தெளிவு

 

அம்மாவால் அந்த உண்மையை ஜீரணிக்கவே இயலவில்லை. அவளை, அவனால் எப்படி ஏற்க தோணியது? தான் தவமிருந்து பெற்ற ஒரே மகன் ரகு. அந்த ரகுவுக்கு அவள் ஆசை, ஆசையாய் ஆறேழு பெண்களைப் பார்த்து, அந்த ஆறேழில் எதைத் தள்ள… எதை அள்ள என அலசி, ஆய்ந்து கொண்டிருந்த வேளையில், அவன் சொல்லும் அந்த முடிவை, அம்மாவால் ஜீரணித்துக் கொள்ளவே இயலவில்லை.
அம்மாவுக்கு, அமராவதி நல்லூர் அட்வகேட் மகள் அகஸ்தியாவைப் பண்ணி வைக்கத்தான் ஆசை. அத்தனை அழகு அந்தப் பெண்ணுக்கு. மேல்படிப்பு படித்தவள். ஏகப்பட்ட சொத்துக்கு ஒரே வாரிசு அவள்தான். அவளைப் பெண் பார்க்கப் போகும் போதும், அவளைப் பார்த்துவிட்டு வந்த போதும், அவன் மறுப்பேதும் சொல்லாமல்தானே இருந்தான்…
அதற்குள் ஏனிப்படி ஒரு முடிவு?
அது முடிவா?
கேவலமான ஒரு வீழ்ச்சியல்லவா?
அந்தப் பெண்ணை, குதிரைப்படைக் கொள்ளையர்கள் வந்து ஊரைக் கொளுத்தி கொள்ளையடித்த போது, பட்டப் பகலில் பலர் முன் வைத்து… அலற, அலற திமிறத் திமிற, ஒரு கொள்ளைக்கார முரடன் கற்பழித்துத் தெருவில் போட்டு விட்டுப் போனது ஊரறிந்த விஷயம்!
தெளிவுஅந்தப் பெண், கெடுக்கப்பட்டாள் என்பதைத் தெரிந்தபின், அந்த வீட்டுப் பக்கமே கல்யாணம் பேசி யாரும் கால் எடுத்து வைக்காமல், ஒதுங்கி வந்து கொண்டிருப்பது அந்த வட்டாரத்திற்கே பிரசித்தம்!
அப்படியிருந்தும்…
அப்படியொரு முடிவை அவனால் எப்படி எடுக்க முடிந்தது?
அதோ… அதோ… அம்மா முன்னால் தைரியமாகச் சொல்லி விட்டு தலை கவிழ்ந்து நிற்கிறானே… அதுதான் அவனால் எப்படி சாத்தியமாயிற்று?
அம்மாவிற்குத் தாங்க இயலவில்லை.
“”ரகு…”
“”என்னம்மா?”
“”நீ அந்தப் பெண்ணைத்தான் கட்டிக்கிறதா தீர்மானமே பண்ணிட்டியா?”
“”பண்ணிட்டேன்!”
“”இந்த முடிவை மாத்தவே முடியாதா?”
“”முடியாதும்மா!”
“”ஏண்டா… ஏன்? அவ மேல காதலா உனக்கு?”
“”காதலா? அப்படி எல்லாம் ஒன்றுமில்லை!”
“”பின்னே?”
“”கடமை.”
“”என்னடா கடமை? அவ உன் முறைப் பெண்ணா?”
“”இல்லை. இந்த ஊர்ப்பெண். இந்த ஊரில் நல்லது, கெட்டது எல்லாத்துக்கும் முன் நின்ற ஒரு பெரிய மனிதரோட பெண்! அவர் வீட்டை கொள்ளையடிக்க வந்த கொள்ளைக்காரங்க, நம்மூர் ஜனங்களோட கோழைத்தனத்தையும், பயந்தாங்குள்ளி மனப்போக்கையும், சுயநலத்தையும் பயன்படுத்தி, பல பேரறிய ஒண்ணுமே தெரியாத அப்பாவிப் பெண்ணைக் கெடுத்துட்டுப் போயிட்டாங்க!
“”அவளுக்கு ஆறுதல் சொல்ல முன்வராதவங்க… அவளுக்கு வாழ்க்கையே இல்லைன்னு சொல்றதுக்கு தயாராகி விட்டதை நெனச்சு, தற்கொலைக்குத் துணிஞ்சிட்ட நேரம், நான் தான் தடுத்தேன். நிச்சயம் அவளுக்கும் வாழ்க்கை உண்டுன்னு சொன்னேன்! அந்த கடமைதான்.”
“”கடமைன்னா காசு பணத்தைக் கொடு; சந்தோஷப்படறேன். ஆனா, கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்றயே, அது நியாயமா?”
“”நியாயம்ன்னு நான் நெனைக்கிறேன்.”
“”டேய்! அமராவதி நல்லூர் பெண்ணுகிட்டே அழகு இல்லைன்னு நெனைக்கறாயா?”
“”அழகு அந்தப் பெண்ணுகிட்ட அடிமைப்பட்டு கெடக்கும்மா…”
“”ஆஸ்தியில்லேண்ணு ஒதுங்கறயா?”
“”எங்கிட்டயா இந்தக் கேள்விம்மா?”
“”பின்னே?”
“”உனக்கு நான் சொல்றது புரியாது.”
“”என்னடா புரியாது?”
“”அம்மா… உன் பாணியிலேயே ஒரு விஷயம் பேசட்டுமா?”
“”என்ன பேசிடுவே? பேசுடா!”
“”அந்த அட்வகேட் மகளுக்கு ஏற்கனவே ஒரு வரனை நிச்சயித்ததும், கல்யாணம் நடக்காமல் நின்று போனதும் தெரியுமா உனக்கு?”
“”அதனாலென்னடா? பெண்ணைக் குறைசொல்லி வரன் வீட்டார் கல்யாணத்தை நிறுத்தலைடா! வரன் நல்லவன் இல்லைன்னு பெண்ணோட தகப்பனார்தான் நிறுத்தினாராம். தெரியுமா?”
“”தெரியும்.”
“”பின்ன என்னடா பேசுவே?”
“”அந்தப் பெண் ஓரிரு நாளாவது தனக்கு நிச்சயிக்கப்பட்ட வரனை பற்றி நினைச்சு, அவனோட இப்படி வாழணும், அப்படி பேசணும், குடும்பம் எப்படி நடத்தணும், குழந்தை எத்தனை பெத்துக்கணும்ன்னுல்லாம் கற்பனையை மனசுல ஏத்தி, மானசீகமாய் வாழ்ந்து பார்த்திருப்பாள் இல்லையா?”
“”இதென்னடா பேச்சு? அப்படிப் பார்த்தா இந்த உலகத்தில எந்தப் பெண்ணைடா நாம் கண்டெடுக்கிறது?”
“”நான்தான் கண்டெடுத்துட்டேனே!”
“”யாரை? பலரறிய கெடுக்கப்பட்டு, கெட்டுப் போனாளே அவளையா? த்தூ!”
“”அம்மா… அவள் கெட்டுப் போனவள்ன்னு நீ நெனைக்கறயா?”
“”நெனைக்கிறது வேறயா?”
“”நெனைச்சா மனம் அழுகிப் போகணும்! அம்மா… அவ யாரோ ஒரு ஊர் தெரியாத, பேர் தெரியாத, முன்னே பின்னே பழக்கமில்லாதவனால… என்ன நடக்குதுங்கற உணர்வேயில்லாம, கெடுக்… இல்லேம்மா… துன்பப்படுத்தப்பட்டவள்!”
“”துன்பப்படுத்தப்பட்டாளா? என்னடா பேத்தல் இது? அரிவாளால வெட்டினான்னா… இல்லை சவுக்கால அடிச்சான்னா துன்பப்படுத்தப்பட்டதா அர்த்தம்! இவளைத்தான் கற்பழிச்சுட்டானேடா!”
“”கற்பழிச்சுட்டானா? அப்படீன்னா அந்தப் பெண்ணோட கற்பு எங்கேம்மா பத்திரப்படுத்தப்பட்டிருந்தது? ஒவ்வொரு பெண்ணுக்கும் கற்பு எங்கேம்மா பார்சல் போட்டு கட்டித் தொங்க விடப்பட்டிருக்கிறது? கற்புங்கறது மனசறிஞ்ச நிலைதானேயொழிய, உடலறிஞ்ச விஷயமில்லேம்மா!
“”அந்தப் பெண் மனசால அவனைத் தொட்டதுமில்லை… வேற எவன் முன்னாலயும் மணப்பெண்ணாய்… ஆசைகளைத் தேக்கி வெச்சிகிட்டு… இவன் தான் என் கணவனாய் வருவான்னு கற்பனை பண்ணி, அலங்காரம் பண்ணி நின்றதுமில்லை!”
“”புலம்பறயா ரகு?”
“”புலம்பலேம்மா! உனக்குப் புரியலை. அவ்வளவுதான்!”
“”என்னடா புரியணும் எனக்கு?”
“”அந்தப் பெண் கற்பழியாதவள்ங்கறது. கனவில் கூட ஒரு ஆண் மகனை நினைக்காதவள்ங்கறது.”
“”வெட்கக்கேடுடா! வெட்கக்கேடு! இன்னுமா அவளைக் கற்பழியாத… கன்னி கழியாதவள்னு சொல்றே?”
“”அம்மா…”
“”என்ன?”
“”உனக்கொரு முறை டாக்டர் தனசேகரன் ஆபரேஷன் பண்ணி இறந்து போன குழந்தையை வெளியே எடுத்தார்ன்னு சொல்வேல்ல?”
“”ஆமாடா! அந்தப் புள்ளையாவது உயிரோட இருந்திருந்தா நான் சந்தோஷமாய் இருந்திருப்பேன்!”
“”அம்மா… உனக்கு ஆபரேஷன் செய்தது ஒரு ஆண் பிள்ளைதானே?”
“”அவர் டாக்டர் டா!”
“”டாக்டர் தான்! அவர் உன்னை… உன் வயிற்றை ம்ம்… நான் சொல்ல வேண்டாம்!”
“”டாக்டர் அவர்; நோயாளி நான்! என்னை அனஸ்தீசியா குடுத்துத்தான் ஆபரேட் பண்ணினார்!”
“”ஸோ! நீ மயக்கமாகிட்டே! உ<ன் மனசறிய டாக்டர் உனக்கு எதைச் செய்தார்ங்கற நெனைப்பில்லே… இல்லையா?”
“”நிச்சயம்!”
“”அதை மாதிரிதாம்மா அவளும்! நீ நோயாளியாயிருந்தே… அவள் திக்கற்றவளாய் இருந்தாள்! அவர் டாக்டராயிருந்து வைத்தியம் பண்ணினார்… அவன் ஈரமில்லாத கொடியவனாயிருந்து அவள் உடம்பில் தன் வேட்கையைத் தணித்தான்! அவ்வளவு தானேம்மா?”
“”டேய்…”
“”அம்மா… பஸ்லே போறப்ப எவன் எவனோ குடும்பப் பெண்களையெல்லாம் இடிக்கறான்… உரசறான்… அதனால, அவங்கெல்லாம் கெட்டுப் போயிட்டாங்கன்னா என்னம்மா அர்த்தம்.”
“”ரகு…”
அம்மா சிந்தனைக்குள் குப்புற விழுந்து கிடப்பது அவள் அழைப்பில் தெரிந்தது.
நகர்ந்தான் ரகு.
அம்மாவிற்கு அவன் செய்த தர்க்கங்கள், திரைக்காட்சிகளாகி வந்து கண் சிமிட்டின!
“அவன் சொல்றதுல தப்பென்ன இருக்கிறது? கொஞ்சம் யோசிச்சா எல்லாம் சரின்னுதான் படறது!’
வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்ட – அம்மாவின் மனதில், ஒரு மேகமூட்டம் விலகிய தெளிவு பிறந்தது.
“”ரகு!”
“”என்னம்மா?”
“”இந்த ஊரை வியக்கற மாதிரி உனக்குக் கல்யாணம்! அந்தப் பெண் வீட்டிற்கு இப்பவே நான் போயாகணும்!”
அம்மாவையே பார்த்தான் ரகு.

- அக்டோபர் 2010 

தொடர்புடைய சிறுகதைகள்
தேங்காய்ப் பிச்சை!
ஊருக்குள் ஒரு வாடகைக்கார் வந்து நின்றது. மருத்துவமனைக்கு சென்றிருந்த அருணாச்சல வாத்தியார், வீடு திரும்பி விட்டாராம். அவர் காரைவிட்டு இறங்குமுன், நலம் விசாரிக்க ஊரிலுள்ள ஆண்களும், பெண்களும் கூடி விட்டனர். விஷயம் தெரிந்ததும், தெருவிற்குள் ஓடோடி வந்தார் தேங்காய்ப்பிச்சை. ""என்ன விஷயம்?'' எதிர்ப்பட்ட பெண்களிடம் கேட்டார். ""மேலத்தெரு அருணாச்சலம் ...
மேலும் கதையை படிக்க...
தேங்காய்ப் பிச்சை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)