நாய்க்குட்டிக்கு பிடிசோறு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 14, 2020
பார்வையிட்டோர்: 6,295 
 

இரவு 11 மணி.. ஏனோ தூக்கம் வரவில்லை.., உடல் வெளிக்காட்டும் அளவிற்கு மனம் நிதானமாக இல்லை., உள்மனதில் விரக்த்தி, கற்பனைகள், தைரியம், நம்பிக்கை, பாசாங்கு, பயம் என பலவிதமாய் கலக்கி குழப்புவதால் எதைப்பற்றியும் கனிக்க இயலாமலேயே அழுத்தமான வெறுமை கடந்துக்கொண்டு இருக்கிறது..

வீட்டின் வராண்டாவில் அந்த நாய்க்குட்டியின் முனகலும், புலம்பலும், அழுகையும், ஓலமும், அச்சமும் என நிமிடத்திற்கு ஒருமுறை மாறிமாறி ஒலிக்கும் ஓசையால் எனக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் கோபமும், எல்லைகடந்த எரிச்சலும், உச்சந்தலையில் ஊசியை ஏற்றிக்கொண்டு இருந்தது..

விஷேசம் நடந்த வீடு என்பதால் இப்போதுதான் எல்லோரும் தூங்க ஆயத்தம் ஆகிக்கொண்டு இருந்தார்கள்.. எனது 9 வயது பேரன் சுஜித், மெல்லமாய் கதவை திறந்துகொண்டு வராண்டாவிற்குள் நுழைவதை பார்த்த என் ஒரே மகள் பார்கவி, “சுஜி நேரம் ஆயிடுச்சி, நாய்க்குட்டியை விட்டிட்டு உள்ள வந்து படு” என்று அதட்டினாள். அந்த அதட்டலை காதில் வாங்கிக்கொண்டே நான் காலையில் வறேன் என்று செல்லமாய் நாய்க்குட்டியின் நெற்றியில் ஒரு முத்தம் கொடுத்தான்.. இத்தனை நேரம் அழுதுகொண்டிருந்த அந்த குட்டி அமைதியாய் அடங்கிப்போய் இருந்ததை சில நிமிடங்கள் உணரமுடிந்தது..

கடந்த 30 நாட்களில் இல்லாத அளவுக்கு இன்றையநாள் இரவு மட்டும் என்னைஏனோ பாடாய் படுத்திக்கொண்டு இருந்தது.. மனமும் புத்தியும் தனித்தனியே வாதிட்டுக்கொண்டு இருந்ததுபோலும், சமாதானம் பேசிக்கொண்டு இருந்ததுபோலவும் ஒரு மாயை.. ஆனால் நான் எதைப்பற்றியும் சிந்திக்காமல் இருப்பதாகவே எனக்கு நானே தேற்றிக்கொண்டு இருக்கும்போதே திடீரென வெடித்துக்கிளம்பியதுபோல ஒரு கோபம் அந்த நாய்க்குட்டியின் சத்தம் மீது திரும்பியது, மனம் அமைதியாகாமல் கொஞ்சம் கொஞ்சமாய் சஞ்சலிக்க அந்த நாய்க்குட்டியின் ஓலம்தான் காரணம் என புத்தி உரக்க கத்தியது, கதவைத்திறந்து அந்த நாய்க்குட்டியை தூக்கி கேட்டிற்கு வெளியே வீசிவிடலாமா என கோபம் கொப்பளித்தது.. இத்தனை அரக்கத்தனத்தை அடக்கிவைப்பது என்பது கொஞ்சம் கஷ்டம்தான், ஆனால் பேரனும் சொந்தங்களும் வீட்டில் இருக்கும் இந்நேரம் ஏதும் செய்ய முடியாதே..!!

இரவு முழுவதும் அந்த நாய்க்குட்டியின் முனகல் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது.., எப்போது தூங்கினேன் என்றே தெரியவில்லை..

காலை 5 மணி, திடீரென விழித்துக்கொண்டேன். வீட்டில் மின்விளக்குகள் எரிந்துகொண்டு இருந்தது.. சொந்தங்கள் ஒவ்வொன்றாய் விடைபெற தயாராகிக்கொண்டு இருந்தனர்.., இப்போது மனம் ஓரளவுக்கு அமைதியாய் இருந்தது, என்ன நடந்துகொண்டு இருக்கின்றது என்பது புரிந்ததாலா?, அல்லது அந்த நாய்க்குட்டியின் சத்தம் இல்லாமல் நிசப்தமாய் இருந்ததாலா?… கதவிற்கு வெளியே எட்டிப்பார்த்தேன், சுவற்றின் ஓரத்தில் ஒரு மூலையில் இரவெல்லாம் கத்திக்கத்தி சோர்ந்துபோய் ஓய்ந்துபோய்கிடந்த அந்த நாய்க்குட்டி அசதியும், பசியும், மயக்கமுமாய் படுத்துக்கிடந்தது..

“விஜயா” என் மனைவி,

இந்த ஆளுக்கு அவசரத்துக்கு சுடத்தண்ணிகூட வைக்கத்தெரியாது-னு வீட்டிற்கு வரவங்ககிட்டயெல்லாம் கதையளக்கறதுல அவளுக்கு எப்பவும் ஒரு பெருமை, உண்மையும் அதுதானே!!

மளிகை, பால், கேஶ், கரெண்ட்பில் என எல்லாமே அவ ராஜ்ஜியம்தான். விஜயாவின் ஆசையோ, அதிகாரமோ, கட்டளையோ, 2 வருஷத்துக்குமுன்ன சொந்த ஊரில் இருந்த பூர்வீக சொத்தையெல்லாம் வித்து, ரெட்டயர்மன்ட் பணத்தயும் வச்சி இந்த வீட்டை கட்ட தொடங்கும்போதே அக்காள் மகனுக்கு சொத்துக்களை விற்கவில்லையினு எனக்கும் என் அக்காவிற்கும் பெரிய மனக்கசப்பு.. இங்கிருந்து என் சொந்த ஊருக்கு 45 கிலோமீட்டர்தான், ஆனா அக்கா வீட்டுடன் பிரச்ச்னையாலும், சொத்தோ நிலமோ எதுவும் இல்லாததாலும் 2 வருஷமா ஊருக்குள் போவதற்கே கூச்சமாய் இருந்தது, போகவும் இல்லை…

என்ன செய்வது விஜயா அப்படித்தான்…

2 வருஷமா அக்காவுடன் பேச்சிவார்த்தையே இல்லை.. அத்தோடு விஜயா இறப்புக்குத்தான் வந்து சேர்ந்தார்கள், விஜயா இறப்பிற்குப்பின் வருவதும் போவதுமாக இருந்த சொந்தங்கள் பலரும் நேற்று விஜயாவின் 30ம் நாள் கும்பிட வந்து இருந்தார்கள்..

இனிமேலாவது எங்களை பார்க்க வருவயோ?, மாட்டயோ? என அழுகையும் இழுவையும் கலந்தவாரே சொல்லியபடி அக்கா கிளம்பினாள்….., அக்கா வீட்டில் இருந்து வேறுயாரும் சாவுக்குகூட வரவில்லை என்பதில் இருந்தே அவர்களின் கோபத்தை புரிந்துகொள்ள முடிந்தது.

விஜயாவோடு வாழ்ந்த 35 ஆண்டுகளில் என்றுமே நான் சொந்தங்களைப்பற்றி கவலைப்பட்டதில்லை.. ஒரே மகளை 8 மணிநேர தொலைவில் உள்ள கோயமுத்தூரில் கட்டிக்கொடுத்தபோதுகூட ஒரு தவிப்பையோ, பிரிவையோ உணர்ந்ததில்லை, விஜயா என் வாழ்க்கையின் பக்கங்களை எப்படி நிரப்பி இருந்தாள் என்பதை உணர்ந்ததாக ஒருமுறைகூட தோன்றியதே இல்லை.. ஆனால் இப்போது சொந்தங்கள் ஒவ்வொன்றாய் புறப்பட புறப்பட வீடு காலியாகிக்கொண்டே வருவதை நன்றாகவே உண்ர்ந்துகொள்ள முடிந்தது..

நாய்க்குட்டி மட்டும் அதே மூலையிலேயே படுத்துக்கிடந்தது, வீட்டைவிட்டு கிளம்பும் எந்தஒரு சொந்தமும் மூலையில் மயங்கிக்கிடக்கும் அந்த நாய்க்குட்டியை ஒரு பொருட்டாகவே கருதவில்லை..

இரண்டு நாட்களுக்கு முன்புதான் அந்த நாய்க்குட்டி இந்த வீட்டிற்குள் வந்தது, மூன்று வீடுகள் தாண்டி ஒரு காலிமணை முள்புதறில் இருந்து சுஜித் எடுத்துவந்தான்.. குட்டியின் தாய் இந்த தெருவில் அடிக்கடி தென்படும் வழக்கமான ஒன்றுதான்… பேரெல்லாம் இருக்க வாய்ப்பில்லை ஆனால் வீட்டில் மீதியான சோற்றை நாய்க்குபோட விஜயா ஒவ்வொருமுறையும் கேட்டை திறக்கும்போதெல்லாம் பலமுறை அந்த நாய்தான் ஓடிவந்துநிற்பதை பார்த்திருக்கிறேன்..

நன்றியோ! பாசமோ!! விசுவாசமோ!! என்னவென்று புரியவில்லை, சுஜித் அந்த நாய்க்குட்டியை தூக்கிக்கொண்டு வந்தபோது அந்த நாய் அவனை குரைக்கவே இல்லை, சுஜித்தின் பின்னாலயே நாய்க்குட்டியுடன் ஓடிவந்த அந்த நாய் கேட்டை பூட்டியபின் சட்றே பதட்டமானது. கேட்டிற்கு வெளியே இங்கும் அங்குமாக சுற்றி சுற்றி ஓடிக்கொண்டே இருந்தது, வீட்டில் உள்ளவர்கள் பலமுறை அதட்டி விரட்டவே வேறுவழியில்லாமல் ஓடிச்சென்றுவிட்டது. இன்னமும் தினமும் இரண்டு மூன்றுமுறை கேட்டிற்கு வெளியே சுற்றி வந்துகொண்டுதான் இருக்கிறது..

வந்த உறவுகள் எல்லாம் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்கள், எனக்கென உரிமையானவள் இனி மகள்மட்டுமே..!! எங்களுடன் கோயம்புத்தூருக்கே வந்துடீறிங்களா?-னு நேற்று 2முறை சம்பிரதாயத்துக்காக கேட்டாள்…, ஏதாவது பிரச்சினைன்னா என் ஃபிரண்ட் 3வது தெருவில் இருக்காளே அவள்கிட்ட சொன்னா உடனே செய்துகொடுப்பாள்-னு ஒரு ஆறுதல் வார்த்தையும் சொன்னாள்.., அவளின் வீட்டு நிலையும் மாமியார் குணமும் எனக்கும் தெரியும் என்பதால் பெரியதாக எதிர்ப்பார்க்க ஒன்றுமில்லை..

ஒற்றை மகளை பெற்றவனால் வேறென்ன செய்ய முடியும்..???

கிளம்பறேம்பா..!!! உடம்பை பாத்துக்கோங்க..!!! என சொல்லியபடியே இரண்டு பைகளை தூக்கிக்கொண்டு கேட்டை நோக்கி நடந்தாள்.., சுஜித் சற்றே சுதாரித்துக்கொண்டவனாய் அவனின் உடமையான நாய்க்குட்டியை ஓடிச்சென்று தூக்கினான், சுஜித்தின் விரல்கள் பட்டதும் அரைமயக்கத்தில் இருந்த நாய்க்குட்டி புத்துணர்ச்சி பெற்று குழைந்து குழைந்து முனகத்தொடங்கியது.. சுஜித் தினமும் 6 மணிக்கே நாய்க்குட்டிக்கு பால் கொடுத்துவிடுவான், இன்று ஊருக்கு கிளம்பும் அவசரத்தில் நாய்க்குட்டிக்கு பால் கொடுக்க எல்லோரும் மறந்துவிட்டனர், எனக்கும்தான்….

“அம்மா நாய்க்குட்டிக்கு இன்னைக்கு சாப்பாடு கொடுக்கவேயில்ல” என்றான் சோகமாக.. சற்றே ஸ்தம்பித்துப்போன பார்கவி நிதானப்படுத்திக்கொண்டு நமக்கு டைம் ஆயிடுச்சி, நாய்க்குட்டிக்கு அதோட அம்மா வந்து பால் கொடுக்கும்-னு சொல்லிக்கொண்டே என்னைப்பார்த்தாள்.. நான் என்னையறியாமளேயே தலையாட்டினேன்.

சுஜித்தும் பார்கவியும் ஆட்டோவில் ஏறினார்கள்.., ஆட்டோ புறப்படும்போது பார்கவியின் விழிகளின் ஓரத்தில் கண்ணீர்துளிகளையும், உதட்டோரம் புன்னகையையும் காணமுடிந்தது.., ஆட்டோ திரும்பி மறைந்தது, நான் கேட்டை பிடித்தபடியே ஒரு பத்துநிமிடங்கள் நின்றுகொண்டு இருந்துஇருப்பேன்… தளர்ந்துபோனவனாய் உள்ளே திரும்பி நடந்தேன்.., இப்போது எதேச்சயாக கண்ணில்பட்டது மூலையில் கிடந்த அந்த நாய்க்குட்டி..

இந்தமுறை அந்த நாய்க்குட்டியை பார்க்கும்போது கோவம் வரவேயில்லை..,

நேற்றைய இரவில் என்னுள் ஏற்பட்ட பல குழப்பங்களுக்கு நிச்சயம் இந்த நாய்க்குட்டி காரணம் இல்லை என்று இப்போது தோன்றியது… தாயைப்பிரிந்ததால் நேற்று இந்த நாய்க்குட்டிக்கு ஏற்ப்பட்ட பசி, ஏக்கம், தவிப்பு, பயம், தனிமை, சோகம், கோபம், அச்சம் எல்லாம் ஒன்றாய்கூடி இன்று எனக்குள் தாக்கியதாய் உணர்ந்தேன்,,, புதிதாய் இனம்புரியாத ஒரு மன அழுத்தம்.., நாய்க்குட்டியைப்போலவே உள்மனது ஓலமிட்டு லேசாக அழத்தொடங்கியது…

இப்போது தனிமையில் தவித்துக்கொண்டிருந்த நாய்க்குட்டி மேல் சிறிதாய் ஒரு பாசம் வந்தது… அருகில் சென்று மெல்ல தூக்கினேன்,, நாய்க்குட்டி இப்போது உண்மயிலேயே நினைவில்லாமல் கிடந்தது., திடீரென மனத்தினில் பயத்துடன் ஒரு பதற்றம் தொற்றிக்கொண்டது.., உயரமாக தூக்கி உலுக்கத்தொடங்கினேன்,, சுஜித் கையில் குழைந்து குழைந்து விளையாடிய நாய்க்குட்டி மரணத்தைக்கண்டு அலறுவதுபோல கத்தத்தொடங்கியது,, ஏற்கனவே வலிமை இழந்தும், படபடத்தும், மாறிமாறி சோர்ந்துகிடந்த என் மனம் ஏனோ மேலும் படபடப்பானது,

என்னையறியாமலேயே நாய்க்குட்டியை கையில் தூக்கிக்கொண்டு கேட்டை திறந்து வெளியே பார்த்தேன்.. அங்கு எதுவுமில்லை.., நிசப்தமே இருந்தது..,

நாலாபுறமும் நிசப்த்தம்..,

எட்டுத்திசையும் வெறுமை..

மீண்டும் நாய்க்குட்டி மயங்கிப்போனது.., சத்தம் நின்று போனது…. பைத்தியமே பிடித்துவிடும்போல பயம் வந்துவிட்டது.., மனம் என்ன நினைத்ததோ தெரியவில்லை நாய்க்குட்டியை கீழே வைத்துவிட்டு கேட்டைக்கூட மூட மறந்து வீட்டிற்குள் பாய்ந்தேன்.. சமயலறையில் பாத்திரங்களை அலசினேன்…

அப்பாடா…!!! ஒரு பாத்திரத்தில் இருந்த பாலை கண்டுபிடித்தாயிற்று… பாத்திரத்தோடு தூக்கிக்கொண்டு வெளியே விறைந்தேன்.,

மத்தாப்பாய் ஒரு எண்ணம் நெஞ்சில்,,,,….

நம் தனிமைக்கு துணையாக இந்த நாய்க்குட்டிதான் என் வாழ்நாள் முழுவதும் உடனிருக்கப்போகிறதா..??? இந்த நாய்க்குட்டிக்கு பிடிசோறு என்ன,, ஒரு இளவரசனைப்போலக்கூட என்னால் காப்பாற்ற முடியுமே…!!! ஏன் கூடாது..?? என கேள்விகளை கேட்க்கும் முன்பே தீர்ப்பை எழுதிக்கொண்டேன்.. என்னையறியாமலேயே “ராத்திரியிலிருந்து பசியோடு இருக்கும் நாய்க்குட்டிகு முதல்ல பாலைக்குடுக்கனும்”-னு வாய்விட்டு சத்தமாகவே பேசத்தொடங்கினேன்.. வெளியே வந்து சிலையாய் நின்றேன்…

இந்தமுறையும்

நான்கு பக்கமும் நிசப்த்தம்…

எட்டுத்திசையும் வெறுமை….

நாய்க்குட்டியையும் காணவில்லை…

இப்போது கண்களில் திறட்டிக்கொண்டு கண்ணீர் வந்தது…

பார்கவி விட்டுச்சென்றாதாலா……????

சுஜித் விட்டுச்சென்றதாலா……….??????

நாய்க்குட்டி விட்டுச்சென்றதாலா….???????

கண்ணீரோடு வாய்விட்டு அழுதேவிட்டேன்….

ஆனால் ஏனோ “விஜயா” என்றே சத்தம் வந்தது……

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *