Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

நாடகத்தில் சொதப்பாதிருப்பது எப்படி ?

 

ஜான் பீட்டர் தமயோன் எங்கள் வீட்டிற்குக் கொஞ்சம் தள்ளி இருக்கிற பெரிய கிணற்றிற்கு எதிர்த்தாற்போலுள்ள வீட்டில் இருப்பவன். ரயில்வே பள்ளியில் இல்லாமல் பக்கத்திலுள்ள சாமியார் ஸ்கூல் என்னும் கிறிஸ்துவப் பள்ளிக்கூடத்தில் படிப்பவன். எஸ்.எஸ். எல். சியில் அதிக மார்க் வாங்கவேண்டுமென்றால் எல்லோரும் அங்குதான் படிப்பார்கள். ரயில்வேமீது பாசம் வைத்தவர்களும் பள்ளிக்குப் பணம் கட்டமுடியாதவர்களும் ” படிக்கிற பையனாயிருந்தா எந்தப் பள்ளிக்கூடத்திலும் படிப்பான் ! ஸ்கூலும் வாத்தியார்களும் என்ன பண்ணுவார்கள்? ” என்று சொல்லி தங்கள் பிள்ளைகளை ரயில்வே ஸ்கூலிலேயே படிக்கவைப்பார்கள். சாமியார் ஸ்கூலில் படித்தால் அறு நூறு மார்க்கிற்கு நானூற்றைம்பது மதிப்பெண்கள் உத்தரவாதம். ஐநூறு மதிப்பெண்களுக்குமேல் ஒரு ஏழெட்டு பேராவது வாங்குவார்கள். ஆனால் அதற்கு மாணவர்கள் படும் பாடு சொல்லி மாளாது. ஸ்கூல் ஹெட் மாஸ்டரான ஃபாதர் சிலுவை மாலையைவிட அவரது அங்கிக்குள் எப்போதும் பிரம்பையே சுமந்து செல்வார் எனச் சொல்வான் ஜான் என்கிற ஜான் பீட்டர் தமயோன். ஃபாதரின் பிரம்படித் தாக்கத்தைச் சமாளிக்க ஸ்கூல் யூனிஃபார்மிற்குக் கீழ் இரண்டு மூன்று ட்ரௌசர்களைப் போட்டுக்கொண்டு போவான்.

ஜான் கொழுக் மொழுக்கென்று அமுல் பேபிபோல இருப்பான். சிரிக்கும்போது கன்னத்தில் குழிவிழும். அவர்கள் குடும்பமே நல்ல கனமான குடும்பம். அவன் தாத்தா லூர்துசாமி வெயிட் லிஃப்டர். ரயில்வே ஒர்க் ஷாப்பில் சார்ஜ்மேனாக இருந்து ரிடயர் ஆனவர். ஆஜானுபாகுவான அவரை நான் எப்போதும் அண்டர்வேர் மட்டுமே தரித்தவராகத்தான் பார்த்திருக்கிறேன். உடம்பெல்லாம் தடிப்புத் தடிப்பாக ஏதோ தோல் வியாதியில் கஷ்டப் பட்டுக்கொண்டிருந்தார். வீட்டில் ஜிம் வைத்து ரயில்வே க்வார்ட்டர்ஸின் திருமூலராக இளைய தலைமுறையின் உடம்பை வளர்க்க உயிரை வாங்கிக் கொண்டிருந்தார். எல்லோரும் அவரை பயத்துடன் ” அண்ணே ” என்று அழைத்துக்கொண்டிருந்ததில் நானும் ஒருமுறை ஜானைக் கூப்பிடப்போனபோது வாசலில் நின்றிருந்த அவரிடம் , ” அண்ணே! ஜான் இருக்கானா ? ” என்று கேட்டபோது பனியன்போடாது அவர் குலுங்கிச் சிரித்ததை என் கூட வந்திருந்த ‘முதிர் கண்ணன் ‘ புருஷோத்தமன் ஒருவிதக் கிளர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தான். பின் அவர் உள்ளே பார்த்து , ” டேய் ஜான்! உன் சின்னத் தாத்தா ரமணி வந்திருக்கான் பாரு ” என்று சொல்லி இன்னும் சிரித்ததில் புருஷோத்தமனை நான் ரொம்பவும் கட்டுப் படுத்திவைக்க வேண்டியதாயிற்று.

ஜானின் அப்பா வெயிட் லிஃப்டரெல்லாம் ஒன்றும் இல்லை. ஆனாலும் பெருத்த தொப்பையோடும் கையில் சிகரெட்டோடும் வலம்வந்து கொண்டிருப்பார். அவர் வரலாற்று சமூக நாடகங்களெல்லாம் எழுதி பொன்மலையிலும் மற்ற ஊர்களிலும் அரங்கேற்றிக்கொண்டிருப்பது ஒன்றும் ஜானின் தாத்தாவிற்குப் பிடித்திருக்கவில்லை. ஜானும் அந்தச் சின்ன வயதிலேயே நாடகம் எழுத, ஒரு பொங்கல் சமயத்தில் அரங்கேறிய ” அவன் கள்வனா? ” என்ற போலி போலீசைத் திருடன் அடையாளம் காட்டும் நாடகம் எங்கள் பொது எதிரியான கோபு என்கிற கோபாலகிருஷ்ணன் பாதி நாடகத்தின் போது ஆயிரம் வாலாவைக் கொளுத்தி ஜானின் தங்கைக்காகவே நாடகத்தில் புகுத்தப்பட்ட நடனத்தின்போது வீசியெரிந்ததால் நாடகம் பார்க்க வந்திருந்த பத்துபேரோடு நடிகர்களும் ஓடிப்போனதில் அடுத்த பொங்கல் வரை அவன் நாடக முயற்சியில் ஈடுபடவில்லை. ஆனால் நிஜ வாழ்க்கையில் அவன் திருட வேண்டியக் கட்டாயம் வந்த போது அவனுக்குள்ளிருந்த நாடக ஆசிரியன் பெரிதும் துணை புரிவான் என்று நான் தீர்மானமாக நம்பினேன்.

ஜானின் தாத்தா தனக்கு வரும் பென்ஷனைத் தவிர வட்டிக்குக் கடன் கொடுத்தும் சம்பாதித்துக் கொண்டிருந்தார். வீட்டின் முன்புறம் பெரிய இடத்தை வளைத்துப்போட்டு ஓரங்களில் செடிகளையும் மரங்களையும் வளர்த்து மற்ற இடங்களில் உடற்பயிற்சிக்கான பேரலல் பார் , புல் அப் ரிங்க்ஸ் போன்ற சாதனங்கள் பரந்து கிடக்க அவர் மர நாற்காலியில் ஏதோ ஒரு மரத்தின் அடியில் உட்கார்ந்திருக்க அந்த மரத்தின் நிழலின் கருமை அவர் தைலம் தடவின உடம்பை மேலும் பளபளக்க வைத்ததோடு முகத்தையும் படமெடுத்து நிற்கும் நாகத்தின் குரூர வசீகரமாக பிரதிபலிக்க வைத்துக்கொண்டிருந்தது. அந்த சமயங்களில் எப்போதும் கட்கத்தில் துண்டை இடுக்கிக்கொண்டுக் கொஞ்சம் பேர் அவர் எதிரில் பவ்யமாய் நின்று கொண்டிருப்பர். அப்படி ஒரு சமயமான ஞாயிறு காலையில் எங்கள் நண்பன் பெரியசாமியின் அப்பாவும் அவ்வாறே நின்று கொண்டிருந்தார். அவர் முறை வந்தபோது பணத்தை எப்படியாவது ஆறு மாதங்களில் திருப்பிக் கொடுத்து விடுவதாகவும் அதுவரை பொறுத்துக்கொள்ளவும் அவர் மன்றாடிக்கொண்டிருந்தார். இவ்வளவு நாட்களில் திருப்பிக்கொடுக்க முடியாதவன் இன்னும் ஆறு மாதங்களில் எப்படிக் கொடுக்க முடியும் என்றும் வார்த்தையைக் காக்கத் தவறியவன் மனைவியைக் காக்கத் தவறியவன்தான் என்பதை மிகுந்த கொச்சையான வார்த்தைகளில் சொல்லி ஒழுக்கங்களை விற்றுத்தான் கடனை அடைக்கமுடியும் என்று பெரியசாமியின் தந்தையை அவரின் மிகப் பலவீனமான இடத்தில் வார்த்தைகளால் அடித்தார். பெரியசாமியின் அப்பா கையறு நிலையில் நின்றிருந்த கோலத்தை நானும் ஜானும் மறைவிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தோம்.

ஜானும் நானும் அன்று மாலை வெகு நேரம் பேசாமலேயே நடந்து கொண்டிருந்தோம். சர்ச் பக்கம் போன போது, ஜான் என்னைக் கொஞ்சம் இருக்கச் சொல்லிவிட்டு உள்ளே சென்றான். அவன் சென்று அரைமணி நேரமாகியும் திரும்பாததால், நான் சர்சுக்குள் போனபோதும் அவன் தீவிரமான வேண்டுதலில் மண்டியிட்டு லயித்திருந்தான். நான் அவனைத் தொந்தரவு செய்யாமல் திரும்பிவிடலாம் என்று நினைத்தபோது அவன் எழுந்து சிலுவை இட்டு ஆட்காட்டி விரலைக் கொக்கியாக்கி அதில் முத்தம் தந்து ரட்சகருடனான உரையாடலை முடித்துவிட்டு வேகமாக வந்து என்னுடன் சேர்ந்துகொண்டான். . அதுவரை திரிந்துபோன பால் மாதிரியிருந்த அவன் முகம் சர்ச்சுக்குள்ளிருந்து வெளியே வந்தபின் மீண்டும் வழக்கமான அமுல் படிந்து அமைதி சாய்ந்திருந்தது. கர்த்தருடனான பரிமாற்றத்தில் ஒரு மாற்றம் அவனுக்கு ஏற்பட்டிருந்தது. ” என்னடா, அமுல் குமரா! என்னாச்சு ? ” என்று நான் கேட்டபோது , ” சொல்றேன் இரு ” என்றான். கிரிக்கெட் மேட்சின்போது மழை வந்தால் மைதானக் காப்பாளர்கள் தார்ப்பாலின் ஷீட்டை எடுத்துக்கொண்டு ஆடுகளத்தை மூட ஓடுவதுபோல இருட்டை இழுத்துக்கொண்டு மாயக்கரங்கள் உலகின்மேல் இரவைப் பரப்பிக் கொண்டிருந்தன. நட்சத்திரங்களின் ஒளி மினுக்கல்கள் இரவை வெற்றிகொள்ளமுடியாது தவித்து நடுங்கிக்கொண்டிருந்தன. ஜானின் தாத்தா லூர்துசாமியோ ஒரு பிரம்மாண்டமான வெற்றிகொள்ளமுடியாத இரவாகத்தோன்றியது எனக்கு.

ஜான் பக்கத்திலிருந்த பெட்டிக்கடைக்குச் சென்று இரண்டு கேரமில்க் சாக்லெட்டுகள் வாங்கி எனக்கொன்று கொடுத்துவிட்டு மற்றொன்றை வாயில்போட்டுப் பின் ஊறின இனிப்பு எச்சிலை ஏதோ பச்சைமிளகாயைக் கடித்ததுபோலச் சத்தமிட்டு உறிஞ்சித் தொண்டைக்குள் தள்ளினான். அவன் தாத்தா வட்டிக்குப் பணம் வாங்கியவர்களிடம் குரூரமாக நடந்துகொள்வது வழக்கம்தான் என்றாலும் அவனால் இன்று பெரியசாமியின் அப்பாவிடம் தாத்தா நடந்துகொண்டது தாங்கமுடியாமல் போய்விட்டது. பெரியசாமி மிகவும் அமைதியான நன்றாகப் படிக்கக்கூடிய பையன். ஜானும் அவனும் ஒரே வகுப்பு. என்னைவிட ஜானுக்குத்தான் அவனைப் பற்றி நன்றாகத் தெரியும். பெரியசாமியின் தந்தை, தான் பட்ட அவமானத்தைத் தன் வீட்டில் போய் சொல்லியிருந்தால் எப்படி மறு நாள் அவன் முகத்தில் விழிப்பது என்று ஜான் கவலைப் பட்டிருப்பான் என்றுதான் தோன்றியது எனக்கு.

ஜான் பேசாமலேயே வந்துகொண்டிருந்தது எனக்குள் எரிச்சலை ஏற்படுத்தியிருந்த சமயத்தில்தான் ஜான் திடீரென்று கீழேவிழுந்து கை கால்களையெல்லாம் இழுத்துக்கொண்டு வாய்கோணலாக ” தாத்தா தாத்தா ” என்று அரற்றிக் கொண்டிருந்தான். நான் ஓட்டமாக ஓடி அவன் தாத்தாவை அழைத்து வருவதற்குள் அங்கே பெரிய கூட்டம் கூடியிருந்தது. உடனே ஒரு ரிக் ஷாவைப் பிடித்து ரயில்வே ஆஸ்பத்திரிக்கு விரைந்தபோது ஜான் மூச்சுப்பேச்சில்லாமல் இருந்தான். டாக்டர் எல்லோரையும் வெளியே அனுப்பிவிட்டு ஒரு அரை மணி நேர சோதனைக்குப் பின் தாத்தாவை உள்ளே அழைத்து என்ன கேட்டாரோ தெரியவில்லை. தாத்தா வெளியே வந்து என்னை உள்ளே அழைத்துச் சென்றார். என்னிடம் நடந்ததை எல்லாம் கேட்டுக் கொண்டபின், மனத்தளவில் ஜான் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அது என்ன என்பதைக் கண்டுபிடிக்கவேண்டும் என்றும் சொன்னபோது தாத்தா என்னைப்பார்த்து, உனக்கு ஏதாவது தெரியுமாடா ?” என்று என்னைக் கேட்டபோது நான் பெரியசாமியின் அப்பாவிடம் தாத்தா கடுமையாக நடந்துகொண்டது அவனை மிகக்கடுமையாகப் பாதித்திருக்கிறது என்று சொல்லிவைத்தேன்.

மறு நாள் காலையில் ஜானும் தாத்தாவும் காலையிலேயே நிறைய பேப்பர்களைப் போட்டு எரித்துக் கொண்டிருந்தார்கள். ஜான் என்னிடம் கண்ணைக்காட்டி ” எல்லாம் புரோ நோட் ” என்றான். என்னிடம் கதை வசனம் எதுவும் சொல்லாமலேயே ஒரு நாடகத்தில் என்னை நடிக்கவைத்தது ஏன் என்று அவனைப் பின்னாளில் கேட்டபோது ” முன்னாலேயே சொல்லியிருந்தால் நீ சொதப்பியிருப்பாய் ” அதனால்தான் என்றான். 

தொடர்புடைய சிறுகதைகள்
அவனுக்குத் தியாகையன் என்று பெயர் வைத்ததால் சங்கீதத்தில் ஆர்வம் வந்ததா அல்லது சங்கீதம் அவனுக்கு நன்றாக வரும் என நினைத்து அவன் அப்பா பஞ்சரத்னம் அப்படி ஒரு பெயரை அவனுக்குச் சூட்டினாரா என்று தெரியவில்லை. அவன் அம்மா நாகரத்தினம்மாவிற்குப் பையனின் நாமகரணத்தில் ...
மேலும் கதையை படிக்க...
கிறிஸ்துமஸுக்கு முன்னாலேயே வீடுகளின் முன்புறத்திலேயோ அல்லது மரக்கிளைகளிலோ கட்டித் தொங்கவிடப்பட்ட நட்சத்திரக்கூண்டுகளின் கலர்ப்பேப்பர்கள் டிசம்பர் மாதத்தின் அசாத்தியப் பனிப்பொழிவில் வண்ணம் வெளுத்து உள்ளிருக்கும் முட்டை பல்பின் மஞ்சள் ஒளி அடுத்த ஆண்டின் பிறப்பிற்கு மங்கலமாய்க் காத்திருக்கும். கூராய்ச் சீவின பென்சிலை நட்டுவைத்தது ...
மேலும் கதையை படிக்க...
நளினி அம்மா சற்று அதிர அதிரத்தான் நடப்பாள். பெரிய சரீரம். சாரீரமும் கனம்தான். அதட்டலான குரலில் ” ஏய் சிறுக்கி ! எதையும் தொடாம சும்மா ஒக்கார்ந்திருக்க மாட்டியா ? இந்த ஆம்பிளப்புள்ள ஒக்கார்ந்த்திருக்கல ? ” என்று என்னை ஒப்பிட்டு ...
மேலும் கதையை படிக்க...
மலையென்றால் அது ஒன்றும் பெரிய மலையல்ல. ஒரு குன்றுதான். அதன் பின்புறம் ஒரு பெரிய தண்ணீர் டேங்க் உண்டு. ரயில்வே க்வார்டர்ஸ் முழுவதற்கும் குடிதண்ணீர் சப்ளை இதிலிருந்துதான். மலைக்குன்றின் முன்புறம் மேலே வழக்கம்போல முருகனும் கீழே பொன்னேஸ்வரி அம்மனும் அருள்பாலித்துக்கொண்டிருப்பார்கள். ஆஸ்திகப் ...
மேலும் கதையை படிக்க...
” ஜிக்கன் வந்துட்டான்மா ” என்று என் அக்கா ஜெயா வேகமாய் ஓடிவந்து என் அம்மாவிடம் ரகசியக் குரலில் கிசுகிசுத்தது ஹாலில் உட்கார்ந்து படித்துக்கொண்டிருந்ததாய் பாவ்லா பண்ணிக்கொண்டிருந்த என் காதிலேயே விழுந்தது. ஜிக்கன் என் மாமா பையன். பொள்ளாச்சியில் எல்.ஈ.ஈ ( ...
மேலும் கதையை படிக்க...
பஞ்சரத்னம்
புத்தாண்டு முத்தம்
சொல்லாமல் போனது
ராபர்ட்டின் கிறிஸ்துமஸ்
வந்தவர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)