நல்ல மகன்!

 

நீங்க எல்லோருமே பத்திரிகைகளில் வரும் சிறுகதைகளை விரும்பிப் படிப்பவர்கள் தானே!

அம்மாவின் பெருமைகளைப் பற்றி, சிறப்புகளைப் பற்றி இதுவரை ஆயிரம் கதைகள் படித்திருப்பீர்கள்!

கொஞ்ச காலமாக நல்ல அப்பாக்களைப் பற்றியும் நிறைய கதைகள் வரத் தொடங்கி விட்டன!

நல்ல அம்மா, நல்ல அப்பாக்கள் மட்டும் தான் நம்மிடம் இருக்கிறார்களா? நம்மிடம் நல்ல மகன்களும் இருக்கிறார்கள்!

மகன்கள் என்றால் பொண்டாட்டி பேச்சைக் கேட்டுக் கொண்டு, வயசான காலத்தில் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் கொண்டு போய் தள்ளும் மகன்களைப் பற்றித் தான் நீங்கள் இது வரை கேள்விப் பட்டிருப்பீர்கள்!

நான் இப்ப சொல்லப் போவது வேறு மாதிரியான ஒரு மகனைப் பற்றியது!

எங்க கிராமத்தில் ராமச்சந்திரன் என்ற ஒருவர் இருந்தார். அவர் எனக்கு உறவு. அவர் அப்பா நாகராஜன் இறந்து பத்து வருஷங்கள் இருக்கும்!

நாகராஜன் காலமான பிறகு அவர் மனைவி பழனியம்மா மூத்த மகன் ராமச் சந்திரன் வீட்டில் தான் வசித்து வந்தாங்க!

எங்க ஊரு கொங்கு நாட்டில் இருக்கும் ஒரு சிறிய கிராமம். கொங்கு நாட்டைப் பற்றிச் சொல்லும் பொழுது ஒரு விஷயத்தைச் சொல்லித் தான் ஆக வேண்டும்!

தப்பாக நினைக்காதீர்கள்! இந்த செய்தி இந்தக் கதைக்கு அவசியமாக இருப்பதால் தான் சொல்கிறேன்!

சாப்பாட்டில் கொங்கு நாட்டு ஸ்பெஷல் என்று ஒன்று இருக்கிறது! அது தான் நாட்டுக் கோழிக் குழம்பு!………

இந்த கொங்கு நாட்டுக் கோழிக் குழம்பை நினைத்தாலே நாவில் எச்சில் ஊறும்! நிறைய சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டை வதக்கி, காரத்திற்கு மிளகாயோடு மிளகையும் சேர்த்து அந்தக் குழம்பை கொதிக்க விடும் பொழுது அந்த வாசம் எட்டூருக்கும் மணக்கும்! குழம்பு கொதிக்கும் பொழுதே வீட்டில் இருக்கும் சிலபேர் கறியில் உப்புக் காரம் பார்க்கிறேன் என்று பாதியைக் காலி செய்து விடுவார்கள்!

கொங்கு நாட்டில் பண்டிகை நாட்களில் ஏழை. பணக்காரன் வித்தியாசம் இல்லாமல் எல்லோருடைய வீட்டிலும் இந்த மணம் வீசும்!

உங்களுக்கு கொங்கு நாட்டில் ஏதாவது உறவுகள், நட்புகள் இருந்தால், அங்கு போகும் பொழுது, ஒரு முறையாவது இந்த நாட்டுக் கோழிக் குழம்பு வைத்து தரும்படி கேட்டுச் சாப்பிடுங்கள்! அப்புறம் ஆயுசுக்கும் இந்த கொங்கு நாட்டை மறக்க மாட்டீர்கள்!

சரி கதைக்கு வருவோம்! பழனியம்மா இருக்கிறார்களே, அவங்களுக்கு இந்த நாட்டுக் கோழி குழம்பு என்றால் உசுரு!…வாரத்திற்கு இரண்டு முறையாவது சாப்பிட்டு விடுவாங்க!

நாட்டுக் கோழியில் இளம் குஞ்சாக வாங்கி அவர்கள் வீட்டில் கொழம்பு வைத்து அது கொதிக்கும் பொழுது, அந்த தெருவே மணக்கும்!

கிராமத்தில் அவர்கள் பக்கத்து வீட்டில் தான் நான் குடியிருந்தேன். ‘ஆசை வெட்கமறியாது’ என்று சொல்வார்கள்! பழனியம்மா வீட்டில் குழம்பு கொதிக்கும் வாசம் வரும் பொழுது, நான் மெதுவாக ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு போய் “அத்தை!…கொஞ்சம் குழம்பு கொடுங்கள்!…” என்று கேட்டு விடுவேன்.

அவர்கள் சிரித்துக் கொண்டே பாத்திரத்தில் நிறைய குழம்பு விட்டு, கரண்டியில் நாலு கறித்துண்டுகளை எடுத்துப் போட்டு சிரித்துக் கொண்டே கொடுப்பார்கள். அதை நான் வாங்கிக் கொண்டு வரும் பொழுது என் மனைவி தலையில் அடித்துக் கொள்வாள்!

என் தொழில் நிமித்தம் பக்கத்து நகரமான ஈரோட்டிற்கு நான் குடி வந்து ஐந்து வருஷமாச்சு… கிராமத்திற்குப் வாய்ப்பு கிடைத்துப் போகும் பொழுது எல்லாம் ராமசந்திரன் வீட்டிற்குப் போய் பழனிம்மாவையும் பார்த்து விட்டு வருவது என் வழக்கம்!

ஒரு நாள் ஈரோட்டு கடை வீதியில் ராமச்சந்திரனை சந்தித்து பேசிக் கொண்டிருந்தேன். அப்பொழுது அவர் கொஞ்ச நாளா அம்மாவுக்கு உடம்புக்கு சரியில்லை என்று சொன்னார்.

உடனே ஞாயிற்றுக் கிழமை கிராமத்திற்குப் போகத் திட்டமிட்டேன். நாட்டுக் கோழிக்கறி ஒரு கிலோ வாங்கி வந்து என் மனைவிடம் கொடுத்து பழனியம்மாவை பார்க்கப் போகும் விஷயத்தைச் சொன்னேன்.

ஒரு மணி நேரத்தில் நாட்டுக் கோழிக் குழம்பு தயார்! குழம்போடு, வருவலும் சேர்த்து ஒரு நான்கு அடுக்கு டிபன் கேரியரில் போட்டுக் கொடுத்தாள்.

என் கார் ராமச்சந்திரன் வீட்டு வாசலில் நின்றவுடன், அவரே ஓடி வந்து “வாங்க மாப்பிள்ளை!..” என்று வாய் நிறைய சொல்லி கைகளைப் பிடித்து வீட்டிற்குள் அழைத்துப் போனார்.

நானும் டிபன் கேரியரை எடுத்துக் கொண்டு பழனியம்மாள் படுத்திருந்த ரூமிற்குள் நுழைந்தேன்.

பழனியம்மாளுக்கு இப்பொழுது சுமார் எழுபது வயசிருக்கும்!…முதுமை முற்றிலும் அவர்கள் மேல் தன் கைவரிசையைக் காட்டியிருந்தது!

என்னைப் பார்த்தவுடன் கட்டிலில் படுத்திருந்த பழனியம்மாள் ““வாங்க..தம்பி!…” என்று சிரித்துக் கொண்டே எழுந்து உட்கார்ந்து கொண்டார்கள்.
என் மேல் பழனியம்மாளுக்குப் எப்பொழுதுமே பிரியம் அதிகம்! அதோடு நான் வெளியூர் போய் விட்ட விருந்தாளி.

என்னைப் பார்த்தவுடன் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியில் அந்தம்மாவின் உடற்சோர்வெல்லாம் போய் விட்டது போலும்!

“அத்தை!…போன தடவை நான் வந்த பொழுது நல்லாத்தானே இருந்தீங்க?..”

“ஆமாம் தம்பி! இந்த ஒரு வருஷமாவே…உடம்பு சுத்தமா சரியில்லே! எனக்கு சுகர், பிரஸரோடு மூட்டுவலியும் சேர்ந்து இருப்பதால் பார்க்கிற டாக்டர்கள் எல்லோருமே இனி மேல் நீங்க ஓய்வா இருக்க வேண்டும் என்று சொல்றாங்க!…”

“அவங்க சொல்லறது சரிதான் அத்தை!…இனிமே நீங்க ஓய்வா இருப்பது தான் நல்லது!…”

“அது என்ன தம்பி…கையில் டிபன் கேரியர்?……வாசனை ஊரைத் தூக்குது?…”

“அத்தை நான் உங்களுக்காக…ஆசை ஆசையா நாட்டுக் கோழி வாங்கி குழம்பு வைத்து கொண்டு வந்திருக்கிறேன்….உங்களுக்குத் நாட்டுக் கோழினா உசிரு ஆச்சே!…”

பழனியம்மா வாய் விட்டு சிரிச்சாங்க!

“அத்தை!…எதற்குச் சிரிக்கிறீங்க?…….”

“தம்பி!…நான் கோழிக் கறி சாப்பிடறதை விட்டு ஆறு மாசமாகிறது!… நீங்க அந்த டிபன் கேரியரை எடுத்து சமையறையில் இருக்கும் மருமகள் பூமா கைகளிலே கொடுத்திடுங்க!…” என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

சத்தியமாக என்னால் நம்ப முடியவில்லை!

“அத்தே!…நிஜமாத் தான் நீங்க சொல்றீங்களா?….என்னால் நம்பவே முடியலே!…நான் எத்தனை வருஷமா உங்களைப் பார்க்கிறேன்…..உங்க உசிரே இந்த நாட்டுக் கோழி குழம்புலே தான் இருந்தது!……”

“நீங்க சொல்லறது கூட ஒரு விதத்திலே சரி தான் தம்பி!….ஆனா ஒரு பொண்ணுக்கு உசிரை விட தாய் பாசம் பெருசு!…”

“அத்தே!…இன்னும் எனக்குப் புரியலே!…”

“…உங்களுக்கு விபரமாச் சொல்றேன்!….என் மனசில் இருப்பதை யாரிடமாவது சொன்னால் தான் எனக்கும் சற்று ஆறுதலாக இருக்கும்!..”

நான் எழுந்து போய் பழனியம்மா கட்டிலுக்கு அருகில் உட்கார்ந்து கொண்டேன்.

“தம்பி!.…கடந்த ஒரு வருஷமாவே என் ஜீரண சக்தி குறைஞ்சு போச்சு! அசைவம் சாப்பிட்டா சுத்தமா ஒத்துக்கறதில்லே! அன்று முழுவதும் வயிற்றாலே போகுது!… அதற்காக சிக்கன் சாப்பிடாம இருக்க முடியலே!….அது ராமச்சந்திரனுக்கும் தெரியும்!…அவன் ஒண்ணும் சொல்ல மாட்டான்…. ஜெலுசிலை பாட்டில் பாட்டிலா வாங்கி வைத்து விட்டுப் போய் விடுவான் நானும் சிக்கனைச் சாப்பிட்டு விட்டு, அதை குடித்து விட்டு படுத்துக் கொள்வேன்..”

ஒரு நாள் இரவு. நடுச் சாமம்…வீட்டிலே யாரோ பாத் ரூமில் துணி துவைத்து கும்முவது கேட்டது!… நம்ம வீட்டில் இருப்பது ஆட்டோமேட்டிக் வாஷிங் மிஷின் இருக்கு!.. எதற்கு இந்த அர்த்த ராத்திரியில் துணி துவைக்கிறார்கள்? மெதுவாக எழுந்து போய் பார்த்தேன்.

நீயே பார்த்திருப்பாய்…உங்க மாமா போன பிறகு நான் கட்டும் வெள்ளைப் புடவைகள் தும்பை பூ நிறத்தில் இருக்கும்…அந்த வெள்ளைப் புடவைகளில் இருக்கும் கறைகள் மேல் சோப்பு போட்டு உரசி ராமச்சந்திரன் புடவைகளை கும்மி அலசிக் கொண்டிருந்தான்!

“ராமச்சந்திரா!….உனக்கு அறிவு இருக்கா?…நீ ஆம்பிள்ளையாடா?…நடு ராத்திரியில் பாத் ரூமில் உட்கார்ந்து இப்படி பொம்பளை புடவைகளை துவைத்துக் கொண்டிருக்கிறாய்?…” என்று சத்தம் போட்டேன்.

உடனே அவன் எழுந்து வந்து என் வாயைப் பொத்தி அப்படியே என் ரூமிற்கு இழுத்து வந்து விட்டான்.

“அம்மா!…பிளீஸ்!…சத்தம் போடாதே!…பூமா எழுந்து கொண்டால் அவ ரொம்ப வருத்தப் படுவா…”

“நீ என்னடா…சொல்றே?…”

“அம்மா!…நீ அசைவம் சாப்பிட்டா…உனக்கு வயித்துப் போக்கு இருப்பதால் உன் வெள்ளை புடவைகளில் பின் பக்கம் அசிங்கம் ஆகி விடுகிறது..அதனால் மற்ற துணிகளோட உன்புடவைகளை வாஷிங் மிஷினில் போடுவதில்லை…அதனால் பூமா தான் அவைகளை தனியாகத் துவைத்துக் கொண்டிருந்தாள்…ஒரு நாள் ரொம்ப அசிங்கமா இருந்தது…பூமா முகத்தை சுளித்துக் கொண்டே உன் புடவைகளுக்கு சோப்பு போட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தேன்!..என்ன இருந்தாலும் அவள் வேறு வீட்டில் இருந்து இங்கு வாழ வந்த பெண்..அவள் வெளியில் சொல்லா விட்டாலும், அவளுக்கு சங்கடமாக இருக்கத் தான் செய்யும்?…

நான் உன் ரத்தம் அம்மா!…….அந்தக் காலத்தில் இந்த லெட்ரின் எல்லாம் வராத காலத்தில் எனக்கு ஏழு எட்டு வயசு வரை நீ என் பின்பக்கம் தேய்த்து தேய்த்து ஆயி கழுவி விட்டதை நான் மறக்க வில்லை அம்மா!…. நான் உயிரோடு இருக்கும் பொழுது வேறு யாரும் உனக்கு இது போன்ற வேலைகளைச் செய்யக் கூடாதம்மா!….பெத்த தாய்க்கு இது போல் சேவை செய்யும் பொழுது எனக்கு சந்தோஷமாத் தானிருக்கு!… என்று நான் பெற்ற தங்கம் என்னிடம் சொன்னதைக் கேட்ட பிறகு என் பிள்ளைக்கு சிரமம் தரும் என்று இந்த சிக்கன் சாப்பிடுவதையே விட்டு விட்டேனப்பா!…..” என்ற பழனியம்மாவின் பேச்சு என்னை மிகவும் ஆச்சரியப் பட வைத்தது!

பெற்ற தாய்க்கே….. தாயாக சேவை செய்யும் ராமச்சந்திரனை போன்ற நல்ல மகன்களும் நம்மிடம் இருக்கத் தான் செய்கிறார்கள்!

- தேன் சிட்டு மின்னிதழ் ஜனவரி 2020 

தொடர்புடைய சிறுகதைகள்
சண்முகத்திற்கு வசதிக்கு குறைவு இல்லை. அவனுக்கு சாதியினர் பலம், உடல் பலம், பணபலம் எல்லாம் இருந்ததால் தெனாவெட்டு அதிகம்! அந்தக் காலனியில் யாரையும் மதிக்க மாட்டான். எந்தப் பிரச்னை வந்தாலும் அடாவடியாகத் தான் பேசுவான். அதனால் எல்லோரும் ஒதுங்கிப் போவார்கள். அவனைக் கண்டு ...
மேலும் கதையை படிக்க...
“ இன்னைக்கு....ஞாயிற்றுக் கிழமை….சரியா ஒன்பது மணிக்கு நீங்களும், உங்க அருமைப் பொண்ணும் டைனிங் டேபிளில் வந்து உட்கார்ந்திடுவீங்க!...நான் அதற்குள் சிக்கன் குழம்பு, வறுவல், இட்லி, தோசை எல்லாம் தயார் செய்ய வேண்டாமா?...சீக்கிரமா போய் ‘லெக் பீஸா’ நீங்களே பார்த்து.... இளங்கறியா வாங்கிட்டு ...
மேலும் கதையை படிக்க...
“ ஏய்!...சித்ரா!...உனக்கு எத்தனை தடவை சொல்லறது… ‘பாத் ரூம்’ லிருந்து குளிச்சிட்டு வரும் பொழுது ஹீட்டரை ஆப் செய்திட்டு வர வேண்டுமென்று?...”என்று சத்தம் போட்டாள் சித்ராவின் தாய் விமலா. “ அம்மா!..மறந்து போச்சு!..அதற்கு எதற்கு இப்படி கத்தறே?...” “ ஏண்டி ஹாலிருந்து எழுந்து வரும் ...
மேலும் கதையை படிக்க...
பிரபல வாரப் பத்திரிகையின் நிருபர், காவல் துறை தேடிக் கொண்டிருந்த மோசடிக் கம்பெனி விளம்பரங்களில் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும்படி பல டி.வி. விளம்பரங்களில் நடித்த அந்த நடிகையிடம் பேட்டி எடுத்தார். “ மேடம்!...கிட்டத்தட்ட ஆயிரம் கோடி ரூபாயை பொது மக்களிடம் ஏமாற்றி மோசடி ...
மேலும் கதையை படிக்க...
சூலூர் சுகுமாரனுக்கு சினிமா என்றால் உயிர்! அவனுக்கு நிறைய சினிமாச் செய்திகள் தெரியும் பிலிம் நியூஸ் ஆனந்தனைப் போல! எதைப் பற்றி பேசினாலும், அதை சினிமாவோடு தொடர்பு படுத்தித் தான் பேசுவான். நடிகர் சிவக்குமார், சூர்யா, கார்த்தி, டைரக்டர் மணிவண்ணன் எல்லோருமே இந்த சூலூர் ...
மேலும் கதையை படிக்க...
அது சர்க்கரை நோயாளிகளுக்கான மிகப்பெரிய மருத்துவ மனை. சாப்பிடும் முன் ஒரு டெஸ்ட் எடுக்க வேண்டியிருந்ததால் காலை ஏழு மணிக்கே நான் அங்கு போக வேண்டியிருந்தது! மருத்துவமனை இருப்பது 5- வது மாடி. நான் ‘லிப்ட்’டுக்காக காத்திருந்தேன். என் அருகில் வந்து ஒரு ...
மேலும் கதையை படிக்க...
தமிழ், ஆங்கிலம் என்று இரு மொழிகளில் ஏழெட்டு தினசரி பத்திரிகைகள் கோவைப்பதிப்புகள் வெளி வருகின்றன. கடந்த நான்கு மாதங்களாக எல்லாப் பத்திரிகைகளிலும் ஏதாவது ஒரு மூலையில் செயின் பறிப்பு செய்திகள் கட்டாயம் இடம் பெறும்! அந்த செயின் பறிப்பு நிகழ்ச்சிகளை புதுப் புது ...
மேலும் கதையை படிக்க...
சுந்தரம் அன்று காலையிலிருந்தே முடிக்கு டை அடித்து, ஷேவ் செய்து ‘பிரஸ்’ ஆக யாருக்காகவோ காத்திருந்தார். அவருக்கு தொந்தி இல்லாததால், டி சர்டை இன் செய்து, லேசாக சென்ட் அடித்துக் கொண்டார். முகத்திற்கு கிரீம் தடவி அதன் மேல் பவுடர் மணக்க பூசியிருந்தார். ஹாலில் ...
மேலும் கதையை படிக்க...
“அருமை நாயகம் சாரா...பேசறது?....” அவர் முன் பின் கேட்டறியாத குரல்! மிகவும் பதட்டமாக இருந்தது! “ஆமாம்!....நான் அருமை நாயகம் தான் பேசறேன்!....நீங்க யார் பேசறது?....”அவருக்கும் அந்தப் பதட்டம் தொற்றிக்கொண்டது! “சார்!.....நா துடியலூரிலிருந்து பேசறேன்!......இங்கு நாற்சந்தியில் பத்து நிமிடத்திற்கு முன்பு, ஒரு ‘ஹீரோ ஹோண்டா’ பைக் ...
மேலும் கதையை படிக்க...
“என்ன செல்வம்!...பேப்பர் ‘கட்டிங்’குகளை கை நிறைய வைத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறே?....” “ ஆமாண்டா…தமிழ் நாட்டில் சாலை விபத்துக்கள் பெருகி விட்டன…என்று காவல் துறை அடிக்கடி சொல்கிறது!...அது தொடர்பாக ஏன் எப்படி என்று ஒரு சின்ன ஆராய்ச்சி நடத்திப் பார்த்தேன்…ரிசல்ட் ரொம்ப ...
மேலும் கதையை படிக்க...
பட்ட மரம் துளிர் விடுமா?
சமயம் பார்த்து அடிக்கணும்
அந்தரங்கம்!
நடிகையின் கோபம்!
சூலூர் சுகுமாரன்
ஒரு நிமிடப் பயணம்!
ஏமாற்றம்!
தடுமாற்றம்!
நீக்கு!
டூவீலரை ஆன் செய்!…..செல்போனை ஆப் செய்!……

நல்ல மகன்! மீது ஒரு கருத்து

  1. Thirumalai says:

    Nice but yarum intha kalathil appadi irupathu illa. just tears in my eyes.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)