தூக்கம்

 

நேரம் காலை பத்து மணி. தாய் ராஜலக்ஷ்மி, தந்தை சிவப்ரகாஷ், மனைவி மீனாக்ஷியிடம் சொல்லிவிட்டு சென்னையில் அடையாரில் இருக்கும் தன் எலெக்ட்ரானிக்ஸ் ரிப்பேர் கடைக்குச் செல்ல தயாரானான் பாபு. சிவப்ரகாஷுக்கு வயது 70 ஆகிறது, ராஜலக்ஷ்மிக்கு வயது 60. தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் சிவப்ரகாஷ். அந்தக்காலத்திலேயே பி.ஏ. படித்திருந்தும், அரசாங்க வேலையை நம்பாமல் விவசாயம் செய்து வந்தவர். ராஜலக்ஷ்மி வீட்டு வேலைகளை கவனித்து வந்தாள்.

சிவப்ரகாஷ் – ராஜலக்ஷ்மி தம்பதியினருக்கு 2 மகன்கள். மூத்தவன் முருகனுக்கும், பாபுவுக்கும் 5 வயது வித்தியாசம். கடைக்குட்டி என்பதால் பாபுவுக்கு நிறைய செல்லம் கொடுத்து வளர்த்தாள் ராஜலக்ஷ்மி. முருகன் படிப்பில் மிகுந்த ஆர்வம் செலுத்தி வந்தான். பாபுவுக்கு படிப்பைவிட விவசாயத்திலும், வியாபாரத்திலும் மிகுந்த ஆர்வம். இதனால் படிப்பில் முழுமையான கவனம் செலுத்த முடியவில்லை.

பாபுவுக்கு குறும்புத்தனம் கொஞ்சம் அதிகம். சிவப்ரகாஷுக்கு யார் வெளியே சென்றிருந்தாலும் வீட்டுக்கு 6 மணிக்குள் வந்துவிடவேண்டும். கொஞ்சம் தாமதமானாலும் மிகவும் கோபப்படுவார். தாமதமாக வருபவருக்கு அன்றிரவு சாப்பாடு கிடையாது. இதனால் முருகன் எங்கு சென்றாலும் சரியான நேரத்திற்கு வீட்டுக்கு வந்துவிடுவான். ஆனால் பாபு பல சமயங்களில் வெளியே சென்றுவிட்டு தாமதமாக வருவான். அந்த நாட்களில் பக்கத்து வீட்டு மொட்டைமாடியில் இருந்து தன் வீட்டு மொட்டைமாடியில் குதித்து பின்புறமாக வந்துவிடுவான். அவன் வரும்வரை ராஜலக்ஷ்மியும் ஏதாவது சாக்கு சொல்லி அவனை தப்பிக்க வைத்து விடுவாள்.

பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது, மதிய உணவுக்கு இருவருக்கும் வீட்டில் சமைத்து கொடுத்துவிடுவாள் ராஜலக்ஷ்மி. சில நாட்களில் வடை, முருக்கு என்று சிறப்பு விருந்து கூட கிடைக்கும். இந்த வடை, முருக்கு இவற்றை பல நாட்கள் சாப்பிட்டாலும், சில நாட்கள் அவற்றை பள்ளிக்கூடத்திற்கு அருகில் இருக்கும் கடையில் விற்றுவிட்டு மிட்டாய் வாங்கி சாப்பிடுவான் பாபு. அப்படி ஒரு நாள் கடையில் இருந்து மிட்டாய் வாங்கி சாப்பிடுவதை சிவப்ரகாஷ் பார்த்துவிட்டார். அன்று பாபு வீட்டுக்கு வந்ததும் அவனை கடுமையாக கண்டித்தார் சிவப்ரகாஷ்.

முருகன் நன்றாக படித்து அரசாங்க வேலையில் சேர்ந்தான். அவனுக்கு சிறப்பாக திருமணமும் நடந்து, மணமக்கள் சென்னையில் குடியேறினர். பாபுவும் ஒரு வழியாக படித்து முடித்து, சென்னையில் இருக்கும் சிவப்ரகாஷின் வீடு ஒன்றில் வந்து தங்கி, அரசாங்க வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தான். சிவப்ரகாஷும் ராஜலக்ஷ்மியும் பாபுவுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். அந்த சமயம் அவனுடைய நண்பன் மணி, மெயின் ரோடில் ஒரு மருந்து கடையை திறக்கலாம் என்று ஒரு யோசனை கூறினான். அந்த இடத்தில் வேறு மருந்து கடை இல்லாத்தால் இது நல்ல யோசனையாகப்பட்டது பாபுவுக்கு. இதை தன் பெற்றோரிடம் கூறினான். ஆனால் அரசாங்க வேலை இன்னும் சில நாட்களில் கிடைத்துவிடும் என்றும், சொந்தக் காசைப் போட்டு வியாபாரம் செய்ய வேண்டாம் என்றும் கூறி பாபுவின் இந்த யோசனைக்கு சம்மதிக்கவில்லை அவன் பெற்றோர். இதனால் மணி தனியாக மருந்து கடை ஆரம்பித்தான்.

நாட்கள் ஓடின. இன்னும் பாபுவுக்கு அரசாங்க வேலை கிடைத்தபாடில்லை. ஆனால் மணி ஆரம்பித்த மருந்து கடையில் வியாபாரம் நன்றாக பெருகி வேறு ஒரு இடத்தில் இன்னொரு கடை ஆரம்பிக்கும் அளவுக்கு வளர்ந்தான். கடைசியில் அரசாங்க வேலைக்குக் காத்திருக்காமல் தானும் ஒரு தொழில் செய்யலாம் என்று எண்ணினான் பாபு. அந்த நேரத்தில் எலெக்ட்ரானிக் பொருட்களின் மீது ஆர்வமுற்று, அவன் ஆரம்பித்த கடை தான் அன்னை எலெக்ட்ரானிக்ஸ்.

கடை ஆரம்பித்த சில மாதங்கள் நன்றாக இருந்தன பாபுவுக்கு. அந்த இடத்தில் வேறு எலெக்ட்ரானிக் கடைகள் இல்லாததால் ஒரளவு வருமானம் வந்தது. இந்த நேரத்தில் தான் பாபுவுக்கு திருமணம் செய்துவைத்தனர். திருமணத்துக்குப் பின் முதல் சில மாதங்கள் பாபுவுக்கு மிக இனிமையானவையாக அமைந்தன. வருமானமும் நன்றாக இருந்தது. அந்த வருமானத்தை வைத்துக்கொண்டு தன் பெற்றோருக்கும், மனைவிக்கும் நிறைய துணிமணிகள், திண்பண்டங்கள் வாங்கி வருவான். வீட்டில் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்திருந்தன.

சில மாதங்களுக்குப் பிறகு அவனுடைய வருமானம் குறைய ஆரம்பித்தது. இதனால் பாபுவுக்கு சற்றே மன அழுத்தம். வீட்டில் உள்ளவர்கள் மீது அடிக்கடி கோபப்பட ஆரம்பித்தான். என்ன தான் கோபம் இருந்தாலும் தன் பெற்றோர் மீதும் மனைவி மீதும் கொள்ளை பிரியம். ஆனால் ராஜலக்ஷ்மியின் கண்களுக்கு, பாபுவின் கோபம் அவன் பாசத்தை மறைக்க ஆரம்பித்தது போல் தெரிந்தது. வீட்டிலும் அடிக்கடி சண்டை வந்ததால், பாபுவின் பாசத்தை புரிந்து கொள்ளாமல் அவனுடைய கோபம் தான் நிரந்தரம் என்று நினைக்கத்தொடங்கினாள். இதைப்பற்றி முருகனிடமும் புலம்ப ஆரம்பித்தாள். அவனும் தன்னுடன் வந்து இருக்கும்படி கூறினான்.

அன்று காலை பாபு கடைக்குச் சென்றிருந்த நேரம் பார்த்து, முருகன் வீட்டுக்கு செல்வதாகவும், இனி அங்குதான் இருக்கப்போவதாகவும் மீனாக்ஷியிடம் சொல்லிவிட்டு கிளம்பினர் ராஜலக்ஷ்மியும் சிவப்ரகாஷும். மீனாக்ஷி எவ்வளவு சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. இந்த தகவல் அறிந்த பாபு, தன் பெற்றோரைத் தொடர்பு கொண்டு, தான் கோபப்பட்டதற்கு தன்னை மன்னிக்க வேண்டுமென்றும், தன்னுடனேயே இருக்க வேண்டுமென்றும் கெஞ்சினான். ஆனாலும் ராஜலக்ஷ்மியும் சிவப்ரகாஷும் தாம் முருகனின் வீட்டில் தான் இருக்கப்போவதாகக் கூறிவிட்டு கிளம்பினர்.

வீட்டு வாசலில் வந்து இறங்கியிருக்கும் தன் பெற்றோரை வரவேற்று உள்ளே அழைத்துச்சென்றனர் முருகனும் அவன் மனைவி செல்வியும். செல்வி ஒரு கல்லூரியில் பேராசிரியையாகப் பணிபுரிந்துக்கொண்டு இருக்கிறாள். இருவருக்கும் கை நிறைய சம்பளம். ஓரிரு மாதங்கள் ஆயின, எந்தவித பிரச்சனையுமின்றி இருப்பது போல் உணர்ந்தனர் சிவப்ரகாஷும் ராஜலக்ஷ்மியும். என்ன தான் தன்னைவிட்டு சென்றிருந்தாலும், தினமும் தன் பெற்றோருடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தான் பாபு.

அன்றொரு நாள், இரவு உணவை முடித்துவிட்டு பேசிக்கொண்டிருந்தனர் நால்வரும். அப்போது செல்வி, “நீங்க நாளைக்கு உங்க வீட்டுக்கு போகும் போது, மறக்காம உங்க தலகாணி, போர்வையையும் எடுத்துக்கிட்டு போங்க” என்றாள். இதைக்கேட்டு திகைத்துப்போன ராஜலக்ஷ்மி, “நாங்க ரெண்டு பேரும் இங்கயே இருக்கலாம்னு நெனச்சோம் செல்வி. நீ ஏம்மா இப்படி சொல்ற?” என்று கேட்டாள். அதற்கு செல்வி, “இல்லம்மா, நாங்க வாங்கற சம்பளத்துல நம்ம நாலு பேரும் சமாளிக்கறது கஷ்டம். அதனால தான். நாளைக்கு உங்களுக்கு நான் டாக்ஸிக்கு சொல்லிடட்டுமா?” என்றாள். முருகன் ஏதாவது பேசுவான் என்று எதிர்பார்த்த ராஜலக்ஷ்மிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. “வேணாம்மா, நாங்களே பாத்துக்கறோம்” என்று கூறினாள் ராஜலக்ஷ்மி. “சரிம்மா, நான் தூங்கப்போறேன்” என்று கூறிவிட்டு உள்ளே சென்றாள் ராஜலக்ஷ்மி. எவ்வளவோ முயற்சி செய்தும் தூக்கம் வரவில்லை. இத்தனை வருடங்கள் தங்களை அன்போடு கவனித்து வந்தவர்கள் பாபுவும், மீனாக்ஷியும். தன்னுடைய நிலைமையை எண்ணி கோபப்பட்டாலும், அவனுடைய கோபத்தை பெரிதுபடுத்தி, அவன் அன்றுவரை அவர்களை பாசத்தோடும், மரியாதையோடும் நடத்தியதை மறந்து, அவனை விட்டு விலகி வந்து, அவன் மனதை புண்படுத்தியது தவறு என்பது புரிய ஆரம்பித்தது. செய்த தவறை உணரும் நேரத்தில், உண்மை புரிய ஆரம்பிக்கும் நேரத்தில் யாருக்குத் தான் தூக்கம் வரும்! 

தொடர்புடைய சிறுகதைகள்
கிரிக்கும் பிரமிளாவுக்கும் திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிறது. இவர்களுடைய பெற்றோர் பார்த்து நிச்சயித்து செய்து வைத்த திருமணம்தான் என்றாலும் இருவருடைய சம்மதத்துடன்தான் இந்த திருமணம் நடந்தது. கிரி மிகவும் பொறுமைசாலி. கோபம் வராது, வந்தால் எளிதில் போகாது. பிரமிளா இதற்கு நேர்எதிர். அடிக்கடி ...
மேலும் கதையை படிக்க...
வருடம் 1945. திருச்சி அருகே காட்டுப்புத்தூர் என்று ஒரு சிறு கிராமம். மேட்டுத்தெருவில் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வருகின்றனர் மாடசாமியும், கோபாலும். இருவரும் ஒரு விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் பார்த்து வருகின்றனர். மாடசாமியின் மனைவி மீனாவும், கோபாலின் மனைவி ...
மேலும் கதையை படிக்க...
வீட்டிலிருந்து பத்து மணிக்கு மனைவி அம்பிகா, மகள் அஞ்சலி, மகன் அரவிந்தனுடன் லண்டன் ஹீத்ரோவ் விமான நிலையத்திற்கு புறப்படுகிறான் கார்த்திக். இரட்டையர்களான அஞ்சலி, அரவிந்தனுக்கு ஐந்து வயது. ஒரு மென்பொருள் நிறுவனத்தின் இணை இயக்குனரான கார்த்திக்கும், லண்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாகப் பணிபுரியும் ...
மேலும் கதையை படிக்க...
இன்று இரவு 8 மணி இருக்கும் என நினைக்கிறேன். அப்போதுதான் கொலை செய்யப்பட்டாள் செலீனா. கடந்த 2 வருடங்களாக வீட்டில் தனியாக இருந்து வந்தாள். பாதுகாப்புக்கு யாரும் இல்லை. பெற்றோர் அமெரிக்காவில் இருக்கிறார்கள். என்னை அவர்கள்தான் இங்கு அனுப்பி வைத்தார்கள். வருடத்திற்கு ஓரிரு முறைதான் ...
மேலும் கதையை படிக்க...
மாலை 6 மணிக்கு இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் இருப்பதால், இன்றாவது ஆஃபீஸிலிருந்து சீக்கிரம் கிளம்ப வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தான் கார்த்திக். மணி 5 ஆனது. சரி, கிளம்பலாம் என்று எண்ணி அவனுடைய இருக்கையிலிருந்து எழும்போது அவனுடைய மேனேஜர் அவனைப் பார்த்து, ...
மேலும் கதையை படிக்க...
ஸ்ரீ ராம ஜெயம்
மார்கோனி
சிவப்பு மஞ்சள் பச்சை
என் சாட்சி எடுபடுமா?
மழை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Sirukathaigal

FREE
VIEW