தேவதையும் பூனைக்குட்டியும்

1
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 23, 2013
பார்வையிட்டோர்: 19,677 
 

“வாப்பா, ஜின்னுண்டா என்னா வாப்பா? “

தனது காலுறையைக் கழற்றி அந்தப் பெண் வாளியினுள் போட்டாள். வாளியை கிணற்றினுள் இறக்கினாள். தண்ணீரோடு அதை மேலே எடுத்தாள். நனைந்திருந்த காலுறையைப் பிழிந்து கிணற்றடியில் ஏக்கத்தோடு அவளை அன்னாந்து பார்த்துக் கொண்டிருந்த நாய்க்குட்டியின் வாயில் ஊற்றினாள்.

பால்குடிக்கும் குழந்தையைப் போல ஆர்வத்தோடு தண்ணீரைகுடித்தது நாய்க்குட்டி. அது போதும் போதும் என்று சொல்லும்வரை – தலையை ஆட்டி – பிழிந்து பிழிந்து ஊற்றினாள்.

தாகம் தீர்ந்தவுடன் நனைந்த தலையுடன் அவளை ஏறிட்டுப் பார்த்தது. அந்த சின்ன உயிரின் தாகம் தீர்த்ததன் பொருட்டு விபச்சாரியாக இருந்த போதும் அவள் பாவங்களையெல்லாம் மன்னித்து இறைவன் அவளுக்கு சொர்க்கம் அருளினான் !

“எனக்குப் பிடித்த நபிமொழிகள்” என்ற தலைப்பில் எழுதச் சொல்லியிருந்தார்கள் ‘ஹதீத்’ என்ற மாத இதழில். நூறு ரூபாய் தருவார்கள். ஆனால் அதைவிட பத்து மடங்கு எனக்கு தேவை இருந்தது. இருந்தாலும் ஒத்துக்கொண்டேன்.

ஒரு சின்ன சாளரத்தை திறக்கும் இறைவன் அதைத் தொடர்ந்து பல கருவூலக் கதவுகளையும் திறக்கலாம். வருவது எவ்வளவு சின்ன தூசியாக இருந்தாலும் அதை நான் உதறுவதில்லை.

அதோடு, இப்படி ஒரு கட்டுரை எழுதுவதில் எனக்கு ஒரு சந்தோஷமிருந்தது. அதற்காகத்தான் விபச்சாரியை இறைவன் மன்னித்த நபிமொழியில் ஆரம்பித்தேன். அதைத் தொடரமுடியாமல் குறுக்கே வந்து நின்றது ஜின்!

கேள்வி கேட்டவள் என் சுட்டி தேவதை. கடைக்குட்டி. ‘லாஸ்ட் பட் நாட் லீஸ்ட், இன் ஃபாக்ட் மோஸ்ட்’ ரகம். மஹாகனம் பொருந்திய ஒல்லிக்குச்சி மஹாராணி. இந்த வீட்டில் கோபப்படுகின்ற, அதட்டுகின்ற, மிரட்டுகின்ற, விரட்டுகின்ற, கேள்வி கேட்கின்ற, கட்டளைகள் இடுகின்ற இலாக்காக்களை எல்லாம் தானே எடுத்துக் கொண்டவள்.

அவளுடைய கேள்விகளும் சாதாரணமாக இருக்காது. ஆனால் சாதாரணமாகத் தோன்றும். எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் மாதிரி அவள் கேள்விகளில் ஒரு ஏமாற்றுகின்ற எளிமை இருக்கும்.

அப்படித்தான் அன்று ஒரு கேள்வி கேட்டாள். அதுவும் ரொம்ப தீவிரமாக்க் கதை எழுதிக் கொண்டிருக்கும்போது.

“வாப்பா, அல்லாஹ் பையனா பொண்ணா?”

அஸ்திவாரத்துக்கே குண்டு வைத்த அந்த கேள்வி கொடுத்த அதிர்ச்சியில் என் கற்பனைக் குதிரை கல்லாகி, மண்ணாகி பின் மாயமாய் மறைந்தே போனது.

இந்த மாதிரிக் கேள்விகள் உன் மண்டைக்குள்ளிருந்து மட்டும் எப்படிக் கிளம்புகின்றன மகளே ?! இதற்கெல்லாம் ஒரு வகையில் அவள் பாட்டியார்தான் காரணமாக இருக்கும் என்று தோன்றியது.

குரானையும் ஹதீதையும் அரபியிலும் தமிழிலும் அர்த்தம் பார்த்து, பாட்டு ப் பாடுவது மாதிரி ராகத்தோடு, பல்லவியோடு — தாளம் மட்டும் கிடையாது, அனுமதி இல்லாததால் — ஓதிக்கொண்டே இருப்பார்கள். தேவதையும் கூட சேர்ந்தே சொல்லுவாள்.

திடீரென்று என்னிடம் வந்து, “வாப்பா, மூனாங் கலிமா சொல்லு” என்று வம்பில் மாட்டிவிடுவாள். நான் அசடு வழிந்து முடிப்பதற்குள் “மூனாங் கலிமா தம்ஜீது, சுப்ஹானல்லாஹி..” என்று ஆரம்பித்துவிடுவாள்.

என் மாமியார்மீது கோபம் கோபமாக வரும். பழிக்குப் பழி நிச்சயம் வாங்கிவிடுவது என்று சங்கல்பம் செய்து கொள்வதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் ஒரு ஐந்து வயதுக் குழந்தையின் ஒப்பித்தலின் அருவியில் நனைவது ரொம்ப சந்தோஷமாகத்தான் இருக்கும்.

ஆனால் இந்தக் கேள்வி?

எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது. குழந்தையாக இருப்பதுதான் எவ்வளவு அற்புதமான விஷயம் ! ஆனால் அது நாம் குழந்தையாக இல்லாமல் இருக்கும் போதுதான் தெரிகிறது !

ஆண்டவனே ! உருவமற்ற இறைவனுக்கு உண்மையாளனாக இருக்க முடியாத சூழ்நிலை வந்துவிட்டது போலுள்ளதே! என்ன பதில் சொன்னாலும் நான் குற்றவாளி ! விபச்சாரியை கல்லால் அடித்துக் கொல்வதா இல்லையா என்று நீதி வழங்கச் சொல்லி ஈசாவுக்கு — நம்ம இயேசுகிறிஸ்துதான் — ‘டெஸ்ட்’ வைத்த யூதர்களைப்போல என் பதிலுக்காகக் காத்திருந்தாள் தேவதை !

ஆணென்றும் சொல்ல முடியாமல் பெண்ணென்றும் சொல்ல முடியாமல் அமர்ந்திருந்தேன் நான். விபச்சாரிகளைக் காப்பாற்றிய இறைவனும் ஈசாவும்தான் என்னையும் காப்பாற்ற வேண்டும்!

ரொம்ப தீவிரமான யோசனைக்குப்பின் அந்த முடிவுக்கு வந்தேன். ஆயிரம் பொய் சொல்லியாவது உன் அறியாமையை மறைத்துக்கொள் என்ற முதுமொழிக்கேற்ப, ஒரு பொய்யைச் சொல்லி என் மகளைக் குஷிப்படுத்திவிடவேண்டியதுதான்.

“அல்லாஹ் ஒன்னெ மாதிரி பொண்ணுதாங் குட்டி” என்றேன்.

“அப்ப ஏன் அவன், அவன்னு சொல்றீங்க?”

இடைவெளியே இல்லாமல் அடுத்த கேள்வி ! இடுக்கிப்பிடி! இறைவனின் சோதனை என்பது இதுதானோ?

“எவ்வளவு சந்தோஷமாக நீந்துகின்றன!” என்று தொட்டி மீன்களைப் பார்த்து சொன்னானாம் பெர்னாட்ஷா. அதற்கு அவன் நண்பன் “அவை சந்தோஷமாக இருப்பதாக உன்னிடம் சொன்னதா?” என்றானாம். அதற்கு உடனே பெர்னாட்ஷா, “அவை சந்தோஷமாக இல்லையென்று என்னிடம் சொன்னதாக உன்னிடம் சொன்னதா?” என்று மின்னல் வேகத்தில் அவன் வாயடைத்தானாம்!

அவன் மேதை. முதுகுத் தண்டுவரை மூளையை வளர்த்து வைத்திருந்தவன். நானோ மீன் கறியும் ‘மீங்கொரி’யும் சாப்பிடிடுகின்ற சாதாரண மனிதன். அவனைப் போல என்னால் சமாளிக்க முடியுமா?

“தப்பா சொல்லிட்டேம்மா” என்று அவள் நாடி பிடித்துக் கெ(¡)ஞ்சுவதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை.

“தப்பு தப்பா சொல்லுங்க” என்று காரித்துப்பிவிட்டு அவள் போனாளோ நான் பிழைத்தேன். இறைவனிடமிருந்து அன்று தப்பித்த நான் இன்று ஜின்னிடம் மாட்டிக் கொண்டேன்.

ஜின்களும் இறைவனுடைய படைப்புகள்தான். நெருப்பாலோ ஒளியாலோ படைக்கப்பட்டவர்கள். எந்த ரூபத்திலும் வருவார்கள். அதில் நல்லவர்களும் கெட்டவர்களும் உண்டு. அவர்களை வசியம்கூட செய்து, நம்மால் முடியாத வேலைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். (இந்த மாதிரி கேள்விகளுக்கும் அவர்களையே பதில் சொல்லச் சொல்லலாமா என்று தெரியவில்லை.) இப்படியெல்லாம் ’ஜவாஹிருல் ஹம்ஸா’ என்ற புத்தகத்தில் போட்டிருக்கிறது என்றா என் மகளிடம் சொல்ல முடியும்?!

“தெரியலையே கண்ணு” என்று வழிந்தேன். ஒரு முறைப்பை முகிழ்த்துவிட்டு திரும்பிச் சென்றாள். அவள் போட்டிருந்த கவுனின் இடுப்புப் பக்கங்களிலிருந்த நாடாக்கள் கட்டப்படாமல் – எப்போதும் போல – அவிழ்ந்து கிடந்தன.

“ங்கெ வா குட்டி” என்று கூப்பிட்டு அதை படுக்கைவாட்டு எட்டு வடிவத்தில் கட்டிவிட்டு அனுப்பினேன்.

நபிமொழிகளைத் தொடரலாம் என்று திரும்பியபோதுதான் அந்த சப்தம் கேட்டது.

நான் எழுதிக்கொண்டிருந்த மேஜைக்கு அடியிலிருந்து வந்தது சப்தம். சப்தமல்ல. ஒருவிதமான் கேவல். அந்த இரவின் அமைதியைக் கிண்டல் செய்வதுபோல் இருந்தது. அதில் ஒருவிதமான சோகம் இருந்தாலும் கொஞ்சம் பயமாக இருந்தது.

குனிந்து பார்த்தேன்.

ஒரு கறுப்புப் பூனைக்குட்டி. தலைப்பகுதியில் மட்டும் நடுவில் வகிடு எடுத்த மாதிரி வெள்ளை நிறம். இந்திரா காந்தியின் தலை ஸ்டைல் மாதிரி.

பயங்கரமான அழகாக இருந்தது. அதன் கண்களில் வேறு ஒரு உலகத்திலிருந்து கொண்டுவரப்பட்ட ஒரு வசீகரமிருந்தது.

எதையோ விழுங்கிவிட்டிருந்தது. முள்ளாக இருக்கலாம். நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை. அந்த ஏதோ ஒன்று அதன் வாய்க்குள்போய் குறுக்காகத் தொண்டையில் குத்திக்கொண்டு நின்றுவிட்டது.

அதை வெளியே எடுக்கத்தான் பிரயத்தனப் பட்டுக் கொண்டிருந்தது. “அஹ் அஹ்” என்று கக்குவதுபோல செய்தது. தலைக்கு மட்டும் காக்கா வலிப்பு வந்தமாதிரி வெட்டிக்கொண்டது. அதோடு உள்ளத்தைப் பிழியும் அந்தக் கேவல்.

எப்படி வந்தது? எப்போது?

கேள்விகளுக்கு விடை தேடும் நேரமல்ல அது. எதாவது செய்ய வேண்டும். பெரிய பூனையுமல்ல. பிராண்டிவிடும் என்ற பயம் இல்லை.

மெல்ல அணுகி அதன் தலையைத் தடவிக்கொடுத்தேன். கேவல் நின்று அமைதியாகி என்னை ஒரு கணம் பார்த்தது.

தலையை மெதுவாகப் பிடித்து வாய்க்குள் பார்த்தேன். வாய் லேசாகத் திறந்துதான் இருந்தது. உள்ளே கொஞ்ச தூரத்தில் குறுக்காக ஏதோ. நான் நினைத்தது சரிதான்.

மெதுவாக என் ஆள் காட்டி விரலையும் பெருவிரலையும் வாய்க்குள் விட்டு அந்த முள்ளை – எதுவோ – வெளியே எடுத்தேன். க்ளோரோஃபாம் கொடுக்கப்பட்ட நோயாளியைப் போல எனக்கு ஒத்துழைப்பு கொடுத்தது.

மஞ்சள் நிறத்தில் ஒரு ஆணி.

நார்மலானதும் நாக்கால் வாயை நக்கிக்கொண்டே இந்தப் பூனையும் பாலைக் குடிக்குமா என்பதுபோல என்னைப் பார்த்தது.

நகைப்பதைப் போலிருந்தது.

இந்த அழகான பூனைக்குட்டியை என் கடைக்குட்டியிடம் காட்டினால் பூரித்துவிடுவாள்.

அந்த மஞ்சள் ஆணியை எடுத்து மேஜை மேல் வைத்துவிட்டு குட்டியைக் கூப்பிடப் போனேன்.

“காட்டு வாப்பா பூனெக்குட்டியெ” என்று கத்திக்கொண்டே எனக்கு முன்னால் ஓடி வந்தாள்.

அறையில் பூனைக்குட்டி இல்லை.

அதன் தோற்றத்தைப் போலவே மறைவும் மர்மமானதாகவே இருந்தது. மேஜையைப் பார்த்தவுடன் என் சந்தேகம் வலுப்பட்டது.

ஆணியை எடுத்துப் பார்த்தேன். தகதகவென மின்னியது சுத்தமான தங்கம் !

பூனைக்குட்டி என்னைப் பார்த்து சிரித்ததன் காரணம் புரிந்துவிட்டது.

“அய், அலஹாக்கிது, யாரு வாப்பா குடுத்தா?” என்றாள் தேவதை.

இப்போதும் பதில் சொல்ல முடியாது. ஆனால் சந்தேகம் வந்தபோதே பூனைக்குட்டியைப் பார்த்து ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்று சொல்லியிருக்கலாம்.

‘மிஸ்’ பண்ணிவிட்டேன்.

– கல்கி தீபாவளி சிறப்பிதழில் — 07.11.10. கல்கியில் என் சிறுகதை வெளிவருவது இதுவே முதல் தடவை.

Print Friendly, PDF & Email

1 thought on “தேவதையும் பூனைக்குட்டியும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *