நன்றி

 

அழகியின் முகத்தில் ஆற்றாமை, படபடப்பு, இயலாமையின் பரிதவிப்பு, அவள் கண்களுக்குள் மிரட்சி படர்ந்து மறைந்தது. பிரபுவின் முகம், அழுகைக்கு முன் அறிவிப்பு செய்தது.
“”வேற வழியே இல்லை யாங்க,” அழகி கேட்டாள்.
“”இல்ல புள்ள.”
“குபுக்’கென்று கண்ணீர் எட்டிப் பார்க்க, என்னை பார்த்தாள். அவள் சோகம், எனக்குள்ளும் பிரவேசித்தது. சிறிது நேரம் மவுனம் கோலோச்ச, அதை உடைத்தாள் அழகி.
“”இப்ப வந்திடுவாங்களா?”
“”ஆமா புள்ள… பின்னாலேயே வந்திடறதா சொன்னாங்க.”
அரற்ற ஆரம்பித்தாள் அழகி.
“”தேவையா நமக்கு! இதெல்லாம் சரிப்பட்டு வராதுன்னு, தலை தலையா அடிச்சுக்கிட்டேன் கேட்டீங்களா?” என்று பலவாறாகப் புலம்பினாள்.
தயங்கியபடி அருகில் வந்தான் பிரபு.
நன்றி“”அப்பா… நம்ம ஜீவனை கொல்ல போறாங்களா?” பயந்தபடியே கேட்டான்.
“”இல்லப்பா… நம்ம ஜீவனுக்கு உடம்பு சரியில்லை. அதான்…” மேற்கொண்டு வார்த்தைகள் வரவில்லை.
பிரபுவுக்கு புரிந்து விட்டது. விசித்து, விசித்து அழத் துவங்கினான்.
ஜீவன் எங்கள் வீட்டிற்கு வந்து, சரியாக பத்துமாத காலம் இருக்கும். வெளியூர் திருமணம் ஒன்றிற்கு அழகியும், பிரபுவும் சென்றிருந்தனர். திரும்பி வரும் போது, சிறிய நாய் குட்டியோடு வந்தான் பிரபு.
ஜீவன் என்று, பிரபு தான் அதற்கு பெயர் வைத்தான். ஒரு வார காலத்திற்குள்ளாகவே, ஜீவன் எங்கள் குடும்பத்தில் ஒருவனாகி விட்டான்.
“நாய் வளக்குறது நமக்கெல்லாம் சரிப்பட்டு வராதுங்க…’ என்று முதலில் மறுத்த அழகியும், அதன்பின், ஜீவனை பார்த்து பெருமையடித்தாள்.
“ஜீவன் நடந்து வர்ற அழகைப் பாருங் களேன்…’ என்பாள்.
அவள் பேசுவதை புரிந்து கொண்டது போல, ஜீவனும் விதவிதமாக நடந்து காட்டுவான். துள்ளிக் குதிப்பான். குழைந்து, குழைந்து செல்லம் கொஞ்சுவான்.
ஜீவனை தன் பிள்ளையைப் போல் பார்த்துக் கொண்டாள் அழகி. நன்றாக பராமரித்ததால், அழகு இன்னும் கூடியிருந்தது. எங்கள் வீட்டில், தவிர்க்க முடியாத ஒரு நபராகிப் போனான் ஜீவன்.
மாலையில், பிரபுவை பள்ளியில் இருந்து அழைத்து வர, அழகி செல்லும் போது, ஜீவனும் துணையாக உடன் செல்வான். அப்போது, தெரு நாய்களை கண்டால், அருகில் சென்று விளை யாடுவான். அந்த நாய்களில் ஒன்று, ஜீவனை கடித்து விட, நோய்வாய்பட்டான்.
இரண்டு மூன்று நாட்கள் தான். அன்னம், தண்ணி இல்லாமல் கிடந்தான். நோய் முற்றி விட்டது. கால்நடை மருத்துவரை வரவழைத் தோம். அவர் பார்த்தவுடன் சொல்லி விட்டார்.
“”சார்… ஜீவனை வெறி நாய் கடிச்சிருக்கு. இதுக்கும், வெறிநோய் தொத்திடுச்சு. இனி, காப்பாற்ற முடியாது. அதனால, பேசாம கொன்னுடுங்க.”
“”என்னது… ஜீவனை கொல்றதா?”
“”நான் உங்க நல்லதுக்குத் தான் சொல்றேன். தவிரவும், ஊருக்குள்ள வேற யாருக்கும், ஜீவனால பாதிப்பு ஏற்படலாம். உங்களுக்கே தெரியும், வெறிநாய்க்கடி நோய், எத்தனை கொடூரமான நோய்ன்னு. அதனால தான் சொல்றேன்.”
அவர் தெளிவாகச் சொல்லி விட, அவர் பேசியது, ஜீவனுக்கும் புரிந்து விட்டதோ என்னவோ? இரண்டு நாட்களாக வீட்டுப் பக்கமே வரவில்லை.
“அங்கே பார்த்தேன்… இங்கே பார்த்தேன்… அது பார்வையும், குரைக்கிற சப்தமும் ரொம்பவும் கொடூரமா இருக்கு…’ என்று ஆளாளுக்குக் கூறினர்.
“மருத்துவர் சொன்னது தான் சரி! ஜீவனால் யாருக்கும் கெடுதல் வந்து விடக் கூடாது…’ இரண்டு நாள் மனப் போராட்டத்திற்கு பின், அந்த முடிவுக்கு வந்தேன்.
அழகியிடம் சொன்னேன். முதலில் மறுத்தாள். பிறகு புரிந்து கொண்டாள்.
நான்கு பேர் வந்தனர். கையில் கம்புடனும், சுருக்கிடும் கம்பியுடனும் நின்றனர்.
“”சார்… போகலாமா?” என்றனர்.
அவர்களுடன் தெருவில் இறங்கி நடந்தேன்.
காலை பத்து மணிக்கு தொடங்கிய தேடுதல் வேட்டை, மாலை நான்கு மணியாகியும் முடியவில்லை. அலுத்து, சலித்து நின்ற போது, அவர்களில் ஒருவன் சொன்னான்.
“”எங்க வாடை, நாய்களுக்கு நல்லாத் தெரியுமுங்க, அதான் ஓடி ஒளிஞ்சிடுச்சு,” என்றான்.
“வீட்டிற்கு சென்றிருக்குமோ?’ என்ற எண்ணம் வர, அவர்களிடம் சொல்லி விட்டு வீட்டிற்குச் சென்றேன்.
அழகி வாசலில் நின்றாள். அவள் கண்கள் கலங்கியிருந்தது.
“”அழகி… ஜீவன், வீட்டுப் பக்கம் வந்தானா?”
“”ஆமாங்க.. எப்பவும் போல கேட் கதவுகிட்ட வந்து நின்னான். நான் திறக்கலை.”
“”பிறகு?”
“”பரிதாபமா என்னை ஒரு பார்வை பார்த்தான். அப்படியே திரும்பி போய்ட்டான்,” அழத் தொடங்கினாள். அவளைத் தேற்றினேன்.
“”எப்படிங்க அன்பா, ஆசையா வளர்த்துட்டு, இப்ப நாமே கொல்லணும்ன்னு தேடிக்கிட்டு அலையறமே… எவ்வளவு பெரிய பாவம்ங்க. நாம கொல்லத் தேடறோம்ன்னு தெரியாம, வீட்டு வாசல்ல வந்து நிக்கறான். அவன் பார்த்த பார்வை இருக்கே, எத்தனை ஜென்மம் எடுத்தாலும், என்னால மறக்க முடியாதுங்க,” என்றாள் விசும்பிக் கொண்டே!
“”பாசம் காட்டி, புள்ளபோல வளர்த்துட்டு, இப்ப நம்ம கையாலேயே கொல்ற நிலைமை வந்துடுச்சே… நாம என்ன பாவம் செஞ்சோம்.” என் பங்குக்கு நானும் குலுங்கினேன்.
அவளை ஒரு வழியாக ஆறுதல் படுத்திவிட்டு மறுபடியும் கிளம்பிச் சென்றேன்.
இரவு ஏழு மணியாகியும், எங்களால் ஜீவனை கண்டுபிடிக்க முடியவில்லை. நாய் பிடிப் பவர்களுக்கு உரிய பணத்தைக் கொடுத்து விட்டு, வீட்டிற்குத் திரும்பினேன்.
வாசலிலேயே நின்றாள் அழகி.
“”எல்லாப் பக்கமும் சுத்தியாச்சு, ஜீவன் கிடைக்கல.”
நான் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அழகி அந்தச் செய்தியைச் சொன்னாள்.
“”நம்ம ஜீவன், அண்ணாச்சி கடை முன்னால செத்துக் கிடக்குறானாம்!”
விரைந்து ஓடினேன்… அண்ணாச்சி கடைக்குச் சென்று விசாரித்தேன்.
“”ஆமாங்க… நல்ல செவலைக் கலர். அதுவா கிறுகிறுன்னு சுத்தி விழுந்து செத்துப் போச்சு. இப்பத்தான், நகராட்சி வண்டிக் காரங்க தூக்கிப் போட்டு போறாங்க,” என்றார் அண்ணாச்சி.
பெரும் பாரம் இறங்கியது போலிருந்தது; திரும்பி நடந்தேன். அழகி, வீட்டு வாசலிலேயே நின்றாள்.
“”என்னங்க… நம்ம ஜீவன் தானா?” படபடத்தாள்.
“”ஆமாம்!” அண்ணாச்சி சொன்னதை சொன்னேன்.
“”நம்ம கையாலயே கொல்ல வேண்டிய நிலை வந்திடுச்சேன்னு கலங்கிப் போனோமே. ஆனா, சேர்ந்திட்டான் பார்த்தீங் களா?” என்றாள்.
“”நம்ம வளர்ப்புக்கும், நம்ம பாசத்துக்கும், ஜீவன் தன்னோட நன்றியைக் காட்டிட்டுப் போய்ட்டான்.” சொல்லும் போதே கண்ணீர் துளிர்த்தது.

- அரு.வி. சிவபாரதி (ஜூலை 2012) 

தொடர்புடைய சிறுகதைகள்
வழக்கத்திற்கு மாறாக இடமே பரபரப்பாக இருந்தது. மருத்துவர் வருவதும், போவதுமாய் இருந்தனர். சுற்றிலும் அழுகையும், புலம்பலும் சிலரிடம் அமைதியும், சிலரிடம் சிரிப்பும்,சிலர் ஜாடைப் பேச்சினில் வானத்தை நோக்கி பேசிக் கொண்டு இருந்தனர். ஆதரவற்றவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என, அழைக்கப்படும் அற்புத பிறவிகள் ஒன்றாக ...
மேலும் கதையை படிக்க...
இந்தியாவிலும், அமெரிக்காவிலும் ஒரு பிரபலமான நிறுவனத்தை நடத்தி வரும் பரமசிவம், அமெரிக்காவில் இருந்து சென்னை ஏர்போர்ட்டில் வந்து இறங்கியதும். அவரை வரவேற்க அவரது கம்பெனி இந்திய நிர்வாகிகள்,மூவர் நவ நாகரிக உடையணிந்து வரவேற்றனர்..”வெல்கம் சார்” என்று கை குலுக்கிய மூவருக்கும் நன்றி ...
மேலும் கதையை படிக்க...
பயனுற வேண்டும்
ஒரு நாள் கூட கதிரேசன் இரவு வீட்டுக்கு வந்ததும் அதிகாலை புறப்பட்டுப் போனதும் அவளுக்குத் தெரியாது. அதுதான் அம்பது லட்சம். ""என்னம்மா விக்கித்து நிக்கற... போய் கம்ப்யூட்டர ஆன் பண்ணு.. மணி ஆயிட்டு..'' மலர்விழி, வேகமாக கம்ப்யூட்டரை ஆன் செய்தாள். குறிப்பிட்ட இணையதளத்திற்குள் நுழைந்தாள். இன்னும் ...
மேலும் கதையை படிக்க...
சதாசிவ சாஸ்திரிகளுக்கு மேலுக்கு முடியவில்லை. போளூர் கிராமத்தில் இருந்த சொற்ப அந்தணர்களும் பட்டணம் போய் விட்டார்கள் பிழைக்க. மனைவியில்லாத சோகம், வறுமை, யாசிக்காத வைராக்கியம் அவரை இன்னும் படுக்கையில் கிடத்தி விட்டது. இருந்த ஒரே ஓட்டுவீட்டின் வாசற்திண்ணையில் யாராவது கொஞ்சம் அரிசி ...
மேலும் கதையை படிக்க...
சரவணன் நடு ராத்திரிக்கு எழுந்தபோது கேத்தி அறையில் ‘பிடி ஜூட்’ என்று அங்கும் இங்கும் மிதந்து கொண்டிருந்தாள். அவளுக்குப் பின்னால் சுமார் முன்னூறு வருஷம் முந்திய இங்கிலாந்து ராணுவ உடை அணிந்த இளைஞன் ஒருத்தன். இந்த நஜீபை இழுத்துப் போட்டு உதைக்க வேண்டும். சரவணனுக்குப் ...
மேலும் கதையை படிக்க...
அன்பு இல்லம்
தந்தை பட்ட கடன்
பயனுற வேண்டும்
ஆலிங்கனம்
ஒண்டுக் குடித்தனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)