நள்ளிரவில் ஒரு காப்பி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 22, 2020
பார்வையிட்டோர்: 7,614 
 

(இது ஒரு மர்மக்கதையா? இருக்கலாம். அல்லது நகைச் சுவைக் கதையோ! அப்படியும் இருக்கலாம். இந்தக் கதை எனக்குப் புரியுமா? சாத்தியம் இருக்கிறது. )

ஒன்று

இரவு மணி ஒன்றரை என்பதால் தெருக்களில் அதிக நடமாட்டமில்லை. ஆட்டோ படுவேகமாய்ப் போனது. ‘கதவைத் தட்டினால் திறக்கவேண்டுமே! அசந்து தூங்கிக்கொண்டிருந்தால்?’’ பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுத்தேன். ஸ்விட்ச் ஆப் ஆகியிருந்த அதை வேறு வழியின்றி மீண்டும் பேக்கெட்டுக்குள் வைத்தபோது ஆட்டோ எங்கள் தெருவுக்குள் நுழைந்துவிட்டது. தெருவில் ஐந்தாவது வீடு எங்களுடையது

’அட! நம்ம பிளாட்டில் ஹால் விளக்கு எரிகிறதே’ என்று நினைத்தேன். அதற்குள் பிளாட்டின் பால்கணி விளக்கும் போடப்பட்டது.

மாடியில் இருந்து ஆட்டோவை உற்றுப்பார்த்தவர்கள், அதில் இருந்து இறங்குவது நான்தான் என்று தெரிந்ததும் விருட்டென உள்ளே போய்விட்டார்கள். ஆட்டோக்காரனை கொஞ்சம் இருப்பா என்று சொல்லிவிட்டு, கேட்டைத்திறந்த வாட்ச்மெனைத் தாண்டி, வேகமாக ஓடி லிப்டில் ஏறினேன். நான் கதவை மூடுவதற்குள், ‘பிளீஸ் குளோஸ் த டோர்’ என்று லிப்ட் கத்தியது அந்த நிசப்த்தமான நள்ளிரவில் படு சத்தமாக கேட்டது.

’போனதும், தேவையான டாக்குமெண்ட்ஸ் சை எடுத்துக்கொண்டு- ஆங்க்.. அவை எங்கே இருக்கின்றன! மரபீரோவில் அடித்தட்டில் என்று நியாபகம்- உடன் கிளம்பிவிடவேண்டும்’ என்று மனதிற்குள் திட்டமிட்டேன். “வந்ததும் இந்த ராத்திரியில திரும்ப எங்க கிளம்புறீங்க?’ என்பார்கள். எல்லாம் வந்து சொல்கிறேன் என்று உடனடியாக கிளம்பிவிடவேண்டும்’

லிப்ட் கதவுகளை அறைந்து மூடிவிட்டு ஓடினேன். வீட்டுக்கதவு லேசாக திறந்தே இருந்தது. அது தெரியாமல் நான் தள்ளிய வேகத்தில் அது போய் சுவற்றில் ’டம்’ என்று மோதியது.

உள்ளே பார்த்தால், ஹாலில் சோபாவில், அட! இது என்ன சுபாஷும் அவர் மனைவியும் அல்லவா உட்கார்ந்திருக்கிறார்கள்! சுபாஷ் என்னுடன் எங்கள் அலுவலகத்தில் பணிபுரிபவர். புரடெக்‌ஷன் மேனேஜர். வடநாட்டுக்காரர்.

“ஹாய் குமார்.. ஹவ் ஆர் யு ?” என்றார் சுபாஷ் சத்தமாக சிரித்தபடி.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. இரவு மணி ஒன்றரை. இவர் ஏன் இந்த ஆகால நேரத்தில் நம் வீட்டிற்கு வந்திருக்கிறார்! அதுவும் மனைவியுடன்!!

“வாட் சுபாஷ்? எனி பிராப்ளம்?“ என்றேன்.

“பார் மீ..! நோ பிராப்ளம். சும்மா ஒரு காப்பி சாப்பிட்டுவிட்டுப் போகலாமென்று வந்தேன்” என்றார் ஹாஹ்ஹா என்று மேலும் சத்தமாக சிரித்தபடி.

“காப்பியா! ……..சரி…….”

எனக்கு குழப்பமாக இருந்தாலும் நான் உடனடியாக போகவேண்டிய இடம் நினைவுக்கு வர, ”சுபாஷ் நீங்க நீங்கயே இருங்க.. காப்பி சாப்பிடுங்க.. நான் ஒரு அரைமணி நேரத்தில வந்திடுறேன்.. குசும்..(அதுதான் சுபாஷின் மனைவி பெயர்) நீங்க லக்‌ஷ்மிகிட்ட பேசிக்கிட்டு இருங்க.. இதோ வந்திடுறேன்”

அவர்கள் பதில்க்கு காத்திராமல் உள் அறைக்கு ஓடினேன். தேடினேன். எடுத்தேன். எனக்குப் பின்னால் என் மனைவியும் மகளும் ஒன்றும் பேசாமல் என்னையே பார்த்தபடி நின்றுகொண்டிருந்தார்கள்.

அவர்களின் அமைதி மிரட்டலைக் கொடுத்தாலும், அசராமல், வந்து பார்த்துக்கொள்ளலாம் என்று ஹாலுக்கு வந்தேன். அதற்குள் சுபாஷும் குசுமும் கிளம்பத்தயாராக கதவு அருகில் நின்றுகொண்டிருந்தார்கள்.

என் மனைவியிடம் அவர்கள் சொல்லிக்கொள்ள.. “ரொம்பத் தேங்க்ஸ்ங்க..சாரி உங்களைத் தொந்திரவு செய்துவிட்டேன். இன்னொருநாள் சாவகாசமா அவசியம் வாங்க” என்று என் மனைவி சொல்ல, “நோ பிராப்ளம். நிச்சயம் வர்றோம்” என்றபடி கிளம்பினார்கள்.

நான் நடுவில், என் மனைவியைப் பார்த்து, “அவுங்களுக்கு காப்பி கொடு” என்றதற்கு, “ஆச்சு மூணு தடவை” என்றாள் என் மகள் நக்கலாக.

“சரி வாங்க: என்று அவர்களையும் அழைத்துக்கொண்டு நான் மீண்டும் லிப்டுக்குப் போனேன்.

“ஏன் ஆட்டோ இன்னும் நிக்குது?” என்ற சுபாஷிடம், அப்புறம் சொல்றேன், முதல்ல நான் சீக்கிரமா லஸ் சுக்குப் போகணும்” என்றேன். “லஸ் தானே போகணும். அதுக்கென்ன. நான் கார்ல கொண்டுபோய் விடுறேன், ஆட்டோ போகட்டும்” என்றார் சுபாஷ். அதுவும் சரிதான் என்று நினைத்து அவர் காரில் பின்சீட்டில் ஏறிக்கொண்டேன்.

பேசாமலேயே வந்தவனை ரியர் வியு கண்ணாடியில் பார்த்து, “லஸ்ஸ்சில் எங்கே?” என்றார். ”மைலாபூர் E-3 போலீஸ் ஸ்டேஷன்” என்றேன். அவர் முகத்தில் லேசான அதிர்ச்சி. “என்னாச்சு குமார்?“ என்று அக்கறையாக கேட்டவரிடம், “நத்திங்..சும்மா ஒரு காப்பி சாப்பிடத்தான்” என்றேன். அவரால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

“சார் என் வண்டி டி.என். 01 2348 ஹீரோ ஹோண்டா மோட்டார் சைக்கிள்” என்றேன். உள்ளே கைகாட்டினார். அங்கே அரைத்தூக்கத்தில் இருந்த ஒரு போலீஸ்காரரிடம் விளக்க முற்பட, ”டாக்குமெண்ட்ஸ்” என்றார் கைநீட்டியபடி. கொடுத்தேன். பார்த்தார். திருப்பித்தந்தார், கொஞ்சம் அறிவுரை சொன்னார். வண்டி சாவியை வாங்கிக்கொண்டு வேகமாக வெளியே வந்தேன்.

காரிலேயே உடகார்ந்திருந்த சுபாஷ் மற்றும் அவர் மனைவிக்கு நன்றி சொன்னேன். “நோ மென்ஷன். பிராப்ளம் ஒண்ணும் இல்லியே. வீட்டுக்குப் போங்க. உங்க ஒய்ப் உங்களுக்காக காத்துக்கிட்டு இருக்காங்க. ரொம்ப நேரமா” என்றார் நமுட்டுச் சிரிப்புடன். ரொம்ப நேரமாவில் கொஞ்சம் கூடுதல் அழுத்தம் தெரிந்தது.

அவர் எதற்கு அந்த நேரத்தில் அவர் மனைவியுடன் என் வீட்டிற்கு வந்தார் என்பது விளங்கவேயில்லை. கேட்டால் விளையாட்டாக பதில் சொல்லுகிறார்! சரி, பின்பு கேட்டுக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டு மணி பார்த்தேன். இரவு இரண்டு இருபது. நாளை ஆபீஸ் போகவேண்டும். இருவரும். “நீங்க கிளம்புங்க குமார். காலியில போன் பண்ணுறேன்” சொல்லியபடி காரைக் கிளப்பிக்கொண்டு போய்விட்டார்.

எனக்குள் அடங்காத ஆச்சரியம் மற்றும் குழப்பம். யோசித்தபடியே வண்டியை ஸ்டார்ட் செய்து விரைந்தேன். எங்கள் வீடிருக்கும் தெரு. இப்போது பால்கணி விளக்கு எரியவில்லை. கதவு தாளிட்டிருந்தது. ஓங்கித்தட்டினேன். மகள்தான் திறந்தாள். மனைவி உள்ளே பெட்ரூமில் படுத்திருப்பது தெரிந்தது.

“எதற்கு வந்தார்கள் சுபாஷிம் அவர் ஒய்ப்பும்?”

“……………………………..”

இரண்டு.

”ஹலோ”

”ஹலோ”

”ஹலோ. மிஸ்டர் சுபாஷ் வீடுங்களா?”

“எஸ் சுபாஷ் ஸ்பீக்கிங். நீங்க யாருங்கோ?”

“நான் குமார்ரோட ஒய்ப் பேசுறேன்.

“ஓ! மேடம் லக்‌ஷ்மியா? சொல்லுங்கோ சொல்லுங்கோ”

“குமார் அங்க வந்திருக்காரா?”

“இல்லியே. அவர் இன்னிக்கு ஆபீசில் இருந்து சீக்கிரமே கிளம்பிட்டாரே! வீட்டுக்கு வரல்லியா?”

“வந்தாராம். வந்துவிட்டு ஏதோ ஆபீஸ் வேலையிருக்குன்னு திரும்ப கிளம்பிட்டாராம்”

“அப்படியா?”

“ஆமாம். அவர் பொண்ணுகிட்ட சொல்லிட்டு ஏழு மணிக்கே கிளம்பியிருக்கார். நைட் பதினொண்ணு ஆயிடுச்சு. இன்னும் வரலை. போன் அடிச்சா ஸ்விட்ச் ஆப் ன்னு வருது. அதான்”

“டோண்ட் ஒர்ரி மேடம். கவலிப்பாடாதீங்கோ. நான் இன்னும் டென் மினிட்ஸ்சில் விசாரிச்சிட்டு உங்களுக்குப் போன் பண்ணுறேன்”

“அதெல்லாம் வேணாம். .. உங்களுக்கு ஏன் வீண் சிரமம்”

“நித்யா, குமார் அங்க உங்க வீட்டுக்கு வந்தாரா?..”

“இல்லைய்யே!”

”தீபக் வீடுங்களா? குமார் அங்க..”

“இல்லங்க. இங்க வரலை”

”ராம், இளங்கோ, வஸந்த், முரளி, பிரபு, அசிம் எல்லார் கிட்டயும் கேட்டாச்சு. எங்க போனார்ன்னே தெரியலை.”

“ஹாய் லக்‌ஷ்மி” என்றபடி சுபாஷ் உள்ளே வந்தார்.

“வாங்க .. வாங்க..அட குசுமும் வந்திருக்காங்களா? கம் இன் குசும்.. ”

“எதில போனார் குமார்?”

“பைக் எடுத்துக்கிட்டுப் போயிருக்கிறார். வழக்கமா கார்லதான் போவார்… அதுவேற பயமா இருக்கு..”

“”அப்படியா! பைக்கிலயா?’

“ஏதாவது ஆபீஸ் விஷயமாத்தானே..”

“ம்.. போனும் ஸ்விட்ச் ஆப்பிலேயே இருக்கு..”

“பொண்ணுகிட்ட ஏதோ மனசு சரியில்லன்னும் சொல்லியிருக்கார்..”

“அதெல்லாம் ஒண்ணும் ஆக்காது. அவர் வெரி கான்பிடெண்ட் பர்சன். பயப்படாதீங்க”

சுபாஷ், தன் மனைவியை குமார் மனைவியுடன் பேசிக்கொண்டிருக்கச் சொல்லிவிட்டு, வேறு ஒரு அறைக்குப் போய் அவருடைய மேலதிகாரியுடன் தொடர்புகொண்டார். கலந்து பேசினார். பிறகு தனக்குத்தெரிந்த வடநாட்டுக்கார உயர் போலீஸ் அதிகாரி ஒருவருடன் அன்று மாலை ஏதாவது ஆக்ஸ்டெண்டில ஹீரோஹோண்டா பைக் அடிபட்டிருக்கிறதா என்று பார்த்துச் சொல்லும்படி கேட்டுக்கொண்டார்.

உடன் சக அதிகாரி நித்யானந்தத்திற்கும், எச்.ஆர் மேனேஜர் ராம்நாத்துக்கும் விபரம் சொல்லி, அவர்களை கடற்கரைப் பக்கம் தேடச் சொன்னார். அவர்கள் பதறிக்கொண்டு கிளம்பினார்கள்.

கிண்டி அருகே ஒரு ஹீரோ ஹோண்டா பைக் லாரியில் அடிபட்டதாக முதல் தகவல் வந்தது. அது பற்றி மேலும் தெரிந்துகொள்ள செல்வராஜ் என்ற மற்றொரு சக அதிகாரியை கிண்டி போலீஸ் ஸ்டேஷன் போகச் சொன்னார் சுபாஷ். பார்த்துவிட்டு தகவல் தரச் சொன்னார்.

நேரம் ஆக ஆக, குமார் பற்றி எவரிடம் இருந்தும் எந்தத் தகவலும் வராததால், நிறுவனத்தின் தென்இந்திய தலைமை அதிகாரிக்கு ‘ஆர். குமாரைக் காணவில்லை’ என்ற விபரம் முறையாகத் தெரிவிக்கபட்டது.

மூன்று

வில்லனைப் போலீஸ் பிடித்ததுமே குமார் எழுந்துவிட்டான். படத்தில் பணியாற்றியவர்கள் பெயர்கள் திரையில் வரிசையாக மேலிருந்து கீழே ஓட, வேகவேகமாக வெளியே வந்த குமாரின் முகத்தில் சில்லென்ற மார்கழி மாதக்காற்று மோதியது.

வண்டி டோக்கனைக் கொடுத்துவிட்டு, பைக்கை ஸ்டார்ட் செய்து ஏறிஅமர்ந்தான். படன் விட்டுபோபவர்கள் நெரிசலாக இருந்ததால், கூட்டத்தில் மெதுவாக காலால் தத்தி தத்தி நகர்ந்தபடி வெளிவந்தவன், சாலைக்கு வந்ததும் புர்ர் என்று திராட்டில் கொடுத்தான். ‘இந்தப் படத்தை தியேட்டரில் பார்த்ததுதான் சரி. நல்ல வேளை மிஸ் பண்ணலை’.

எந்த விளக்கும் எரியாத சிஃனலில் நிற்காமல் ஜாலியாக வண்டியைத் திருப்பியவனை, நெருக்கமாக வந்த ஒரு போலீஸ்காரின் கை நிறுத்தியது. அவரைச் சுற்றி ஏற்கனவே ஏழெட்டு வண்டிகள் நிறுத்தப்பட்டி இளைங்கர்கள் பாகெட்டுகளில் கைவிட்டு துழாவியபடி நின்றுகொண்டிருந்தார்கள். இரவுசெக்கிங்க் போல.

”வண்டியின் ஆர்..சி புக், இன்சூரன்ஸ், டிரவிங் லைசென்ஸ் எடுங்க”

அவனுடைய பர்சில் லைசென்ஸ் இருந்தது. காட்டினான். வண்டியின் சைடு பாக்ஸைத் திறந்து தேடினால், அட சட்! ஆரி சி புக் காப்பியோ இன்சூரன்ஸ் பேப்பரோ இல்லை. வண்டியை போன மாதம் சர்விஸ்ஸுக்கு அனுப்பியபோது எடுத்து வைத்ததை திருப்பி வைக்கவில்லை என்பது நினைவுக்கு வந்தது.

நான்கு

“அய்.. என்னப்பா இன்னிக்கு சீக்கிரம் வந்திடீங்க..!”

“ஆமாம். சீக்கிரம்தாம். அதுசரி.. உங்கம்மா எங்க?”

“அம்மா.. கோவிலுக்குப் போயிருக்காங்க..”

“அப்படியா?

குமார் மனதுக்குள் குபீர்ரென ஒரு யோசனை.”சரிதான். இன்னைக்குத்தான் சரியான நாள். நாளையோட படம் கடைசி. இது முதல் ரிலீஸ்சிலேயே பார்க்க விட்டுபோன படம். இரண்டாவது ரன் காமதேனுவுல.. நாளை வெள்ளிகிழமை கண்டிப்ப படம் மாத்திடுவான். நமக்கும் இப்படி டைம் வாய்க்காது. இன்னைக்கு நைட் ஷோ போயிடவேண்டியதுதான். லக்‌ஷ்மி இருந்தால் விடவேமாட்டாள். ஏதாவது சொல்லி நிறுத்திவிடுவாள். அவ கோவிலில் இருந்து வருவதற்குள் கிளம்பினால்தான் உண்டு.’ அவசரமாக முகம் கழுவி சட்டை மாற்றினான்.

“என்னப்பா என்னைய வெளிய கூட்டி போறியா? எனக்கு ஒயிட் சாக்ஸ் வாங்கணும்”

‘இவளிடம் சினிமாப் படம் என்று சொல்லவேண்டாம். இவளும் நம்மைப் போகவிடமாட்டாள்’

“சாரிடா கண்ணா. அப்பாவுக்கு அவசரமான ஆபீஸ் வேலை ஒண்ணு இருக்கு. நான் போயிட்டு வந்திடுறேண்டா. பிளீஸ்”

“என்னப்பா.. பைக் சாவி எடுக்குறீங்க? கார்ல போகலியா?”

‘எமன்! அம்மா மாதிரியே உஷார்! ‘ என்று மனதில் நினைத்துக்கொண்டு, “ இல்லடா அப்பாக்கு மனசு கொஞ்சம் சரியில்லை.. அதான் பைக்குல காத்தாட அப்படியே..”

பரவாயில்லை நம்மாளும் எவ்வளவு சரளமாக கதைவிட முடிகிறது என்று பெருமைப்பட்டபடியே கிளம்பினான்.

(முற்றும்)

முதல் முறை படித்ததிலேயே கதை புரிந்திருந்தால் உங்களுக்கு ஒரு ஷொட்டு. புரியாவிட்டால் மீண்டும் (என்னைத் திட்டியபடியே) படிக்கவும். இன்னொருமுறை படித்தால் மட்டும் என்ன புரியவா போகிறது என்று கேட்கிறீர்களா? சாரி .. சொல்ல மறந்துவிட்டேனே..கதையின் பகுதிகளை கொஞ்சம் வரிசை மாற்றிப் படிக்கவேண்டும்.

முதலில் நாலாவது பகுதி. அடுத்து மூன்றாவது பகுதி. அதன்பிறகு இரண்டாவது பகுதி. அதன்பிறகுதான் முதல் பகுதி. ஆமாம், தலைகீழாக 4,3,2,1 என்ற வரிசை மாற்றிப் படிக்கவேண்டும். (தேவையா இது!).

ஏன் இந்த (வெட்டி) வேலை என்கிறீர்களா? வேறு ஒன்றுமில்லை. திரைப்படங்களுக்கு மட்டும்தானா எடிடிங் என்று யோசித்ததால் வந்த கதை (வினை!)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *