நாமிருவர்

 

“என்னங்க.. ஸ்கூல் வேன் வந்திருச்சா?” பதற்றத்துடன் கேட்டுக்கொண்டே சமையற்கட்டிலிருந்து விரைந்து வந்தவள் பதிலுக்குக் காத்திராமல் வாசலுக்கு ஓடினாள். அப்போதைய அசதியைப் போக்குவதற்கு எனக்கு ஒரு ஸ்ட்ராங் காபி தேவையாக இருந்தது. அட! மேஜையின் மீது வைக்கப்பட்டிருந்த தம்ளரை இப்போது தான் பார்க்கிறேன்! ஆறிப்போய்விட்டதோ என்று தொட்டுப் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே ஏமாற்றத்துடன் திரும்பிவந்தாள்.

“இன்னைக்கு லேட் ஆன மாதிரி தெரியல? எப்பவும் 4.20 மணிக்கெல்லாம் ஸ்கூல்விட்டு வந்திருவானே..!” மஞ்சள் பூசி முகம் கழுவித் தலைவாரிப் பூவைத்துப் பாண்ட்ஸ் பவுடரின் மெல்லிய வாசத்துடனும் நெற்றியில் வட்டமான சாந்து பொட்டுடனும் அழகாகத் தெரிந்தாள் என் மனைவி. ஏழு வருடங்களுக்கு முன் அவளைப் பெண்பார்க்கச் சென்றபோது பார்த்து ரசித்த அதே முகம் சிறிதும் மாற்றமின்றி! படபடப்புடன் இருந்ததாலோ என்னவோ லேசான வியர்வையில் முகம் மினுமினுத்தது. நெற்றியிலிருந்து ஒரே ஒரு வியர்வைக் கோடு காதோரமாய் வடிந்து கன்னத்தில் காணாமல் போனது.

“வண்டி ட்ராஃபிக் ஜாம்ல மாட்டீருக்கும் சுமதி. இப்ப வந்திருவான். நீ ஏன் இவ்வளவு பதட்டப்படுற?” என்று பேசிக்கொண்டிருக்கும் போதே வாசலில் வேன் சத்தமும் கதவைத் திறந்து கண்ணன் கீழே குதிக்கும் சத்தமும் கேட்டது. சுமதி வாசலுக்கு விரைந்தாள்.

இவ்வளவு நேரம் ஆவலுடன் அவனுக்காகக் காத்திருந்தவள் அவன் வந்ததும் வராததுமாய்த் திட்ட ஆரம்பித்திருந்தாள். “எத்தன தடவ சொல்றேன்..இப்படி வேன்ல இருந்து குதிக்காத குதிக்காதன்னு? மெதுவா எறங்கிவந்தா என்ன இப்போ?” கேட்டுக்கொண்டே அவனை உள்ளே அழைத்துவந்து ஷூ சாக்ஸைக் கழட்ட ஆரம்பித்திருந்தாள். “சட்டையை எப்படி அழுக்காக்கிட்டு வந்திருக்க..டர்ட்டி” “அச்சோ.. இன்னைக்கும் லன்ச் மிச்சம் வச்சிட்டியா..” “இங்கிலிஷ் மிஸ் டெஸ்ட் வெச்சாங்களா, இல்லையா?” இப்படியாகத் தொடரும் சில நிமிடங்கள்.

பார்த்துக் கொண்டிருந்த நான் “டேய் கண்ணா, இங்க வா.. இன்னைக்கு என்ன ரைம்ஸ் சொல்லிக் கொடுத்தாங்க, சொல்லு பாக்கலாம்” என்று இழுத்து அவனை மடியில் அமர்த்திக் கொண்டேன்.

“மைசூர் அப்பளம்”

தினமும் நான் கேட்கும் கேள்விக்கு வழக்கமாக அவன் கூறும் பதில்.

“புதுசா ஒன்னும் சொல்லித்தரலயாடா உங்க மிஸ்..?”

“ஏங்க, அவனோட சிலபஸ் ஷீட் எடுத்துப் பாருங்க. அதுல எல்லாம் கொடுத்திருப்பாங்க. இப்படி சும்மா கேட்டா, அவன் டெய்லி இதையேதான் படிப்பான்” ஒரு சிறிய தட்டில் முறுக்கும் பிஸ்கட்டும் அவனுக்காகவே செய்து வைத்திருந்த வாழைப்பூ வடையையும் எடுத்து வந்து வைத்தாள். நாங்கள் பேசிக்கொண்டதை அவன் பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை. வாய்விட்டு ரைம்ஸைப் பாடத் தொடங்கியிருந்தான்.

“மைசூர் அப்பளம்
நெய்யில வறுத்து
சம்பந்திய கூப்பிடுங்க
சாப்பாடு போடுங்க
வெத்தல பாக்கு வையுங்க
வெளியில புடிச்சு
தள்ளுங்க”

மழலை மொழியும் சைகை நடனமுமாய் நிஜமாகவே யாரையோ வெளியில் பிடித்துத் தள்ளிவிட்ட வெற்றிச் சிரிப்புடன் அவனது வாயிலிருந்து வந்துவிழுந்த வார்த்தைகள் மனதைப் பறக்கச்செய்தன. உற்சாகத்துடன் நானும் சேர்ந்து அவனுடன் இன்னும் நிறைய பாடல்களைப் பாடத் தொடங்கியிருந்தேன். படிப்பை எல்லாம் முடித்தாகி விட்டவுடன் கொஞ்சமாகப் பசிக்க ஆரம்பித்திருந்தது. மூவருமாக அமர்ந்து இரவு உணவை முடித்தோம்.

நேரம் கடக்கக் கடக்க ஒரு மெல்லிய சோகம் மெதுவாகப் புகுந்து ஆட்கொண்டிருந்தது. சுமதியும் நானும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்ப்பதைத் தவிர்த்திருந்தோம். எதையாவது பேச வேண்டுமே என்று நான் யோசித்திருந்த வேளையில், “இன்னைக்கு என் செல்லம் சமத்துக்குட்டியா ரெண்டு இட்லி சாப்பிட்டிருச்சு, என்ன கண்ணா” மடியில் அமர்ந்திருந்த அவன் கன்னத்தில் முத்தம் பதித்தாள்.

காலிங் பெல் சத்தம் கேட்டது. வந்துட்டாங்க போல. நான் சென்று கதவைத் திறந்தேன்.

“கண்ணா… வா வா.. அம்மாவுக்கு ஒரு முத்தம் கொடு” உள்ளே வந்தவள் தன்னை நோக்கி ஓடிவந்தவனை வாரி அணைத்துக் கொண்டாள்.

“அம்மா.. டாடி எங்க?”

“டாடி நம்ம வீட்டுல வெயிட் பண்றார்டா குட்டி” மற்றுமொரு முத்தம்.

“என்னக்கா.. இன்னைக்குச் சாப்பிட்டானா? சாரி.. கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. இப்பெல்லாம் ஆபீஸ்ல வேலை கொஞ்சம் அதிகம்”

“இட்லி ஊட்டிவிட்டேன்” சுமதி சிரித்து வைத்தாள்.

புத்தகப்பையும் லன்ச் பேகும் இன்னும் சில பொருட்களும் ஃப்ளாட்டின் பக்கத்துப் போர்சனுக்கு இடம் மாறின.

சிரித்துக்கொண்டே கையசைத்துக் ‘குட்நைட்’ சொல்லிவிட்டுக் கதவை உட்புறமாகத் தாழிட்டு நின்றவளை இழுத்து இறுக்கமாக அணைத்தேன். சுமதியின் வயிற்றுக்குள்ளிருந்து ஏக்கப் பெருமூச்சுடன் பொங்கி வழிந்த எதுவோ ஒன்று சூடாக இறங்கி என் நெஞ்சில் பரவி நனைத்தது. என் அணைப்பு மேலும் இறுகியது.

- 30 ஆகஸ்ட் 2012 

தொடர்புடைய சிறுகதைகள்
மழை சோவென்று பெய்து கொண்டிருந்தது. அடித்த காற்றில் அது வரை அங்கு உலர்ந்து கிடந்த சருகுகள் எல்லாம் சுற்றிப் பறந்தன. சாலையில் சென்ற பெண்களின் உடைகளை எல்லாம் காற்று களவாடப் பார்த்தது. சிக்கென்று பிடித்துக் கொண்டு சென்றனர் அனைவரும். மறு கையில் ...
மேலும் கதையை படிக்க...
“ஹலோ” “எல ராசு, எங்க இருக்க?” “வீட்லதாம்ல சொல்லு” “நம்ம ஜாவா எங்கெருக்கு?” “எது, ப்ரீடுக்கு வாங்கிக் குடுத்தியே ஒரு கரும்வளவி, அதுவா?” “ம்” “நேத்து தான் செத்துப்போச்சி. ஒரு வாரமா சீக்கு” “என்னது?!” “போன மாசமே ரொம்ப வீக்காகி சரியா சாப்பிடல. தலைய தொங்கபோட்டுக்கிட்டே கிடந்துச்சு. கொஞ்சம் சின்ன வெங்காயம் உரிச்சி ...
மேலும் கதையை படிக்க...
ஆளுக்கொரு பொருளை வைத்துக்கொண்டு ஐந்துபேரும் சேர்ந்து அந்தக் குழியைத் தோண்டத் துவங்கியிருந்தோம். “அட்வென்ச்சர் வேணுங்கிறதுக்காக இதெல்லாம் ஓவர் திவ்யா” லலிதா (எ) லல்லி நூறாவது முறையாக அந்த டயலாகை சொல்லி முடித்தாள். அந்தக் குளிர் பனியிலும் அவளது முகம் வேர்த்து வெளுத்திருந்தது. “உங்களுக்கெல்லாம் மனசாட்சி இருக்கா? ...
மேலும் கதையை படிக்க...
எச்சரிக்கை: உங்களுக்கு ஐக்மோபோபியா என்றால் இந்தக் கதையைப் படிக்காதீர்கள். சில இடங்களில் ரத்தம் இருக்கலாம்! “இதுக்கு முன்னாடி எப்பவாவது இந்த மாதிரி மயக்கம் வந்திருக்கா?” டார்ச் லைட் ராதாவின் கண்களைக் கூசச் செய்ய, ‘இல்லை’ என்பது போல அவள் லேசாகத் தலையை அசைக்க முரளி “இது ...
மேலும் கதையை படிக்க...
அப்படியே பைத்தியம் பிடித்துவிடும் போல இருக்கிறது. ஒருவேளை ஏற்கனவே பிடித்திருக்குமோ? ஆனால் யாரும் எதையும் சொல்லக் காணோமே! தலையைத் திருப்பிப் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த தரணி சாரைப் பார்த்தால் அவர் எப்போதும் போலப் புன்னகைத்துவிட்டு ‘என்ன’ என்பதுபோல் பார்த்தார். ‘ஒன்றுமில்லை’ எனத் தலையசைத்துவிட்டுத் ...
மேலும் கதையை படிக்க...
பேருந்தில் நீ எனக்கு
ஒரு நாயகன்
அவள் பெயர் பூவெழினி
முதலிரவுக் கதை
குழப்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)