நாகதாளி

 

இன்று வரப்போகும் இரவுக்காய் காத்திருக்கிறேன். அது எனக்கான உறக்கத்தை கொண்டு வரும் என்ற உணர்வு என்னுள் விழுதோடிக் கிடக்கிறது. கண்டிப்பாய் உறங்குவேன். பதினைந்து வருட உறக்கத்தை கூவி அழைக்காமலே, அது என்னை வந்து சேரும். யுத்த களத்தில் எதிர்த்துப் போட்டியிடாமல், அனுசரித்தே வாழப் பழகிக்கொண்டு, உயிரைப் பிடித்து வைத்திருந்து தப்பித்த ஒரு மாவீரன் போல, இன்று நான் அயர்ந்த உறக்கம் கொள்வேன். என்னிடம் ஆயுதங்கள் ஏதும் இல்லை, என் எதிரிகள் வீழ்ந்துவிட்டார்கள். நான் அவர்களை அவமதிக்கவில்லை, அனுசரித்துக் கொண்டேன். நான் எதிர்க்கவில்லை, விட்டுக்கொடுத்தேன். ஒரு கன்னத்தில் அறைந்த போது மறுகன்னத்தைக் காட்டினேன். மறுகன்னத்தில் அறைந்த போதும் நான் எதிர்க்கவில்லை. ஆதரவான கைகளுக்குள் முகம் புதைத்து அடியின் தடம் பதிந்த கன்னத்தை மறைத்துக் கொண்டேன். என் கன்னத்தின் விரல் பதிவுகளைப் பார்க்க எனக்கும் பிடிக்கவில்லை. உன்னால் ஒரு போதும் புரிந்து கொள்ளப்படாத என் மொழிகள் எப்போதும் ஈட்டியானது. உன்னால் உணரப்படாத என் பெண்மை மென்மையைத் தொலைத்தது எப்போது? என் பிரம்ம வாயில் மூடிக்கொண்டது எப்போது? வறன் உறல் அறியா என் தேகம் ஈரம் அற்றுப் போனது எப்போது? விடைகளற்ற வெளியில் நான் திரிந்து கொண்டிருந்தபோது இவையெல்லாம் உன்னை விழுங்கித் தீர்த்திருந்தது. எல்லாவற்றின் பின்பு இன்று வரப்போகும் இரவுக்காய் உறங்கக் காத்திருப்பவள் நான்.

இரவென்பது பொழுதுகள் கூடடையும் அடர்ந்த காடு. காலம் தன் தேகம் விரித்து கந்தர்வ களி நடனம் நிகழ்த்தும் அபூர்வ தருணம். தயக்கம் குடித்து, வெட்கம் தொலைந்த உயிர்களின் சுதந்திர உலாக்காலம். உயிர்கள் அந்த காரமான வெளியில், அடிநாதமாய் அடைந்து கிடக்கும் ஒலியை எழுப்பி கெக்கலிக்கும் நேரம். இரவு கறைகள் அற்றது, திசைகள் அற்றது, எல்லைகள் அற்றது, களங்கம் அற்றது. இரவுக்குப் பகை நிலவு. இரவை அழித்து நிலவு தன்னை ஏற்றுகிறது. அமாவாசை நாளில் இரவு நிலவைத் தோற்கடித்து, தன் விஸ்வரூபத்துடன் பிரபஞ்ச ஆளுகை சிம்மாசனத்தில் சம்மணமிட்டு அமர்கிறது. இரவு குற்றங்களுக்குத் துணைபுரிவதில்லை. இரவோடு போட்டியிடும் மின்மினியின் வெளிச்சம் கூட ஒரு மாபெரும் குற்றம் நிகழ்வதற்குப் போதுமானதாக இருக்கிறது. ஒளி ஆபத்துக்களாலும் குற்றங்களாலும் பளபளப்பூட்டப்பட்டது. இரவு உயிர்களின் தாலாட்டு, தன்னை ஊற்றி நிரப்பி உயிரை உறங்க வைக்கும் உலகின் தாலாட்டு. இரவுகளின் சலனமும், இயக்கமும், சத்தமின்றியே நிகழ்கிறது. சலனங்களாலும், சப்தங்களாலும் கற்பழிக்கப்பட முடியாதது. இரவு தன்னைத் திறந்து ஒளியை ஏற்றுக்கொள்கிறது. ஒளியோடு கலக்கும் மிகச் சிறந்த கலவியின் உச்ச நாயகி இரவு. ஒளி தன்னை மூடி இருளை அளிக்கிறது. மேலும் உணர்வுகளை விருந்து வைக்கிறது. இரவு உணர்வை விழுங்கி மறையென துயிலாதொரு சயனத்தில் இருக்கிறது.

வீதியெங்கும் காலடித் தடங்களில் மரணத்தின் ரேகைகள் வரிவரியாய் ஓடிக் கொண்டிருந்தது. சிலர் வந்து கொண்டிருந்தார்கள். சிலர் போய்க் கொண்டிருந்தார்கள். வருவோரும் போவோரும் வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையில் இயங்கிக் கொண்டிருந்தார்கள். பிறனொருவன் மரணம் குறித்த செய்திகளைத் தாங்கி வந்தவர்கள், தன் மரணம் குறித்த குறிப்புகளைத் தாங்கிப் போனார்கள். மரணம் அனைவரையும் அமைதியாய் உற்று கவனித்துக் கொண்டிருந்தது. இவர்கள் அனைவரும் ஒருநாள் தன் வாசல் வரப்போகும் உறவு என்ற வாஞ்சை அதனிடம் பொங்கி வழிந்தது.

ஆறடி உயரத்தில் நீட்டிப் படுக்க வைக்கப்பட்டிருக்கிறாய். வெள்ளை வேட்டியும், முழுக்கை வெள்ளைச் சட்டையும், உன் கருத்த முகத்தை எடுப்பாய் காட்டியது. அந்த உடை உனக்கு மிகப் பொருத்தமான உடையாய் இருந்தது. உன்னருகில் ஒரு நாற்காலியில் அமர வைக்கப்பட்டிருக்கிறேன். நான் அலங்கோலமாய் இருக்கிறேன். அழுது கொண்டிருக்கிறேன். இரு ஜோடிக் கண்கள் பல என்னை வெறுப்பாய் நோக்குவதை என் உடலும் மனமும் அறியும். என்னை மனிதப் போலி போலவும், என் கண்ணீரை நீலிக் கண்ணீராகவும் அவர்கள் பார்க்கிறார்கள். இருந்தபோதிலும் என் அழுகை நிஜம். நான் நிறைய காரணங்களுக்காக அழுகிறேன். என் கண்ணீர் வலிகளின் கலவையாய் வழிந்து கொண்டிருக்கிறது. அது வற்றும் வரை நான் அழத்தயாராய் இருக்கிறேன். தலை வெடித்துவிடும் போல் வலிக்கிறது. கண்கள் பொருள் பொதிந்த வீக்கம் கொள்கிறது. இவர்கள் அறியாத ஒன்று என்னுள் நிகழ்ந்து கொண்டிருந்தது. அது, உன் மரணம் தவிர்த்த மற்ற எல்லாவற்றிற்காகவும் நான் அழுது கொண்டிருந்தேன்.

குழந்தைகள் இரண்டும் உன்னையும் என்னையும் சுற்றிச் சுற்றி வருகிறது. “அப்பா, நீங்க வேணும்பா, விட்டுட்டுப் போகாதீங்கப்பா” கதறிக் கதறி உன்னை அழைக்கிறார்கள். மரணத்திற்கு செவிகள் கிடையாது. கண்கள் கிடையாது. புலன்கள் அற்றது மரணம். ஆனால் நவரசங்களை உயிர்களில் நெய்து கொண்டே தான் இருக்கிறது. பெரியவளுக்கு வயது பதிமூன்று. அழுகையின் ஊடே என்னை உற்று உற்று, விட்டு விட்டு பார்க்கிறாள். அவள் கண்ணீரும் சில சமயங்களில் நிறம் மாறியதுபோல் எனக்குத் தோன்றியது.

என் கழுத்தில் புத்தம் புதிய மஞ்சள் கயிறு ஆடிக் கொண்டிருந்தது. பிரிபிரியாய் தனித்திருக்கும் இழைகளைப் பிணைத்து முறுக்கிய கயிறு குடும்ப வாழ்க்கையின் தத்துவத்தை நெஞ்சோடு உரசி உரசி உரக்கப் பேசியபடி இருந்தது. நீயும் நானும் எதிரெதிரே புதிராய் நின்றோம். உன்னைக் குறித்த எந்த முன்குறிப்பும் அற்றவளாக நான் நின்றேன். நீ, நான் பெண்ணென்னும் குறிப்பை புத்திக்கு அனுப்பி விட்டு காத்திருந்தாய். என் முதல் வார்த்தையின் முதல் எழுத்தைக் கூட நிராகரித்துவிட்டாய். உன் அலட்சியத்தால் அது அழிந்தே போனது. மீண்டும் மீண்டும் என் வார்த்தைகள் வற்றி, வறண்ட மணற்படுக்கையென காய்ந்து போனது. வார்த்தைகள் சூறையாடப்பட்ட ஒரு மிகச் சிறந்த நாவலாய் உன் நூலகத்தில் என்னை அடுக்கி வைத்திருந்தாய். மௌனத்தை குத்திக் கிளறிக் கிழித்த ஒரு யுத்தம் என்னுள் நிகழ்ந்து கொண்டிருந்தது. “வீட்டின் கடைக்குட்டி, செல்லம், பாத்துக்கப்பா” என் வீடு மாறி மாறி என்னை உனக்கு அறிமுகப்படுத்தியது. எதையும் நீ புரிந்து கொண்டதற்கான அறிகுறி தென்படவில்லை.

நீ முதன் முதலில் என் கன்னத்தில் அறைந்த நிமிடம், இப்போது கூட அழியாமல் பின் வந்து, என் தலையை பலமுறை சுழற்றிப் போகிறது. நீ அறைந்த நொடியில் ஒரு மயக்கத்தோடு சுவரில் சாய்ந்தேன். சில கெட்ட வார்த்தைகளை என் பொறுப்பில் விட்டுவிட்டு நீ வெளியேறிவிட்டாய். என் உடல் நடுங்கியது. நீ அடிப்பாயா! அடிக்கும் அளவு முரடனா நீ, என் மீது அவ்வளவு வெறுப்பா, என்னை அடிக்க எப்படி மனம் ஒப்பியது. இனிமேலும் இந்த அடி தொடருமா, சொச்ச காலம் எப்படி கழியும், மனம் கதறி நிமிர்ந்தது. நான் யார் தெரியுமா? வீட்டின் செல்லம், ஊருக்கு மிகச் சிறந்த பெண், பள்ளிக் கூடத்தின் முதல் மாணவி, நிறைய படித்தவள், நிறைய சம்பாதிப்பவள், என் சுயம் நீரில் விழுந்த நிழல்போல் தவித்துக் கொண்டிருந்தது. என்னை அடித்ததை எல்லோரிடமும் தெரிவிக்க விரும்பினேன். மறுகணமே என்னை அடித்ததை எல்லோரிடமும் மறைக்க விரும்பினேன். கதறிக்கதறியழுத என் சுயம் காயம்பட்டுப் போனது. என்னை அடித்தது போல் உன்னை அறைந்துவிட முடியுமா? அடிக்கச் சொல்லி மனம் ஆகாயத்தில் அமர்ந்துகொண்டது. என் முதல் வார்த்தை தொலைந்தபோதே உன்னை அடிக்கச் சொல்லி ஆணையிடாத என் மூளையை அறுத்தறுத்து பெயரிடப்படாத திசைகளிலும்கூட விசிறியடிக்கிறேன்.

என் முதல் பிரசவத்தின்போது என் வீடு நொடித்துப் போயிருந்தது. நீ கொடுத்த வலி மாறிமாறி என் பிரசவ வலியைத் தோற்கடித்தது. நான் மட்டுமல்ல, என் குடும்பமே பிரசவ வலி பட்டுப்போனது, உன்னால். பிள்ளையிடம் பாசத்தோடு நடந்து கொண்டாய். நான் பொதி சுமக்கும் கழுதையாய்த் திரிந்தது உனக்குத் தெரிந்தே இருந்தது. அடுத்தடுத்து இரண்டு பிள்ளைகள். மனதோடு கூட உடம்பும் வலித்தது. எவனாவது ஒரு விஞ்ஞானி என்னை எந்திரமாக்கி விடக்கூடாதா என ஏங்கியழுதது உடம்பு. அடி, உதை, ஏச்சு, பேச்சு, எல்லாம் அன்றாட உணவின் உப்பு போல அவசியப்பொருளாகி விட்டது உனக்கு. எத்தனை முறை தொட்டாலும் சுருட்டிக் கொள்ளும் மரவட்டையைப் பார்த்து மனம் பொறாமை கொண்டது. தாய் வீட்டு உறவுகள் சுருங்கி இந்த வீடு, குழந்தைகள், நீ என்பது மட்டுமே என் உலகம் ஆனது, விழித்தபடி உறங்கத் தெரிந்தது நம் மூத்த மகளுக்கு. அவள் நம் உள்ளக்கிடக்கைகளை கொஞ்சம் கொஞ்சமாய் உள்வாங்க ஆரம்பித்தாள்.

நிறையப் பெண்கள் உன் வாழ்க்கையில் வந்து போனார்கள். எல்லாவற்றையும் எதார்த்தமாக எடுத்துக் கொள்ளச் சொல்லி, யாருக்கோ விதிக்கப்பட்ட கட்டளை, என்னையும் அணைத்துக் கொண்டது. பிற பெண்களை நீ வாழ்க்கை ஏட்டில் பதிவு செய்யும்போது, நான் என் பெயரை அழித்துக் கொண்டிருந்தேன். என் வாழ்க்கை எங்கோ காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது. உனக்கும் எனக்கும் ஒன்றுமில்லாமல் போக பதிமூன்று ஆண்டுகாலம் தேவைப்பட்டிருக்கிறது. பதிமூன்றாவது சீடனாய் வந்து நின்ற ஆண்டு உன்னை எனக்குக் காட்டிக் கொடுத்தது. உனக்கும் எனக்குமிடையில் ஒன்றுமேயில்லா மாயக்கயிறு உன்னையும் என்னையும் பிணைத்திருப்பது தெரிந்தது. அதிலிருந்து விடுபட இல்லாத முடிச்சை அவிழ்த்துக் கொண்டிருந்த முட்டாள் நான்.

இரவுகள் என்னை உறங்க வைக்க நீ அனுமதித்தது இல்லை. அது ரகசிய ஆயுதங்களைச் சுமந்து வந்து என்னைத் தாக்கியது. தட்டித்தட்டி என்னை எழுப்புவதற்காகவே இரவுகள் வருவதாய்த் தோன்றியது. வீட்டின் கொல்லைப்புறத்தில் சுயம்புவாய்த் தோன்றி, முட்களுடன் கிளைத்து நிற்கும் கற்றாழையை மிக விரும்பினேன். இருத்தலுக்கான ஆவலும், வாழ்வதற்கான போராட்டமும் அதனிடம் முட்களாய் வளர்ந்திருந்தது. முட்களால் கிளைத்திருக்கும் உடல் வேண்டி, மனம் ஒற்றைக்கால் தவம் புரிந்தது. கொல்லையில் கற்றாழைச் செடியை நட்டபோது நீ என்னை திட்டினாய். பாலை நிலத்தாவரமே தண்ணீரை குடிச்சுக்கோ என்று அதற்கு தண்ணீர் ஊற்றுவேன். இலையின் மென்மையை திரட்டி முட்களாக்கும் சாதுர்யம் அதற்கு கைவசப்பட்டிருந்தது. தளதளவென்றிருக்கும் பச்சை மேனியெங்கும் முட்களை, என்னுடலும் வேண்டியபோது, முட்களுடன் கிளைத்துக் கொள்ள விரும்பினேன். ஒரு முறை கோபத்தில் நீ அதை வெட்டி எறிந்துவிட்டாய். தன்னை பெருக்கி எழுப்பும் ராட்சஸி சுரஸா போல அது மீண்டும் ஒய்யாரமாய் வளர்ந்து நின்றது. நீ என்னை அந்தச் செடியோடு ஒப்பிட்டுத் திட்டும்போது எனக்குப் பெருமையாய் இருக்கும். நம் குழந்தைகள், செடி குறித்து ஆயிரம் வினாக்களைத் தொடுப்பார்கள். நீர் கொண்ட மேகத்தின் மீது தீராத தாகம் கொண்ட மற்ற எல்லாத் தாவரங்களையும்விட, வறண்ட பாலையில் முரட்டுத் தவம் புரியும் இந்தச் செடியை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

உறவுக்காய் பிணைக்கப்பட்டவர்கள் நீயும் நானும். உன் சக இணை நான். அடிமையாகவும், எதிரியாகவும், உன் வக்ரங்களையும், குரூரங்களையும் கொட்டித் தீர்க்கும் நிலமாகவும் என்னை உனக்கு அடையாளப்படுத்திய இச்சமூகத்தை காறி உமிழ்கிறேன். உன் இணைப்பறவை நான். கண்கள் தாண்டிய வானத்தில் உன்னோடு பறக்க கனவு கண்டவள். என் மரத்தின் இலைகளை உதிர்த்துவிட்டாய். என் சருகுகளின் இசையை தொலைத்துவிட்டாய். என் மரத்தின் குருவிகளை கொத்திப் போய்விட்டாய்.

என்னைக் கடக்கும் முகங்களில் எதையோ ஏக்கத்தோடு நோக்குகிறேன். அன்பாய் அழைக்கும் ஒரு குரலுக்கு ஆயுள் முழுவதும் கட்டுப்பட்டுக் கிடக்க விரும்புகிறேன். என் வலி துடைக்கும் வார்த்தைகள் எங்கும் அற்றுவிட்டபோதும், புதிதாய் முளைவிடும் இலைகளை உற்றுநோக்குகிறேன். திசையெங்கும் தேடி ஆதரவுக் கிரணங்களை கட்டி இழுத்து வருகிறேன். இசை தேடும் சாதகப் பறவைபோல அன்பு தேடி அலையும் பட்சி ஒன்று மனதுக்குள் விஸ்வரூபம் எடுக்கிறது. மடை திறப்பதற்காக என்னுள் மிகப்பெரிய நதி ஒன்று காத்திருக்கிறது.

இரண்டு கைகள் என் முகம் தாங்கியது. என் வலி தேடி மருந்திட்டது. என் மொழி உள்வாங்கப்பட்டது. நான் நிராகரிக்கப்படவில்லை. அன்பின் கதகதப்பை குளிருக்கு பயந்தவளாய் உணரத் தொடங்கினேன். நீ உன் மாய வெளியில் ஏதேதோ உறவுகளைக் கற்பித்து நொந்து கொண்டாய். உடலை மட்டும் உறவுகளுக்கு பிரதானமாய் உன் குறுகிய புத்தி வட்டமிட்டு வைத்திருந்தது. ஆங்காரமும் ஆணவமும் உன்னுள் படமெடுத்தது. உன்னுள் வலி தொடங்கியது. நிராகரிக்கப்பட்டதாய் உணர்ந்தாய். விஷம் குடித்து உன் வாழ்க்கையை முடித்துக் கொண்டாய். உன் சாவின் மூலம் என்னைப் பழிவாங்க விரும்பினாய். உலகுக்கு என்னை நடத்தை கெட்டவள் என்று அறிமுகப்படுத்தியதன் மூலம் உன் சாவின் மீது நீயே வெற்றிக் கொடி நட்டுக் கொண்டாய்.

உன் மரணத்தின் வாசனை என்மீது படர்கிறது. என் அகம் புறம் அனைத்தையும் நிறைக்கிறது. என்னை இறுக்கிப் பிணைத்திருந்த அடிமைச் சங்கிலியை அறுக்கிறது. என் இருண்ட உலகில் ஒளிக்கிரணங்கள் போட்டியிட்டு நுழைகிறது. உன் முன் அமர்ந்திருக்கிறேன், அழுகிறேன். மற்றபடி மரணத்தின் வாசனையை நுகர்ந்து, மெல்ல என் மூச்சோடு கலந்து சுவாசிக்கத் தொடங்குகிறேன். பின்பு வெறி கொண்டவளாய் அதை உள்ளிழுத்து என் உடலை, மனதை, மூச்சை நிறைக்கிறேன். எல்லாவற்றினூடேயும் வெறுத்து ஒதுக்கும் என்னைச் சுற்றி துளையிட்டுக் கொண்டிருக்கும் இவர்கள் கண்கள் அறியாதபடிக்கு, உறக்கம் கொண்டு வரவிருக்கும் இன்றைய இரவுக்காய், காத்திருக்கத் துவங்குகிறேன். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)