நன்மை பயக்கும் எனில்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 11,200 
 

தேங்காய் துருவிக் கொண்டிருந்தாள் லலிதா. தினசரி பூஜையை முடித்திருந்தார் விசு.
“”ஏன்னா… நாலு பாக்கெட் பால் வாங்கிண்டு வந்துடறேளா?”
“”பால்காரன் பால் போடலயா?”
“”எக்ஸ்ட்ரா பாலுன்னா… கொழந்தேல்லாம் வர்றதோன்னோ?”
“”ஓ… சரி போயிட்டு வந்துடறேன்!”
மணி பதினொன்று ஆகிவிட்டது. லலிதாவும், விசுவும் பத்து நிமிடத்திற்கு ஒரு முறை வாசலை எட்டி பார்த்தபடி இருந்தனர்.
வாசலில் கார் வந்து நிக்கும் ஓசை கேட்டதும், வாசலுக்கு ஓடினார் விசு. முதலில் ஸ்ரீதர் இறங்கினான்.
நன்மை பயக்கும் எனில்“”வாப்பா… சவுக்கியமா… ப்ரியா நீங்கள்லாம் அப்படியே நில்லுங்கோ. அம்மா ஆரத்தி எடுத்துண்டு வர்றா…”
“”ஹாய் தாத்தா…” என்று குதித்தான், ஸ்ரீதரின் ஐந்து வயது மகன் சரண்.
“”வாடா கண்ணா…. அவ் ஆர் யூ?”
“”குட் தாத்தா… அவ் அபவுட் யூ?”
“”பைன்… பைன்…” என்று, சிரித்தபடி கட்டி அணைத்தார் பேரக் குழந்தையை.
“”எப்படி இருக்கேள் பா…” என்றபடியே இறங்க முயன்றாள் ப்ரியா.
“”பாத்து இறங்கும்மா. டேய் ஸ்ரீதர் கொழந்தய வாங்கிக்கோடா…”
ஸ்ரீதர் குழந்தையை வாங்கிக் கொண்டான். ஆரத்தி தட்டுடன், ஓட்டமும் நடையுமாய் வந்தாள் லலிதா.
“”வாடாப் பா… உடம் பெல்லாம் சாதாரணமா இருக்கியோனோம்மா…” என்று, கூறிக் கொண்டே ஆரத்தி எடுத்தாள்.
“”எல்லாரும் சவுக்கி யம்மா…” என்றாள் ப்ரியா.
“”குட்டி பையா… பாட்டி ஞாபகம் இருக்காடா?” வாரி முத்தமிட்டாள் சரணை.
“”கொழந்தய இப்படி குடு ப்ரியா. நேத்தோட சரியா அஞ்சு மாசம் முடிஞ்சுடுத்துல்ல?”
“”ஆமாம்மா… கரெக்டா ஞாபகம் வெச்சுண்டு ருக்கேள்…”
“”என்ன
ம்மா… கால் வலி எல்லாம் எப்படி இருக்கு?”
“”அது அப்படியே தாண்டா இருக்கு. உங்களை எல்லாம் பாத்துட்டா இல்ல,
கொஞ்ச நாளைக்கு
அத மறந்து இருப்பா… ஆமா, ப்ளைட் லேட்டா?” எனக் கேட்டார் விசு.
“”அட, ஆமாப்பா… லண்டன்லேயே ஒன் அவர் லேட். ஏதோ டெக்னிகல் பெய்லியராம்…”
“”சஹானா குட்டி… பாட்டி, தாத்தாவ பாக்க வந்துருக்கியாடா செல்லம்?”
பேத்தியை கொஞ்சி மகிழ்ந்தனர் லலிதாவும், விசுவும்.
“”எல்லாரும் போய் குளிச்சிட்டு வாங்கோ… சீக்கிரம் சாப்பிட்டு, கொஞ்சம் நேரம் படுத்து ரெஸ்ட் எடுக்கலாம். ப்ரியா.. கொழந்தய நான் குளிப்பாட்றேன். நீ சோப்பு கொண்டு வா…” என்றாள் லலிதா.
லலிதாவின் கொஞ்சலுக்கு, “களுக் களுக்’கென்று பொக்கை வாய் தெரிய சிரித்துக் கொண்டிருந்தாள் சஹானா.
ஸ்ரீதருக்கும், ப்ரியாவுக்குமானது ஜாதகம் பார்த்து, சம்பிரதாயப்படி நடந்த, ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம். ஸ்ரீதர் தான், “நாங்கள் இருவரும், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் மனமொத்து வாழ முடியும்…’ என்று கூறி, திருமணத்திற்கு முன் போனில் ப்ரியாவுடன் பேசத் தொடங்கினான். இருவரும் தங்கள் விருப்பு, வெறுப்புகளை “சாட்’டிலும், காது வலிக்கும் போன் காலிலும் அலசி விட்டதனால், பெற்றோர் மனம் குளிர்ந்த, காதல் பொங்கும் திருமணமாய் அது அமைந்தது.
கல்யாணம் முடிந்து பத்து வருடமாகி விட்டது; கல்யாணத்திற்கு பின், லண்டன் சென்று, வருஷத்துக்கு ஒருமுறை சென்னை வருவர். இந்த முறை ஒரு வருடத்திற்கும் மேலாகி விட்டது.
குழந்தைகள் ஆனந்தமாய் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தனர். பெரியவர்கள் ஒரு வருடமாய் ஐ.எஸ்.டி.,யில் பேசாத கதைகளை அலசிக் கொண்டிருந்தனர்.
“”ஏம்மா… சித்ரா எப்படி இருக்கா… ரொம்ப நாளா டச்சே இல்ல…”
“”ஓ… மகி அத்தை பேத்தியா? கே.கே.நகர்ல இருக்காடா…” லலிதாவின் குரல் சன்னமாகியது.
“”ஆறு வருஷமா கொழந்த இல்லன்னு ஒரு கொழந்தய சுவீகாரம் எடுத்துண்டுருக்கா… ஆம்பளக் கொழந்தயாம்; கேள்விப்பட்டேன். நான் போய் பாக்கலடா…”
“”ஏம்மா… போய் பாத்துட்டு வர்றதானே…”
“”ஊராம் புள்ளய எடுத்து வளக்கறா. நல்ல விஷயம் தான். என்ன தான் இருந்தாலும் நம்மாத்து ரத்தம் போல வருமாடா… அந்த கொழந்தய சகஜமா எடுத்து கொஞ்ச நேக்கு மனசு வருமான்னு தெரியலப்பா. அதான் போன்ல விசாரிச்சதோட விட்டுட்டேன். நான் இப்படியே ஆச்சாரம், அனுஷ்டானம்ன்னு இருந்துட்டேன்டா… மாத்திக்க முடியறதில்லே பாரு…”
ஸ்ரீதரும், ப்ரியாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
இரவு பத்து மணி.
வீடு தூங்கி விட்டிருந்தது.
ப்ரியா குழந்தையை கட்டிலில் போட்டு, போர்த்திவிட்டு அமர்ந்தாள்.
“”நீங்க சொன்னது ரொம்ப சரியா போச்சு…”
ஸ்ரீதர் லேப் – டாப்பை மூடி வைத்தான்.
“”நான் தான் சொன்னேனே ப்ரியா… என்ன தான் காலம் மாறி, மக்கள் ரொம்ப முற்போக்கா சிந்திக்க ஆரம்பிச்சிட்டாலும், ஒரு சில விஷயங்களை அவங்க மனசு, அவ்வளவு சீக்கிரமா ஒத்துக்காது.”
“”அம்மா, சித்ராவப் பத்தி சொன்னதுலேர்ந்தே அது நல்லா புரிஞ்சுடுத்துங்க!”
“”எங்க அம்மான்னு இல்ல ப்ரியா. என் சொந்தமோ, உன் சொந்தமோ நாம ஒரு கொழந்தய தத்து எடுக்க போறோம்னா, உடனே அத ஆமோதிக்க மாட்டாங்க…
“”அதுவும் நம்ம விஷயத்துல நமக்கு ஏற்கனவே ஒரு கொழந்த இருக்கறப்போ, “உங்க வயித்துல பொறந்த சரண் இருக்கறப்போ, எதுக்கு யாரோ கொழந்தய தத்து எடுக்கறீங்க… வேணும்ன்னா இன்னொரு கொழந்தய பெத்துக்க வேண்டியது தானே…’ன்னு கேப்பாங்க…
“”அது மட்டுமில்ல. நாமளே வருஷத்துக்கு ஒரு தடவ தான் சொந்த ஊருக்கு வர்றோம். எல்லாரோடயும் சந்தோஷமா இருக்க. அவங்க எல்லார்கிட்டயும் பாசமாகவே இருந்தாலும், சொந்த பேரன்கிட்டயோ, பேத்திக்கிட்டேயோ நடந்துக்கற அதே பூரிப்போட அந்த கொழந்தகிட்டேயும் நடந்துப்பாங்களான்னு சந்தேகம் தான்… இதுல யாரும், யாரையும் குத்தமும் சொல்ல முடியாது. யாரும், யாரையும் மாத்திடலாம்ன்னு நினைக்கவும் கூடாது!”
“”ரொம்ப கரெக்டுங்க. இதுக்காக எவ்வளவு ப்ளான் பண்ணினோம்… உங்களுக்கு தெரிஞ்ச சேவை மையங்கள்ல சொல்லி வெச்சு, நம்ம பேரண்ட்ஸ்கிட்ட எல்லாம் நான் கர்ப்பமா இருக்கறதா சொல்லி, கரெக்டா ஒன்பது மாசத்துல, ஒரு பொறந்த கொழந்த கெடச்சதும், லீகலா தத்து எடுத்துகிட்டு, கொழந்த பொறந்துடுச்சுன்னு வீட்டுக்குச் சொல்லி, அப்பப்பா…”
“”நமக்காக, நமக்கு ஏத்த மாதிரி பெண் கொழந்தயா பாத்துத் தேட எவ்வளவோ ஹெல்பர்ஸ் கஷ்டப்பட்டிருக்காங்க. அதனால தான் நமக்கு இந்த சஹானா குட்டி கெடச்சிருக்கா. இவள பத்தி நம்ம ரெண்டு பேருக்கு மட்டும் தான் தெரியும்…”
“”பின்ன… நாம் கல்யாணத்துக்கு முன்னாடியே முடிவு பண்ணின விஷயம் தானே. முதல் குழந்தை ஆணா பொறந்தா, பெண் குழந்தையை தத்து எடுத்துக்கலாம் என்றும், பொண்ணா பொறந்தா ஆண் குழந்தையை தத்து எடுத்துக்கலாம்கறதும்…”
“”ஆமாம் ப்ரியா… சஹானா நம்ம சொந்த பொண்ணு இல்லன்னு எல்லாருக்கும் தெரிஞ்சா, அவங்க இவள பாக்கற பார்வையே வேற மாதிரி இருக்கும். அப்புறம் நாம் ஒரு கொழந்தைக்கு நல்ல எதிர்காலத்தை கொடுக்கணும்ன்னு நெனச்சதுக்கு அர்த்தமே இல்லாம போயிடுமே…
“”நமக்கு சரின்னும், நல்லதுன்னும் படற விஷயத்தை எல்லார்கிட்டயும் நியாயப்படுத்தணும்கற அவசியம் இல்லை. அதனாலே, யாருக்கும் பாதகம் இல்லன்னா தைரியமா செஞ்சு முடிச்சிடலாம்!”
மூடியிருக்கும் தாமரை மொட்டுப் போல் உறங்கும் தன் குட்டி தேவதையை முத்தமிட்டான் ஸ்ரீதர். தூக்கத்திலும் புன்முறுவல் பூத்தது அந்த பிஞ்சு!

– ஜனவரி 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *