கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 21,325 
 

மாலையில் பள்ளிக்கூடம்விட்டு வந்தபோது சாமுடியை பஸ் நிலையத்தில் பார்த்ததில் இருந்தே தவிப்பு கூடிவிட்டது. இனிப்புக் கடையோடு இருக்கும் தேநீர்க் கடை ஒன்றின் உள்ளே போய் உட்கார்ந்துகொண்டவுடன் சாமுடி, தேநீருக்குச் சொன்னான். அது வரும் வரை பேசிக்கொண்டு இருந்தோம். பேச்சின் ஊடே திடீர் என என்னிடம் அவன் சொன்னான்.

”வேங்கப்புலி, உங்க ஊரு பாண்டுரங்கன் தென்னந்தோப்பு வெலைக்கு வருதாம்.வாங்கிக்கிறயா?”

அங்கேயே எனக்குக் கவனம் தப்பிவிட்டது. தேநீரை லயித்துக் குடிக்க முடியவில்லை. பழுப்பு நிறத் தேயிலைச் சாறால் நனைந்து இருந்த கண்ணாடிக் குவளையின் வட்ட விளிம்பு, எமது கடந்த காலத்தைப் பொத்திவைத்து இருக்கும் கண்ணாக மாறிவிட்டிருந்தது. கசப் பும், குதூகலமும், அலைதலும் நிரம்பிய அந்தக் குவளையின் விளிம்பில் வாயிட்டு என் கடந்த காலத்தில் இருந்து ஒரு மிடறு பருகினேன். என் அம்மா, தவணக்கொடி என் மனதில் வந்து அமர்ந்துகொண்டார்.

தென்னையின் சிரக்கழிப்பின்போதும், தேங்காய் வெட்டின்போதும் தோப்பு முழுவதும் அலையலையாகப் பரவும் அவரின் ஏவல் குரலும், அதட்டலும் தளும்பித் தளும்பி வந்து நெஞ்சின் விளிம்பில் இடித்தன.

அம்மாவுக்குத் திடமான உடல்வாகு. தெளிவானதும் அழுத்தமானதுமான முகம். மிக தீர்க்கமான பார்வை. ரத்தம் தெறிப்பது போலத்தான் எப்போதும் பேசுவார், நல்ல தைரியசாலி.

அப்பாவோ இதற்கு நேர் எதிர். தயக்கமுடன்தான் பேசுவார். எதிலும் நிறைவு அடையாத வெறுமை, அவர் சொற்களில் கசியும். மௌனக் கூடு ஒன்றை அவர் சுமந்து கொண்டு இருந்தார். மனிதர்களிடம் புழங்கிய நேரம் போக, அக் கூட்டுக்குள் நுழைந்துகொள்வார். ஆனால், அப்பா கடின உழைப் பாளி. எனக்கு மன முதிர்ச்சி உண்டான நாளில் இருந்து நான் இந்த வேற்றுமையைக் கவனித்து வந்திருக்கிறேன்.

எங்களுடன் தோப்பிலேயே தங்கிவிட்ட தாத்தா, அடிக்கடி அம்மாவிடம் அப்பாவைப்பற்றி சொல்வதை நான் செவிமடுப்பேன்.

”என்னாவோ தாயீ. வாய் செத்தவனெ நீதான் பாத்துக்கணும். அந்த ஆண்டவனுக்குத் தெரியாதா? முடிச்சை செரியாத்தான் போட்டுக்கீறான். ஒரு அதவைக்கு ஏத்த தொணையா.”

இப்போது விலைக்கு வந்திருக்கும் பாண்டுரங்கனின் கசத்தோப்புதான் அப்போதைய எங்கள் வீடு. பாலாற்றங் கரையின் ஓரம் இருந்த செழித்த தென்னந் தோப்புகளில் ஒன்று அது. அந்தத் தோப்பில் ஐந்நூறு தென்னைகளுக்கு மேல் இருந்தன. தோப்பை ஒட்டி இருந்த கசம் பெருங் கால்வாயாய் நீண்டு, கூப்பிடு தொலைவில் உள்ள பாலாற்றில் கலக்கும். கசத்தோப்பு என்ற பெயர் இப்படித்தான் நிலைத்துவிட்டது. ஊரைச் சுற்றிலும் நெல் வயல்களும், கரும்புத் தோட்டங்களும், தென்னந் தோப்புகளும் உண்டு. ஊரை அணைத்தபடியே ரயில் பாதை ஒன்றும் போகும். அந்தப் பக்கமாகப் போகும் ரயில்களை வைத்தே எங்கள் ஊர்க்காரர்கள் நேரம் சொல்வார் கள்.

பாண்டுரங்கனுக்கு நிறைய நிலங்கள் இருப்பதாக தாத்தா சொல்வார். கசத்தோப்பு தென்னைகளைத் தாத்தாதான் நட்டாராம். அந்தப் பக்கம் இருக்கும் ஏதோ ஓர் ஊரில் போய் பாண்டுரங்கன் நல்ல கன்றுகளாக வாங்கி வண்டி கட்டிக் கொண்டுவந்தாராம். தாத்தாவும், இன்னும் சில கூலியாட்களும் சேர்ந்து குழி வெட்டி நட்டார்களாம். தாத்தாவின் சுறுசுறுப்பைப் பார்த்து, தோப்பைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டாராம் பாண்டுரங்கன்.

தாத்தாவுக்கு நாலு பிள்ளைகள். பெரியவரான என் அப்பாவின் கைகளுக்கு தோப்புக் காவல் கையளிக்கப்பட்டுவிட்டது. என் சித்தப்பாக்கள் இருவரும் வேறு வேலைகளைப் பார்த்துக்கொண்டார்கள். அத்தைகளுக்குத் திருமணம் ஆகிவிட்டது. ஆகவே, என் அப்பா கனகராசன் கசத்தோப்பின் காவல்காரனாகிவிட்டார். தாத்தாவுக்கு அப்பாவைப்பற்றிய கவலை இருந்தது.

”எப்படி பிழைக்கப்போகிறானோ. வாயில்லாத பூச்சியாக இருக்கிறானே.”

அம்மா வந்து அந்தக் கவலையைத் தீர்த்து விட்டார்.

தாத்தாவின் நம்பிக்கை வீண்போகவில்லை. தோப்பு நிர்வாகத்தை முழுதுமாக அம்மாவே பார்த்துக்கொண்டார். ஓய்வு நேரங்களில் அம்மா, தென்னை மட்டைகளையும், காய்ந்த தேங்காய் புருடைகளையும் பிளந்து வெயிலில் உலர்த்துவார். கத்தியை இறுக்கப் பிடித்து ஒரே வெட்டு. தேங்காய் இரண்டாகப் பிளக்கும். இவை எல்லாம்தான் எங்கள் வீட்டு அடுப்புக்கு விறகு. தென்னைப் பொருட்கள் தீயில் எரிவதே ஒரு விநோதம். சட்டெனத் தீப்பிடித்து மிகுந்த ஒளியுடன் எரிந்து அணைந்துவிடும். தேங்காய் ஓடு எரிவதைப் பார்க்க வேண்டும். எரிநட்சத்திரம் ஒன்று அடுப்பில் வீழ்ந்துவிட்டதாகத்தான் நினைப்பேன்.

சில நேரங்களில் பழுத்த தேங்காய்கள் எனக்கும், அண்ணன்களுக்கும் கிடைக்கும். குரங்குகளும் அணில்களும் கடித்த இளநீர்கள் வெட்டுண்ட தலைகளைப்போல் வீழ்ந்திருந்து பரிதாபத்தைக் கிளப்பும். அவற்றைப் பார்த்தால், தாத்தா அணில்களையும் குரங்குகளையும் திட்டுவார்.

”அதுங்களுக்குப்போக மிஞ்சினதுதான் நமுக்கு. ஏந்திறீங்க மாமோவ்” என்பார் அம்மா.

பெரியவர் பாண்டுரங்கன் தோப்புக்கு வரும் நாட்களில் எங்கள் உற்சாகம் ஒடுங்கிவிடும். தின்றுகொண்டு இருந்த பண்டத்தை யாரோ பிடுங்கிக்கொண்டதைப்போல உணர்வோம். பின்னால் கை களைக் கட்டிக்கொண்டு செறுமியபடி, அங்கும் இங்கும் கீழ்ப் பார்வை பார்த்துக்கொண்டு ஒவ்வொரு மரமாக நோட்டம் விட்டபடியே சுற்றிவருவார். அப்பாவும் தாத்தாவும் அவர் பின்னாலேயே போவார்கள். அம்மா களத்திலேயே நிற்பார். அப்பா அவருக்கு கிழக்கு மூலை தென்னையின் தித்திப்பான இளநீர்களை வெட்டுவார்.

”என்னா பொன்னு, மூல மரத்துங்கள்ள காப்பு கொறையுது?”

”இந்தக் கொரங்குங்க ரோதனை தாங்கல மொதலாளி. வந்து துமுக்குதுங்க. நானும் டப்பாசு வெடி போடறேன். மோளம் அடிக்கிறேன். லேசுல போறதில்ல. மரத்துக்கு நாலஞ்சி காயிங்களச் கடிச்சிட்டுதான் நவுருது.”

தாத்தாவின் குரல் குழைந்து குழைந்து வெளி யேறும். அப்பாவோ பெரும்பாலும் பேசுவது இல்லை. எதைச் சொன்னாலும் ‘செரிங்க’… ‘ஆவுட்டுங்க’ என்பார். அவர் அப்படித் தலை யாட்டுவதைப் பார்த்துவிட்டால், ”நல்லா பூம் பூம் மாடு மாதிரி ஆட்டு. ஐயோ, எம் மனுசனே” என்பார் அம்மா.

பாண்டுரங்கனிடம் அம்மா அதிகமாகப் பேசி நான் பார்த்தது இல்லை. தேங்காய்ப் பத்தைகளைப்போல நறுக் என்று உரிய பதிலை அம்மா தந்தவுடனே அந்தச் சம்பாஷணைகள் முற்றுப்பெறும். ஆனாலும், அவர் அம்மாவிடம் தான் தோப்பு நிலவரங்களைக் கேட்பார். தேங்காய் வெட்டுக்கு ஆள்விட யோசனை பெறுவார். தேங்காய் வெட்டு நடந்த ஒருமுறை அம்மா, பாண்டுரங்கனிடம் சண்டை போட்டது எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது.

அன்று காய்வெட்டு மரம் ஏறுகிறவர்கள் வந்துவிட்டார்கள். தேங்காய்களை எடுத்துப்போட ஊரில் இருந்து பெண் ஆட்களைக் கூட்டி வந்திருந்தார் அம்மா. மரம் ஏறுபவர்கள் இடுப்புப் பட்டைகளைப் பூட்டிக்கொண்டு தென்னைகளில் ஏறத் தொடங்கிவிட்டார்கள். கொஞ்ச நேரத்துக்கு எல்லாம் தேங்காய்க் குலைகளும், ஓலைகளும் விழும் சத்தம் தோப்பு முழுக்கக் கேட்டது.

கூடைகளில் தேங்காய்களைப் போட்டு எடுத்து வந்து ராசி கொட்டினார்கள் பெண்கள். அம்மாவும், அப்பாவும், ஓலைகளையும், பாளை களையும் இழுத்து வந்து களத்தின் ஒரு மூலை யில் சேர்த்தபடி இருந்தனர். மரங்களைப் பார்த்து, தேங்காய்களை வெட்டாமல் விட்டு இருக்கிறார்களா என்றும் பார்த்துக் கொண்டனர்.

”தவணம் அந்த நடுத்தோப்பு மரம் சீராகல பாரு.”

”பொண்ணாளுங்க பேசினு நிக்கிறாங்க பாரு. வேல ஆவுட்டும், வேல ஆவுட்டும்.”

”தவணம் ஒரு பக்கம் ஓல இழுக்கல பாரு. காயிங்க அடியில தங்கிடப் போதுங்க. ஒண்ணெ விடக் கூடாது. கவனமாப் பாரு.”

பாண்டுரங்கனின் ஏவல் குரல்களுக்கு அம்மாவும் அப்பாவும் பம்பரமாகச் சுழன்றனர். கொஞ்ச நேரத்துக்கு எல்லாம் எங்கள் குடிசைப் பக்கம் இருந்த களத்தில் தேங்காய்கள் குவிந்துவிட்டன. ஓலைகளின் போர் இன்னொரு பக்கம் ஏறிவிட்டது. தேங்காய்களை ஏற்றி அனுப்பியதும் ஓலை முடைவதுதான் அம்மாவின் வேலை. ஊரில் இருந்து அதற்கெனப் பெண்கள் வருவார்கள்.

தேங்காய் வெட்டுக்கு மறு நாள் காலையிலேயே லாரிகள் இரண்டைக் கூட்டிக்கொண்டு வந்திருந்தார் பாண்டுரங்கன். தேங்காய்க் குவியல்களை நோட்டம்விட்டுக்கொண்டு இருந்தவருக்குத் திடீர் என்று முகம் மாறியது.

”ஏம்மே தவணம். என்னா காவல் காக்கறீங்க? ராசியில காய் கொறையுதே!”

அம்மாவும் அப்பாவும் பதற்றமுடன் ஓடி னார்கள். தாத்தா ஒரு பக்கம் போய்ப் பார்த் தார்.

”இல்லீங்களே. நம்பள மீறி இங்க ஒண்ணு வெளியில போகாதே!”

”வெளியில போச்சோ, உள்ளவே போச்சோ!”

”இந்த சந்தேகப் பொளப்பே வேணாம் மொதலாளி. இப்பவே தோப்பை உட்டுப் போச் சொன்னாக்கூட போயிடறோம். நீ யாரையாச்சும் வெச்சி காவல் காத்துக்க.”

”அப்போ, வெளியாளு வந்து திருடினு போறவரீக்கும் புருசங்கூட போத்தினு படுத் துனு இருந்தியா தவணம்?”

அம்மாவின் முகம் மாறியது. உக்கிரம் பெற்றவளாக பாண்டுரங்கனின் முகத்துக்கு நேராகப் போய் நின்று கத்தினாள்.

”நாக்கிரோவ். வார்த்தையெ ஒழுங்காப் பேசு!”

வெயில் உக்கிரம் தணியும் நேரம். நாங்கள் வட கரைக்குக் கிளம்பினோம். அங்கு பாலாற்றை ஒட்டிய நிலம் ஒன்றில் பாண்டுரங்கனின் வீடு இருந்தது. என்னோடு சாமுடியும் இரண்டு நிலத் தரகர்களும் இருந் தனர். தென்னந் தோப்புகளுக்கு நடுவே நீண்டு இருந்த தனிமை சாலையில் நாங்கள் பேசிக்கொண்டே போனோம்.

”ரொம்பச் செல்வாக்கா வாழ்ந்தவரு. ஒவ் வொரு சொத்தா வித்துட்டு வர்றாரு.”

”உங்க ஊர்ப் பக்க தோப்பை யாரும் வாங்க முன் வரலியாம். அதான்டா வேங்கப்புலி உனுக்கு ஒரு வாய்ப்பு!” சாமுடி உற்சாகமுடன் பேசியபடியே வண்டி ஓட்டினான்.

பெரியவர் பாண்டுரங்கனுக்கு வயது ஏறி இருந்தது. தோல் சுருக்கங்களின் நெருக்கம் கூடி இருந்தன. உச்சி வரை வழுக்கை கண்டிருந்த தலையில் செஞ்சாந்தில் நீளமான ஒற்றை நாமத்தை இழுத்திருந்தார். முகம் இன்னும் அகன்று தெரிந்தது.

”நல்ல ஜாதிக் காய் மரங்க. மரத்துக்கு எர நூறுக்கு மேல காய்க்கும். வருஷத்துக்கு மூணு வெட்டு.”

எனக்குப் பேச்சுவார்த்தைகளில் மனம் இழையவில்லை. அந்த மனிதரை முகம் கொடுத்துப் பார்க்கப் பிடிக்கவில்லை. முள் மேல் இருப்பதுபோல் இருந்தேன். 15 லட்சத்துக்கு என்று சொன்னது 12 என முடிவானது. திடீர் என்று என்னிடம் பாண்டுரங்கன் கேட்டார்.

”உனக்கு எந்த ஊருன்னு சொன்ன?”

”இப்போ பேசற தோப்பு இருக்கிற ஊர்தான்” என்றான் சாமுடி எனக்குப் பதிலாக.

”நீ தவணம் மகனா?”

எனக்கு உலுக்கிப் போட்டது. நான் அவரைக் கூர்மையாகப் பார்த்துக்கொண்டே தலை அசைத்தேன். நாங்கள் விடைபெறும்போது, அவர் வழி கூட்டும் சொற்கள் எங்கள் காதுகளில் விழுந்தன. நான் மட்டும் திரும்பவில்லை.

இரவில் உறக்கம் பிந்தியது. நான் மாடி அறை முற்றத்தில் நேர விழிப்பற்று உலாவினேன். அந்தத் தோப்பை விலை பேசியிருக்க வேண்டாம் என்று தோன்றியது. நான் மன்னிக்க முடியாத தவறு ஒன்றை செய்யத் தொடங்கி விட்டதாக நினைத்தேன். இன்னொரு விசை யோசனையில் அதை வாங்குவது சரி என்றும் தோன்றியது.

கசத்தோப்பின் வடக்கு மூலையில் இருந்த ஒரு தென்னையில் இருந்துதான் என் தம்பி ராகுலன் விழுந்து செத்தான். அது பாண்டுரங்கன் செய்த கொலை என்றே நான் உறுதியாக நினைக்கி றேன். அப்போது நான் ஒன்பதாம் வகுப்பில் படித்துக்கொண்டு இருந் தேன். விடுமுறை நாள் ஒன்றில் நாங்கள் குடும்பத்தோடு ஊரில் உள்ள ஒருவரின் வீட்டு நிகழ்ச்சிக்குப் போய்விட்டோம். தோப்பில் தாத்தாவும் ராகுலனுமே இருந்தார்கள்.

பொழுது மங்கும் நேரத்தில் யாரோ ஒருவர் ஓடி வந்து, ”ஒம் மகன் மரத்துலேர்ந்து உளுந்துட்டானாம் தவணம்” என்றார்.

அதைக் கேட்டதும் ஊரே அதிர்கிற மாதிரி ”ராகுலா” என்று கத்தினார் அம்மா. ராக்காசியைப்போலத் தோப்பைப் பார்த்து ஓடினார். நாங்கள் எல்லோரும் பின்னாலேயே ஓடினோம். வட மூலையின் ஒரு தென்னை அருகில் விழுந்துகிடந்தான் தம்பி. அவன் உடலில் எந்த அசைவும் இல்லை. அம்மா தரையைப் பேயாய் அடித்துக்கொண்டு அவன் மேல் விழுந்து அழுதார். அவரின் முடி கலைந்து முகத்தை மூடியிருந்தது. அப்பா, தம்பியின் தலைமாட்டில் உட்கார்ந்து அழுதுகொண்டு இருந்தார். நாங்கள் ஆளுக்கொரு திசையில் நின்று கதறினோம்.

நான்கைந்து மரங்கள் தள்ளி வரப்பின் மேல் பாண்டுரங்கன் நின்றிருந்தார். அவருக்குப் பின்னால் அவரின் உறவினர்கள் சிலரும், அவர் மகனின் நண்பர்களும் மிரட்சியுடன் நின்றனர். பாண்டுரங்கன் முகத்தில் சலனமே இல்லை.

”மொதலாளி சொந்தக்காரங்களுக்கு எளநீர் ஓணுமின்னு புள்ளைய மரமேரச் சொன்னாரு. நான் வாணான்னாலும் கேக்கல. உச்சிக்குப் போயிட்டான். புள்ளையால முடியல. எங் கண்ணு எதிர்லயே புள்ள துணி மூட்ட மாதிரி சொத்துன்னு உளுந்துட்டான் தாயீ”- தாத்தா சொல்லிக்கொண்டே குலுங்கினார். திடீரென்று ஆங்காரத்துடன் எழுந்து ஓடி, பாண்டுரங்கனின் சட்டையைப் பிடித்து உலுக்கினார் அம்மா. அவர் அம்மாவை மூர்க்கமாகத் தள்ளிவிட்டு வேகமாகப் போய்விட்டார்.

பாண்டுரங்கன் வீட்டுக்கு நியாயம் கேட்டுப்போன ஊர் சனத்தை, அங்கே காவலுக்கு வந்திருந்த போலீஸ்காரர்கள் அடித்து விரட்டிவிட்டார்கள். நாங்கள் கொடுத்த புகாரை காவல் துறை வாங்கி வைத்துக்கொண்டது. சில நாட்களுக்குப் பின் தம்பியின் மரணத்தைப் பார்த்த ஒரே சாட்சியான எங்கள் தாத்தா, ஊர் ஓரம் இருந்த ஒரு பாழுங்கிணற்றில் பிணமாகக் கிடந்தார்.

எப்போது தூங்கினேன் என நினைவில்லை. காலையில் என் மனம் தெளிந்துஇருந்தது. நாங்கள் எல்லோரும் அந்தத் தோப்பு வீட்டில் பிறந்ததாக அம்மா சொல்லிஇருக்கிறார். தம்பியின் மரணத்துக்குப் பின் தோப்பைவிட்டு வெளியேறியபோது, அம்மா அந்தத் தென்னையின் கீழே நீண்ட நேரமாக அழுதுகொண்டு இருந்தார். அவரைத் தூக்கி நிறுத்தி புறப்படச் செய்தபோது, அம் மரத்தடி மண்ணை முந்தானையில் முடிந்துகொண்டார்.

நாங்கள் அங்கு பிறந்திருக்கிறோம். எங்கள் பிரியமானவர்களின் துர் மரணங்கள் அங்கே நேர்ந்திருக்கின்றன.

அது எமது வீடு. அதை என் அம்மாவுக்குச் சொந்தமானதாக வாங்கித் தருவதைவிடவும் ஒரு சிறந்த பரிசை அவருக்கு நான் தந்துவிட முடியாது. நான் அந்தத் தோப்பை வாங்கிவிடலாம் என மனப்பூர்வமாக முடிவு செய்து கொண்டேன்.

சில மாதங்களுக்கு முன்புதான் அம்மாவின் நடமாட்டம் குறைந்துபோனது. இப்போது அதிகமும் படிக்கையிலும், உட்கார்ந்தபடியும்தான்அவரின் நாட்கள் கழிந்துகொண்டு இருக்கின் றன. நான் பதற்றமுடனேயே இருந் தேன். பத்திரம் கைக்கு வரச் சில நாட்கள் ஆகும் என்றனர்.

நான் எதிர்பார்த்திருந்த நாளும் வந்தேவிட்டது. நிலப் பத்திரத்தைக் கவனமாக ஓர் உறையில் போட்டு பையில் வைத்துக்கொண்டு, ஊருக்குப் புறப்பட்டேன். வழி நெடுக என் மனமும் கண்களும் அடங்காத குழந்தைபோல துறு துறுவென அலைந்தபடியே வந்தன. காற்றடி காலத்தின் போதும், மழைக் காலங்களிலும் தென்னந்தோப்புகள் பேரோசை கிளப்பி தம் ஆகிருதியைக் காட்டும். இப்போது என் மனம் காற்றடி காலத் தோப்பாகி இருந்தது. என் சிறு வயது ஞாபகங்கள் வந்துபோயின.

அம்மா வழக்கம் போலவே என்னை ஆவல் பொங்கப் பார்த்தார். இரண்டொரு வார்த்தைக்கு மேல் அவரால் பேச முடியவில்லை. நான் அண்ணன்களிடம் அம்மாவைத் தயார் செய்யச் சொன்னேன் அவர்கள் முகத்தில் குழப்பச் சாயை படிந்தது.

”ஒரு காரியம் இருக்கு. தயார் பண்ணுங்க.”

அதே ஊரிலேயே வாழ்ந்த தங்கைகளும் எங்களுடன் சேர்ந்துகொண்டனர். தங்கைகள் கட்டிவிட்ட சரிகைப் புடவையில் அம்மா அழகாகத் துலக்கம் கொண்டார். அவரின் முகத்தில் கேள்விகள் மண்டி கலைந்தபடி இருந்தன.

பெரிய அண்ணன் அம்மாவைத் தனது மிதிவண்டியின் பின் இருக்கையில் அமர்த்தி தள்ளிக்கொண்டார். நாங்கள் அவரைச் சூழ போனோம். ஒரு குட்டி ஊர்வலம் போலிருந்த இதை ஊரார் என்ன என்று பார்த்தனர். தங்கைகளுக்கோ பதில் சொல்லி மாளவில்லை.

கசத்தோப்பின் முன்னால் நான் நின்றதும் அம்மாவின் முகம் இறுகிவிட்டது. மற்றவர்களுக்கு ஆச்சர்யமும் குழப்பமுமாக இருந்தது. மகனைப் பறி கொடுத்த பின் இந்த திசையைக்கூடத் திரும்பிப் பார்க்காத வைராக்கியக்காரர் அம்மா. நான் உள்ளே நுழைந்தேன். அம்மாவை அழைத்து வரச் சொல்லி, களத்தில் உட்காரவைத்தேன். குட்டிச்சுவராகியிருந்த எங்கள் வீட்டையும் பாங்கில்லாமல் கிடந்த தோப்பையும் அவரின் வறண்ட கண்கள் துழாவின. வட மூலையில் நிலைகுத்திய அவற்றில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது. தங்கை அவரின் முகம் துடைத்து அணைத்தாள். நான் அழுகை உந்தும் என் மனவெழுச்சியை வெகுவாகக் கட்டுப்படுத்திக்கொண்டு, பையில் இருந்த நிலப் பத்திரத்தை எடுத்து அவர் மடியில் வைத்தேன்.

”அம்மா, இனிமேல் இது உன் தோப்பு.”

அம்மா ஆனந்தமாகச் சிரித்துக்கொண்டே என்னை பூரிப்புடன் பார்த்தார். நடுங்கும் கைகளில் பத்திரத்தைப் பிடித்துக்கொண்டு, நாங்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில் எழுந்து நின்றார்.

ஒயிலும் கம்பீரமும் அவரின் உடலில் வந்து சேர்ந்துகொண்டன. தனது தலையைத் தூக்கி அண்ணாந்து, பழைய கம்பீரமான குரலில் சொன்னார்.

”டேய் பாண்டு, அந்தத் தேங்காயெ எடுத்துக் களத்துல போடுறா…” என் அண்ணன்மாரும், தங்கைகளும் விலா வலிக்கச் சிரிக்கத் தொடங்கினர். நான் வியப்புடன் அம்மாவைப் பார்த்துக்கொண்டு நின்றேன்!

– மார்ச் 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *