தேகசுகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 18, 2016
பார்வையிட்டோர்: 10,629 
 

வத்தலகுண்டு ஊருக்கு மாற்றலானதும் முதலில் வேண்டா வெறுப்பாக அங்கு சென்றாலும், பின்பு அவ்வூரின் அழகும், அமைதியும், கொடைக்கானல் மலையடிவாரமும், மக்களின் பழகும் தன்மையும், அவனுக்கு மிகவும் பிடித்துப் போயிற்று.

அவனுக்கு இருபத்தியெட்டு வயது. இன்னமும் திருமணமாகவில்லை. தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் ஐந்து இலக்க சம்பளத்தில் நல்ல வேலை.

அவனுடைய பலஹீனம் பெண்கள்.

அவனின் வாட்ட சாட்டமான அழகும், நேர்த்தியான உடையும், கம்பீரமும், பழகும் தன்மையும், நல்ல வேலையும் பல பெண்களை அவன் தன் பால் ஈர்த்ததில் வியப்பில்லை. ‘ஸ்கின் டு ஸ்கின் நோ ஸின்’ என்கிற கொள்கையில் தனக்கு கிடைத்த பெண்களை அனுபவித்தான்.

வத்தலகுண்டுவின் போஷ் ஏரியாவில் இரண்டாயிரம் ரூபாய் வாடகையில் ஒரு பெரிய வீட்டின் முன்பகுதி அவனுக்கு கிடைத்தது.

ஒரு மாதம் அமைதியாகச் சென்றது.

அன்று காலை ஏழு மணி இருக்கும். அறையின் ஜன்னல் கதவை திறந்து வைத்துக் கொண்டு, காலைத் தூக்கத்தின் சோம்பல் கலையாத நிலையில், தெருவை வேடிக்கைப் பார்த்தபடி பிரஷ்ஷினால் பல் தேய்த்துக் கொண்டிருந்தான்.

அவன் வீட்டிற்கு எதிர் வரிசையில் இரண்டு வீடுகள் தள்ளி வீட்டின் முன் அமைந்துள்ள முனிசிபல் குழாயில் ஒரு பெண் குனிந்த நிலையில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தாள். அவளின் அபரிதமான அழகு அவனை சுறு சுறுப்படையச் செய்தது.

பக்கவாட்டில் தெரிந்த அவளது செழுமையான மார்பகமும், வழ வழப்பான கோதுமை நிற இடையும், முதுகின் மீது ஏராளமாகப் புரண்ட கரிய நிறக் கூந்தலும், அப்போது அவள் மீது அடித்துக் கொண்டிருந்த பொன்னிறமான காலை வெய்யிலும் அவனை மெய் மறக்கச் செய்தன. அவளைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம் அவனுள் அதிகரித்தது.

அவன் உள்ளம் அவள் அழகின்பால் உண்டான ஏக்கத்தினால் நிரம்பியதை உணராத அவள், குடத்தில் தண்ணீர் நிரம்பியதும் குடத்தை லாவகமாக தன் இடையில் இருத்தி பக்கவாட்டில் இருந்த தன் வீட்டினுள் நுழைந்து விட்டாள்.

அன்று மாலை தன் அறைக்கு சீக்கிரமாகத் திரும்பினான். ஜன்னல் கதவைத் திறந்து வைத்துக்கொண்டு அவளின் தரிசனத்திற்காக காத்திருந்தான்.

அப்போது “அங்கிள்” என்றபடி வீட்டு ஓனரின் மகள் கீதா அங்கு வந்தாள். கீதாவுக்கு வயது பத்துதான். ஆனாலும் பெரிய மனுஷி மாதிரி வாயடிப்பாள். அவன் அசுவாரசியமாக கீதாவிடம் பேசிக் கொண்டிருந்த போது ‘அவள்’ வீட்டிலிருந்து வெளிப்பட்டாள். வராண்டா சுவற்றில் முழங்கையை ஊன்றியபடி, தெருவை வேடிக்கை பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள்.

தற்செயலாக அவள் அவன் அறைப் பக்கமாக பார்வையைத் திருப்பினாள். அப்போது அவன் சற்றும் எதிர்பாராமல், கீதா அவளை நோக்கி, “கமலாக்கா குட் ஈவ்னிங்” என்று குரலை உயர்த்தி கையை ஆட்டியபோது, அவளும் கீதாவைப் பார்த்து தன் அழகான பற்களை அழகாகக் காட்டிச் சிரித்தாள்.

இவனுக்கு உற்சாகம் கரை புரண்டது.

சிறிது நேரத்தில் அவளது வீட்டு வாசலில் புல்லட் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவன் இறங்கி, ஹெல்மெட்டை அவிழ்த்தபோது அவள் மிக உரிமையுடன் ஹெல்மெட்டை வாங்கிக் கொண்டு அவனுடன் வீட்டினுள் சென்று மறைந்தாள். அது அவளது கணவன் என்பதை ஊகிக்க இவனுக்கு வெகு நேரமாகவில்லை.

உடனே அருகிலிருந்த கீதாவின் வாயை சாமர்த்தியமாகக் கிளறி அவளிடமிருந்து இவன் தெரிந்து கொண்ட சில முக்கியத் தகவல்கள்:

அவள் பெயர் கமலா. புல்லட்டில் வந்த கமலாவின் கணவன் பெயர் சடகோபன். கமலாவின் சொந்த மாமா. பதின்மூன்று வயது மூத்தவர். திருமணமாகி நான்கு வருடங்கள் முடிந்திருந்தாலும் குழந்தைப் பேறு இல்லை. கமலா தமிழ்ப் பத்திரிகைகள் விரும்பிப் படிப்பாள். செஸ் விளையாடுவதில் ஆர்வம் உண்டு.

அவன் விரைந்து செயல்பட ஆரம்பித்தான். கீதாவுக்கு அடிக்கடி காட்பரீஸ் வாங்கினான். நரை விழுந்த பத்திரிக்கையிலிருந்து, புற்றீசல்கள் மாதிரி நேற்றுவரை முளைத்திருந்த ஏராளமான தமிழ்ப் பத்திரிக்கைகளை வாங்கிப் போட்டான். கீதாவின் மூலமாக அவைகள் அவள் வீட்டிற்கு சென்றன.

சாளரத்தின் வழியாக பிறர் அறியாதவாறு சிரிப்பதும், சைகைகள் செய்வதும் ஆரம்பமாயின. நாளடைவில் அவளது கணவரின் அறிமுகமும் அவனுக்கு கிட்டியது. ஒருநாள் ஊர்க்கூட்டத்தில் அவனும் கலந்துகொண்டபோது ‘ஹலோ’வில் ஆரம்பமாகி புன்னகையில் வளர்ந்து அவரை நன்கு பரிச்சையப் படுத்திக் கொண்டான்.

அன்று எதோ ஒரு விசேஷ தினம். அவர் இவனை தன் வீட்டிற்கு சாப்பிட அழைத்தார். இவனும் சந்தோஷத்துடன் சென்றான்.

கமலா வீட்டை மிக சுத்தமாக, நறுவிசாக வைத்திருந்தாள். உடம்பை ஒட்டியபடி அவள் அணிந்திருந்த மெல்லிய மயில் கழுத்து நிறப் புடவையும், அதே நிறத்தில் கையில்லாத ஜாக்கெட்டுமாக ஒரு அழகான சந்தன பொம்மையைப் போல் இருந்தாள். சாப்பாடு முடிந்ததும் அவளுடன் சிறிது நேரம் செஸ் விளையாடினான். பிறகு மூவரும் கேரம் விளையாடினார்கள். அன்று மாலை அவர்கள் ஒரு திரைப்படத்திற்கு செல்ல முடிவு செய்தனர். இவனையும் உடன் வரும்படி வற்புறுத்தினர். சிறிது நேர ‘பிகு’விற்குப் பிறகு சம்மதித்தான். படத்தின் கதையில் உள்ள முற்போக்கு எண்ணங்கள் அவனுக்கும் கமலாவுக்கும் ஒத்துப் போயின.

சடகோபன் அறியாவண்ணம் அவனும் அவளும் தங்கள் பார்வைகளை ஆழமாக அர்த்தத்துடன் பரிமாறிக் கொண்டனர். ‘சந்திரனை பாம்பு விழுங்குவதைப்போல் தான் அவளை சிறிது சிறிதாக தன்னுடைய ஆக்கிரமிப்பினுள் இழுப்பதாக’ உற்சாகமான எண்ணம் அவனுள் பீரிட்டது.

சடகோபன் அவர்களுடைய நட்பை பெருந்தன்மையுடன் அனுமதித்தார். பல சமயங்களில் அவர் வீட்டில் இல்லாதபோது கூட அவனும் அவளும் நேரம் போவது தெரியாமல் செஸ் விளையாடுவார்கள்.

அன்று மாலை அவன் வங்கியிலிருந்து வீடு திரும்பி, குளித்துவிட்டு மிக நேர்த்தியாக உடையணிந்துகொண்டு செஸ் விளையாடுவதற்கு கமலாவின் வீட்டையடைந்தான். நேரம் போவது தெரியாமல் விளையாடினர்.

கமலா திடீரென நினைவு வந்தவளாக, “இன்னிக்கு அவருக்கு அபீஸ்ல ஆடிட், வீட்டுக்கு வர பதினோரு மணியாகும்” என்றாள்.

இவன் அவளை கூர்ந்து நோக்கினான். அவளும் இவனை எதோ ஒரு எதிர்பார்ப்புடன் நோக்கினாள். இருவருக்கும் விளையாட்டில் மனம் செல்லாது ‘கடனே’ என்று காய்களை நகர்த்திக் கொண்டிருந்தனர்.

முதலில் யார் ஆரம்பிப்பது என்ற தயக்கம் இருவருள்ளும் தோன்றி, அந்த தயக்கத்தினால் அப்போது உண்டான அமைதி மிகப் பெரிய கொடுமையாகத் தோன்றியது அவர்களுக்கு.

ராணியை நகர்த்தி “கிங் செக்” என்றாள் அவள்.

“செக் என்று சொன்னால் போதாதா? ராஜாவுக்கு இல்லாமல் ராணிக்கா செக் கொடுப்பார்கள்?”

“நீங்கள் இதுவரை எந்த ராணிக்கும் செக் கொடுத்ததில்லையா?” என்றாள் சற்றுத் துணிவுடன்.

ஆட்டத்திலிருந்த ஆர்வம் கலைந்து இருவரும் பேச்சின் மூலமாக அசடு வழிந்து இறுதியில் அவன் எழுந்து நின்றான். அவளும் எழுந்து நிற்க, “கமலி” என்று வாய்க்குள் முனகியபடி அவளை ஆலிங்கனம் செய்தான்.

செஸ் காய்கள் இடறி கீழே விழுந்தன.

அவர்களுக்குள் உஷ்ணம் பரவியது.

சமூகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஒழுக்கம் அவர்களிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு ஒழுங்கீனம் என்ற விதை அங்கு முதன் முதலாக ஊன்றப்பட்டது.

அன்று முதல் ஆரம்பித்த அவர்களது நெருக்கம், சடகோபன் சந்தேகப்படாத வகையில் அடிக்கடி நிகழ்ந்தது. தேகசுகம் தொடர்ந்தது. ஆனால் தெருவில் உள்ளவர்கள் இவர்களைப் பற்றி அரசல்புரசலாக பேசிக் கொண்டார்கள்.

அன்று அபீசிலிருந்தே சென்னை செல்வதாகக் கூறிய சடகோபன், புல்லட்டை வீட்டில் விட்டுச் சென்றார். ஆனால் வேறு ஒருவர் தான் செல்வதாகக் கூறியதும், சடகோபன் நேராக வீட்டிற்கு வந்தார். அப்போது மணி இரவு எட்டு.

வீட்டின் பெட்ரூமில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. சடகோபன் மிக சுவாதீனமாக ஒருக்களித்திருந்த வீட்டின் கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்று படுக்கையறை கதவை உரிமையுடன் திறக்க – அங்கு தன் மனைவி அன்னிய ஆடவனிடம் சோரம் போவதைப் பார்த்தார்.

வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்து புடவையை சரி செய்து கொண்டாள் கமலா. அவன் தன் லுங்கியை இழுத்து கட்டிக்கொண்டான். வாயிற் கதவை அடைத்துக்கொண்டு நிற்கும் சடகோபனை மீறி வெளியே ஓட முடியாமலும், அவர் முகத்தை ஏறிட்டு நோக்க முடியாமலும், அடுத்து என்ன நடக்குமோ என்ற பயத்திலும் சில்லிட்டுப்போய் அசையாது நின்றான்.

“ச்சீ, தேவடியா முண்ட, நீயா எனக்கு பொண்டாட்டி?” ரத்த நாளங்கள் கொதிக்க சடகோபன் கமலாவின் தலை மயிரைப் பிடித்து இழுத்து முகத்தில் ஓங்கி அறைந்தார்.

அடி தாங்க முடியாமல் அவள் பயத்தில் அழுதபடியே அலற, அந்த சத்தத்தில் தெருவில் பெரிய கூட்டம் கூடிவிட்டது. கோபத்தில் தன்னை இழந்த சடகோபன் அவர்கள் இருவரையும் வீட்டிலிருந்து வெளியே தள்ளி கூப்பாடு போட்டார்.

இவன் தலையைக் குனிந்த படி தன் அறையை நோக்கி ஓட்டமும் நடையுமாகச் சென்றடைந்து கதவை உட்புறம் தாளிட்டுக் கொண்டான்.

வெகு நேரத்திற்கு கமலாவின் கூச்சலும் அழுகையும் இவன் காதில் விழுந்து கொண்டிருந்தது. என்ன நடந்திருக்கும் என்பதை தெரு மக்கள் எளிதில் புரிந்து கொண்டனர். இவனுக்கு பயம் அடிவயிற்றைக் கலக்கியது.

மறு நாள்… காலை ஆறரை மணிக்கெல்லாம் எவரோ கதவை படபடவென தட்டும் சத்தம் கேட்டது. கதவைத் திறந்தான். வெளியே கீதாவின் அப்பா – வீட்டின் ஓனர் – நின்று கொண்டிருந்தார். அவருடன் பத்துப் பதினைந்து ஊர்ப் பெரியவர்களும் நின்று கொண்டிருந்தனர்.

வீட்டு ஓனர் இவனை கோபமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு சடகோபனிடம் அழைத்துச் சென்றார். மற்றவர்கள பின் தொடர்ந்தனர்.

வீட்டின் தோட்டத்தில் சடகோபன் கோபத்துடன் காத்திருந்தார். கமலா அவர் எதிரே தலை குனிந்தபடி நின்றிருந்தாள். தெருவில் குடியிருக்கும் வேறு சிலரும் அங்கிருந்தனர். இவனது வருகையால் அங்கு ஒரு அதீதமான அமைதி நிலவியது. .

சடகோபன் தொண்டையைச் செருமிக்கொண்டு இவனிடம், “தம்பி…ஆமாம் நான் உன்னை தம்பியாகத்தான் நினைத்திருந்தேன். அதனால்தான் உன்னை என் வீட்டில் அனுமதித்தேன். ஆனால் உன்னைச் சொல்லி குற்றமில்லை, என் மனைவியே உனக்கு முந்தானை விரிச்சப்ப, நீ என்ன பண்ணுவ? தப்பு ரெண்டு பேர்லயும்தான். கமலாவுக்கு உன்னுடன் வாழ முழு சம்மதம்… உனக்கு இஷ்டமிருந்தா நீ அவளை கல்யாணம் பண்ணிக்கலாம். அல்லது ‘வைத்துக்’ கொள்ளலாம். நான் அவளை விலக்கி வைத்து விட்டேன். இனிமே அவள் என் மனைவி இல்லை. வாழ்க்கைல இதவிட எனக்கு ஒரு பெரிய அவமானம் வந்துற முடியாது… உன்னோட முடிவை அவளிடம் சொல்லிவிட்டுப் போ.” குரல் உடையச் சொல்லி நிறுத்தினார்.

இவனது பதிலை எதிர்நோக்கி அனைவரும் இவன் முகத்தைப் பார்த்தனர்.

இவனுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. அதே சமயம் பொறிக்குள் அகப்பட்டுக்கொண்ட தன் நிலைமையின் தீவிரத்தையும் உணர்ந்தான்.

கமலாவை ஏறிட்டு நோக்கினான். அவள் இவனை ஏக்கத்துடன் பார்த்தாள்.

கமலாவின் அதீதமான அழகு, அவள் தனக்கு அள்ளித் தந்த தேகசுகம், அவளுடைய எதிர்காலம், தற்போதைய அவளுடைய இக்கட்டான நிலைமை…

இவ்வளவையும் யோசித்தான். “நான் கமலாவை மணம் செய்து கொள்கிறேன்” என்று சொன்னான்.

அங்கு கூடியிருந்தவர்கள் இவனது இந்த முடிவைக் கேட்டு, ஒருவித சினேக பாவத்துடன் இவனை நோக்கினர்.

அவன் கமலாவை அழைத்துக்கொண்டு தன் அறைக்குத் திரும்பினான்.

மறுநாள் கமலாவுடன் ஊரிலுள்ள தன் வீட்டையடைந்தான். தான் கமலாவைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தன் பெற்றோர்களிடம் சொன்னபோது, அந்த திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு இருந்தது.

‘கமலா ஏற்கனவே திருமணமானவள்’ என்ற உண்மையை தன் வீட்டாரிடம் சொன்னால் அவர்களின் எதிர்ப்பின் தீவிரம் எப்படியிருக்கும் என்று நினைத்தபோது பயமாயிருந்தது.

கமலாவை பதிவுத் திருமணம் செய்து கொண்டான். வங்கியில் சொல்லி லால்குடிக்கு மாற்றல் வாங்கிக் கொண்டான். புதுக் குடித்தனம் ஆரம்பித்த எட்டாவது மாதத்தில் அவனுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

கமலாவுக்குத் தான் தாய்மை ஸ்தானத்தை அளித்துவிட்டதில் அவளைவிட இவன் மிகவும் பூரித்துப் போனான். லால்குடிக்கு வந்து இரண்டு வருடங்கள் சென்றதே தெரியவில்லை.

அன்று அவனுக்கு வங்கியில் நிறைய வேலை. தலைவலி வேறு மண்டையைப் பிளந்தது. வாடிக்கையாளர்களுக்கான வங்கி நேரம் முடிந்து, அன்றைய பட்டுவாடாவை அனவரும் சரிபார்த்துக் கொண்டிருந்தனர். அரை நாள் விடுமுறை எடுத்துக்கொண்டு மூன்று மணிக்கு வீட்டையடந்தான். வாசற் படிகளில் ஏறி அழைப்பு மணியை அமுக்கினான். ‘பவர் கட்’ என்பதை பிறகு உணர்ந்து, கதவைத் தட்ட எத்தனிக்கையில் – வீட்டினுள் இருந்து விசித்திரமான மெல்லிய முனகல் ஒலியும், வளையல் அசங்கும் சத்தம் கேட்பதையும் உணர்ந்தான்.

அது அவனுக்கு அனுபவப்பட்ட பரிச்சயமான ஒலி. ஒரு கணம் திகைத்தான். பின்பு சத்தம்போடாது சுதாரித்துக்கொண்டு, தோட்டத்தை ஒட்டி வீட்டின் பக்கவாட்டில் சென்று – தன் வீட்டிலேயே ஒரு திருடனைப் போல் – ஜன்னல் திரையை விலக்கி உள்ளே எட்டிப் பார்த்தான்.

தன கண்களையே அவனால் நம்ப முடியவில்லை.

வீட்டுச் சொந்தக்காரரின் இருபத்தைந்து வயது மகன் சதீஷுடன் கமலா தன்னை மறந்த நிலையில் சல்லாபத்தில் ஈடுபட்டிருந்தாள்.

இவனுக்கு உடம்பு தொய்ந்து, கால்கள் வலுவிழந்து மயக்கம் வருவதைப்போல் இருந்தது. ஏற்கனவே தலைவலி வேறு.

சத்தம்போடாது வீட்டைவிட்டு வெளியேறி அருகேயிருந்த ரயில்வே ஸ்டேஷனை அடைந்து அங்கிருந்த சிமென்ட் பெஞ்சில் அமர்ந்தான்.

மனதில் உணர்ச்சிக் கொப்புளங்கள் நெருப்பாக கொதித்தன. அக்னியை வலம் வந்து அக்னி சாட்சியாக சொந்த மாமனை மணந்து, அவனைத் தாண்டி ஓடி வந்து அடுத்த ஆடவனுடன் குடித்தனம் நடத்துபவளுக்கு என்ன மாதிரியான வாழ்வியல் ஒழுக்கம் இருந்துவிட முடியும்? இதுவரை எத்தனை ஆண்களை அவள் தாண்டியிருக்கிறாள்? தான் அவளுக்கு எத்தனாவது தாண்டல்?
ஒரு பெண் அல்லது ஒரு ஆண் ஒருமுறை ஒழுக்கம் தவறினால் அதன் பிறகு அதுவே ஒரு எளிதான பழக்கமாகி தேகசுகம் ஒரு சுவாரசியமான தேடல் விஷயமாகிவிடுமே !…என் வாழ்க்கையே அதற்கு ஒரு நல்ல உதாரணம்…

தன்னுடைய சரித்திரம் தன்னுடைய வாழ்க்கையிலேயே தன்னிடமே தற்போது திருப்பப் படுவதை உணர்ந்தான். முந்தைய கதையில் தான் கதாநாயகன். இப்போது சதீஷ் கதாநாயகன். அப்போது பாதிக்கப் பட்டது சடகோபன். இப்போது நானே. நாயகி மட்டும் அவளே. சடகோபனுக்கு தான் செய்த துரோகம் எப்படிப் பட்டது என்பதை பூரணமாக உணர்ந்தான். மானசீக மன்னிப்பு அவரிடம் வேண்டினான்.

திடீரென்று கோபம் தலைக்கேறியது. ஒருகணம் ‘வீட்டிற்கு சென்று அவளை சூடாக நான்கு வார்த்தைகள் கேட்டு மூஞ்சியில் காறித் துப்பினால் என்ன?’ என்று நினைத்தவன் அடுத்த கணம், ‘அவள் நான் சதீஷுடன் வாழத் தயார்’ என்று சொல்ல மாட்டாள் என்பது என்ன நிச்சயம்?’ என்று நினைத்துக் குமைந்தான்.

சுயபச்சாதாபம் அவனை ஆட்கொண்டது. ‘இவளுக்கு எந்த சுகத்தில் நான் குறை வைத்தேன்? புனிதமான தாய்மை என்னும் உறவை அளித்தேனே ! அதன் பிறகுமா ஒருத்தி இப்படி? அப்படியென்ன அலையும் தேகசுகம் ஒருத்திக்கு?

நல்ல குடும்பத்து சம்பந்தங்களை எல்லாம் உதறி, பெற்றோர்களையும் பகைத்துக்கொண்டு, இவளை மணந்துகொண்டது எவ்வளவு பெரிய அடி முட்டாள் தனம்? கசப்பான உண்மைகள் அவனைச் சுட்டபோது தன்னுடைய ஒழுக்கக் கேட்டினால் தன் மீதே கோபமும் வெறுப்பும் அவனுக்கு ஏற்பட்டது. வாழ்க்கையே வெறுத்துப்போனது….

சிக்னலைத் தாண்டி வைகை எக்ஸ்பிரஸ் வேகமாக ஸ்டேஷனை நோக்கி வந்து கொண்டிருந்தது. ரயில் கடந்து செல்ல வசதியாக, ஸ்டேஷன் மாஸ்டர் வெள்ளை நிற யூனிபார்மில் பச்சைக் கொடியை வேகமாக ஆட்டிக் கொண்டிருந்தார்.

தனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்தே பெண் சுகத்திற்காக இந்த தேகம் அலைந்த அலைச்சல், தீண்டிய எண்ணற்ற பெண்கள்… ச்சே! எவ்வளவு கேவலம்? தேகசுகம் தேடியலைந்த இந்த தேகம் சிதைந்து சிதையானால்தான் என்ன ?

எழுந்தான். பிளாட்பாரத்திலிருந்து தண்டவாளத்தில் குதித்தான்.

என்ஜினை நோக்கி வேகமாக ஓடினான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *