தெளிந்த மனம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 11, 2014
பார்வையிட்டோர்: 11,345 
 

ஆயிரம் முயன்றும் தன்னுடைய மனப்போராட்டங்களை அடக்கமுடியாமல் தவித்துக்கொண்டிருந்தாள் தீப்தி. ‘கீச்..கீச்.. ‘ என்று குரலெழுப்பியபடி அவள் காலடியில் சிந்திக்கிடந்த கடலையொன்றை கொறிக்க முயன்றுகொண்டிருந்தது குருவியொன்று. அதை ஏதோ விளையாட்டுப்பொருளாய் எண்ணி, அதைப்பார்த்து நகைத்துக்கொண்டிருந்தது, பக்கத்திலிருந்தவளின் கைக்குழந்தை. வழக்கமான மனநிலையில் இருந்திருந்தால் அவளும் இதையெல்லாம் ரசிக்கக்கூடியவள்தான். சில காலமாகவே கவலை மையம் கொண்டிருந்தது அவள் மனதை. இன்று காலை, புயல் கரையைக் கடந்துவிட்டது.

எல்லாம், அந்த ஆனந்தை சொல்லணும்.. அவளுடைய கல்லூரித் தோழன்தான். படிப்பு முடிந்ததும், மேற்படிப்புக்காகவும், வேலைக்காகவும், திருமணத்தை நோக்கியும் புறாக்கூட்டமாய் இருந்த நண்பர்கள் ஒவ்வொருவராய் பிரிந்து சென்றுவிட, சிலர் மட்டும் தொடர்பில் இருப்பதாய் வாக்குக்கொடுத்து, சில வருடங்களிலேயே மீறினார்கள். அதில் இவர்களும் அடக்கம். காலப்போக்கில் அனைவரும் நினைவுகளாக மட்டுமே தங்கி, கிட்டத்தட்ட மறந்தேபோய்விட்ட நிலையில்தான் திடீரென்று முளைத்திருக்கிறான். அதுவும் அவளுடைய ஆபீசிலேயே, அவளுக்கு மேலதிகாரியாக.

முதலில் அலுவலகத்தில் சந்தித்தபோது அவளால், அவனை அடையாளம் கண்டுகொள்ளவே முடியவில்லை. குறுந்தாடியும், புஸ்புஸ் கன்னங்களும், லேசான தொப்பையுமாக காலம் அவனை சிறிதளவு மாற்றியிருந்தது. ஆனால், அவனுக்கு அவளை கண்டுகொள்வதில் கஷ்டமிருக்கவில்லை. “ஹேய்.. நீ தீப்திதானே!!..” என்று கூவியவாறே கல்லூரிக் கால நினைவில் அவள் கைகளை பற்றிக்கொண்டான். அவள் தர்மசங்கடத்துடன், சுற்றுமுற்றும் பார்த்தவாறே கைகளை விடுவித்துக்கொண்டாள்.

“ஓ.கே.. உங்கிட்ட நிறையப்பேசணும். எப்ப என்னை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போகப்போறே.. உன் கணவர் வித்தியாசமா நினைக்கமாட்டார் இல்லியா.. அவரும் நம்ம ஜெனரேஷன்தானே.. மாட்டார்..” என்று அவனே கேள்விகேட்டு அவனே பதிலும் சொல்லிக்கொண்டான்.

“மாட்டார்.. என்னோட ஃப்ரெண்ட்சைப்பத்தி அவருக்கும், அவரோட ஃப்ரெண்ட்சைப்பத்தி எனக்கும் நல்லாவே தெரியும். இன்ஃபாக்ட் பார்த்ததுமே கிஷோர் உன்னை அடையாளம் கண்டுக்கிட்டா கூட ஆச்சரியமில்ல..” என்றாள் தீப்தி.

“ஹவ் நைஸ்… எங்களைப் பத்தி ரொம்ப ‘பெருமையாத்தான்’ சொல்லிவெச்சுருக்கேன்னு நம்புறேன்…” அவன் கண்களில் அதே பழைய விஷமப் பார்வையுடன் சிரித்தான். “நிஜமா, நல்லாத்தான் சொல்லிருக்கேன்ப்பா.. என் ஃப்ரெண்ட்செல்லாம் கடைஞ்செடுத்த ‘நல்லவங்க’ன்னு அவருக்கு நல்லாவே தெரியும்.” அவள் குரலிலும் அதே கேலி வந்து ஒட்டிக்கொண்டது.

இருந்தாலும், ஏனோ தள்ளிப்போட்டுக்கொண்டே வந்து, கடைசியில் நச்சரிப்பு தாளாமல் வீட்டுக்கு வரச்சொன்னாள். ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை அவள் வீட்டு வாசலில் காரை நிறுத்திவிட்டு இறங்கியவன், அவள் கணவனுடன் சினேகமாக கைகுலுக்கினான். அவள் அறிமுகப்படுத்துமுன்பே , ” நீங்க ஆனந்த் தானே” என்று கேட்டு அதிரவைத்தான் கிஷோர். “எப்படி!!.. எப்படி தெரியும் என்பெயர்.?” ஆச்சரியமானான்.

“உங்க மேனரிசம் காட்டிக்கொடுத்துச்சு.. அடிக்கடி மூக்கை நீவிவிட்டுக்கறீங்களே…”

“அடிப்பாவி… எல்லாமே சொல்லியிருக்கியா.. பெண்கள் கிட்ட ரகசியங்கள் தங்காதுன்னு சொல்றது சரியாத்தான் இருக்கு..” அதிர அதிர சிரித்தான் ஆனந்த்.

வீட்டுக்குள் போய் ரொம்ப நேரம் அரட்டையடித்துவிட்டுத்தான் கிளம்பினான். அதற்கப்புறம் அவன், அடிக்கடி வருவது வாடிக்கையாயிற்று. கல்லூரிக்காலங்களில் தாங்கள் அடித்த லூட்டிகள், கட் அடித்துவிட்டு படம் பார்க்கச்சென்று மன்னிப்புக்கடிதம் எழுதிக்கொடுத்தது.. அதிலும்,.. பெற்றோர் கையெழுத்தை ஒருவர் மற்றொருவருக்காக போட்டுக்கொண்டது என்று பழைய காலங்கள்தான் அரட்டையில் இடம்பெறும். அப்படி ஒரு பொழுதில்தான், மனதில் கல்மிஷமில்லாமல்.. விபரீதம் தெரியாமல் தங்களுடைய நெருக்கத்தை மற்றவர்கள் காதல் என்றே நினைத்ததையும், அப்படியல்ல என்று கடைசியில் எல்லோரையும் கடிந்துகொண்டதையும் சொல்லிவிட்டான். அதில்தான், விழுந்தது முதல் பொறி.

கிஷோர் அவனளவில் நல்லவந்தான். ஆனாலும் நாளடைவில் அவ்வப்போது சந்தேக நெருப்பு எழுவதும், ‘சீச்சீ.. இருக்காது’ என்று தணிவிப்பதுமாக தவித்துக்கொண்டிருந்தான். எது அவனை இப்படி எண்ண வைத்தது? அவனும் பர்சனாலிட்டியிலோ மற்ற தகுதிகளிலோ யாருக்கும் குறைந்துவிடவில்லை. ஆனாலும் ஒரு பயத்தை உணர்ந்தான். வழக்கம்போலவே இருவரும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தது, நெருப்பை இன்னும் விசிறிவிட்டது. ஆனால், அவர்களுக்கு அவன் மன நிலை தெரிய நியாயமில்லையே..

அவனுடைய மனச்சீற்றம் கொஞ்சம் கொஞ்சமாக வார்த்தைகளில் வீசத்துவங்கியது. கணவனிடம் ஏற்பட்ட மாற்றங்களை அவளும் கவனிக்காமல் இல்லை. ‘ஜஸ்ட் பொஸசிவ்நெஸ்’ என்றே நினைத்தவள் அதில் பெருமையும் பட்டுக்கொண்டாள். ஆனால் நாட்கள் செல்லச்செல்ல எதையோ உணரத்துவங்கினாள். கடைசியில் ஒரு நாள், ஆனந்த் இங்கு வருவதில் தனக்கு துளியும் விருப்பமில்லை என்பதையும் வெளிப்படையாகச் சொல்லிவிட்ட அன்றுதான் முற்றிலும் உடைந்துபோனாள். அவன் தன்னை சந்தேகிக்கிறான் என்பதை அவளால் ஒரு சதவீதம்கூட நம்பமுடியவில்லை. அந்தளவுக்கு அவளை நேசித்திருந்தான்.

‘பின் ஏன்.. இந்த விஷவிதை விழுந்தது.?’ அவளுடைய கேள்விகளுக்கு அவனிடம் சரியான பதிலில்லை. கல்லூரிக்கால கிசுகிசுவா.. அதைத்தான் இல்லையென்று அவர்களிடமே மறுத்தாகிவிட்டதே.. இல்லை, அவர்கள் கலகலப்பாக பழகுவதுதான் காரணமா.? இதென்ன சிறுபிள்ளைத்தனமாக என்று சமயங்களில் தோன்றும். விவாதம் வளரக்கூடாதேயென்று மனதிலேயே போட்டுப் புதைத்துக்கொள்வாள். அதேசமயம் ஆனந்தை வீட்டுக்கு வராதேயென்றும் சொல்லவும் முடியவில்லை. கிஷோரைப்பற்றி அவன்கொண்டுள்ள நல்ல அபிப்ராயம் குலைந்துவிடக்கூடாதேயென்றும் கவலைப்பட்டாள்.

‘தட..தட’வென்ற சத்தத்துடன் புயலாய் நுழைந்த ரயில் அவளை இவ்வுலகிற்கு கொண்டுவந்தது. ஓடிப்போய் பெண்கள் பெட்டியில் ஏறிக்கொண்டவள், ஆசுவாசப்படுத்திக்கொண்டாள். வரவேற்புப் புன்னகைகளுக்கு பதிலைக் கொடுத்துவிட்டு காலியான ஒரு இருக்கையை நோக்கிச்சென்றாள். கையிலிருந்த இன்னொரு பையை மேலடுக்கில் வைத்துவிட்டு அமரப்போனவள் திடீரென தலைசுற்றி தடுமாறினாள்.

“மேடம்.. மெதுவா.. பார்த்து உக்காருங்க. தண்ணி குடிக்கிறீங்களா..” என்று கேட்டபடி பாட்டிலைத்திறந்தாள் ஒருத்தி, ரயில் சிநேகம்.

“அக்கா.. இந்த சாக்லெட்டை வாய்ல போட்டுக்கோங்க. வெள்ளிக்கிழமை இன்னிக்கு சாப்பிட்டிருக்கமாட்டீங்களே.. சாப்பிடாம இருந்ததுல சர்க்கரை குறைஞ்சுருக்கும். இது கொஞ்சம் ரிலீஃபா இருக்கும்..” தோள் பையிலிருந்து நிம்மி எடுத்து பிரித்துக் கொடுத்த சாக்லெட்டுக்கு இப்படி ஒரு பரிமாணம் இருப்பதை இன்றைக்குத்தான் கண்டுகொண்டாள் தீப்தி. ‘காலேஜ் பொண்ணுங்களுக்கு சாக்லெட்டை சாப்பிடத்தான் தெரியும். இதுவும் தெரியுமா.’ அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. நிம்மியிடம் பேசிக்கொண்டிருந்தால் பொழுதுபோவதே தெரியாது. பேச்சு அங்கிங்கு சுற்றிவிட்டு படிப்பில் வந்து நின்றது.

“அப்புறம்… படிப்பெல்லாம் எப்படி போயிட்டிருக்கு?.. செமஸ் எப்போ வருது நிம்மி”

“நான் இந்த கோர்ஸை விடப்போறேங்க்கா..”

“ஏன்ம்மா.. ரொம்ப வேல்யூ உள்ளதாச்சே.. விட்டுட்டு என்ன பண்ணப்போறே.?”

“எனக்கு ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிக்கணும்ன்னு ஆசை. அப்பாவோட நச்சரிப்பு தாங்காமத்தான் இதுல சேர்ந்தேன். அவர் இஞ்சினியர் ஆகமுடியாத ஆசையை என்னைவெச்சு நிறைவேத்திக்கிறாராம். அப்ப என்னோட ஆசையை நிறைவேத்தறதுக்கு நான் யாரைப்பிடிக்கிறதாம். அதனால, அப்பாகிட்ட தெளிவா சொல்லிட்டேன். ஆரம்பத்துல பிடிவாதம் பிடிச்சாரு. நானும் மொதல்ல பிடிவாதம் பிடிச்சேன்..”

“ஐயையோ.. அப்பறம்.?”

“அப்புறம் எனக்கும் ஒண்ணு தெளிவா புரிஞ்சது. பிடிவாதத்தால ஒண்ணும் ஆகப்போறதில்ல. பிரச்சினை இன்னும் சிக்கலாத்தான் ஆகும். அதனால, அப்பாவ ஒரு நாள் உக்காரவெச்சு பேசினேன். என்னோட எண்ணங்களையெல்லாம் எடுத்துச்சொன்னேன். அவர் பயப்படறமாதிரி இல்லாம என்னோட எதிர்காலம் நல்லாவே இருக்கும், எனக்கு என்மேல நம்பிக்கை இருக்குன்னு புரியவெச்சேன். அப்பா.. ஒத்துக்கிட்டாரு. இப்ப, காலேஜ்ல லீவிங் சர்ட்டிபிகேட்டுக்கு அப்ளிகேஷன் கொடுக்கத்தான் போயிக்கிட்டிருக்கேன்”

அதற்குள் அவள் இறங்க வேண்டிய நிறுத்தத்தில் ரயில் ஊர்ந்து நின்றது.

“பை…க்கா”

ரயில் மீண்டும் கிளம்பியது. இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டாள். இந்த சின்னப்பெண்ணுக்கு வாழ்க்கையில் இருக்கும் தெளிவு, தனக்கு ஏன் இல்லாமல் போனது.! பேசினால் பிரச்சினை கூடும் என்று, ஆரம்பத்திலேயே சும்மா இருந்தது தன்னுடைய தப்போ.? உட்காரவைத்து பேசிப் புரியவைத்திருந்தால் இன்றைக்கு எல்லாம் நல்லபடியாக இருந்திருக்குமோ.. தன்மீது இருந்த பிரியம் குலையாத நிலையில் நிச்சயமாக காது கொடுத்துக்கேட்டிருப்பான்.

இப்போதும் ஒன்றும் கெட்டுப்போய்விடவில்லை. ‘இன்றைக்கு சாயந்திரமாவது அவனிடம் விளக்கமாக பேசிவிடவேண்டும். என்னுடைய மனதில் களங்கமில்லை என்பதை நிச்சயமாக புரிந்துகொள்வான்’. எடுத்த முடிவு கொஞ்சம் ஆசுவாசம் தர இருக்கையில் நிம்மதியாய் சாய்ந்து உட்கார்ந்துகொண்டாள். ஜன்னல்வழியே நுழைந்த காற்றின் கீற்றொன்று, அவள் கூந்தலில் கொஞ்சம் விளையாடிவிட்டுப்போனது.

– ஜனவரி 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *