தெருவிளக்கும் குப்பிவிளக்கும்

 

வெளியே குளிருடன் கடுங்காற்றும் வீசிக்கொண்டிருந்தது. வீட்டிற்குப் பின்புறமாக மரக்கறித்தோட்டத்தில் நின்று கொண்டிருந்த மாலினி குளிருக்கும் காற்றுக்கும் ஈடு குடுக்க முடியாமல் வீட்டிற்குள் நுழைந்தாள். வீடு ஒரே வெளிச்ச மயமாகக் காட்சி தந்தது.

“இந்தப் பிள்ளை சொல்வழி கேளாது. எல்லா ‘லைற்’றையும் எரியவிட்டு வீட்டைத் திருவிழாவாக்கி வைச்சிருக்கு. ரிஷி எங்கே நிக்கிறாய்?”

ஹோலிற்குள் ரெலிவிஷனில் மூழ்கி இருந்த பாஸ்கரன், மாலினியின் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தான். பாஸ்கரனிற்குப் பின்புறமாகப் பதுங்கி இருந்தான் ரிஷி.

“ரிஷி இஞ்சை வா. உனக்கு ஆபிரகாம் லிங்கனைத் தெரியுமா?”

“ஓமப்பா! அமெரிக்காவின்ர ஜனாதிபதியாக இருந்தாரே, அவர்தானே அப்பா?”

“ஓம். ஓம். அவர் சிறுவயதிலை எப்பிடிக் கஸ்டப்பட்டிருப்பார் தெரியுமா? மிகவும் ஏழையாக இருந்தார். அதாலை பதினைஞ்சு வயதுக்குப் பிறகுதான் படிக்கத் தொடங்கினார். இரவலா புத்தகங்களை வாங்கி வந்து தெருவிளக்கிலை இருந்து படிச்சார். அப்ப அவற்றை இடத்திலை எழுதுறதுக்குப் பேப்பர் இல்லை. கரித்துண்டாலை மரப்பலகைகளிலை எழுதினார். பிற்காலத்திலை கறுப்பு இன மக்களின் விடிவுக்காவும் போராடினார். ஜனாதிபதியாகவும் வந்தார்.”

“தெருவிளக்கு எண்டா ‘ஸ்றீற் லாம்ப்’ தானே அப்பா? ஒருக்கா தெருவிளக்கைப் பார்த்து வருவோமா அப்பா?”

மாலினிக்கு கோபம் போய் சிரிப்பு வந்தது. இப்படித்தான். ஏதாவது ஒன்றிலே தொடங்கி இன்னொன்றில் முடித்து வைப்பான் அந்தச் சிறுவன். எட்டு வயதான ரிஷி பாஸ்கரனின் கழுத்திலே தொங்கிக் கொண்டான்.

“முதலிலை எல்லா லைற்றுகளையும் ஓ·ப் பண்ணிப்போட்டு எங்கையெண்டாலும் போங்கோ” மாலினி சொல்லியதையும் பொருட்படுத்தாது இருவரும் தெருவிளக்கைப் பார்க்கப் புறப்பட்டார்கள்.

வெளியே இருளிற்குள் தெருவிளக்கு பளிச்சிட்டது. குளிர்காற்று நாலாபுறமும் சுழன்று அடித்தது. ஒரே இருள். சிறுவன் நாலாபுறமும் பார்த்தான்.

“வா அப்பா! நாங்கள் வீட்டுக்குப் போவம். ஒரே குளிராக் கிடக்கு” என்றான்.

வீட்டிற்குள் வந்ததும் கேள்விகள் எழுந்தன.

“அப்பா! அமெரிக்கா அவுஸ்திரேலியாவைப் போல இருக்குமா?”

“இல்லை. அமெரிக்கா இன்னும் குளிர் கூடிய இடம். சிலவேளைகளிலை புயல் காற்றும் வீசும்.”

“தெருவிளக்கிலை இருந்து படிக்கிறதே கஸ்டம். எப்படிக் குளிர் காத்திலை இருந்து லிங்கன் படிச்சார்?”

“அதுதான் ஆபிரகாம் லிங்கன்!”

இவர்களின் உரையாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்த மாலினி, “சரி தெருவிளக்கைப் பற்றிச் சொல்லிப் போட்டியள். இனி எங்கடை குப்பிவிளக்கைப் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்கோவன். எங்கட நாட்டு விஷயங்களையும் பிள்ளை தெரிஞ்சிருக்க வேணுமெல்லே!” என்றாள். ஆரம்பிப்பது எப்பொழுதுமே அவள்தான்.

“அப்பா, குப்பிவிளக்கு எப்பிடியிருக்குமப்பா?” குப்பிவிளக்கிற்குத் தாவினான் சிறுவன்.

பாஸ்கரன் குப்பி விளக்கைப் பற்றியும் சொல்ல வேண்டியதாயிற்று. “மண்ணெண்ணெய் சிக்கனத்துக்காக செய்யப்பட்டதுதான் இந்தக் குப்பிவிளக்கு. ஜாம் போத்தல் விளக்கு, சிக்கனவிளக்கு எண்டெல்லாம் இதுக்குப் பெயர் இருக்கு. ஜாம்போத்தல் ஒன்றை எடுத்து கொஞ்ச பஞ்சை அடியில் வைக்க வேணும். திரியைப் பொருத்துவதற்கு போத்தலின் விளிம்பில் ‘ப’ வடிவிலை வளைச்ச கம்பியொண்டைப் பொருத்த வேணும். சைக்கிள் வால்வ் கட்டையை எடுத்து அதிலை பஞ்சுத்திரியை நுழைக்க வேணும். பிறகு வால்வ் கட்டையை கம்பியின்ர ‘ப’ நடுவிலை பொருத்தி திரியை போத்தல் அடியிலை உள்ள பஞ்சோடை முட்டப் பண்ணவேணும். பஞ்சில ஊறக்கூடியளவிற்கு மண்ணெண்ணெய் விட்டால் அது திரி வழியே மேலேறி விளக்கு எரியும். இதாலை எண்ணெயை நல்லா மிச்சப்படுத்தலாம்.”

“அப்பா எனக்கொரு குப்பிவிளக்கு செய்து தருவாயா?” ரிஷி துள்ளினான்.

“குப்பிவிளக்கு செய்யிறதெண்டா எனக்கு இப்ப 50 டொலர் மட்டில வேணும். ‘பணிங்ஸ்’ போய் திங்ஸ் வாங்கவேணும். ஒரு சொட்டு மண்ணெண்ணைக்கு ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் வாங்க வேணும். ஒரு இத்தினூண்டு பஞ்சுக்கு ஒரு பொக்ஸ் பஞ்சு வாங்க வேணும். இந்தக் காசை ஈழத்துக்கு அனுப்பினா நூறு குப்பிவிளக்கு செய்யலாம்.”

“நூறா அப்பா!” வியந்தான் சிறுவன்.

“இருக்கிறதைச் சிக்கனமாகப் பாவிக்கப் பழக வேணும். அதுக்காகத்தான் அம்மா எல்லா லைற்றையும் போட்டு கறன்ர வீணாக்க வேண்டாம் எண்டு சொல்லுறா”

“ஓமப்பா, விளங்குது அப்பா. எனக்கு குப்பி விளக்கு வேண்டாமப்பா” சொல்லிவிட்டு ஒவ்வொரு அறைக்குள்ளும் சென்று லைற்றை ஓ·ப் செய்தான் ரிஷி.

ஹோல் லைற் மாத்திரம் இப்பொழுது எரிந்து கொண்டிருந்தது. மாலினி தனது வேலைகளை முடித்துவிட்டு ரெலிவிஷன் பார்ப்பதற்காக பாஸ்கரனிற்குப் பக்கத்தில் வந்து இருந்தாள். நல்லதொரு டொக்குமென்ரரி போய்க்கொண்டிருந்தது. மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். நேரம் போனதே தெரியவில்லை.

“எங்கே ரிஷி?”

இருவரும் தேடினார்கள். சிறுவனை ஒரு இடமும் காணவில்லை. கடைசியில் பெட்றூமிற்குள் போர்வைக்குள் ஒரு சிறு வெளிச்சம் தெரிந்தது. போர்வையைத் திறந்து பார்த்தார்கள்.

ரிஷி போர்வைக்குள் முடங்கிக் கிடந்து புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தான். ஒரு கையினில் ரோச்லைற்றும் மறுகையினில் புத்தகமுமாகவிருந்த அவனது கோலத்தைப் பார்த்து மாலினி கலகலவெனச் சிரித்தாள். சிறுவனும் சிரித்தான்.

- பெப்ரவரி 2008
 

தொடர்புடைய சிறுகதைகள்
மூன்றுவார விடுமுறை கிடைத்தது. வியட்நாம் போவதற்கு விரும்பினேன். அவுஸ்திரேலியாவிற்கு புலம்பெயர்ந்த பின்பு புறப்படும் முதல் பயணம். வியட்நாம் - வல்லரசான அமெரிக்காவை நடுங்க வைத்து நிமிர்ந்த தேசம். ஆனால் நண்பன் 'வான் மான் நூஜ்ஜின்' அப்படியல்ல; எப்போதுமே எங்களைச் சிரிக்க வைப்பான். ஒவ்வொரு ஈஸ்டர் ...
மேலும் கதையை படிக்க...
சற்குணம் கோயிலுக்கு முன்பாக நின்று தேங்காய் ஒன்றை வீசி எறின்றார். உடைந்த தேங்காயின் பாகங்கள் மூலைக்கொன்றாக சிதறி தமிழரின் வாழ்வு போலப் பறக்கின்றன. சற்குணம் கனடா போகவென்று கொழும்பு வந்து ஒரு வருஷமும் ஆறு மாதங்களும் உருண்டோடிவிட்டன. ஆனாலும் சற்குனம் கொழும்பைவிட ...
மேலும் கதையை படிக்க...
உண்மையில் நேற்றைய தினமே குழந்தை பிறந்திருக்க வேண்டும். ஒரு நாள் பிந்தி விட்டது. இரவு பகலாக விழித்திருந்ததில் செல்வாவிற்கு இந்தக் அதிகாலை வேளையிலும் அசதியாக இருந்தது. வைத்தியசாலைக்குப் போவதற்கு ஆயத்தமாகக் காரை வீட்டு முகப்பினிலே நிறுத்தியிருந்தான் அவன். "சாந்தினி வெளிக்கிடுவம் என்ன!" சாந்தினி பயந்தபடியே ...
மேலும் கதையை படிக்க...
என்னுடைய வீட்டிற்கு ஒவ்வொரு வருடமும் யூன் மாதமளவில் ஒரு எலி தவறாமல் வந்து போகும். யூன் மாதம் இங்கே குளிர் காலம். எலியைப் பற்றி பல எழுத்தாளர்கள் கவிதை கதைகளைப் படைத்திருந்தாலும், சிறுவயதில் படித்த ‘The Pied Piper’ என்ற கதைதான் எனக்கு ...
மேலும் கதையை படிக்க...
"ராகவி! விளக்கோடை விளையாடாமல் அண்ணாவுக்குப் பக்கத்திலை போய் இருந்து படி" வாசுகி குசினிக்குள் இருந்து சத்தம் போட்டாள். "அப்பா இருட்டுக்கை நிண்டு உடுப்பு மாத்துறார். அதுதான் விளக்கை எடுத்துக் கொண்டு போனனான்." ஒரு குட்டி மேசை மீது புத்தகம் கொப்பிகளைப் பரப்பி வைத்துக் கொண்டு ...
மேலும் கதையை படிக்க...
கற்றுக் கொள்வதற்கு!
கனவு மெய்ப்பட வேண்டும்!
புதிய வருகை
பொறி
அசலும் நகலும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)