசம் கொண்டது காற்று. தன்னை கலங்கம் செய்ய யாரும் இல்லாததால் சலசலத்து புன்னகைத்தது நதிகள். இயற்கை மெல்ல மலர ஆரம்பித்தது. ஊரடங்கு காரணமாக மகிழினி வேலை பார்க்கும் மென் பொறியியல் நிறுவனத்தில் வீட்டில் இருந்து வேலை பார்க்க கூறி இருந்தனர். வீட்டில் இருந்து வேலை பார்க்க ஆரம்பித்தபோது தான் வீட்டிற்குள் அழகான ஓர் உலகம் இருப்பதை உணர ஆரம்பித்தாள் மகிழினி . அவள் மகள் பிறந்த இந்த ஐந்து வருடங்களுக்கு பிறகு இந்த தருணத்தில் தான் தன் மகளின் குறும்பு தனத்தை எந்த வித அவசரமுமின்றி பொறுமையாய் ரசிக்கும் வரம் அவளுக்கு அமைந்திருக்கிறது என்று சொல்லலாம். கணவனுக்கு ஆசை ஆசையாய் சமைப்பது குழந்தையின் குறும்பை ரசிப்பது என பல தோரணங்களால் அழகுற்றது அவளின் இந்த நாட்கள். மகிழினியின் நெருங்கிய தோழி மலர்விழியும் அவ்வப்போது மகிழினிக்கு தொலைபேசி மூலம் தொடர்ப்பு கொள்வது என அவளோடு தொடர்பில் இருந்தாள்.

மகிழினி மலர்விழியோடு தனது நாட்களின் அழகான தருணங்களை பகிர்ந்து கொண்டு வந்தாள். மலர்விழிக்கு அவ்வாறு பகிர பெருநாள் எந்த தருணமும் கிடையாது. மகிழினிக்கும் மலர்விழிக்கும் ஒரே வயது தான் என்ற போதிலும் கணவன் குழந்தை என குடும்பமாய் வாழும் பாக்கியம் இன்னும் அவளை வந்து சேரவில்லை.‌தகுந்த வயதில் திருமண பாக்கியம் கிடைக்கபெறாத பெண் என்று அவளை பரிதாபமாய் பார்பவரும் அவளை சுற்றி இருந்தனர். அவளின் அந்த நிலையை கண்டு வருந்துவது போல் நடித்தாலும் உள்ளுக்குள் பூரிப்பு கொள்ளும் சொந்தமும் அவளை சுற்றி இருந்தது. ஆனால் அவளுக்கு அதை பற்றியெல்லாம் கவலை இல்லை. கடவுள் தாமதப்படுத்தும் ஒவ்வொரு நிகழ்வும் பல நிரந்திர அழகுகள் கைகோர்த்து வாழ்வில் வரவே தயாராகின்றன என்பதை அவள் தீர்க்கமாய் நம்பினாள்.ஊரடங்கு உத்ரவினால் தன் சொந்த ஊர் திரும்ப இயலாத காரணத்தினால் அவள் வேலை பார்க்கும் பொறியியல் நிறுவனம் வசதி செய்து கொடுத்திருந்த விடுதியில் தான் அவள் தங்கியிருந்தாள்.

வழக்கம்போல் அன்றும் மலர்விழி மகிழினிக்கு கால் செய்திருந்தாள்.

‘ஹலோ மகிழி. என்னடி பண்ற’

‘இப்பதான்டி சமையல் முடிச்சிட்டு உட்கார்ந்திருக்கேன்’

‘குட்டீஸ் என்ன பண்ற’

‘அவ தூங்கிட்டு இருக்கா. இப்ப தான் தூங்கினா.இவ்ளோ நேரம் ஒரே அமக்கலம் பண்ணிகிட்டு இருந்தா’

‘ம்ம். அது சரி’

‘உனக்கு எப்படிடீ போகுது’

‘ம்ம். நல்லா போகுது டீ’

‘என்னதான் எனக்கு குட்டியோடையும் அவரோடையும் நேரம் போனாலும் சில சமயம் கடுப்பா இருக்குடி, வெளி உலக்ததையே பார்க்க முடியலியேனு சில சமயம் எரிச்சலா இருக்கு.உனக்கு தனியா போர் அடிக்கும்ல.கடுப்பா இல்லியா’ இந்த கேள்வியை கேட்டதற்காக தன் நாவை கடித்துத்தாள் மகிழினி. எதோ ஓர் ஃபோளோவில் கேட்டுடேனே. அவளுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்ற வருத்தத்தை கிளப்பி விட்டுடேனோ நான் என்று தன்னை தானே நொந்து கொண்டாள்.

‘இதுல கடுப்பாக என்னடி இருக்கு. இந்த ஊரடங்கால எத்தனையோ பேர் ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்டுட்டு இருக்காங்க. கடவுள் என்ன அப்படி ஓர் நிலைமையில வைக்காம நல்லா வச்சிருக்கிறதை நினைச்சு சந்தோசமா தான் இருக்கு.’ என்றாள் மலர்விழி நிறைவோடு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *