நான் மட்டும்?

 

காலை நீட்டி, உடம்பை லேசாய் முறுக்கிப் படுத்த விசாலத்துக்கு அப்பாடி என்றிருந்தது.

எத்தனை பெரிய காரியம் நல்லபடியாய் நடந்து முடித்திருக்கிறது.

ஒண்டிப் பொம்பளையாய் இருந்தாலும் நாலு ஜனம் பாராட்டுகிற மாதிரி காலாகாலத்தில் பெண்ணை ஒருத்தனிடம் ஒப்படைத்துவிட்டது எத்தனை பெரிய காரியம்!

ஸ்ரீ வெங்கடாசலபதியின் அனுக்கிரகமும், அந்த வக்கீல் வீட்டு மாமியின் உபகாரமும் இல்லையென்றால் இந்தக் கல்யாணத்தை மனசால்கூட நான் நினைத்துப் பார்த்திருக்க முடியுமா? முடியாது.

காரும் பங்களாவுமாய் மணக்கிற இடம் இல்லை என்றாலும், சம்பந்தி வீட்டுக்காரர்கள் நல்ல அந்தஸ்தானவர்கள் தானே?.

மாப்பிள்ளை ஸ்கூட்டர் வைத்துக்கொண்டிருக்கிறார். இருக்கிற வீடு மூத்த மச்சினருக்குச் சொந்தம். பாப்பா, பாப்பா என்று அன்போடு பழகும் மாமியார். கூறைப்புடவை, திருமாங்கல்யம் அவர்கள் வங்கிப் போட்டதுதான். கையில் வரதட்சிணை தம்பிடி இல்லை…அப்புறமென்ன?.

“உங்க நிலைமை எங்களுக்குத் தெரியும்…வீணா கடனை வாங்கிக் கஷ்டப்படாதீங்கோ…உங்க பொண்ணு எங்காத்துல மகாலட்சுமி மாதிரி வளைய வந்த போதும்…”

யார் சொல்வார்கள் இப்படி?. இந்தக் கலிகாலத்தில் யார் சொல்வார்கள் இப்படி?.

இந்த சம்பந்தம் குதிர வழிகாட்டிவிட்ட வக்கீல் வீடு மாமியைக் கோயிலில் வைத்து மூன்று வேளையும் நான் நமஸ்காரம் பண்ணினாலும் தகும் இல்லையா?.

“ஏண்டி விசாலம், பீர்க்கங்காவாட்டம் பொண்ணு ‘திமுதிமு’னு வளரந்துட்டாளேனு நீ ஆதங்கப்படறதுக்கு நல்ல வழி பொறக்கப்போறதுடீ… நேத்து செங்கல்பட்டுக்கு, நாத்தனார் பொண் சீமந்தத்துக்குப் போயிருந்தேனா, அங்கு சேது மாமியைப் பார்த்தேன்..சேது மாமி யாருனு உனக்குச் சொல்லலியே…! பங்கஜத்தோட – அதாண்டி என் நாத்தனார் பொண்ணோட – பக்கத்தாத்து மாமி! மாமா போய் நாலு வருஷமாறதாம். நாலு பிள்ளைகள்…நாலு பேரும் செங்கல்பட்டுலேயே தான் இருக்கா…மூத்தவன் வக்கீல், அடுத்தாவன் கார் மெக்கானிக் ஷாப் ஒண்ணு வெச்சிருக்கான், மூணாவது பிள்ளையும் வக்கீல், நாலாவது பையன் படிக்கறான்..பிள்ளை ஒவ்வொருத்தனும் ராஜ மாதிரி இருக்கான்! என்ன இருந்து என்ன போ..என்னமோ சாபம் மாதிரி ரெண்டு பொண் கொழைந்தைகளை விட்டுவிட்டு அகாலமா மூத்த மாட்டுப்பொண் ரெண்டாம் வருஷம் போயிட்டா! அடுத்தவளுக்கு, இருந்தாப்பல இருந்து திடும்னு ஆறு மாசம் முன்னாலே ஒரு பக்கம் இழுத்துண்டுடுத்து…பாவம், படுக்கையோடு படுக்கையா கிடக்கா! ரொம்ப கண்ணராவி! மூத்தவனை ‘இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோடா, எனக்கும் ஆத்துல கூடமாட எல்லாத்துக்கும் ஒத்தாசையா இருக்கும்’னு சேது மாமி கெஞ்சினாளாம்… அவன் மசியலையாம்! ‘மூத்த பசங்க ரெண்டும் சந்நியாசி மாதிரி இருந்துண்டிருக்க மாமி, இனிமே மூணாவது பையனுக்காவது நல்ல குணவதியா ஒருத்தி வாச்சி இந்த வீடு மறுபடி கலகலனு இருக்கணும்’னு மாமி எங்கிட்ட சொல்லி, பிழியப் பிழிய அழுதா… ‘பணம் காசு வேண்டாம், பகட்டு வேண்டாம், அழகு வேண்டாம், குணம் மட்டும் இருந்தாப் போதும்’னு சேது மாமி பொலம்பினப்போ எனக்கு பாப்பா ஞாபகம்தான் வந்தது! சொன்னேன்… “சமையக்காரி பொண்ணா இருந்தா என்ன மாமி? எஸ்.எஸ்.எல்.ஸி. படிச்சிருக்கா, அடக்கமானவ, சமர்த்து, கண்ணுக்கு லட்சணமா இருப்பாங்கறேள், வேறு என்ன வேணும்?. நாங்க வர்ற வெள்ளிக்கிழமை பொண் பாக்க வந்திடறோம்’னுட்டா! விசாலம் உன் பொண்ணுக்குக் கல்யாணவேளை வந்திடுத்துடி!”

ஆமாம், நினைத்த நினைப்பில்லாமல் கல்யானவேளை தொம்மென்று எதிரில் குதிக்கத்தானே செய்தது? இல்லாவிட்டால் வெள்ளிகிழமை பெண் பார்த்து, அன்றைக்கே தாம்பூலம் மாற்றி, சரியாய் எட்டாம் நாள் திருநீர்மலையில் கல்யாணத்தை முடித்து, முந்தாநாள் செங்கல்பட்டில் சாந்தி முகூர்த்தம் பண்ணி பெண்ணை அவர்கள் வீட்டில் விட்டுவிட்டு நான் இப்படி திம்மக்கட்டையாய் அசந்து படுத்திருப்பது எப்படி சாத்தியம்?.

கண்களை மூடிக்கொண்ட விசாலத்துக்குத் தூக்கம் வரவில்லை. புரண்டு படுத்தாள். எழுந்துபோய் பானையிலிருந்து தண்ணீர் எடுத்துக் குடித்தாள்.

***

ழு வருஷமா?

அந்த பிராமணனைத் தெற்கு வடக்காய்க் கிடத்தியிருந்தது நடந்து ஏழு வருஷம்தானா ஆகிறது? என்னமோ ஒரு மாமாங்கம் ஆகிவிட்ட தினுசில் அத்தனை வேதனை, அத்தனை துக்கம்.

ஊர் உலகத்தில் ஆயிரமாயிரம் ஆண்பிள்ளைகள் இருக்க, பாழாய்ப்போன டி.பி. வியாதி தன்னைத் தொற்றிக்கொண்டதை, முதலில் எதோ சாதாரண ஜலதோஷம், இருமல் என்று அலட்சியப் படுத்தின வைத்தியநாதன்-விசாலத்தின் கணவன்-மிளகுக் கஷாயம் குடித்து, சித்தரத்தை, கடுக்காய் அடக்கிக்கொண்டு, இன்னும் கொஞ்சம் அதிகமான பிறகு, ‘சூடு ஜாஸ்தியாயிடுத்து’ என்று சொல்லிப் பசும்பாலில் பனங்கல்கண்டு, மிளகு, மஞ்சள் போடி போட்டுக் கைசிக் குடித்து, இப்படியும் அப்படியுமாய் வியாதி நன்றாய் வேர் விட்டுக் கொண்டதும்தான் ஜி.எச்.க்குப் போனான்.

ஒருநாள் ராத்திரி எழுந்து உட்கார்ந்துகொண்டு வாய் ஓயாமல் இருமினான். ‘மாரை வலிக்கறதுடீ விசாலம்…’ என்றான். அவள் தவிட்டு ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருக்கையிலேயே ‘பின்மண்டைலே என்னமோ ‘பளிச் பளிச்’சுங்கறதுடீ…’ என்றான். கொள கொளவென்று ரத்த வாந்தி. அவ்வளவுதான், ஆள் அவுட்.

ஆயுசுக்கும் கூடவே இருப்பான் என்று நம்பியவன் நட்டாற்றில் விட்டுப் போனபோது விசாலத்துக்கு இருப்பத்தெட்டு வயசு. பெண் பாப்பாவுக்கு ஒன்பது முடிந்து பத்து.

கூடப்பிறந்த அண்ணன் வீட்டில் போய் இருந்தாள். ஆறு மாசம் கூடத் தாக்குப் பிடிக்க முடியவில்லை. மன்னி சரியான பத்ரகாளி. கால் வயற்றுக்குச் சோறு போட்டுவிட்டு, தன்னைக் கழுதை கணக்காக வேலை வாங்கினதுகூட விசாலத்துக்குப் பெருசாய் உறுத்தவில்லை. அனால் ஒன்பது வயசுப் பாப்பாவுக்கு ஒரே ஒரு வேலை பழையது போடுவதும், கிணற்றிலிருந்து தண்ணீர் இழுத்து, ‘மங்கு மங்’கென்று இருக்கும் அண்டா, குண்டா, லோட்டா என்று ஒன்று விடாமல் நிரப்பச் சொல்வதும், கையில் கிடைத்தால் விளாசி எடுப்பதும் தாங்க மாட்டாமல் போக, ஒரு நாள் அண்ணன் வீட்டிலிருந்து மாமா வீட்டிக்குப் போனாள்.

அண்ணன் வீடு சட்டி என்றால், மாமா வீடு நெருப்பு என்பதை ஒரே மாசத்தில் புரிந்துகொண்டாள்.

மாமி அந்தண்டை, இந்தண்டை போயிருக்கும் சமயத்தில மாமா ‘ஹி..ஹி..’ என்று அசடு வழிந்தார். காபி கொடுத்தால் தொட்டு வாங்கினார். திருட்டுத்தனமாய் ஓரக்கண்ணில் அடிக்கடி பார்த்தார்.

ஒருநாள் மாமி கோயிலுக்குப் போயிருந்த நாழிகையில் வாசக் கதவைச் சாத்தித் தாழ் போட்டார். அம்மியில் அரைத்துக் கொண்டிருந்தவளைப் பின்பக்கமாக வந்து இறுக அணைத்தார்.

“அம்மாடி…! என்ன உடம்புடீ உனக்கு! இதை வீணடிச்சா எப்படி? ம் ? மாமி வர நாழியாகும்.. பயப்படாதே! சமர்த்தா நடந்துண்டா உன்னை நா தனிய நன்னா கவனிச்சுப்பேன்… புரிஞ்சுதா? மொரண்டு பண்ணாதடீ விசாலம்…”

அந்தக் குரலும், அந்த அவசரமும்…

விசாலம் கையில் இருந்த குழவியைத் தூக்கி மாமாவின் காலில் ஓங்கிப் போட்டாள்.

“கடங்காரப் பாவி… உன் மனசுல என்னடா நீ நெனைச் சுண்டிருக்கே? மாமிக்காகப் பார்க்கறேன்…இல்லேன்னா இந்த அம்மிக் கொழவியை உன் மண்டையிலேயே போட்டிருப்பேன்! நீ நாசமாப் போக!”

மார்பு மேலே ஏறி இறங்க, மூச்சி வாங்கக் கத்தியவள், மேற் கொண்டு ஒரு நிமிஷம் நிற்காமல் பையை எடுத்துக் கொண்டு, தெருவில் விளையாடிக்கொண்டிருந்த பாப்பாவோடு கிளம்பி விட்டாள்.

தான் குடியிருந்த ஸ்டோருக்கு வந்து, பின்கட்டில் இருக்கும் செல்ல பாட்டியிடம் நேராகச் சென்றாள்.

“எனக்கு யாரும் நாதியில்லே பாட்டீ…கட்டினவனை இழந்த பொண்ணுக்கு ஒவ்வொரு நிமிஷமும் ஆபத்துதான்னு நன்னா புரிஞ்சி போச்சி. இந்த உடம்புலே உசிர் இருக்கிறவரைக்கும் நான் சீதையா வாழத்தான் ஆசைப்படறேன்…எனக்கு ஒத்தாசை பண்ணுங்கோ பாட்டீ…உங்களைத்தான் மலைய நம்பிண்டு வந்திருக்கேன்…” என்று சொல்லிக் கதறினாள்.

***

செல்லா பாட்டி பன்னிரண்டு வயசில்-பெரியவளாகு முன்னரே-பொட்டிழந்து மொட்டை அடித்துக்கொண்டவள். சொந்தம் பந்தம் என்று யாரிடமும் ஒட்டிக்கொள்ளாமல் தன கையை நம்பி வாழ்பவள். கல்யாணங்களுக்குப் பட்சணம் செய்வதில் எக்ஸ்பர்ட்.

கத்திக் குத்தின் வேதனையை உணர்ந்தவளில்லையா? வைதவ்யத்தின் பயங்கரத்தை அனுபவித்தவள் இல்லையா? கோழிக்குஞ்சைப் பொத்திக்கொள்வது போல இரண்டு கைகளையும் விரித்து விசாலத்தையும் பாப்பாவையும் தன் நிழலுக்குள் அணைத்துக்கொண்டாள்.

ஆரம்ப காலத்தில் தூக்குகளைத் தூக்கிக்கொண்டு மெஷினுக்குப் போய் வந்து, முறுக்கு மாவு பிசைந்து கொடுத்து, அடுப்பில் பதார்த்தங்களைப் போட்டு எடுத்து, கொஞ்சம் கொஞ்சமாய்ப் பாட்டிக்கு நேர் வாரிசாகி, கல்யாண பட்சணங்கள் தயாரிப்பதில் குருவை மிஞ்சின சிஷ்யையாக விசாலம் மாறுவதற்குள் வருஷங்கள் ஓடிவிட்டன.

இதன் நடுவில் பாப்பா எஸ்.எஸ்.எல்.ஸி. முடித்தாள். ‘திமுதிமு’ என்று ரேஸ் குதிரை வளர்ந்தாள். சாட்டை சாட்டையாய்க் காலும் கையும், தலைப் பின்னலுமாய், கண்டவர் பார்வையைத் தன் பக்கம் இழுத்துக்கொண்டாள்.

சமையல்காரி பெண்ணுக்கு இத்தனை வளர்த்தி, லட்சணம் எதற்கு என்ற பயம் அடிவயிற்றைப் பிராண்டிய பிரான்டலில், போகும் வரும் இடங்களிலெல்லாம் விசாலம் புலம்பத் தொடங்கினாள்.

‘பொண் வளர்ந்துட்டா, காலம் கேட்டுக் கெடக்கு, புருஷனும் இல்லே, கையிலே நாலு காசும் இல்லே…நான் என்ன பண்ணுவேன்?. எம் பொண்ணை எப்படிக் கரையேத்துவேன்.

விசாலம் புலம்பத் தொடங்கின நேரம் ரொம்ப நல்ல நேரமாக இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் இப்படியொரு வசதியான நல்ல இடம், தானாக, கண்மூடித் திறந்த நாழிகையில் வந்து குதிருமா?.

***

மீண்டும் பாயில் வந்து படுத்த விசாலம், கல்யாணத்துக்காகத் தான் வாங்கியிருக்கும் கடனையும், அதை அடைக்க எத்தனை மாசங்கள் தேவைப்படும் என்பதையும் கணக்குப் போட்டுப் பார்த்தாள்.

திரட்சி நடந்துவிட்டது. இனி நல்ல சமாச்சாரம் எந்த நிமிஷமும் காதில் விழலாம்…முப்பத்தாறு வயதில் தான் பாட்டி ஆனாலும் ஆகிவிடலாம் என்று நினைத்தபோது விசாலத்துக்கு சந்தோசமாக இருந்தது. அந்த சந்தோஷத்தின் காரணமாய் உதடுகள் விரிய அவள் படுத்துக்கிடந்த நிமிஷத்தில் வாசற்கதவு படபடவென்று தட்டப்பட்டது.

கதவைத் திறந்தவள் திடுக்கிட்டுப் போனாள்.

பாப்பா…! கலைந்த தலையும், அலுத்து வீங்கின முகமுமாய்… என்ன இது?.

“என்னடீ..என்ன ஆச்சி?”

பாப்பா உள்ளே வந்து மூலையில் சாய்ந்து உட்கார்ந்தாள்.

“என்ன நடந்துதுடீ…? சொல்லித் தொலையேன்…”

“………..”

“நீ ஏதாவது தப்புப் பண்ணயா? மாப்பிள்ளை அடிச்சாரா? மாமியார் கோபிச்சுண்டாரா?”

“………..”

“பெரிய எடத்துலே நடந்துக்கத் தெரியாம ஏடாகூடமா ஏதாவது பண்ணிட்டயாடீ, பாப்பா?”

“………..”

“நல்லபடியா தாலி கழுத்திலே ஏறிடுத்துனு நான் சந்தோஷப் படறதைக் கெடுக்கற மாதிரி என்ன காரியம்டீ செஞ்சிட்டு வந்திருக்கே…?”

“………..”

கால் மணி அரை மணி ஆயிற்று. விசாலத்தின் கெஞ்சல், கொஞ்சல், மிரட்டலுக்குப் பலன் ஏதுமில்லை.

“இப்படி அகால வேளைலே தனியா வர அளவுக்கு என்னடீ நடந்திடுத்து? சனியனே, சொல்லித் தொலையேண்டீ… வாய்ல என்ன கொழுக்கட்டையா?”

எதற்கும் பாப்பா வாயைத் திறக்காமல் இருப்பது, கண்மண் தெரியாத ஆத்திரத்தை கிளப்ப, விசாலம் அவளை நெருங்கித் தலைமுடியைப் பற்றி அழுந்த உலுக்கினாள்.

“நான் கேக்கக் கேக்க இடிச்ச புளியாட்டம் நீ இப்படி உட்கார்ந்திருந்தா என்னடீ அர்த்தம்?. உன் மனசிலே நீ என்ன தாண்டி நினைச்சுண்டிருக்கே?. திமிர் புடிச்ச நாயே! ராமன் மாதிரி ஆம்புடையானையும், கௌசல்யை மாதிரி மாமியாரையும் விட்டுட்டு எதுக்காடீ இங்க வந்தே?. எழுந்திரு, முதல்லே உன்னை உங்காத்திலே கொண்டு விட்டுட்டுத்தான் எனக்கு மறு வேலை..ம்..எழுந்திரு…”

இத்தனை நாழிகையாய் விட்டத்தை வெறித்த பாப்பா சடக்கென்று தலையை ஒடித்து அம்மாவைக் கண் அகல நோக்கினாள்.

“என்ன சொன்னேம்மா?. ராமன் மாதிரி ஆம்படையான், கௌசல்யை மாதிரி மாமியார்னா?. இல்லேம்மா..சத்தியமா இல்லே! இவ ஒரு குந்தியம்மா… ‘கிடைச்சதைப் பகிர்ந்துக் கோங்கோ’ன்னு தன் பிள்ளைகள்கிட்ட சொன்ன குந்திதாம்மா இவளும்..”

“என்னடீ பாப்பா சொல்றே…?”

“ஆயுசுக்கும் சீதையா வாழனுங்கற ஆசை இந்த வயசுலேயும் உனக்கு இருக்கறச்சே, என்னை மட்டும் திரௌபதியா வாழ ஏம்மா தொரத்தறே?. நான் மட்டும் திரௌபதியா ஏம்மா வாழணும்…?”

கண்களை விரித்துக்கொண்டு குரல் எழும்பக் கத்தின பாப்பா, முன்னால் சாய்ந்து அம்மாவின் இடுப்பைக் கட்டிக் கொண்டாள். அப்புறம் சப்தமில்லாமல் விக்கிவிக்கி அழத் தொடங்கினாள்.

- வெளியான ஆண்டு: 1980 

தொடர்புடைய சிறுகதைகள்
அவளுக்கு எண்ணெய் தேய்த்துக் கொள்வதென்றால் ரொம்பப் பிரியம். கல்யாணமாகுமுன் பிறந்த வீட்டில் காலேஜ் போகும் கன்னியாக இருந்த நாட்களில் அவளுக்கு எண்ணெய் தேய்த்துவிட என்று ஒரு பெண்மணியை அம்மா நியமித்திருந்தாள். கஸ்தூரி - அதான் அந்தப் பெண்மணி - அடாது மழைபெய்தாலும் ...
மேலும் கதையை படிக்க...
"அம்மா..." "என்ன இந்துக் குட்டீ?" "என்னம்மா பண்ணிட்டு இருக்கீங்க?" "ஒரு க்ளயண்டோட முக்கியமான விஷயம் பேச வேண்டியிருக்கு-அதுக்காக பாயிண்ட்ஸ் தயாரிச்சிகிட்டு இருக்கேன்..என்ன வேணும்மா?" "இல்லேம்மா.. வந்து..." "சொல்லு டார்லிங், அம்மாக்கு நாழியாவுது பாரு..." "நாளன்னிக்கு எங்க ஸ்கூல்ல ஸ்போர்ட்ஸ் டே மம்மி... நீங்களும், டாடியும் வரணும் மம்மீ.." "நாளன்னிக்கா? ஏழாம் தேதியா? ...
மேலும் கதையை படிக்க...
அன்று சியாமாவுக்கு இறைச்சி வாங்கிவரும் ஆள் வரவில்லை. வயலில் கரும்பு வெட்டுகிறார்களாம், போய் விட்டான். தேசிய நெடுஞ்சாலையில் அந்த டவுனுக்கு தெற்கே ஒன்றரை கிலோ மீட்டர் தள்ளி அமைந்திருந்த தொழில்சாலையில் எங்கள் இல்லமும் இருந்ததால் ஏதொரு விஷயத்திற்கும் எந்த ஒரு சாமான் வாங்கவும் ...
மேலும் கதையை படிக்க...
ப்ரீதி ரொம்ப சுத்தம். இன்றைக்கு என்றில்லை, சின்ன வயசு முதற்கொண்டே இந்த சுத்த உணர்வு ரொம்ப ஜாஸ்திதான். இவளையொத்த பெண்கள் பள்ளி விடுமுறை நாட்களில் ஸ்கூல் எக்ஸ்கர்ஷன், மகாபலிபுரம் போகிறோம். திருநீர்மலை ஏறப் போகிறோம் என்று அலைந்த நாட்களில் கூட, அவள் ...
மேலும் கதையை படிக்க...
மண்ணெண்ணைய் தீர்ந்து போய் நாலு நாட்களாகி விட்டன. காஸ் ‘இப்பபோ அப்பவோ’ என்று பயமுறுத்திக் கொண்டிருந்தது. கெரசினை வாங்காமல் இருந்து, காஸும் தீர்ந்து, விருந்தாளியும் வந்து விட்டால் கேட்க வேண்டாம். நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை வேறு. வழக்கமாய் தோட்டக்காரனை சைக்கிளில் கடைத் தெருவுக்கு அனுப்பி ...
மேலும் கதையை படிக்க...
ட்ரங்கால்
தாய்
வைராக்கியம்
சுத்தம்
போணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)