தோற்றப்பிழை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 24, 2012
பார்வையிட்டோர்: 9,469 
 

“இங்கே எல்லா அரசியல்வாதிகளும் சாதிய வெச்சித்தானய்யா பொழப்ப ஓட்றாங்க. சாதிக் கலவரத்தைத் தூண்டி விட்றதே இவங்கதான்.பலியாவறது அப்பாவி ஜனங்க. இதான் நம்ம தலையெழுத்து. என்ன பண்றது?.”

சமீபத்தில் மதுரைப் பக்கம் நடந்த சாதிச் சண்டையில் நாலைந்து பேர் செத்துப் போனதைப் பற்றி பேச்சு வந்த போது மதிவாணன் என்கிற எங்கள் மதிப்பிற்குரிய மதி சார் இப்படித்தான் தன் பேச்சை ஆரம்பித்தார். நாங்கள் என்பது மணி ஆகிய நான், நண்பர் தினகர், அப்புறம் தமிழ் வாசகர்களுக்கு பரிச்சயமான எழுத்தாளரும், உள்ளூர் மேநிலைப் பள்ளி ஆசிரியருமான மதி சார். எங்களைப் பிணைத்தது இலக்கியம், அடுத்ததாய் அரசியலும், நாட்டு நடப்புகளும்.

“சார்! நாகூர் ஆண்டவர் கோவிலில் நெரிசலுக்குக் காரணம் முஸ்லீம்கள் இல்லை, இந்துக்கள். வேளாங்கன்னி மாதா கோவிலுக்குப் போறவர்களில் பாதிக்கு மேல் இந்துக்கள்தான். நாம இவ்வளவு பெருந்தன்மையாய் இருந்தும், நம்ம இடங்கள்லதான் குண்டு வெடிக்குது..”—- என்றேன். தினகர் குறுக்கிட்டார்.

“மும்பை தாஜ் ஹோட்டலில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் தீவிரவாதிகள் வழக்கில் தீவிரவாதி கசாபுக்கு மரண தண்டனை வழங்கியதற்கு, அங்கு வசிக்கும் முஸ்லீம்கள் ஆதரவு தெரிவித்து ஊர்வலம் நடத்தினார்கள்.அதுமட்டுமில்லை கசாபுவை முச்சந்தியில் வைத்து தூக்கிலிட வேண்டும் என்று கோஷமிட்டார்கள். இதுக்கு என்ன சொல்ற?.எல்லா இடங்களிலும் நல்லவர்கள் இருக்கத்தான் செய்யறாங்க..”——மதி சார் என் தோளைத்தட்டினார்.

“இதிலிருந்து என்ன தெரியுது?. மக்கள் ஒழுங்காகத்தான் இருக்காங்க. சாதியைச் சொல்லி, மதத்தைச் சொல்லி உசுப்பிவிட்றது அரசியல்வாதிங்க. ராஜாஜி, கக்கன்ஜீ, அம்பேத்கர்,பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர், காமராசர், இப்படி இன்னும் எத்தனை தேசியத் தலைவர்கள்?. நாம என்ன பண்ணோம்?.அவர்களையெல்லாம் அந்தந்த சாதிக் கட்சிகளின் ஆதர்ச புருஷர்களாகவும், தலைவர்களாகவும் சேர்த்துக் கொண்டு பேனர் போட்டுக் கொண்டோம். எல்லா சாதிக் கட்சிகளையும் ஒழிக்கணும்யா. அப்பத்தான் நாடு கொஞ்சமாவது உருப்படும். எஸ்! ஒழிச்சிக் கட்டணும்.”
மதி சார் பொரிந்துத் தள்ளிவிட்டார். அவர் எப்பவும் இப்படித்தான். சில சமயம் ஆவேசம் மேலிட கூச்சல் போடுவார். பகுத்தறிவு சிந்தனையாளர், சமூக பிரக்ஞை கொண்டவர், சீர்திருத்தவாதி. அவருடைய கதைகளில் கடவுள்களும், சாதி வெறிகளும், பிரதானமாய் தாக்கப்படும். சாதிவெறியும், மதவெறியும்தான் நம் நாட்டு வளர்ச்சியின் முட்டுக்கட்டைகள் என்பார். ஊருக்குள் அவருக்கு நல்ல மரியாதை ஊண்டு. எனக்கும்,தினகருக்கும் அவர்தான் ரோல்மாடல்.

லேசாய் இருட்டிக் கொண்டு தூறல் போட ஆரம்பித்தது.. கொசுத்தூறலில் நடப்பதி ஒரு சுகம். அனுபவித்தபடி நடந்தோம். சி.கே.தியேட்டரைத்தாண்டினோம். சாலையின் இருபுறங்களிலும் கட்சிகளின் பெரிய பெரிய பேனர்கள். அவற்றில் கட்சிகளின் படாபடா ஆத்மீக்கள். தான் கொள்ளையடித்த, அடிக்கப்போவதைப் பற்றிய எவ்விதக் கூச்சங்களுமின்றி லைஃப் சைஸில் சிரித்துக் கொண்டிருந்தனர். கூடவே தரணியே!, எதிர்காலமே! மூச்சே!, விடியலே! விடிவிளக்கே!, போன்ற வாசகங்கள் வேறு. காந்தி சிலையருகில் கட்சிக் கொடிகளின் அணிவகுப்பு. காந்தி நட்டின் பொது சொத்தல்லவா?, எல்லாக் கட்சிகளுக்கும் அவரை பங்கு போட்டுக் கொண்டு கொள்ளையடிக்க உரிமை இருக்கிறதாம்.

எல்லாக் கட்சிகளும் தத்தம் உறுப்பினர் அடையாள அட்டைகளைக் கூறுகட்டி விற்றுக் கொண்டிருந்தன.. மக்களும் உஷார் பார்ட்டிகள்தான். எல்லோரிடமும் எல்லாக் கட்சிகளின் உறுப்பினர் அட்டைகளும் இருக்கின்றன. ஜெயிக்கிற கட்சியின் உறுப்பினர் அட்டை மட்டும் ஆக்டிவேட் ஆயிரும். பார்த்துக் கொண்டே நடந்தோம். ஈஸ்வரி லாட்ஜ் வாசலில் ஒரே கூட்டமாயிருந்தது. தடித்த பேச்சுக்களும், அழுகைக் குரல்களும் கெட்கின்றன.

”டாய்!…டாய்!….புடி அவனை….அடிப்பாவி! இது உனுக்கு அடுக்குமாடீ!.”

என்னவோ பிரச்சினை வெடித்திருக்கிறது. இது போன்ற விஷயங்கள் மதி சாருக்கு அல்வா சாப்பிட்ற மாதிரி. வேடிக்கைப் பார்க்க அல்ல,பிரச்சினையில் புகுந்து அதை சரிகட்டப் பார்ப்பார். கூட்டத்தில் புகுந்து விட்டார், நாங்களுந்தான். அங்கே சிவப்பாய், அழகாய், பாவாடை தாவணியில் ஒரு பெண் நிற்க, அவள் கையைப் பற்றிக் கொண்டு ஒரு நீலக்கலர் சட்டை இளைஞன் நின்றிருந்தான். எதிரே அழுதபடி சற்று வயசான தம்பதியும், அவர்களை ஆற்றுப்படுத்தியபடி ஒரு சிவப்புச் சட்டையில் ஒரு வாலிபனும் நின்றிருந்தனர். வாலிபன் அவர்களின் மகனாக இருக்க வேண்டும், ஜாடை தெரிகிறது..
“காதல் ஜோடி விவகாரம்.”—-மதி சார் கண் சிமிட்டினார்.

’ரொம்ப சின்னப் பொண்ணுசார். விவரமில்லாம ஓடி வந்திட்டிருக்கு, பாவம்.”—என்றென்.

“ரெண்டும் ரெண்டு நாளா இந்த லாட்ஜிலதான் தங்கியிருந்திச்சிங்களாம். பொண்ணைப் பெத்தவங்க தேடித்தேடி இப்பத்தான் கண்டுபுடிச்சிருக்காங்க. இம்மாம் சின்ன வயசில என்னா தைரியம் பாருங்க. அந்தப் பொண்ணு மொகத்தில இன்னும் கொழந்தை அம்சமே போவல..’—-தினகர் சற்று கோபமாய் சொன்னார்

“இருங்க என்னா நடக்குதுன்னு பார்ப்போம்.”.—-மதிசார்.

பெரியவர் வேகமாய் வந்து அந்த நீலசட்டைக்காரனைப் பிடித்து உலுக்கினார்.

‘டேய்!…டேய்!…பாவி! புள்ளை மாதிரி நெனைச்சிருந்தோம், இப்படி பண்ணிட்டியேடா/. உருப்படுவியா நீ?. ஐயோ! ஊர்ல எப்படி தலை காட்டுவேன்?. பலானவன் பொண்ணு வேற சாதிப் பையனோடு ஓடிட்டாள்னு தெரிஞ்சா, காரித் துப்பிடுவாங்களே. எங்க சாதியில ஒதுக்கி வெச்சிடுவாங்களே.ஊரே கைத்தட்டிடுமே. பெருமாளே! பெருமாளே!…ஆ!…ஆ!.”

ஆயாசத்துடன் அவர் சாய, ரெண்டுபேர் ஓடிவந்து பிடித்துக் கொண்டனர். நாலைந்து பேர் ஓடிப்போய் நீலச்சட்டையை அடிக்க ஆரம்பித்தனர். மதி சார் குறுக்கே பாய்ந்தார்.

“யோவ்! நிறுத்துய்யா…ஏய்! நில்றா! இங்க வந்து அடிக்கிற வேலையெல்லாம் வெச்சிக்காதீங்க. நியாயத்தைப் பேசுவோம், பேசி முடிவெடுப்போம்..”

“ஆமாமா! வாத்தியாரு சொல்றதுதான் சரி.”—-கூட்டத்திலிருந்து குரல்கள் எழுந்தன. அப்போது பெண்ணின் அம்மா ஓவென்று அழுதுக் கொண்டே வந்து, பெண்ணின் தலையில் ஒரு அடி போட்டாள்..

“அடிப்பாவி! அப்பிடி என்னா வயசாயிடுச்சின்னு இந்த வேலை செஞ்சடீ?.நாம என்னா சாதி, அவன் என்னா சாதி?. இது அடுக்குமா உனக்கு?.இந்த கயிதைக்கு குந்த ஒரு குடிசை இருக்குதா?. இவன் நல்லவன் இல்லடீ. நட்டாத்தில கையை வுட்ருவான். வாணாண்டீ கண்ணூ! வந்துடு. அப்பாவை நானு சமாதானப் படுத்திக்கிறேன்.வாடீ1.”

அவள் அம்மாவின் கையை உதறித்தள்ளிவிட்டு ஓடிப்போய் நீலச்சட்டைக்காரனுடன் ஒட்டிக் கொண்டாள். அம்மாக்காரி தலைதலையென்று அடித்துக் கொண்டு அழுதாள். பெண்ணின் அண்ணன் இப்போது நீலச்சட்டையிடம் வந்தான். அவனைத் தீர்க்கமாகப் பார்த்தான்..

‘டேய் கதிர்வேலு! ஃப்ரண்டுக்கு அர்த்தம் தெரியுமாடா உனக்கு?. அடுத்துக் கெடுக்கிறதா?..”—–நீலச்சட்டை எந்தவித பிரதிபலிப்புமின்றி நின்றான். அதற்கு மேல் ஒரு வார்த்தைகூட அவனை திட்டிப் பேசவில்லை. கண்களை துடைத்துக் கொண்டு தங்கச்சியிடம் வந்தான்.

“மஞ்சு! என்னம்மா இதெல்லாம்?. நீயான்னு இருக்கு?. இவ்வளவு சின்ன வயசிலியா? ஊர்ல நம்ம குடும்பம் இருக்கிற கவுரவத்துக்கு நீ இப்படி செய்யலாமா?. வேணாம்டீ. இவன் நல்லவன் இல்லை, நம்பிப் போவாத. பின்னால அவ்வளவுக்கும் சேர்த்து வெச்சி அழுவணும். வந்திட்றீ!.”

“இல்லண்ணா! நான் வரமாட்டேன்..”—-அவள் தீர்மானமாகப் பேசினாள்.. அண்ணன் சற்று நேரம் அவளையே பார்த்துக் கொண்டு நின்றான்.

“இதுதான் உன் தலையெழுத்துன்னா என்ன பண்ண முடியும்?. தெரிஞ்சிக்கோ.இன்னியோட சரி. எல்லாம் முடிஞ்சிப் போச்சி. இனிமே நீ செத்துட்டாலும் நாங்க யாரும் வரமாட்டோம். நாங்க செத்தாலும் உனக்கு தகவல் வராது. இது சத்தியம்.”

“சார்! பாருங்க. இவனுடைய சத்தியம் அவளிடம் எந்த மாற்றத்தையும் உண்டாக்கலியே.”

“இதன் அர்த்தம் அவளுக்குப் புரிஞ்சுதோ இல்ல்லையோ.சின்னப் பொண்ணுய்யா.”—என்றார் மதி சார். அப்பா ஓடிவந்து அந்தப் பெண்ணை அணைத்துக் கொண்டார்.

“ஏண்டா கொழந்தைய திட்ற.?. விவரம் பத்தாதுடா. கொழந்தைடா.நல்லது கெட்டது தெரியாத வயசு.. என்னா தெரியும்?. கண்டதே காட்சி, கொண்டதே கோலம். எதையும் யோசிக்காம அடாதுடியா செஞ்சிட்ற பருவம். மஞ்சு குட்டி! அப்பா சொல்றத கேளுடா. வாணான்டா. இவன் நல்லப் பையன் இல்லை, துரோகி, சீரழிஞ்சிப் போயிடுவே. தப்புப் பண்ணிட்ட, பரவாயில்ல, மறந்துடு. வா வீட்டுக்குப் போவலாம். திட்டமாட்டேன். மன்னிச்சிட்டேன். சரியா?.”

அந்தப் பெண் மூர்க்கத்துடன் அவரை உதறிவிட்டு நீலச்சட்டைக்காரனுடன் போய் நெருங்கி நின்று கொண்டாள். அப்பனிடம் ஒரு வார்த்தை பேசவில்லை.

“அடிப்பாவி! என்னா துணிச்சல்?. காதலின் வலிமையைப் பாருங்கப்பா. இந்தக் காதல்கள்தான்யா கொஞ்சங்கொஞ்சமாய் சாதிகளை ஒழிச்சிக் கட்டப் போகின்றன. மானுடர்களே!ஆதலினால் காதல் செய்வீர்..”—சொல்லிவிட்டு மதிசார் சிரித்தார்

“ யோவ் பெரியவரே! அவதான் வரமாட்டேன்னு தீர்த்து சொல்றாளே, வுட்டுத் தொலையேன். இல்லேன்னா கூட்டிட்டுப் போயி கவுரவமா இவனுக்கே கட்டி வெச்சிடு, தப்பில்லை..’

‘ அட இது மைனர் பொண்ணுய்யா. கடத்திக் கொண்டாந்திருக்கான். கம்ப்ளையிண்ட் குடுத்து எஃப்.ஐ.ஆர். போட்டாச்சின்னா மாப்பிள்ளை களி திங்க வேண்டியதுதான். இவளுக்கு எது நல்லதுன்னு பெத்தவங்களுக்குத்தான தெரியும்?..——-கூட்டத்தில் ஆளாளுக்கு தீர்ப்பு வழங்கிக் கொண்டிருந்தார்கள். மதி சார் அந்தப் பெண்ணை கூப்பிட்டார்.

“இதோ பாரும்மா! எல்லோருமே இவன் நல்லவன் இல்லேன்றாங்க. நீ நிதானமா யோசிச்சி பதில் சொல்லு. இவன்கூட போவப்போறீயா?, இல்லே உன் அப்பா கூட போவ சம்மதிக்கிறியா?.”——அவள் ஒரு கணம்கூட யோசிக்கவில்லை.

“என் வீட்டுக்குப் போவமாட்டேன். என்னை இவர்கூட சேர்த்து வையுங்க. இவர் இல்லேன்னா நான் உசுரோடவே இருக்கமாட்டேன். சத்தியமா செத்துடுவேன்..”—–அவள் பித்துப் பிடித்தவள் போல கைகளை வீசிவீசி உரத்தக் குரலில் பேசினாள். ஒரு குழப்பம் இல்லை. பதில் தெளிவாக அதேசமயம் தீர்க்கமாக வந்தது. எல்லோரும் ஸ்தம்பித்து நின்று விட்டோம்.. பெற்றவர்கள் தலையில் கையை வைத்துக் கொண்டார்கள்.

“ஐயா! வெவரமில்லாத பொண்ணுங்க, வெகுளி, ஒரு மண்ணுந்தெரியாது. எதையும் உடனே நம்பி எடுத்தேன் கவுத்தேன்னு செஞ்சிட்ற பருவம். சண்டாளப் பாவி கொழந்தை மனசை இப்படி கெடுத்து வெச்சிட்டானே.”

மதி சார் போய் பெரியவர் கையைப் பிடித்தார்.

“ இப்ப இவங்களை சேர்த்து வெக்க எதுய்யா உன்னைத் தடுக்குது?. சாதியா?.”

“ஆமாய்யா! சாதிதான் என்னான்ற?. ”

“த்தூ! ஏன்யா இப்படி சாதி சாதின்னு வெறி புடிச்சி அலையறீங்க?. காலம் எவ்வளவோ மாறிப்போச்சி சாதி இன்னைக்கு மேல்தட்டு மனிதர்களிடமும் இல்லை, கீழ்த்தட்டு மனிதர்களிடமும் இல்லை. நம்மள மாதிரி நடுத்தர வர்க்கம்தான் புலம்பிக்கிட்டு திரியுது. மாறிடுங்க. உம்பொண்ணுதான் ஸ்டெடியா நிக்கிறாளே வுட்ருங்க..”

பெரியவர் மதி சாரை காட்டமாக முறைத்தார்.

“எங்களைப் பத்தி உங்களுக்கு என்னா சார் தெரியும்?. ஊர்ல நாலு பேருக்கு வழி காட்றாப்பல பெருமையா வாழ்ந்தோம்.எல்லாம் போச்சு. இந்த வேஷ்டிய எதுக்குக் கட்றோம்?. மானத்துக்குத்தானே?. அதுவே போயிடுச்சிய்யா. அப்புறம் என்னா இருக்கு?.என்னதான் சாதி இல்ல சாதி இல்லன்னு கரடியா கத்தினாலும் ஒவ்வொருத்தனுக்குள்ளும் அது இருக்குதுய்யா. ஹும்! தலைவலியும், வயித்துவலியும் தனக்கு வந்தாத்தான் தெரியும்.. உம்..போங்க சார்.நாட்ல புத்தி
சொல்றதுன்னா ரெடியா துண்டை தோள்ள போட்டுக்குணு வந்துட்றீங்க.”

நான் கோபத்துடன் பெரியவர் முதுகில் ஒரு தட்டு தட்டினேன்.

“பெரியவரே! அளந்து பேசு.இவர் யாரு தெரியுமா?.”—-மதி சார் மேற்கொண்டு என்னைப் பேச விடவில்லை.

“ஐயா! இவள் உங்க பொண்ணு. வாழ்ந்து முடிச்ச உங்க கவுரவத்தை விட, உங்க பொண்ணுடைய வாழ்க்கை பெருசு, இல்லையா?.எதையும் சுயநலமா முடிவு பண்ணாதீங்க..”

அவர் கொஞ்ச நேரம் மவுனமாக நின்றார்.நிமிர்ந்த போது கண்ணீர் முட்டிக் கொண்டு நின்றது.

“எதுய்யா சுயநலம்? என் பொண்ணோட வாழ்க்கை பாழாகிடக் கூடாதேன்னு அப்பன் கவலைப் பட்றதா சுய நலம்?. அவனைப் பாருங்க பரம ஏழை. அடுத்த வேளை சாப்பாட்டுக்கே கஷ்டம். அப்பன் எப்பவோ போயிட்டான். கூலிவேலை செய்ற அம்மாவின் கஷ்டத்திலதான் கஞ்சி. இப்படிப் பட்டவன் எப்படி இருக்கணும்? நாம படிச்சி முடிச்சி என்னைக்கு அம்மா கஷ்டத்தை வாங்கிக்கப் போறோமோன்னு மனசு துடிக்கணும். படிப்பு மேல கவனமா இருக்கணும். அவன் மனுசன். இவரு காதல் பண்ணிக்கிட்டு திரியறாரு. தொர இப்பத்தான் பி.காம். ரெண்டாம் வருஷம் படிக்கிறாரு. எம் பொண்ணு டெந்த் பாஸ் பண்ணிட்டாள்.ப்ளஸ் ஒன் சேர்க்கணும். எதைப் பத்தியும், யாரைப்பத்தியும் கவலையில்லேன்னு இவன் கூட வந்துட்டாளே.நாளைக்கு பூவாவுக்கு வழி?.சொல்லுங்கய்யா. ரெண்டு இட்லிதான் சாப்புடுவா.அதுக்கு மூணு சைட்டிஷ் வேணும் இவளுக்கு. இவ சித்திரை மாசம் பொறந்தவ. மூணு மாசக் கொழந்தையில வெய்யில் தீட்சண்யம் தாங்காம ஒடம்பு பூரா கட்டி வந்திடுச்சி. அன்னைக்கே இவளுக்காக வீட்ல ஏ.சி. போட்டுட்டேன். நேத்து வரைக்கும் ஏ.சி.யிலதான் தூங்கினா. உள்ளே துடிக்குதுய்யா. ஐயோ! எங்கொழந்த செல்வாக்கா வளர்ந்தவளாச்சே. எங்க போய் சீரழிஞ்சிடுவாளோ?. என்னா கஷ்டப் படுமோ?.பூஞ்சை ஒடம்பாச்சே.சோத்துக்கு திண்டாடுவாளோ?. இத்தையெல்லாம் நெனைச்சித்தான் அழுவுறோம்.”

சொல்லிவிட்டு குழந்தையைப் போல தேம்பினார். அம்மாவும் பிள்ளையும் சற்று தள்ளி நின்று குலுங்கிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பெண் தலை கவிழ்ந்து நின்றுக் கொண்டிருக்க, அந்தப் பையன் தூரப் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான், எந்தவித ரீயாக்ஷனுமின்றி. இப்போது பெண்ணின் அப்பா கண்களைத் துடைத்துக் கொண்டு நீலச்சட்டை பையனை நெருங்கினார்.

“டேய் கதிர்வேலு! குனியாதே. என்னை நேராப் பார்த்துப் பேசுடா. பதில் சொல்லு நீ யார்றா?. உனக்கும் எங்களுக்கும் என்னடா சம்பந்தம்?. நீ இப்படி செய்யலாமா? தர்மமா?. செஞ்சதை சொல்லிக் காட்டக் கூடாதுன்னு சொல்வாங்க. ஆனா நீ சொல்ல வெச்சிட்டியே. காலேஜ்ல என் கூட படிக்கிற ஃப்ரண்டுன்னுதான் என் பையன் உன்னைக் கூட்டியாந்தான். அப்பவே எங்குடும்பத்துக்கு கெட்ட நேரம் வந்திடுச்சின்னு தெரிஞ்சிக்காம போயிட்டோமே. நீ ரொம்ப ஏழைன்னு சொல்லி இந்த ஒரு வருசமா உன் காலேஜ் ஃபீஸை என் புள்ளைதானே கட்டிக்கிட்டு வர்றான்?. அவன் வாங்கிக் குடுத்த புக்ஸைத்தானே படிக்கிற?. இதுவரைக்கும் தப்பா ஒரு வார்த்தை சொல்லியிருப்போமா?. ஒரு ஏழை பையனுடைய படிப்புக்கு உதவி பண்றது புண்ணிய காரியம்னுதான் நாங்களும் சப்போர்ட் பண்ணோம். போதாக்குறைக்கு இவன் அம்மா இந்த வயசான காலத்தில, பி.பி., ஷுகர்னு ஆயிரம் கஷ்டங்கள் இருந்தும். தன் புள்ளை மாதிரியே உனக்கும் காலேஜுக்கு மதிய சாப்பாடு கட்டிக் குடுத்து,…பாவி….பாவி….!..ஒரு வருசமா சாப்பிட்டுப்புட்டு அப்புறம் எப்பிட்றா உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ண மனசு வந்துச்சி உனக்கு?. படுபாவி! இவளுக்கு என்ன வயசு?. நல்லது கெட்டது தெரியுமா?. இவளை நாசம் பண்ணிட்டியே. வயிறெரிஞ்சி சொல்றேன், நல்லா இரு. புண்ணியம்னு நெனைச்சது எங்குடிக்கு தீம்பா வந்து விடிஞ்சிட்டதே பகவானே!.”

அப்போதுதான் அங்கே கூடியிருக்கிற எல்லோருக்கும் விவகாரத்தின் முழுபரிமாணமும் புரிந்தது.
“அட நன்றி கெட்ட நாயே! துரோகி. அட்றா அவனை, ஒதைங்கடா. கைய, காலை ஒடையுங்கப்பா..”———மூலைக்கு மூலை கத்தினார்கள். எனக்கே தாங்க முடியவில்லை. கைகள் துறுதுறுத்தன. ராஸ்கல்! நம்பவெச்சி கழுத்தறுத்திருக்கிறானே.. மதி சாரைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. ஏற்கனவே கை நீளம் அவருக்கு. பற்களை நறநறவென்று கடித்துக் கொண்டிருந்தார்..

“மணி! காதல் திருமணத்தையும், கலப்புத் திருமணத்தையும் நாம வரவேற்கணும்தான். ஆனால் இவன் துரோகிய்யா. துரோகங்களை என்னைக்கும் மன்னிக்கவே கூடாது.. இப்படிப் பட்டவன் நாளைக்கு இந்தப் பொண்ணை கொன்னு போடவும் தயங்க மாட்டான். அந்தப் பொண்ணை இவன்கூட சேர்க்கக் கூடாதுய்யா..”

பெண்ணுடைய உறவினர்கள் ஒரு முடிவோடு பெண்ணை குண்டுக் கட்டாய் தூக்கி வேனில் ஏற்ற முயற்சித்தார்கள். அவள் கைகால்களை உதைத்துக் கொண்டு கூச்சல் போட ஆரம்பித்தாள். பெரியவர் நடப்பதைப் பார்த்து விட்டு

“டேய்!…டேய்!…வாணாம்…வாணாம். வுட்ருங்க. இவ இந்த லெவலுக்கு போயிட்டப்புறம் இழுத்துட்டுப் போயி என்ன பண்றது?. எத்தினி நாளுக்கு கட்டுக் காவல்ல வெச்சிருக்க முடியும்?. இங்கியே தலை முழுகிட்டுப் போவ வேண்டியதுதான்..”

அதைக் கேட்டுவிட்டு அம்மாவும் பிள்ளையும் முகத்தைப் பொத்திக் கொண்டு அழுதார்கள். பெரியவர் தன் பிள்ளையைக் கூப்பிட்டார்.

“ எப்பா! நான் சொல்றாப்பல செய்யிப்பா. பொண்ணு, புள்ளைய வேன்ல ஏத்திக்க. நம்ம ஜனங்களையும் கூட்டிக்கோ.நேரா ஒரு கோவிலுக்குப் போயி தாலிகட்டவெச்சி அவங்க கல்யாணத்த முடிச்சிடு. அப்படியே ரிஜிஸ்டர் ஆபீஸுக்கு கூட்டிம்போயி பதிவு பண்ணி வுட்ரு. பெத்த கடனுக்கு செய்ய வேண்டிய சீர்செனத்திகளுக்கு நான் ஏற்பாடு பண்றேன். ஒரு டெம்போ பேசி ஏத்தி அனுப்பிடலாம்.”

“சரிப்பா!.”

”கெளம்பு. எனக்கு பொண்ணே பொறக்கல. ஒரே பையந்தான்.”—-மேல் துண்டில் முகத்தைப் பொத்திக் கொண்டார். இவ்வளவு நடந்ததுக்கும் கல்லுளிமங்கனாட்டம் வாயைத் திறக்காமலிருந்த நீலச்சட்டைக்காரன் முதல்முறையாக வாயைத் திறந்தான்.

“இந்தப் பொண்ணை நான் கட்டிக்க மாட்டேன்..”

“டாய்!…டாய்!…ராஸ்கோலு!. உதைக்காம நீ வழிக்கு வரமாட்டடீ. வாத்தியாரே! நீங்க கொஞ்ச நேரம் ஒதுங்கி நில்லுங்க நாங்க பார்த்துக்கறோம். இன்னிக்கு உனக்கு நாயடி பேயடிதாண்டியேய்!”
“அடீங்! இட்டாந்து லாட்ஜில ரூம் போட்டுட்டு, பொண்ணைக் கெடுத்துட்டு, நாயிக்கு திமிரைப் பார்றா. ஒதைங்கடா., மவனே! நாஸ்தியாயிடுவே.”

மதி சார் கயை உயர்த்தி கத்திய கும்பலை அடக்கினார். எட்டி கொத்தாக அவன் ஷர்ட்டைப் பிடித்தார்.

“உண்ட வீட்டுக்கு துரோகம் பண்ணிய பொறம்போக்கு. டேய்! நீ பண்ணியிருக்கிற காரியத்துக்கு, அப்பவே உன்னை கூறுகூறா வகுந்திருக்கணும். இவங்கள்லாம் அப்பிராணிகளா இருக்கவும் பொழைச்சே.. சரி சரி……சொல்லு, ஏன் அவளை கட்டிக்க மாட்டே.”——அவன் மிடறு விழுங்கினான்.

“சொல்றா.”

“அவங்க சொல்றாப்பல இவள கட்டிக்கிட்டா அப்புறம் எங்களுக்கு சாப்பாட்டுக்கு வழியில்லை .”

‘அதுக்கு?.’

“ஊர்ல இவ அப்பா பேர்ல இருக்கிற நாலு ஏக்கரா,எழுபது செண்ட் பம்ப்செட்டை எம்பேருக்கு எழுதி வெச்சா கட்டிக்கிறேன்.”

அவ்வளவுதான் அடக்கி வைத்திருந்த ஆத்திரம் பீறிட பாய்ந்து விட்டார்.. பளார்பளாரென்று அறைந்துத் தள்ளிவிட்டார். நானும் என் பங்கிற்கு இரண்டு அடி போட்டுவிட்டு தூர விலகிப் போய், பால்வாடி ஸ்கூல் வேப்பமரத்தினடியில் நின்றேன். கூட்டத்திலிருந்தும் தர்ம அடி விழுந்தது. பொம்பளைகள் சிலர் அந்தப் பெண்ணிடம் போய் திட்டினார்கள்.

“டியேய்! போக்கத்தவளே!. பெத்தவங்களை சுலுவா தூக்கிப் போட்டுட்டு இவன் பின்னால ஓடியாந்தியே. எங்க நோட்டம் வெச்சான் பார்த்தியா?.காதலாம் காதலு. போ! போய் நாண்டுக்கிட்டு சாவு.”

அவள் பேந்த பேந்த முழிச்சிக்கிட்டு நின்றாள். அந்தப் பையன் பேசிய வார்த்தைகள் அவளுக்கு ஜீரணிக்க வில்லை போலும். அதிர்ச்சி அவள் கண்களில் தெரிந்தது. இவன் அப்படிப்பட்ட ஆளா?. கண்ணீர் முட்டிக் கொண்டு நிற்கிறது. அவன் கையைப் பற்றிக் கொண்டிருந்த பிடியை எப்போதோ விட்டுவிட்டிருந்தாள்.

தினகரன் போய் நீலச்சட்டைப் பையனிடம் சண்டை போடுக் கொண்டிருந்த மதி சாரை நான் நின்றிருந்த வேப்பமரத்தினடிக்கு இழுத்துக் கொண்டு வந்தார். மரத்துக்கு அந்த பக்கத்தில் நான் உட்கார்ந்திருப்பதை அவர்கள் கவனிக்கவில்லை.

“ராஸ்கல்! என்னா திமிர் பார்த்தியா?.என்னா வயசு?, அதுக்குள்ள எம்மாம் திருட்டு புத்திய்யா? என்னால நம்பவே முடியலய்யா. .நாலு ஏக்கரா எழுவது செண்ட்டுன்றதைக் கூட துல்லியமா பார்த்து வெச்சிருக்கான் பாரு.சே! ப்ளான் பண்ணி கெடுத்திருக்கான்யா.இது மனசையும் மனசையும் பார்த்த காதல் இல்ய்யா.. மனசையும் பணத்தையும் பார்த்து வந்த காதல். இவனை வுடக்கூடாது.செமத்தியா ஒதைச்சி தொரத்தறதே சரி. உம் சொல்லிட்டா ஜனங்களே பிச்சியெடுத்திடும். கச்சேரிதான். பொறுக்கி ராஸ்கல்,கன்னிங் ஃபெலோ.”——-அவருக்கு கோவத்தில் மூச்சிரைத்தது. எங்கள் மதி சார் கயமைத்தனத்தை பொறுத்துக் கொள்ளவே மாட்டார்..

தினகர் அக்கம் பக்கம் பார்த்துவிட்டு
“ சார்! ஒரு விஷயம். பய நம்மாளு சார்.”

“என்னய்யா சொல்ற?.’

“ஆமாம்.தரோவா விசாரிச்சிட்டேன். நம்மசாதிப் பையந்தான்.”—தினகர் குரல் சற்றேரக்குறைய கிசுகிசுப்பாயிருந்தது. மதி சார் எதுவும் பேசவில்லை.அமைதியாகி விட்டார்.

“என்ன சார்?.’

பதிலில்லை கொஞ்சநேரம் மவுனமாக நின்றார் எனக்கு அவர் செயல் புதிராய் இருந்தது.

“ சார்….சார்.”

இப்போது அவர் இரண்டு பக்கங்களிலும் பார்த்து விட்டு தணிந்த குரலில்
“ஒண்டி ஆளா இம்மா நேரம் அத்தினி பேருக்கும் சவால் குடுக்கும் போதே நெனைச்சேன். பையன் கெட்டிக்காரன்யா. இல்லே? .”—மதி சார் சிரித்தார். தினகரும் சிரித்தார்.

அடப்பாவிகளே! அப்ப எங்க மூணு பேருக்குள்ளேயும் சாதி மறைஞ்சிருக்குது. அதிர்ச்சி. வெறுப்பு கொப்பளித்தது. ச்சே! இந்த நாட்டின் சாபக்கேடு இது.இங்கே சாதி இல்லையென்று வாய் கிழிய முழங்குகின்ற அத்தனை பேரும் பொய்தான் பேசிக் கொண்டிருக்கிறோம்.

– அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி—2010 ல் தேர்வு பெற்ற கதை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *