‘நான்’ பற்றிய கனவு

 

“புகை சூழ்ந்த அந்த இடத்தை நெருங்கிக் கொண்டிருந்த போது என்னிடம் எந்தவித நடுக்கத்தையும் நான் உணரவில்லை. மங்கலான மஞ்சள் வெளிச்சமொன்றைக் கடந்து என் பாதங்களை நகர்த்திக் கொண்டிருந்தேன். ஒப்பனைகளையும் விசித்திரங்களையும் சேர்த்து மிக உற்சாகமான ஓசை நயத்துடன் விளக்கி விளங்கப்படுத்த வேண்டிய தருணத்தில் வெறுமெனே இந்தக்கதையை சொல்லி விட்டுப்போவதில் நிறைய உடன்பாடு கொண்டிருப்பதாக உணருகிறேன்.

ஏனென்றால் நான் ஒன்றும் ‘கதை சொல்லி ‘இல்லை. எந்த எடுத்துக்காட்டலையும் மிகைப்படுத்தலையும் ரசிக்கும் மனநிலையில் நான் இருக்கவில்லை என்பதே உண்மை. ஆனால் என்னைப்பற்றி மட்டும் சொல்லி விடுகிறேன்.அப்போது தான் என்னை நீங்கள் தொடர்ந்து பார்க்கும் போது புரிந்து கொள்ள முடியும். புரியாமல் போனாலும் பரவாயில்லை என்கிறது இதயத்துள் அமர்ந்திருக்கும் ஏதோவொன்று.

எந்தச்சலனமும் இல்லாத மனம் கொண்டு மனித உருவில் வடிவமைக்கப்பட்டிருக்கும் என்னைத் தேடித் தேடி அலைந்து கொண்டிருந்த தருணத்தில் இந்த புகை மண்டலத்தை நோக்கி உந்தப்பட்டிருக்கும் என் மனநிலை கௌ;விக்குறியானதாக இருப்பதாக உணருகிறேன். உங்களுக்கும் அப்படி இருக்கலாம், நான் எப்படி என்னைத் தேடவென்று. எங்காவது என்னைத் தொலைத்து விட்டேனா என கொஞ்சம் அலசி ஆராய்ந்து கொண்டிருந்தேன். இது வரலாறு- சற்று பின்னோக்கி பயணிக்கிறேன்.

புகை மண்டலத்தை காணும் வரையில் என் சுயம் செய்து கொண்டிருந்த செயற்பாடுகள் உண்மை- நாளிதழ்களிலும்,சில சிற்றிதழ்களிலும் என் மரணச்செய்தி இருக்கிறதா என்ற தேடல், நேற்றோ இன்றோ புதைக்கப்பட்ட மண்ணறைகளின் உள்ளவர்களின் தூக்கம் கலைத்த செயற்பாடு. அதற்குள்ளும் நான் இல்லை, பிணவறைகளில் கைகளோ, காலோ அல்லது தலை துண்டிக்கப்பட்ட நிலையில் நான் இருக்கிறேனா என்றும் ஆராய்ந்தாயிற்று. அங்கும் நான் இல்லை. பொறுமையிழந்தேன்.

முழுவதுமாக கதையை மட்டும் சொல்லிக்கொண்டு போவதால் நீங்கள் அலுப்படையலாம். அதனால் சில உவமைகளை சேர்க்கப்போகிறேன். ‘கூலிக்கு துப்பரவு செய்யும் வேலையாள் போல என் நிலமை மாறிக் கொண்டிருந்தது. மெதுவாக பழுத்து, மெதுவானதொரு காற்றில் விழுந்து விடலாம் என எண்ணிக் கொண்டிருக்கும் எந்த இலையையும் விட்டு வைக்கும் மனநிலை இல்லாமல் மரத்தை ஆட்டியும், கிளைளை அசைத்தும் பழுத்த இலைகளை விழுத்தி துப்பரவு செய்யும் வேலையாள் போல. ஒரு நாளில் இரண்டு தடவை அல்லது அடுத்த நாள் அதிக குப்பைகளை சேர்த்து வைத்து விடுமோ என பயப்பட்டோ, அல்லது சிரமத்துக்கு முகங்கொடுக்காமல் இருக்கவோ அவ்வாறு செயற்படும் வேலையாள் போல பொறுமையிழந்திருந்தேன்…………..’ (ஒரு வார்த்தைக்கு உவமை ஒரு பந்தியாகி விட்டது, இதற்காகத் தான் கதை மட்டும் சொன்னேன்.)

என்னைத் தேடிய பயணத்தை முடிவடையச்செய்து விட்டு உயரமான இடத்திலிருந்து குதிக்கத் தயாரானேன். ஆமாம்…….தோல்வியை ஒப்புக் கொண்டு விட்டேன். விழுந்த வேகத்தில் இற்திருப்பேன் என நினைத்தேன். ஆனால் மீண்டும் நடக்கத் தொடங்கினேன். வலியில்லாத காயத்தில் இரத்தம் மட்டும் வடிந்து கொண்டிருந்தது. இடம் புதிதாக இருந்ததால் எனைத் தேட மீண்டும் ஒரு சந்தர்ப்பம் என நினைத்து நடக்கத் தொடங்கினேன். வழியெல்லாம் எப்போதோ பார்த்த காலநிலையாகத் தெரிந்தது. ஆனால் இடம் என்னவோ புதிது தான்.

தேடல் நிரம்பியிருந்த கண்களை மீண்டும் உலவ விட்டேன். காதுகளில் ஏதோ ஒலிக்கத் தொடங்கிய நேரத்தில், எதையும் என்னால் கேட்க முடியாது என்பது உணரப்பட்டது. ஆனால் சத்தம் வந்து கொண்டிருந்த திசை நோக்கி கால்கள் ஓடத்துவங்கியது. கைகளிரண்டும் காதுகளை இறுக்கிப்பிடித்துக் கொண்டன. ஒளி குறைந்த மலைப்பகுதியை அடைந்ததும் சத்தம் குறைந்தது. ஆனால் கால்களின் வேகமும், கண்களின் தேடலும் தீவிரமடைந்தது.

மனதால் மட்டும் எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை. சலனமடைந்து போன என் மனதில் ஏகப்பட்ட கேள்விகள் எழுந்தவண்ணமிருந்தது. ……பிடித்து விட்டேன், என்னைக் கண்டு பிடித்து விட்டேன்……! குகைக்குழி போன்ற அந்த மலைப் பகுதியின் எல்லாப் பக்கங்களிலும் என் விம்பம் தெரிந்தது. சரியாகப் புரிந்து கொள்ள சில மணித்தியாலங்களைச் செலவிட்டேன். மனம் நிறைந்த திருப்தியுடன் என்னைப் பார்த்தேன். கதை சொல்லலில் முழுமையான இடத்தை அடைந்திருப்பதாகச் சொல்லலாம். ஆனால் கதை ஒன்றுக்காக இதைச் சொல்லவில்லை.

கலக்கம் நிறைந்த முகத்துடனும்,நடுக்கம் பரவிய உடலமைப்புடனும் என்னைக் கண்ட நான் ஆச்சரியத்தின் ஆகாயத்தில் மேகம் போல் ஓட்டமெடுத்திருந்தேன். என் கண்களை உற்று நோக்கிய தருணம் இடைவிடாக் கண்ணீர் மழையில் கன்னங்கள் சோபையிழந்து சேறு படிந்திருந்தது……

இது தான் நானா……..??? தலையில் கேள்விக்குறிகள் முளைத்துக் கொண்டன. ‘அனிமேசன்’ இல்லாத நிஜமான கேள்விக் குறிகள் என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்…….

இப்போது தான் என் உடலைப் போர்த்தியிருக்கும் கவசத்தை நோக்குகிறேன். நல்ல வேளை சிலுவையில் அறையப்படவில்லை என்ற ஆறுதல் தோன்றுமளவில் மனம் சிலிர்த்துக் கொண்டது. கற்பனைக்காகச் சொல்லும் சிலிர்ப்பல்ல, உண்மையில் மயிர்க்கலங்கள் புடைத்து நீட்டி நிமிர்ந்து நிண்டன என்பதை புரிந்து கொள்ளுங்கள்……..

என்னிடமிருந்த ஆயிரத்துக்கும் அதிகமான கேள்விக்குறிகளை இறக்கி அங்கே

புழுதி படிந்து கிடந்த கோணிப்பையிலிட்டு முன்பாக நின்றிருந்த என் முன்னால் போட்டேன்….

இப்போது நான் எதிர்பார்க்கத் தொடங்கினேன். ஆனால், என்னிடமிருந்து பதில் கிடைத்த பாடில்லை. நாளிதழ் ஒன்றை ஒவ்வொரு பக்கமாக புரட்டிக் கொண்டிருக்கும் மனநிலை என்னிடமிருந்து தென்பட்டது. எதையும் இலகுவாகப் புரிந்து கொள்ளும் எனக்கு நிலவரம் புரிந்து விட்டது.

என்னைத் தவிர்த்துக் கொள்வதற்காக அந்த நாடகம் நிகழ்ந்து கொண்டிருந்ததை உணர்ந்தேன். விடுவதாயில்லை, நாளிதழின் தலைப்புச் செய்தி போல துருத்திக் கொண்டு நின்றேன். தவிர்க்க நினைத்தாலும் கண்ணில் பட்டு விடுவேன் என்ற நம்பிக்கை.

அந்த இருட்டுக்குகைக்குள் எனக்கான அறையொன்றும் இருந்தது. கொஞ்சம் சிரமம், சுரங்கப் பாதை வழி அதன் அமைவிடம் இருந்ததால். இருப்பினும் சென்றேன்…..

புத்தகப் பூச்சியான என்னை மையப் படுத்தியதாகவோ என்னவோ புழுதி படியாத புத்தக மூட்டைகள் நிரம்பிக்கிடந்தன. என் அவசரம் புரிந்து கொண்டேன், புத்தகமொன்றை கைகளில் ஏந்தினேன்.

விபரமான விளக்கங்களுடன் ‘நான்’ பற்றிய குறிப்பு இருந்தது. மனம் உணர்ந்த விடயங்களையெல்லாம் சொல்லித்தீர முடியாது. நல்லது தான் நான் கதை சொல்லியாய் இல்லாமல் போனது……………………..

அறை நிரம்பிய புத்தகங்கள் – என் உடல்பை செய்து குவித்த ஒவ்வொரு செயலின் மறுவடிவம் என்று நான் உரைத்துக் கொண்டிருந்தேன். ஒய்யாரமாய் உலாவிக் கொண்டிருக்கும் உணர்வு ரீதியான என் மறுபக்கம் இவ்வாறுதான் இருந்தது. பாவங்களின் அடித்தளம் போடப்பட்ட எனது ‘நான்’ பற்றி தேடல், எனக்கு உணர்த்த முற்படும் போதே வெளியேறத் தயாரானேன்.

நான் பார்த்தது பற்றி எல்லோரும் புரிந்து விடக்கூடாது என்ற எண்ணம் ததும்பியது. என்னை நான் தேடியிருக்கவே கூடாது, எந்த எதிர்பார்ப்பும் என் கண்ணை நிறைத்திருக்கவே கூடாது, என்னைத்தவிர்த்த போதாவது நான் அதைத் தவிர்த்திருக்க வேண்டுமே என்று மூளையும் , மனதும் மாறி மாறி ஒரே விடயத்தை விவாதித்துக் கொண்டிருந்தன.

திரும்பி நடக்க வழி தெரியவில்லை. இதயம் பிளந்து ஏக்கம் வழிந்து கொண்டிருந்தது. கலகம் நிரம்பிய உறுப்புக்களுடன் பயணித்துக் கொண்டிருந்த ‘நான் என்னைப் புரிந்து கொண்டேன்.’ கண்களை மூடிக்கொண்டு வேகமாக முன்னால் இருந்த பாறையை நோக்கி ஓடினேன்……………………. ஓடிக் கொண்டே இருந்தேன்………………பாறையை ஆவேசமாக நெருங்கினேன்…….”

என்ன கனவு இது, -உடலெல்லாம் நடுக்கம் எடுத்தது. வியர்வை நனைக்காத இடமில்லை. தலை உடலில் தான் இருக்கிறதா என்று பார்க்கிறேன். அலறாமல் எழுந்தது நிம்மதியைத் தந்தது. விடிவதற்கு இன்னும் சில நாழிகைகள் இருக்கிறது என்று கடிகாரம் காட்டியது. விடிந்தால் எதிர் கொள்ளப் போகும் என் இயந்திர வாழ்வையும், நிகழப் போகும் பாவங்களையம் நினைக்கையில் தலை சுற்றியது. வாழ்க்கை மீதான துயரம் அதிகரித்தது.

ஆனால் கனவு பற்றிய ஆச்சரியம் மீண்டும் தூங்க விடவில்லை. பயத்தை பரிசளித்துக் கொண்டிருந்த இரவிடம் இவ்வாறு கேட்டேன். “என்னைத் தவிர எதையும் காட்டாத இந்தக் கனவில் யாருக்கு நான் கதை சொல்லிக் கொண்டிருந்தேன்…..” 

தொடர்புடைய சிறுகதைகள்
எதைச் செய்யச் சொன்னாலும் “இது கஷ்டமாயிருக்கிறது” என்று சொல்வதிலேயே அவள் குறியாயிருந்தாள். என் பொறுமையின் அடித்தளம் வரை சென்று கெஞ்சினாலும்,என் கோபத்தின் உச்சிக்கே சென்று கத்தினாலும் அவள் பேச்சிலிருந்து மாறுவதாக தெரியவில்லை. தொலைபேசி அழைப்பை துண்டித்து விடுவதால் என்னிடம் இருந்து தப்பித்துக் ...
மேலும் கதையை படிக்க...
“தவறுகள் உணர்கிறோம் உணர்ந்ததை மறைக்கிறோம்” மிக மெல்லிய இசையில் அழகான வரிகளுடன் ஏற்ற குரலில் ஓடிக் கொண்டிருந்தது பாட்டு. மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் போல் தோன்றியதால் மொபைலில் கூகுள் சேர்ஜூக்குச் சென்று பாடலின் முதல் வரியை டைப் செய்து ‘டவுன்லோட்’ செய்து கொண்டேன். ...
மேலும் கதையை படிக்க...
சத்தம் கேட்டு அவன் வெளியே வந்து பார்த்த போது அந்தப்பெண் நின்றிருந்தாள். நடுத்தர வயது மதிக்கத்தகுந்த அவளது முகத்தில் இருந்ததெல்லாம் அனுதாபத்தை பெற முயற்சிக்கும் பாவனைகள். குட்டையாக ஒரு புறம் சாய்ந்திருந்த மல்லிகை மரத்திலிருந்த பூவொன்று அவள் கையில் இருந்தது.முற்றம் என்று சொல்ல ...
மேலும் கதையை படிக்க...
சித்திரம் கீறிக் கொண்டு வராத காரணத்தினால் சிலர் வகுப்புக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்தனர். கையில் நீள் சதுர சித்திரக் கொப்பியும் பென்சிலும் இருந்தது. சிலர் சும்மா நிண்டிருந்தார்கள், சிலர் ஏதோ கிறுக்குவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். வகுப்புக்குள்ளே சாமிலா டீச்சர் அதே சித்திரப் ...
மேலும் கதையை படிக்க...
இப்போ.....நேரம் ஆறு மணி.எனக்குப் பதட்டம் கூடிக்கிட்டே இருக்கு. வியர்வை வேற,மின் விசிறியை அழுத்தி விட்டேன். இப்ப கொஞ்சம் பரவாயில்ல. ஒரு பேப்பரையும்,பேனாவையும் கையில் எடுத்துக்கொண்டேன். “எப்படி ஆரம்பிக்கிறது.......?” மனம் சிந்திச்சிக்கிட்டே இருக்கு. ஆனா வருதில்ல. எப்படியோ இன்டக்கி ஒரு முடிவு எடுத்தாயிற்று.எழுதியே ...
மேலும் கதையை படிக்க...
விடிந்து கனநேரமாகிறது என்பதை மதிவதனனின் படுக்கையறையின் ஓடுகளுக்கு இடுவல்களில் தெரிந்த பிரகாசமான ஒளி காட்டியது. அதற்காக அடித்துப்பிடித்து எழுந்து விட மனமில்லாமல் படுத்திருந்தான் அவன். விழித்த தன் கண்களை ‘மறுபடியும் தூங்கு’ என்று கெஞ்சிக்கொண்டே கூரைக்கு முதுகைக்காட்டி கிடந்தான். ஆனால் கண் வழித்த போதே ...
மேலும் கதையை படிக்க...
நேரம் இரவு 11.45 மணி புதன் கிழமை 2011.10.12 அன்புள்ள டயரி........இன்றைய தினம் என்னை மிகவும் காயப்படுத்தி விட்டது. நான் எதைச் செய்து இதை மறக்கவென்று தெரியவில்லை. வாழ்க்கை என்றால் இன்னது தான் என்று இன்பத்தை மட்டும் அனுபவித்துக் கொண்டிருக்கும் என்னைப்போன்றவர்களைத் தாண்டியும் நிகழும் சில ...
மேலும் கதையை படிக்க...
உணர்தல் மற்றும் நிர்ப்பந்தித்தல்
முகமூடிகள்
சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடும்
சித்திரமும் கைப்பழக்கம்
இதுவும் ஒரு கதை…
துயர்…
நரகத்தின் தேவதைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)