Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

நிறம் மாறும் தேவி

 

ஆயுள் உள்ளவரை இன்ப துன்பம் பகிர்வேன் என்று அக்னி சாட்சியாய் கரம் பிடித்து ஆறே மாதத்தில் பலவீனமாய் இயற்கையால் சபிக்கப்பட்டவளை,. திருப்பித் தாக்க இயலாதவளை. பெற்றோர் உறவினர் நண்பர்களை விட்டு என்னையே சதம் என்று நம்பி வந்தவளை, என்னில் ஒரு துளியை கர்ப்பத்தில் சுமப்பவளை கள்வெறி கொண்டு முத்தமிட்ட கன்னத்தில் அறைந்து மிருகமென வீழ்த்தப் போகிறேன் என்று நினைக்கும் படி எந்த பொல்லாத சொப்பனம் நான் காணவில்லை. கேடு வரும் போது மனிதனை எச்சரிக்கும் தேவதைகளும் என்னை கை விட்டதால் எந்த நிமித்தங்களும் என் முன்னே தோன்றி உணர்த்தவில்லை

எல்லாம் வழக்கம் போல தான் நடந்தது அலுவலகத்தில் இருந்து திரும்பி வந்து இலக்கியக் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ளச் செல்ல எனக்காகக் காத்திருந்த சீதாராமன் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தான் ஒட்டியிருந்த சோப்பு நுரையை ஈரத்தைத் துடைத்தபடி வந்து காபி ரெடியா என்றேன்

கட்டிலின் நுனியில் அமர்ந்திருந்த ஜானகியிடம் பதிலில்லை

ஜானு, என்ன யோசனை?

உலகத்தின் அத்தனை எரிச்சலும் அலட்சியமும் முகத்தில் தேங்கி நிற்க ப்ச் என்றாள்

என்ன ஆச்சு?

தலைவலி

என்ன திடீர்னு?

ஏன் தலைவலி லெட்டர் போட்டுட்டு, காலிங் பெல் அடிச்சிட்டுத்தான் வருமா

சரி, சிரிச்சாச்சு போதுமா போய் காபி போடு

முடியாது

ஏன்?

கண்டவனுக்கு எல்லாம் காப்பி வச்சு தரவா என்னை கல்யாணம் பண்ணீங்க

ஏய் மெதுவா பேசு சீதா ஹால்ல இருக்கான்.

உறைக்கட்டும்னுதான் பேசறேன்

என்ன உளர்ற?

உளர்ல. உண்மையைத்தான் சொன்னேன் அந்த ஆளு வீட்டுக்கு வர்ரது எனக்குப் பிடிக்கல

அடர்ந்த வனத்தின் ஊடே பயணம் செய்கையில் சற்றும் எதிர்பாராமல் வளைவில் எதிரே நிற்கும் வன விலங்கைக் கண்டது போல் என் உடலெங்கும் ஒரு நடுக்கம் பரவ ஆரம்பித்தது என்ன செய்வதென்று தெரியவில்லை.

சீதாவை எனக்கு 25 வருஷமா தெரியும் நேத்து வந்த உனக்காக அவன கழட்டிவிட சொல்றியா?

அப்பா அந்த ஆளையே கட்டிக்க வேண்டியது தானே என்ன எழவுக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க.

என் கட்டுப்பாட்டின் கயிறுகள் மெல்ல தளர்வது புரிந்தது.

ஜானகி கொஞ்ச நேரம் அமைதியாய் இரு

முடியாது இன்னைக்கு ரெண்டுல ஒண்ணு தெரிஞ்சாகணும் உங்களுக்கு நான் பொண்டாட்டியா இல்ல அந்தாளு பொண்டாட்டியா?

வெறி கொண்டு படமெடுத்தாடி, மிகுந்த வன்மத்துடன் அவள் கக்கிய விஷத்தின் வெம்மையில் புத்தகங்களும் உலகமும் கற்றுத் தந்த அத்தனை நல்ல குணங்களும் உதிர்ந்து ஆதி மனிதனுக்கு முந்தைய மிருகமாய் மாறி என்னடி சொன்ன என்று அலறியபடி மேலே பாய்ந்து அறைந்து வீழ்த்தினேன் தடுமாறி நிலை குலைந்து விழுந்தவளின் கூந்தலைப் பிடித்து, சொல்லு, ஏன் இப்படி பேயாட்டம் போடுற என்று உலுக்கினேன்.

விடுங்க என் கையை உதறி ஆங்காரமாய்க் கத்தினாள்.

தலையெல்லாம் கலைந்து அடிபட்ட மிருகம் போல் கண்களில் வெறி மின்னும் இவள் வேறு ஜானகி. இந்த ஆறு மாதங்களில் மணவறையில், படுக்கையறையில், பயணத்தின் பரிமாறுகையில் பார்த்த ஜானகியல்ல. வேறு எவளோ போல, புனிதமான யாக குண்டத்தில் மாமிசத் துண்டுகளை வீசி எறிந்து கொக்கரிக்கும் அரக்கி போல தோன்றினாள்.

என்னதான் குளோஸ் பிரெண்டுனாலும் ஒரு அளவு வேணாம். பேருதான் தனிக்குடித்தனம் கல்யாணம் ஆகி எத்தனை நாள் என் கூட தனியா இருந்திருக்கீங்க எப்பப் பார்த்தாலும் சீத்தா சீத்தா காலையில் ஷட்டில் விளையாட போறீங்க .ஆபீஸ் போறீங்க. சாயங்காலம் இலக்கியக் கூட்டம் உலக சினிமா, ராத்திரி ஒரு மணி வரைக்கும் மொட்டைமாடியில் அரட்டை. இங்க ஒருத்தி இருக்காங்கற நினைப்பாவது இருக்கா?

உறைந்துபோய் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

கல்யாணம் ஆகி வந்தவளுக்கு எவ்வளவு ஆசைகள் எதிர்பார்ப்புகள் இருக்கும் என்னைக்காவது என்கூட ஒரு மணிநேரம் உட்கார்ந்து பேசி இருக்கீங்களா?. மாசமா இருக்கேன் எனக்கு என்ன பிடிக்கும்னு கேட்டு வாங்கித் தரணும்னு தோணுச்சா?. ராத்திரியில் மட்டும் புருஷனா இருந்தா போதும்னு நினைக்கிற உங்களுக்கு எல்லாம் எதுக்கு கல்யாணம், பொண்டாட்டி?. ஒரு பொண்ணோட மனசு புரிஞ்சிக்க முடியல என்ன இலக்கியம் படித்து கிழிக்கிறீங்க?. இப்படி ஒரு வாழ்க்கையை நானா கேட்டேன். எல்லாம் என் தலைவிதி மூச்சிறைக்க தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

என்ன பெண் இவள். இதைப் பேசி தீர்க்க முடியாதா? நகச் சுத்தி வந்ததென்று விரலை வெட்டி விட்டாளே. அரிதான கலைப் பொருளை கீழே போட்டு உடைத்து விட்டு கண்களை கசக்கும் சிறு குழந்தையா இவள்?. அடுத்து என்ன செய்வது?. சுவரில் முட்டிக் கொண்டது போல் சிந்தனை நகர மறுத்தது காலமெல்லாம் இவளோடு எப்படி வாழப்போகிறோம் என்று ஒரு அயர்வு தோன்றியது

சுவர்க் கடிகாரத்தின் இன்னிசை, சூழ்நிலைக்குச் சற்றும் பொருந்தாமல் அறையெங்கும் இரைந்தது.

இத்தனை நாள் வாழ்ந்ததெல்லாம் வெறும் நாடகமா? சிரிப்பும் சந்தோஷமும் பொய் வேஷமா?. உள்ளே இவ்வளவு கசப்பை வைத்துக் கொண்டு இவளால் எப்படி வார்த்தைகளில் இனிப்பைத் தடவித் தர முடிந்தது.

இறுகின பாறையாக உறைந்திருந்த காலத்தில் ஜானகியின் விசும்பல் ஒலி கசிந்து கொண்டிருந்தது.

மெல்ல புத்தி விழித்தது. அவள் வார்த்தைகளில் இருந்த உண்மை சுட்டது. அவள் மனதை உணராமல் இருந்த முட்டாள்தனம் உறுத்தியது. வாழ்வின் மோசமான தருணம். இது ஒரு வார்த்தையில் அறுந்து போய் விடுமளவு நொய்ந்து போயிருக்கிறது. இருவருக்கும் இடையேயான பந்தம் என் தவற்றை நான் உணர்ந்துவிட்டேன். அவள் தவற்றை காலம் உணர்த்தும் அவளுக்கு.

ஆடை எல்லாம் கலைந்து குலுங்கிக்கொண்டிருந்தவளின் அருகில் சென்று தோளைத் தொட்டேன். அசைவில்லை.

அருகில் அமர்ந்து, சாரி மிருகத்தனமாக நடந்து கிட்டேன். உன்ன புரிஞ்சுக்காம இருந்தது என் தப்புதான் சரி ஏதோ கெட்ட நேரம் இப்படியெல்லாம் நடந்திருச்சு. விடு,எல்லாம் சரியாயிடும்

அப்படியே மடியில் கவிழ்ந்து அழ ஆரம்பித்தாள்.

அவள் முகத்தை நிமிர்த்தி காதோர முடிகளை சரி செய்து நெற்றியில் முத்தமிட்டேன். மனசைப் போட்டு குழப்பிக்காத எழுந்து போய் முகத்த அலம்பிட்டு வா. நைட்டுக்கு சமைக்க வேண்டாம் கடையில வாங்கிட்டு வரேன் என்றபடி எழுந்து அறையை விட்டு வெளியே வந்தேன்.

ஹாலில்,சீதா இல்லை. மிக மோசமாக அடிபட்ட பறவை போல தளர்ந்து அவன் வெளியேறிய காட்சி தோன்றி மறைந்தது. தொலைக்காட்சி பெட்டியில் ஏதோ விளம்பரம் ஓடிக் கொண்டிருக்க அவன் அமர்ந்திருந்த நாற்காலியில் திட்டுத்திட்டாய் இரத்தம் உறைந்திருந்ததை என்னால் உணர முடிந்தது.

நாளை அலுவலகத்தில் சீதாவை எப்படி எதிர்கொள்வது?

எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட பிறகு, சரி விடுடா, நம்ம மேலயும் தப்பு இருக்கு. அது சின்ன பொண்ணு. என் தங்கச்சி பேசுனா நான் பொறுத்து போக மாட்டனா, கொஞ்ச நாள்ல எல்லாம் சரியாகிடும் என்று தோளைத் தட்டி சமாதானப்படுத்தலாம் அல்லது இல்லடா இவ்வளவு தூரம் கேவலப்பட்ட பிறகு நம்ம உறவு நீடிக்கிறது எனக்கு விருப்பமில்லை குட் பை என்று கோபத்துடன் உறவை அறுக்கலாம்.

எனக்கென்னவோ சரி விடுடா தப்பு நம்ம மேல இருக்கு என்று தான் ஆரம்பிப்பானென்று தோன்றுகிறது. ஏனென்றால் சீத்தா என்கிற சீத்தாராமனை எனக்கு 25 வருஷங்களாக தெரியும். 

தொடர்புடைய சிறுகதைகள்
ஹலோ என்றதும் மறுமுனையில் உற்சாகமாய் வழிந்தது அம்மாவின் குரல். பேத்தி பொறந்திருக்காடா அப்படியே உன்னை உரிச்சு வச்சிருக்கு. சுகப்ரசவம். ஜானகி நல்லாருக்கா நீ உடனே புறப்பட்டு வந்துரு. அப்பாவாகி விட்டேன். கடவுளே நன்றி. பத்து மாத புதிர் அவிழ்ந்து கிடைத்த விடை. ஒரு புதிய ...
மேலும் கதையை படிக்க...
எம் மேல கோபமா? அலைகளின் மேல் தாழப்பறந்து விழுந்து பரவும் அலைகளின் இரைச்சலில் விலகி பின்னும் பறந்து காகமொன்று ஏதோ ஒரு சிவப்பு நிறப் பொருளை அலகுகளில் கவ்வி வந்தது. ஈரமணலில் அமர்ந்து பரவும் அலைகளுக்கு விலகி அலகுகளால் குத்தியது. சுற்றுமுற்றும் ஒர ...
மேலும் கதையை படிக்க...
சிவா இப்ப என்ன பண்ணிட்டிருக்கீங்க என்று ஆரம்பித்த ஜானகியின் கடிதத்தை படித்துக் கொண்டிருந்தேன். ஸ்கூலிருந்து வந்ததும் யூனிபார்மைக் கூட கழற்றாமல் அம்மா இன்னைக்கு ஸ்கூல்ல என்று ஆரம்பிக்கும் குழந்தை மாதிரி ஆர்டர் செய்யப்பட்ட காபி, குவளைகளின் நுண்ணிய துளைகள் வழியாக வெப்பத்தை இழந்து ...
மேலும் கதையை படிக்க...
எல்லோருடைய கண்களும் குழைவாக வடிக்கப்பட்ட சாதம்,காய்கறிகள்,அப்பளம்,இனிப்புகள் இவற்றோடு பாலாடை மிதக்கும் காபி எல்லாம் சேர்த்து கலவையாக படைக்கப்பட்டிருந்த இலையிலும் எதிரே இருந்த வேப்பமரத்திலும் மாறி மாறி பதிந்து மீண்டன. மரணத்தின் காட்டமான நெடி சுவாசங்களில் நிறைந்திருக்க எல்லோருடைய முகங்களிலும் வியர்வை வழிந்து கொண்டிருந்தது. ...
மேலும் கதையை படிக்க...
ஏம்ப்பா மணி ஒன்பதரை ஆச்சு ஒன்பது மணின்னு டிக்கெட்ல போட்டு இருக்கு எப்பத்தான் எடுப்பீங்க? ஏழு மணிக்கு மேல சிட்டிக்குள்ள பஸ்சை விடமாட்டான் தெரியுமில்ல. அஞ்சு நிமிஷம் சார் ஒருத்தர் வந்துக்கிட்டு இருக்கார். பழனி பேருந்து நிலையத்தில் வெளிப்புறமாக நின்று கொண்டிருந்த தனியார் பேருந்தில் ...
மேலும் கதையை படிக்க...
மகாலட்சுமி
கானல் வரி
ஆசையில் ஓர் கடிதம்
அம்மா என்றால்…
இறந்தவனின் அலைபேசியிலிருந்து வரும் அழைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)