தேய்பிறைகள்

 

” மூணு வயசாச்சு. ” – ஸ்கூல்ல சேர்க்கிறப்ப பிரின்சிபல் மேடம் கிட்டே அம்மா அப்படித்தான் சொன்னா.

ஸ்கூல்ன்னா எனக்குக் கொள்ளை இஷ்டம்.

” அஸ்மிதா, நீ படிக்கப் போற கான்வென்ட் இதான். ” ஸ்கூட்டர்ல முன்னாடி நிக்க வெச்சுக் கூட்டிட்டுப் போறப்ப அப்பா காட்டியிருக்கார்.

எவ்ளோவ் பெரிய கட்டிடம் ! ஒரே மாதிரி டிரஸ் போட்டு அக்கா, அண்ணா எல்லாம் ஓடிப் பிடிச்சு விளையாடிட்டிருந்தாங்க.

எதிர் வீட்டு ரம்யாக்கா கூட அந்தக் கூட்டத்தில் இருப்பா. ஷூ, ஸாக்ஸ் போட்டு டை எல்லாம் கட்டியிருப்பா. அப்பா கிட்டே எனக்கும் அது மாதிரி வாங்கித் தரச் சொன்னேன்.

” அடுத்த வருஷம் ஸ்கூல்ல சேர்ந்துக்க. நீயும் அதெல்லாம் போட்டுட்டுப் போகலாம். “

சாயந்தரமானா ரம்யாக்கா, மதுக்கா எல்லாரும் சத்தம் போட்டுப் படிப்பாங்க. நானும் படிக்கணும்பேன். அம்மா அகர முதலன்னு ஒரு பாட்டு சொல்லித் தந்தா.

யாராவது வீட்டுக்கு வந்தா, ” அஸ்மிதா, திருக்குறள் சொல்லு” ம்பா அம்மா.

” அகர… முதல… எழுத்தெல்லாம்… ஆதி… பகவன்… முதற்றேஏஏஏஏ… உலகு. “

அந்தப் பாட்டை நான் ராகமா சொல்லுவேன்.

” ஸ்கூலுக்குப் போறதுக்கு முந்தியே இந்தப் பாப்பா திருக்குறள் எல்லாம் சொல்லுதே” ன்னு வந்தவங்க என்னோட கன்னத்தை செல்லமாக் கிள்ளுவாங்க.

காலேஜில் படிக்கிற ராஜிக்கா என்னை ” அகர முதல அஸ்மிதா “ன்னுதான் கூப்பிடுவாங்க.

அப்புறம் அம்மா ஒன் டூ த்ரீ… டென் வரைக்கும் சொல்லிக் குடுத்தா. அப்பாவோட ஃப்ரெண்ட்ஸ் வந்தா அதெல்லாம் நான் சொல்லுவேன்.

” அஸ்மிதா, எந்த கிளாஸ் படிக்கிறே? “

” அடுத்த வருஷம்தான் ஸ்கூலுக்குப் போவேன். எல்.கே.ஜி-ல சேரப் போறேன். “

” ஸ்கூலுக்குப் போறதுக்கு முந்தியே இவ்வளவு சொல்றா… உன் பொண்ணுக்கு நல்ல மெமரி பவர் வாசு. “

கொஞ்ச நாள் கழிச்சு புது டிரஸ்செல்லாம் போட்டு என்னை ஸ்கூலுக்குக் கூட்டிட்டுப் போனாங்க.

” பிரின்சிபல் மேடம் கேக்கற கேள்விக்கு டாண் டாண்ணு பதில் சொல்லணும். ” – அம்மா சும்மா சும்மா இதையே சொன்னா.

மேடம், ” வாட்ஸ் யுவர் நேம்? ” ன்னாங்க.

” அஸ்மிதா. “

” நைஸ் நேம்! நல்லா படிப்பியா? “

” ஓ ! “

” ரொம்ப புத்திசாலிக் குழந்தையா தெரியறா. “

என்னோட தலையைத் தடவினாங்க மேடம். அப்பா கிட்டே சொன்னாங்க.

” கெளண்ட்டர்ல பணத்தைக் கட்டி அட்மிஷன் ஆகிக்கங்க. புக்ஸ், யுனிபார்ம், ஷூ, ஸாக்ஸ் எல்லாம் எங்க ஸ்டோர்லயே கிடைக்கும். ஜூலை முதல் தேதியிலிருந்து ஸ்கூலுக்கு அனுப்பிடுங்க. “

” தாங்க்யூ மேடம். “

வெளியே வந்ததும், ” நீ ஸ்கூல்ல சேர்ந்தாச்சு. இப்ப உனக்கு யுனிபார்ம், டை எல்லாம் வாங்கப் போறோம்”னு அப்பா சொன்னார்.

” யாராவது கேட்டா ‘ எல்.கே.ஜி படிக்கிறேன்’னு சொல்லு”ன்னா அம்மா.

அன்னிக்கு சாயந்தரம் மேஸ்திரி மாமா வீட்டு மல்லி மண்ணுல விளையாடிட்டிருந்தா.

” நான் எல்கேஜி-ல சேர்ந்துட்டேன்”னு அவ கிட்டே சொன்னேன்.

” நீ எல்கேஜிலதானே சேர்ந்தே… நான் நேரா ஒண்ணாங்கிளாஸ் போயிடுவேன்”னு அவ சொன்னா.

” அதெப்படி எல்.கே.ஜி. படிக்காம ஒண்ணாங்கிளாஸ் போக முடியும்? “

” அடுத்த வருஷம் திண்ணை ஸ்ககூலுக்குப் போ… எல்.கே.ஜி- யை விட பெரிய படிப்புன்னு எங்கம்மாதான் சொல்லிச்சு. எங்கப்பாவோட இன்ஜினியரெல்லாம் அங்கதான் படிச்சாங்களாம். “

எனக்கு ஒண்ணுமே விளங்கலை. திண்ணை ஸ்கூலை நான் பார்த்திருக்கேன்.

” அய்யே, அது அழுக்கு ஸ்கூல்ன்னேன். “

அவ கோபிச்சு என்னைப் பிறாண்டினா. இரண்டு பேர்க்கும் சண்டை வந்துருச்சு. நான் அவ கூட டூ விட்டுட்டேன்.

பத்தே நாள்ல புது டிரஸ் எல்லாம் வந்துருச்சு. அம்மா போட்டு விட்டா. ஸ்கூல் பேகை தோளில் போட்டுக்கிட்டேன். டையைத் தொட்டுத் தொட்டுப் பார்த்தேன். ஷூ சத்தம் ரொம்பப் பிடிச்சது. ரம்யாக்கா, மதுக்கா மாதிரியே டாக் டாக்ன்னு நடந்தேன்.

அம்மா என் நெத்தியில ஆசையா முத்தம் குடுத்தா.

” ஸகூலுக்குப் போலாமா? “

” ஓ…! “

” அங்க போய் அழக் கூடாது. “

” எதுக்கு அழணும்? நான் சமர்த்துப் பாப்பா. “

” அம்மா உன்னை அங்கே விட்டுட்டு வந்துருவேன். டீச்சர் கிட்டேதான் நீ இருக்கணும். “

” நீ கவலைப்படாதேம்மா. நீ வர்ற வரைக்கும் டீச்சர் கிட்டே சமர்த்தா இருந்துப்பேன். “

” பெரிய மனுஷி மாதிரி எப்படிப் பேசறா பாருங்க. ” – அப்பாவைப் பார்த்து அம்மா சொன்னா.

மொத மொதல்ல ஸ்கூலுக்குள்ளே நுழைஞ்சப்ப ஒரு மாதிரி சந்தோஷமா இருந்துச்சு. அம்மாவோட கையை உதறிட்டு வீசி வீசி நடந்தேன்.

கிளாஸூக்குள்ளே போனா என்னை மாதிரியே நிறைய குழந்தைங்க. ‘ வீர் வீர் ‘ன்னு சத்தம். எல்லாருமே அழுதுட்டிருந்தாங்க. எனக்கு சிரிப்பா வந்துச்சு.

என்னமோ தெரியலை. அம்மாதான் லேசா கண்ணு கலங்கியிருந்தா.

” அஸ்மிதா, டாட்டா. “

கையை ஆட்டினா. நானும் வேகமா கையை ஆட்டினேன்.

கொஞ்ச நேரத்தில் மணியடிச்சது. அம்மாவைக் காணோம். பெரியவங்க யாரையும் காணோம். டீச்சர் வந்தாங்க.

” யாரும் அழக் கூடாது. அஸ்மிதா பாரு… எப்படி சிரிச்சிட்டிருக்கா. “

அழற குழந்தைங்க கிட்டே என்னைக் காட்டி சமாதானப்படுத்தினாங்க.

டீச்சரை எனக்குப் பிடிச்சது. அவங்க கையிலிருந்த பிரம்புதான் பிடிக்கலை.

கொஞ்ச நேரம்தான் விளையாட விடுவாங்க. ‘அங்க ஓடாதே… இங்க ஓடாதே’ன்னு பிரம்பைக் காட்டி மிரட்டுவாங்க. அம்மா சொல்லிக் குடுத்த அதே ஏ.பி.சி.டி-யைத்தான் டீச்சரும் சொல்லித் தந்தாங்க. அவங்க சொல்லி முடிக்கிறதுக்குள்ளே நான் இஸட் வரைக்கும் சொல்லிடுவேன்.

” முந்திரிக் கொட்டை மாதிரி கத்தாதே”ன்னாங்க.

மிட் டெர்ம் டெஸ்ட்ல எனக்கு நூத்துக்கு நூறு. யுனிபார்ம் சட்டைல கோல்டு ஸ்டார் குத்தி விட்டாங்க.

o0o

அன்னிக்கு ஒரு நாள் டீச்சர் உர்ர்ன்னு கிளாஸுக்குள்ளே நுழைஞ்சாங்க.

” என்ன சளசளன்னு சத்தம்? கீப் கொய்ட். “

அபியும், செல்லம்மாளும்தான் பேசிட்டிருந்தாங்க. என் தலைலயும் பிரம்பு அடி விழுந்துச்சு.

” மிஸ், நான் பேசலை. “

” எதிர்த்தா பேசறே? “

இன்னொரு அடி போட்டாங்க. எனக்குத் தொண்டையெல்லாம் அடைச்சிருச்சு.

அம்மாகிட்டே சொல்லி அழுதேன்.

” சாயந்தரம் மிஸ் கிட்டே கேக்கறேன் ” னாங்க.

” வேணாம்மா. அடிப்பாங்க. “

” ஒண்ணும் அடிக்கமாட்டாங்க. “

அம்மா டீச்சரைப் பார்த்தாங்க.

அம்மா பேசறதுக்கு முந்தியே டீச்சர் பேசினாங்க.

” அஸ்மிதாக்கு வர வர குறும்பு அதிகமாயிருச்சு. லேசா அடி போட்டாத்தான் பயமிருக்கும். “

” குறும்பு செஞ்சா தாராளமா அடிச்சுக் கண்டியுங்க. ” ன்னு அம்மா சொன்னா.

எனக்கு திக்ன்னு ஆச்சு.

அன்னிலர்ந்து டீச்சர் பிரம்போட கிட்டே வந்தாலே, எனக்கு உடம்பெல்லாம் நடுங்குது.

இப்போவெல்லாம் கை வலிக்க எழுதச் சொல்றாங்க. அம்மாவும் புதுசா ஒரு ஸ்கேல் வாங்கி வெச்சிருக்கா. வீட்டுக்குப் போனதும் யுனிபார்ம் மாத்தி பால் குடிக்க வெச்சிட்டு பேரண்ட்ஸ் டைரியைப் பிரிச்சு வெச்சு ஸ்கேலும், கையுமா உக்காந்துப்பா.

” எழுதுடி. இப்படி சுழி. சனியனே… உனக்கு எத்தனை வாட்டி சொல்லிட்டேன். சொல்றது மண்டையிலே ஏறாதா ? “

” கொஞ்ச நேரம் விளையாடிட்டு வரேம்மா. “

” வண்டி வண்டியா ஹோம் ஒர்க் இருக்கு. அதை முடிச்சிட்டுப் போய் விளையாடு. “

முடிக்கிறதுக்குள்ளே இருட்டிடும். அப்புறம் தூக்கம் வந்துரும். தூங்கி எழறப்ப கூட ஸ்கேலால சுள்ன்னு அடி விழும். நான் ஓ-ன்னு அழுவேன். அப்பா கத்துவார்.

” ஏண்டி குழந்தையைப் படுத்தறே? “

” ஹாஃப் இயர்லி எக்சாம்ல எவ்வளவு வாங்கியிருக்கான்னு தெரியுமா? முட்டை முட்டையா வாங்கிட்டு வந்திருக்கா. “

” வீட்ல நல்லாத்தானே சொல்றா. “

” வீட்ல சொல்லி என்ன பண்றது? டீச்சர்ட்ட சொல்லணுமே? “

” டீச்சர் கையில பிரம்பைப் பார்த்தா பயமா இருக்கு. எல்லாமே மறந்து போயிடுதும்மா. “

” பேச்சு மட்டும் ஏழு மைல் நீளம். “

” சரி விடு. நாளைக்கு சொல்லிக் குடு. “

” நீங்க கொஞ்சம் சும்மா இருக்கிங்களா? அஸ்மிதா இப்பல்லாம் சரியாப் படிக்கிறதில்லைன்னு பிரின்சிபல் மேடம் கூப்பிட்டு சொல்றாங்க. மானம் போகுது. “

” நாம என்ன செய்ய முடியும்? “

” பேரண்ட்ஸ் நீங்க கொஞ்சமாச்சும் அக்கறை எடுத்துக்கணும். ஹோம் ஒர்க்கை எல்லாம் கூட இருந்து செய்ய வெக்கணும். அப்பதான் உங்க குழந்தை நல்லாப் படிக்கும்ன்னு சொல்றாங்க. ‘ உங்களால முடியலைன்னா டியூஷன்ல விடுங்க. நாங்க கேர் எடுத்துக்கறோம் ‘ ன்னு மேடம் சொல்றாங்க. “

” டெர்ம் ஃபீஸ் கட்டறதுக்குள்ளே உயிர் போகுது. இதில் டியூஷனுக்கு வேற தனியா தண்டம் அழணுமா? நோ. “

” அப்ப குறுக்கே வந்து இடைஞ்சல் பண்ணாம இருங்க. “

அப்பாவோட வாயை அடைச்சிட்டு என்னை பொத் பொத்துன்னு அடிக்கறா.

” ச்சே ! வீடா இது. போர்க்களம் ” ன்னுட்டு அப்பா சட்டையை மாட்டிட்டு வெளியே போறார்.

அம்மா ஸ்கூல் ஃபீஸ் கேக்கறப்பவெல்லாம் தப்பாம சண்டை வரும்.

” மாசம் பூரா நீதானே உக்காந்து தொண்டை வறள சொல்லித் தர்றே. அப்புறம் எதுக்கு ஸ்கூல் ஃபீஸ்? “

” இப்படியெல்லாம் சட்டம் பேசினா டிசியைக் கிழிச்சுக் குடுத்துருவாங்க. அப்புறம் உங்க பொண்ணை மாடு மேய்க்கத்தான் விடணும். “

” ஏண்டி மாடு மேய்க்கணும்? அவ என்ன இப்ப ஐஏஎஸ்ஸா படிக்கிறா? வெறும் எல்கேஜிதானே? போனா போகுது. வேற ஸ்கூல்ல சேர்த்திட்டா என்ன? “

” இங்க பாருங்க. குழந்தையோட படிப்புல கஞ்சத்தனம் பார்க்காதிங்க. “

” நான் பணத்துக்காக சொல்லலை. அவ எவ்வளவு கஷ்டப்படறா. “

” கஷ்டப்பட்டுத்தான் ஆகணும். எதிர்காலத்தில் போட்டி போட கஷ்டப்பட்டுத்தான் படிச்சாகணும். “

” அததுக்கு வயசு இருக்கு. குழந்தைக்கு ஓவர் ஸ்ட்ரெயின் குடுத்துட்டிருக்கோம். எப்படிக் கலகலப்பா இருந்தவ இப்ப எப்படி ஆயிட்டா. “

” உங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம் ஆபிஸ், லெட்ஜர் இது மட்டும்தான். உங்களுக்கென்ன கஷ்டம் வந்தது? “

அப்பா பல்லைக் கடிச்சிட்டு பேசாம போயிடுவார்.

இரண்டு பேரும் கத்திப் பேசறதைப் பார்த்தா எனக்கு பயமா இருக்கும்.

கடைசில ஆனுவல் எக்சாம் வந்துச்சு. ஸ்கூல்ல பிரம்படி. வீட்ல ஸ்கேல் அடி. இரண்டுக்கும் பயந்து உளறிக் கொட்டினேன்.

டீச்சர் அம்பது அறுபதுன்னு மார்க் போட்டாங்க. நான் பாஸாம். ஒரு மாசம் லீவு.

அப்புறம் அம்மாவும் அப்பாவும் சண்டையே போடலை. ஊருக்குப் போனேன். லீவுக்கு ஹேமா, கணேஷ், உஷா, கோபி எல்லாரும் வந்திருந்தாங்க. ஒரே ஜாலி. நிறைய விளையாடினோம்.

திடீர்ன்னு ஒரு நாள் அம்மாவும் அப்பாவும் வந்தாங்க.

” நாளைக்கு ஸ்கூல் திறக்குது “ன்னு சொன்னாங்க.

” புது யுனிபார்ம், டை எல்லாம் வாங்கி வெச்சிருக்கோம் “ன்னார் அப்பா.

நான் அதைத் திரும்பிக் கூடப் பார்க்கலை. காலைலர்ந்து ஒரே அழுகை. குட்டிக் குட்டி தலை பின்னி விட்டா அம்மா. பிரம்பு டீச்சர் ஞாபகத்துக்கு வந்தாங்க. என்னோட அழுகை அதிகமாச்சு.

அம்மா திட்டினா.

” எல்.கே.ஜி-க்கு கூட அழாம போனா. இப்ப யூ.கே.ஜி போறப்ப ஏன் இப்படி அழறா? “

அப்பா ஒண்ணும் சொல்லலை.

நான் அழுதுட்டேயிருந்தேன். அம்மா என்னை முறைச்சா.

” நீ இப்படி அழுது அழிச்சாட்டியம் பண்ணினா முதுகுல மொத்திருவேன். மொத நாள் அடி வாங்காதே. “

என்னால அழுகையை நிறுத்த முடியலை. அம்மா தரதரன்னு இழுத்துட்டுப் போனா. பிடிக்கலை. எனக்கு ஸ்கூலுக்குப் போகவே பிடிக்கலை.

- ஆனந்தவிகடன் – 10.05.1998 

தொடர்புடைய சிறுகதைகள்
பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த என்னைப் பார்த்து அவள் தயக்கமாய், " ஹலோ " சொன்னாள். என் முகத்தில் அரும்பிய புன்னகையைத் தொடர்ந்து பேசத் துவங்கினாள். " என் பேர் உமா. ஆபிஸ்ல உங்களைப் பார்த்திருக்கேன். நீங்களும் எஸ்பிசி-லதானே வேலை செய்யறிங்க ? ...
மேலும் கதையை படிக்க...
ஈரக் கோழி மாதிரி வெடவெடவென நடுங்கிக் கொண்டிருந்தான் அனந்து. அவ்வப்போது விலுக் விலுக்கென்று உடம்பு தூக்கிப் போட்டது. சிவந்த கண்களும், உலர்ந்த உதடுகளும் ஒரு மாதிரி கோணிக் கொண்டிருக்க, போர்வைக்குள் சன்னமாய் அனத்திக் கொண்டிருந்தான். இரண்டு மாதங்களாகத்தான் அவனை எனக்குத் தெரியும். அமெரிக்காவுக்குப் புதுசு ...
மேலும் கதையை படிக்க...
இது விஷப் பரீட்சை என்று எனக்குத் தெரியும். கரேனிடம் வேண்டாம் என எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். அவள் பிடிவாதம் பிடித்தாள். " கண்டிப்பா நாம நியுஜெர்ஸியிலிருக்கும் உன்னோட அண்ணன் குடும்பத்தோட ஒரு வாரம் தங்கியிருக்கப் போறோம். இந்தியக் குடும்பப் பழக்க வழக்கங்களை எல்லாம் ...
மேலும் கதையை படிக்க...
வசந்த் வெள்ளைத் தடியைத் தட்டித் தட்டித் தட்டுத் தடுமாறி பஸ் ஸ்டாப்பில் வந்து அமர்ந்த போது அநேகமாய் அங்கே வேறு யாருமில்லை. “ஹலோ, ஹலோ” என்ற அவன் குரலுக்கு பதில் குரல் எதுவுமில்லை. சாலையில் அவ்வப்போது எழுவதும், அடங்குவதுமாகக் கார்களின் ஓசைகள். அவனுடைய உலகம் ...
மேலும் கதையை படிக்க...
சுனாமியே வந்து கதவைத் தட்டினாலும் தலையைப் பத்து முறை வாரிக் கொண்டு இரண்டாம் தடவையாக ஃபேர் அண்ட் லவ்லியை அப்பிக் கொண்டு சாவகாசமாகத்தான் வருவான் ப்ரதீப். காரை ஸ்டார்ட் பண்ணி உட்கார்ந்து ஐந்து நிமிஷங்கள் ஆகி விட்டன. பொறுமை இழந்து செல்போனைத் தடவினேன். ...
மேலும் கதையை படிக்க...
ஈச்சனாரி ரயில்வே கேட் சாத்தியிருந்தால். பஸ்ஸில் வருபவர்கள் சலிப்புத் தட்டுவார்கள். அழகுவின் முகத்தில் சந்தோஷம் வந்து குதிக்கும். கிழிந்த அரை டவுசரை அரைஞாண் கயிற்றால் இறுக்கிக் கொண்டு, வட்டமான தட்டைக் கூடையைத் தோளில் தூக்கிக் கொள்ளுவான். கேட் சாத்தியதால் தங்கி விட்ட ...
மேலும் கதையை படிக்க...
சந்திரிகா கோபத்தில் சிவந்திருந்தாள். ஏர் கண்டிஷன் குளிர்ச்சியையும் மீறி அவள் முகத்திலுருந்து வெளிப்பட்டன உஷ்ணக்கதிர்கள். அவளுடைய பரந்த மேஜையின் மேல் அவள் கோபத்துடன் விசிறியடித்த ஃபைல் தவிர ரத்தச் சிவப்பில் இண்டர்காம், அதே நிறத்தில் கார்ட்லெஸ் டெலிபோன், மேஜை காலண்டர், மார்க்கர் பேனாக்கள், ...
மேலும் கதையை படிக்க...
அவள் அழகான பெண் என்பதையும் மீறிக் கோபம் வந்தது. இடம் நார்ட்ஸ்டார்ம் பார். பேரைப் பார்த்து பயப்பட வேண்டாம். ஸ்பென்ஸர் ப்ளாஸா மாதிரியான பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்சின் ஒரு மூலையிலிருக்கும் காபிக்கடை. நாளெல்லாம் கம்ப்யூட்டரை முறைத்து முறைத்து போர் அடித்தால் அங்கே காபி சாப்பிடப் ...
மேலும் கதையை படிக்க...
நாக்கில் நரநரவென்று உறுத்தல். பூஞ்சோலை சுவரோரமாய் இருந்த தொட்டியில் உமிழ்ந்தாள். எச்சில் கறுப்பாய் ரசாயன மண் கலந்து வந்தது. சற்று தள்ளி ஜோல்ட்டிங் இயந்திரத்தின் அருகே நிற்கிற பதினெட்டு வயது இளைஞனுக்குக் குரல் கொடுத்தாள். ” ரத்தினம். கடைசி பேட்ச் பெட்டிங்க வருது பாரு. ...
மேலும் கதையை படிக்க...
மின் நகரைக் கடக்கும்போது ஒரு கும்பல் பாதி ரோட்டை மறித்து வேகமாகக் கையை அசைத்தது. தயானந்த் அவசரமாய் பிரேக்கை மிதித்தான். ஜன்னலைப் பார்த்தான் வரது. ஜன்னல் கண்ணாடியில் தலைகள் திரண்டன. நாற்பது வயதுக்காரர் ஒருவர் பதட்டத்துடன் சொன்னார். " தண்ணித் தொட்டிக்குள்ள குழந்தை ...
மேலும் கதையை படிக்க...
பஸ் ஸ்நேகம்
ஆம்புலன்ஸ்
இந்தியன்
பிடி 22
இடமாறு தோற்றப் பிழை
அந்நிய துக்கம்
சந்திரிகா
வணக்கம்
உள்காயம்
ஸார், நாம போயாகணும்

தேய்பிறைகள் மீது ஒரு கருத்து

  1. Parthasarathy says:

    நான் இப்படி இருக்க மாட்டேன், நீங்களும் உங்க குழந்தைய இந்த மாதிரி படுததிங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)