நடிகை

 

ம் முழுவதும் அண்மைக் காலமாகப் பேச்சு. இருவரும் சில படங்களில் இணைந்து நடித்து, அவை வெற்றியும் பெற்றதிலிருந்து படத் தயாரிப்பாளர்கள், இருவரையும் வைத்துப் படங்களை எடுப்பதில் ஆர்வமாயினர்.

காதல் தோல்வியுறுவதாய் காட்டப்பட்ட ஒரு திரைப்படத்தில், இருவரும் உருகி உருகி நடித்திருந்தனர். “இருவரும் உண்மையாகவே காதலர்களாக இருந்தாலன்றி, அப்படி ஒரு நடிப்பு சாத்தியமே அன்று…’ என்று முடிவுகட்டிய மக்கள், இருவரும் உண்மை வாழ்விலும், காதலர்களே என்றும், முடிவு செய்து விட்டனர். பத்திரிகைகளும் அந்த இருவரையும் பற்றிய பொய்களையும், உண்மைகளையும், தினுசு, தினுசாக எழுதித் தள்ளின.

அன்று, படப்பிடிப்புக்காக இருவரும், ஒரே காரில் வந்து இறங்கிய போது, அதற்கென்றே காத்துக் கொண்டிருந்தவர்கள் போல், பத்திரிகையாளர்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டனர்.

நடிகைஒரு பத்திரிகையாளர், “”எப்பங்க பத்திரிகை குடுக்கப் போறீங்க?”என்று நேரடியாகவே இருவரையும் பார்த்தவாறு வினவிய போது, திலகா, “”பத்திரிகைதானே? இந்தாங்க!” என்று, தன் கையில் இருந்த நாளிதழை, அந்த ஆளிடம் நீட்டினாள்.

“”அறுக்காதீங்க மேடம்… நாங்க சீரியசாத்தான் கேக்குறோம்!”

“”ஒரே கார்ல வந்து இறங்கினா, காதலர்கள்ன்னு ஆயிடுமா? நாங்க வெறும் நண்பர்கள் தான்!” என்று பாரதி கடுப்புடன் சொல்ல, “”என் கார் பழுது பார்க்கப் போயிருக்கு. அதான் பாரதியை என் வீட்டுக்கு வரச் சொல்லி, ரெண்டு பேருமாச் சேர்ந்து கிளம்பி வந்தோம்!” என்று, அவன் தொடங்கியதை முடித்து வைத்தாள் திலகா.

“”இது மாதிரி, “நாங்க ஜஸ்ட் ப்ரண்ட்ஸ்தான்…’ன்னு இதுக்கு முந்தி எத்தினியோ பேரு சொல்லிட்டு, கடைசியிலே கல்யாணம் பண்ணி இருக்காங்க!”

“”அது பத்தி என்ன? இப்ப நாங்க வெறும் நண்பர்கள் தான். ஆளை விடுங்க!”

“”சரிங்க… இப்ப நண்பர்கள்; ஆனா, எப்ப காதலர்கள் ஆவீங்க?”

திலகாவின் முகம் சிவந்தது.

“”நிறுத்துங்க, உங்க உளறலை. நகருங்க; நாங்க படப்பிடிப்புக்கு உள்ளே போகணும்!”

“”ஒரு நிமிஷங்க!”

அவர்களின் பேச்சைக் காதில் வாங்காமல், இருவரும் அவசரமாய்ப் படப்பிடிப்புத் தளத்துக்குச் செல்ல, விரைவாகப் படியேறினர்.

***

அன்று மாலை படப்பிடிப்பு முடிந்ததும், இருவரும் திலகாவின் வீடு நோக்கிக் காரில் புறப்பட்டுப் போயினர். வழியில் இருவரும் ஓட்டுநர் முன்னிலையில் எதுவும் பேசிக் கொள்ள இயலவில்லை.

காரிலிருந்து இறங்கிய திலகா, “”உள்ளே வந்துட்டுப் போங்க, பாரதி! எங்கம்மாவை அறிமுகப்படுத்தறேன். காலையில நீங்க வந்தப்ப அவங்க குளிச்சிட்டு இருந்ததால முடியல…” என்றாள்; அவனும் இறங்கினான்.

இருவரையும் பார்த்ததும், திலகாவின் அம்மா வாயெல்லாம் பல்லானாள்.

“”வாங்க தம்பி… உ<க்காருங்க!” என்று அவள் <உபசரித்ததற்கு நன்றி கூறிய அவன், அவளுக்கு எதிரே சோபாவில் உட்கார்ந்தான்; திலகாவும் அவனருகில் உட்கார்ந்தாள்.

“”காபி கொண்டு வரட்டுமா, தம்பி?”

“”வேண்டாங்க. வரும்போதுதான் ஸ்டூடியோவில் டிபன், காபி எல்லாம் குடுத்தாங்க. திலகா ரொம்ப நாளாகக் கூப்பிட்டுக் கிட்டு இருக்கு. அதான் உங்களைச் சந்திக்கணும்ன்னு வந்தேன்…”

“”ஏதானும் முக்கியமான விஷயமாவா?” என்று அவள் அம்மா ஆர்வமாய் வினவினாள்.

“”அப்படி ஒண்ணும் இல்லீங்க. சும்மா அறிமுகப்படுத்திக்கலாம்ன்னுதான்…”

“”ரொம்ப சந்தோஷம், தம்பி! நீங்க ரொம்ப நல்லவருன்னு திலகா வாய்க்கு வாய் சொல்லுது…”

அவன் புன்சிரிப்புடன் மவுனமாக இருந்தான்.

“”சரி… நீங்க பேசிட்டு இருங்க…”

அவள் எழுந்து போனதும், “”திலகா… நான் உன்னோட கொஞ்சம் மனசு விட்டுப் பேசணுமே!” என்று அவன் முகத்துச் சிவப்புடன் சொல்ல, அவளும் சற்றே முகம் சிவந்து, “”வாங்க… மொட்டை மாடிக்குப் போயிடலாம்!” என்று எழுந்து கொண்டாள்.

“”அம்மா… நாங்க மொட்டை மாடிக்குப் போய்க் கொஞ்சம் நேரம் பேசிட்டு வர்றோம்!”

“”சரிம்மா… போங்க… ராத்திரி தம்பி இங்க சாப்பிடட்டுமே?”

“”இல்லீங்க… எங்கம்மா காத்துட்டிருப்பாங்க. இன்னொரு நாள் பாத்துக்கலாம்!”

இருவரும் படியேறிப் போனதைத் தன் அறையினின்று பார்த்த லலிதா, “நல்ல ஜோடி! நல்லவன்னு வேற திலகா சொல்லுது. இவங்க நிஜ வாழ்க்கையிலேயும் இணைஞ்சா எவ்வளவு நல்லாருக்கும்!’ என்றெண்ணிப் பெருமூச்சு விட்டாள்.

மொட்டை மாடியில் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் இருவரும் எதிரெதிராய் அமர்ந்து கொண்டபின், திலகா தொண்டையைச் செருமிச் சரி செய்து கொண்டாள்.

“”சொல்லுங்க! பத்திரிகைக்காரங்க கிட்டேயெல்லாம் இப்போதைக்கு வெறும் நண்பர்கள்தான்னு சொல்லிச் சமாளிக்கப் பார்த்தோம். ஆனா, எவனும் நம்பினதாத் தெரியலை. நக்கலாச் சிரிச்சுக்கிட்டாங்க… எங்கம்மாவுக்குச் கூட, நான் இன்னும் எதுவும் சொல்லலே. சரி… என்னமோ பேசணும் னீங்களே! பேசுங்க…”

“”அது வந்து… வேற ஒண்ணுமில்லே, திலகா… நம்ம கல்யாணத்துக்குப் பெறகு நீ நடிக்கிறதா, வேண்டாமான் றதைப் பத்தித்தான்!”

அவன் குரலில் தெரிந்த தயக்கத் திலிருந்தே, திலகா அதை விரும்பமாட்டாள் என்பதை, பாரதி உணர்ந்திருந்ததை புரிந்து கொண்டாள். அப்படி இருக்கும் போது, அந்தக் கேள்வி தேவையற்ற ஒன்றாக அவளுக்குத் தோன்றியது.

“உங்களுக்கு அதிலே விருப்பம் இல்லேன்னா நான் நடிக்கலே…’ என்று அவள் பத்தினித்தனமாய்ப் பதில் சொல்ல வேண்டும் என்று ஆசைப்பட்ட அவன், “”ஏங்க இப்படி ஒரு கேள்வியைக் கேக்குறீங்க?” என்று, அவள் சற்றே வியப்பான தொனியில் வினவியதும், அவனுக்கு என்ன பதில் சொல்லுவதென்று உடனே தோன்றாததால், கொஞ்சம் திணறித்தான் போனான்.

அவன் தொடர்ந்து சில நொடிகளுக்கு மவுனம் சாதித்ததிலிருந்து, அவனது எண்ண ஓட்டத்தை அவள் ஓரளவுக்குப் புரிந்து கொண்டாலு<ம், தன் ஊகம் தவறாக இருக்கலாமோ என்ற ஐயத்துடன், “கல்யாணத்துக்கு அப்புறம் நான் நடிக்கிறதுல உங்களுக்கு ஆர்வம் இல்லியா?’ என்று கேட்க எண்ணியதைக் கேட்காமல், “”சொல்லுங்க, பாரதி! ஏன் இப்படி கேக்குறீங்க?” என்று வினவினாள், “அவனே சொல்லட்டுமே! நானென்ன எடுத்துக் கொடுப்பது?’ என்ற எண்ணத்தில்.

ஆனால், அவன் பதிலே சொல்லாதிருந்தான்.

“”சொல்லுங்க, பாரதி!”

“”இல்லே, கல்யாணத்துக்கு அப்புறம் நீ நடிக்க வேணாம்கிறது என்னோட அபிப்பிராயம்… அதான்…”

அவள் ஊகித்துவிட்டது தானென்றாலும், அவன் வாய்ப்பட அந்தக் கருத்தைக் கேட்டது அவளை ஏமாற்றத்துக்கு உட்படுத்தியது. “சரின்னு சொல்லு, திலகா!’ என்பது போல், ஒரு கெஞ்சலான பார்வையை அவன், அவள் மீது பதித்தவாறு கண் இமைக்காமல் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“”எதுக்காக அப்படிச் சொல்றீங்க?” என்று அவள் கூடியவரை தன் ஏமாற்றத்தை மறைத்து,

இயல்பான குரலில் வினவினாள்.

“”இல்லே, குடும்பத்துப் பொண்ணுன்னு ஆனதுக்கு அப்புறம் நடிக்க வேண்டாமோன்னு தோணிச்சு, அதான்!”

அவளுள் சற்றே எரிச்சல் மூண்டது. “”அதென்ன, “குடும்பத்துப் பொண்ணு’ன்றீங்க? இப்பவும் சரி, வேற எப்பவும் சரி, நான் ஒரு பொண்ணு மட்டுந்தான்! முதல்ல குழந்தை, அப்புறம் குமரி, அப்புறம் நடுத்தர வயசுப் பெண்மணி, கடைசியா கிழவி! கல்யாணம்ன்னு ஒண்ணைப் பண்ணிக்கிறதால, “குடும்பப் பொண்ணு’ன்றதா ஏதாச்சும் புதுசா என் மேல வந்து ஒட்டிக்குதா? புரியலே!”

அவனது எண்ண ஓட்டத்தின் அடிப்படை புரியாதது போல், அவள் பேசியதை அவன் புரிந்து கொண்டான்.

“”புதுசா அப்படி எதுவும் வந்து உன் மேல ஒட்டிக்காதுதான்… குடும்பத் தலைவின்றது ஒரு பதவி அல்லது நிலைன்னு சொல்லலாம். முதல்ல நீ பள்ளிச் சிறுமி, அப்பால கல்லூரி மாணவி, அப்பால நடிகை. என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு அப்பால, குடும்பப் பொண்ணு. அப்புறம் ஒரு தாய்… இப்படி…”

“”<உங்களுக்கும் அது பொருந்தும் தானே?”

“”…”

“”அதாவது முதல்ல நீங்க பள்ளிச் சிறுவன், அப்புறம் கல்லூரி மாணவன், அப்புறம் நடிகன், அப்புறம் குடும்பஸ்தன், தகப்பன்… இது மாதிரி!”

அவள் தன்னை ஏதோ சொல்லி மடக்கப் பார்க்கிறாள் என்பது, அவனுக்குப் புரிந்ததே தவிர, என்ன சொல்லப் போகிறாள் என்பதை அவனால் ஊகிக்க முடியவில்லை.

“”கரெக்ட்!” என்றான்.

“”நான் ஒரு பெண்; நீங்க ஒரு ஆண்ங்கிறதைத் தவிர, நம்ம நிலைகள்லே எந்த வித்தியாசமும் இல்லேதானே?”

“”ஆமா…”

“”அதே நிலைகள்லே இருக்கிற நீங்க, கல்யாணத்துக்கு அப்புறம் நடிக்கிறதை நிறுத்தப் போறதில்லேதானே?”

அவன் அதிர்ச்சியுற்றது, விரிந்து கொண்ட அவன் விழிகளில் தெரிந்தது.

“”என்ன கேக்கறே, திலகா! தெளிவா இல்லே உன் கேள்வி!”

“”என் கேள்வி தெளிவாத்தான் இருக்கு; உங்க மனசுல தான் குழப்பம். சரி… நான் ஒரு கேள்வி கேட்கறேன்; பதில் சொல்லுங்க…”

“”கேளு…”

“”கல்யாணத்துக்கு அப்புறம் நீங்க நடிப்பீங்க; ஆனா, நான் நடிக்கக் கூடாதுன்றதுக்கு ஏதாவது நல்ல காரணம் இருக்கா?”

“”அதான் சொன்னேனே, குடும்பத்துப் பொண்ணானதுக்கு அப்பால, ஒரு பொண்ணு நடிக்கிறது சரி இல்லேன்னு!”

“”குடும்பஸ்தன் நடிச்சா பரவாயில்லையா? சரி, விடுங்க. குடும்பப் பொண்ணு நடிக்கிறது ஏன் சரி இல்லேன்றதுக்கான காரணத்தையாவது சொல்லுங்க…”

“”ஒரு நல்ல குடும்பப் பெண், ஆண்களைத் தொட்டு நடிக்கிறது அவ்வளவா நல்லாருக்காதில்லே…”

திலகாவுக்குள் எரிச்சல் தோன்றி தகித்தது. சகித்துக் கொண்டு, “”ஒரு நல்ல குடும்பத்து ஆண் பொண்ணுங்களைத் தொட்டு நடிக்கிறது மட்டும் நல்லாருக்குமாக்கும்! ஆனா, குடும்பப் பொண்ணு மட்டும் வேறு ஆணைத் தொடவோ, அவனால் தொடப்படவோ கூடாதுன்றீங்க… அதானே?”

அவளது இந்த நக்கலான கேள்விக்கு, அவனால் பதில் சொல்ல முடியவில்லை.

இருப்பினும், சுதாரித்துக் கொண்டு, “”நீயே தானே திலகா சொல்லி இருக்கே… சில நடிகர்கள் காதல் காட்சிகள்லே கொஞ்சம் அத்துமீறி நடந்துக்கிறதா… “நீங்க கண்ணியமா நடந்துக்கிறீங்க… அதான் உங்களை எனக்குப் பிடிச்சிருக்கு…’ன்னு நீயே சொல்லியிருக்கே இல்ல…” என்றான்.

“”உங்களோட கண்ணியத்தை நான் புகழ்ந்ததோ, பாராட்டினதோ, உங்க மறுப்புக்கு ஒரு நியாயம் ஆயிடாது. எல்லாருமே கண்ணியக் குறைவானவங்க இல்லே. சிலர் தப்பா நடந்துக்கிறது உண்டு தான். ஆனா, அதுக்காகக் கல்யாணம் ஆனதும், ஒரு பொண்ணு தன் ஆர்வம், லட்சியம் எல்லாத்தையும் மூட்டை கட்டி வச்சுடணும்ன்னு எந்தச் சட்டமும் கிடையாது!

“”தவிர, உங்களோட கல்யாணம்ன்னு ஒண்ணு ஆயிட்டா, அதுக்கு அப்புறம் எங்கிட்ட வாலாட்ட யாருக்குமே ஒரு தயக்கம் ஏற்படும் இல்லியா? எங்க பாட்டி, அந்தக் காலத்து நாடக நடிகை; எங்கம்மாவும், ஒரு நாடக நடிகை; நான்தான், சினிமா நடிகையானேன்.

“”நடிப்பு எங்க பரம்பரைத் தொழில்! அந்த ஆர்வம் எங்க ரத்தத்துலேயே ஓடிட்டு இருக்கு. ஆனா, நீங்க அப்படி இல்லே. உங்க பரம்பரையிலே யாருமே நடிக்கப் போனதில்லே!”

“”திலகா… நீ என்னோட உணர்ச்சிகளைப் புரிஞ்சுக்காம பேசறே. எந்த ஆணும் பிற ஆண்களைத் தன் மனைவி தொடுறதையோ, பிற ஆண்களால தொடப்படுறதையோ சகிக்க மாட்டான்! காரணம் அதுதான்!”

“”அப்ப… பொண்ணுங்க மட்டும் தன் புருஷன் மத்தப் பொண்ணுங்களோட கண்டபடி தொட்டும், ஒட்டியும் நடிக்கிறதைச் சகிச்சுப்பாங்களாக்கும்! “சகிக்கிற குணம் இயல்பா இல்லாட்டியும், பொண்ணுங்க மட்டும் அதையெல்லாம் சகிச்சுக்கிட்டே ஆகணும்; ஆனா, ஆம்பளைங்க நாங்க, சகிச்சுக்க மாட்டோம்…’ அப்படின்றீங்க! அதானே?”

அவனால் பதில் சொல்ல முடியவில்லை; பேசாமல் இருக்க வேண்டியதாயிற்று.

“”சரிங்க! அப்ப ஒண்ணு செய்யலாமா? கல்யாணத்துக்கு அப்புறம் நான் உங்களோடயும், நீங்க என்னோடயும் தவிர, வேற யாரோடயும் நடிக்க மாட்டோம்ன்னு சொல்லிடலாமா?”

அவள் குரலில் ஒரு கேலி தெரிந்தது கண்டு, அவன் முகம் சுருங்கியது. இருந்தாலும், கவனியாதவன் போன்று சமாளித்துக் கொண்ட அவன், “”அதெப்படி முடியும் திலகா? நம்ம ரெண்டு பேருக்குமே அதனால நல்ல வாய்ப்புகள் வராம போயிடலாமில்ல?” என்றான் கெஞ்சுதலாக.

“”அப்ப உங்க நிபந்தனையை மறு பரிசீலனை பண்ணுங்க!”

“”நிபந்தனைன்னு கடுமையா ஏன் பேசறே, திலகா? அது என்னோட வேண்டுகோள்தான்!”

“”அப்படின்னா, உங்க வேண்டுகோள் ஏற்கப்பட மாட்டாது!” என்று நெஞ்சுக்குக் குறுக்கே, ஒரு மகாராணியைப் போல் கைகளைத் தோரணையாய் கட்டி கொண்டபடி, பாதி உண்மையாகவும், பாதி விளையாட்டுப் போன்றும் கூறிய திலகா, “”ஏன்னா, நடிப்புத் துறையிலே சிகரங்களை எட்டணும்ங்கிற லட்சியம் எனக்கும் இருக்கு. இது மாதிரி லட்சியங்கள் ஆண்களுக்குத்தான் இருக்கலாம்; பெண்களுக்கு இருக்கக் கூடாதுன்னு அத்தைப் பாட்டித் தனமாச் சொல்ல மாட்டீங்கன்னு நினைக்கிறேன்…” என்றாள்.

அவன் அதிர்ந்ததும், அதிருப்தியுற்றதும் வெளிப்படையாய் அவனது முகமாற்றத்தில் வெளிப்பட்டன. அவனது போக்கு, அவளுக்கும் பிடிக்கவில்லை என்பது வெளிப்பட்டு விட்டாலும், அவள் தன்னளவுக்கு அதிர்ச்சியுற வில்லையோ என்று அவன் எண்ணினான்.

“அப்படியானால், அவளது காதலில் ஆழம் இல்லை…’ என்றும் அவனுக்குத் தோன்றியது.

“”திலகா… நீ இப்படியெல்லாம் கட்சி கட்டி பேசுவேன்னு நான் எதிர்ப்பார்க்கவே இல்லை. விட்டுக்குடுத்தாத்தான் குடும்ப வாழ்க்கை சிறப்பா நடக்கும்! <உன்னோட அன்பில் ஆழம் இருந்தா விட்டுக்குடுப்பே!”

“”எதிர்பார்ப்புன்றது ஒருவழிப் பாதையில்லே, பாரதி! உங்க எதிர்பார்ப்பைப் பத்தி மட்டுமே நீங்க யோசிக்கிறீங்க. எனக்கும் எதிர்பார்ப்பு இருக்கும்கிறது பத்தி, நீங்க நினைச்சே பாக்கலே… அப்புறம் விட்டுக் குடுக்கிறது பத்திச் சொன்னீங்க. விட்டுக் குடுக்கிறதுன்றதும் ஒரு வழிப் பாதை கிடையாது.

“”ரெண்டு பேருமே விட்டுக்குடுத்தா தான் குடும்ப வண்டி குடை சாயாம ஒழுங்கா ஓடும்! ஆனா, ஒரே தொழில்ல இருக்கிறதால, நாம ரெண்டு பேருமே விட்டுக் குடுக்கத் தயாராயில்லேன்றது தான் உண்மை!

“”பெண்தான் விட்டுக்குடுக்கணும்கிற உங்க பரம்பரைப் புத்தியையும் காட்டிட்டீங்க! என் அன்பிலே ஆழம் இல்லேன்னு சொன்னீங்க! உங்க அன்பில் ஆழம் இருந்தா, என் விருப்பத்தைத் தடுக்க மாட்டீங்கன்னு நானும் சொல்லலாம் தானே? ஆனா, ஒண்ணு. கல்யாணம்ன்னு ஆனதுக்கு அப்புறம், இப்படியெல்லாம் நமக்குள்ள தகராறு வந்து, வழக்கு, நீதிமன்றம், மணவிலக்குன்னெல்லாம் சந்தி சிரிக்காம, முன்கூட்டியே உங்க கருத்தைச் சொல்லிட்டதுக்காக, நான் நன்றிதான் சொல்லணும்…”

“”திலகா… ப்ளீஸ்!”

“”ஒரு நிமிஷம், நான் பேசி முடிச்சுடறேன்… எங்க பாட்டி ஒரு நாடக நடிகைன்னு சொன்னேன் இல்லையா? அவங்களுக்கு வாய்ச்ச புருஷனும் இப்படித்தான். தானும் ஒரு நாடக நடிகனா இருந்தாலும், கல்யாணத்துக்கு அப்புறம் அவங்க நடிக்கக் கூடாதுன்னுட்டாரு…. கல்யாணம்ன்னு ஆனதுக்கு அப்புறம் அவரு இப்படிக் கழுத்தறுத்தாரு.

“”அடுத்ததா, எங்கம்மா. அவங்க நடிக்கிறதுக்கு எங்கப்பா தொடக்கத்துல ஆட்சேபிக்காட்டியும், சக நடிகன் ஒருத்தனோட அம்மாவைச் சம்பந்தப்படுத்தி நாலு பேரு பேசின வம்பை, உண்மையா நினைச்சு, அவர்களைக் கொடுமைப் படுத்தினதோடு, அவங்க நடிக்கக் கூடாதுன்னும் சொல்லிட்டாரு. எனக்குப் பத்து வயசு ஆனப்ப, அவர் இறந்துட்டாரு.

“”தன் கனவை என் மூலமா, எங்கம்மா நிறைவேத்திக்கிட்டு இருக்காங்க. ஒருக்கால், நான் நடிக்கிறதை விட்டுட்டு, குடியும் குடிதனமுமா இருக்கணும்கிறது எங்கம்மாவுடைய ஆசையாக் கூட இருக்கலாம்; தெரியாது.

“”ஆனா, யாருக்காகவும் என் லட்சியங்களை நான் விட்டுக் குடுக்க முடியாது. எங்க பாட்டி, அம்மா ரெண்டு பேர் வாழ்க்கை மாதிரியே என்னோடதும் ஆனா, அதை என்னால ஏத்துக்கவோ, தாங்கிக்கவோ முடியாது.

“”என் வீட்டில உங்களை உக்கார வச்சு, நான் கடுமையா, இப்படியெல்லாம் பேசும்படி ஆயிடிச்சு. அதுக்காக நான் வருத்தப்படுறேன். ஆனா ஒண்ணு… இனிமேப்பட்டு, என்னோட வாழ்க்கையில காதல்ங்கிற உணர்வுக்கோ, கல்யாணம்கிற ஒண்ணுக்கோ இடமே கிடையாது. போதும்… நான் ஒரு தடவை உங்களை நம்பி ஏமாந்தது போதும்!

“”இனி ஜென்மத்துக்கும் யாரைப் பார்த்தும் ஆசைப்பட மாட்டேன். நான் பேசி முடிச்சாச்சு. ரொம்பவே பேசிட்டேன்; மன்னிச்சுக்குங்க, பாரதி!” என்றவாறு சட்டென்று அவள் எழுந்து கொண்டாள். தன் கண்ணீரை அவன் பார்த்துவிடாதிருப்பதற்காக முகந்திருப்பி நடந்தாள்.

அவன் மவுனமாய், அவளைப் பின்பற்றிப் படி இறங்கினான்.

- ஜூலை 2010 

தொடர்புடைய சிறுகதைகள்
திருப்பம்!
குமாரிக்கு ஒரே பரபரப்பாக இருந்தது. தன் தந்தையைத் தனியாக விட்டு விட்டுக் கிளம்புவதற்கு, அவளுக்கு இன்னும் இரண்டே நாட்கள்தான் இருந்தன. தினகரனின் காதலை, மாரிசாமி ஏற்க மாட்டார் என்பதை, அவரின் ஜாதிப்பற்றுமிக்க நடவடிக்கைகளிலிருந்து அவள் அறிந்திருந்ததால் தான், அப்படி ஒரு முடிவுக்கு ...
மேலும் கதையை படிக்க...
ஆளுக்கு ஒரு சட்டம்!
சுஜாதாவின் மனம், தாங்க முடியாத பரபரப்பில் ஆழ்ந்திருந்தது. அன்று பிற்பகல், 3 மணிக்கு, எழுத்தாளர் சிவமதியைப் பார்க்க, அவளுக்கு, அவர், அனுமதி வழங்கியிருந்தார். கடந்த, 25 ஆண்டுகளாக தமிழில் மட்டுமல்லாது, இந்தி, ஆங்கிலம் ஆகியவற்றிலும் எழுதிக் கொண்டிருக்கும் பெண் எழுத்தாளர். மூன்று மொழிகளில் ...
மேலும் கதையை படிக்க...
மூத்தவன் பங்கு !
வெளியே உறை மீது காணப்பட்ட கையெழுத்தைப் பார்த்ததுமே, அது தன் மாமியாரிடமிருந்து தான் வந்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்ட சரசுவதிக்கு, முகம் சுண்டிப் போயிற்று. எப்போதும் கணவன் அலுவலகத்திலிருந்து திரும்பிய பின், தன் மாமியாரின் கடித உறையைப் பிரிக்காமலே, அவனிடம் கொடுப்பது ...
மேலும் கதையை படிக்க...
”நேற்றிலிருந்து நானும் கவனித்துக் கொண்டே இருக்கிறேன். என்ன யோசனை அப்படி-ஏதோ பெரிய கோட்டையைப் பிடிப்பதற்கு யோசனை செய்வது மாதிரி?” ஆழ்ந்த உறக்கத்தின்போது உலுக்கி எழுப்பப்பட்டவனுக்குரிய திடுக்கிடலுடன் வள்ளிநாயகம் இலேசான தலைக் குலுக்கலோடும் சட்டென விரிந்து கொண்ட விழிகளோடும் கல்பனாவை ஏறிட்டான். ஓர் அசட்டுப் ...
மேலும் கதையை படிக்க...
ராமச்சந்திரனுக்கு வேலையே ஓடவில்லை. அவரால் நம்பவே முடியவில்லை. நேற்று வரையில் அவருக்கு எதிர்இருக்கையில் உட்கார்ந்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்த சகுந்தலா இன்று இல்லை என்பதைத்தான். முந்தியநாள் சரியாக ஐந்துமணிக்குத் தன் கைப்பையைத் தோளில் தொற்விட்டுக்கொண்டு வரேன், சார் என்று கூறிப் புன்னகை காட்டிவிட்டுக் ...
மேலும் கதையை படிக்க...
திருப்பம்!
ஆளுக்கு ஒரு சட்டம்!
மூத்தவன் பங்கு !
நியாயங்கள் மாறும்
நான் தான் குற்றவாளியோ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)