நானும் துரதிர்ஷ்டமும்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 28, 2021
பார்வையிட்டோர்: 3,332 
 

பலருக்கு வாழ்வில் அதிர்ஷ்டம், துரதிர்ஷ்டம் மேல் ஒரு நம்பிக்கை இருப்பதில்லை. ஆனால் என்மேல் துரதிர்ஷ்டத்திற்கு உள்ள அலாதி பிரியம் குறித்தே இந்த உண்மை கதையை தொடர்கிறேன். எனக்கு ஏறக்குறைய ஒரு பத்து வயது இருக்கும்பொழுது ஒரு மாலைப்பொழுதில் என் வீட்டு வாசலில் தெரு மங்கையர் கூடி புறணி பேசுகின்ற நல்வேலையில் என் கவனம் கையில் இருந்த கவண்வில் மீதும் குறி எதிர்ப்புறம் இருந்த மண்ணெண்ணெய் கடையின் ட்யூப் லைட் மீதும் இருந்தது. என் நோக்கம் அதை உடைப்பது அல்ல வெறும் குறி மட்டுமே அதில் இருந்தது. சட்டென்று பின்புறம் வந்த என் பெரிய அண்ணனின் கால் என் முழங்கையில் பட்டு விரலை விடுத்தேன். அடுத்த நொடி டமால் என்ற சத்தம். வீட்டின் முன் சாலையில் இருள் சூழ்ந்தது. யாவரும் எதையும் அறியாமல் விழித்த அவ்வேளையில் எகிறி குதித்து ஓடிபோய் என் அத்தை வீட்டின் கட்டிலின் அடியில் நுழைந்து கொண்டேன். முழு உடலும் வியர்வையால் நனைந்தது. அதில் என் தவறு எதுவும் இல்லை, ஆனால் அங்கே இருந்தால் அதை விசாரிக்கும் மனப்பக்குவம் என் தாய்க்கும் இருந்திருக்காது என்று எண்ணியே அங்கிருந்து ஓடினேன். என் அம்மாவோ ஐயோ பிள்ளை பயந்து எங்கோ ஓடிவிட்டான் என்று பதறியடித்து அனைத்து சொந்தங்களின் வீட்டிலும் தேடிய பின் கடைசியாக என் அத்தை வீட்டை அடைந்து அண்ணி குமார் வந்தானா? என்று வினவினார். என் அத்தை இல்லையே இங்கு வரவில்லையே என்று கூற நானோ மெதுவாக என் தாயின் கால் அருகே இருந்து, ஆமை ஓட்டிலிருந்து தன் தலையை வெளியே எட்டிப் பார்ப்பது போல் கட்டிலின் அடியிலிருந்து எட்டிப் பார்த்தேன். என் அம்மா என்னை தூக்கிக் கொண்டு ஐயோ என் பிள்ளை பயந்துறுச்சு அண்ணி என்று கூறி அங்கிருந்து என்னை வீட்டிற்கு அழைத்துச் சென்று சாமி அறையில் இறக்கிவிட்டு விபூதியை எடுத்து என் நெற்றி முழுவதும் பட்டை போட்டுவிட்டார். சிறு விஷயங்கள் மற்றும் சேட்டைகளுக்கு பலமுறை நான் என் தாயிடம் அடிவாங்கியிருந்தாலும் இது போன்ற நினைவுகளில் அவருக்கு ஈடு இணையான பாசம் வேறு எவரிடமும் கிடைக்காது என்பதை உறுதியாகச் சொல்லமுடியும். பிறகு அங்கு மண்ணெண்ணெய் கடையில் என்ன நடந்தது என்று அம்மாவிடம் கேட்டேன், கடையில் பணிபுரிந்த குடும்ப நண்பர் அண்ணன் பூபதி அவர்கள் ஹை வோல்டேஜ் என்று பொய் சொல்லி அங்கு சூழ்நிலையை சமாளித்துவிட்டார் என்று கூறினார். என்னடா இதெல்லாம் துரதிர்ஷ்டமா என்று முற்றுப்புள்ளி வைத்து விடாதீர்கள் இதோ அடுத்த நிகழ்விற்கு செல்லுவோம்.

என் துரதிர்ஷ்ட நிலையை அறிந்திருந்தும் பலமுறைகளில் என் விளையாட்டுப்போக்கை நான் நிறுத்திக் கொண்டதில்லை. ரோட்டில் கல் கிடந்தால் அதை எடுத்து குறி பார்த்து எதையாவது அடிப்பது ஒரு பிறவி குணம். இன்றும் அது தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. ஒருமுறை கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்த வேளையில் பந்து ஒரு தடுப்பு சுவரிடப்பட்ட காடுபோன்ற இடத்திர்க்குள் விழுந்தது. அந்த மதில் ஒரு எட்டு அடி உயரம் இருக்கும். அதனால் வெளியே இருந்து உள்ளே என்ன நடக்கிறது என்பதை காணமுடியாது. வழக்கம்போல் பேட்டிங் அணியினர் உள்ளே இறங்கி பந்தை தேடினர். வெளியே நின்ற நான் கையை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல் ஒரு கல்லை எடுத்து மிக உயரமாக எறிந்தேன். அந்த கல் மதில் சுவரின் உள்ளே இருந்த பரந்த காட்டுவெளியில் பறக்கும்பொழுதே என் நெஞ்சம் துரதிர்ஷ்டத்தை எண்ணி பதறியது. அடுத்த வினாடியே உள்ளே இருந்து அம்மா என்று ஒரு அலறல் சத்தம். ஆம் நீங்கள் நினைத்து போலவே அது என் நண்பன் விஜயின் தலை உச்சியையே பதம் பார்த்தது. கல் சற்று சிரியதென்பதால் வெறும் ஆருதலுடன் இந்த நிகழ்வு முற்றுபெற்றது.

வீட்டிற்குள் காற்று அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் பந்தை வைத்து கைப்பந்து ஆடுவது வழக்கம். நானும் என் அண்ணனும் அப்படி ஆடி வீட்டில் அழகிற்காக அம்மா ஷோகேசில் வைத்திருந்த பீங்கான் பொம்மையை பலமுறை பழுது பார்த்ததெல்லாம் உண்டு. அப்படி ஒருமுறை வீட்டில் யாரும் இல்லாத வேளையில் நான் பந்தையடித்து விளையாடும்போது ஒரு குருவி பீங்கான் பொம்மை கீழே விழுந்து உடைந்தது. நல்லவேளை வீட்டில் யாரும் இல்லை என்று ஆறுதலடைந்த என் உள்ளம் உடனே அந்த உடைந்த பாகத்தை ஒரு குழப்பத்துடன் வீட்டின் வெளியே இருந்த கால்வாயில் எறிய தூண்டியது. அங்கு போய் அமர்ந்தான் என் சனி. நானும் ஒரு வாரமாய் என் பள்ளிக்கு செல்லும்போதெல்லாம் அந்த கால்வாயில் நோட்டமிட்டேன், அது அங்கிருந்து செல்வதுபோல் தெரியவில்லை. இறுதியாக இதை நாமே அசிங்கம் பார்க்காமல் அப்புறப்படுத்திவிடலாம் என்றெல்லாம் தோன்றினாலும் கூட இது எப்படி அம்மா கண்ணில் படும் என்ற எண்ணம் மேலோங்கியது. முடிவாக ஒருவாரம் கழித்து அதை அம்மா கண்டுவிட்டார். இது நீ பார்த்த வேலை தானே என்று கேட்டார். திருடன் மாட்டிக்கொண்டது போல் விழித்தேன். எனக்கு அப்பொழுதே தெரியும் இதெல்லாம் நீ தான் செய்வாய் என்று. உடைத்ததும் உடைத்தாய், அதை எனக்கு தெரியாத இடத்தில் கூட உன்னால் போட முடியவில்லை என்று கிண்டலடித்து விட்டுவிட்டார். சரி அடுத்த நிகழ்வை பார்ப்போம்.

அப்பாவிற்கு உதவி செய்யும் குணம் சற்றே அதிகம், அதனாலோ என்னவோ அவர் உள்ளாட்சி தேர்தலில் பங்கு பெறுவதும் உண்டு. ஒருமுறை தன் விருப்பக் கட்சியில் சீட்டு கிடைக்காமல் சுயேட்சையாக பீரோ சின்னத்தில் நின்று பன்னிரெண்டு வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அடுத்தமுறை எப்படியாவது ஒரு பரிட்சயமான கட்சியின் கீழ் நின்று தன் பகுதி மக்களுக்கு தொண்டு செய்ய எண்ணி எவ்வளவோ முயற்சி செய்தும் பலரது முரண்பாடுகளால் இறுதியாக அன்னபோஸ்ட் முறை அமலானது. அதிலும் சற்று அது விநோதமான குலுக்கல் முறை. தெருவின் கருப்பண்ணசாமி கோவிலில் வேட்பாளர்கள் தங்கள் பெயரை முறையிட்டு குலுக்கல் போட்டு ஒரு சீட்டு எடுத்தனர். என் அப்பாவோ வீட்டின் கடைக்குட்டி என்று என் மீது கொண்ட அன்பினால் பெயரை R.குமார் என்று கொடுக்க, அங்கு எடுக்கபட்டதோ G. குமார். ஒருவேளை என் துரதிர்ஷ்டத்தை அவர் அறிந்திருந்தால் இதிலிருந்து தப்பியிருக்க வாய்ப்புண்டு. இப்பொழுது இந்த கதையை அவர் ஆன்மா வாசித்தால் கூட சிரிக்கும்.

ஒரு ஒரு சீசனுக்கு ஒரு ஒரு விளையாட்டு என்பதெல்லாம் 90’s மற்றும் 80’s குழந்தைகளே அறிவார்கள். ஆனால் எப்பொழுதும் களைகட்டும் சீசன் கிரிக்கெட் மட்டுமே. அப்படி ஒருமுறை சீச்சாங்கல்லு சீசன். இதை எல்லாரும் அறிவீர்களா என்று தெரியவில்லை. ஒருவேளை உங்கள் பகுதியில் அந்த விளையாட்டின் பெயர் வேறொரு பெயராக இருக்கலாம். மார்பிள் அல்லது கடப்பா கல்லை சதுரமாகவோ அல்லது வட்டமான வடிவமாகவோ நமது கைக்கு ஏற்றவாறு வடிவமைத்து ஒரு வட்டத்தினுள் வைக்கப்பட்ட கார்டு அல்லது சோடா மூடிகளை வட்டத்தை விட்டு வெளியே கல்லால் சீய்த்து எடுத்து வெற்றி காண்பார்கள். அப்படி அந்த விளையாட்டிற்கு தயார் செய்த ஒரு வட்ட வடிவமான கல்லை விளையாட்டாக உருட்டிக்கொண்டு இருந்தேன். அது ஒரு மைதானம். அப்படி ஒருமுறை உருட்டிவிட எதிர்ப்புறம் நண்பன் காமராசு அமர்ந்திருந்தான். என் முந்தைய கல் துரதிர்ஷ்டம் நினைவுகள் எல்லாம் என் கண்முன் வந்துகொண்டிருந்தது. அதுவரை சீராக ஓடிய அந்த கல் சரியாக என் நண்பனின் ஒரு அடிக்கு முன் சற்றே குதித்து அவன் மூக்கை எட்டியது. ஒரு விவேக் சார் படத்தில் அவருக்கு தண்ணியில் கண்டம் என்பதுபோல் எனக்கு கல்லில் கண்டம் என்பதை அன்றே உணர்ந்தேன். இப்படி என் நினைவு அறிந்தே நடந்தவற்றையெல்லாம் ஒருமுறை என் அம்மாவிடம் தொகுத்து கூறும்பொழுது என் அம்மா கூறினார், நீ நினைவற்ற சிறுவயதிலேயே மாடியில் காயவைக்கப்படும் துணி பறக்காமல் இருப்பதற்காக மேலே வைக்கப்பட்ட ஒரு பெரிய செங்களை எடுத்து அருகிலிருந்த ஓட்டு வீட்டுமேல் போட்டு இரண்டு குடும்பத்திற்கும் பெரிய சண்டையை உருவாக்கியவனாயிற்றே என்று கூறி சிரிக்களானார், நானும் சிரிப்பலையில் சிக்கினேன். நாம் செய்யும் சிறு விளையாட்டும் வினையாகிவிடும் என்று மனதிற்கு பட்டால் உடனே அதிலிருந்து பின்வாங்கிவிட வேண்டும் என்பதை இதுபோன்ற பல நிகழ்வுகளால் இன்றும் கடைபிடித்துக் கொண்டிருக்கிறேன்.

Print Friendly, PDF & Email

1 thought on “நானும் துரதிர்ஷ்டமும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *