நம்பிக்கை

7
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 17, 2013
பார்வையிட்டோர்: 12,190 
 

பின்னாலிருந்து வந்த வாகனங்களின் சத்தத்தால் பாலு சிலிர்த்து தன்னிலைக்கு வந்தான். வலது கையை முறுக்கி ஸ்கூட்டிக்கு கொஞ்சம் உயிர் கொடுத்து உசுப்பேத்தினான். மனம் தன்னையறியாமல் ஸ்லோகங்களை முணுமுணுத்தாலும் நினைவுகளெல்லாம் இன்று அவன் வேலை செய்யும் பாங்கில் நடப்புப் பற்றித்தான். பாங்க்கில் கேஷியர்களுக்கு என்றுமே அன்றைய வேலை பற்றி நினைவுகள் கொஞ்ச நேரம் ஊஞ்சலாடிக்கொண்டேதான் இருக்கும். அதுவும் இன்றைய நாள்போல முதவார சனிக்கிழமைன்னா கேக்கவே வேண்டாம், கூட்டம் அலை மோதும். இன்றும் மோதி தாறுமாறாக இருந்தது. தினத்தை விட இன்று அவனுக்கும் கணக்கு சரிபார்க்கும் வரை டென்ஷன் ஜாஸ்த்திதான். என்னதான் இத்தனை வருஷங்கள் பாங்க்கில் இருந்தாலும், ஒவ்வொரு முறை கேஷியர் வேலை பார்க்கும் ஆறு மாதமும், பகவானைக் கூப்பிடாத நாளேயில்லை- அவ்வளவு பயம். போன முறை கேஷ் டெர்ம் முடிந்ததும் திருப்பதிக்கு ஒரு நடை போய் வந்தான்னா பாத்துக்கோங்களேன் !

இன்றும் பணி முடிந்து வரவு செலவு போக மிச்ச கையிருப்புப் பணம் எவ்வளவுன்னு பாத்த போது தான் தெரிந்தது கையிருப்பில் ஐயாயிரம் ரூபாய் அதிகம் என்று. பாலு ஒரு தடவைக்கு இரண்டு தடவையாக சரி பார்த்த போதும் அதே வித்தியாசம் தான் வந்தது- ஒரு பாங்க் கேஷியர் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம்- ஒரு தடவை அதிகம் வரும், மறுபடி எண்ணினால் அதுவே குறைவாகக் காட்டும்- முடிவில் சரியாகும். இது தான் அனுபவம். சில சமயம் பாலுவுக்கு இதுதான் வாழ்க்கையின் தத்துவமோ என்று கூடத் தோன்றும்- ஒரு சமயம் ஜாஸ்த்தி, பல சமயம் குறைவு  ஆனால் முடிவில் எல்லாம் சரியாகும். ஆனால் இன்று என்னவோ அப்படித் தோன்றவில்லை. கொஞ்சம் பொறுமையாக ஒவ்வொரு வவுச்சராகப் பார்த்ததில் அந்த கரண்ட் அக்கௌன்ட் பார்ட்டி ஐம்பது ரூபாய் கட்டுக்கு பதில்  நூறு ரூபாய் கட்டு கட்டியிருந்தார்- அதுதான் ஐயாயிரம் வித்தியாசம்.

வித்தியாசத்தைக் கண்டு பிடித்தவுடன் மனமெல்லாம் ஒரே பரபரப்பு. “நிச்சயமாக அவ்வளவு பெரிய கம்பெனிக்கு இதெல்லாம் ஜுஜுபி கண்டு கொள்ளவே மாட்டார்கள்”. “அப்படிக் கண்டு பிடித்தாலும் நான்தான் எடுத்தேன்னு நிரூபிக்கவே முடியாது”. “போன மாசம் நூறு ரூபாய் கொரஞ்சபோது நாந்தேனே கைய விட்டுக் கொடுத்தேன். இப்ப ஜாஸ்தி இருந்தா எடுத்துண்டா என்ன?” – அடுத்த வாரம் ஆபீஸ்ல போற ஏற்க்காடு டூரூக்கு கண்டிப்பாக உதவும். இப்படி அவனுக்குள்ளே பாலச்சந்தர் படம் போல் மாறி மாறி எண்ணங்கள் ஓடின. போராக் குறைக்கு அவனின் ஆத்ம நண்பன் திலீப் வேறு ” ஜாஸ்தி இருக்குன்னு சன்ட்ரீஸ்ல வெச்சே… அனாவசியமா மெமோ தான் குடுப்பாங்க- பேசாம பெருமாளே குடுத்தார்னு காதும் காதும் வெச்சா மாதிரி பாக்கெட்ல போடு. அக்கௌன்டன்ட் நாயருக்குத் தெரிஞ்சா ஹெட் ஆபீசுக்கு சொல்லி வேட்டு வெச்சுடுவான்னு” சொல்லி கொஞ்சம் நாக்குல தேனைத் தடவி வயத்துல பயத்தையும் ஊட்டினான். பேசாம யாருட்டயும் சொல்லாம ஐயாயிரம் ரூபாய பாக்கெட்ல போட்டுண்டு வீட்டுக்கு கிளம்பிட்டான்.

வீட்டுக்கு வந்தவுடன் மனைவி வனஜா காப்பியைக் கையில் கொடுத்து பக்கத்தில் நின்றாள். அந்தக் கால மனுஷியானதால், புருஷன் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும் வரை எதுவும் பேசி தொந்தரவு செய்யாமல் பாலு பேசக் காத்திருந்தாள்.

“ரங்கு எங்கே?” என்றான்.

“விளையாடப் போயிருக்கான். இன்னிக்கு முழுக்க ஜுரம் இல்லை. அதான் கிளம்பிட்டான்”.

பதினஞ்சு வயசுப் பயலுக்கு அப்பப்ப ஜுரம் வருது. அப்புறம் தானே சரியாயிடுது. அப்படியே விடக் கூடாதுன்னு டாக்டர் கிட்ட காமிச்சால், ப்ளட் டெஸ்ட் எல்லாம் எடுத்துட்டு “ஒரு வகையான டிஃபிஷியன்ஸி. இதுக்கான மருந்து அமெரிக்கா மாதிரி இடத்தில தான் கிடைக்கும். இந்தியாவுக்கு இன்னும் வரல. யாராவது உங்களுக்குத் தெரிஞ்சவா அமெரிக்காவிலேந்து வந்தா வங்கிண்டு வரச் சொல்லுங்கோ. இங்க வாங்கி உங்களுக்குக் கட்டுப் படியாகாது ” என்றார்.

அமெரிக்காவில் உள்ள மச்சுனனைக் கேட்ட போது ” அது ஒரு புட்டி எண்பது டாலர் ஆகும். அதை இந்தியாவுக்குள் கொண்டு வரணும்னா மேலும் கொஞ்சம் ட்யூடி கட்டி ரொம்ப செலவாகும். ஏதாவது ஒரு கம்பெனி கூடிய சீக்கிரம் இம்போர்ட் பண்ண ஆரம்பிக்கும். கொஞ்சம் வெய்ட் பண்ணலாமே” என்றான். ரங்குவுக்கு பல நாள் ஸ்கூல் போவது மட்டுமில்லாமல், அடிக்கடி ஜுரத்தினால் உடம்பும் மெலிஞ்சுண்டே வந்தது கொஞ்சம் கவலையைக் கூட்டியது. ஈஸ்வரோ ரக்ஷதுன்னு பெருமாளுக்கு வேண்டிண்டு தெரிஞ்சவாள் கிட்டேல்லாம் சொல்லிட்டு அமைதியானான். இந்த சமயத்தில்தான் நேற்று மறுபடியும் ஜுரம் கொஞ்சம் அதிகமானதால், லேசான ஃபிட்சும் வந்தது. டாக்டர் இதை அப்படியே விடக்கூடாது ஆனால் அந்த மருந்தை விட்டால் வேறு வழியே இல்லன்னு வேற சொல்லிட்டார்.

இந்தக் கவலைக்கிடையில் தான் இன்று எதிபாராத வரவு. இதைப் பெருமாள் தான் ரங்குவுக்குக் கொடுத்தார்ங்கரதை எப்படி மறுக்க முடியும்னு சொல்லி சமாதானமானான். அடுத்த வார முதலில் ஆபீஸ் நண்பர்களோட ஏர்காடு மூன்று நாள்,அதுக்கப்புறம் அப்பா திவசம், பெருமாள் சமாராதனை எல்லாம் முடித்து அடுத்த வெள்ளிக் கிழமை கொஞ்சம் மன இருக்கம் குறைந்துதான் வந்தான். அன்றும் பாங்க்கில் நல்ல கூட்டம் தான், ஆனால் சமீபத்திய லீவால் ஸ்ரமம் ஒன்னும் தெரியல்ல பாலுவுக்கு. இன்று அந்த மருந்துக் கம்பெனியிலிருந்து பணம் கட்ட வழக்கமாக வரும் கோவிந்தன் என்ற பெரியவர் வராமல் வேறு யாரோ வந்ததை அரை குரையாகத்தான் கவனித்தான். ஆனால் ஓன்றும் கேட்கவில்லை நிற்க்கும் கூட்டத்தால்.

கவுண்டர் நேரம் முடிந்தவுடன் தான் கவனித்தான் அவன் கேஷ் கேபின் எதிரே கோவிந்தன் நிற்ப்பது. மனம் பக்கென்றது. “சார் . கௌன்டர் க்ளோஸ் ஆய் அரை மணி ஆயிடுச்சே. இவ்வளவு நாளா வர இங்களுக்கே தெரியாதா. நாளைக்கு  வாங்க சார் ” என்றான் சற்று தேவையில்லாத கடுப்புடன். அவரோ “நான் பணம் கட்ட வரலேப்பா. உன்னைக் கொஞ்சம் பார்த்து பேசிட்டு போலாம்னு தான் வந்தேன். அதுக்காகத்தான் கௌண்டர் முடியும் வரை காத்திருந்தேன்” என்றார்.

சற்று வியர்த்துப் போய் “எங்கிட்ட என்ன சார் பேசரத்துக்கு இருக்கு” என்று போலியான அலுப்புடன் எழுந்து நின்றான்.

கோவிந்தன் சற்று கிட்ட வந்து பையிலிருந்து ஒரு பொட்டலத்தை எடுத்துக் கொடுத்தார்.

“இதென்ன” என்ற பாலுவுக்கு “ஒரு மூணு மாசம் முன்னாடி அமெரிக்காவிலேந்து ஓங்குழந்தைக்கு ஒரு மருந்து கேட்டயோல்லயோ, அது எங்க கம்பெனிலே இப்பத்தான் இம்போர்ட் பண்ண ஆரம்பிச்சிருக்கா. நான் ஸ்டாஃப் கோட்டாவில உனக்காக அப்ளை பண்ணினேன். போன வாரம் வந்தது. இங்க வந்து பாத்தால் நீ லீவில இருக்கறதாச் சொன்னா. உங்காத்து அட்ரஸ் தெரியல்லே. அதான் ” என்றார்.

“எவ்வளவு சார் ” என்றான்

” நாலாயிரம் ரூபாய்ப்பா. இப்ப இருந்தாக் குடு. இல்லேன்னா முப்பதாம் தேதி சம்பளம் வந்தவுடனே குடு. முதல்ல குழந்தைக்கு மருந்தைக் குடு” என்றார்.

“ஏன் முப்பதாம் தேதி. உடனே கம்பெனீல கட்ட வேண்டாமா” என்றான்

“இல்லப்பா. என்னோட டெர்மினல் பெனிஃபிட்ல புடிச்சுண்டுட்டா” என்றவரை விக்கித்துப் பார்த்தான். “என்ன சொல்றேள்”?

“ஆமாம்பா. போன மாசம் கேஷ்ல ஐயாரம் ருபாய் குறைஞ்சதுன்னு, சர்ப்ரைஸ் இன்ஸ்பெஷன்ல கண்டு பிடிச்சா. புதுசா வந்திருக்குற எம் டீ ரொம்பக் கண்டிப்பு ஆசாமியாம். கேஷ்லலெல்லாம் பரிதாபம் பார்க்க முடியாதுன்னு டிஸ்மிஸ் பண்ணிட்டா. நேத்திக்குதான் ஃபைனல் செக் குடுத்தா, இந்த நாலாயிரத்தைக் கழிச்சுண்டு” என்றார்.

அதிர்ச்சி விலகாமல் ” இப்ப என்ன பண்ணப் போறேள்” என்றான் பாலு.

“எனக்கு என்ன சின்ன வயசா. இன்னும் ஆறு மாசத்தில எப்படியும் ரிடயர்மெண்ட் தான். சித்த முன்ன கொடுத்துட்டார் பெருமாள்” என்றார்.

“உம்புள்ளக்குக் கண்ணத் தொறந்த பெருமாள் எனக்கு வழியா காட்ட மாட்டான். முதல்ல போய் குழந்தைக்கு மருந்த ஆரம்பி”- சொல்லிண்டே நடக்க ஆரம்பித்தார்

பாலுவுக்கு யாரோ பளீரென்று கன்னத்தில் அடித்தால் போலிருந்தது. தலையைக் குனிந்தபோது, மேஜை மேல் இருந்த காலண்டர் தேதி கிழிக்காமல் போன சனிக்கிழமையையே காட்டியது.

Print Friendly, PDF & Email

7 thoughts on “நம்பிக்கை

  1. அருமையான நடையில் யதார்த்தமான கதை. இந்த கலி காலத்திலும் கோவிந்தன் போன்ற நல்லவர்களும் பாலு போன்ற மனசாட்சி உள்ளவர்களும் இருக்கின்றனர் என்பது நிதர்சனம்.

  2. Very nice story Sir ! Parigaaram was NACH with a nice advice that was implicit..Nambikkai is beyond that without any implicit/ explicit advice – blindly leaving the deeds of Balu to conscience .. Positive attitude and maturity of Govindhan character is truly touching. your writing style is good sir.. reminds me of a legend..Expecting more and more from you Sir!

  3. …….Excellent story by Kapaleeswaran Venkataraman…stressing that we need to be honest to ourselves… Good one Kapalee… wishing for many more stories to be published…

  4. மிகவும் எளிய நடை. யதார்த்தமான ஒரு நிகழ்வின் மறுபக்க அலசல், குற்றம் செய்வோரை சிந்திக்க வைக்கும்.

  5. ….Beautiful story ! Everyone in general & people in cash handling positions in particular cud relate to the character …

    In both the stories I have noticed that you don’t stretch the story unnecessarily to give a ‘janaranjaha’ ending … Good, realistic style …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *