Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

தொலைந்து போன தூக்கம் !

 

அந்தச் செய்தியைக் கேட்டபோது… நான் புத்தகக் கடையில் இருந்தேன். கைப்பேசியைத் துண்டித்து, மனசு அதிர அதிர காருக்கு நடந்தேன். ரொம்ப அழுக்கான ஜீன்ஸில், பிராண்டட் டி-ஷர்ட் அணிந்திருந்த அந்த இளைஞன், படு வேகமாகப் பைக்கை உதைத்துக் கொண்டிருந்தான். ”ஹெல்மெட் போட்டுக்கலியா?” என்று கேட்டவாறே அவனைக் கடந்தபோது, கண்களில் துளிர்க்கப் பார்த்த நீரை அடக்கினேன். ‘முன்பின் தெரியாத இந்தப் பெண் நம்மை ஏன் இந்தக் கேள்வி கேட்கிறாள்?’ என்று தோள் குலுக்கியிருக்கலாம் அவன்.

தொலைந்து போன தூக்கம் !காருக்குள் உட்கார்ந்த பிறகு, ‘கொஞ்சம் அழுதால் தேவலை’ என்றிருந்தது. ஏறக்குறைய அந்த இளைஞனின் வயசுதானிருக்கும் கணேஷ§க்கும். ‘எதற்காக நேற்று அர்த்த ராத்திரியில் வெளியே போனான்… எப்படி நடந்தது விபத்து?’ என ஒவ்வொரு கேள்விக்கும் கண்ணோரம் நீர் கூடுதலானது.

”ஏன் உனக்கு மட்டும் ‘பாண்டியன்’னு பேர் வைக்கல கணேஷ்? ‘கொம்பூதிப் பாண்டியன்’னு வைச்சுருக்கலாம்” என்று அவன் புகைபிடிப்பதைச் சூசகமாகச் சொல்லிக் கிண்டல் செய்வேன். மேலுக்குச் சிரித்தாலும், சட்டென்று சூம்பி விடுவான்.

”போக்கா, உனக்கு யார் சொன்னது..? அதெல்லாமில்ல…” என்று சத்தியம் பண்ண வருவான். ”பொய்ச் சத்தியம் பண்ணாதடா..” என்பேன்.

”அய்யோ, நான் தலைப்பிள்ள, அதுவும் ஒரே பிள்ள. அப்படிப் பண்ணுவனா?” என்று கேட்பவனின் சுருள் முடிக்கற்றை அசைவது அழகாக இருக்கும். வீட்டில் யாருக்கு அடங்குகிறானோ… இல்லையோ… என் பேச்சுக்கு மறுபேச்சு இருக்காது. அப்படி ஒரு பிணைப்பு!

வீட்டுக்கு வந்து, துணிகளை எடுத்து வைத்துக் கிளம்புவதற்குள் கொஞ்சம், கொஞ்சமாகப் பதற்றம் கூடிக் கொண்டிருந்தது. மதுரை போய், அங்கிருந்து நரிப்பையூர்… மூன்று மணி நேர பயணம். ”நிதானமாப் போங்க…” என்று கிளம்பும் வரை மாமா சொன்னது, டிரைவரின் பதற்றத்தைக் கூட்டியது. ”நான் வீட்டைப் பார்த்துக்கறேன்… போயிட்டு வாங்கம்மா…” என்றனுப்பிய முனியம்மா, ”கொஞ்ச வயசு… பாவம்” என்று காரில் ஏறுகையில் சொன்னது, நினைவில் ஆடிக்கொண்டே இருந்தது. அவள் ‘பாவம்’ என்று கணேஷைச் சொன்னாளா அல்லது கணேஷைக் கல்யாணம் பண்ணி ஒரு வருஷமே ஆகியிருந்த ஜோதியைச் சொன்னாளா?!

சென்னையிலிருந்து விடுபட்டு விரைந்து கொண்டுஇருந்தது வண்டி. வழக்கமாகப் பயணங்களின் போது புத்தகங்கள் படிக்கின்ற மனநிலை… இப்போது இல்லை. வீட்டுக்கு வந்தவுடன் ஒரு ஐந்து நிமிஷம் வாய்விட்டு அழுதிருக்கலாம் தனிமையில். நேரத்துக்குக் கிளம்ப வேண்டுமென்கிற அவசரம் அப்போது அழுகையைச் சாப்பிட்டுவிட்டது. தகவல்கள், பொங்கல் வாழ்த்துக்கள் என தொணதொணத்த மொபைலை ஆஃப் செய்தேன். ஆயாசமாக இருந்தது.

கணேஷ§க்கும், ஜோதிக்கும் நரிப்பையூரில் இருக்கிற தியேட்டரில் வைத்துதான் கல்யாணம் நடந்தது. ஏகத்துக்கு வியர்த்து வழிந்து கொண்டு, முகம் முழுக்க பூரிப்புடன் அவன் பக்கத்தில் ஜோதி நின்று கொண்டிருந்தாள். வெட்கத்தை மீறி சந்தோஷத்தை அவளது கண்கள் வழிய விட்டிருந்தன. கணேஷ§ம் அவள் பக்கம் அடிக்கடி திரும்பிச் சிரித்துக் கொண்டிருந்தான். ஒரு சமயம் அவளது வியர்வையைத் துடைக்க அவன் தன் கைக்குட்டையை எடுத்துத் தர, ஜோதி வெட்கப்பட்டு மறுத்ததுகூட அப்படியே நினைவில் இருக்கிறது.

கணேஷின் வீடு இருக்கும் தெருவுக்குள் கார் நுழைந்தவுடனே, தச்சனேந்தல் மாமா வந்து, ”இங்க இல்ல. தெரு முக்கிலதான். அங்க போகலாம்” என்று கூட்டிக்கொண்டு போனார். சனம் முழுக்க அங்கு கூடியிருக்க… சித்தப்பாவும், சின்னமாவும் தரையில் புரண்டு அழுது கொண்டிருந்தார்கள். காமாட்சிப் பாட்டியும், பூவரசியும் தோளில் சாய்ந்து ஒப்பாரி வைக்க, நடுவே உட்கார்ந்திருந்தாள் ஜோதி. அழுகிறாளா அல்லது அழுது முடித்து விட்டாளா என்று தெரியாத முகபாவம். அவள் அருகில், தெருவின் மையமாக வைக்கப்பட்டு முழுவதும் வெள்ளை துணி சுற்றியிருந்தது அந்த உடல்.

என்னைப் பார்த்தவுடன் அழுகைச் சத்தம் கூடியது. முழுவதும் உருக்குலைந்து சுற்றி வைக்கப்பட்டிருந்த, அதன் அருகே உட்கார்ந்தேன்.

”ஆஸ்பத்திரியிலே அறுத்து எடுத்து வந்ததால வீட்டுக்கு கொண்டு போகக் கூடாதுனுட்டாங்க. வெச்சு அழகூட முடியலையே பாவிக்கு…” என்ற சின்னம்மாவின் குரலில் கூட்டம் வெடித்து அழுதது.

”நொட்டாங்கையில உங்க பெயரை பச்ச குத்தி வைச்சிருக்காரு. அந்தக் கை அப்படியேதான் இருக்கு. நா பார்த்தேன்…” என்று சன்னமான குரலில், வறண்டிருந்த கண்களை இமைக்காமல் என்னிடம் சொன்னாள் ஜோதி. புத்தகக் கடையில் விபத்துச் செய்தியைக் கேட்டபோது வராத அழுகை, இப்போது வர… உடைந்து போனேன்.

மறுநாள் ராத்திரிதான் ஜோதியிடம் பேசுவதற்குக் கொஞ்சம் நேரம் கிடைத்தது. மறுபடியும் தலைக்கு குளித்திருந்த அவளது வயிறு கொஞ்சம் மேடிட்டிருந்தது. ‘எத்தன மாசம்..?’ எனக் கேட்க நினைத்து, நிறுத்திக் கொண்டேன். எனக்கும், அவளுக்குமாக ஒரு சொம்பு நிறைய கடுங்காப்பி எடுத்து வந்து பக்கத்தில் வைத்தாள் காமாட்சிப் பாட்டி.

”ராத்திரி முழுசும் கணேஷ் வராதது உனக்குத் தெரியாதா? மறுநாள் காலை வரை காத்திருக்காம தேடியிருந்தா… ஒரு வேலை சீக்கிரமே ஆஸ்பத்திரிக்கு எடுத்திட்டுப் போயிருக்கலாமே…” என்றேன் ஆதங்கத்துடன்.

ஜோதி பேசவில்லை. ஈரத் துண்டை தலையில்இருந்து எடுத்து, கட்டில் காலில் போட்டாள். ”இந்தப் பொண்ணு என்ன நினைக்குது? ஒருவேளை நான் கேட்டது தப்போ…?” என்று நான் பேச்சை மாற்றுமுன் சொன்னாள், ”நேத்து ஒருநா மட்டும் வராம இருந்திருந்தா, இல்ல எப்பவாவது லேட்டா வந்தா தேடலாம். தினமும் அப்படினா? அதுவும் திருவிழா நாளுல கேட்கவே வேணாம். பந்தக்கால் நட்டு ஒரு வாரமா நிதம் கொண்டாட்டம்தான். சமயத்துல விடிகாலை வரை உட்கார்ந்திருந்து, கோழி கூவ உறங்கப் போவேன், அப்பத்தான் கதவை தட்டுவாரு. ராத்தூக்கம் போய் ஒரு வருஷமாச்சு…”

மஞ்சள் கறை படிந்திருந்த அவளது கைகளைப் பற்றிக் கொண்டேன்.

கதவு பக்கத்தில் இருந்த காமாட்சிப் பாட்டி, ”இளந்தாரிக அப்படி, இப்படிதான இருப்பானுங்க. திருவிழா சமயத்தில எந்த இளந்தாரி நேரத்துக்கு வீடடைஞ்சிருக்கான்? தெக்கத்திப் பக்கம் புருஷனோட ரா முச்சூடும் தூங்கி, நிம்மதியா முழிச்ச பொண்ணுகள கணக்கெடுத்தா… கை விரல் அளவுகூட வராது. விடுத்தா சோதி” என்றவுடன், எனக்கு கோபம் வந்தது.

”பாட்டி… போய்ப் படுங்க…” என்றேன்.

எனக்கும், ஜோதிக்கும் இடையே ஒரு போர்வையாக நுழைந்தது இரவு. ஒன்றும் விரிக்காமல் தலைக்கு கை வைத்து தூங்கும் ஜோதியைப் பார்த்தபடி தூங்கிப் போனேன். விடிந்தபோது மீண்டும் வாசலில் அழுகை சத்தம். விஷயம் கேள்விப்பட்ட உறவுகள் தூரத்திலிருந்து வந்திருக்கலாம்.

ஜோதி இன்னும் அயர்ந்து தூங்கிக் கொண்டுஇருந்தாள். அவள் முகம் சலனமற்றுக் குழந்தை போல் இருந்தது. வலது கையை தன் வயிற்றின் மேல் வைத்து, இடது கையை தலைக்கு அண்டக் கொடுத்திருந்தாள். ஒரு வருஷம் கழித்து நேற்று இரவுதான் தூக்கம் முழுதுமாக அவளுக்கு வாய்த்திருக்கும் போல. மூச்சு சீரான லயத்துடன் ஏறி இறங்க, ஒரு சிற்பம் போல ஒருக்களித்திருந்தாள். கொஞ்சம் சிரித்தாற்போல் உதடுகள் அசங்கியிருந்தன. நான் மெதுவாக எழுந்து அழுகை சத்தம் அவளுக்கு கேட்காதவாறு கதவைச் சாத்திவிட்டு திரும்பிப் போய்ப் படுத்துக் கொண்டேன்!

- ஜனவரி 2011 

தொடர்புடைய சிறுகதைகள்
களவாணி மழை
முன்நெத்திச் சுருக்கங்களில் வழிந்தோடும் வியர்வையைக் கூடத் துடைக்காமல் வேகு வேகென்று வந்து நின்றவனைப் பார்த்து, “ந்தா... சோத்தண்ணி குடிக்கிறியா?” என்ற பாண்டியம்மாளின் குரலைச் சட்டை செய்யாமல் தொழுவத்துக்குள் நுழைந்தான் பெரியாம்பிளை. மாடு, கன்னுகளுக்குத் தண்ணி ரொப்பும் சிமென்டுத் தொட்டி கால்வாசிக்குத்தான் இருந்தது. ...
மேலும் கதையை படிக்க...
களவாணி மழை

தொலைந்து போன தூக்கம் ! மீது 2 கருத்துக்கள்

  1. Sheela Ramanan says:

    இப்படித்தான் நிறைய பெண்கள் நினைக்கிறார்கள் சமீப காலமாக. சொல்லியும் திருந்தால் உயிரைவிடும் சுயநலக் கணவன்மார்கள் இருந்தால் என்ன,போனால் என்ன.
    அழகாய் எழுதியுள்ளீர்கள் மேம் !
    -ஷீலா ramanan

  2. NEETHIMANI says:

    வாழ்க்கையின் எதார்த்தத்தை,குடிகாரர்களிடம் சில பெண்கள் படும் பாட்டையும்,குடிகார கணவனின் இறப்பு மனைவியின் சுதந்திரம் என இந்த கதையின் வாயிலாக மிக அருமையாக சொல்லியுள்ளார் தமிழச்சி தங்கபாண்டியன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)