தொலைந்து விட்ட உறவு

 

ஆம்புலன்ஸ் வந்ததும் அருந்ததியை ஹொஸ்பிட்டலுக்குக் கொண்டு வந்ததும் ஏதோ கனவு போல் இருக்கிறது.

“எத்தனை வயது”

ஒரு இளம் டொக்டர் அவரிடம் கேட்டது யாரோ எங்கேயோ தூரத்திலிருந்து கேட்பதுபோலிருந்தது.

ரங்கநாதன் திடுக்கிட்டுத் தன்னை நிதானப்படுத்திக் கொண்டார். தன்னிடம் கேள்வி கேட்டபடி தன்னில் பார்வையைப் பதித்திருக்கும் அந்த இளம் டொக்டரைச் சட்டென்று நிமிர்ந்து பார்த்தார்.

டாக்டர் இன்னுமொரு தரம் திருவாளர் ரங்கநாதனிடம் அதே கேள்வியைத் திருப்பிக் கேட்டார்.

“ஐம்பத்தைந்து” ரங்கநாதன் சொன்னபோது முப்பது வருடங்களுக்கு முன் தன்னை கைகூப்பிப் பார்த்த அந்த இளம் பெண் அருந்ததி ஞாபகம் வந்தாள். அந்த அருந்ததிக்கும் இந்த அருந்ததிக்கும் எத்தனை வித்தியாசம்?

அவர்களின் மகள் மைதிலிக்குப் இன்னொருதரம் போன்பண்ண வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

அவள் இல்லை. இத்துடன் நான்காவது தடவை அவர் அவளுக்குப் போன் பண்ணி விட்டார். வேலையால் வந்து விட்டிருக்கலாம் என்றுதான் யோசித்தார்.

அப்பாவுக்கும் மகளுக்கும் இருந்த நெருக்கம் அவருக்கும் அவரின் மனைவியான அருந்ததிக்குமிருந்ததா?

முப்பது வருடத் திருமணத்தின் திருப்பு முனையாக இன்று அவளுக்கு அவர் பணிவிடைசெய்கிறார்.

அவளின் வலது கை உயிரற்றுக் கிடந்தது. வாய் கோணியிருந்தது. கண்கள் இவரை ஏதோ ஏக்கத்துடன் பார்ப்பதுபோலிருந்தன.

டாக்டர் பிளட் பிரஷர் எடுத்தார். ரங்கநாதன்.தன்னுடைய டாக்டர் பணியில், எத்தனையோ தரம் செய்த வேலை. டாக்டர் ரங்கநாதன் சாதாரண மனிதனைப்போல்த்; தன் முன்னே நடக்கும் சம்பவங்களை வேடிக்கை பார்ப்பது போலிருந்தது.

‘எநசல ளநஎநசந ளவசழமந” (மிகவும் கடுமையான பாரீசவாதம்) ஆங்கில டாக்டர் ரங்கநாதனிடம் சொன்னார்.

உணர்ச்சியில் ஊசியேறியதுபோல் தைத்தது. அருந்ததியைக் காலையில் பார்த்தபோது வழக்கம் போல் பளிச்சென்று இவருக்குக் காலைச் சாப்பாடு செய்து தந்தாள். முதல் இவருடைய அம்மா ஒரு காலத்தில் சொன்னதுபோல் அவள் முகம்“லட்சுமிகரமானது”.

“யாராயிருந்தாலும் எனக்கென்ன? யாரையோ கட்டித் தொலைக்கத்தானே வேணும்” கல்யாணத்தை ஏனோ தானோ என்று அலட்சியமாய்ப் பேசியபோது அருந்ததியைப் பற்றி அம்மா சொன்ன வார்த்தைகளில் அதுவுமொன்று.

“லட்சுமிகரமான முகம்”

ரங்கநாதன் தாயைப் பார்க்காமல் சொன்னார் “லட்சுமியோ சரஸ்வதியோ தாடகையோ சூர்ப்பநகையோ தாலி கட்டுறன். உங்களுக்குத் திருப்தி தானே.”

“என்னை உங்கட அம்மாவுக்காகத்தானே செய்தியள்” அம்மா இறந்த பின் அருந்ததி இவரிடம் ஒரு இரவின் இருளில் கேட்டாள்.

இருபது வருடத் தாம்பத்தியத்தின் நெருக்கம் “இருட்டைத் தாண்டாதது” என்று அவளுக்குத் தெரியும்.

மனிதம் சிலிர்த்து மன்னிப்புக் கேட்கத் துடித்தது. ஆண்மை கொக்கரித்து அதை அடக்கி விட்டது.

அந்த இரவின் இருளின் அமைதியில் அவர் தன்னை ஒடுக்கிக் கொண்டார்.

அம்மா இறந்து ஒரு வாரத்தின் பின் துக்கம் விசாரிக்கச் சொந்தக்காரர்கள் வந்து போய்க் கொஞ்சம் ஆரவாரங்கள் ஓய்ந்தபின் ஒருநாள் தலையிடி தாங்காமல் ஒன்பது மணிக்குக் கட்டிலுக்கு வந்தார். தலையிடிக்கு மாத்திரைகளும் கையில் தண்ணியுமாக அவள் வந்தாள்.

அம்மா போய்விட்டாள். அவரின் நெருக்கத்தின் ஒரு கொடி அறுந்த வேதனை.

ஐம்பது வயது மனிதன் அழுதுவிட்டார். “அம்மா……..” அதற்குமேல் அவரால் பேச முடியவில்லை. இருட்டில் துவண்டு துடித்தார்.

“லைட் போடட்டா” அவள் வாசலில் இன்னும் நின்று கொண்டிருந்தாள்.

“உம்ம்” வேண்டாம் என்ற அவரின் “உம்ம்” மிகக் கடுமையாக வந்தது.

ஹால் வெளிச்சம் படுக்கையறையில் பாய்ந்து அவரின் சோக நிலையைத் துல்லியப்படுத்தியது.

“அம்மாவுக்காகத்தானே என்னைச் செய்தியள்”

அவள் இருபது வருடம் பதுக்கிவைத்த கேள்வி இருதயத்தைப் பிழந்து கொண்டு இவரைத் தாக்கியது.

அவள் குரலில் கோபமில்லை. இவருக்கு முன்னால் கோபப்பட்டதுமில்லை.

இவ்வளவு காலமும் கேட்க நினைத்த கேள்வியை இன்று தவிர்க்க முடியாத நிலையில் கேட்ட தோரணை.

இரவின் மயக்கத்தில் இவர் பிடியில் துவண்ட சமயத்தில் சிணுங்கல்களின் துணையோடு அந்தக் கேள்வியைக் கேட்டிருந்தால் காதல் போதை மயக்கத்தில் உண்மையைச் சொல்லியிருந்திருப்பார்.

இவர் திருப்திக்காகத் தன்னைக் கொடுப்பவள் தன் திருப்திக்காக எதையும் வாய் திறந்து கேட்டதில்லை.

வருடத்திற்கும் தீபாவளிக்கும் வாங்கித்தரும் சேலைகளும் நகைகளும் அவளின் மௌனமான புன்னகையுடன் ஏற்றுக்கொள்ளப்படும்.

“இந்த சாரதாவுக்கு என்னத்தைக் கொடுத்தாலும் திருப்தி கிடையாது” தன் நண்பன் தன் மனைவியைப் பற்றி முறையிட்ட போது அருந்ததியின் பொறுமை அல்லது பெருந்தன்மை மனதிற்பட்டது.

“நீண்ட நாள் ஹாஸ்பிட்டலில் இருக்க வேண்டி வரலாம்”

டொக்டர் ரங்கநாதனை அவரின் இந்த நினைவிலிருந்து திருப்பியழைத்தார்.

“தெரியும்” டொக்டர் ரங்கநாதன் முணுமுணுத்தார்.

இளம் டொக்டர் இவரை ஏறிட்டுப் பார்த்தார்.

“நானும் ஒரு டொக்டர்”

ரங்கநாதன் மனைவியின் கைகளை பற்றியபடி சொன்னார்.

சட்டென்று ஏதோ புதுமையாகச் செய்வதுபோல் இருந்தது. முப்பது வருட திருமணத்தில் எத்தனைதரம் அவள் கைகளோடு தன்னைப் பிணைந்திருப்பார்?

“தேவையான மருத்துவப் பரிசோதனைகளை எல்லாம் முடித்தபின் பிசியோதெரப்பி செய்யலாம்.”

டொக்டர் சொல்லிக் கொண்டிருந்தார்.

இவர் தலையாட்டிக் கொண்டார்.

மகள் மைதிலிக்குப் போன் பண்ண வேண்டும்.

இன்னொருதரம் அவள் நம்பரைத் தட்டுகிறார்.

“நான் வீட்டில் இல்லை. உங்கள் நம்பரையும் தேவையான செய்தியையும் இந்த ஆன்ஸர் போனில் வைத்து விடுங்கள்”

அவளின் ஆன்ஸர் போன் இன்னொருதரம் இவருக்குச் செய்தி சொன்னது.

“உடனடியாக என்னைத் தொடர்புகொள்” என்று இவர் ஏற்கனவே செய்திவைத்துவிட்டார்.

“மைதிலி எங்கே போய்விட்டாள்”

கேட்கத் தேவையில்லாத கேள்வி. மைதிலி தனது காதலன் பீட்டரைப் பார்க்கப் போயிருக்கலாம்.

“அப்பா பீட்டர் ஆங்கிலேயராக இருந்தாலும் எங்கள் கலாச்சாரத்தில் மிகவும் ஈடுபாடுடையவர்.”

மைதிலி தான் பீட்டர் ஹீலி என்ற தன் சக உத்தியோகத்தரைக் காதலிக்கிறேன் என்று அறிவித்தபோது இப்படித்தான் சொன்னாள்.

சரித்திரம் இன்னொருதரம் கண்முன் நாடகம் போடுகிறது.

இருபத்தைந்து வயது இளம் டொக்டர் ரங்கநாதன் தன்னுடன் படித்த வசந்தி நடராஜன் என்ற பெண்ணை விரும்புவதாக அம்மாவிடம் சொன்னபோது “அப்பா அந்தப் பெண் என்ன சாதி என்டு கேட்டால் நான் என்ன சொல்ல”அம்மா அழுதாள்

“அந்தப் பெண் என்ன சாதியாயிருந்தாலும் எனக்கு அக்கறையில்லை, நீ சந்தோசமாக இருந்தால் சரி” என்று அம்மா அழுதபடி சொல்ல …….?

‘அந்தப் பெண் எங்கட சாதியில்லை எண்டால் அப்பா சம்மதிக்க மாட்டார் என்று சொல்கிறியளா?

அவர் குழம்பி விட்டார். இரண்டு பெண்களும் ஒரு மகனுமான அந்தக் குடும்பத்தின் செல்ல மகன். குடும்பத்தின் கடைசி மகன். அம்மாவின் உயிர் எங்கேயிருக்கிறது என்று குடும்பத்தாருக்குத் தெரிந்த விடயம்.

வசந்தி என்ன சாதி? எல்லா மனிதர்களுக்கும் பல மாதிரியான உடற்கலங்களும்;, ஐந்து பைந்துக்குக் கொஞ்சம் கூடக் குறையவோ இரத்தமும் 213 எலும்பும், இரண்டு நுரையீரலும் ஒரு இருதயமும் என்று எல்லாம் ஒரே மாதிரியிருக்கும்போது ஏன் சாதிப்பிரிவு.

கொழும்பில் பிறந்து வளர்ந்த பாவம். அவரால் அந்த சைவ வேளாளத் தத்துவங்கள் முழுக்கப் புரியாத காலம்.

வசந்தி ஒரு தமிழ்ப்பெண். படித்த பெண். ‘அழகான’ பெண். இவரின் மனதைக் கவர்ந்தவள். கல்யாணம் செய்யச் சரி என்றவள்.

“சாதியா” ரங்கநாதன் தலையைச் சொறிந்து கொண்டார்.

வசந்தியின் தகப்பன் கொழும்பில் பெரிய முதலாளி.

அப்பா விடயமறிந்து இவரைப் பார்த்து “இந்த விசர் யோசனையெல்லாத்தையும் குப்பையில் போடு” என்று உறுமியபோது உடைந்து போனார்.

வசந்தியில்லாவிட்டால் வாழ்க்கையில்லை. குழம்பிய தத்துவங்கள் உதிர்ந்தன.

“என்னுடைய செத்த வீட்டுலதான் உனக்குக் கல்யாணம்” தகப்பன் தன் கண்களையிடுக்கிக் கொண்டு சொன்னபோது இளம் ரங்கநாதன் ஆடிப்போனார்.

கொழும்புக் கடற்கரையில் வசந்தியிடம் இதைச் சொன்னபோது “எல்லாத் தாய் தகப்பன்களும் இப்படித்தான் சொல்வார்கள். வாங்கோ பதிவுத் திருமணம் செய்யலாம்.”

“அப்பாவைச் சாக்காட்ட விருப்பமில்ல……”

அவர் முனகினார்.

வசந்தி சுட்டெரிப்பது போல் அவரைப் பார்த்தாள். ‘உங்களைச் சாக்காட்டத் தயங்கவில்லையா” அவள் கேட்ட கேள்வியைப்; புரியாமல் வழித்தார்.

“உங்கள் உணர்வுகளை அழித்துவிட்டு மற்றவர்களுக்காக வாழ்வதும் செத்துப்போனதற்குச் சரிதான்” வசந்தி குழுறினாள்.

கல்யாணம் பேசப்பட்டன.

ஏனோ தானோ என்ற சம்பிரதாயங்கள். வசந்தி ஆத்திரத்துடன் அமெரிக்கா போய்விட்டாள். இவரின் காதல் உண்மையாயிருந்தால் தன்னைத் தொடர்வார் என்ற நம்பிக்கை.

“அருந்தி நல்ல பெண்”

அம்மா நச்சரிப்பு, அப்பா அதட்டல். அக்காமார் புத்திமதி. வசந்தியின் துண்டிப்பு.அவர் தோல்வி கண்டார்.

மைதிலி முதல் குழந்தை. அவளுக்கு அவளின் அம்மா அருந்ததியின்; பொறுமை, அப்பாவின் கெட்டித்தனம்.

அவளுக்கு ஐந்து வயதாயிருக்கும் போது, அருந்ததிக்கு முப்பது வயதில் ஒயாத சோர்வு.

“இளம் வயதில் நீரழிவு நோய் வந்திருக்கிறது.”

டொக்டர் ரங்கநாதன் அதிர்ந்துபோனார். நீரழிவு நோய்க்கு எத்தனையோ காரணங்கள். அதில் ஒன்று மனத்துயரம் என்று அவருக்குத் தெரியும்.

அவர்களின் ஏனோ தானோ என்றிருந்த உறவு இப்போது கூட விலகிவிட்டது.

சத்திய சாயிபாபாவின் காலடியில் தன்னைப் பிரித்துக் கொண்ட மனைவியைத் தன்னுடன் இணைக்க அவரால் முடியவில்லை.

என்ன துயரம் அவளுக்கு?

……

மோபைல் டெலிபோன் அடித்தது.

“அப்பா என்ன விசயம்” மைதிலியின் குரலில் படபடப்பு.

சுருக்கமாகச் சொன்னார். மைதிலி கொம்யூட்டரில் வேலை செய்பவள். மெடிகல் விடயங்களைப் புரிந்து கொள்ள முடியாது.

“உடனடியாக வருகிறேன்.” மகள் அழுவது நெஞ்சைப் பிழந்தது.

நேர்ஸ் அருந்ததியை வார்ட்டில் சேர்த்தனர்.

மகள் தன் சினேகிதனுடன் வந்திருந்தாள். தகப்பனுக்கு அவனை அறிமுகம் செய்து வைப்பதாக இரண்டு நாட்களுக்கு முன்தான் போன்பண்ணினாள்.

“அப்பா……”

“ஹவ் டு யு டு பீட்டர்” ரங்கநாதன் மகள் அவனைத் திருமணம் முடிக்க முதலே தன் மகளின் சினேகிதனுக்கு கை குலுக்கிக் கொண்டார்.

“ஐயம் சொறி……..” பீட்டர் மைதிலி சொன்னமாதிரி ‘நல்ல’ பையனாகத் தெரிந்தான்;.

அருந்ததியின் பார்வை மகளிலும் பீட்டரிலும் நிலைத்தது.

கோணியிருந்த வாயால் நுரை வந்து கொண்டிருந்தது. பார்வை வெறித்திருந்தது.

அருந்ததி ஹாஸ்பிட்டலில் அட்மிட் பண்ணிய விடயம் கேட்டு இவர் நண்பன் சுப்பிரமணியமும் சாரதாவும் வந்திருந்தார்கள்.

காதற் திருமணம்

எலியும் பூசையும். எதெற்கெடுத்தாலும் தர்க்கம். “இன்டரெஸ்டிங்கான வாழ்க்கை” சுப்பிரமணியம் சொல்லிக் கொள்வான்.

வசந்தியைத் திருமணம் செய்திருந்தால் எப்படியிருந்திருக்கும்?

அவள் இப்போது விதவை என்று கேள்வி. அந்த விடயத்தையும் சுப்பிரமணியம்தான் சொன்னான். ஒருநாள் சாப்பிட வந்திருந்த போது ஏதோ ஒரு கதையில் “ஏய் ரங்கா உன்னுடைய பழைய காதல் வாசந்தியின்ர புருஷனைச் சுட்டுப்போட்டான்களாம்”

அருந்ததி இவரைக் கடைக் கண்ணால் பார்த்தது தர்ம சங்கடமான இருந்தது.

வசந்தியின் கலங்கிய முகம் நினைவில் நின்றது. “ஹொலிடேயுக்குக் கொழும்புக்குப் போனபோது இது நடந்தது”

இது நடந்தது எண்பத்தி மூன்றாம் ஆண்டுக்கலவரத்தின் போது. வசந்தி அமெரிக்கா போய் நீண்ட நாட்களுக்குப் பின், இவருக்கு மைதிலி பிறந்தபின்தான் கல்யாணம் செய்து கொண்டாள்.

தமிழர்களாப் பிறந்த குற்றத்தால் உயிரிழந்த பல்லாயிரம்; உயிர்களில் வசந்தியின் கணவரும் ஒருத்தர்.

“அவவின்ர தலைவிதி” சாரதா சப்புக் கொட்டினாள்.

அன்றிரவு இவரை ஏதோ வித்தியாசமாகப் பார்ப்பது போல் அருந்ததி பார்த்தாள்.

இவருக்கு ஒரு காதலியிருந்த கதை இவரின் சகோதரி மூலம் அவளுக்குத் தெரியும் என்று இவருக்குத் தெரியும்.

காதலியாய் இருந்தவள் இப்போது கைப்பெண்னான துயரம் இருதயத்தைப் பிழந்தபோது கார் எடுத்துக் கொண்டு எங்கேயோ எல்லாம் சுற்றிவிட்டு வீட்டுக்கு வரும்போது அருந்ததி இன்னும் விழித்திருந்தாள்.

கண்கள் எத்தனையோ கேள்விகளைக் கேட்டன. இவரால் வாய் திறக்க முடியவில்லை. அந்த நிமிடம் அருந்ததி இவரிடம் வசந்தி பற்றிக் கேட்டிருந்தால் அவளில் முகம் புதைத்து அழுதிருப்பார்.

அவள் மௌனமாக இவரின் இரவுச் சாப்பாட்டை மேசையில் வைத்தாள்.

“பசியில்லை”. அவரின் குரலில் கரகரப்பு. அவள் மனதைக் கரைக்கவில்லையா? பரிதாபத்துடன் அவளைப் பார்த்தார்.

இடைவெளி மௌனத்தால் நிறைந்திருந்தது.

‘என்னைப் பற்றிக்கேள்: அவள் பார்வை கெஞ்சியது.

“உங்கள் அம்மாவுக்காகத்தானே என்னைச் செய்தீர்கள்” என்று எத்தனையோ ஆண்டுகளுக்குப் பின் சொன்னபோது உங்களை எனக்கு நன்றாகத் தெரியும் என்ற தோரணை அவள் குரலில்.

“காலையில் அம்மாவுடன் போனில் பேசியபோது சரியாகத்தானேயிருந்தாள்.”

மைதிலி அவள் தகப்பனைப் பழைய நினைவுகளிலிருந்து மீட்டாள்…….

காலை பத்துமணிக்குச் சரியாயிருந்தவள் பின்னேரம் ஏழுமணிக்கு அவர் வந்தபோது படியில் விழுந்து கிடந்தாள்.

எவ்வளவு நேரம் அப்படி விழுந்து கிடந்தாள்? அவர் டொக்டர் பதறிப்போனார். சாதாரணமாக ஆறுமணிக்கு வருபவர் அன்று யாரோ ஒரு சினேகிதனைப் பார்த்து விட்டு வர நேரமாகி விட்டது.

வலது கைக்குமேல் அவள் விழுந்து கிடந்திருந்தாள்.

“பீட்டரைப் பற்றி அம்மாவுக்குக் காலையில்ச் சொன்னேன்………” மைதிலி தொடர்ந்து கொண்டிருந்தாள்.

“என்ன சொன்னாய்……பீட்டரைப் பற்றிச் சொன்னாயா” வெளியில் காத்தும் மழையும். ஜன்னலில் மழைத்துளிகள் காற்றின் வேகத்தில் வந்து மோதிக்கொண்டிருந்தன.

மகள் மைதிலியின் காதல் விடயம்,அவர் தனது.மனைவிக்குச் சொல்லாமல் வைத்திருந்த ரகசியம். தான் காதலில் தோல்வி கண்டதுபோல் மகளும் அழக்கூடாது என்பதற்காக அவள் விரும்பும் பீட்டரையே செய்து வைக்கிறேன் என்று உறுதி கொடுத்து விட்டார்.

“ஆனால் அம்மாவிடம் தற்போதைக்குச் சொல்லாதே தாங்கமாட்டாள். அவள் கற்பனை ஒரு தமிழ் வாலிபனைத் தன் மகள் திருமணம் செய்யவேண்டும் என்று ஆசைப்படுபவள்.

மைதிலி இன்று காலையில் பீட்டரின் காதல் விடயம் பற்றிச் சொன்னபோது “அப்பாவும் மகளும் சேர்ந்து ஏன் என்னை ஏமாற்றுகிறீர்கள் என்று சத்தம் போட்டாள்” மைதிலி அதிர்ந்து போனாள். ஆனால் அம்மாவின் நிலை இப்படியாகும் என எதிர்பார்க்கவில்லை. மைதிலி குலுங்கியமுதாள்.

தகப்பனின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள். ஏதோ சொல்ல நினைக்கிறாள் என்று தெரிந்தது. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இடையிலுள்ள பாலம் குலுங்கியழுது கொண்டிருந்தது.

“முப்பது வருடம் உன் அப்பா என்னுடன் போலியாக வாழ்கிறார் என்று சத்தம் போட்டாள்”

ரங்கநாதனின் இருதயம் பட படவென அடித்துக் கொண்டது. இன்னும் என்ன சொல்லியிருப்பாள்?

“அந்த அவமானத்தைத் தாங்காமற்தானே எனக்கு இந்த வருத்தமெல்லாம் என்று அம்மா அழுதாள்” மைதிலி தொடர்ந்தாள்.

போலி வாழ்க்கை வேண்டாமென்றுதானே மைதிலிக்குப் பின் இவரிடமிருந்து பிரித்துக்கொண்டு கடவுளிடம் தன்னை ஒப்படைத்தாள்?

யார் போலியாய் வாழ்ந்தார்கள்?

தன் துயரெல்லாவற்றையும் மறந்து விட்டு ஒரு நல்ல கணவரும் ஒரு அப்பாவாக இருக்க அவர் பட்ட பாடெல்லாம் பொய்யா? ‘அம்மா சொன்னதற்காகத்தானே என்னை இவர் செய்தார் என்ற ஆத்திரத்தில் இவரைப் பழிவாங்கியதுபோல் நடந்தது யார்?

‘மைதிலிக்கு ஒரு தம்பியோ தங்கச்சியோ வேண்டாமா” இவர் இரவின் அமைதியில் ஒரு நாள் முணுமுணுக்க அவள் மௌனம் மறுமொழியாக வந்தது.

‘என்னைத் தொடாதே’ என்று அவருக்குச் சொல்லாமல் அவள் இருவருக்கும் இடையில் கடவுளை இடைநிறுத்தி விட்டாள். அதைத் தொடர்ந்து நீரழிவு வியாதி. நாற்பது வயதில் பிளட் பிரஷர்…….’ அவள் நோயாளி. இவர் டொக்டர். வாழ்க்கையின் குழப்பத்தின் பிரதிநிதிகள். அப்படி மன்னிக்க முடியாத மனிதப் பிறவியா நான்?

“பீட்டரை நான் செய்தால் தான் தற்கொலை செய்வதாகச் சொன்னாள். கோபத்தில் சொல்கிறாள் என்று நான் பெரிது படுத்தவில்லை.”

மைதிலி தொடர்ந்தாள். அவர் மௌனமாக எழுந்துபோய் மனைவியின் கட்டிலருகில் நின்றார். அவளோடு பொருத்தியிருந்த மொனிட்டரில் அவளுடைய நாடித்துடிப்பு, இரத்த அமுக்கம், சுவாச எண்ணிக்கைகள் காட்டிக்கொண்டிருந்தன.

அவள் இனிப்பேசமாட்டாள். பேச முடிந்தபோது மௌனங்களை ஆயுதமாக்கியவள். இப்போது மொனிட்டருடன் இணைக்கப்பட்டு இவருக்குச் செய்தி தருகிறாள்.

வெளியில் மழை. இவர் மனத்தில் இடி. ‘எப்போது நாங்கள் எங்களைத் தொலைத்தோம்? அவர் தன்னைத் தானே கேட்டுக்கொண்டார்

(யாவும் கற்பனையே) 

தொடர்புடைய சிறுகதைகள்
வேலை செய்யத் தொடங்கிய நாளிலிருந்து,சம்பளத்துடன் ஒரு நீண்ட விடுமுறை எடுக்கவேண்டுமென்று ஆசைப் பட்டவன் ராகவன். அவன் தனது இருபத்திமூன்றாம் வயதில் யுனிவர்சிட்டிப் படிப்பை முடித்து,கொழும்பில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கமர்ந்து கொஞ்சநாட்களில், கல்லூரி நாட்களிலும் யுனிவர்சிட்டி நாட்களிலும் இருந்து சுதந்திரமோ,நேரமோ இனிவருவது அருமை ...
மேலும் கதையை படிக்க...
எவ்வளவு சுலபமாகச் சொல்லி விட்டான் நடேசன். “நான்…நான் நினைக்கவில்லை. சுசீலா அவ்வளவு தூரம் போய் இருப்பாள் என்று. ஆனாலும் ஏன் மற்றவர்கள் ஒரு மாதிரிக் மற்றவர்கள் பேச்சுக்கு இடம்கொடுக்கவேண்டும்?” ‘மற்றவர்கள் கதைப்பதைப் பற்றி இவன் கதைக்கிறான். இவர் யார் மற்றவர்கள் இல்லாமல்? என் ...
மேலும் கதையை படிக்க...
இலங்கை.1994. சென்னை மீனாம்பாக்கத்திலிருந்து இரவு ஏழு மணிக்குப் புறப்பட்ட,ஐம்பது நிமிடத்தில் இலங்கையின் கொழும்பு விமான நிலையத்தைத் தொட்டு நின்றது. எத்தனையோ கஷ்டப்பட்டு லண்டனிலிருந்து புறப்பட்டு,இந்தியா வந்து,அடையாறிலிருந்து மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வரும்போது, ‘தான் உண்மையாவே தனது வீட்டுக்குப் போகிறேனா’? ஏன்று தன்னைத் தானே கேட்டுக் ...
மேலும் கதையை படிக்க...
“இந்த தாய் சொல்வதில் எத்தனை உண்மை இருக்கிறது”? காயத்திரி சிவராமன் தனக்குள் இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொள்கிறாள். திருமதி சங்கரலிங்கம் காயத்திரியை மிகவும் கடினபார்வையுடன் பார்த்துக்கொண்டு இருக்கிறாள். “சில மனிதர்கள் தங்களின் சுயநலத்திற்கும் தங்களின் பாதுகாப்புக்கும் எந்தப் பொய்களையும் சொல்வார்கள். வறுமையான நாடுகளில் இது சகஜம். ...
மேலும் கதையை படிக்க...
'எது சரி எது பிழை என்பது யாரால்,என்ன விடயம் எப்படிப் பார்க்கப் படுகிறது என்பதைப்பொறுத்திருக்கிறது' எனது நண்பன் என்னிடம் ஆணித்தரமாகச் சொல்லிக் கொண்டிருந்தான்.அவனின் முகத்தை நான் பார்க்கவில்லை.அவன் சொல்லிக் கொண்டிருக்கும் விடயங்களை காதுகள் கவனமாகக் கேட்டுக் கொண்டிருக்க,எனது பார்வை, ஜன்னலுக்கு வெளியில்,லண்டன் தெருவில் ...
மேலும் கதையை படிக்க...
மோகினிப்பேய்
உடலொன்றே உடமையா!
பத்து வருடங்களில்
சென்னையில் ஒரு சின்ன வீடு
கனவுகள் இனிமையானவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)