கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 12,184 
 

ஓரான் பாமுக்
தமிழில்: கே. நர்மதா

நானும் சிபெலும் ஏப்ரல் 27, 1975இல் வேலி கோனகி அவென்யூ வழியாகக் குளிர்ந்த மாலை நேரத்தை ரசித்தபடி நடந்து சென்றுகொண்டிருந்தபோது, ஒரு கடையின் கண்ணாடியில் புகழ்பெற்ற ஜென்னி கோலன் வடிவமைத்த கைப்பையொன்றை அவள் பார்த்தபோதுதான் என் மொத்த வாழ்க்கையையும் தலைகீழாக மாற்றிப்போட்ட அடுக்கடுக்கான நிகழ்ச்சிகளும் தற்செயல் நேர்வுகளும் நிகழத் தொடங்கின. எங்களுடைய சம்பிரதாயமான நிச்சயதார்த்தம் வெகு விரைவிலேயே நடக்கவிருந்தது. நாங்கள் அதீத உற்சாகத்திலும் மெல்லிய மயக்கத்திலும் மிதந்துகொண்டிருந்தோம். சற்று முன்தான் நிஸான்டசியின் புதிய நவநாகரிக உணவகமான ஃபூயேவிற்குச் சென்றிருந்தோம். என் பெற்றோருடனான இரவு விருந்தில் நிச்சயதார்த்த விழாவிற்கான ஏற்பாடுகளைப் பற்றி விரிவாக ஆலோசித்தோம்; அந்த விழாவிற்குப் பாரீஸில் Lycee Notre Dame de Sion பள்ளி நாட்களிலிருந்தே சிபெலின் சிநேகிதியாக இருந்துவந்த நூர்ஸிஹான் பிரான்ஸிலிருந்து வர வேண்டுமென்பதற்காகவே ஜூன் மத்தியில் அதை நடத்தலாம் எனத் திட்டமிட்டோம். சிபெல் நீண்ட நாட்களுக்கு முன்பே, அந்நாட்களில் இஸ்தான்புல்லின் மிக உயர்ந்த, அநேகரும் நாடும் உடை வடிவமைப்பாளரான சில்க்கி இஸ்மெட்தான் தன்னுடைய நிச்சயதார்த்த உடையைத் தைக்க வேண்டுமென்று ஏற்பாடு செய்து வைத்திருந்தாள். அந்த உடைக்காக என்னுடைய அம்மா அவளுக்குக் கொடுத்திருந்த முத்துகளை எப்படித் தைக்கலாம் என்று இருவரும் ஆலோசித்தார்கள். தன் மகளுடைய நிச்சயதார்த்தம், கல்யாணத்தைப் போல் தடபுடலாக இருக்க வேண்டுமென்பது என் வருங்கால மாமனாரின் விருப்பம், அதை நிறைவேற்றுவதற்கு முடிந்தவரை உதவ என்னுடைய அம்மா ஆர்வமாயிருந்தாள். அந்தக் காலத்தில் பாரீஸுக்கு எந்தப் பெண்ணாவது எதையாவது படிக்கச் சென்றாலே, இஸ்தான்புல்லின் பூர்ஷ்வாப் பேர்வழிகள் “சார்போனில் படித்தவள்” என்பார்கள், அதுவே, அந்தப் புகழே என்னுடைய அப்பாவிற்குத் தன் மருமகளைப் பற்றிப் போதுமானதாக இருந்தது.

அன்று மாலை சிபெலின் திண்மையான தோள்களை அன்போடு பற்றிக்கொண்டு “நான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன், எப்பேர்ப்பட்ட அதிர்ஷ்டக்காரன் நான்!” என்று கர்வத்துடன் யோசித்துக்கொண்டே வீட்டை நோக்கி நடந்துகொண்டிருந்த போதுதான் அவள், “ஆஹா என்ன அழகான பை!” என்றாள். என்னதான் நான் அருந்தியிருந்த மதுவால் என் மூளை மங்கியிருந்தாலும், கடையின் பெயரையும் அந்தக் கைப்பையையும் நினைவில் வைத்துக்கொண்டு, அடுத்த நாளே அங்கே திரும்பவும் போனேன். ஒரு சின்ன சாக்குக் கிடைத்தாலும் பரிசுப் பொருட்கள் வாங்கித் தருகிற பராக்கிரமும் பூங்கொத்து அனுப்பிவைக்கிற பசப்புத்தனமும் கொண்ட விளையாட்டுப் பையனாக என்றுமே நான் இருந்ததில்லை, அப்படி இருக்க வேண்டுமென்று உள்ளூர ஆசையிருந்தாலும்கூட.

ஸில்லி, நிஸான்டஸி, பேபெக் போன்ற பகுதிகளைச் சேர்ந்த வேலைவெட்டியற்ற மேற்கத்தைய நாகரிக இல்லத்தரசிகள் பொழுது போகாமல் இப்போது “ஆர்ட் கேலரி”கள் ஆரம்பிப்பதைப் போல அந்நாட்களில் செய்ததில்லை. மாறாக நவநாகரிக ஆயத்த உடையகங்களை (பொட்டீக்குள்) ஆரம்பித்துக்கொண்டிருந்தார்கள். பாரீஸ், மிலனிலிருந்து தமது லக்கேஜ்களுடன் கடத்திவந்த மலிவான நகைகள், Elle, Vogue போன்ற பத்திரிகைகளில் வந்த ‘லேட்டஸ்ட்’ உடைகளை அநியாயமான விலையில் விற்பார்கள். அவர்களைப் போலவே வேலை வெட்டியில்லாத, பொழுது போகாத மற்ற பணக்கார இல்லத் தரசிகள் அவற்றை வாங்குவார்கள்.

ஸான்ஸிலைஸ் என்ற அந்தக் கடையின் (இந்தப் பெயர் பழம்பெரும் பாரீஸ் அவென்யூவின் எழுத்துப் பெயர்ப்பு) உரிமையாளரான சினே ஹனீம், என் தாய்வழியில் தூரத்து உறவு. ஆனால் பன்னிரெண்டு மணியளவில் நான் கடைக்குள் நுழைந்தபோது அவள் அங்கே இல்லை. சிறிய இரட்டைக் குமிழ் வெண்கலக் கேமல் மணி நான் காலை வைத்ததுமே நாதம் எழுப்பியது. அந்த இசை இப்போது என் இதயத்தைப் பிழிந்துகொண்டிருக்கிறது. அது ஒரு வெம்மையான தினம். ஆனாலும் கடைக்குள் குளிர்ச்சியாகவும் இருட்டாகவும் இருந்தது. மதிய நேரத்து வெயிலிலிருந்து, கடை இருட்டுக்கு இன்னமும் என் கண்கள் பழகாததால், முதலில் கடைக்குள் யாருமில்லை என்றுதான் நினைத்தேன். பிறகு வேகமாகக் கரையை வந்து மோதும் பேரலையைப் போல் என் இதயம் தொண்டைக்குள் அதிர்வதை உணர்ந்தேன்.

‘அந்த ஷோகேஸ் பொம்மை மேலிருக்கும் கைப்பையை வாங்க வேண்டும்’ என்றேன், அவளைப் பார்த்ததால் ஏற்பட்ட தடுமாற்றத்தைச் சமாளித்தபடி.

‘அந்த க்ரீம் வண்ண ஜென்னி கோலனா?’ கண்ணோடு கண்ணாக நாங்கள் பார்த்துக்கொண்டபோது, சட்டென்று அவள் யாரென்று நினைவு வந்தது.

‘ஜன்னலிலிருக்கும் அந்தப் பொம்மைமீது மாட்டியிருக்கும் கைப்பை’ என்றேன் கனவில் பேசுவது போல.

‘சரி’ என்று சொல்லிவிட்டு ஜன்னலை நோக்கி நடந்தாள். மின்னல் வேகத்தில் தனது மஞ்சள் வண்ணக் குதிகால் செருப்புகளில் ஒன்றைக் கழற்றிவிட்டு, சிவப்புச் சாயம் தீட்டிய விரல்களுடன் இருந்த வெறும் காலைக் காட்சிக்கு வைக்கப்படும் பகுதிக்குள் நீட்டிப் பொம்மையை நோக்கிக் கையை எட்டினாள். அவளுடைய கழற்றிய செருப்பிலிருந்து என் கண்கள் அவளது வெற்றுக் கால்களில் ஊர்ந்தன. இன்னும் மே மாதமாகவில்லை, அதற்குள் அவை நிறம் மாறிப்போயிருந்தன.

அந்தக் கால்களின் நீளத்தால், பூ வேலைப்பாடு கொண்ட அவளுடைய குட்டைப் பாவாடை இன்னும் குட்டையாகத் தெரிந்தது. பையைப் பற்றிக்கொண்டே அவள் கவுன்டர் அருகே வந்து, திறமை மிக்க மெல்லிய விரல்களால் கசங்கிப் போயிருந்த டிஷ்யூ காகித உருண்டைகளை நீக்கினாள். ஜிப் வைத்திருந்த பகுதிகளை என்னிடம் பிரித்து, மூடிக் காட்டினான், மேலும் இரண்டு சிறிய தடுப்புகளும் (அவை காலியாக இருந்தன), ஒரு இரகசிய அறையையும் காட்டிவிட்டு அதனுள் ளிருந்து ‘ஜென்னி கோலன்’ என்று பொறித்திருந்த அட்டையை ஏதோ மிகவும் பிரத்யேகமானதைக் காட்டுவதைப் போல எடுத்து நீட்டினாள். அவளது மொத்தச் செய்கையும் தீவிரமானதாகவும் புதிராகவும் இருந்தது.

‘ஹலோ ஃப்யூஸன், மிகவும் வளர்ந்துவிட்டிருக்கிறாய்! ஒருவேளை என்னை அடையாளம் தெரியவில்லையா என்ன?’

‘உங்களைப் பார்த்தவுடனேயே தெரிந்துகொண்டேன், கெமல் சார். ஆனால் உங்களுக்கு நான் யாரென்று புரியாததால், தொந்தரவு தர வேண்டாமென்று நினைத்தேன்’

அங்கே நிசப்தம் கவிந்தது. பையில் அவள் குறிப்பிட்டிருந்த பகுதிகளில் ஒன்றில் மீண்டும் பார்வையை ஓட்டினேன். அவளுடைய அழகோ உண்மையிலேயே மிகவும் குட்டையாக இருந்த ஸ்கர்ட்டோ வேறு ஏதோ ஒன்றோ ஒட்டுமொத்த மாக என்னை அலைக்கழித்துக் கொண்டிருந்ததால் என்னால் இயல்பாகவே இருக்க முடியவில்லை.

‘இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறாய்?’ ‘நான் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்காகப் படித்துக்கொண்டிருக்கிறேன். இந்த இடத்திற்கும் தினமும் வந்து போகிறேன். இங்கே நிறைய புது மனிதர்களைச் சந்திக்க முடிகிறது’.

‘அது அற்புதமான விஷயம். அப்புறம் சொல்லு, இந்தக் கைப்பை என்ன விலை?’

புருவத்தைச் சுருக்கி, அடிப் பகுதியில் கையால் எழுதப்பட்டிருந்த விலை அட்டையை உற்றுப் பார்த்து, ‘ஆயிரத்து ஐந்நூறு லிராக்கள்’ என்றான். (அந்நாட்களில் அது ஒரு ஜூனியர் குமாஸ்தாவின் ஆறு மாதச் சம்பளத் தொகை) ‘ஆனால் ஸீனே ஹனீம் உங்களுக்கு விலையில் விசேஷச் சலுகை தர விரும்பலாம். அவர் மதிய உணவிற்காக வீட்டுக்குச் சென்றிருக்கிறார், இந்நேரம் குட்டித் தூக்கம் போட்டுக்கொண்டு இருப்பார். அதனால் என்னால் இப்போது ஃபோன் பண்ண முடியாது. ஆனால் உங்களால் இன்றைக்கு மாலை வர முடிந்தால் . . .’

‘அதற்கு அவசியமில்லை’ என்று சொல்லிவிட்டு என் பர்ஸைத் திறந்து பணத்தை எண்ணினேன். இந்தத் தத்துபித்துச் செய்கையைப் பின்னாட்களில் ஃப்யூஸன் அடிக்கடி பகடிசெய்து காட்டிக்கொண்டிருந்தாள். அவள் பர்ஸைக் கவனமாகக் காகிதத்தில் சுற்றினாலும், அவளுடைய அனுபவமின்மை வெளிப்படையாகத் தெரிந்தது. பின்பு அதனை ஒரு ப்ளாஸ்டிக் பைக்குள் போட்டாள். இந்த எல்லா நடவடிக்கைகளின் போதும் அவளை, அவளுடைய தேன் நிறக் கைகளையும் துரிதமான, நளினமான செய்கைகளையும் ரசித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். என் பிரக்ஞை, அவளிடம் இருந்தது என்னிடம் அதை நயமாக ஒப்படைத்தபோது நான் அவளுக்கு நன்றி கூறினேன். ‘நெஸிபி அத்தையையும் உன் அப்பாவையும் விசாரித்ததாகச் சொல்’ என்றேன். சமயத்தில் அவளுடைய அப்பாவின் பெயர் நினைவுக்கு வரவில்லை. பிறகு ஒரு வினாடி பேசாமல் நின்றேன். இப்போது என் ஆவி உடலை விட்டு வெளியேறிச் சொர்க்கத்தில் ஏதோ ஒரு மூலையில் ஃப்யூஸனைக் கட்டித்தழுவி முத்தமிட்டது. நான் விரைவாகக் கதவை நோக்கி நகர்ந்தேன். மணி ஒலித்தது, எனக்குள் வானம் பாடி ஒன்று பாடியது. வெளியே வந்ததும், வெயிலை இதமாக உணர்ந்தேன். பை வாங்கியதில் மகிழ்ச்சியாக இருந்தேன்; சிபெலை நான் மிகவும் காதலிக்கிறேன். இந்தக் கடையையும் ஃப்யூஸனையும் மறக்க முடிவெடுத்தேன்.

இருப்பினும், அன்றிரவு உணவின் போது, அம்மாவிடம் சிபெலுக்காகக் கைப்பை வாங்கும்போது எங்களது தூரத்து உறவான ஃப்யூஸனைச் சந்திக்க நேர்ந்ததைப் பற்றிக் குறிப்பிட்டேன்.

‘ஆமாம், நெஸிபியின் மகள் அந்த ஸீனேயின் கடையில்தான் வேலை செய்கிறாள், என்ன வெட்கக்கேடு!’ என்றார் அம்மா. ‘அவர்கள் இப்போதெல்லாம் விடுமுறைக்குக்கூட இங்கே வந்து நம்மைப் பார்ப்பது இல்லை. அந்த அழகுப் போட்டி விவகாரம் அவர்களை இந்த நிலைமைக்குக் கொண்டு வந்துவிட்டது. தினமும் அந்தக் கடை வழியாகத்தான் போகிறேன், இருந்தாலும் ஒரு தடவைகூட உள்ளே போய் அவளிடம் ஒரு ஹலோ சொல்லத் தோன்றியதில்லை. ஆனால் அவள் சின்னவளாக இருந்தபோது – உனக்கு ஞாபகம் இருக்கிறதா – எனக்கு அவள் மேல் உயிர். நெஸிபி தைக்க வரும்போது சிலசமயம் அவளும்கூட வருவாள். அப்போது அலமாரியிலிருந்து உன்னுடைய பொம்மைகளை எடுத்துப் போடுவேன், அவளுடைய அம்மா தைத்து முடிக்கும்வரை அமைதியாக விளையாடிக்கொண்டிருப்பாள். நெஸிபியின் தாயார், மிஹ்ரிவர் – அவள் ஆன்மா சாந்தியடையட்டும். அவளும்கூட மிகவும் அருமையான பெண்மணி தான்.’

‘அவர்கள் நமக்கு எப்படி, எந்த விதத்தில் உறவு?’

என் அப்பா எங்களைக் கவனிக்காமல் தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்ததால், அம்மா தன்னுடைய தந்தையைப் பற்றிய விரிவான கதையைச் சொல்லத் தொடங்கினாள். அடாதுர்க் பிறந்த அதே வருடம் பிறந்தவர் அவர். குடியரசை நிர்மாணித்த அந்தத் தலைவர் படித்த அதே செம்ஸி எஃபெண்டி பள்ளியில் படித்தவர். எத்தெம் கெமல் என்ற அந்தப் பாட்டனர் என் பாட்டியை மணப்பதற்கு நீண்ட நாட்களுக்கு முன்னரே தன்னுடைய இருபத்தி மூன்றாம் வயதில் ஃப்யூஸனின் கொள்ளுப் பாட்டியைச் சிறிது நாட்கள் மட்டும் நீடித்த முதல் திருமணமாக மணமுடித்திருந்திருக்கிறார் போலிருக்கிறது. அந்தக் கொள்ளுப் பாட்டி பாஸ்னியன் வம்சத்தைச் சேர்ந்தவர். அவர் எடிர்ன் வெளியேற்றத்தின்போது பால்க்கன் போரில் மடிந்துபோனார். அந்தப் பாட்டிக்கு என் பாட்டனர் எதெம் கெமல் மூலம் குழந்தைகள் ஏதும் இல்லாவிட்டாலும் அவள் சிறுமியாக இருந்தபோதே திருமணம் செய்துகொண்ட வசதியற்ற ஒரு ஷேக்கின் மூலமாகப் பிறந்த மிஹ்ரீவர் என்ற பெண் குழந்தை இருந்தது. ஆக மிஹ்ரிவர் அத்தை, (ஃப்யூஸனின் பாட்டியாகிய இவள் பலதரப்பட்டவர்களால் வளர்க்கப்பட்டவள்) மற்றும் அவளுடைய மகள் நெஸிபி ஹனீம் (ஃப்யூஸனின் தாய்) ஆகிய இருவரும் நிர்தாட்சண்யமாகச் சொல்வதென்றால் எங்களுக்கு உறவினர்களே அல்ல; சம்பந்தி உறவுபோலத்தான் அவர்கள். இதை எப்போதும் அம்மா வலியுறுத்தியிருந்தாலும், அந்தக் குடும்பத்துப் பெண்களை ‘அத்தை’ என்று அழைக்க வேண்டும் என்று எங்களுக்குச் சொல்லிக் கொடுத்து வந்தார். சென்ற விடுமுறைக்கு வந்திருந்த இந்தப் பஞ்சப்பராரி உறவினர்களுக்கு அம்மா வழக்கத்திற்கு மாறாகச் சற்றுக் காரசாரமான வரவேற்புக் கொடுத்ததால் அவர்கள் மனம் புண்பட்டார்கள். காரணம், இரண்டு வருடங்களுக்கு முன்பு நெஸிபி அத்தை யாரிடமும் ஒரு வார்த்தைகூடச் சொல்லாமல், அப்போது நிஸான்டஸி லைஸி பெண்கள் பள்ளியின் மாணவியாக இருந்த தன் பதினாறு வயது மகளை அழகுப் போட்டியில் கலந்துகொள்ள அனுமதித்ததுதான். இந்தக் கூத்தில் கலந்துகொள்வதைப் பெருமையாக நினைத்து, ஊக்கப்படுத்தியதே நெஸிபி அத்தைதான் என்ற உண்மை அம்மாவுக்குத் தெரியவந்தபோது, உண்மையில் வெட்கப்பட வேண்டியவளே இப்படிச் செய்ததால் யாரை ஒரு காலத்தில் மிகவும் நேசித்துக் காபந்து செய்தாளோ அந்த நெஸிபி அத்தைக்கு எதிராகத் தன் மனத்தை இரக்கமற்று மாற்றிக்கொண்டாள்.

நெஸிபி அத்தையோ தன்னைவிட இருபது வயது மூத்தவள் என்பதாலும் மேலும் அவள் இளம் பெண்ணாகத் தையல்காரியாக, இஸ்தான்புல்லின் மிகவும் வசதி படைத்த அக்கம் பக்கத்து வீடுகளுக்கு வேலை தேடிச் சென்றுகொண்டிருந்தபோது ஆதரவாக இருந்த என் அம்மாவை மிகவும் மதித்துப் போற்றினாள்.

‘அவர்கள் நிராதரவான ஏழைகள்’ என்றார் அம்மா. அவள் அதிகப்படுத்தவில்லை. மேலும், ‘அவர்கள் மட்டும் என்றில்லை மொத்த துருக்கியும் அந்தக் காலகட்டத்தில் ஏழையாகத்தான் இருந்தது’ என்றார். நெஸிபி அத்தையை அம்மா தன்னுடைய தோழிகளுக்கெல்லாம் பரிந்துரைத்ததோடு வருடத்திற்கொரு முறை அவளை எங்கள் வீட்டுக்கே வரவழைத்து ஏதாவது விழாக்களுக்காக அல்லது திருமண வைபவத்திற்காக உடைகள் தைக்கவைப்பாள்.

இதுபோல் தைப்பதற்காக வருவது எல்லாமே அநேகமாக எப்போதும் பள்ளி நாட்களில்தான் என்பதால், நான் அவர்களை அதிகம் பார்த்ததில்லை. ஆனால் 1957 ஆகஸ்டு மாத இறுதியில், அம்மாவிற்கு ஒரு திருமணத்திற்காக அவசரமாக உடை தேவைப்பட்டதால் சௌதியேவில் இருக்கும் எங்களுடைய கோடை வாஸஸ்தலத்திற்கு நெஸிபி அத்தையை வரவழைத்தார். அம்மாவும் நெஸிபி அத்தையும் இரண்டாவது தளத்திலிருக்கும் பின்கட்டு அறையில், கடலைப் பார்த்தபடி ஜன்னலோரமாக அமர்ந்துகொண்டு, பனை மரங்களினூடே விசைப் படகுகளையும் உந்து படகுகளையும் மேலும் அலை தாங்கியிலிருந்து தாவிக் குதிக்கும் சிறுவர்களையும் பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

நெஸிபி அவளுடைய இஸ்தான்புல் படம் பொறித்த தையல் பெட்டியைத் திறந்து, கத்தரி, ஊசிகள், அளவெடுக்கும் பட்டி, பாபின்கள், பின்னல் வேலை செய்த லேஸ் துண்டுகள் எல்லாம் புடைசூழ, இருவரும் உட்கார்ந்து கொண்டு, உஷ்ணத்தை, கொசுக்களை எல்லாம் குறைசொல்லி அந்தச் சூழ்நிலையில் தைக்கும் சிரமத்தைப் பற்றிப் பேசிக்கொண்டே, சகோதரிகள் போலச் சிரித்துக்கொண்டே நள்ளிரவுவரை அம்மாவின் சிங்கர் மிஷினை வேலைவாங்கிக்கொண்டிருப்பார்கள். சமையல்காரர் பெக்ரி எலுமிச்சைப் பழ ரசத்தை டம்ளர் டம்ளராக அந்த அறைக்கு எடுத்துச் சென்றது எனக்கு ஞாபகமிருக்கிறது. ஏனெனில் அப்போது நெஸிபிக்கு இருபது வயதுதான், கருவுற்றிருந்தாள். எல்லாற்றுக்கும் இச்சை கொள்ளும் காலகட்டம். நாங்கள் அனைவரும் மதிய உணவிற்கு அமருகையில் அம்மா பெக்ரியிடம் பாதி நகைச் சுவையாக, ‘கர்ப்பிணி பெண் எது கேட்டாலும் கொடுத்துவிட வேண்டும். இல்லாவிட்டால் குழந்தை அவலட்சணமாகப் பிறந்துவிடும்’ என்பார். அப்போது நான் நெஸிபி அத்தையின் மேடான வயிற்றை ஒருவித ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தது எனக்கு நினைவிருக்கிறது. அதுதான் ஃப்யூஸனின் வருகைக்கான எனது முதல் எதிர் பார்ப்பாக இருந்திருக்க வேண்டும், பிறக்கப்போவது ஆணா, பெண்ணா என்று இன்னும் யாருக்கும் தெரியாதபோதும்.

‘நெஸிபி அவளுடைய கணவனுக்குக்கூடத் தகவல் சொல்லவில்லை. அவள் தன் மகளுடைய வயதைப் பொய் சொல்லி அந்த அழகுப் போட்டியில் கலந்துகொள்ளச் செய்துவிட்டாள்’ என்றார் அம்மா எரிச்சலுடன் அந்த விஷயத்தை நினைவுகூர்ந்தபடி. ‘கடவுளே, நல்லவேளை அவள் அந்தப் போட்டியில் வெற்றியடையவில்லை, அவமானம்தான் மிஞ்சியது. பள்ளி நிர்வாகிகளிடம் இந்த விஷயம் கொஞ்சம் கசிந்திருந்தாலும் அந்தப் பெண்ணை வெளியே துரத்தியிருப்பார்கள் . . . இந்நேரம் அவள் லைஸி படிப்பை முடித்து விட்டிருப்பாள். மேற்படிப்பு எதுவும் படிக்கவில்லையென்றுதான் நினைக்கிறேன். ஆனால் அவர்கள் விடுமுறைக்கு இப்போதெல்லாம் வருவதில்லையென்பதால் தற்போதய நிலவரம் தெரியவில்லை . . . எப்பேர்ப்பட்ட பெண்கள் அழகுப் போட்டியில் கலந்துகொள்வார்களென்று தெரியாதவர்கள் இந்த ஊரில் இருக்க முடியுமா? உன்னிடம் அவள் எப்படி நடந்துகொண்டாள்?’

ஃப்யூஸன் ஆண்களோடு நெருங்கிப் பழகுபவள் என்று என் அம்மா கூறிய விதம் இப்படித்தான். மில்லியெட் செய்தித்தாளில் தெரிவுசெய்யப்பட்ட மற்ற போட்டியாளர்களுடன் ஃப்யூஸனின் புகைப்படம் வந்திருந்தபோது என்னுடைய நிஸான்டஸி ப்ளேபாய் நண்பர்கள் இதேபோல் சொன்னதைக் கேட்டிருக்கிறேன். ஆனால் இது எல்லாமே எனக்கு மிகவும் தர்மசங்கடமாக இருந்ததால் நான் அதில் எவ்வித ஆர்வமும் காட்டவில்லை. நாங்களிரு வரும் பேச்சை நிறுத்திய பின்பு அம்மா விரலை அப்படியும் இப்படியும் ஆட்டி என்னிடம், ‘ஜாக்கிரதை! நீ மிக அபூர்வமான, அழகான, அற்புதமான பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறாய்! சரி, அதை விடு. அவளுக்காக வாங்கிய அந்த பர்ஸை என்னிடம் காட்டேன்! மும்தாஜ்’ – அப்பாவை அழைத்து – ‘இங்கே பாருங்கள் கெமல், சிபெலுக்காகப் பர்ஸ் வாங்கிவந்திருக்கிறான்!’ என்றார்.

“அப்படியா?” என்றார் அப்பா டி.வியிலிருந்து ஒருமுறைகூடக் கண்ணை அகற்றாவிட்டாலும், அவருடைய மகனும் அவனுடைய மனத்திற்கினியவளும் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்பதற்கு அடையாளமான அந்தக் கைப்பையை அவர் பார்த்து ஒப்புதல் அளித்த தாகவே அவருடைய திருப்திகரமான அந்தக் குரல் உணர்த்தியது. அமெரிக்க வணிகக் கல்லூரியில் பட்டம் பெற்று, எனது ராணுவப் பணியையும் முடித்தவுடன், அப்பா என் அண்ணாவைப் போலவே நானும் அவருடைய வியாபாரத்தில் மேலாளராக வேண்டும் என்று வற்புறுத்தினார். எனவே என்னை மிகச் சிறுவயதிலேயே, அபரிமிதமாக வளர்ந்துகொண்டிருந்த ஏற்றுமதி மற்றும் விநியோக நிறுவனமான ‘சத்சத்’திற்குப் பொதுமேலாளராக நியமித்தார். ‘சத்சத்’ அபாரமான பட்ஜெட்டுடன் இயங்கி, பெரும் லாபத்தை ஈட்டியதற்கு, அப்பாவுடைய மற்ற தொழில்களில் ஏய்த்து எழுதிய கணக்குகள் மூலம் ஈட்டிய வருமானம் அங்கு வந்து கொட்டியதற்குத்தான் நன்றி சொல்லலாம், எனக்கு அல்ல. (சத்சத் என்பதை Sell Sell என ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கலாம்) என்னைவிட இருபது முப்பது வருடம் மூத்த உபயோகமற்ற கணக்காயர்களிடமிருந்தும் என் தாயைவிடவும் மூத்த, பெருத்த மார்பகங்களைக் கொண்ட பெண் குமாஸ்தாக்களிடமிருந்தும் வியாபார நுணுக்கங்களைக் கற்றுத் தேர்வதில் என் நாட்களைச் செலவிட்டேன். முதலாளியின் மகனாக மட்டும் நான் இல்லையென்றால் இந்த இடத்திற்கே வந்திருக்க முடியாது என்பதை எப்போதும் மனத்தில்கொண்டு, கொஞ்சம் பணிவுடனேயே இருப்பதாகக் காட்டிக்கொண்டேன்.

அலுவலகம் மூடும் சமயம், ‘சத்சத்’தின் குமாஸ்தாக்களைப் போலவே பழைய பேருந்துகளும் கார்களும் கட்டடத்தின் அஸ்தி வாரத்தையே கிடுகிடுக்க வைத்தபடி சாலையில் ஓடும்போது என் வருங்கால மனைவி சிபெல் என்னைப் பார்க்க வருவாள். பின்பு நாங்கள் அலுவலகத்திலேயே உறவுகொள்வோம். நாகரிகமான தோற்றத்தோடு ஐரோப்பாவில் பயின்றுவந்த பெண்ணியக் கருத்துகளைத் தன்வசம் வைத்துக்கொண்டிருந்தாலும், காரியதரிசிகளைப் பற்றிய கருத்தில், சிபெல் என் தாய்க்கு எந்த விதத்திலும் குறைந்தவளல்ல. ‘இங்கே வேண்டாமே. இது என்னை ஒரு காரியதரிசியைப் போல நினைக்க வைக்கிறது’, என்பாள் சில நேரம். ஆனால் லெதர் சோபாவிற்கு நாங்கள் நகரும்போது அவளுடைய தயக்கத்திற்கான உண்மையான காரணம் – துருக்கியப் பெண்கள் அக்காலகட்டத்தில் திருமணத்திற்கு முந்தைய உறவிற்கு அஞ்சியது வெளிப்படையாகத் தெரிந்தது.

ஐரோப்பாவில் காலம் கழித்த மேற்கத்தைய நாகரிகம் கொண்ட செல்வந்தர் குடும்பங்களில் நவநாகரிகப் பெண்கள் மெல்ல மெல்ல, இந்தச் சமூகக் கட்டுகளை உடைத்து, திருமணத்திற்கு முன்பே தங்களது ஆண் நண்பர்களுடன் உறவுகொள்ளத் தொடங்கினர். அடிக்கடி தன்னை அப்படிப்பட்ட ‘தைரியசாலி’ பெண்களில் ஒருத்தி என்று தற்பெருமை அடித்துக்கொள்ளும் சிபெல், பதினோரு மாதங்களுக்கு முன்பு முதன் முறையாக என்னோடு உறவு கொண்டாள். அந்தக் கட்டத்தில் அவள், இந்நேரம் திருமணம் நடந்திருக்க வேண்டும் ஆனால் ஏற்பாடுகள் நீண்டுகொண்டே போவதாக உணர்ந்தாள். என்னுடைய வருங்கால மனைவியின் துணிச்சலைப் பெரிதுபடுத்தவோ பெண்கள் மீதான பாலியல் அடக்குமுறையை வெளிச்சம்போட்டுக்காட்டவோ நான் விரும்பவில்லை. ஏனெனில், எனது ‘உள்நோக்கம் தீவிரமாக இருந்ததாலும்’ ‘நம்பிக்கைக்கு உரியவன்’ என்று சிபெல் என்னை நம்பியதாலும் – வேறு விதமாகச் சொல்வதென்றால் இறுதியில் திருமணம் நடக்கும் என்பது பரிபூரணமான நிச்சயம் என்பதாலும் அவள் தன்னையே என்னிடம் கொடுத்தாள். கண்ணியமானவன், பொறுப்புள்ளவன் என்று என்னையே நான் நம்பிக்கொண்டு, அவளை மணந்துகொள்ள வேண்டும் என்றே முழுமனத்துடன் இருந்தேன். ஆனால் நான் விரும்பாவிட்டாலும்கூட இப்போது அவள் தன் ‘கற்பைக் கொடுத்துவிட்ட’ பிறகு, நான் தேர்ந்தெடுப்பது பற்றிய கேள்வியே இல்லை. திருமணத்திற்கு முன்பே உறவுகொள்வதை நாங்கள் ‘சுதந்திரமாக, நாகரிகமாக’ (இம்மாதிரியான வார்த்தைகளை நாங்கள் உபயோகித்திருக்காவிட்டாலும்) இருப்பதாகப் போலித்தனமாகப் பெருமைபட்டுக்கொண்டிருந்தாலும் இதன் சுமை முன்பெல்லாம் எங்களிருவருக்குமிடையே பொதுவாகச் சில விஷயங்களில் சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆனால் அதே சமயம் அதுவே ஒருவிதத்தில் எங்களை நெருக்கமாகவும் ஆக்கியது.

நாங்கள் இருவரும் விரைவில் ‘டேட்டிங்’ போக வேண்டும் என்று சிபெல் ஆவலுடன் குறிப்பிட்ட ஒவ்வொரு முறையும் அதே சந்தேகம் எங்களிடையே எழுந்தது. ஆனால் அலுவலகத்திலேயே உறவுகொள்ளும்போது நானும் சிபெலும் சந்தோஷமாக இருந்த நேரமும் உண்டு. ஹலாஸ்கர்காசி அவென்யூவிலிருந்து எழும் தடதடக்கும் பேருந்துகள் மற்றும் போக்குவரத்தின் சப்தத்திற்கு இடையே இருளில் எனது கைகள் அவளைச் சுற்றித் தழுவிக்கொண்டிருந்தது நினைவிருக்கிறது. நான் எத்தகைய அதிர்ஷ்டசாலி என்றும் என் வாழ்நாள் முழுவதும் எவ்வளவு நிம்மதியாக இருக்கப்போகிறேன் என்றும் எனக்கு நானே சொல்லிக்கொள்வேன். ஒருமுறை எங்கள் கலவிக்குப் பின், நான் சிகரெட்டை ‘சத்சத்’ லோகோ பொறித்திருந்த ஆஷ்ட்ரேயில் தட்டிக்கொண்டிருந்தபோது, சிபெல் அரைகுறை உடைகளுடன் என்னுடைய காரியதரிசியின் நாற்காலியில் அமர்ந்து கொண்டு, அந்நாட்களின் நகைச்சுவை பத்திரிகைகளிலும் துணுக்குகளிலும் பெரும்பான்மையாகச் சித்தரிக்கப்பட்ட அழகியைப் போலவே, கேலியாகச் சிரித்துக்கொண்டே தட்டச்சு இயந்திரத்தைத் தட்டத் தொடங்கினாள்.

நான் பர்ஸ் வாங்கிய அன்று மாலை, ஃபாயேவில் இரவு உணவின்போது சிபெலிடம், ‘இப்போதிலிருந்தே நாம், என் அம்மாவுடைய மொஹாமெட் குடியிருப்பில் சந்தித்துக்கொண்டால் நன்றாயிருக்குமல்லவா? அங்கே மிக அழகானதொரு தோட்டம்கூட இருக்கிறது’ என்றேன்.

‘நமக்குக் கல்யாணமானவுடனேயே நம்முடைய சொந்த வீட்டிற்குக் குடியேறுவதற்குத் தாமதமாகுமென்று நினைக்கிறீர்களா?’ என்றாள்.

‘இல்லை டார்லிங், அப்படி எதுவும் நான் சொல்லவில்லையே’

‘உங்கள் வைப்பாட்டியைப் போல இரகசியமான குடியிருப்பில் உறவுகொள்ள எனக்கு விருப்பமில்லை’.

‘சரியாகச் சொன்னாய்.’

‘எங்கேயிருந்து இந்த யோசனை வந்தது, அந்தக் குடியிருப்பில் சந்திக்கும்படி?’

‘சரி விடு’ என்றேன் சுற்றிலும் இருந்த குதூகலமான கூட்டத்தைப் பார்த்துக்கொண்டே, இன்னமும் ப்ளாஸ்டிக் பைக்குள் மறைந்திருந்த, நான் வாங்கிய பர்ஸை வெளியிலெடுத்தேன்.

‘என்ன அது?’ ஏதோ பரிசு என்று தெரிந்துகொண்ட சிபெல் கேட்டாள்.

‘இரகசியம்! திறந்து பாரேன்’

‘நிஜமாகமாவா?’ ப்ளாஸ்டிக் பையைத் திறந்து பர்ஸைப் பார்த்தபோது முதலில் அவள் முகத்திலிருந்த குழந்தைத்தனமான குதூகலம் மறைந்து, விசித்திரமாகிப் பின்பு ஏமாற்றமடைந்து அதை அவள் மறைக்க முயன்றாள்.

‘ஓ. எஸ், எவ்வளவு ஞாபகசக்தி உங்களுக்கு!’

‘உனக்குப் பிடித்திருந்தால் சந்தோஷம். நம்முடைய நிச்சயதார்த்த விழாவில் இது உன் கைகளில் இருந்தால் மிகவும் எடுப்பாக இருக்கும்.

‘சொல்லவே கஷ்டமாக இருக்கிறது டியர், நம்முடைய நிச்சயதார்த்தத்தின் அன்று வைத்துக்கொள்ள வேண்டிய பர்ஸை ரொம்ப நாட்களுக்கு முன்பே தேர்ந்தெடுத்து விட்டேன்’. என்றாள் சிபெல். ‘ஓ ரொம்பவும் வருத்தப்பட வேண்டாம். இவ்வளவு சிரமப்பட்டு, இத்தனை அழகான பரிசை ஞாபகமாக வாங்கியது பெரிய விஷயம்தான். . . எல்லாம் சரிதான், நான் உங்களிடம் இரக்கமில்லாமல் நடந்துகொள்வதாக நினைக்க வேண்டாம். இந்தப் பர்ஸை நம் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் என்னால் வைத்துக்கொள்ளவே முடியாது. ஏனெனில் இது போலி!’

‘என்னது?’

‘இது உண்மையான ஜென்னி கோலனல்ல, என் அருமை கெமல், இது போலி.’

‘எப்படிச் சொல்கிறாய்?’

‘பார்த்தாலே தெரிகிறதே அன்பே, இந்த லேபிளை லெதருடன் தைத்து இருக்கும் விதத்தைப் பாருங்கள். நான் பாரீஸில் வாங்கிய இந்த ஜென்னி கோலனின் தையலை ஒரு முறை பாருங்கள். இந்த நிறுவனம் பிரான்ஸில் மட்டுமல்ல உலகம் முழுவதும் பிரபலமானது சும்மாவல்ல. இந்த மாதிரியான மட்டமான நூலை அவர்கள் பயன்படுத்தவே மாட்டார்கள்?

ஒரு விநாடி, அந்த உண்மையான தையலைப் பார்வையிட்டபோது, ஏன் என் வருங்கால மனைவி இப்படிப்பட்ட வெற்றித் தோரணையுடன் பேசினாள் என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். நீண்ட காலத்திற்கு முன்பே தனது பாஷா பாட்டனாரின் சொத்துகளையெல்லாம் விற்றுத் தீர்த்துவிட்ட ஒரு ஓய்வுபெற்ற தூதரக அதிகாரியின் மகள்தான் சிபெல். இப்போதைக்கு சல்லிக் காசு தேறாதுதான்.

ஒரு சாதாரண குமாஸ்தாவின் மகள் என்ற அந்தஸ்தே அவளைச் சில நேரங்களில் அசௌகரியமாகவும் பாதுகாப்பற்றதாகவும் உணரச் செய்தது. இந்த மனப்பான்மை மேலிடும்போதெல்லாம் அவள், தன்னுடைய தந்தைவழி பாட்டி பியானோவெல்லாம் வாசித்தவள் என்றோ தாத்தா சுதந்திரப் போரில் ஈடுபட்டவராக்கும் என்றோ தாய் வழி தாத்தா சுல்தான் அப்துல் ஹமீதுக்கு எத்தனை நெருக்கமானவராக இருந்தார் என்றோ சொல்லிக்கொள்வாள். அவளுடைய இந்தத் தாழ்வு மனப்பான்மையே என்னை மிகவும் பாதிக்கும். அவளை நான் காதலிப்பதே இதற்காகத்தான். எழுபதுகளின் தொடக்கத்தில் ஜவுளி மற்றும் ஏற்றுமதி வியாபாரம் விரிவுபடுத்தப்பட்டதோடு, இஸ்தான் புல்லின் மக்கள்தொகையும் மும் மடங்காகப் பெருகியதன் விளைவு, நாடு முழுவதும், குறிப்பாக எங்கள் பகுதியில், நிலத்தின் விலைவாசி வானளாவியது. இந்தப் பேரலையில் என் தந்தையின் அதிர்ஷ்டமும் ஒன்று சேர்ந்து, கடந்த பத்தாண்டுகளில் அது அபரி மிதமாகப் பெருகி, ஐந்து மடங்கு அதிகமானதால் துணி வியாபரத்தில் ஒரு தலைமுறைக்கான சொத்துகளை நாங்கள் ஈட்டிவிட்டதால், எங்களுக்கு ‘பாஸ்மஸி’ (துணி நெய்பவர்) என்ற பட்டப் பெயர் கொடுக்கப்பட்டதில் எவ்வித இரண்டாம் கருத்தும் எழவில்லை. எங்கள் குடும்பத்திற்கு அனைத்து அமோக வளங்கள் இருந்தும்கூடப் போலியான ஒரு கைப்பைக்காக வருந்துவது என்னை மிகவும் கஷ்டப்படுத்தியது.

எனது உற்சாகம் குறைந்ததைப் பார்த்த சிபெல் என் கையைத் தழுவிக்கொண்டாள். ‘இதற்காக எவ்வளவு பணம் கொடுத்தீர்கள்?’

‘1500 லிராக்கள்’ என்றேன். ‘உனக்குப் பிடிக்கவில்லையென்றால் நாளைக்கே மாற்றிவிடுகிறேன்’.

‘மாற்ற வேண்டாம் டார்லிங். உங்கள் பணத்தைத் திரும்பக் கேளுங்கள், ஏனெனில் அவர்கள் உங்களை நிஜமாகவே ஏமாற்றியிருக்கிறார்கள்!’

‘அந்தக் கடை உரிமையாளர் ஸினே ஹனீம் எங்களுடைய தூரத்து உறவினர்’ என்றேன் வருத்தத்துடன் புருவங்களைச் சுருக்கியபடி.

பையின் உட்பகுதியை அமைதியாக நான் ஆராய்ந்துகொண்டிருந்தபோது, சிபெல் மீண்டும் அதை என்னிடமிருந்து வாங்கினாள். ‘டார்லிங் நீங்கள் மிகவும் அறிவுள்ளவர்தான், ரொம்ப புத்திசாலியும் நாகரிகமும் நிறைந்தவர் தான், என்றாலும் பெண்கள் எப்படி ஏமாற்றுவார்கள் என்ற அனுபவமே உங்களுக்கு இல்லை’ என்றாள் மெல்லிய புன்னகையுடன்.

அடுத்த நாள் மதியம், நான் சான்ஸிலைஸ் பொட்டிக்கிற்கு, அந்தப் பர்ஸை அதே ப்ளாஸ்டிக் பையில் எடுத்துச் சென்றேன். உள்ளே நுழைந்தபோது மணியிசைத்தது. ஆனால் கடைக்குள் இருந்த இருளில் மீண்டும் யாருமே இல்லையோ என்று எண்ணினேன். மங்கலான வெளிச்சமுடைய அந்தக் கடையின் வினோத நிசப்தத்தில், கேனரி பறவை ‘சிக், சிக், சிக்’ என்ற பாடியது. திரையின் பின்னாலிருந்து ஃப்யூஸனின் நிழல், பூந்தொட்டியிலிருந்த சைக்லமேனின் பெரிய இலைகளுக்கு இடையே தென்பட்டது. அவள், ஒரு உடையைச் சரிபார்க்கும் அறையில் போட்டுப் பார்த்துக்கொண்டிருந்த குண்டு பெண்மணிக்காகக் காத்துக்கொண்டிருந்தாள். இலைகளோடும் காட்டுப்பூக்களோடும் இடையோடும் ஹயாசிந்த் கொடி அச்சிட்ட கவர்ச்சியும் பகட்டும் மிக்க சோளியை இம்முறை அவள் அணிந்திருந்தாள். திரைச்சீலையின் ஊடே என்னைப் பார்த்தவுடன் இனிமையாகப் புன்னகைத்தாள்.

‘ரொம்பப் பிஸியாக இருக்கிறாய் போல’ என்றேன் உடை சரிபார்க்கும் அறையைக் கண்ணால் சுட்டிக்காட்டியபடி.

‘ஏறக்குறைய முடித்துவிட்டோம்’, என்றாள் ஏதோ அவளும் அவளுடைய வாடிக்கையாளரும் அங்கே தனியாக நின்று பேசிக்கொண்டிருந்ததைப் போல.

என் கண்கள், கூண்டில் மேலும் கீழும் படபடத்துக்கொண்டிருந்த கேனரிமீது படிந்தது. மூலையில் நவநாகரிகப் பத்திரிகைகள் குவியலாகக் கிடந்தன, ஐரோப்பாவிலிருந்து இறக்குமதியான உதிரிகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. ஆனால் எதன்மீதும் என் கவனம் பதிய மறுத்தது. சாதாரணம்தான் என்று அந்த உணர்வை எவ்வளவு தான் நான் ஒதுக்க விரும்பினாலும், என்னால் ஃப்யூஸனைப் பார்த்தபோது யாரோ எனக்கு நெருக்கமானவரை, யாரோ எனக்கு மிக அந்நியோன்யமாகத் தெரிந்தவரைப் பார்ப்பதுபோல் உணர்ந்த அந்தத் திடுக்கென்ற நிஜத்தை மறுக்க முடியாது. அவள் என்னைப் போலவேயிருந்தாள். குழந்தைப் பருவத்தில் கருமையாக, சுருட்டையாக வளர்ந்து, பின்பு வளர வளர நேராகிய அதே விதமான கூந்தல். இப்போது அது அவளது நிறத்திற்கேற்றார்போல் பொன்னிறமாக, அவளுடைய மேல்சட்டைக்குப் பொருத்தமாய் மேலும் அழகாக இருந்தது. சுலபமாக என்னை அவளுடைய இடத்தில் வைத்து அவளை ஆழ்ந்து புரிந்துகொள்ள முடியும் எனத் தோன்றியது. என் நண்பர்கள் ஒருமுறை அவளை, ‘ப்ளேபாய் சரக்கு’ எனக் குறிப்பிட்ட வலிமிகுந்த நினைவு வந்தது. ‘அவர்களோடெல்லாம் படுத்திருப்பாளோ?’ ‘பர்ஸைத் திருப்பிக் கொடுத்துவிட்டு உன் பணத்தை வாங்கிக்கொண்டு ஓடி விடு’, என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். ‘உனக்கு ஒரு அற்புதமான பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடக்கப்போகிறது’. நான் வெளியே நிஸான்டஸி சதுக்கத்தை நோக்கித் திரும்பிப் பார்த்தேன், ஆனால் ஃப்யூஸனின் பிம்பம் புகை படிந்த கண்ணாடியில் பிசாசைப் போல உடனே தோன்றியது.

உடை சரிபார்க்கும் அறையில் இருந்த பெண்மணி ‘அஸ்ஸீ புஸ்ஸீ’ என்று வெளியே வந்து, எதையும் வாங்காமல் சென்றுவிட்டாள். ஃப்யூஸன் வாங்காது போன உடைகளை மடித்து அவற்றிற்குரிய இடங்களில் வைத்தாள். ‘நேற்று நீங்கள் தெருவில் நடந்து போனதைப் பார்த்தேன்’. என்றாள் தன் அழகிய உதடுகளைக் குவித்தபடி. அவள் சாதாரண துருக்கியச் சரக்கான ‘மிஸ்லின்’ என்ற பெயரில் கிடைக்கும் இளஞ்சிவப்பு உதட்டுச் சாயம் பூசியிருந்தாலும் அது வசீகரமாகவும் மயக்குதாகவும் இருந்தது.

‘எப்போது என்னைப் பார்த்தாய்?’ என்று கேட்டேன். ‘முன் மாலை நேரத்தில், நீங்கள் சிபெல் ஹனீமுடன் இருந்தீர்கள். நான் காலையின் மற்றொரு பக்கத்தில் நடைபாதையில் நடந்து சென்றுகொண்டிருந்தேன். நீங்கள் உணவருந்தப் போய்க்கொண்டிருந்தீர்களா?’

‘ஆம்’.

‘நீங்கள் இருவரும் அழகான ஜோடி’, என்றாள் வயதானவர்கள் இளஞ்ஜோடிகளைப் பார்க்கும்போது மகிழ்ச்சியில் சொல்வதைப் போல.

சிபெலை எப்படித் தெரியும் என்று நான் கேட்கவில்லை. ‘உன்னிடம்’ ஒரு சிறு உதவி தேடி வந்திருக்கிறேன் என்றேன், பர்ஸை வெளியே எடுத்தபடி. தடுமாற்றமாகவும் பயமாகவும் இருந்தது. ‘இந்தப் பர்ஸைத் திருப்பித்தர விரும்புகிறேன்’.

‘நிச்சயம் உங்களுக்காக இதை மாற்றிக்கொள்வதில் எனக்கு மகிழ்ச்சியே. உங்களுக்குச் சிக்கென்ற புதுக் கையுறையிருக்கிறது, இந்தத் தொப்பிகூட எங்களிடம் இருக்கிறது. இப்போதுதான் பாரீஸிலிருந்து வந்தது. சிபெல் ஹனீமிற்கு இந்தப் பையைப் பிடிக்கவில்லையா?’

‘இல்லை, வேறொன்று மாற்றிக்கொள்ள விருப்பமில்லை’ என்றேன் வெட்கிய முகத்துடன். ‘எனக்கு என்னுடைய பணம் திரும்ப வேண்டும்.’

அவள் முகத்தில் அதிர்ச்சியையும் கொஞ்சம் பயத்தையும்கூடப் பார்த்தேன். ‘ஏன்?’ என்றாள்.

‘உண்மையில் இந்தப் பை நிஜமான ஜென்னி கோலன் அல்ல? ‘இது போலிபோல் தெரிகிறது’ என்று முணுமுணுத்தேன்.

‘என்ன?’

‘எனக்கு இந்த விஷயங்கள் எல்லாம் உண்மையில் புரியவேயில்லை’ என்றேன் வேறு வழியின்றி.

‘அது மாதிரியெல்லாம் இங்கே நடந்ததேயில்லை’ கடுமையான குரலில் கூறினாள். ‘உங்களுக்குப் பணம் இப்போதே திரும்ப வேண்டுமா?

‘ஆம்’ என்று உளறினேன்.

அவள் மிகவும் காயம்பட்டவளாகத் தோன்றினாள். கடவுளே, ஏன் நான் அந்தப் பையைத் தூக்கியெறிந்துவிட்டுப் பணம் திரும்பக் கிடைத்துவிட்டது என்று சிபெலிடம் சொல்லியிருக்கக் கூடாது?’ என்று நினைத்தேன். ‘பார். இது நீயோ, ஸினே ஹனீமோ செய்த தவறல்ல. நம் துருக்கி மக்கள் கடவுளைத் துதித்துக்கொண்டே, ஒவ்வொரு ஐரோப்பிய நாகரிகத்தையும் நகலெடுத்துச் சம்பாதிக்கிறார்கள்’ என்றேன் சிரிக்க முயன்றபடி.

‘எனக்கு – அல்லது நமக்கு என்று சொல்ல வேண்டுமோ – ஒரு பை என்பது அழகாக ஒரு பெண்ணின் கையில் இருந்தாலே போதும், அதன் வேலை முடிந்துவிட்டது. அது என்ன ப்ராண்ட், யார் அதைத் தயாரிக்கிறார்கள், அது அசலானதா? என்பதெல்லாம் பொருட்டே அல்ல’ ஆனால் ஃப்யூஸன் என்னைப் போலவே, நான் சொல்வதில் ஒரு வார்த்தையைக்கூட நம்பவில்லை.

‘இல்லை, உங்கள் பணத்தைத் திருப்பிக் கொடுக்கத்தான் போகிறேன்’ என்றாள் அதே கடுமையான குரலில். நான் தலையைக் குனிந்துகொண்டு, என் தலைவிதியைச் சந்திக்கத் தயாராகியபடி, எனது முரட்டுத்தனத்திற்காக வெட்கியபடி, அமைதியாக இருந்தேன்.

அவளது குரல் தீர்மானமாகத் தொனித்ததிலிருந்து சொன்னதை அவளால் செய்ய முடியாது என்பதை உணர்ந்தேன். அந்த அதிசிக்கலான தருணத்தில் ஏதோ ஒரு விசித்திரம் கலந்திருந்தது. கல்லாவின்மீது யாரோ மந்திரம் போட்டு வைத்திருந்தது போலவும் அதைப் பிசாசு பிடித்திருந்தது போலவும் அவளால் அதைத் தொட முடியாது என்பது போலவும் பார்த்துக்கொண்டு நின்றாள். அவளுடைய முகம் சிவந்து, சுருங்குவதைப் பார்த்தபோது, கண்கள் கண்ணீர் சிந்திக்கொண்டிருந்தன. நான் பதைபதைப்புடன் இரண்டடி நெருங்கினேன்.

அவள் மெதுவாக அழ ஆரம்பித்தாள். எவ்வாறு நடந்தது என்று துல்லியமாக என்னால் அனுமானிக்க முடியவில்லை ஆனால் என் கைகள் அவளைத் தழுவியிருந்தன. தனது தலையை என் மார்பின் மீது சாய்த்துக்கொண்டு அழுதாள். ‘ஃப்யூஸன், எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது’ என்று கிசுகிசுப்பாகக் கூறினேன். அவளுடைய மென்மையான கூந்தலையும் நெற்றியையும் தடவிக்கொடுத்தேன். ‘தயவுசெய்து நடந்ததை மறந்துவிடு. இது ஒரு போலி பர்ஸ் அவ்வளவுதான்.’

குழந்தையைப் போல் ஓரிருமுறை செருமிவிட்டு, தேம்பித் தேம்பி வெடித்து அழுதாள். அவளது அழகிய கைகளையும் உடம்பையும் தீண்டியபோது, அவளது மார்பு என் நெஞ்சின் மீது அழுந்தியது. அப்படி அவளைத் தாங்கிப் பிடித்தது கொஞ்ச நேரம்தான் என்றாலும் என் தலை கிறுகிறுத்துப்போனது. நான் என் ஆசையைக் கட்டுப்படுத்திக்கொண்டதால் ஒருவேளை அப்படித் தோன்றியிருக்கலாம். ஒவ்வொருமுறையும் அவளை அழுந்தத் தொட்டபோதெல்லாம் நாங்கள் பல வருடங்களாக ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள், இருவரும் மிக நெருக்கமானவர்கள் என்ற மாயையை, வலுக்கட்டாயமாக நானே வரவழைத்துக்கொண்டேன். அவள் என்னுடைய இனிய, ஆற்றுப்படுத்த முடியாத, துக்கித்துப்போன அழகான சகோதரி! ஒரு விநாடி நாங்கள் தூரத்து உறவாக இருந்தாலும், உறவுக்காரர்கள் என்று அறிந்திருந்ததாலேயே அப்படித் தோன்றுகிறதோ என்னவோ – நீண்ட கால்களுடன் இருந்த அவளது அழகிய உடலும் தோற்றமும் மெல்லிய தோள்பட்டைகளும் நானாகவே எனக்குத் தோன்றியது. நானே பெண்ணாக, பன்னிரெண்டு வருடங்கள் குறைவாக இருந்தால் இப்படித்தான் இருந்திருப்பேன். ‘கவலைப்படாதே’ என்று அவளுடைய பொன்னிறக் கூந்தலைத் தடவிக்கொண்டே கூறினேன்.

‘என்னால் கல்லாவைத் திறந்து உங்களுக்குப் பணம் தர முடியாது’ என்று விளக்கினான். ‘ஏனெனில் ஸினே ஹனீம் மதிய சாப்பாட்டிற்குப் போகும்போது அதைப் பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு போய்விடுவார், இதைச் சொல்லவே எனக்குக் கூச்சமாக இருக்கிறது’. என் மார்பின் மீது சாய்ந்தபடியே மீண்டும் அவள் விசும்ப ஆரம்பிக்க, நான் தொடர்ந்து அவளது கூந்தலை இரக்கத்துடனும் அக்கறையுடனும் நீவிவிட்டேன். ‘நான் இங்கு வேலை செய்வதே மனிதர்களைச் சந்திக்கவும் பொழுதுபோக்குவதற்கும்தான், பணத்திற்காக அல்ல’ என்றாள் கேவலுடன்.

‘பணத்திற்காக வேலை செய்வது ஒன்றும் கேவலமான விஷயமல்ல’ என்றேன் இரக்கமில்லாமல், முட்டாள்போல.

‘ஆமாம்’ என்றாள் மனம் தளர்ந்த குழந்தையைப் போல். ‘என் தந்தை ஓய்வுபெற்ற ஆசிரியர். எனக்கு இரண்டு வாரங்களுக்கு முன்புதான் பதினெட்டு வயது பூர்த்தியானது. அவருக்குப் பாரமாக இருக்க நான் விரும்பவில்லை.’

இப்போது எனக்குள் பாலுணர்வு மிருகத்தனமாகத் தலை தூக்கி மிரட்டியது. அவள் கூந்தலிலிருந்து கைகளை விலக்கிக்கொண்டேன். அவளும் உடனே புரிந்துகொண்டு தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டாள். இருவரும் விலகிக்கொண்டோம்.

‘தயவுசெய்து யாரிடமும் நான் அழுததைச் சொல்லிவிடாதீர்கள்’ கண்களைத் துடைத்துக்கொண்டே கூறினாள்.

‘சத்தியமாக’ என்றேன். ‘நண்பர்களுக்குள் பவித்திரமான சத்தியம், ஃப்யூஸன். நாம் இருவரும் நமது இரகசியங்களுடன் ஒருவரை ஒருவர் நம்பலாம்.’

அவள் முறுவலித்ததைக் கண்டேன். ‘பர்ஸ் இங்கேயே இருக்கட்டும், பணத்தை அப்புறம் வந்து வாங்கிக்கொள்கிறேன்’ என்றேன்.

‘நீங்கள் விரும்பினால் வைத்து விட்டுச் செல்லுங்கள். ஆனால் பணத்திற்காக நீங்கள் இங்கே வராமலிருந்தால் நல்லது. ஸீனே ஹனீம் இது போலி கிடையாது என்று வற்புறுத்துவார், பிறகு நீங்கள் வருத்தப்பட வேண்டியிருக்கும்.’

‘அப்படியென்றால், வேறு ஏதாவது பொருளுக்கு மாற்றிக் கொள்ளலாம்’ என்றேன்.

‘இனி என்னால் அப்படிச் செய்ய முடியாது’ என்றாள் அகம்பாவமும் வெறுப்பும் கலந்த தொனியில்.

‘இல்லை. நிஜமாகவே அது ஒரு பொருட்டல்ல’ என்று விட்டுக் கொடுத்தேன்.

‘ஆனால் எனக்கு அப்படித்தான்’ என்றாள் உறுதியாக ‘ஸீனே ஹனீம் கடைக்கு வரும்போது பணத்தைத் திரும்ப வாங்கிக்கொடுக்கின்றேன்.’

‘அந்தப் பெண்மணி உன்னை இதற்கு மேலும் அவமதிப்பதை நான் விரும்பவில்லை’ என்றேன் பதிலுக்கு.

‘கவலைப்படாதீர்கள். அதை, எப்படிச் செய்ய வேண்டுமென்று நான் தீர்மானிக்கிறேன்’ சோபையான புன்னகையுடன் கூறினாள். ‘ஏற்கனவே சிபெல் ஹனீம் இது மாதிரியான பர்ஸை வைத்திருக்கிறார்கள். அதனால்தான் இதைத் திருப்பித் தருகிறார்கள் என்று சொல்லி விடுகிறேன். சரியா?’

‘அற்புதமான யோசனை. ஆனால் அதை நானே ஏன் ஸினே ஹனீமிடம் சொல்லக் கூடாது?’

‘வேண்டாம், நீங்கள் அவளிடம் எதுவுமே சொல்லத் தேவையில்லை’ என்று ஃப்யூஸன் உறுதியாகக் கூறினாள். ‘ஏனெனில் அவள் உங்களை ஏமாற்ற முயற்சிப்பாள், உங்களுடைய சொந்த விஷயங்களைக் கறப்பாள். நீங்கள் கடைப் பக்கமே வர வேண்டாம். நான் பணத்தை வெஸீகி அத்தையிடம் கொடுத்து விடுகிறேன்.’

‘ஓ வேண்டாம், என் அம்மாவை இதில் சம்பந்தப்படுத்தாதே. அவர்கள் கோபமடைவார்கள்.’

‘பின் எங்குதான் உங்கள் பணத்தைத் திருப்பிக் கொடுப்பது?’ ஃப்யூஸன் புருவத்தை உயர்த்திக் கேட்டாள்.

‘மெர்ஹாமெட் குடியிருப்பில், 131, டெஸ்விகியே அவென்யூவில் என் அம்மாவுடைய வீடு ஒன்று உள்ளது’ என்றேன். ‘அமெரிக்காவிற்குச் செல்வதற்கு முன்னர் அதைத்தான் எனது தங்குமிடமாக உபயோகிப்பேன். படிப்பதற்கும் இசை கேட்பதற்கும் அங்கே செல்வேன். அது மிக ரம்மியமான இடம், பின்புறம் தோட்டம்கூட இருக்கிறது. இப்போதும் இரண்டிலிருந்து, நான்கு மணிவரை மதிய உணவு வேளையில், சில கோப்புகளைப் பார்ப்பதற்காகச் செல்வேன்.’

‘கண்டிப்பாகப் பணத்தை அங்கே கொண்டுவந்து கொடுக்கிறேன். வீட்டின் இலக்கம் என்ன?

‘நான்’ இரகசியமாகச் சொன்னேன், அடுத்த மூன்று வார்த்தை வெளியே வர மிகச் சிரமமாக, என் நெஞ்சுக்குள்ளேயே சிக்கிக்கொண்டது. ‘இரண்டாவது தளம், குட்பை?’

என் மனம் எதையெதையோ கற்பனை செய்தபடி பைத்தியகாரத்தனமாகத் துடித்தது. வெளியேறுவதற்கு முன்பு எனது பலத்தையெல்லாம் திரட்டி, வித்தியாசமாக எதுவும் நடவாததுபோல் அவளைக் கடைசியாக ஒரு பார்வை பார்த்தேன். இறங்கித் தெருவில், மீண்டும் நடந்தபோது வெட்கமும், குற்ற உணர்வும் கலந்து பற்பல பேரின்பப் பிம்பங்களைத் தோற்றுவிக்க, ஏப்ரல் மாதப் பிற்பகலின் பருவம் தவறிய வெயிலில், நிஸான்டஸியின் நடைபாதையே மர்மமான மஞ்சளில் மின்னியது. நிழலை நோக்கி என் பாதங்கள் நகர்ந்தன. கட்டடங்களின் தாழ் வாரங்கள் வழியே நடந்து சென்றபோது ஜன்னல்களில் வெயிலுக்காகப் போட்டிருந்த பட்டை பட்டையாக அமைந்த நீலவெள்ளைப் பந்தலின் கீழ், குறிப்பிட்ட ஒரு கடையில், ஒரு மஞ்சள் நிற ஜாடியைப் பார்த்தேன். உடனே உள்ளே சென்று வாங்கத் தோன்றியது. மற்ற பொருட்களைப் போல சாதாரணமாக வாங்கிய இந்த மஞ்சள் ஜாடி, எந்த மேசைமீது என் அம்மாவும் அப்பாவும், பின்பு நானும், அம்மாவும் சாப்பிடுவோமோ அங்கு யாருடைய கவனத்தையும் கவராமல், இருபது வருடமாக இருந்தது. அதன் கைப்பிடியை ஒவ்வொருமுறையும் நான் தொடும்போதெல்லாம், அம்மா இரவு உணவின்போது, கண்களில் பாதி சோகமும் பாதி நிந்தனையுமாக அமைதியாகப் பார்த்துக்கொண்டிருக்க, முதன்முதலாக என்னை நானே மாற்றிக்கொள்ளக் கஷ்டப்பட்ட, அந்த நாட்கள் இப்போதும் நினைவிற்கு வரும்.

வீட்டிற்கு வந்ததும் அம்மாவை முத்தமிட்டு முகமன் கூறினேன். மதியம் சீக்கிரமாகவே வீட்டிற்கு வந்துவிட்டதால் சந்தோஷப்பட்டாலும், அவள் ஆச்சரியமடையவில்லை. சட்டென்று வாங்கத் தோன்றியது, அதனால் இந்த மஞ்சள் ஜாடியை வாங்கினேன் என்று சொல்லிவிட்டுக் கூடவே, ‘மெர்ஹமாட் வீட்டுச் சாவியைக் கொடுக்க முடியுமா? சில சமயங்களில், அலுவலகத்தில் மிகவும் சத்தமாக இருப்பதால், என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. அங்கே போனாலாவது அதிர்ஷ்டம் அடிக்கிறதா பார்க்கலாம். சின்ன வயதில் எப்போதுமே அதுதான் எனக்குச் சரிப்படும்’ என்றேன்.

‘அங்கே ஒரு அங்குலத்திற்குத் தூசு படிந்திருக்கும்’ என்றார் அம்மா. ஆனால் நேராக அறைக்குச் சென்று சிவப்பு நாடாவில் கட்டிவைத்திருந்த வீட்டுச் சாவியை எடுத்துக்கொண்டு வந்தார்கள். ‘உனக்குச் சிவப்பு மலர்களுடன் இருக்கும் Kutahya பூஞ்சாடியை நினைவிருக்கிறதா?’ சாவியைக் கையில் கொடுத்தபடியே கேட்டார். ‘வீட்டில் எங்கேயும் அதைக் காணவில்லை. ஒருவேளை அந்த வீட்டில் விட்டுவிட்டேனா என்று பார், அப்புறம், ரொம்பவும் சிரமப்பட்டு வேலை செய்யாதே. உங்களுடைய அப்பா அவர் வாழ்நாள் முழுவதும் உழைத்துவிட்டார், அதனால் இளசுகளாகிய நீங்களாவது வாழ்க்கையைக் கொஞ்சம் அனுபவியுங்கள். நீ சந்தோஷமாக இருக்க வேண்டியவன். சிபெலை வெளியே அழைத்துச் சென்று மகிழ்ச்சியை அனுபவி’ என்றார்.

பின்பு சாவியை என் கையில் திணித்துக்கொண்டே, என்னை வினோதமாகப் பார்த்து, ‘ஜாக்கிரதையாக இரு’ என்றார். அந்தப் பார்வை நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது வாழ்க்கை, மிக ஆழமான, தந்திரமிக்க, யூகிக்க முடியாத அபாயங்களை – உதாரணத்திற்கு ஒரு சாவியைப் பத்திரமாக வைத்துக்கொள்ளத் தவறுவதை விடவும் மோசமான அபாயங்கள் -கொண்டது என்று எச்சரிப்பதற்குப் பார்த்த பார்வை.

—————
மொழிபெயர்ப்பாளர் கே. நர்மதா ஆரணியில் தனியார் பள்ளியொன்றில் ஆசிரியையாகப் பணியாற்றுகிறார். தீராநதி, புது எழுத்து, பாலி, தினமணி தீபாவளி மலர் போன்ற இதழ்களில் இவரது மொழிபெயர்ப்புகள் வெளியாகியுள்ளன.

கதா விருது பெற்ற கதைகளை அம்ருதா பதிப்பகத்திற்காகத் தற்போது மொழிபெயர்த்துவருகிறார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *