கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 24, 2014
பார்வையிட்டோர்: 9,519 
 

சரஸ்வதி, அவசர அவசரமாக வெளிக்கிட்டு.. அம்மா வைத்த சாப்பாட்டுப் பெட்டியையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள். வீட்டையும் ஒரு தரம் திரும்பிப் பார்த்தாள். வாசற்கதவின் வலத்தூணின் தலைப் பகுதியில் ‘மருது இல்லம்’ என எழுதப்பட்டிருந்தது. புதிதாய் அந்த வீட்டைக் கட்டிய போது, அம்மா தெரிவு செய்த பெயர். ‘மருது இல்லம்’ என எவர் கேட்டாலும், கூட்டி வந்து அவள் வீட்டருகே விட்டு விடுவார்கள். கிராமத்திலேயே, அந்த வீட்டுக்கு மட்டுமே ‘பெயர்’ இருந்தது.

அப்பாவிற்கு மருது, யார் என தெரியவில்லை. “ஏன் இந்தப் பெயரை வைக்கிறாய்?”என அம்மாவைக் கேட்டார். “இந்தியாவிலே, ஆங்கிலேயரை எதிர்த்து சுதந்திரத்திற்காக போரிட்டவர்கள் பாண்டிய வம்சத்தை சேர்ந்த மருது சகோதரர்கள். அவர்களை கடைசியிலே தூக்கிலே தூக்கி கொன்று விட்டார்கள். கட்டப்பொம்மன் போல அஞ்சாது இருந்தவர்கள்”என்றாள். அம்மா, சரித்திரக் கதை வாசகி. அப்பாவிற்கு கட்டப்பொம்மனையே சரிவர தெரியாது. மருது ஓராளிட பேர் என நினைத்திருந்தார். அதோடு,சகோதரக்கதை வேறு இருக்கிறாதா? அவர் தினசரியில் வார சிறுகதைகளையே வாசிக்காதவர். சரித்திர ஆராய்ச்சியில் இறங்குவாரா? மேசனைக் கூப்பிட்டு “மருது இல்லம்’எனப் பொறி”என உத்தரவிட்டார். அம்மாட சந்தோசம் தான் அவருக்கு முக்கியம்.

வீட்டிலே அவள் 3வது பெண். நகுலக்கா மூத்தவள், அம்மாட விருப்பத்தை நிறைவேற்றியவள். கலையல் பிரிவை தேர்ந்தெடுத்து , உயர்வகுப்பில் படித்தாள். பல்கலைக்கழகம் போகக் கூடியவளவிற்கு பெறுபேறு பெறாவிட்டாலும், தேறி இருந்தாள். அச்சமயம் ஆசிரியர் பரீட்சை ஒன்றிலும் தோற்றினாள். அதிருஸ்டம் அவள் பக்கம் இருந்தது. ஆயிரத்தி ஐந்நூறு பேர்களில் ஒரு ‘ஆசிரியை’ ஆக தேறி விட்டாள். பிறகு ஆறு மாசம் ஆசிரியக்கலாசாலைக்கு பயிற்சிக்கு அனுப்பப்பட்டாள். படித்து முடித்து, இப்ப வீமன்காமம் பகுதியிலே ஒரு ஆசிரியை. அம்மா, வேலை பார்க்க வேண்டும் என நிறைய ஆசைப்பட்டவர். “எனக்கு வாய்க்கவில்லை, உங்களுக்காவது கிடைக்கிறதா? பார்ப்போம்” என்று அடிக்கடி சொல்லுவார்.

வடக்கு,கிழக்குப் பகுதியிலே சமஸ்டி ஆட்சி நிலவியிருந்தால் அம்மா கூட ஒரு ஆசிரியை ஆகி இருப்பார். கடினப்போக்காளர், இன்று வரை இனப்பிரச்சனையை தீர்க்காது இழுத்தடிக்கிறார்கள். அவள்(தமிழர்) தரப்பில் நிறைய பெடியள், மக்கள், ஏன்.. அகிம்ஸை வழியில் போராடிய அமிர்தலிங்கமே செத்துப் போய் விட்டார்கள். இன்னும் எத்தனை ஆயிரம் மக்கள் சாகப் போறார்களோ? அரசு தரப்பில் என்றுமே நியாயம் இருந்ததில்லை. பேரமும், ஏமாற்றலுமே இருக்கின்றன.

“தர்மம் தன்னை சூது வெல்லும்!,தர்மம் மறுபடியும் வெல்லும்!” அமிர்தலிங்கத்தின் ஒப்பற்ற எடுகோள். ‘தர்மம்’என்றோ ஒரு காலத்தில் வெல்லும். அப்போது இந்த அரசும், இதற்கு துணையாக இருந்த அத்தனை நாடுகளும் தலை குனிய வேண்டி நேரிடும்.

இரண்டாவது ராஜன். அவனுக்கு படிக்கிறதிலே விருப்பம் பெரிதாய் இருந்ததில்லை. உயர்வகுப்பு வரையில் படித்தான். அப்பவும் கால்பந்தாட்டம் என ஊர் ஊராய் போய் விளையாடிக் கொண்டிருந்தான். சிறந்த விளையாட்டு வீரன். ஆனால் படிப்பு தானே வடபகுதியில் முக்கியமாக பார்க்கப் படுவது. சுமாராக கணிதப் பிரிவில் தேறினான். படிப்பு ஏறாதவன் என்றில்லை. அவ்வளவாக மினக்கெடவில்லை. வெளியிலே இருக்கிற அம்மாட தங்கச்சி‍ விஜி சின்னம்மா,”அக்கா,அவனை இங்கே எடுக்கிறேன். இங்கே, அங்கே போல படிப்பிலே தரப்படுத்தல், சிங்கள உபாதைகள் எல்லாம் இல்லை. அவனால் படித்து பட்டமும் பெற முடியும். ஒரு உத்தியோகத்தையும் எடுத்துக் கொள்ள முடியும். உங்களுக்கும் உதவியாய் இருப்பான்.” என்று எழுதினாள். அவரிற்கு இரண்டு பெட்டைகள். பெடியன் இல்லை. ராஜனை தன் மகனாய் பார்க்கக் கூடியவர். அம்மாவிற்கு ‘உத்தியோகம் எடுக்க முடியும்’ என்றவுடன் உடனடியாய் அவனை அவரிடம் அனுப்பி விட்டார்.

விஜிசின்னம்மா பொய் சொல்லவில்லை. அவன் அங்கே சீக்கிரமே படித்து, வங்கி ஒன்றிலும் சேர்ந்து விட்டான். வீட்ட அடிக்கடி பணம் அனுப்புறான். சிறிலங்காவின் பொருளாதார தடைகளை வட,கிழக்குப் பகுதிகளில் அமுலாக்கிற இந்நாளில் இவர்களால் அதிக விலை கொடுத்து சாமான்களை வாங்கக் கூடியதாகவிருப்பதற்கு, அந்த வெளிநாட்டுக் காசின் பெறுமதி இங்கே உயர்வாக இருப்பது தான் காரணம்.

அவனுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை. ஆகினால் எல்லாமே தலைகிழாகவும் மாறி விடலாம். நாளை நடக்கப்போவதைப் பற்றி அவனுக்கே தெரியாது. நாம அறிந்து என்ன செய்யப் போகிறோம்?

அக்காவிற்கு ஆசிரியை உத்தியோகம் கிடைத்தவுடனே பெரிய மச்சான் சுந்தரத்தைக் கட்டிக் கொண்டு விட்டார். அம்மாட அண்ணன் சாம்பு மாமாட மூத்தவன். உயர் வகுப்பு சரி வரவில்லை என்பதற்காக டியூசன் வகுப்பு என போய் மீள பரீட்சை எடுக்கிறதுக்கு மினக்கெடாமல், அப்பாவைப் போல ஒரு சிறு பலசரக்குக் கடையை வீமன்காமத்திலே திறந்து வியாபாரம் செய்ய தொடங்கினான். அக்காவிற்கு அவன் மேலே சிறு வயதிலிருந்தே மையல். அம்மாட்ட அக்காவே கேட்டாள்.’ அதுக்கென்ன’என கட்டி வைத்து விட்டார். ‘சுமி’என்ற 6 வயசுக் குட்டி மகள்.. அவர்களுக்கு இருக்கிறது.

அடுத்தது அவள்! போராட்டக்களத்தில் நிற்பவள்.உயிரியல் பிரிவை தெரிந்து.. சதா அல்லல் படுகிறாள். உயர்வகுப்புப் பரீட்சையை 3 தடவையும் எடுத்துப் பார்த்து விட்டாள்.சுமாராகவே தேற முடிந்தது. மனம் சோர்ந்து விட்டது. களைத்து விட்டாள். “எடியே இது போனால் என்ன, தொழினுட்பக் கல்லூரியில் சேர்ந்து எதையாவது படியடி”என்று அம்மா கூறிய புத்திமதியால் ‘படம் பயில் வரைஞர்’கோர்ஸிற்கு தெரிவாகி இருக்கிறாள்.

இன்று தான் அவளுடைய முதல் நாள். போகப் போறாள். “அம்மா போய்யிட்டு வாரான்”என்றாள். காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு தானே! அம்மாவிற்கு அவளும் அப்படித் தான்.’எல்லாம் நல்லபடியாய் நடக்கும்’என முகத்தில் அபிநயித்து சிருஸ்டி கழித்தாள்.”அப்படியே அக்கா வீட்ட போய், நாளையே வருவேன்”என்றாள். அப்பவெல்லாம் செல்போன் இல்லை. ஏன்? மற்ற போனே அவர்களிடம் இல்லை. முதலிலே சொல்லி விட வேண்டும். குருவிச் சத்தங்களுடன் நடையைக் கட்டினாள். குடியிருப்புகளிலிருந்து அம்மண் ஒழுங்கை,சிறு தார்வீதி என மாறி பெரு வீதியில் ஏறுகிறது. அங்கே இருந்து தான் ‘பேருந்து’ எடுக்க வேண்டும். ‘அரசடி வாசிகசாலை எதிர்ப்பட்டது. அங்கே,கோபு தொட்டு அவ்வூர்ப் பெடியள் சிலரை மாலையில் காணலாம்.அம்மாட ஒன்று விட்ட பார்வதியக்காட ஒரே மகன். அவளுக்கு தம்பி முறை. இந்த வயதிலே ‘அரசியலைப்’பற்றி யோசிக்கிறார்கள். சிலர் ஒ/லெவலே தேறவில்லை. சிலர்,உயர் வகுப்பை ஒரு தடவ எடுத்து, பிறகு சலித்து விட்டவர்கள். தினமும் பெடியள் வேட்டையும், மக்களை படுகொலை செய்வதும் நிகழ்கிற போது இவர்கள் ரத்தமும் கொதித்தன. அதனால் படிப்பதில் நாட்டம் செல்லவில்லை. ஏற்கனவே படிப்பிலே தரப்படுத்தல், வேலை வாய்ப்பில் கஞ்சம் என நிலவிய‌தால் விரக்தியே பரவி இருந்தது. படித்த சிலரும் ‘டியூசன் வாத்தி’என புத்தகமும் கையுமாக திரிந்து கொண்டிருந்தார்கள். அது ஒன்று தான் அங்கே இருந்த உத்தியோகம்.

பெரும்பாலான பெடியள்கள்,அவளைப் போல ‘வேலைக்கான ஒரு தகுதி’ வேண்டும் என அலையவில்லை. இயக்கங்களில் சேர்ந்து ‘இதோ விடுதலை பெற்று விடுவோம்’என்பது போல திரிந்தார்கள். ஊர்ப்பிரச்சனைகளை தீர்த்து வைத்தார்கள். ‘இயக்கம்’என்று பலபேர் சேர்ந்திருந்தார்கள் அல்லவா. எனவே பலமாய் இருந்தார்கள். தினவெடுத்து திரிந்த சண்டியர் பலரையே அடக்கினார்கள்.புத்திமான் பலவான். ‘நாலுபேர் சேர்ந்தால் வீதியின் குறுக்கே இருக்கிற பெரிய மரத்தையே புரட்டி விடலாம்’என்ற எளிய பின்னம் தான்.அதை புரிந்தும் புரியாமல் .. இருந்தது தான் துரதிஸ்டம்.

கடந்த காலங்களில் விடுதலைக்காக போராடிய அரசியல் கட்சிகளும் ஒன்று சேர்ந்திருக்கவில்லை. அவர்களின் பிள்ளைகளான இன்றைய இளைஞர்களும் துடிப்பாக இருந்தார்கள் தவிர, பழையவரைப் போல ஒற்றுமையின் அவசியத்தை புரியாதவர்களாகவே இருந்தார்கள். ‘நான் பெரிசா?நீ பெரிசா?என்ற போட்டியே அவர்கள் மத்தியிலும் இருந்தன.

‘கலைமகள்’பெயர் பலகையுடன் கிடந்த வாசிகசாலையைச் சேர்ந்த இளைஞர்கள், இன்று வேற வேற இயக்கங்களின் ஆட்களாகப் பிரிந்து விட்டார்கள். கோபு தொட்டு சிலர் மட்டுமே இன்னும் வாசிகசாலையுடன் இழுபடுகிறவர்கள். வீதியில் அரசடியிலிருந்து கொக்குவில் தொழிற்னுட்பக்கல்லூரிக்குப் போகிற பட்டு, சந்திரா என அவள் கல்லூரியில் படித்த சில பெண்களும்,உயர்வகுப்புப் போற பெடியள் சிலரும் பேருந்திற்காக காத்திருந்தார்கள்.

‘சே!என்ன இந்த படிப்பு?எனக் கல்லூரிப் படிப்பை மனதுக்குள் திட்டினாள். அதில் படித்து தேறி, பல்கலைக்கழகம் என ஒழுங்காகப் போகாதது சில சமயங்களில் அவளை எரிச்சலடைய‌ வைத்துக் கொண்டே இருந்தது.

‘புத்தவிகாரைகள்’எல்லாம் கல்விச்சாலைகளாகவே ஒரு காலத்தில் இருந்தன’என்கிறார்கள். காலனி ஆட்சிக்குள் நாடு விழுந்ததும் ‘ஐரோப்பிய நாகரீகமே சிறந்தது’என மூளை சலவை செய்யப்பட்டு,தற்போதைய கல்வி முறையும் ஏற்பட்டு விட்டது. தற்போது,சிங்களவர்கள் புத்தவிகாரகைகளை எல்லாம் மத அடையாளமாக்கி விட்டார்கள். கல்வி முறையும் சரியில்லை. புத்தவிகாரகைகளும் பயங்கரவாதப் பகுதிகளாக தமிழ்ப்பகுதிகளில் மாறி விட்டன. இதுவரையில் படித்த உயிரியல் படிப்பு இனி அவளுக்கு உதவப் போவதில்லை. சமஸ்டி ஆட்சி நிலவியிருக்குமானால் அதோடு சம்பந்தப்பட்ட ஏதோ ஒரு படிப்பு இருந்திருக்கும். தொடர்ந்திருப்பாள். அந்த பிரிவிலே ஒரு ‘வேலை வாய்ப்பையும்’ பெற்றிருப்பாள்.

அதற்கு முற்றிலும் சம்பந்தமில்லாத படிப்பான ‘படம்பயில்வரைஞர்’கோர்ஸில் 10ம் வகுப்பு தேர்ச்சிச் தகமையுடன் சேர்ந்திருக்கிறாள். உயர் வகுப்பை படியாமலே அப்பவே, இந்த கோர்ஸில் சேர்ந்து படித்திருக்கலாம்.காலத்தை விரயமாக்கியது தான் மிச்சம். ஆனால் வேலை வாய்ப்பு? அப்ப போலவே இருக்கிறது. அவர்கள்,என்ன‌ வேலைக்காகவா படிக்கிறார்கள்! அதோடு வயசும் அல்லவா ஓடிப் போய் விடுகிறது. பெண்கள் வயசு போறது பற்றி அதிகமாக கவலைப் படுகிறவர்கள். அக்காவைப் போல சரியான வயசில் வேலை கிடைக்க வேண்டும். தவறிப் போனால், இனி எல்லாமே தவறுதலாகவே இருக்கப் போகிறது. ‘அரசடிப்பிள்ளையாரே தலைவிதியை சரியாய் எழுதப்பா!’ மனதுக்குள் கும்பிட்டுக் கொண்டாள்.

இரண்டு பேருந்துகளில் ஏறி தொழினுட்பக்கல்லூரிக்குச் சென்ற போது சிரம‌மாக இருப்பது தெரிந்தது. கூட நேரப் பயணம். வேறு. அதிபரின் அறையுடன் கூடிய முகப்புக் கட்டிடத்தில், இரண்டாம் மாடியில் கிழக்கு மூலையில் அவளுடைய வகுப்பு இருந்தது. படிகளில் ஏற கால்கள் உளைந்தன. தினமும் இனி ஏறி வர வேண்டும். இருபது பேர்களுக்கு மேல் பெடியள்களும், அதே தொகையில் பெண்களும் இருந்தார்கள். படித்த மாதிரி தான்! சலிப்பேற்பட்டது.

“நான் சரஸ்வதி” என பெண்கள் மத்தியில் அறிமுகப்படுத்திக் கொண்டு, முகமலர்ச்சியுடன் இருந்த பெண்ணிற்குப் பக்கத்தில் காலியாக இருந்த மேசையுடன் கூடிய நாற்காலியில் போய் அமர்ந்தாள்.

“நான் ஜீவி”என்று அந்தப் பெண் கையை நீட்டினாள்.கிருஸ்தவப்பெண்.

வகுப்பு ஆரம்பிக்கவில்லை.அவர்களுக்கிடையில் நட்பு மலர்ந்து விட்டது. மற்றவர்கள், அறிமுகப் படலம் முடிந்து பேசிக் கொண்டிருந்தார்கள். பெடியள் பகுதியிலிருந்து தீபன், குகன், வரதன் கமல், சுந்தா என ஐந்து இளைஞர் குழுவொன்று அவர்களிடம் கதைக்க முன் வந்தது.

“இவ சரஸ்வதி”என ஜீவி அவர்களிடம் அறிமுகப்படுத்தினாள். ஏற்கனவே ஜீவி அவர்களோடு கதைத்திருக்க வேண்டும் என்பது புரிந்தது.

அவளின் சோர்ந்த முகத்தைக் கவனித்து விட்டு கமல், “வெற்றியும் முக்கியமில்லை; தோல்வியும் முக்கியமில்லை, இங்கே படிக்க முயற்சிக்கிறது தான் முக்கியம்”என்று சிரித்துக் கொண்டு சொன்னான். கூடவே மற்றவர்களையும், தன்னையும் அவளுக்கும் அறிமுகப் படுத்தி வைத்தான்.

சரஸ்வதிக்கு அவர்களில் குகனை எங்கையோ பார்த்தது போல தோன்றியது. எங்கே?..’அட வடக்கம்பறையில், கோபு, செல்வன் கூட இவனும்! ஒ!, இவனும் அவயள்ட ஆள். புரிந்து விட்டது. மற்றவர்களும் ஒவ்வொரு இயக்கங்களோடு பிணைக்கப் பட்டவர்களாக இருக்கலாம் எனத் தோன்றியது. விரைவில் நட்பு ஏற்படுவதற்கு ‘விடுதலையில் பற்று’ என்ற பொது இணைப்பு இருக்க வேண்டும்.

“நீ கோபுட ஆள் தானே?”என அவள் நேரடியாகவே குகனைக் கேட்டாள். அவன் ஆச்சரியப்பட்டு “எப்படித் தெரியும்?”கேட்டான். “கோபு எனககு தம்பி. வலக்கம்பறை தேர்முட்டியிலே அடிக்கடி பார்க்கிறேனே. நான் அரசடிப்பகுதி”என்றாள்.

அவள் அம்மாவோடு அல்லது தோழிகளோடு கோயிலுக்குப் போய் வார போது கண்டிருக்கிறாள்.

“இவன் தீபன்,விவசாயி!கடும் இயக்க ஆதரவாளன். வரதன், கமல், சுந்தா படித்த இயக்கத்தவர்கள்”என எதிலே இருக்கிறவர்கள் என்பதை தெரியப்படுத்தினான்.கோபுட சகோதரி என்றால் இதுவும் தெரிந்திருக்கிறதில் தவறில்லை என நினைத்தானோ?.

ஜீவி”நான் ஒன்றிலேயும் இல்லையப்பா. பொது ஆதரவாளி மட்டுமே”என்று சிரித்தாள்.

சரஸ்வதியும் கூட நானும் அப்படித் தான்”என்றாள்.

“நீங்கள் இயக்கமில்லை. எனவே இங்கே படிக்கிற போது தான் தெரிந்தவர்கள். வெளிய பேருந்திற்கு நிற்கிற போது,வீதியில் போற போது தெரியாதவர்கள் போல போவீர்கள்”என்றான் சுந்தா.

“சே,சே! அப்படியெல்லாம் இருக்க மாட்டோம்”இருவரும் ஓரே நேரத்தில் மறுத்தார்கள்.

கல்லூரி வாழ்க்கையில் ஆண்களும் சரி, பெண்களும் சரி உறவினரைத் தவிர வேற்று ஆண்,பெண்ணுடன் கதைத்தவர்கள் இல்லை. பண்பாடு, கலாச்சாரம், சாதி என வாழ்ற கூட்டத்தில் ‘காதல்’அவ்வளவாக வரவேற்கப்பட்டதில்லை. ஏன் தமிழர்களிலே இது பொது நிலமை தான். அதனாலே தொண்ணூறு வீதமான தமிழ் நாட்டுப் படங்களிலே, ‘காதலை’ மையமாக வைத்தே வெல்வது போல திரைக் கதைகளை அமைக்கிறார்கள். பத்து வீதமானவற்றில் யதார்த்தமான சோக முடிவையும் காட்டுகிறார்கள். இங்கேயும் சமஸ்டி ஆட்சி வருமானால்.. ஆணும்,பெண்ணும் சமம‌ளவில் வேலை வாய்ப்புகளைப் பெறுவார்கள்.தமிழ்நாட்டைப் போல ஓரளவு மாற்றங்களைக் காணலாம். அதுவரையில் ‘சாதிகாரர்’என சிங்களவர்கள் பேசுற கொச்சைப் பேச்சுக்களை கேட்க வேண்டியவர்களாகவே இருப்போம்.

ஆனால் இயக்கத்தில் சேர்ந்த பெண்கள் இந்த கட்டுக்களை எல்லாம் உடைத்தார்கள். ‘தோழர்’என கதைக்க தயங்கியதில்லை. ஆனால் அங்கேயும் ‘காதல்’இல்லை தான். ‘சகோதர பாசம்’ போல ஒரு வகைப் பற்று. வெளிபடையாக தெரிகிற வேறான உடலமைப்பால்.. ஒருத்தருக்குக் ஒருத்தர் குழப்பமான பார்வைகளும் இருக்கவே செய்தன. ஆண்கள்,அறிவியல் தகவல்களைத் தெரிந்து, பெண்களுடன் கண்ணியமாக பழக வேண்டும். அவர்களுக்கும் அந்த அறிவு மிஸ்ஸிங். என்ன செய்வது? இனித் தான் தேடி அறிந்து கொள்ள வேண்டும். அது வரையில் ‘பெண் சபலம்’ இருக்கவே போகிறது. கூடியமட்டும் பெண்களோடு விலகியே இருந்து பேசினார்கள். இயக்கத்தில் ‘காதல், கல்யாணத்திற்கு.. எல்லாம் தடை செய்யப் பட்டிருந்தது. எனவே சகோதரன்,சகோதரி போல பிழங்குற கட்டாயமே இருந்தது. தோழர்,தோழி எனவே பிழங்கினார்கள். கூடப் பிழங்குறதுக்கும் பயம். அது வேறு இயக்கப் பணியைப் பாதிக்கும். ‘சிறிலங்காவின் காட்டுமிராண்டிப் படையினரால் அதிக ஆபாயத்தில் இருப்பவர்கள் பெண்கள்’என்பதால் அவர்கள் மேல் ஒருவகை அனுதாபமும் இருந்தது.

வகுப்பு மணி அடித்தது. சிரிச்ச முகத்துடன், மென்மையான சுபாபவம் கொண்ட ஆசிரியர் ஒருவர் வகுப்பிற்கு வந்தார். “நான் உங்களுக்கு இரண்டு கணிதப் பாடங்கள் எடுக்கப் போகிறேன்.என் பெயர் கதிரேசன். உங்களைப் போல நானும் புதிதாய் வாரவன் தான். சம்மாந்துறையிலிருந்து ‘மாற்றம்’கிடைத்து வந்திருக்கிறேன்”என்றார்.

அவர்களுக்கு ‘நிலவளவை’என்று ஒரு பாடம் இருக்கிறது, அதற்கு இந்த தூய,பிரயோக கணிதங்கள் தேவைப்படுகின்றன’ என்பது பிறகு அவர்களுக்கு தெரிய வந்தது. இங்கேயும் பத்து பாடங்கள் படிக்க வேண்டி இருந்தன. நம்பிக்கையை வரவழைத்துக் கொண்டு வகுப்பிற்குச் சென்றார்கள்.

அடிக்கடி, அரை நாள், முழுநாள்.. என கல்லூரி நடக்க முடியாது மூடிக் கொண்டது வேறு புதிய உபத்திரவம். அந்நேரங்களில் வெளியில் இயக்கங்கள் வங்கிகளை கொள்ளை அடித்தன. திம்புப் பேச்சு வார்த்தையில்,’சிறிலங்காப் படைகள் காம்பை விட்டு வெளியில் வரக் கூடாது’என ஏற்பட்ட முடிவை’ இயக்கங்கள் சாதகமாக்கிக் கொண்டு எல்லாக் காம்களையும் சுற்றி ஒவ்வொன்றும் தனித்தனியே காவலரண்கள் அமைக்க வெளிக்கிட்டன. உள்ளே ‘மோட்டர் செல்களை செலுத்துவதென’பிசியாய் இருந்தார்கள். படுத்துக் கிடக்கிற புலியை சீண்டிப் பார்ப்பது போன்றது. காம்களிலிருந்து குடிமனை,நகரம் நோக்கி மழையாய் படையினர் செல்லுகளை அடிக்க ஆரம்பித்தார்கள்.தரைவழியை நிறுத்தினார்கள் தவிர ,ஆகாய வெளியை திம்பு கட்டுப்படுத்தவில்லை.தீடீரென கெலிகப்டர்கள் வந்து சுட்டுத் தள்ளின.போர் விமானங்கள் ஏவுகணைகளை கொட்டி விட்டுச் சென்றன.கறுப்பு நிற முதலை வடிவான கெலி,இஸ்ரேலின் கிபிர் விமானம் என்றால்.. மக்கள் கிலி பிடித்து ஓடினார்கள். இருபது , முப்பது தொகையினர் என இறக்கிற கொடூரம் நிகழ்ந்தது.

அப்படியான நேரங்களிலே அனைத்து கல்வி நிலையங்களுமே அவசர அவசரமாக மூட வேண்டியிருந்தன. ‘அரசு’எதிரி. அது எந்த மனிதபிமானச் சட்டங்களையும் பற்றிக் கவலைப்படாது. அதிபர்கள், மாணவர்களைக் கொஞ்சமாவது காப்பாற்ற அந்த நடவடிக்கையை எடுத்தார்கள். வேணுமென்றே கொன்று விட்டு, தவறுதலாக ‘செல்’ கல்வி நிலையங்கள் மீது விழுந்து விட்டன’என நீலித் துக்கம் தெரிவிக்க அரசுக்கு தெரியாதா? அமெரிக்கா, பிரித்தனியா.. பெரிய நாடுகள் வாய்யை மூடிக் கொள்ளும். அடிக்கடி அவர்கள் செய்யும் தவறுகள். மற்ற நாடுகள் கேட்கவா போகின்றன‌.

புதிய கல்வியைப் படிப்பது கஸ்டமாக இருந்தது.பல உயிர்கள் காவு போய்க் கொண்டிருந்தன. ஊனமடைகிறவர் தொகை வேறு பாவமாக இருந்தது. ஏற்கனவே,மக்களைக் கவனித்து கவனித்து பேணுவதற்கு,தன்னம்பிக்கை அளிப்பதற்கு, மருத்துவ வசதிகளை வழங்கி, ஆரோக்கிய சமூகமாக வளர்ப்பதற்கு சமஸ்டி ஆட்சி கிடையாது.இந்த நிலையிலும் பொருளாதாரத் தடை,மருத்துச் சாமான்களை அனுப்பத் தடை என ஈவ்விரக்கமில்லாது விதித்து, கொலை வெறியோடு கிடக்கிற அரசு!பாதிக்கப்படுபவர் படும் சோகத்தை கையாலாகதவர்கள் சொல்லும் ஆறுதல் வார்த்தைகள் ஆற்றுமா?பல மடங்காகவே குமைந்தார்கள்.

இச்சூழலில்,பிரதானமான விவசாயம், கடற்தொழில்கள் கூட ஆட்டம் கண்டன. முதலிலே, மாணவர்களுக்கு இவற்றின் அவசியம் தெரியாது. எவரைப் பார்த்தாலும் “வயலை,நிலத்தை, வீட்டை,படகை விற்று வெளிநாடு அனுப்பு. நான் உழைத்து அனுப்புகிறேன் அப்பா”என்று கேட்கிறார்கள். திரும்பத் திரும்ப எழுகிற‌ இந்தக் குரல்கள் பெற்ற மனத்தை கரைய வைத்தன. வாழ்வாதாரங்கள் மலிவாக விற்கப்பட்டன. இது சீரழிவு தான்! எதிரியின் நெருக்குவாரத்தால் தன் சுயத்தையே இழக்கிறது. குண்டு விழுகையும், எதிரியின் கொலைவெறியுமே சதா சிந்தனையில் உழன்றன. வேற எதையும் நினைக்கிறதை மூளை இழந்து விட்டிருந்தது.கொடிய அரசு தொழிலும் தடைகளை மெல்ல விரித்த‌தால்.. ‘தொழிலே வேணானப்பா’என்று போகிற விரக்தியும் ஏற்பட்டிருந்தது.

ஒரு சமஸ்டி ஆட்சி நனவாகக் கூடியதே. அதை அடைவதற்குரிய சரியான வழிமுறைகளைத் தான் தெரியாமல் இளைஞர்களும் திணறினார்கள். நம்மவர்கள் ஒற்றுமை படுவதிலே தானே மாஸ்டர் டிகிரி வாங்கியவர்களாச்சே? சிறிலங்காவரசு கூட அதை முகமனுடன் அளிக்கலாம் தான். அவர்களுக்கு கொழுப்பு. யாரிடம் தான் பெருந்தன்மை இருக்கிறது? அந்த இழுபறியில் தமிழ் இளைஞர்கள் ‘தனிநபர் பயங்கரவாதத்தை’ நோக்கியே போய்க் கொண்டிருந்தார்கள்.

வகுப்பு முடிய அவள் வேறு பேருந்து ஏறி வீமன்காமத்தில் இருக்கிற அக்கா வீட்டிற்குப் போனாள்.

“வகுப்பு எல்லாம் எப்படி இருந்ததடி?”என்று விசாரித்தாள்.அடுப்பிலே குழம்பு கொதித்துக் கொண்டிருந்தது.

“எல்லாம் இயக்கப் பெடியளாய் இருக்கிறார்கள்”என்றாள் சலிப்புடன்.

“பரவாய்யில்லையே!முதல் நாளே பெடியளைப் பற்றி பேசுகிறாய்?”என்று சிரித்தாள்.

“நீ ஒன்று,அப்படியெல்லாம் இல்லை”என்றாள்.

கறிவேப்பிலையை தேடினாள். “அட முடிந்து விட்டதே?பக்கத்து வீட்ட சுமியையும் கூட்டிக் கொண்டு போய் வாங்கி வாயன்டி”என்று கேட்டாள்.”

“வாடி”என்று சுமியை இழுத்தாள்.

“அக்கா! அங்கே பெரிய கறிவேப்பிலை மரம் இருக்கிறது” என்றாள். வேலிக்குள்ள இருந்த பொட்டுக்குள்ளாக நுழைந்து போனார்கள். இந்த வருசம் தான் அக்காவோடு சேர்ந்து முதலாம் வகுப்புக்குப் போக ஆரம்பித்திருக்கிறாள். சிறிசோடு என்னத்தைப் பேசுறது?

“சித்ராக்கா,சித்ராக்கா”என்று சுமி கூப்பிட்டாள்.சரஸ்வதியை விட இரண்டு, மூன்று வயசு குறைந்தவள். ஏற்கனவே அவளை சிறிது தெரியும்.

“கறிவேப்பிலை வேணும்”என்று கேட்ட போது, சத்தகத்தை எடுத்துக் கொண்டு வந்தாள். நான்கு, ஐந்து கெட்டுக்களை உடைத்து சுமியிடம் கொடுத்து “போதுமா?” என்று கேட்டாள்.

“ரொம்ப தாங்ஸ்”என மழலையில் மிழற்றியது.

“உங்களோட என்ர மச்சான் ஒருத்தனும் படிக்க வாரான். தெரியமா?”என்று சித்ரா கேட்டாள்.

“என்ன பேர்?”கேட்டாள்.

“குகன்.அம்மாட தம்பிட ஒரு மகன்”என்று சிரித்தாள்.

“குகனா?”அவளுக்கு உண்மையிலே ஆச்சரியமாய் இருந்தது.

அக்காவோடு சாப்பிடுற போது “இந்த படையினரின் சேட்டைகள் மோசமாகிக் கொண்டு போகிறதடி. பயமாகவும் இருக்கிறது” என்றாள். பெண்கள் வேலைக்குப் போறதைத் தடுக்க இங்கே இப்படியும் ஒரு பூதம் கிடக்கிறது.

“மேற்கு கிராமப்பகுதியில் இருக்கிற காவேரி என்ற ஆசிரியை பள்ளிக்கூடத்தாலே வீட்ட வாரபோது படையினர் மறித்திருக்கிறார்கள். அவள் பழுதாக்க வருகிறார்கள் எனப் பயந்து, வயற்பக்கம் இருந்த முக்கால்வாசி நிறம்பியிருந்த கிணற்றிற்குள் குதித்து விட்டாள். படையும் ‘நீச்சல் தெரிந்தே குதித்திருக்கிறாள்’என போய் விட்டார்கள். பரிதாபகரமாக செத்துப் போனால‌டி”என்றாள் உடைந்த குரலில்.

உண்மையில் படையினர் பழுதாக்க வந்தார்களா? அல்லது பயம் பற்றிக் கொண்டு குதித்தாளா? உண்மை நிலவரம் தெரிய வரப் போவதில்லை. தமிழ் மக்களை கொல்லவும், பெண்களை பழுதாக்கவும் உரிமைகளை அரசு அவர்களுக்கு வழங்கியிருக்கிறபோது,எந்தப் படையினரும் நல்லவராக தெரியப் போவதில்லை.

அக்காவிற்கு வீடு சுத்தமாக இருக்க வேண்டும். சுத்தப்படுத்திறதில் இறங்கினாள். சுமியைக் கூட்டிக் கொண்டு திரும்பவும் சித்ரா வீட்ட போனாள்.அவர்களிடம், பழைய போட்டோக்களைக் எடுத்து பார்க்கக் தந்தாள். மடியிலிருந்த சுமியிடமும் கதையில் அபிப்பிராயம் கேட்டு,அவள் மழலையையும் கேட்டு ரசித்துக் கொண்டிருந்தார்கள்.

‘அந்த அசிரியை பழுதாக்கப்பட்டு, உயிருடனும் இருந்தால்.. கட்டுவார்கள்?’என்ற யோசனை அவளுக்கு தோன்றிக் கொண்டே இருந்தது.

அடுத்த நாள் வகுப்பில், அவள் பெடியளிடம்”நீங்கள் காதலித்து தான் கட்டுவீர்களா?அல்லது எப்படி?”என்று ஒரு கேள்வியை தூக்கிப் போட்டாள்.

ஜீவியும் அவளுடன் சேர்ந்து” சிலருடைய மூஞ்சியைப் பார்த்தால் சீதனம் வாங்கி கட்டுறது போல தானடி இருக்கிறது?”என்றாள்.

“என்ன விளையாடுகிறீர்கள். கட்டுறது எங்க வாழ்க்கையிலே நடக்கப் போவதில்லை. நாம இயக்கம். சொந்த மச்சாள் கூட கழுத்தை நீட்ட மாட்டாள். தெரியுமோ?”என்று குகன் கேட்டான்.

சுந்தாவும்,தீபனும் அதே கருத்தையே சொன்னார்கள். “எங்களோட சேர்ர பெண்ணின் வாழ்க்கை நரகமாகி விடும். இயக்கத் தலைமையும் அனுமதிப்பதில்லை”என்றான் தீபன்.

“ஒருவேளை கட்டுவதாக .. இருந்தால்?”பிடிவாதமாக சரஸ்வதி கேட்டாள்.

“எதிர்காலமே சூனியமாக இருக்கிறது. நீங்கள் பகிடி விடுறீர்கள்”என்றார்கள் பெரும்பாலோர்.

“நிறைய பேர்கள் இயக்கம் என ஓடியிருக்கிறீர்கள். நிறையபேர் வெளிநாடும் போய்யிருக்கிறீர்கள். பெண்களை விட ஆண்களே அதிகமாக அள்ளுப்பட்டவர்கள். அரச அடக்குமுறையாலே பழுதாக்கிறதும் நடக்கிறது. கட்டுற போது நீங்கள் உங்கள் மச்சாள்மாரையே கட்டாயம் கட்ட வேண்டும்”என்று அவள் கோரிக்கை விட்டாள்.

தீபன்”நீங்கள் உயிரியல் பிரிவில் படித்தீர்கள்.ஒரே உறவில் பரம்பரையலகுச் சேர்க்கை நல்லதில்லையே?”என்று கேட்டான்.

“நம்நாடு சீரழிந்து கிடக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் அறிவியல் பேச முடியாது. நீங்கள் தான் அவர்களுக்கு ஒரு நண்பனாக கை கொடுக்க வேண்டும்”என்றாள்.

அவள் பேச்சில் உள்ள நியாயத்தை ஐவரும் புரிந்து கொள்ளவே செய்தார்கள்.

“சரி அப்படி சந்தர்ப்பம் வந்தால் உங்கள் பேச்சுப்படி நடக்கிறோம். சந்தோசமா?”என்று ஒப்புக் கொண்டார்கள்.

“நீங்கள் ‘சொன்னால் உங்க பேச்சை மீற மாட்டீர்கள்’என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது”என்றாள்.

இயக்கப் பெடியள் எதையும் எளிதில் ஒப்புக் கொள்வதில்லை. ஒப்புக் கொண்டால்.. அதை நிறைவேற்றியே தீருகிறவர்கள். ஆனால் அவர்களுக்குத் தான் தங்களுக்கு ஒரு வாழ்க்கை அமையும் என்ற நம்பிக்கை இருக்கவில்லை.

சித்ராவும் டைப்பிங் கோர்ஸில் சேர்ந்து ‘டெக்’கிற்கு படிக்க வந்தாள். சரஸ்வதி , ஒரு வெள்ளிக்கிழமை போல சித்ராவை, கபேற்றரியாவிற்கு கூட்டி வந்து “குகன் உனக்கு இவளை யார் என்று தெரியுதா?”என்று கேட்டாள்.

குகனுக்கு உண்மையில் தெரிந்திருக்கவில்லை.”தெரியாது”எனக் கூறினான். சித்ராவை மச்சாள் எனத் தெரியும்.சிறுவயதில் பார்த்த பிறகு நீளகாலம் பார்த்திருக்கவில்லை. அப்பரின் சொந்தங்களோடு அவ்வளவாக போய் வாரது இருக்கவில்லை. இப்ப பார்க்கிற போது அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை.

“இவள் சித்ரா!உன்ர மச்சாள்”என்றாள். ஆச்சரியமாக இருந்தது. அவனுடைய ஒரு தங்கச்சியைப் போல குண்டாக இருந்தவள்,மெலிந்து சோர்வடைந்த முகத்துடன் இருந்தாள்.

“ஒ!ஹலோ.எப்படி இருக்கிறீர்கள்?”என்றான்.

சித்ரா “எனக்கு உங்களைத் தெரியும்”என்றாள். ஆம்பிள்ளைகளில் அவ்வளவாக மாற்றம் ஏற்படுவதில்லை தான். சிற்சில நேரங்களில் சரஸ்வதியோடு சித்ரா கபேற்றரியாவில் அவர்களோடு கதைக்கிற போது இருப்பாள். அப்ப லேசான புன்னகை தவிர, குகன் அவளோடு கதைத்ததில்லை.

“என்ன மச்சான்,மச்சாளோ..கதைக்கிறதில்லையா?”என்று சரஸ்வதி வகுப்பில் அவனிடம் கேட்டாள்.

“என்னத்தைக் கதைக்கிறது? நான் இயக்கம். இயக்கத்திலே இதற்கு அனுமதி இல்லை. உங்களுக்கு தெரியாதா?”என்று கேட்டான். அவன் சொல்லுறதும் உண்மை தான். சித்ராவின் அப்பா, அம்மா கூட இவர்களை கட்டி வைக்க விரும்ப மாட்டார்கள் என்ற யதார்த்தம் இருந்தது. ‘இயக்கப் பெடியள்’ தீண்ட தகாதவர்களாகவே எல்லாராலுமே பார்க்கப் பட்டார்கள். அதனாலே அங்கே பெண்களுக்கு மாப்பிள்ளைப் பஞ்சம் கூட‌எழுந்திருந்தது. வாஞ்சையுடன் கதைத்தவர்களும் விலத்தி வைத்தே பார்த்தார்கள். கோவிலுக்கு நேர்ந்து விட்ட ஆடுகள் போல போராளிகள் மக்களுக்காக சாகிறவர்கள்.

குடும்ப வாழ்க்கைக்கு வரவேண்டுமானால் முழுமையாக இயக்கத்திலிருந்து விலகி வர வேண்டும். ஆனால்,விடுதலை என்பது சேருவதும், விலகுவதுமாக இருக்கிற வேலை வாய்ப்பா? அரசு ஒரு புறம் மனித வேட்டையல்லவா ஆடுகிறது. காட்டில் உறைந்து வாழ்ற மிருகம் போல சதா விளையாட்டு நடக்கிறது. புலி, சிங்கம் போல பாய்ந்து அறைய வேண்டும். அதற்காக பெடியள் உடலையும், மனதையும் வலுவாக்க வேண்டியிருந்தனர்.

இயக்கத் தலைமைகளோ துரதிஸ்டமாக ‘நியூற்றோன் கதிரியக்கம்’ போல சதா பிளவு படுற கேசாக இருந்தன .தோழர்கள்,அதனால் முழுமையான போராளிகளாக மாற முடியாமலும் துன்பப்பட்டார்கள். இயக்கத்தை விட்டு ஓடுவது கோழைத்தனம். எதிரியோ எம் நிலத்தையும் பிடுங்கியும், எம்மக்களை கொலை செய்தபடி … மாறாமல் அப்படியே மூர்க்கமாக கிடக்கிறான். நாம் போராட விட்டால் அவர்கள் வேலை சுலபமாகி விடும். ஒரு தடையை போடுவதற்காவ‌து,உலகத்தின் மனச்சாட்சியை குறைந்த பட்சம் தட்டிஎழுப்புவதற்காவது போராடித் தான் ஆக வேண்டும். அவர்களைக் குறித்து பயப்படவில்லை என்பதற்காவது மார் தட்ட வேண்டாமா?

விடுதலைக்காக போராடுற சுமை அவர்கள் விரும்பினால் என்ன? விரும்பாட்டி என்ன பொறிந்தே கிடந்தது. குகன்,சனி ஞாயிறு தினங்களில் வலக்கம்பறைப் பக்கம் போவான். படிக்கிறவர்களை இயக்கம் குழப்பவில்லை. படிக்கும்படியே கூறியது. இயக்கப் பொறுப்பாளர் கமலன் குகனுக்கு நண்பனாகி இருந்தான்.விடுதலை விசயங்களை கொஞ்சமாவது அவன் மூலமாக அறிந்து வருகிறான். ‘போராளி என்றெல்லாம் புலம்புகிறானே’அவன் மூலமாக ஏற்பட்டது தான். அவனுடைய குருஜி அவர்.

எவரும் வகுப்பிற்கு வாராமல் நிற்பவர்கள் இல்லை.திங்கள் கிழமை, சரஸ்வதி வரவில்லை. முற்கூட்டியே ஜீவியிடம் விபரத்தை கூறி விடுவாள்.சுந்தா”ஜீவி உங்கட சினேகிதி வரவில்லை, என்னம் பிரச்சனையா?”என்று கேட்டான்.அவளுக்கும் தெரிந்திருக்கவில்லை.

சரஸ்வதி,அடுத்த நாள் துயர முகத்துடனே வந்தாள். குகனிடம்”உனக்கு கோபுட விசயம் தெரியுமா?”எனக் கேட்டாள். அவனுக்கு பள்ளியில் படிக்கிற போதே கூடப் படித்த பெண் ஒருத்தி மேலே மையல் இருந்தது. அவனுடைய அம்மாவிற்கு தன் தம்பியின் மகளை‍ கட்டி வைக்க வேண்டும் என்று ஆசை. கோபுவுக்கு அப்பா இல்லை. மாமாட கணிசமான உதவிகளிலே தங்கியிருந்தார்கள். சிக்கலான காதல் கதை. பெடியள் அனைவருக்கும் தெரியும். கோபு ..திரிந்தாலும் ஆதரவாளன் என்ற பிரிவிலே இருந்தவன்.

‘கல்யாணம் கட்டி விட்டான் போல இருக்கிறது என நினைத்தான்.

“அவனை கல்யாணம் கட்டச் சொல்லி வற்புறுத்தினார்கள். தற்கொலை செய்து விட்டான். நேற்று சவம் எடுத்தவர்கள்”என்றாள் உடைந்த குரலில்.

குகனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.கோபி அப்படி முடிவெடுப்பவனில்லையே. குழப்பமாகவும் இருந்தது.வகுப்பு முடிய வலக்கம்பறைக்கு பறந்தான்.

“இவன் விசரன்!இயக்கத்திற்கே வெட்கத்தை ஏற்படுத்தி விட்டான். பொறுமையாக இருந்திருந்தால்.. அவன் ஆசையை நிறைவேற்றி வைத்திருப்போமே”என்று கமலன் கரைந்தான். கோபு செத்தது எல்லாப் பெடியளையும் பாதித்திருந்தது. பெருமளவு பெடியள்களே சேர்ந்து சவத்தை எடுத்திருந்தார்கள். கோபு மனிதாபிமானன் கூட.ஒரு தடவை,வீதியில் தாய்யுடன் போய்க் கொண்டிருந்த சிறுமியை , குடிவெறியில் சைக்கிளில் வந்த ஒருத்தன் மோதி விழுத்தி விட்டான். சிறுமியின் முகத்தில் காயப்பட்டு ரத்தம் வடிய அழுது கொண்டிருந்தது. வலக்கம்பறைக் கூட்டம் வீதிக்கு விரைந்தது.கோபு, சாந்தனை பின்னால் சிறுமியை தூக்கி மடியில் வைத்துக் கொள்ளச் சொல்லி தனது மோட்டார் சைக்கிளில் வைத்தியரிடம் பறந்தான்.

பெடியள் தாய்யை”பயப்படாதீர்கள் அக்கா”என கூட்டிச் சென்றார்கள்.அங்கே உடனடியாக இழை பிடித்திருந்தார்கள்.

“சிறுமியை பிடித்துக் கொண்டு பின்னால் இருப்பீங்களா?”என தாய்யிடம் கேட்டு,ஏற்றிக் கொண்டு வீட்ட விட்டு விட்டு வந்தவன். நல்லவன்.ஏன்?இப்படி தீடீர் முடிவெடுத்தான்.புரியவில்லை.

யார் யாழ்ப்பாணியனாய் மாறுவான் என்பது தெரியாதது போல, யார் தற்கொலைக்கு போய் விடுவான் என்பதும் தெரியாமலே இருக்கிறது. அங்கே, படித்த பெடியளில் சிலர் குடும்பமான பிறகும், வேலைக்காக வேற்றிடங்களுக்குச் செல்கிற போது பொய் சொல்லி பொம்பிள்ளைத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்கிறவர்கள் ‘யாழ்ப்பாணிகள்’என அழைத்தார்கள்.. சிலருக்கு வளர்ந்த பிள்ளைகள் இருந்த போதும் கூட அப்படி இருந்தார்கள். அது ஒரு அவப்பெயர்.

அவர்களில் கமல் ஒரு இலக்கியவாதி. அவனால்,வகுப்பில் ‘பாலைவனம்’என்ற கையெழுத்துப் பத்திரிகையை அந்த நட்பு வட்டம் தயாரித்தது.

கமலும்,சுந்தாவும் ஒவ்வொரு நாளும் வல்வைவெளியில் நீள பயணித்து வருபவர்கள். அவர்கள் அந்த வெளியில் தமிழிழ பார்ளிமெண்டைக் கட்டலாம் என தீர்மானித்தார்கள். அந்த அமைச்சில் உள்ளவர்கள் என கூடபயணித்த டெக் பெடியள், பெட்டைகளை நியமித்து கலாய்த்துக் கொண்டு வருவார்கள். போற போதும் இந்த கூத்து நடக்கும். அவர்கள் வராட்டி கூட பெடியள் இந்த கூத்தை நடத்துவார்கள்.சுந்தா,அதைப் பற்றி பகிடியுடன் ஒரு கட்டுரை எழுதியிருந்தான்.

சிறிலங்காவரசின் கோழைத்தனத்தை ‘இனப்பிரச்சனை’என்ற கட்டுரையில் சரஸ்வதியும், ஜீவியும் கிழிகிழியென கிழித்திருந்தார்கள்.

அவர்களுடைய வகுப்பும் முடிவுக்கு வந்தது. தேர்வில் இரண்டு, மூன்று பாடங்கள் ரிவேர்ட்டாகவே தேறினார்கள். தவமும்,சூரியுமே முமுமையாக தேறினவர்கள். ‘இரண்டு, மூன்றூ பாடம் தானே. அடுத்த முறை தேறலாம்’என நம்பிக்கை இருந்தது. நகரசபையில் ‘லைசென்ஸ்’ எடுக்க பத்து பாடங்களும் முழுமையாக தேறியிருக்க வேண்டும்.

ஆனால், அடுத்த வருசம் பரீட்சையே நடக்கவில்லை.யாழ்ப்பாணம் ‘செல்’லடியால் அதிர்ந்தது. பிறகு மெல்ல திறந்தார்கள். அவர்களுடைய பரீட்சைக் காலத்தில் நிகழ்ந்ததை விதி என்பதா?

பிறகு பலர்வெளிநாடு என கழற,சிலரே எழுத விண்ணப்பித்தார்கள். சிலர் விண்ணப்பிக்கவே இல்லை. அதில் சரஸ்வதியும் ஒருத்தி. குகனின் கையெழுத்தே சரியில்லை. தவிர அவனுடைய குறிப்புக் கொப்பிகளை வாங்கிய நண்பன்,திருப்பிக் கொடாமலே இந்தியாவிற்கும் போய் விட்டான். படிக்கிறதுக்கு தான். அவன் சரஸ்வதியிடமே இரவலாக அந்த குறிப்புக் கொப்பிகளை பெற்றுப் படித்தான். குகன் பெரிய அதிருஸ்டசாலி ஒன்றும் கிடையாது. அப்பப்ப சிறு வெற்றிகளைக் காண்பவன். அவன் அந்த இரண்டு பாடங்களிலும் தேறி விட்டிருந்தான். முதல் வேலை, நகரசபைக்குச் சென்று லைசென்ஸுக்கு சென்று விண்ணப்பித்தது தான்.ஒரு நேர்காணலை வைத்து, புத்திமதிகள் சொல்லி’லைசென்ஸைக் கொடுத்தார்கள். போர்ச் சூழலில் மனிசன் வீடு கட்டுறதாவது?பிரயோசனப் படப் போவதில்லை தான்.திரும்ப கொப்பிகளை கொடுக்கச் சென்ற போது சரஸ்வதி அவனை வெகுவாகப் பாராட்டினாள்.

முதல் தடவை தேறினவர்களில் சூரிக்கு ஆசிரியர் வேலை கிடைத்து விட்டிருந்தது. தவம்,உடனேயே வெளிய போய்யிருந்தான். கர்மம் செய்தது போல யாருமே அந்த கல்விக்குரிய வேலையை எடுக்கவில்லை. குகனும் புலம் பெயர்தலுக்குள்ளாகினான். சரஸ்வதியின் கோரிக்கையை யார்,யார்? எல்லாம் நிறைவேற்றினார்கள்? அதை, விதியிடம் எழுத விட்டு விடுவோமே!

– ஜனவரி 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *