நஞ்சு போன பிஞ்சு

 

மரத்திலிருந்த இலைகள் சருகுசருகாய் காய்ந்து விழுந்துகொண்டிருந்தன. பலநாள் உழைத்த களைப்பால் நாய்கள் நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டு எலப்பு வாங்கின. வாகனங்கள் ” டர் டர்” என்ற சத்தத்துடன் அங்குமிங்கும் சென்று கொண்டிருந்தன. இரைச்சலுக்கு மத்தியில் பதினெட்டாம் நம்பர் பேருந்து அண்ணாநகர் பஸ் ஸ்டாப்பில் வந்து நின்றது. அதில் நாற்பது வயதுடைய முத்தழகி பதினொரு வயது வினோதினியுடன் கீழே இறங்கினாள்.

” இங்கேரு புள்ள, பக்கத்துலதான் நம்ண ராசாராசாத்தி டாக்டரு இருக்காக. ஒன்னும் கவலப்படாத. எல்லாம் சரியாய்டும்.”

” அந்த அம்மா நல்லா பாப்பாங்களா…”

” இந்தப் பகுதிக்கே நல்ல டாக்டருனா அவுங்களத்தான் சொல்லுவாங்க. இன்னும் கொஞ்ச தூரம்தான் இருக்கு” அவளைக் கூட்டிக்கொண்டு நடந்தாள். அந்த ஆஸ்பத்திரி முன்பாக வந்து சேர்ந்தனர். ஒரு பெண் டோக்கன் வழங்கிக்கொண்டு இருந்தாள்.

” இங்கேயே இரு. நா போயி டோக்கன் வாங்கிட்டு வர்றேன் ..”

” பதினஞ்சா நம்பர் டோக்கன் ”

ஒவ்வொருவராக உள்ளே சென்று திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

” தல சுத்துறமாறி இருக்கும்மா” என்றவள் மயங்கி விழுந்தாள். நின்றவர்களின் கவனம் எல்லாம் வினோதினியின் பக்கமே இருந்தது.

” இந்தப் பொண்ண தூக்குங்கய்யா ” என்று யாரோ சொல்லவும் இருவர் சேர்ந்து அவளைத் தூக்கிக்கொண்டு அறைக்குள் இருந்த படுக்கையில் படுக்க வைத்தனர். முத்தழகிக்கு பெத்தவளைப் போல மனம் படபடத்தது. கொஞ்ச நேரத்தில் மயக்கம் தெளிந்தாள்.

மிகவும் சோர்வுடன் காணப்பட்டாள். இரத்தமும் நீரும் அவளிடமிருந்து எடுத்து சோதிக்கப்பட்டது.

சிலமணி நேரம் கடந்தது….. ” இவளுக்கு பால்வினை நோய் ” அதிர்ந்து போனார் டாக்டர் ராசராசாத்தி.

” பருவமாகாத இந்தப் பொண்ணுக்கு பால்வினை நோய் எப்படி…” யோசித்தார்.

” அந்த சின்னப் பொண்ண மட்டும் கூப்பிடுங்க ” அழைத்தார் டாக்டர்.தயங்கியபடி உள்ளே வந்தாள் வினோதினி.

” உனக்கு ஒன்னும இல்ல…. சீக்கிரம் சரியாய்டும்.உன்னோட வந்துருக்காங்களே அவுங்க யாரு…”

” அவுங்க தான் எங்க மொதலாளி அம்மா. அவுங்க வூட்லதான் நா வேலப் பாக்குறேன். எங்க அம்மா எறந்தவுடனே அப்பா வேறொருத்தவகள கட்டிக்கிட்டு என்னய இவங்க வீட்லயே வேலக்கி தங்க வச்சுட்டாரு. மாசம் முடிஞ்சா ஆறு நூறு ரூபாய மட்டும் வாங்க வந்துருவாரு.ரெண்டு மூனு மாசமாத்தான் அடிக்கடி மயக்கம் வரவும் அம்மா இங்க கூட்டி வந்தாங்க….”

” அப்புடியா… சின்னப் பொண்ணா இருந்தாலும் வெவரமா பேசுறே… நா… ஒன்னு கேட்டா மறைக்காம சொல்றீயா….”

” சொல்றேங் டாக்டர்….௹’

” ஒன்ன யாராவது கட்டிப்பிடிச்சு எதுவும் செஞ்சாங்களா…”

” ஒன்னும் புரியல டாக்டர்….”

” அது வந்தும்மா….” ஆணும் பெண்ணும் அறைகுறை ஆடையுடன் இணைந்து இருப்பதுபோல ஒரு படத்தை காண்பித்து… ” இதுமாறி யாரும்‌ உன்ன செஞ்சாங்களா…”

” அது வந்து…….” பேச்சை இழுத்தாள் வினோதினி.

” மறைக்காம சொல்லுமா… ஒன்னோட நல்லதுக்குத்தான்….

” அஞ்சாறு மாசத்துக்கு முன்னாடி எங்க மொதலாளியம்மா மயன் பாண்டியன் என்கிட்ட வந்து கட்டிப் புடுச்சாரு. எதுக்குனு கேட்டேன். நீ சின்னப்பொண்ணு ஒனக்கு ஒன்னும் தெரியாது. வா…. அப்புடினு அவரோட ரூமுக்குள்ள கூட்டிப் போனாரு…”

”எத்தனயோ பேர்கிட்ட போயிருக்கேன். ஆனா ஓம் மேலதான் எனக்கு ஒரு மாதிரியா இருக்கு. அம்மா ஊருக்கு போயிட்டாக.. அப்பா ஆபிசுக்கு போயிட்டாரு. நானும் நீயும்தான். இன்னைக்கி ஒருமுறை சம்மதிச்சா உனக்கு விடவே தோணாது. அவ்ளோ சொகமா இருக்கும். ஒருமுறை செய்வோம். ஒனக்கு புடிக்கலனா அப்புறம் வேண்டாம்னு கெஞ்சுனாரு. அவர பாக்க பாவமா இருக்கவும., சரினு சொன்னேன். …”

” என்னன்னமோ பண்ணுனாரு.. எனக்கு புரியல.அப்புறம் யாரும் இல்லனா அடிக்கடி தொந்தரவு பண்ணுவாரு…. தேமி…தேமி அழுதாள்… ” இதேமாதிரி பலநாள் வலுக்கட்டாயமா செஞ்சாரு….”

” சரி… அழுகாதம்மா…இப்புடி அடிக்கடி மயக்கம் வருமா….”

” இப்ப கொஞ்ச நாளா… மயக்கம் வரவும் அம்மாதான் இன்னைக்கி உங்ககிட்ட கூட்டி வந்தாங்க…”

ஏதோ யோசித்தவர் ” நர்ஸ் அந்த அம்மாவ வரச் சொல்லுங்க….”

வேர்த்து விறுவிறுத்தவளாய், ” அவளுக்கு என்னாச்சு டாக்டர்…”

” உங்க பையன் என்ன பண்றான்…”

” அவன எதுக்கு கேக்குறீங்க… நம்ம ஊர் காலேஜிலதான் எம்எஸ்சி படிக்கிறான். இன்னக்கி அவங்க பிரண்டு வீட்டுக்கு போறதா சொல்லிட்டு போயிருக்கான். ஏன்….டாக்டர் பேச்சை இழுத்தாள்.

” சொல்றதுக்கு மனசு கஷ்டமாயிருக்கு. இந்தப் பொண்ணுக்கு வந்துருக்க நோய் சாதாதண நோய் இல்ல. எய்ட்ஸ் நோய்க்கு ஆரம்பமான பால்வினை நோய். உங்க பையன்தான் காரணம். உங்க பையன நான் பாக்கனுமே…..”

அதிர்ந்து போய் சுவற்றில் சாய்ந்தாள். ” ரொம்ப நல்லவனு நெனச்சேனே… எவ்ளோ….. செலவானாலும் பரவாயில்லை. ரெண்டு பேரையும் காப்பாத்திருங்க டாக்டர்…..” கண் கலங்கினாள்.

” காப்பாத்துறேமா…. இந்தப் பொண்ணோட வாழ்க்கை பாழாப் போயிடுச்சே… அதுக்கு என்னப் பண்ணப் போறீங்க….”

” இதுவரைக்கும் மகளா நெனச்சுருந்தேன்… இன்னயிலேருந்து மருமவளா ஏத்துக்குறேன் டாக்டர்…..” வினோதினியின் கைகளை இறுக பிடித்தாள்.

அப்போது டிங்….டிங்….டிங்…..என்ற சத்தத்துடன் ஆம்புலன்ஸ் ஒன்று வந்து நின்றது. ரெண்டு பேர் சேர்ந்து ஒருவரை தூக்கிக்கொண்டு வந்தனர்.

” இருங்கம்மா…. வர்றேன் …”

வேகமாக எழுந்து அவசர வார்டுக்கு வந்தார் டாக்டர்.

” டாக்டர் …..ஹீரோ ஹோண்டாவுல வரும்போது லாரி மோதி ஆக்ஸிடன்டாயிருச்சு. வேகத்துல பாருங்க….” கதறினான் ராம்கி.

சிகிச்சை அளித்தும் பலனில்லை. முதுகு தண்டுவடமும் தலையும் சேதமாகியிருந்ததால் இறந்து போனான்.

” என்னாச்சு…. டாக்டர்…. ”பதட்டத்துடன் கேட்டான் ராம்கி. கையை விரித்து சென்றார் டாக்டர்.

” யாருப்பா ராம்கி….” பரபரப்புடன் கேட்டாள் முத்தழகி.

” அம்மா….நீங்களா…. நம்ம பாண்டியன்தானம்மா….” அவள் காலில் விழுந்து கதறினான்.

” பாண்டியா….. பாண்டியா…..” கதறல் ஒலியில் மருத்துவமனையே அதிர்ந்தது.

விபரம் தெரியாதவளாய் இருந்த வினோதினிக்கு அப்போதுதான் விபரம் தெரிந்தது.

ஏக்கத்துடன் ஆஸ்பத்திரி சன்னலை உற்றுப் பார்த்தாள். செத்துப்போன ஈயை எறும்பு ஒன்று இழுத்துச் சென்றது. 

தொடர்புடைய சிறுகதைகள்
"நாம அப்புடி பேசிருக்ககூடாதோ... போயும் போயும் கல்யாணம் நடக்குற எடத்துல அப்புடி நா பேசினது சரியில்ல.... இல்ல பேசுனது சரிதான் .. அப்புடி பேசுனாத்தான் மத்தவனுகளும் திருந்துவானுக நாட்ட ஆளுறதுல இருந்து நாசமா போக வைக்கிற வரைக்கும் ஏதோ ஒரு வாத்தியாருகிட்ட ...
மேலும் கதையை படிக்க...
கருவேலாங்காட்டு ஒத்தயடிப் பாதையில் பசுவும் கன்றுக்குட்டியும் போவது போல தன் ஐந்துவயது குழந்தை மீனாவைக் கூட்டிக்கொண்டு முனுமுனுத்துக் கொண்டே பேருந்து நிறுத்தத்துக்கு வந்தாள் செல்லம்மாள். "எவ்வளவு தான் இருந்தாலும் பொறந்த மண்ணுக்கு வந்த மகள் எல்லாம் சந்தோசமா திரும்புவாங்கனு பேரு, ...
மேலும் கதையை படிக்க...
''இந்தக் கூறுகெட்ட உலகத்துல காலம் போறதே தெரியமாட்டேனுது... எப்புடியாவது திங்ககெழம சந்தையில எலந்தப்பழத்த வித்துறனும். கனகுக்கு மாத்திக்கிறதுக்குக்கூட வேற பாவாடை இல்ல. கிடைக்கிற காசுக்கு நல்ல பாவாடைய வாங்கிட்டு இருட்டுறதுக்குள்ள வீடு வந்து சேந்துறனும். தனக்குள்ளயே பேசிக்கொண்டு கனகையும் கையில் பிடித்துக்கொண்டு ...
மேலும் கதையை படிக்க...
காலை நாலரை மணிக்கு தொழுகையில் ஈடுபட்டுவிட்டு தேர்வுக்கு படித்துக் கொண்டு இருந்தான். பிஸ்மில்லா பானு கூப்பிடுவது கூட கேட்கவில்லை. படிப்பதிலேயே ஆர்வமாக இருந்தான் அக்கிம். நோய்வாய்ப்பட்டு நார்க்கட்டிலில் படுத்த படுக்கையாகவே இருந்தாள் பிஸ்மில்லா பானு. இருமல்,சளி பலத்த சத்தத்துடன் காரித்து ஒரு மண் ...
மேலும் கதையை படிக்க...
மழைத்தூறலாய் வெப்பக்கதிர்கள் பூமியில் விழுந்து கொண்டிருந்தன. தெருநாய்கள் நிழலுக்கு ஒதுங்கி உறங்கிக் கிடந்தன. இலைகள் மண்தரையில் மடிந்து கிடந்தன. காற்றுக்கு அசையாதவைகளாகவே மரங்கள் காட்சியளித்தன. தலையில் உருமாக்கட்டு. இடுப்பில் ஒரு கந்தைத் துணி. தலையில் ஒரு கூடை. அதில் நிறைய வேர்வை சிந்தி ...
மேலும் கதையை படிக்க...
மோகன் வாத்தியார்…
மாற்றம்
சாமக்கோழி..
உச்சிப் பொழுதில் அவள்
விசிறி

நஞ்சு போன பிஞ்சு மீது 0 கருத்துக்கள்

  1. Kannikovil Raja says:

    கதை அருமை. பாராட்டுக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)