Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

நடிகன்

 

இரண்டு வலித் தாக்குதல்களுக்கு நடுவே சற்று சிந்திக்க முடிந்தது. தெளிவாக இல்லை. எனினும் ஓரளவு. தாக்குதல்களின்போது சிந்திக்கவே முடியவில்லை. ‘நாய்’ என்ற சொல் மட்டும் உள்ளே வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. வலி தாங்காது, தலையும் கால்களும் மட்டும் படுக்கையில் குத்தி, முதுகு வில் போன்று வளைந்து, கூரையைப் பார்க்க விறைத்து, கட்டை போன்று நிற்கிற மனிதன் என்ன யோசிக்க முடியும்… வலியையும் மரணத்தையும் தவிர?

அந்த நேரங்களில் வார்டு முழுக்கப் படுத்துக்கிடந்தவர்கள் அவனை அச்சத்துடன் பார்ப்பதை உணர முடிந்தது.

”பாவம்… நாய் கடிச்சுட்டுதா பிள்ளை?” என ஒரு கிழவி கேட்டாள். அவனால் பதில் பேச முடியவில்லை. நர்ஸ் வந்து பார்த்துவிட்டு, ”இந்த ஆளோட சம்சாரம் எங்கே?” எனச் சத்தம் போட்டாள். கல்யாணி மிகுந்த சலிப்புடன் எங்கிருந்தோ வந்தாள்.

”ஏம்மா… அட்டாக் வரும்போது தலையைத் தாங்கிப் பிடிச்சுக்கணும்னு சொன்னேனே… இல்லேன்னா, கழுத்து எலும்பு முறிஞ்சுடும்.”

”தலையைப் பிடிச்சுக்கிட்டா, இது குணமாகிடுமா சிஸ்டர்?” என்றாள் கல்யாணி.

நடிகன்சிஸ்டர் நம்ப முடியாதவள்போல அவசரமாகத் திரும்பிப் போனாள். உள்ளே சென்று அங்கு இருந்த சக செவிலியிடம்,

”அந்த ஸ்டமக் கேன்சர் பேஷன்ட் சீக்கிரம் செத்துப்போனா நல்லது. அவன் பொண்டாட்டி அத்தனை கொடூரமா இருக்கா.”

”அந்த ஆளு ஒரு நடிகராம்” எனச் சொன்னாள் அவள்.

”ஓ… நான் சினிமாவே பார்க்கிறது இல்லை. அது ‘சாத்தானுக்க முதன்மை ஆயுதம்’னு எங்க வீட்டுல சொல்வாக.”

மற்றவள் சற்று தயங்கி, ”நான் பார்த்திருக்கேன். கொஞ்சம் மலையாளத்துலயும் தமிழ்லயும் நடிச்சிருக்காரு. நிறைய நாடகங்கள்லகூட வேஷம் போட்டிருக்காரு. நான் பார்த்திருக்கேன்… ‘பாலவிளை கணேசன்’னு.”

”இந்துவா?”

அவள் மறுபடியும் தயங்கி, ”சர்ச்ல போடுற நாடகத்துலகூட நடிப்பாரு. ‘சாம்சன்-லைலா’வுல சாம்சனா வருவாரு. பொறவு ‘தேவசகாயம் பிள்ளை’ கதையில தேவசகாயம் பிள்ளையா, கல்யாணம் ஆகிறதுக்கு முன்னால பார்த்திருக்கேன்… சிவப்பா கீத்து மீசையோடு” என்றவள் பெருமூச்சுவிட்டாள்.

”என்ன திறமை இருந்தாலும் சாத்தான் கடைசியில வழி கெடுத்துட்டான் பார்த்தியா?” – மற்றவள் பேசவில்லை. முதல் நர்ஸ், ஏதோ ஒரு பிரார்த்தனையை முணுமுணுக்க ஆரம்பித்தாள்.

இப்போது வலி சற்றுக் குறைந்து, படுக்கையில் கிடைமட்டத்துக்கு வந்திருந்தான் பாலவிளை கணேசன்.

”கொஞ்சம் கஞ்சி…” என முணுமுணுத்தான்.

”எதுக்கு… எல்லாம் வாந்தி எடுக்கவா?” என்றாள் கல்யாணி.

அவன் சிரமத்துடன், ”பசிக்கி… கொஞ்சம் தண்ணியாவது…”

அவள் எழுந்து, அவனது திறந்த வாயில் சிறிது தண்ணீரை ஊற்றினாள். சற்று வேகமாக ஊற்றிவிட்டாள். அது அவனது பொதைப்பில் ஏறி, சிரசில் அடித்து, ஏறக்குறைய அவள் முகத்தில் துப்பியதுபோல ஆகிவிட்டது.

அவள் வேகமாக எழுந்து, ”ச்சீ… இந்த எழவுக்குத்தான் சொன்னேன்” எனக் கத்தியபடி, முகத்தை புடவையால் துடைத்துக்கொண்டாள்.விடுவிடுவென எழுந்து வெளியே போனாள்.வெளியே வராண்டாவில் யாரோ நிற்பதுபோல தெரிந்தது. அவர்களிடம் போனாள். அது யார் என கணேசனால் யோசிக்க முடிந்தது. கவுன்சிலர் சுந்தரம். சட்டென வலி மீண்டும் வருவதுபோல தோன்றியது. இந்த சுந்தரம் சற்று சுதந்திரமாகப் பேசுகிறான் என, ஒருநாள் எப்படி எல்லாம் குதித்தாள்?

”நீ இப்படி தெருவுல நின்னு நாடகம் கீடகம்னு ஆடுறதாலதானே, கண்ட நாய்களும் என்கிட்டே வாலாட்டுது?”

அவனுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்றே தெரியவில்லை.

”உனக்கு நாடகம் பிடிக்காதா கல்யாணி… சினிமா பார்க்க மாட்டியா நீ?”

”பார்ப்பேன். ஆனா அதுக்கு எல்லாம் வேற ஆளுங்க இருக்காங்க. குடும்பத்துல உள்ள ஆளுகளுக்குப் பாட்டும் கூத்தும் எதுக்கு?”

கணேசன் முதன்முறையாக அந்தத் தர்க்கத்தைக் கேட்கிறான். ஆகவே, வியந்து, ”அப்படி எல்லாம் இல்லை கல்யாணி. இது ஒரு கலை.

அது யாருக்கும் கைவரலாம்; உனக்குக்கூட வரலாம். அது ஒரு மனோபாவம் அவ்வளவுதான்.”

”ச்சீ” என்றாள் மலத்தை மிதித்தவள்போல.

பிறகு முகம் சிவந்து, ”அதெல்லாம் இல்லை.இது ஒரு திமிர். நீங்க அழகா இருக்கீங்கன்னு ஊருக்குக் காட்ட நினைக்கிறீங்க. பொண்ணுங்க உங்களுக்காக ஏங்குறதும், கூட நடிக்கிறவங்க தொட்டுத் தொட்டுப் பேசுறதும் பிடிச்சிருக்கு. அதான் இதெல்லாம் பண்றீங்க.”

அவன் அவளை அணைத்துக்கொள்ள முயன்று சமாதானப்படுத்தும் விதமாக, ”நீயும் அழகாத்தான் இருக்கே கல்யாணி.”

”தெரியும்! ஆனா, அதை உங்களை மாதிரி ஊருக்குக் காமிச்சுட்டு நிக்க மாட்டேன்.”

கணேசன் சற்று எரிச்சலடைந்து, ”இவ்வளவு முட்டாளா நீ?” என்றான்.

அவள் சட்டெனக் கையை விலக்கி, படுக்கையில் இருந்து இறங்கிப் போனாள்.

அதன் பிறகு அவள் நேரடியாகத் தனது எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை. ஆனால், பெண்களுக்கு மட்டுமே தெரிந்த சில ஊடுவழிகள் மூலம், ஒருவரது மனச் சமநிலையைக் குறைப்பது எப்படி என்பதை அவர்கள் அறிவார்கள். நாடகங்கள் இருக்கும் நாட்களில் அவளால் வீட்டை ஓர் எரிமலைபோல ஆக்கிவிட முடியும். பெரும்பாலும் மிகுந்த பதற்றத்துடன்தான், அவன் நாடகத்துக்குக் கிளம்பிப் போகவேண்டியிருந்தது. ஒரு

நடிகன்2கலைஞனுக்குத் தேவையான அமைதியை அவள் கொடுப்பதே இல்லை. பெரும்பாலான அழுத்தங்களை அவள் மகன் மூலமே கொடுத்தாள். அவனுக்கு அடிக்கடி உடல் சுகம் இல்லாமல் போய்க்கொண்டிருந்தது. அந்த வயதிலேயே அல்சர் இருந்தது. திடீரென திக்குவாய் வேறு வந்துவிட்டது.

ஒருநாள் அவனைப் பார்க்க பள்ளிக்குப் போனான் கணேசன். வாத்தியார் அவனிடம், ‘இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் யார்?’ எனக் கேட்டார். அவன் ‘சு… சு…’ எனத் திக்கிக்கொண்டிருந்தான்.

”என்னலே கெட்ட வார்த்தை பேசுதே?” என்றார் வாத்தியார். வகுப்பு முழுக்கச் சிரித்தது. அவன் கண்ணீர் வழிய இன்னமும் சொல்லிக்கொண்டே இருந்தான். கணேசன் கொதிப்பு தாங்காது வாசலில் நின்று, ”ஏலே வாத்தி… என் மவனைக் களியாக்கிக் கொன்னுடாதலே” எனக் கத்தினான். அது பெரிய பிரச்னையானது.

அவன் மகனை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டான். வரும் வழி எங்கும் அவனிடம், ”மவனே… என்னடா ஆச்சு உனக்கு… முந்தியெல்லாம் திக்க மாட்டியே?” எனக் கேட்டுக்கொண்டே இருந்தான்.

வீட்டுக்கு வந்ததும் கல்யாணியிடம், ”இவனுக்கு இந்த ஸ்கூல் வேண்டாம்” என்றான்.

”அவன் அங்கேதான் படிப்பான்” என்றாள்.

”அங்கே இவன் திக்குதான்னு கேலி பண்றாங்க.”

”அதுக்கு என்ன பண்றது? ஊர் எல்லாம்கூடத்தான், ‘கூத்தாடி பொண்டாட்டி’னு என்னைக் கேலி பண்ணுது. நான் என்ன தாலியை அத்துக்கிட்டா போயிட்டேன்?’

மருத்துவர் உடன் படித்தவர். கணேசனைத் தனியே அழைத்து, ‘He is under severe mental pressure. உடம்புக்கு வேற ஒண்ணும் இல்லை. உன் குடும்பத்தில் என்ன நடக்கிறது?’ எனக் கேட்டார்.

கணேசனுக்குப் பட வாய்ப்புகள் வரத் தொடங்கி, அவன் வெளியூரில் இருக்கிற நாட்களில்தான் சொல்லிவைத்தாற்போல் அவனுக்கு கல்யாணியிடம் இருந்து, மகனுக்கு உடல் சரியில்லை என போன் வரும். மற்ற நாட்களில் அவள் பேசும் பழக்கமே இல்லை. அதை விவரமாகவும் சொல்வதும் இல்லை. போனை டக்கென வைத்துவிடுவாள். கணேசன் பரிதவித்துப்போய் சென்னையிலோ, எர்ணாகுளத்திலோ அல்லது கர்நாடகத்தின் ஒரு மூலையில் இருந்தோ, எதை எதையோ பிடித்து ஊருக்கு வருவான். வருவதற்குள் எல்லாம் சரியாகி இருக்கும்.

‘அவ்வளவு பெரிய பிரச்னை இல்லைன்னு சொல்லியிருக்கலாமே?’ எனக் கேட்டால், ‘ஏதோ… இந்தத் தடவை பொழைச்சுக்கிட்டான். இனி அவன் செத்துக் குளிர்ந்தப்புறம் போன் பண்றேன்’ என்பாள்.

கணேசன் குற்றவுணர்வில் மகனிடம் பேச வந்தால், அவனுக்குக் கடுமையான ஏச்சு விழும்.

”எலே… அவர் இன்னிக்கி உன்னியக் கொஞ்சுவாரு. நாளைக்கு நடிகையைக் கொஞ்சப் போயிடுவாரு. அப்புறம் ‘அம்மே…’ ‘கொம்மே…’னு என்கிட்டே வந்தே பார்த்துக்க” – ஆசையாக வந்த பிள்ளை சுருங்கிப் பின்போய்விடுவதைப் பார்த்தபடியே கையற்று நிற்பான் கணேசன்.

ஒருமுறை இதுபற்றி அவளது அப்பாவிடம் பேச முனைந்தான். அவர் சிரித்தபடி டை அடித்த மீசையை நீவிவிட்டுக்கொண்டு, ”உங்களுக்கு நல்ல வேலை இருக்குனுதான் பொண்ணு கொடுத்தோம். இப்படி ஒரு பழக்கம் இருக்குனு தெரியாது.”

அவன் சற்றுக் கோபம் அடைந்து, ”என்ன இப்படிச் சொல்லுதீக? உங்களுக்கு இருக்கிற வெத்திலைப்பாக்கு பழக்கம்கூட எனக்குக் கிடையாது.”

”அதெல்லாம் மாத்திரலாம். இது குடி கெடுக்கிற பழக்கம்லா. எங்க குடும்பத்துல கூத்து ஆடுறவங்களை மதிக்கிறதே இல்லை. ‘கணேசன்’னு பேர் இருந்தா ‘சிவாஜி’னு நினைப்பா. சின்ன வயசுல பண்ணலாம் ஒரு பொழுதுபோக்குக்கு. இப்பவும் அதே சோலியா திரிஞ்சா வீட்டுல கொஞ்சுவாளா?’ என்றார் அவர்.

பெண் யாராவது கணேசனைக் கேட்டு வீட்டுக்கு போன் செய்துவிட்டால், அன்று முழுக்க வீடு தீயின் மீது நின்றாற்போல இருக்கும். பிறகு அது, அவனது நண்பர்கள் யார் பேசினாலும் என விரிந்தது.

ஒரு தடவை மகனுக்கு உண்மையிலேயே டெங்கு காய்ச்சல். ரொம்பக் கஷ்டப்பட்டான். அப்போது கொஞ்ச நாட்கள் நாடகம், சினிமா எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவன் அருகில் இருந்தான் கணேசன். அந்த நாட்களில் ஏறக்குறைய அவன் செத்தவன்போலத்தான் இருந்தான். சாவி கொடுத்த பெரிய பொம்மைபோல. ஒரு மிகச் சிறிய நாற்காலியில் நாள் முழுவதும் உடலைக் குறுக்கி உட்கார்ந்து இருப்பவன்போல உணர்ந்தான்.

ஆனால், அந்த நாட்களில் கல்யாணி சந்தோஷமாக இருந்ததை அவன் கவனித்தான்.ஒருநாள் இரவில் அவள் கூடலுக்கு முயன்றபோது அவனால் முடியவே இல்லை. அவள் சட்டென அவனைத் தள்ளிவிட்டு எழுந்தபடி தன் தலையை ஆவேசமாக முடிந்தவாறே, ”எல்லாத்தையும் கூத்தியாளுக்கே குடுத்துட்டா, அப்புறம் இங்க என்னத்த இருக்கும்?”

கணேசன் மிகுந்த அதிர்ச்சியடைந்தான்.

அலுவலகத்திலும் அவனுக்கு மிகுந்த மன உளைச்சலைத் தந்த நாட்கள் அவை. தமிழ்ப் படம் ஒன்றில் அவன் நடித்த சிறிய வேடம் ஒன்று, எதிர்பாராதவிதமாக நல்ல வரவேற்பைப் பெற்று, ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவனுக்கு ஒரு விருதும் அளிக்கப்பட்டது. அவ்வளவு நாட்கள் அவனது வாழ்க்கையைப் பற்றி அதிகம் கவலைப்படாத அலுவலகம் திடீரென விழித்துக்கொண்டது. சிலர் பாராட்டினார்கள். சிலர் அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்பதுபோல நடந்து கொண்டார்கள். அதிகாரி அழைத்து, ‘அனுமதி இல்லாம எப்படி சினிமாவுல நடிக்கலாம்?’ என மெமோ கொடுத்தார். தான் விடுமுறைகளிலும் விடுப்புகளிலும் மட்டுமே அதைச் செய்ததாக, அவன் பதில் எழுதிக் கொடுத்தான். பதில் ஏற்றுக்கொள்ளப்படாமல், ஓர் ஊதிய உயர்வு நிறுத்தப்பட்டு எச்சரிக்கப்பட்டான். அவனது எத்தனையோ நண்பர்களைப்போல அவனுக்குக் குடியோ அல்லது அதுபோன்ற வேறு எதுவோ தேவைப்பட்ட நாட்கள் அவை. திருவனந்தபுரத்தில் அரிஸ்டோ ஹோமில் தங்கியிருந்த மலையாள டைரக்டரிடம் ஒருநாள் புலம்பினான்.

அவர் ”டால்ஸ்டாயின் மனைவி சோஃபியா அவரிடம் எப்படி நடந்துக்கிட்டாங்க தெரியுமா? அவர் அவளைத் தாங்கவே முடியாம இறுதிக் காலத்துல வீட்டைவிட்டு வெளியேறிப்போய், அநாதையா ஒரு ரயில்வே ஸ்டேஷன்ல செத்தாரு.

மந்தைத்தனம் என்பதுதான் சமூகத்தோட நார்ம். அதைவிட்டு மேலேறி வெளியேற விரும்புறவங்க ஒவ்வொருத்தரையும் அது கொடூரமாப் பழிவாங்கும். இங்கே உன் கதை மட்டும் இல்லை… என் கதையும் எல்லார் கதையும் இதுதான். இங்கே உன் ஆபீஸ், பொண்டாட்டி மட்டுமா, எல்லாருமே இப்படித்தான் நடந்துப்பாங்க. ஒருவகையில உன் பொண்டாட்டி சொன்னது சரி. நமக்கு குடும்பம் சரிப்படாது. குடும்பத்துல உள்ளவங்க பண்ற காரியம் இல்லை இது” எனச் சொல்லிவிட்டு உரக்கச் சிரித்தவர், ”நான் கேள்விப்பட்டிருக்கேன்… தமிழ்ல உள்ள ஒரு பெரிய எழுத்தாளரைப் பற்றி. அவர் மனைவி பற்றி. ஒவ்வொரு சொல்லையும் அவர் மனைவிக்குப் பயந்துதான் எழுதுறார்னு சொன்னாங்க… பாவம்.

அவ சொல்றதும் சரிதானே. நமக்குள் இருப்பது, திமிர்; அழகன்கிற திமிர்; திறமைசாலிங்கிற திமிர்; அறிவாளிங்கிற திமிர். நமக்கு நிறையப் பேரு நம்மைப் பார்க்கணும். நிறையப் பேரு நம்மைப் பாராட்டி நம்மைப் பார்த்து ஏங்கணும்” என்றவர் கூர்ந்து பார்த்து, ”நாம் ஒருவருக்கு உரியவர் அல்ல. நமக்கு நிறையக் குடும்பங்கள் வேணும்” என்றார்.

ஒருவகையில் உண்மைதான். கணேசன் ரொம்ப சுத்தபத்தமாக ஒன்றும் இல்லைதான். சில மேனகைகள் அவன் வழியில் குறுக்கிடாமலோ அவன் மயங்கிடாமலோ இல்லை.

கோவளத்தைச் சேர்ந்த ஒரு நாயர் பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. அவள் மலையாளத்தில் சிறிய வேடங்களில் நடித்துக்கொண்டிருந்தாள்; பிறகு டெலிவிஷனிலும். அழகி அல்ல. ஆனால், நல்ல நடிகை. மலையாளத்தின் புகழ்பெற்ற ஒரு கவிஞர் அவளுக்கு அவனை அறிமுகப்படுத்தினார்.

”கணேசன் நல்ல கலாக்காரன் சாமளே. தமிழன். தமிழன்மாரைப் பிடிச்சுக்கோ. மலையாள சினிமாவுல கலைதான் உண்டு. காசு, தமிழ் சினிமாவுலதான்.”

பிறகு கணேசனிடம் ”சாமளா, இங்கே கேரளத்தின் சுமிதா பாட்டில் இவளாக்கும்” என்றார்.

சாமளா கழுத்தை வெட்டி ”ஏன்… சுமிதா பாட்டில் கறுப்புன்னா..?’

கணேசன் ”கறுப்பே அழகு, காந்தலே ருசி!” என்ற தமிழ்ப் பழமொழியைச் சொன்னான்.

அவள் ”என்ன… என்ன அது?” எனக் கேட்டுப் புரிந்துகொண்டு சிரித்தாள்.

அவனுக்கு அந்தச் சிரிப்பு பிடித்திருந்தது.

அன்று இரவு அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் குடிப்பவர்களிடம் இருந்து விலகி, பின்னால் இருந்த கடற்கரையில் நடந்தான். காற்று பரபரவென வீசிக்கொண்டிருந்தது. அறையின் அடைத்த காற்றுக்கு அந்த உப்புக் காற்று மருந்துபோல இருந்தது.

கொஞ்ச நேரம் கடலின் ஓசையைக் கேட்டவாறே இருந்தான். கடல் ஒரு நாளின் எல்லா பொழுதுகளிலும் ஒரே மாதிரி ஒலிப்பது இல்லை. காலையில் அது ஒரு பாடலை முணுமுணுக்கும் பெண்ணாக இருக்கிறது; மாலை நேரங்களில் பெரும்பாலும் அது எதையோ சொல்ல விழையும் குழந்தையாக… அவனது மகனைப்போல. இரவுகளில் அது நிச்சயமாக சீறுகிறது, அவனது மனைவியைப்போல.

”கணேசனுக்கு வள்ளம் அடி இல்லியோ?”

கணேசன் திரும்பிப் பார்த்தான்.

சாமளா, கேரளத்து வழக்கப்படி மாலை குளித்து, சந்தன வெள்ளைப் புடவையில் கூந்தலைத் தழையவிட்டிருந்தாள்.

அவன் ”இல்லை” என்றான்.

”குடிக்கும்போது எனக்கு கன்ட்ரோல் போயிடுது” என்றான்.

”ஒரு நடிகனுக்கு அது போகக் கூடாது.”

அவள் ”ஏன்… தன்வயம் இல்லாம நடிக்கிறதுன்னு ஒண்ணு கிடையாதா? சைக்கிள் விடுவதுபோல என்னிக்காவது ஒருநாள் அது இயல்பா புத்தி நடுவுல குறுக்கிடாம வந்துடாதா?” என்றாள்.

அவன் ”வரக் கூடாது” என்றான்.

ஒரு கணம் ஏனோ இனம்புரியா ஓர் அச்சத்தில் உடல் நடுங்கியது. எல்லா இடங்களிலும் பாவனை இயல்பாக வந்துவிடுகிற ஒரு மனிதன். கண்ணாடியில் இடம் வலம் மாறித் திரியாது தெரிகின்ற மிகச் சரியான, மிகப் பிழையான ஒரு பிம்பம்.

அவன் சாமளாவிடம் அவன் கதகளி பார்த்த சம்பவம் ஒன்றைச் சொல்ல ஆரம்பித்தான்.

குருவாயூர் கோயிலில் ஒருநாள் அங்கு இருந்த கலையரங்கில் கதகளி நடந்தது. கலா மண்டலம் கோபி மாஸ்டர் அதை நிகழ்த்திக்கொண்டிருந்தார். ஒருநாள் கீசகவதம். மறுநாள் கல்யாண சவுகந்திகம். இரண்டுமே பீமனையும் திரௌபதியையும் மையமாகக்கொண்ட பாரதக் கதைகள். ஒன்றில் பீமன் மிகுந்த ரௌத்திரனாக, பாஞ்சாலியை இம்சிக்கும் கீசகனைக் கைகளால் கிழித்துக் கொல்லும் ஒரு கொடும்கோபனாக வருகிறான். இன்னொன்றில் அவனே ஒரு காதலனாக திரௌபதிக்கு, அவளது இஷ்ட மலரைத் தேடிப்போகிற மெல்லுணர்வு கொண்டவனாக.

கோபி மாஸ்டருக்கு 60 வயது. ஆனால், அவரது பீமனுக்கு எந்த வயதும் இல்லை. அவன் வயதற்றவனாக இருந்தான்.

”அவருக்கு தனது கலையின் மீது உடலின் மீது மிகுந்த கட்டுப்பாடு இருந்தது” என கணேசன் சொன்னான்.

”களி முடிந்ததும் அவரைப் பார்த்தேன். அப்போது அவரிடம் ஒரு துளி பீமன்கூட மிச்சம் இல்லை. அவரால் நினைத்தபோது பீமனை வரவைக்கவும் விரட்டவும் முடிந்தது.”

கணேசனுக்குத் தன் குரலில் இருந்த வியப்பு அவனுக்கே வியப்பாக இருந்தது.

அவள் அதைக் கவனிக்காமல், ” ‘கல்யாண சவுகந்திகம்’னு மலையாளத்துல ரெண்டு சினிமா வந்திருக்கு” என்றாள். ”ஒண்ணு ஜெயபாரதி நடிச்சது. மற்றது திலீப் படம். இரண்டாவது படத்துல நல்ல பாட்டு ஒண்ணு இருக்கு. எல்லா கல்யாண வீட்டுலயும் கச்சேரியில பாடுவாங்க” என்றாள். ”என் கல்யாணத்துல பாடினாங்க” என்றவள் பாடலின் சில வரிகளைப் பாடிக் காண்பித்தாள். ”கல்யாண சவுகந்திகம் முடியனியுன்ன திருவாதிரே…”

‘மண்வீணை உணருன்னு…’ எனப் பாடும் போது அவளுக்குக் கண்ணீர் வந்துவிட்டது.

அவள் நெருங்கி, ஒரு விசும்பலுடன் கணேசன் தோள் மீது சாய்ந்துகொண்டாள்.

அவர்கள் கொஞ்ச காலம் பூவாரில் ஒரு வீடு எடுத்து வாழ்ந்தார்கள். கேரளத்தின் காயல்கள் கால் தொட்டு அலம்பும் ஒரு வீடு.

அவன் அவளது கடந்த காலம் பற்றி எதுவுமே கேட்கவில்லை. ஒருநாள் ”கூத்தாடிகளுக்கும் துறவிகளுக்கும் ஒரே மாதிரியான பூர்வீகமே உள்ளது” என்று மட்டும் சொன்னாள்.

ஒருநாள் அவர்கள் ஒரு சர்க்கஸ் பார்க்கப் போனார்கள். அவன்தான் வற்புறுத்தி அழைத்துப்போனான். அவளுக்கு ஏனோ அதில் இஷ்டமே இல்லை. அவனுக்கு சிறு வயதில் இருந்தே அது மாதிரியான விஷயங்களில் பிரியம் இருந்தது.

மிகச் சுமாரான சர்க்கஸ். அவர்கள் இடைவேளையிலேயே கிளம்பினார்கள். அப்போது ஒரு குள்ளன் ஓடிவந்து, அவர்களை உள்ளே அழைப்பதாகக் கூறினான். உள்ளே சிவந்து தடித்த குட்டையான ஒரு நபர், முகத்தில் பாதி கோமாளி ஒப்பனையுடன் ஸ்டூலில் அமர்ந்திருந்தார்.

இவர்களைப் பார்த்ததும் எழுந்து ”சாமளே…” என்றார்.

சாமளாவின் முகம் இறுகியது, ”அச்சன் இப்போ இவிடத்தோ?” என்றாள்.

”ஆமா, இப்போ இதாக்கும் வேஷம்.”

அவர், இவனை ஏறிட்டுப் பார்த்தார்.

சாமளா, ”இப்போ இவரோட தாமசம்” என்றாள்.

”ஸ்ரீதரன் எவிட சாமளா?”

”தெரியலை அச்சா”

”ஸ்ரீ குட்டியோ?”

”தெரியலை.”

மௌனம். குள்ளன் வந்து ”கலர் வாங்கி வரட்டே?” என்றான்.

அவர் கலைந்து, ”மோளே, மங்கலாபுரத்துல நீ நடிச்ச கடைசிப் படம் பார்த்தேன். இப்போ உன் ஸ்திதி இது. இல்லையா? வேலைக்காரி வேஷம்” என்றார்.

”ஹீரோயின் அந்த மேனோன் அவளுக்கு நடிப்பே வரலை. அவளைக் காட்டிலும்

நீ என்ன குறைச்சல் மோளே?”

சாமளாவின் பாதங்கள் இறுகி, தரையைப் பற்றுவதை கணேசன் பார்த்தான்.

அவள் ”தெரியலை அச்சா” என்றாள்.

அன்று இரவு அவள் தூங்கவே இல்லை.படுக்கை அறையில் கண்ணாடி முன் அமர்ந்து தனது உருவத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். கணேசன் பின்னால் போய் அவளை அணைத்துக்கொண்டான்.

ஆனால், அதுவும் நிற்கவில்லை. ஒருநாள் நல்ல ஒரு கூடலுக்குப் பிறகு சாமளையின் கூந்தலில் தலை புதைத்து அவன் உறங்கிவிட்டான். அவளுக்கு நல்ல கூந்தல் மணம் உண்டு. முல்லையும் தேங்காய் எண்ணெயும் கூடி முயங்கிய ஒரு மணம். நள்ளிரவில் விழித்தான். பெரிய நிலவு, ஜன்னலில் மௌனமாக ஒரு சித்திரம்போல தொங்கிக்கொண்டிருந்தது. மேகங்களே அற்ற துல்லிய வானம். தூரத்தில் காயலின் அலை முகடுகள் சிறிய பளபளப்புடன் தளும்பிக்கொண்டிருந்தன.

அவன் அவளைக் காணாது இறங்கிப் பின் பக்கம் வந்தான். அவள் வாழைமரங்கள் நடுவே போனில் தழைந்த குரலில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள். சிறிய சிணுக்கமும் சிரிப்பும். ஏறக்குறைய சற்றுமுன் கூடலின்போது அவள் முகத்தில் காட்டிய அதே பாவனைகள். கணேசனின் அடிவயிற்றில் இருந்து ஒரு கசப்பு எழுந்தது. அதே சமயம் ஒரு நடிகனுக்கே உரிய வியப்பும் தனக்குள் எழுவதை உணர்ந்தான். சாமளா மிகப் பெரிய நடிகை எனத் தோன்றியது. ஆனால் எது உண்மை, அவள் என்னிடம் காட்டியதா… இதோ போனில் ஒரு முகம் காணாக் காதலன் அவனுக்குக் காட்டுவதா?”

ஒருவேளை கல்யாணியின் வெறுப்புக்கும் இதுதான் காரணமா? இதே முகத்தோடுதானே உன் நடிகைகளையும் கொஞ்சுகிறாய்? என்று ஒருநாள் கேட்டாள்.

”ஆனால், உண்மையான பிரச்னை…” என்றார் டைரக்டர். ”நாம் எப்போதும் தூரப் பார்க்கிறவர்கள். நம் கண் எப்போதும் வானத்து முகட்டில் இருக்கும் நட்சத்திரம் மீதே இருக்கிறது. கலை என்பதே அதுதான். நம்மால் நம் அருகில் இருக்கும் எதையுமே பார்க்க முடியாது என்பதுதான். ரொம்பத் தூரப் பார்க்கிறவர்களை மனிதர்கள் விரும்புவது இல்லை.”

கணேசன், ”ஆனால், கிட்டே இருக்கிறது பார்க்க ஆரம்பித்தால்…” என்றான். ”அங்கே என்ன இருக்கிறது? ஆபாசமும் குப்பையும்… அம்மைக்குழி விழுந்த சாமளையின் கன்னங்கள்.”

”ஆனால், அவையும் கொஞ்ச நாட்கள் அழகாக இருந்தன அல்லவா?”

கணேசன் ”ஆமாம்” என ஒப்புக்கொண்டான். நள்ளிரவு உடைந்ததும் வருகிற விடிவெள்ளிகளைப் போன்ற மிகப் பிரகாசமான அழகுடன் அவை இருந்தன.

”இந்தப் பிளவு என்னைத் துன்புறுத்துகிறது. இந்த வேதனையில் இருந்து தப்பிக்க வழியே இல்லையா? இவர்களுடன் நாம் பேசவே முடியாதா… நாம் எப்போதும் தனிதானா?”

”வேதனையை மறக்க வழி உண்டு. நீ இதுவரை அடைந்தது எல்லாம் சிறிய வெற்றிகள்.

நீ அவர்கள் மறுக்க முடியாத பெரிய வெற்றிகளை அடைய வேண்டும். நீ அவர்களைச் சார்ந்தவன் அல்ல என, அவர்கள் தெளிவாக அவர்களுக்கு உணர்த்தும் பெரிய வெற்றிகளை. தெய்வங்களுக்கு எல்லாம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்பது உனக்குத் தெரிந்ததுதானே. பிறகு, நீ அவர்களிடம் மண்டியிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பை நிறுத்திவிட்டு, அவர்கள் உன்னிடம் மண்டியிட ஆரம்பிப்பார்கள். பிறகு, அவர்கள் உன்னிடம் பிரார்த்தனைகளை மட்டுமே வைப்பார்கள்.”

அப்படி ஒரு வெற்றிக்கான வழியை அவரே உருவாக்கித் தந்தார். அவரது அடுத்த படத்தில் மிக முக்கியமான ஒரு ரோல். அது அவனுக்குப் பெரிய பெயர் வாங்கித் தரும் என்பதை அவனால் உணர முடிந்தது. ஏறக்குறைய அவனது வாழ்க்கையை ஒட்டிய ஒரு கதை. ஒரு கதகளிக்காரனின் அக வாழ்க்கையைப் பற்றிய கதை.

‘கேரளத்தின் கலையைப் பிரதிபலிக்க, ஒரு தமிழன்தான் கிடைத்தானா?’ என, அங்கே பெரிய எதிர்ப்பு எழுந்தது. மலையாள சினிமாவே ஒரு தமிழன் தொடங்கியதுதான் என்று ஓர் எழுத்தாளர் எழுதி கோட்டயத்தில் தாக்கப்பட்டார். ஆனால், டைரக்டர் பிடிவாதமாக இருந்தார்… ”கணேசன் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. தவிர, கணேசன் தாய்வழியில் ஒரு மலையாளி.”

அவன், ஊர் ஊராகப் போய் கதகளி மாஸ்டர்களைப் பார்த்தான்; அவர்கள் வீட்டுப் புற நடைகளில் தூங்கினான். அலுவலகம் மிகுந்த பிரச்னைகளை அளித்தது. அவனது மருத்துவ விடுப்பை ஏற்றுக்கொள்ளாமல் போர்டுக்கு அனுப்பிவைத்தது. அவன் அதற்குச் செல்லவில்லை. அவன் வேலையில் இருந்து விலகினான். கல்யாணி அதற்கு மேல். அவன் படப்பிடிப்பில் இருந்து எத்தனையோ நாட்கள் தனது மகனுடன் பேச முயன்றான். அவள் ஒருமுறைகூட அனுமதிக்கவில்லை.

அந்தக் காலகட்டத்தில்தான் அவனுக்கு வயிற்று வலி வர ஆரம்பித்தது. ஒருநாள் படப்பிடிப்பின் நடுவே மயங்கி விழுந்தான்.எனினும் வலியோடு நடித்தான். ”தொடர்ச்சியான ஹோட்டல் சாப்பாடு காரணம். வீட்டுல இருந்து சாப்பிடுங்க” என ஒரு வைத்தியர் சொன்னார்.

கல்யாணியிடம் போனில் அதைத் தெரிவித்தான்.

”என்னால அங்கே எல்லாம் வர முடியாது. வேலையையும் தொலைச்சாச்சு. உன்னோட கூத்தியாளுங்க யாரையாவது கூப்பிட்டுக்கோ” என அவள் போனை வைத்துவிட்டாள். அன்றிரவு அவன் மிகத் தனிமையானவனாக உணர்ந்தான்.

டைரக்டர் வந்து, ”நீ கொஞ்சம் குடி” எனச் சொன்னார். அவன் குடிக்கவில்லை.

கடும் வேதனைக்கு இடையே படப்பிடிப்பு முடிந்தது. டைரக்டர் அவருக்குத் தெரிந்த ஒரு மருத்துவரிடம் அழைத்துப்போனார். அவர் ஸ்கேன் எடுக்கச் சொன்னார். மறுநாள் அவன் இருந்த ஹோட்டலுக்கே போன் செய்து அழைத்து, ”நீங்கள் உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதியாக வேண்டும்” என்றார்.

திருவனந்தபுரம் ரீஜினல் கேன்சர் மருத்துவமனையில் அவனைச் சேர்த்தார்கள். அவன் கல்யாணிக்குத் தகவல் அனுப்பினான். ‘சாமளையைக் கூப்பிட வேண்டாம்’ எனச் சொல்லிவிட்டான்.

ஒருவாரம் கழித்து கல்யாணி வந்தாள். அதற்குள் புற்று முழுக்கப் பரவிவிட்டது எனக் கழுத்து வரை குடலை வெட்டி எறிந்துவிட் டார்கள். மீதம் இருந்தது உணவுக்குழாய் மட்டும்தான். அதன் வழியே சிறிது தண்ணீர் அருந்த முடியும். மிகுந்த சிரமத்துக்குப் பிறகு, கொஞ்சம் அரைத்த கூழ் போன்ற கஞ்சி. அதையும் பல நேரம் வாந்தி எடுத்துவிடுவான்.

படம் வெளியாகி பெரிய வெற்றி அடைந்தது. டைரக்டர் அவனைப் பார்க்க வந்தார். சில பத்திரிகை விமர்சனங்களைக் காண்பித்து. ”எல்லோரும் பாராட்டுறாங்க. சீக்கிரம் எழுந்து வாங்க. இன்னொரு படம் பண்றோம். தமிழ்ல” என்றார். போகும்போது கல்யாணியிடம் கைகூப்பி வணங்கி, ”பெரிய கலைஞன், கொஞ்ச நாள் ஜீவிச்சு இருக்கட்டே” என்றார்.

அவர் போனதும் கல்யாணி அருகில் வந்து படுக்கையில் அவர் வைத்துப்போன செக்கை எடுத்துப் பிரித்துப் பார்த்தாள். பிறகு, ”ப்பூ உங்களுக்கு கஞ்சி செலவுக்குக்கூட காணாது” என்றாள்.

அங்கே ரொம்ப நாள் வைத்திருக்க அனுமதிக்கவில்லை. நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவந்தார்கள்.

அம்மா ஒருநாள் வந்து பார்த்தாள். ”நோய் எல்லாம் இல்லைடா. கைவிஷம். உன்னை வசப்படுத்த கைவிஷம் வெச்சிருக்கா எழவெடுத்தவ. திற்பரப்பு மந்திரவாதிகிட்டே அவ போனதைப் பார்த்தவங்க இருக்காங்க. என்னிக்காவது நீ வாந்தி எடுத்தப்ப, அதுல கறுப்பா ஏதாவது இருந்துச்சா சொல்லு” என அழுதாள். சற்று தூரத்தில் கல்யாணி சம்பந்தமே இல்லாதவள்போல வேறு எங்கோ பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

அவனுக்கு ஆயாசமாக இருந்தது. ”அவ கைவிஷம் வெச்சிருந்தாகூட, அதுவும் ஒரு அன்புலதானே” என்றான். அவ்வாறு சொன்னது அவனுக்கே வியப்பாக இருந்தது. அவள் போன பிறகு, அன்று முழுக்க கல்யாணியிடம் வெறுப்பைக் காட்டாமல் இருக்க முயன்றான். கையைப் பிடித்து அழுத்தினான்.

அவள் அதைக் கண்டுகொண்டு சட்டென வெடித்து அழுதாள். ”இது என்ன புது இழவு.இதுவும் உன் நடிப்புல ஒண்ணா? நீ நல்லா இருந்தப்ப எல்லாம், வேற யார் யார் கூடயோ இருந்தே. இப்போ கிழிஞ்ச பாய்போல ஆனதும் என்கிட்டே வந்து நாடகம் போடுறியா?”

கணேசன் பேச முயன்றான். சட்டென வார்த்தைகள் வராமல் திக்கிற்று. அவள் அவனை உற்றுப் பார்த்து, ”உன்னோட நடிப்பை

நீ நிப்பாட்டவே மாட்டியா?” என்றாள்.

அவனது முதல் வலித் தாக்குதல் அன்றுதான் ஆரம்பித்தது. வலி என்றால் பேய் வலி.

வலி வரும்போது படுக்கையில் வில்லாக வளைந்துவிடுவான். மார்பைன் போட்டுக்கூட அடங்காத வலி. அரசு ஆஸ்பத்திரியில் மார்பைன் ஸ்டாக் அதிகம் இல்லை. அதுபோன்ற சமயங்களில் கத்தி ஊரைக் கூட்டினான். ஆனால், அப்போது எல்லாம் அவனுக்கு ஒரே ஒரு நினைவுதான் இருந்தது. அவன் மகன் நினைவு.

”எனக்கு அவனைப் பார்க்கணும்” எனச் சொன்னான். ”ஒரே ஒருதடவை அவனைப் பார்த்தால் எல்லாம் சரியாகிவிடும்.” அவனுக்கு அது நிச்சயமாக நடிப்பு அல்ல என்பது தெரிந்தது.

‘இல்லை. என் அகம் எனக்கே நிகழ்த்திக் காட்டும் களி அல்ல. இது இந்த வலிபோல மிக உண்மையானது’ என நினைத்துக்கொண்டான்.

அவள் அதை உணர்ந்தவள்போல இளகி முகத்தைத் திருப்பிக்கொண்டு, ”இங்கே வேணாம். அவன் பயந்திடுவான். ஊருக்குப் போய்ப் பார்க்கலாம்.”

அதுவும் சரியாகவேபட்டது. ஊருக்குப் போய் அவனைத் தூக்கிக் கொஞ்ச வேண்டும். அவன் திக்குவாய்க்கு நல்ல டாக்டரைப் பார்க்க வேண்டும்.

”மகனே இனி நான் எந்த நாடகத்துக்கும் போகப்போவது இல்லை. மந்தையில் இருப்பதிலும் சில நன்மைகள் இருக்கின்றன. தங்களது குட்டிகளின் ஸ்பரிச நெருக்கம் அதில் முக்கியமான ஒன்று. இனி நீ திக்க வேண்டாம்.”

சட்டென மீண்டும் வலி தாக்கியது. அவன் ‘ஐயோ…’ எனத் தொண்டை வரை எழுந்த கூவலை அடக்கிக்கொண்டான்.

கணேசன், கலா மண்டலம் கோபி மாஸ்டரை நினைத்துக்கொண்டான். அவரது உடல் மீதான கட்டுப்பாட்டை.

கணேசன் இப்போது தன்னை பீமனாக உருவகித்துக்கொண்டான். கீசகனை வெறும் கையால் பிய்த்துப்போட்ட பீமன். ஒரு கணம் யோசித்து கீசக வதத்தின் முகபாவனைகளைப் படுக்கையில் இருந்தவாறே பாவிக்க முயன்றான்.

ஓர் ஆரம்பத் தயக்கத்துக்குப் பிறகு, அவன் முகம் ஒத்துழைக்க ஆரம்பித்தது. படுத்துக்கொண்டே அவன் செய்யும் விநோத கை அசைவுகளை, அறையில் இருந்தவாறே செவிலி பார்த்தாள். கணேசனுக்கு சாமளா ‘சைக்கிள் விடுவதுபோல’ என இயல்பாகக் கேட்டது நினைவுக்கு வந்தது.

அவனது பாவங்கள் கூர்மை பெற்றன. ஆச்சர்யப்படும் விதமாக வலி குறைந்தது. இப்போது கணேசன் பீமன் ஆனான். கீசகனைக் கொன்ற பிறகு, திரௌபதிக்காக மலர் பறிக்க மலைப் பள்ளத்தாக்கில் இறங்கினான்.

இங்கே திரௌபதி யார்? கல்யாணிதான். ஒரு கணம் கல்யாணி அவனை பீமன் என ஒப்புக்கொள்வாளா?

வலி, மின்னல்போல அரவத்தின் நாவைப்போல ஒரு கணம் அவனைத் தீண்டியது. ஆனால் ஒரு கணம்தான்.

‘நிச்சயம் ஒப்புக்கொள்வாள்’ என நாடகத்தின் அசரீரிபோல ஒரு குரல் கேட்டது.

ஏன் மாட்டாள்? அவன் மலர்களைக் கொணர்கையில்…

அவன் சட்டென உற்சாகமாக உணர்ந்தான்.ஒருவேளை நர்ஸ் போட்ட ஊசி வேலை செய்யத் தொடங்கியதால் இருக்கலாம். கழுத்தை நீட்டி கல்யாணி எங்கே எனப் பார்க்க முயன்றான். அவள் அந்த கவுன்சிலருடன் பேசிக் கொண்டிருக்கிறாளா? கொஞ்ச நாட்களாகவே இவன் கண்ணில் படவில்லை. எனினும் அவன்தான் கல்யாணிக்கு உதவிக் கொண்டிருக்கிறான் எனத் தெரிந்தது. ‘எனக்கு எல்லாம் தெரியும்’ என அவளிடம் சொல்லலாமா என யோசித்தான். வேண்டாம். போகட்டும். மந்தைகளுக்கும் ஒரு வழிதெட்டு வேண்டும் அல்லவா?

எல்லாவற்றையும் சரிசெய்துவிடலாம்.

பாலவிளை கணேசன் என்கிற பீமன், புன்னகையுடன் கண்களை மூடிக்கொண்டான்.

அந்தக் கடும் கிறிஸ்துவ செவிலி பணி முடியும் நேரத்தில் மீண்டும் ஒருமுறை சுற்றி வருகையிலும், அவன் அதே புன்னகையுடன் கண்கள் மூடித்தான் இருந்தான். பீமனைப்போல தோள்களைப் பரத்தி, கால்களை அகட்டி விநோதமாகக்கிடந்தான்.

அவள் நெருங்கி வந்து நாடி பிடித்துப் பார்த்தாள். பக்கத்தில் கீழே சுருண்டு தூங்கிக்கொண்டிருந்த கல்யாணியைப் பார்த்தாள்.

பிறகு, அவள் அறைக்குப் போய் தனது தோழியிடம், ”உனது நடிகன் போயிட்டான்” என்றாள்!

- ஆகஸ்ட் 2015 

தொடர்புடைய சிறுகதைகள்
காதல் நிற ஓவியங்கள்
''I feel lousy'' என்றான் அவன். மஞ்சுளா, ஆபீஸ் முடிந்து மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்கிக்கொண்டு பஸ் ஏறக் காத்திருக்கையில், ஒரு கடை வாசலில் தலையைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கும் நபர் யார் எனப் பார்த்தாள்... அட, ஹரி. ''ஹரி, ஏன் இங்க உட்கார்ந்திருக்கீங்க? உடம்பு சரியில்லையா?'' அவன் ...
மேலும் கதையை படிக்க...
அந்த இடத்துக்கு அவர்கள் எப்படி வந்து சேர்ந்தார்கள் என்று தெரியவில்லை. ஏன் வந்து சேர்ந்தார்கள் என்பதும் சரியாகத் தெரியவில்லை. எதனிடம் இருந்தோ தப்பித்து வந்திருக்கிறார்கள். நான் அவர்களிடம் எதற்குப் போய்ச் சேர்ந்தேன், எப்படிப் போய்ச் சேர்ந்தேன் என்பதற்கும் அதே காரணம்தான். எதனிடம் ...
மேலும் கதையை படிக்க...
காதல் நிற ஓவியங்கள்
யாமினி அம்மா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)