கதை வகை: மொழிபெயர்ப்பு
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 10,559 
 

1930-ம் ஆண்டு மேற்கு ஓகலாஹோமா மற்றும் டெக்சாஸ் பகுதிகளில் மிகப்பெரிய பஞ்சம் ஏற்பட்டது. மழை இல்லாததால் தாவரங்கள் அனைத்தும் மடிந்து போயின. தாவரங்களில் வேர்ப்பிடிப்பு இல்லாததால், காற்று வீசும்போது பூமியின் மேற்பரப்பு மண் அரிக்கப்பட்டு புழுதிப் புயலாக வீசும்.

புழுதிப் புயலால் விவசாயமும், மனித வாழ்க்கையும் மிகப்பெரிய கேள்விக்குறியானது. புழுதிப்புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் “புழுதிக் கிண்ணம்’ என அழைக்கப்பட்டன. விவசாயிகள் உயிர் வாழ்வதற்காக மிகப்பெரிய அளவில் கலிபோர்னியாவை நோக்கி இடம் பெயர்ந்தனர். இதனால் கலிபோர்னியாவிலும் உணவு மற்றும் வேலைப்பஞ்சம் ஏற்பட்டது. இத்தகைய இடப்பெயர்ந்தவர்கள் “ஓகீகள்’ (ஞஓஐஉந) என அழைக்கப்பட்டனர்.

நடுப்பகல் விளக்குஇந்த புழுதிக்கிண்ணப் பகுதியில் வாழ்ந்த பால் என்ற விவசாயியின் கதை இது:

நடுப்பகலுக்கு சற்று முன்பாக அவள் விளக்கை ஏற்றினாள். வேகமாக வீசுகின்ற புழுதிக் காற்றானது வீட்டின் கூரையின் விளிம்பில் மோதி ஓலமிட்டுச் சென்றது. புழுதியானது வெளிச்சம் ஊடுருவ முடியாத மூடுபனியினைப் போல் அடர்த்தியாகக் காணப்பட்டது.

விளக்கை ஏற்றிய அவள், அசைவற்று, அந்த ஜன்னலின் ஓரத்தில் நீண்ட நேரமாக நின்றிருந்தாள். ஜன்னலுக்கு வெளியே லாயமும், பத்தாயமும் மிகவும் மங்கலாகத் தெரிந்தன. அதற்கு அப்பால் புழுதி மேகங்களால் சூழப்பட்ட நிலப்பரப்பு ஒரு கோடாகக் காட்சி அளித்தது. ஒவ்வொரு முறையும் காற்று வேகமாக வீசும்போது தரையில் படர்ந்திருக்கும் புழுதி சுழலாகச் சுழன்று வான்வெளியை நிரப்பியது.

ஜன்னலிலிருந்து நகர்ந்து கதவருகே சென்று, லேசாகக் கதவைத் திறந்து லாயத்தைக் கூர்ந்து கவனித்தாள். இன்னும் அவன் வரவில்லை. திடீரென்று லேசாக மேகம் விலகியது. ஆரஞ்சு நிற சூரிய ஒளியானது, விளக்கொளியைப்போல் புழுதியை ஊடுருவியது.

அவள் கதவை மூடிவிட்டு ஸ்டவ்வின் மீதிருந்த வாணலியிலிருந்த உருளைக்கிழங்கினை முள் கரண்டியால் சிறிது புரட்டிப் பார்த்தாள்.

மீண்டும் மெதுவாக எழுந்து சென்று ஜன்னலின் மீது தலையைச் சாய்த்துக்கொண்டு வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள்.குழந்தை அழ ஆரம்பித்தது. அது படுத்திருக்கும் தூளியைச் சுற்றிலும் புழுதி உள்ளே புகுந்துவிடாதபடி மஸ்லின் துணியினால் பாதுகாப்பாக மூடி வைத்திருந்தாள். மஸ்லின் துணி விலகிவிடாமல் துணியின் அருகில் முழந்தாளிட்டு மெல்லிய குரலில் அதைச் சமாதானப்படுத்தி உறங்க வைத்தாள்.

குழந்தையை கையிலெடுத்து தாலாட்டி உறங்க வைக்க விரும்பினாள். அறை முழுவதும் நிரம்பியிருக்கும் புழுதியினால் குழந்தை நிமோனியாவில் தாக்கப்பட்டுவிடுமோ? என்று அஞ்சினாள்.

எங்கும் புழுதி பரவிக்கொண்டே இருந்தது.அவளுடைய தொண்டை வறண்டு போய்விட்டது. சற்று முன்பாக துடைத்து வைக்கப்பட்ட காலொடிந்த முட்டுவைக்கப்பட்ட மேஜை மற்றும் பாத்திரங்கள் மீதும் புழுதி படிந்து காணப்பட்டது. குழந்தையின் சிணுங்கல் தொடர்ந்தது. காய்ந்துபோன உதடுகளை மெதுவாக அசைத்து மெல்லிய குரலில்,””உறங்கு கண்ணே. அப்பா விரைவில் வந்துவிடுவார். உறங்கு” என்று கூறினாள்.

நீண்ட நேரம் ஆனதைப் போல் தோன்றியது. ஆனால் கடிகாரமோ நண்பகல் கடந்து சில நிமிடங்களையே காட்டியது. அவள் கதவருகே சென்றாள். பின் மெதுவாக கூடத்தின் நடுவே வந்து நின்று கொண்டாள். அவள் உடலெல்லாம் வெளுத்துப்போய் சிரமப்பட்டு மூச்சு விட்டுக்கொண்டிருந்தாள். லாயத்தில் நின்று அவன் வருகிறானா? என்று பார்க்க நினைத்தாள்.

அதை பெண்களின் பலஹீனமாகக் கருதி அவன் அலட்சியப்படுத்துவானோ என எண்ணி அதைத் தவிர்த்தாள். அறையின் நடுவிலேயே அமைதியாக நின்றுகொண்டு அவனுக்காகக் காத்திருந்தாள். எப்பொழுதும் நண்பகலில் வந்து மதிய உணவுக்குப் பின் அவளுடன் சிறிது நேரம் இருப்பான்.

நேற்றும் இன்றும் காலை உணவின் போதும் இருவரும் மோசமாக சண்டையிட்டுக் கொண்டார்கள். இப்பொழுது அவன் அவளருகில் இருக்க வேண்டுமென விரும்பினாள். ஆனால் அவள் கூறிய வார்த்தைகளை மனதில் தேக்கி வைத்துக்கொண்டு நின்று கொண்டிருப்பான். வேகமாக வீசிக்கொண்டிருக்கும் புழுதியே அவளை இவ்வாறு பேச வைத்தது என அவன் உணரமாட்டான்.

பால் வந்துவிட்டான். அவன் காலடி ஓசையைக் கேட்ட உடனேயே அவள் ஸ்டவ் இருக்குமிடத்துக்கு விரைந்தாள். “”மிகவும் மோசமான காற்று, கருவிகள் இருக்கும் அறையிலும் விளக்கை ஏற்றுகிறேன்” என்று சொல்லிக்கொண்டே தொப்பியையும் மேல் அங்கியையும் கழட்டி தொங்கவிட்டான்.

இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டவுடன் கண்களை வேறு திசையில் திருப்பிக் கொண்டனர். அவனருகே சென்று, அவனுடைய கரங்களைப் பற்றி மனம் திறந்து அழுது அவனுடைய தேற்றுதலைப் பெற வேண்டும் என விரும்பினாள். அவன் அருகில் இருப்பதாலேயே காற்றின் வேகம் குறைந்துவிட்டதைப் போல் உணர்ந்தாள். ஆனாலும் “நான் சரியாக இருக்கிறேன். நான் ஏன் அவனிடம் செல்ல வேண்டும்? எதற்காக விட்டுக் கொடுக்க வேண்டும்?’ என்று எண்ணி வாளாவிருந்தாள்.

அவன் கை,கால், முகம் கழுவிக்கொண்டு வந்தான். இருப்பினும் அங்குமிங்கும் அவன் உடலில் புழுதித் திட்டு படர்ந்திருந்தது. தட்டைக் கழுவிக்கொண்டு வந்து உணவைப் பறிமாறி அவன் முன் வைத்தாள். காற்றிலும் புழுதியிலும் சென்று வந்த பாலின் முகத்திலும், உடலிலும் வயோதிகம் பரவிக் காணப்பட்டது.

“”எல்லாவற்றிலும் புழுதி. நான் சுத்தப்படுத்தும் வேகத்தைவிட அது பரவும் வேகம் அதிகமாக உள்ளது” என்றாள்.

அவன் தலையசைத்தான். “”இன்று மூன்றாம் நாள். இன்றிரவு அதன் வேகம் வெகுவாகக் குறைந்துவிடும்” என்றான்.

அமைதியாக ஒரு நிமிடம் அவனைப் பார்த்தாள். பின்னர் அவளாகவே, “”அடுத்த தடவை வரை மீண்டும் அடுத்த முறை ஆரம்பிக்கும் வரை” என்று முணுமுணுத்தாள்.

அவள் குரலில் ஆழ்ந்த வருத்தம் தெரிந்தது. அது அடுத்த சண்டைக்கு ஆயத்தமாவதைப்போல் இருந்தது. முட்கரண்டியினால் உருளைக்கிழங்கைத் துண்டாக்கிக் கொண்டே அடுத்த சண்டை எப்பொழுது தொடங்கப் போகிறது என்று பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனுடைய உழைப்பையும், நம்பிக்கையையும் புழுதியும், பஞ்சமும் வீணடித்துக் கொண்டிருந்தன. அதே சமயம் அவனுடைய போராட்டத்தன்மையில் உறுதியையும், வலிமையையும் கொடுத்தது. வறுமையும், மித மிஞ்சிய கடனும் அவளிடம் ஒரு வித வெறுப்பையும், நடுக்கத்தையும் தோற்றுவித்திருந்தது. அவளுடைய கண்கள் குழிவிழுந்து உதடுகள் நிறமிழந்து காணப்பட்டன. வயது அதிகரிக்காமலேயே ஒருவித முதிர்ந்த தோற்றம் அவளுக்கு ஏற்பட்டிருந்தது.

“”பால், நான் மிகவும் அஞ்சுகிறேன்” என்று திடீரென்று கூறினாள். “”இனியும் என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. குழந்தை அழுதுகொண்டே இருக்கிறது. நீயும் போய்விடுகிறாய். எங்களால் இனியும் இங்கே வசிக்க முடியாது”

அவளுடைய குரலில் நேற்றிருந்த கசப்பில்லை. கெஞ்சுகின்ற அவளின் அந்தக் குரல்கூட, அவனை அவளின் வழிக்கு கொண்டு வருகிற வழியோ? என்று எண்ணினான். உணர்வுகளற்ற சமமான குரலிலேயே பேசினான்.

“”எல்லன்! இன்று காலை கூறியதையே மீண்டும் கூறுகிறேன். நாம் தொடர்ந்து இங்கேதான் இருக்க வேண்டும். நான் இங்குதான் இருப்பேன். உன்னைப்பற்றி நீ சிந்தித்துக் கொள். குழந்தையைப் பற்றி நீ கவலைப்படாதே”

இதுபோல் இன்று காலை அவன் பேசியது அவளுக்கு தேள் கொட்டியதுபோல் இருந்தது. கோபத்தைத் தூண்டியது. இப்பொழுது அவள் குரலில் சற்று வேகம் கூடியது. மூச்சிரைக்க சற்று அழுத்தமாகப் பேசினாள். “”பால், நம் இருவருக்கும் சேர்த்துதான் நான் யோசிக்கிறேன். என்ன நடக்கிறதென்று வானத்தைப் பார்.

உனக்கென்ன குருடா? எங்கும் திசில் செடிகளும், களைகளும் முளைத்துக் கிடக்கின்றன. இது ஒரு பாலைவனம். இந்த வசந்த காலத்தில் ஒரு வைக்கோல் கூட கிடைக்காது. உன்னால் ஒரு மாட்டுக்கு ஏன்? ஒரு கோழிக்குஞ்சுக்குக் கூட தீவனம் உற்பத்தி செய்ய முடியாது. பால், தயவுசெய்து நான் சொல்வதைக் கேள். நாம் எங்காவது போய்விடலாம்”

“”எங்கே போவது?” அவன் பதில் கூறும்போது அவனுடைய குரல் ஒரே சமமாக இருந்தது. கண்களைக் குறுக்கிக் கொண்டு அவன் கூறினான். “”உன் அப்பாவின் கடையைக் கூட்டி சுத்தப்படுத்தி, அவருக்கு எடுபிடி வேலை செய்வதைவிட பாலைவனமானாலும் இதுவே சிறந்தது. இதுதான் என் முடிவு. உனக்கு என்ன தோன்றுகிறதோ செய்துகொள்”

“”இங்கே என்ன இருக்கிறது? அவருடைய கடையைக் கூட்டினால் நமக்குத் தேவையான உணவும், உடுப்பும் கிடைக்குமே! இங்கே பாலைவனமாகிவிட்டது. பட்டப்பகலில் விளக்கை ஏற்றிவைக்கிறோம். காரணம் இருட்டு”

“”மீண்டும் நல்ல நிலைமை வரும். விரைவிலேயே கோதுமையின் நல்ல விளைச்சலை நீ காண்பாய்”

“”ஒவ்வொரு வருஷமும் இதைத்தான் நீ சொல்கிறாய் பால். மீண்டும் அந்த நிலை திரும்ப வரவே வராது என்பது ஏன் உனக்குப் புரியவில்லை”

“”என்னால் போக முடியாது, எல்லன். உன்னுடைய மக்களிடம் போய் பிச்சை எடுக்க வைக்காதே. அந்த சிந்தனை வேண்டாம். நான் இங்குதான் இருக்கப் போகிறேன்”

“”பிச்சை…ம்” அலட்சியத்தில் அவன் குரல் உயர்ந்தது.

“”எல்லா இடத்திலும் வாங்கிய கடனுக்கு உன்னால் வட்டி கட்ட முடியவில்லை. அரசிடமிருந்து பெற்ற விதைக்கடன், பலசரக்குக் கடன்,

மருந்துக்கடன்…இது…இதைத்தான் சுதந்திரம் என்கிறாய்”

“”இந்த ஆண்டு நமக்கு விளைச்சல் கிடைக்கும்” உறுதியாய்க் கூறினான். “”நல்ல விளைச்சல். நிலம் மீண்டும் உயிர் பெற்றுவிடும். நம்முடைய காத்திருப்புக்கு நல்ல பலன் கிடைக்கும்”

“”பால், இங்கே நாம் காத்துக்கொண்டிருக்கும்பொழுது…” அவள் குரலில் கோபம் இல்லை. தேம்புதல் இருந்தது. “”என்னை நினைத்துப் பார். குழந்தையை நினைத்துப் பார். நீ செய்வது கொஞ்சம்கூட சரியில்லை. நமக்கு உயிர் இருக்கிறது. நாம் வாழ்ந்தாக வேண்டும்”

“”நீ உன்னுடைய குடும்பத்துடன் போக வேண்டுமென்று நினைக்கிறாய். அப்படித்தானே!”

“”இதைவிடச் சிறந்த எதையுமே நான் தேர்ந்தெடுக்க விரும்புகிறேன். குழந்தை முனகிக்கொண்டே இருக்கிறது உனக்குப் புரியவில்லையா. இந்த முனகல் அழுவதற்குக்கூட தெம்பில்லாத நிலை. மூச்சு வாங்குவதைப் பார். விலாப்புறம் தூக்கிப் போடுகிறது பால்”

அவள் அமைதியாகக் கூறினாள்: “”பால்! உனக்கு முப்பது வயதுதான் ஆகிறது. இங்கேயே இருந்து உன் வாழ்க்கையை ஏன் வீணடித்துக்கொள்கிறாய்?”

அவன் பதில் ஏதும் கூறாமல் விளக்கையே பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான். அது அவளை அலட்சியப்படுத்துவதைப் போல் இருந்தது.

அவள் கோபத்துடன் கத்தினாள் “”நீ எப்போதாவது என் வாழ்க்கையை யோசித்துப் பார்த்திருக்கிறாயா? ஒரே ஒரு அறைகொண்ட வீடு. மாதத்திற்கு ஒருமுறை நகரத்துப் பயணம். அப்போதும் ஏதும் வாங்குதற்குப் பணம் கிடையாது. பால், நான் இன்னும் இளமையுடன் இருக்கிறேன். நான் இதுபோல் வளர்க்கப்படவில்லை”

“”நீ ஒரு விவசாயியின் மனைவி என்பதை மறந்துவிடாதே. நீ எப்படி இருந்தாய் என்றோ, எப்படி வளர்க்கப்பட்டாய் என்றோ எனக்குத் தெரியாது. இங்கே உனக்குத் தேவையான உணவும், உடையும் இருக்கிறது. என்னால் இதைத்தான் செய்ய முடியும். கடந்த ஐந்து ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள இயற்கையின் இந்த மாற்றத்துக்கு நான் பொறுப்பில்லை”

“”தேவையான உணவு…” விரக்தியில் சிரித்துக்கொண்டே கூறினாள். “”பன்றிக் கறியும், உப்புக்கண்டமும், உருளைக்கிழங்கும் முட்டையும்-இங்கே பார்” துள்ளிக் குதித்து அறையின் மையப்பகுதிக்கு வந்தாள்.

ஒரு காலை நீட்டி, காலில் அணிந்திருந்த கிழிந்துபோன ரப்பர் செருப்பைக்காட்டினாள். “”இனிமேல் வெறுங்காலில்தான் செல்ல வேண்டும். நான் விவசாயியின் மனைவி. இது உன்னுடைய குற்றமல்ல. நாம் காய்ந்து போய்விட்டோம்”

“”இங்கே எப்படி இருக்கிறது பார்” நாற்காலியைத் தள்ளிவிட்டு எழுந்து அவனும் தன்னுடைய காலைக் காட்டினான்.

அவளுடைய கஷ்டத்துடன் தன்னுடைய கஷ்டத்தையும் இணைத்துப் பேசிய அவன் செயல் அவனுக்கு வெட்கத்தை ஏற்படுத்தியது. அவன் கைகள் கழற்றி வைத்த மேலங்கியை எடுக்க நீண்டது.

“”பால், என்னைவிட்டு வெளியே சென்றுவிடாதே. நீ சென்று விட்டால் தனிமையால் அதையே நினைத்து நினைத்து வருந்துகிறேன். தயவுசெய்து என்னைத் தனியே விட்டுப் போய்விடாதே”

“”வாசலைக் கடந்து உள்ளே வந்தவுடன் ஒவ்வொரு நாளும் நீ இதையேதான் பேசுகிறாய்”

“”பால், தயவுசெய்து என்னை விட்டுப் போகாதே” அவள் கண்களில் கண்ணீர் நிரம்பியது. “”இனிமேல் நான் உன்னுடன் சண்டையிட மாட்டேன். தயவுசெய்து கேள் போகாதே” அவள் பிடியிலிருந்து மேலங்கியை விடுவித்துக்கொண்டு வாசலை நோக்கிச் சென்றான்.

“”நான் இங்கிருந்தால் சண்டைதான் வரும். நாளை வரை பொறுத்திரு. காற்று வீசுவது நின்றவுடன் நாம் மீண்டும் பேசுவோம்”.

அவளுடைய கண்களைப் பார்க்காமலேயே வாசலைக் கடந்து லாயத்துக்குள் நுழைந்தான். எங்கும் நிசப்தம் நிலவியது. அந்தப் பகலை இருள் சூழ்ந்து கொண்டிருந்தது. லாயத்திலிருந்து “பெஸ்’ என்ற குதிரைக்குட்டி அதனுடைய மூக்கை அவனுடைய கைக்கும், உடலுக்கும் இடையே திணித்துக்கொண்டு நின்றது. அப்படியே இருவரும் நீண்டநேரம் அசைவற்று நின்று கொண்டிருந்தார்கள். மீண்டும் அவன் அந்த கறுப்பு புழுதிப்புயல் வீசுவதைப் பார்த்தான். தனது நிலம் முழுவதும் புழுதிப்புயலில் மூடப்பட்டிருக்கும் என எண்ணினான்.

வெளியே புழுதிப் புயல் வீசும் ஓசை கேட்டாலும் லாயத்தில் நிசப்தமே நிலவியது. குதிரை அசைகின்ற ஒலியோ அல்லது அதன் குளம்பு தரையில்படும் ஒலியோ கூடக் கேட்கவில்லை. பெஸ்ஸிடமிருந்து பழுப்பு நிற பிரின்சிடம் சென்றான். பிரின்சுக்கு சுமார் 20 வயது இருக்கும். அதன் விலா எலும்புகள் வெளியே துருத்திக் கொண்டிருந்தன.

பால் துருத்திக்கொண்டிருந்த விலா எலும்புகளை தடவிப் பார்த்தான். அவனுக்கு வருத்தமாக இருந்தது. ஒருவேளை எல்லன் சொல்வது சரியாக இருக்குமோ? என எண்ணினான். ஒன்பது ஆண்டுகளாக சொந்தமாக நிலம் வைத்து விவசாயம் செய்பவனால் அவன் குதிரைகளுக்குக்கூட உணவிட முடியவில்லையே? பின் எவ்வாறு மனைவிக்கும், மகனுக்கும் உணவிடுவது?

எதிர்காலம் பற்றி அவன் அதிகமாகத் திட்டமிட்டிருந்தான். அவனுடைய திட்டங்கள் அனைத்தும் உயிரோடு இருப்பவையாக, நிச்சயமானதாக, உறுதியானதாக இருந்தது. ஒரு புதிய வீடு, பையனுக்கு நிலம், மேலும் அதிகமான நிலம், அல்லது கல்வி. அவன் எதை விரும்புகிறானோ அது. ஆனால் இப்போது அந்தத் திட்டங்கள் பற்றி அவனுக்கு பயம் வந்தது.

அவன் எதிர்காலத்தைப் பற்றி நினைக்கவில்லை.

அவளுக்கு அந்த நம்பிக்கையோ, கனவோ இல்லை. புழுதியையும், வறுமையையும் குறைப்பதே நிஜம் என எண்ணுகிறாள். திடீரென்று அவன் அனைத்தையும் புரிந்துகொண்டான். சில நிமிடங்களுக்கு முன் “வெளியே போக வேண்டாம்’ என கெஞ்சிய அவள் முகத்தை நினைத்துப் பார்த்தான். அவனைச் சுற்றிலும் இருள். பிரின்சிடமிருந்து ஒவ்வொன்றாக மற்ற குதிரைகளிடத்தும் சென்றான். அவைகளின் பிடரியில் கை விரல்களை விட்டு நீவினான். ஆனால் எங்கும் வெறித்த கண்களுடன் பார்க்கும் அவள் முகமே அவனுக்குத் தெரிந்தது.

வெளியே ஓலமிட்டுக் கொண்டிருக்கும் காற்று வறண்ட உதடுகளிலிருந்து வெளிவரும் அவள் குரலைப் போலவே இருந்தது. நிச்சயமாக இருக்காது. அவள் உள்ளே பத்திரமாக இருக்கிறாள். இருந்தாலும் காற்றின் ஓலம் அவள் வருவதைப் போலவே கேட்டது.

காற்று கொட்டகைக்கு மேல் வேகமாக வீசுவதை உணர்ந்தான்.

எல்லனுடன் பேசியவற்றை ஒவ்வொன்றாக நினைவுகூர்ந்து அவற்றை ஒவ்வொன்றாக தன் மனதில் தோன்றிய எண்ணங்களினால் வீழ்த்தினான். அடுத்த ஆண்டோ அல்லது அதற்கு அடுத்த ஆண்டோ நிச்சயம் மழை பெய்யும். உயிரற்ற மண்ணில் கோதுமை விதைத்து நாம் தான் தவறு பண்ணிவிட்டோம். அதற்கு பதிலாக குளோவர், அல்பாஸ்ஃபா ஆகியவற்றைப் பயிரிட்டு, கால்நடைகளை வளர்த்து, ஏக்கர் ஏக்கராக மீட்டு வளம்மிக்கதாக மாற்ற வேண்டும். இரக்கமற்ற பூமியையும், ஆகாயத்தையும் கடுமையாக்குகின்ற காற்று, நமக்கு எஜமானனாக முடியாது.

இன்றிரவு எல்லனுடன் பேசிவிட வேண்டும். பொறுமையாக. காற்றுநின்ற உடன் அமைதி திரும்பிவிடும். அவள்தான் “கோதுமை பயிரிட வேண்டாம். நார்த்தன்மையுடைய பயிர்களைப் பயிரிடுவோம்’ என்று சொன்னாள். இப்பொழுது அவள் மகிழ்ச்சி அடைவாள். வரும்காலங்களில் நிலம் வளமாவதைக் கண்டு நிச்சயம் பெருமை கொள்வாள். அவன் அவளுக்காகவும் குழந்தைக்காகவும் உழைப்பவன் என்பதைப் புரிந்துகொள்வாள்.

காற்றின் வேகம் வெகுவாகக் குறைந்துவிட்டது. நான்கு மணிக்கு லேசாக வீசிக்கொண்டிருந்தது. ஐந்து மணிக்கு கண்களை வருத்தி அகலத் திறந்து கொட்டகையின் வாயில் வழியாகப் பார்த்தால், அரை மைல் தொலைவில் உள்ள அண்டை வீட்டார் வீடு லேசாகத் தெரிந்தது. மூன்று நாட்கள் பட்ட துன்பமும் பேரழிவும் முடிவுக்கு வர ஆரம்பித்துவிட்டது. அவன் அசைவற்று நின்று கொண்டிருந்தான். அவன் புலன்கள் மரத்துப் போய்க்கொண்டிருந்தன.

ஒரு நிமிடம்தான். தன் நினைவுக்குத் திரும்பினான். அவன் முன்பாக பரந்து கிடந்த நிலம் தென்பட ஆரம்பித்தது. எங்கும் கடுமையான நிர்வாணமாகக் காட்சி அளித்தது. விளைந்த பயிரின் ஒரு இதழ் கூட வெளியே தெரியவில்லை. கடல் அலையென அசைந்து கொண்டிருந்த பயிர்களெல்லாம் திடீரென உறைந்து கல்லாக மாறியதுபோல் ஆங்காங்கு மண்மேடுகள் தெரிந்தன. அவன் மனம் குன்றி உறைந்துபோய் விட்டான். அவனுடைய எதிர்காலம், நம்பிக்கை, கனவு எல்லாம் உருவப்பட்டு நிலத்தைப் போல் அவனும் நிர்வாணமாக நிற்பதுபோல் உணர்ந்தான்.

மீண்டும் லாயத்திற்கு வந்து நின்றான். இன்றிரவு அவளிடம் என்ன சொல்வது? மிகவும் நம்பிக்கை வைத்திருந்த நிலம் ஏமாற்றிவிட்டதே. அவளிடம் சென்று, தன்னை எப்படி நியாயப்படுத்திப் பேசுவது?

லாயத்திலேயே நின்றுகொண்டு காந்திருந்தான்.

“”இப்பொழுது பார்- நமக்கு உணவையும், உடையையும் அளிக்கும் என்று நம்பிக்கொண்டிருந்த நிலத்தைப் பார். இதையே நீ நம்பிக்கொண்டிருப்பாய். அடுத்த ஆண்டு அதற்கு அடுத்த ஆண்டு மழை வரும் என்று சொல்லிக்கொண்டே இருப்பாய்” என்று கத்துவதற்காக அவள் காத்துக்கொண்டிருப்பதைப் போலவே தோன்றியது.

மனச்சோர்வுடன் அவன் வீட்டைச் சென்றடைந்தபோது, கதவு திறந்து கிடந்தது. விளக்கு அணைந்திருந்தது. தொட்டில் காலியாக இருந்தது. மதியம் மேஜையின் மீது வைக்கப்பட்டிருந்த உணவும், பாத்திரங்களும் அப்படியே இருந்தன. வீட்டைப் பெருக்கிக் கொண்டிருப்பாளோ என்று நினைத்தால், பெருக்குமாறு சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. அவளை உரக்கக் கத்தி அழைத்தான். ஒரு வகையான பயம் அவனைப் பிடித்துக் கொண்டது. அடுத்த அறையிலும், வாசற்படியிலும் தேடினான். மனதைத் திருப்திபடுத்திக் கொள்வதற்காக மீண்டும் வீட்டினுள் சென்று தேடி விட்டு, வேகமாக வெளியே வந்தான்.

நீண்ட நேரம் ஓடினான். புழுதிக் காற்றினால் மறைந்திருந்த காட்சிகள் ஒவ்வொன்றாக தென்பட ஆரம்பித்தன. நிலத்தைச் சுற்றி ஓடிவிட்டு, மீண்டும் வீட்டுக்கு ஓடிவந்து,வந்துவிட்டாளா? என்று பார்த்துவிட்டு ரோட்டுக்கு ஓடிவந்து மற்றவர்களைத் துணைக்கு அழைத்துக் கொண்டான். எல்லோரும் அவளைத் தேடினார்கள்.

இரண்டு மணி நேரத் தேடுதலுக்குப் பின்னர் அவன்தான் அவளைக் கண்டான். மணல் குவியலுக்கு இடையே பதுங்கியவாறு அமர்ந்திருந்தாள். அவளுடைய கூந்தலும், முகமும், கழுத்தும் மண்ணாகி இருந்தது. குழந்தையைப் பாதுகாப்பாக மார்போடு அணைத்து இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்தாள்.

அவள் அருகே அவன் முழந்தாளிட்டு அமர்ந்தான்.

“”பால், சற்று இவனைப் பிடி” அவனிடம் குழந்தையை ஒப்படைத்தாள்.

“”பால், நீ சொன்னது சரிதான். இன்றிரவுடன் புழுதிக் காற்று நின்றுவிடும் என்று நீ சொன்னது சரியாகிப் போய்விட்டது. இப்பொழுதே ஆகாயம் சிவந்து காணப்படுகிறது. நாளை எல்லாம் சரியாகப் போய்விடும். ஐயோ! பால் உனக்கு குழந்தையைச் சரியாக பிடிக்கத் தெரியவில்லையே. பார் அவன் கைகளும் தலையும் தொங்கிக் கொண்டிருக்கின்றன. இங்கே கொடு. நான் தூக்கிக்கொள்கிறேன்”

சில்லிட்டுப் போன, தலை தொங்கிய குழந்தையை கண்ணீர் மறைக்கின்ற கண்களுடன் அவளிடம் அவன் கொடுத்தான்.

– பாரத் ரவீந்திரன் (ஏப்ரல் 2012)

மூலக்கதை: தி லாம்ப் அட் நூன்
எழுதியவர்: ஜேம்ஸ் ஸிங்க்ளேர் ராஸ்
ஜேம்ஸ் ஸிங்க்ளேர் ராஸ் 1908, ஜனவரி 22-இல் கனடா, ஷெல் ப்ரூக் என்ற கிராமத்தில் பிறந்தவர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *