Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

நிம்மதியைத்தேடி

 

காலை மணி 5:40 . ட்ரெயினிலிருந்து வரும் சத்தத்தில் தாம்பரம் இரயில்வே ஸ்டேஷனே அலறியது . வழக்கமாக ஒரு மணி நேரமோ , ஒன்றரை மணி நேரமோ தாமதமாக வரும் ‘ தஞ்சாவூர் பாசஞ்சர் ‘ , இன்று வழக்கத்திற்கு மாறாக வெறும் பத்து நிமிடம் மட்டுமே தாமதமாக வந்தது.

கையில் அக்பர் காலத்துப் பெட்டி ஒன்றுடன் ரயிலில் இருந்து இறங்கி , ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்திறங்கும்போது , ” சார் ஆட்டோ ” , ” ஆட்டோ வேணுமா சார் ” என்று ஆட்டோவை ஏலம் விட்டவாறு , லட்டுவை ஈ மொய்ப்பது போல் , சேகரை மொய்த்து விட்டனர் நம் ஆட்டோக்காரர்கள்.

இதனைப் பார்க்கும்போது சென்னைக்கு முதன்முதலாக வந்த சேகருக்கு படு ஆச்சர்யம்.

” நம்ம ஊர்ல ஆட்டோவே கிடையாது . அப்படியே ரெண்டு , மூனு ஆட்டோ இருந்தாலும் , அவங்கள கூப்டா வருவதற்கு ஆயிரம் யோசிப்பாங்க . ஆனா , இங்க கொஞ்சம் விட்டா ஆட்டோவுக்குள்ளயெ அமுக்கிப் போட்டுக் கொண்டு போயிடுவாங்க போலிருக்கே ” என்று மனதில் நினைத்தபடி நடக்க ஆரம்பித்தான் சேகர்.

” வாங்க சார் … ஆட்டோ வேணுமா சார் … எங்க போகனும் சார் … ” என்று மூச்சுக்கு முன்னூறு தடவை ‘ சார் ‘ போட்டு கூப்பிட்ட ஆட்டோ ட்ரைவருக்கு , ” எங்க போறதுன்னுதாம்பா தெரில … ” என்ற வேடிக்கையான பதில் சேகரிடமிருந்து வந்ததுமே கடுப்பாகிப் போனவர் , ” சாவுக்கிராக்கி , கார்த்தாலேந்து வன்ட்டான் பாரு பொட்டிய தூக்கினு … ” என்று முனுமுனுத்துக்கொண்டே வேறு ஒருவர் பக்கம் திரும்பி மாமூல் டயலாக்கைப் பேச ஆரம்பித்தார்.

சேகர் சொன்ன வார்த்தை வேடிக்கையாக இருந்தாலும் , அது தான் நிஜம்.

ஆடுதுறை பக்கத்தில் திருமங்கலக்குடி எனும் கிராமத்தில் , அண்ணன் , தங்கை மற்றும் அப்பா , அம்மாவோடு சந்தோஷமாக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்த விளையாட்டுப்பிள்ளை சேகர் . சில காலங்களுக்கு முன் சேகரின் அப்பா சிவலோகப்ராப்தி அடைந்து விட , குடும்பப் பொறுப்பு முழுவதும் வீட்டின் மூத்த பையன் பாலு மீது விழுந்தது . தங்கை லக்ஷ்மிக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்ற கவலையும் , குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்பும் , கஷ்டப்பட்டு எட்டிப்பிடித்து எட்டாவது படித்துக் கொண்டிருந்த பாலுவுக்கு வர , அத்துடன் படிப்பை நிறுத்திக் கொண்டு விவசாயத்தில் இறங்கி விட்டான் . சேகர் மட்டும் எப்படியோ கஷ்டப்பட்டு பி.காம் முடித்துவிட்டான் . லக்ஷ்மி மட்டும்தான் அந்த குடும்பத்திலேயே நன்றாகப் படிப்பவள் . அவள் இப்போது +2 படித்துக்கொண்டிருக்கிறாள்.

திருமங்கலக்குடி மாணவ , மாணவியர்களுக்கு கல்லூரி என்றாலே அது ஆடுதுறையில் உள்ள ‘ சக்தி கல்லூரி ‘ தான் . அந்தக் கல்லூரியில்தான் சுற்று வட்டார கிராமத்திலுள்ள கல்லூரி மாணவ மணிகள் சங்கமிப்பர் . எது படிக்க வேண்டுமென்றாலும் , எது ஒன்று வாங்க வேண்டுமென்றாலும் , அது ஆடுதுறையில்தான் . ஆடுதுறைதான் இவர்களுக்கு டவுன் என்றாலும் , அதுவும் முக்கால்வாசி கிராமம்தான்.

சேகர் , அப்பா செல்லம் . அப்பா இருந்தவரை அவனுக்கு ஏக உபசாரம் . பட்டப்படிப்பை முடிக்கும் வரை வீட்டில் அவனை ஒரு மனிதனாகவாவது மதித்தார்கள் . ஆனால் கல்லூரிப் படிப்பை முடித்து பட்டம் வாங்கிய மறுகனமே அவன் வீட்டில் அவனை விவசாயம் செய்யும்படி விரட்டினர் . இல்லை வேறு ஏதாவது பிடித்த வேலை செய்வதாக இருந்தாலும் சரி என்றனர் . பி.காம் முடித்து பட்டம் வாங்கிய பின் வயலில் இறங்கி விவசாயம் செய்வதா ? ” என்ற கேள்வி அவனுக்குள் எழ , அவன் விவசாயம் செய்ய மறுத்தான் . வீட்டில் அனைவரும் அவனை வேலை செய்யச்சொல்லி வற்புறுத்த , அவர்களின் தொந்தரவு தாங்காமல் அவனுக்கென்று இருந்த நான்கு பேண்ட் , ஷர்ட்களை எடுத்து அவன் பரம்பரைக்கென்று இருந்த ஒரே ஒரு பழங்கால ட்ரங்க் பெட்டிக்குள் போட்டுக்கொண்டு நிம்மதியைத்தேடி கிளம்பி வந்து விட்டான் சென்னைக்கு.

காலைச்சூரியன் வரலாமா , வேண்டாமாவென யோசித்துக்கொண்டே மெதுவாகத்தலைகாட்டியது.

அருகிலிருந்த டீக்கடைக்குச்சென்று , ” மாஸ்டர் … ஸ்ட்ராங்கா ஒரு டீ போடுங்க … ” என்றபடி டீக்கடை பெஞ்சில் அமர்ந்தான் சேகர்.

பெட்டியைப்பார்த்தவுடன் , ” என்னப்பா … ஊர்லெந்து ஓடிவன்ட்டியா ? கிராமத்துலேந்து வர்றவங்களுக்கெல்லாம் எங்க சென்னைதான் வழிகாட்டி தலைவா ! ” என்று சென்னையின் பெருமையை மார்தட்டிக்கொண்டான் டீ போடுபவன்.

இந்த வார்த்தையைக் கேட்டவுடன் சேகருக்கு ஒரு தன்னம்பிக்கை பிறந்தது.

‘வெண்ணீரைச்’ சுவைத்துக்கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தான் . ரோட்டில் காரும் , ப்ஸ்ஸும் புயல் வேகத்தில் சென்று கொண்டிருந்தன . இது போதாதென்று இரு சக்கர வாகனங்கள் வேறு . ஒரே புகை மண்டலமாய் காலை ஏழு மணிக்கே தாம்பரம் காட்சியளித்தது . அப்படியே நடக்க ஆரம்பித்தான்.

சாலையோரமாக , தொலைபேசி நிர்வாகத்தினரும் , சாலை போக்குவரத்து நிர்வாகத்தினரும், வெட்டி வைத்திருந்த குழிகள் சரியாக மனிதர்களுக்கு தோண்டியவை போலவே இருந்தன . அப்போது சாலை போக்குவரத்துக் கழகம் கவனிக்காத சில சாலைகளை பார்த்த சேகர் , நமது கிராமத்தில் கூட இவ்வாறு ‘ அழகான ‘ சாலைகளை பார்க்க முடிவதில்லையே என்று மனதுக்குள்ளேயே வேடிக்கையாக அலுத்துக்கொண்டான்.

அப்படியே நடந்து போய்க்கொண்டிருக்கும்போது , பெட்டிக்கடை ஒன்றிலிருந்து ‘ தினத்தந்தி ‘ பேப்பர் ஒன்றை வாங்கி வேலை வாய்ப்புகளைப் பார்த்த சேகருக்கு , அவன் பி.காம் படித்த அளவிற்கு அவனுக்கு ஏற்ற வேலைகள் மூன்று மட்டுமே அகப்பட்டன . அந்நிறுவனங்களின் முகவரிகளைக் குறித்துக் கொண்டு , முதல் கம்பெனிக்குச் சென்றால் , ” You have to deposit 10,000/- Rupees for your Job ” என்றார்கள்.

இவனிடம் அப்போது ஒரு ஓட்டைப்பெட்டிக்குள் நாலைந்து கந்தல் துணிகளும் , ஒரு அழுக்கு படிந்த ஐம்பது ரூபாய் நோட்டும்தான் இருந்தது . அடுத்த கம்பெனிக்குச் சென்றவனை , ” மார்க் பத்தாதுப்பா ” என்று சொல்லி அனுப்பி விட்டார்கள்.

” கடைசியாக ஒரே ஒரு கம்பெனிதான் இருக்கு … போய்ப் பார்ப்போம் … ” என்று தனக்குத்தானே கூறிக்கொண்டு கடைசி கம்பெனிக்குச் சென்று பேசினான் சேகர் . அவர்கள் , மாதம் 1,500/- ரூபாய் என்று சொல்ல , இவனும் கணக்காளர் பதவிக்கு ஒப்புக்கொண்டான்.

“தங்குறதுக்கு இடம் , சாப்பாடு எல்லாம் நாங்களே குடுத்துடறோம் ” என்று சொன்னதும் இவை அனைத்திற்கும் சம்பளத்தில் பிடித்துக்கொள்வார்கள் என்பது அப்போது புரியவில்லை சேகருக்கு.
கூடு போன்ற ஒரு வீட்டிலிருந்து கிளம்பி அலுவலகத்திற்கு வந்து வேலை செய்வது அவனுக்கு சில நாட்களிலேயே அலுத்துப்போய் விட்டது.

குடிநீர் வாரியத்தின் புண்ணியத்தால் சொட்டு சொட்டாக வரும் தண்ணீரில் குளிக்கும்போதுதான் , கிராமத்தில் பம்புசெட்டில் குளித்தது சேகருக்கு ஆனந்தமாகத் தோன்றியது.
ஹோட்டல்களிலிருந்து வரும் சாப்பாட்டை சாப்பிட்ட பின்புதான் , அம்மா ஊட்டிய பிடி சோற்றின் மகத்துவம் புரிந்தது சேகருக்கு.

இயற்கையைக் கூட ரசிக்க நேரமில்லாமல் , இயந்திரம் போல வாழும் சென்னைவாசிகளைப் பார்க்கும்போதுதான் சேகருக்கு , கிராமத்தில் ‘ கீச் … கீச் … ‘ என்று கத்தும் காதல் பறவைகளுடன் விளையாடியதும் , வயக்காட்டில் நண்டு பிடித்ததும் , வானவில்லை ஒரு ஓரமாய் நின்று ரசித்துக்கொண்டே இருந்ததும் நினைவிற்கு வந்தன்.

இப்போது அவனுக்கு , அவன் கிராமம் சொர்க்கமாகவே தெரிகிறது.

ஒண்ணாந்தேதி வந்தது . முதல் மாத சம்பளம் வாங்கும் நாள் . அவனது செலவுகள் போக சேகரின் கையில் வெறும் 300/- ரூபாய் மட்டுமே கொடுத்தார்கள் . அத்துடன் , அந்த அலுவலகம் இருந்த திசைக்கே ஒரு கும்பிடு போட்டுவிட்டு தனது பெட்டியுடன் , ” விவசாயம் செய்தாலும் பரவாயில்லை ; எந்தத் தொழிலும் கேவலம் இல்லை ” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டபடி , அவனது குடும்பத்துடன் ஒன்றாக சேர்ந்து வாழ அவனது சொந்த கிராமத்திற்கே செல்ல முடிவெடுத்து தாம்பரம் ரயில் நிலையத்தில் இரயில் ஏறுகிறான்.

இப்போது தான் அவன் உண்மையான நிம்மதியைத்தேடிப் போகிறான்.

- நாராயண சுவாமி [Narayanaswamy.Viswanathan@iflexsolutions.com] (ஜனவரி 2008) 

தொடர்புடைய சிறுகதைகள்
பக்கத்துத் தெருவிலிருந்தோ வேறெங்கிருந்தோ சேவல் சத்தம் கேட்டதும் நீண்ட இரவு முடிந்துவிட்டதென்று சுந்தரேசன் கண்களைத் திறந்தார். சுற்றியிருந்தவற்றை அடையாளம் காண முடியாதபடி இருள் அடர்த்தியாகச் சூழ்ந்திருந்தது. பிறந்து வளர்ந்த ஊரில் தனக்குச் சொந்தமான பழைய ஓட்டு வீட்டுக்குள் மரக்கட்டிலின் மேல் மல்லாந்து ...
மேலும் கதையை படிக்க...
வழக்கம் போல தனது வேலையை முடித்துவிட்டு அன்றைய தினக்கூலி ரூ400 யை வாங்கிக்கொண்டு வீட்டிக்கு சென்று கொண்டிருந்தான் பாலு. செல்லும் வழியில் இருக்கும் ஒயின் ஷாப் அவனை வா வா என அழைத்தது போல் உணர்ந்தான். உள்ளே போலாமா என யோசித்தவனுக்கு, “இன்னைக்கு நீ ...
மேலும் கதையை படிக்க...
மகிழ்ச்சி
""அப்பொழுது நீ மகிழ்ச்சியாயிருக்கிறாய் என்று சொல்லு'' என்றான் வித்யாசாகர். ""ஆமாம்'' என்றேன் நான். அவன் தன்னுடைய கனத்த வலது கையால் முகத்தை மூடிக்கொண்டான். இடது கண்ணால் என்னை உற்று நோக்கினான். அவன் என்னை அப்படிக் கூர்ந்து பார்க்கும்போதெல்லாம் எனக்கு உடம்பு குறுகுறுத்தது. அவனை நான் ...
மேலும் கதையை படிக்க...
என் அப்பா கொஞ்சம் சிக்கலானவர், சில சமயம் அதிசயமாய் தோற்றமளிப்பார். பல சமயம் கோமாளிபோல் தோற்றமளிப்பார், சில சமயம் பேக்குபோல் பேசுவார். பல சமயம் நம்மை பேக்குகளாக்கிவிடுவார். வெளிப்புறத் தோற்றம் சகிக்கும்படி இருக்காது. அவர் வார்த்தைகளின் அர்த்தங்கள் புரியும்படியும் இருக்காது ஏன் ...
மேலும் கதையை படிக்க...
மரகதம் காரின் வேகத்தை அதிகப்படுத்த முயன்றாள். இருபது நிமிடத்தில் போக வேண்டிய தொலைவு. நாற்பது நிமிடங்கள் ஆகி விட்டது. இன்னும் பாதித் தூரம் கூடத் தாண்ட முடியவில்லை. முன்னால் சென்ற வண்டி மேலும் மெதுவாகி விட்டதுப் போல் தோன்றியது. அடுத்த பத்திக்கு ...
மேலும் கதையை படிக்க...
திரும்பிச் செல்லும் வழி
போட்டது பத்தல்ல
மகிழ்ச்சி
புன்னகையால் நிரப்பப்படும் புரியாத வெற்றிடங்கள்
முன்செல்பவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)