கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 4, 2016
பார்வையிட்டோர்: 5,685 
 

அப்பா கஞ்சித் தொட்டி முனை, போஸ் புக் ஸ்டாலில் இருக்கும் காயின் பாக்ஸ் டெலிபோனில் இருந்து பேசினார்.

“ரங்கா! எப்பிடிப்பா இருக்கே? எனக்குப் பஞ்சு மில் வேலை போனதிலிருந்து, நீ அனுப்பும் ரூபாயிலிருந்துதான் இந்தப் பெரிய குடும்பம் ரெண்டு வேளைக் கஞ்சியாவது நிம்மதியாக் குடிக்க முடியுது உன் அக்கா தவமணியைப் பெண் கேட்டு யார் யாரோ வர்றாங்க. கையில் காசு இல்லாட்டாலும், தக்க நேரத்தில் கடவுள் கை கொடுத்து உதவ மாட்டானாங்கிற நைப்பாசையில், நானும் வருகிறவர்களிடம் பேச ஆரம்பிச்சுடறேன். ஒரு விஷயம், தவமணிக்கு உடுத்திக்க நல்ல புடவை ஒண்ணு கூட இல்லை. நீ இன்னும் கொஞ்சம் சிக்கனமாயிருந்து, இல்லாட்டி, யார்கிட்டயாவுது கடன் வாங்கிப் பணம் அனுப்பினா நான் இங்கே புடவை வாங்கிக்கறேன். யாரும் பெண் பார்க்க வரும்போது, ஒரு நல்ல புடவை உடுத்திகிட்டு வெளியே வந்தாத்தானே பளிச்சுனு நல்லா இருக்கும்! நகை நட்டுக்களை அக்கம்பக்கத்தில் இருக்குற நல்ல மனுசங்ககிட்டே இரவல் வாங்கிக்கலாம். ஆனால், புடவை இரவல் வேணும்னு எப்படி கேக்கறது? உன் அம்மா வழக்கம்போல உன்னை விசாரிச்சுகிட்டே இருக்கா. அடுத்த வாரம் போன் பண்றேன்…” அப்பா போனை வைத்து விட்டார்.

மெல்லிய குரலில் அவர் பரிதாபமாகப் பேசிய சொற்கள் நள்ளிரவு வரை மனசில் திரும்பத் திரும்ப ஒலித்து, அவனை வேதனையில் ஆழ்த்தியது. குடும்பத்தில் ஆண்பிள்ளையாகப் பிறந்துவிட்டால் என்னென்ன பொறுப்புக்கள்? என்னென்ன சங்கடங்கள்?

இவன் வேலைபார்க்கும் பீங்கான் தொழிற்சாலையில் கிடைக்கிற சம்பளம் மிகக் குறைவு. இவன் சாப்பிடுகிற ஓட்டலுக்கு, தங்கியுள்ள அறைக்கு, இவன் கைச்செலவுக்கு அதுவே போதாத ஊதியம் தான். இதில் கஷ்டப்பட்டு கொஞ்சம் பணம் மீதம் பிடித்தும், சீட்டுப் போட்டும் வீட்டுக்கு அனுப்பவே மாதாமாதம் விழி பிதுங்கிப் போகிறது.

மனசின் கவலை அதிகரிக்கும் போதெல்லாம் ருக்மணி ஞாபகம்தான் இவனுக்கு வருகிறது. துயரங்களின் வடிகால் அவள். அறை விளக்கை அணைத்துவிட்டு, தெருவோர ஜன்னல் அருகில் நின்று நள்ளிரவில் வீதி எவ்வளவு அமைதியாக இருக்கிறது என்று வெறித்துப் பார்த்தான்.

தெரு இருளில் மூழ்கியிருந்தது. தெருக்கோடி சினிமா தியேட்டரில் இரண்டாவது காட்சி முடிந்து அரை மணி நேரத்துக்கும் மேலாகி விட்டது. சாலையில் ஓரிருவர் நடமாட்டம் இருந்ததுவும் தற்போது முற்றிலுமாக ஓய்ந்து விட்டது.

அறை நண்பன் தணிகைத் தம்பி அயர்ந்த உறக்கத்தில் இருந்தது, அவன் விட்ட சீரான குறட்டைச் சத்தத்தில் தெரிந்தது.

சத்தமின்றிக் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்து முன்போலக் கதவைச் சாத்தினான். தெருவின் இருபுறமும் பார்த்தான். கும்மிருட்டு. ஆளரவம் எதுவுமில்லை.

எதிர்ச்சாரியில் இருந்த ருக்மணியின் குடிசையை நோக்கி நடந்தான். மனசில் திக் திக் என்ற பதைப்பு. ருக்மணியின் அம்மா ஒரு உறவினர் வீட்டுக் கல்யாணத்துக்கு வெளியூர் போயிருந்தது இவனுக்குத் தெரியும்; ருக்மணி தனியாகத்தான் இருப்பாள்.

குடிசையின் கதவை ஒரு விரலால் தட்டி மெல்ல ஓசை எழுப்பினான். உள்ளே அரவம் கேட்டது. உஷாருடன் கதவு வரை வந்த காலடியோசை நின்றது. வளையொலி. “யாரு?” மெல்லிய குரலில் ருக்மணி கேட்டாள்.

“நான்தான் ருக்கு. சீக்கிரம் கதவைத் திற!” என்று கிசுகிசுத்தான் ரங்கசாமி.

குடிசையின் கதவு சிறு `கிறீச்’ ஒலியுடன் திறந்தது. அதுவே பெரிய சப்தமாக இவனுக்குத் தோன்றியது. தெருவின் இருபுறமும் பார்த்துவிட்டு விருட்டென்று உள்ளே நுழைந்து கதவை இவனே இறுகச் சாத்திவிட்டுப் பெருமூச்சு விட்டான்.

ஆம்பிள்ளைகளே சுத்த அவசரக்காரங்க! என்று முனகினாள் ருக்கு.

***

செல்லியம்மன் கோயில் தெருவில் ஒரு வீட்டின் முன் அறையை வாடகைக்கு எடுத்துக் கொண்டு இவனும் தமிழ்த் தினசரியில் வேலை பார்க்கும் இவனுடைய சிதம்பரத்து நண்பனும் அதில் வசித்து வந்தார்கள்.

ரங்கசாமியின் அறைக்கு எதிர்ச்சாரியில் சில குடிசைகள். நேர் எதிர்ப்புறம் ருக்மணியின் குடிசை இருந்தது. ருக்மணியும் கொல்லத்து வேலைக்குப் போய்வரும் அவளுடைய அம்மாவும் அதில் வசித்து வந்தார்கள். திருமண வயதில் வாளிப்பான உடலோடு வளைய வரும் ருக்மணி அவனுடைய பார்வையில் மட்டுமல்ல, அந்த ஏரியா வாலிபர்கள் பலரின் பார்வையிலும் பட்டு சலனம் ஏற்படுத்தியதில் வியப்பில்லைதான்.

இரவில் தெருவோரம் இருந்த கார்ப்பரேஷன் குழாயில் தங்கள் அறைக்குத் தண்ணீர் பிடிக்க பிளா°டிக் குடத்தோடு ரங்கசாமி போவான். அந்த நேரம்தான் கூட்டம் இராது என்று ருக்மணி அங்கு வந்து பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருப்பாள்.

இவன் ஏதாவது அவளிடம் கிண்டலாகப் பேசுவதும் அதற்குச் சமமாக அவள் இவனைக் கிண்டலடிப்பதும் வாடிக்கையாயிற்று. “என்னா ருக்கு, சாப்ட்டுட்டுத் தெம்பா வேலை பாக்கறாப்பல இருக்கு; நாங்க இனிமேத்தான் ஓட்டலுக்குப் போவணும்..”

ருக்மணி இவனைப் பார்த்துச் சிரிப்பாள். சமயத்தில் தாயுடன் ருக்மணியும் சித்தாள் வேலைக்குப் போய் கல், மண் சுமப்பதை இவன் பார்த்திருக்கிறான். “ஏன் ருக்கு, சித்தாள் வேலைல நாளெல்லாம் சும்மாடு கட்டி, செங்கல் சுமக்கறது கஷ்டமாயில்லே?”

“வயிறு இருக்கே!” அவளின் சுருக்கமான பதில்.

ஒருநாள்…

“என்ன இன்னிக்கு மீன் கொழம்பு வாசனை தூக்குதே! என்னைச் சாப்பிடக் கூப்ட்டிருந்தா வந்து ஒரு வெட்டு வெட்டியிருப்பேனே..?”

“ம்க்குங். எங்க வீட்டுல எல்லாம் நீங்க சாப்பிடுவீங்களாக்கும்?”

“ஏன் சாப்புடாம? நீ வேணாக் கூப்பிடு! நான் வரேனா இல்லியான்னு அப்புறம் பார்…”

“இப்பவே வாங்களேன். தண்ணி ஊத்தி வெச்சிருக்கிற சாதமிருக்கு. வாள மீன் கொழம்பு இருக்கு..”

அவள் பேச்சைக் கேட்டுச் சிரித்துக் கொண்டே இவன் தன் அறைக்குப் போய் விட்டான்.

அரைமணி கழித்து தெருவின் அரவம் அடங்கிய பிறகு அவன் மெல்ல ருக்மணியின் குடிசைக்குச் சென்று கதவைத் தட்டினான். “யாரது?” என்று கேட்டபடியே வந்து கதவைத் திறந்த ருக்மணி “நீங்களா?” என்று கேட்டாள். அன்றும் அவள் தாய் வெளியூர் சென்றிருந்தாள்.

“ஆமா, நாந்தான். சாப்பிட வரச் சொன்னியே, வந்திருக்கேன். கிடைக்குமா?” என்றான் ரங்கசாமி.

அவள் பிரமித்து நின்றாள். அவளைத் தன்னோடு இழுத்துச் சேர்த்து இறுக அணைத்தபோது அவளுக்கு உடம்பு வெட வெடவென்று நடுங்கியது. “என்ன இது, யார்னா பாத்துடப் போறாங்க. உடுங்க!”

“பாக்கட்டுமே. எத்தினி நாள்தான் நான் ஒன்னைப் பாத்து ஏங்கிக்கிட்டே இருக்கறது?”

“இது சரியா – தவறா?” குழம்பினாள் ருக்மணி. சட்டென்று அவனைப் பிடித்துத் தள்ளினாள். “தோ பாருங்க. ஒங்களை எனக்குப் பிடிச்சிருக்கு. ஒங்களுக்கும் என்னைப் பிடிச்சிருக்கு. ஒரு கோயில்ல வெச்சுத் தாலி கட்டுங்க. அப்புறம்தான் இதெல்லாம். அதுவரைக்கும் ஒங்களுக்காக நான் காத்திருப்பேன். சரியா?” கறாராகச் சொன்னாள் ருக்மணி.

பெரிய ஏமாற்றம்தான். பரம ஏழை என்ற போதிலும் அவளுடைய பரிசுத்தமான குணம் இவனுக்குப் புரிந்தது; பிடித்தது.

இந்த நிகழ்வுக்குப் பிறகு அவளுடைய தாய் உறவினர் வீட்டு விசேடங்களுக்கு வெளியூர் செல்லும் போதெல்லாம் இரவு நேரச் சந்திப்பு தொடரும்; ஆனால், அத்துமீற மட்டும் அவள் அனுமதிப்பதில்லை. இவனும் கோடு தாண்டுவதில்லை! அவளுடன் கிசுகிசுத்துப் பேசித் தன் மனப் பாரத்தை இறக்கி வைப்பதில் மனசு இலேசாவதாக ஓர் உணர்வு; இந்தக் காதல் மெல்ல வளர்ந்தது.

ஒருமுறை அவன் சம்பளம் வாங்கிய தினம் மனசு சந்தோஷமாக இருந்தது. அன்று ருக்மணியிடம் நூறு ரூபாயை நீட்டினான். “வெச்சுக்கோ ருக்கு” என்றான். தீயைத் தொட்டவள் போலத் துடித்தாள் ருக்மணி.

“என்னை யாருன்னு நினைச்சுக்கிட்டீங்க? நான் ஏழைதான். ஆனா, காசுக்குப் பல்லை இளிக்கிற ஜென்மம்னு நினைச்சுப் புடாதீங்க!” சீறினாள் அவள்.

“ஐயோ ருக்கு. நீ தப்பாப் புரிஞ்சுகிட்டே. நீ ஏதாவது வளையல் கிளையல் வாங்கிக்குவேன்னுதான் இதைக் கொடுத்தேன். வாங்கிக் கொடுக்க எனக்கு உரிமையில்லையா என்ன?”

சமாதனம் அடையவில்லை அவள்..

அவள் கேட்டாலும் பணம் தருகிற நிலையில் அவன் இல்லை. இருந்தாலும் தன் காதலிக்கு ஒரு சின்னப் பரிசாக எதையாவது தர வேண்டும் என்று மனம் விரும்பியதைச் செயல்படுத்தினான்.. அதற்கே அவள் இப்படிச் சீறுகிறாளே..?

அவளுடைய உன்னதமான குணம் இவனுக்கு அவள் மேல் அதிகமான காதலை ஏற்படுத்தியது.

இன்று…

அப்பா டெலிபோனில் அக்காவைப் பெண் பார்க்க வருபவர்களைப் பற்றிப் புலம்பியதும் அந்தக் கவலை இவன் மனசில் பாறாங்கல்லாய் ஏறி சிம்மாசனம் போட்டதும்… தன் கவலைக்கு வடிகாலாய் ருக்மணியின் குடிசையைத் தேடிப் போய் அவள் மடியில் தலை வைத்து அழவேண்டும் போல் தவித்தான் அவன்.

வழக்கம்போல ருக்மணியின் தாய் வெளியூர் போனது இவனுக்கு வசதியாக இருந்தது. நள்ளிரவுக்கு மேல் அவளைச் சந்தித்து வெகுநேரம் ஏதேதோ பேசியிருந்தான் இவன். “ஏன் கவலையா இருக்கீங்க?” என்றாள், அவன் தலையைத் தன் மடியில் கிடத்தி, அவன் தலைமுடியைக் கோதியபடியே ருக்மணி.

எப்போதாவது குழந்தை போல அவனைத் தன் மடியில் கிடத்தி, அவன் கவலைக்கு அருமருந்தாகப் பேசுவது அவள் கொடுக்கும் மிகப் பெரிய அனுமதி அது.

அன்று அவளிடம் தன் தந்தை பேசியதைச் சொல்ல நினைத்தான். இருந்தாலும் தன் ஏழ்மை நிலையைக் காதலியிடம் சொல்ல அவனுக்கு வெட்கமாக இருந்தது. ருக்மணி சொன்னாள், “ஏங்க, உங்ககிட்டே ஒன்ணு சொல்லுவேன். தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே?”

“சேச்சே, சொல்லு ருக்கு!”

அவனிடம் கூறப் பெரிதும் கஷ்டப்பட்டு, தயங்கியபடியே அவள் சொன்னாள்: “என்கிட்டே இருக்கிற இந்த ஒரேயொரு சேலையில் நிறையக் கிழிசல். ஊசியால் தைச்சுத் தைச்சுத்தான் கட்டிக்கிறேன். ரொம்ப மக்கி, இனிமே தைக்க முடியாதபடி பழைய புடவையா இது ஆயிடுச்சு. கொறச்ச விலையில் ஒரு புடவை எனக்கு வாங்கித் தர்றீங்களா? அந்தப் பணத்தைச் சிறுகச் சிறுக உங்களுக்குத் திருப்பித் தந்துடறேன்!”

அவள் விம்மினாள்; கண்களில் நீர் வழிந்தது. உங்களைக் கேக்காம நானே புடவை வாங்கிடலாம்னுதான் நினைச்சேன். ஆனா, கிடைக்கிற கூலி வயித்துப் பாட்டுக்கே பத்தலை!

ரங்கசாமியின் இதயத்தை யாரோ சாட்டை கொண்டு அடிப்பதாய் உணர்ந்து துடித்துப் போனான் ஒருகணம்.

பணத்தைப் பெரிதாக மதியாத அவளுக்கு இப்போது ஏற்பட்டிருக்கிற தேவை அவன் மனதைக் கூறு போட்டது. தன் இப்போதைய வருமானத்தில் அறை வாடகை, ஓட்டல் செலவு, பெட்டிக்கடைக் கடன், வீட்டுக்கு அனுப்ப வேண்டிய தொகை எல்லாம் போக, தன் காதலிக்கு ஒரு புடவை வாங்கித் தருவது எப்படிச் சாத்தியம்? கூடவே, தன் அக்காவுக்கு நல்லதாய் ஒரு புடவை வாங்க அப்பா பணம் கேட்டதும் ஞாபகம் வந்து மனதில் பாரம் கட்ட, அவளைக் கட்டிக் கொண்டு ஓவென்று அழுதான் ரங்கசாமி.

“எப்படிப் பணம் தேடறதுன்னு தெரியலை ருக்கு. ஆனா, கேக்காதவ கேட்டுட்டே! நிச்சயம் உனக்குப் புடவை வாங்கித் தர்றேன், இதுவும் என் கடமை!” என்று உறுதியாகச் சொல்லியபடியே எழுந்து வெளியே நடந்தான் ரங்கசாமி.

(அலிபாபா வார இதழ்)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *