கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 9, 2019
பார்வையிட்டோர்: 7,786 
 

ஒரு நாள் போவார், ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்…!
ஒரு சாண் வயிற்றை, வளர்ப்பவர் உயிரை
ஊரார் நினைப்பது சுலபம்……..
ஊரார் நினைப்பது சுலபம்…!!!

பாடலில் வழிந்தோடும் நெஞ்சைப் பிழியும் துயர வரிகள் மார்பில் அறைந்து கொண்டிருந்த வேளையில், பதஞ்சலியின் குரலில் அந்தக் குடிசையே கிடுகிடுத்தது.

சம்பங்கிய வேலைக்கு அனுப்பாத, அனுப்பாதன்னு எத்தனவாட்டி படிச்சுப் படிச்சுச் சொன்னேன், கேட்டியா? இத்தன நா நாஞ்சொன்னதுக்கு என்னாதான் மதிப்பு? அப்புறம் இந்த வீட்ல ஆம்பளப்புள்ளன்னு நா ஒருத்தன் எதுக்கு? –

ராத்திரிப் பொழுது முடிய உறங்க விடாமல் இப்படி அனத்தியெடுப்பான் என்று வெள்ளாயி கொஞ்சங்கூட எதிர்பார்க்கவேயில்லை. இரவைக் கிழித்துக் கொண்டு அலறிய மைக் செட் வேறு.. எப்பொழுதும் குடிசைக்கு வெளியே கயிற்றுக் கட்டிலைப் போட்டுப் படுப்பவன், அன்று அதற்கென்றே உள்ளே படுத்து உசிரை வாங்கினான். வரும்போதே இருந்த ஆர்ப்பாட்டம் இவளைக் குலை நடுங்க வைத்தது. எப்படியோ விஷயம் தெரிந்து போக, அடித்துப் பிடித்து ஓடி வந்திருக்கிறான்.

வேன் கிளம்பிப் போய் அப்போதுதான் குடிசைக்குள் நுழைந்து சற்று தலையைச் சாய்த்திருக்கிறாள் வெள்ளாயி. அதற்குள் பாட்டுச் சத்தத்தை மீறி அவன் குரல் பதறடித்தது.

உனக்குக் கொஞ்சமாச்சும் அறிவிருக்குதா? ஏற்கனவே அங்க பிரச்னையாயிருக்குன்னு நாந்தேன் சொல்லியிருக்கேன்ல…அப்புறம் யாரக் கேட்டு அனுப்பி வச்சே? வில்லங்கத்த வா வான்னு அழைக்கிற மாதிரி? என்று முகத்துக்கு நேரே நெருக்கமாய் வந்து நின்று கூர்மையைாய் ஐந்து விரலையும் ஒன்று கூட்டி விரைப்பாய் நீட்டி, பல்லைக் கடித்து அவன் கேட்டது அடிக்காத குறைதான் என்று பதற வைத்தது வெள்ளாயியை.

கண்ண நோண்டிருவ போல்ருக்கு….எட்றா கைய…-அதட்டினாள் தன்னை மீறி. பிறகு புலம்பினாள். மனசில் ஏனிப்படி பயம் பிடித்துக் கொண்டது? தப்பு செய்திட்டனா? சுதாரிக்காமப் போனனே?

என்னவோ கிறுக்கச்சி, புத்தியில்லாமச் செய்துப்புட்டேன்டா, மன்னிச்சிரு இந்த ஒரு வாட்டி…..நா போகத்தான் செய்வேன்னு ஒரு வாரமா ஒத்தக் கால்ல நிக்கிறா…அது என் வாயை அடைச்சிருச்சி சாமி…. மாப்புக் கேட்டுக்கிறேன்.

ஆம்புளப் பசங்களே அன்னன்னிக்கு வீடு வந்து சேர முடில…நீ வயசுக்கு வந்த பொட்டப் புள்ளய அனுப்பி வச்சேன்னா, என்னாவுறது கத? ஏதாச்சும் பிரச்னையாகிப் போச்சின்னா?- பதஞ்சலிக்கு மனசு அடங்கவில்லை. மில்களின் போக்குப் பிடிக்காமல்தான் தன் தொழிலையே மாற்றிக் கொண்டான்.. தொழில் என்றால் கூலிதான்.. ஒரு நாளைக்கு எதையாச்சும் நா சொந்தத் தொழிலாச் செய்யமாட்டனா? என்கிற வீராப்பு மனசில்.

அதான் காலைல வந்திருவால்லடா…. பேசாமப் படுத்துத் தூங்கு….சும்மா அதையே சொல்லிட்டு என் பிராணனை வாங்காத…..வயசான காலத்துல ஒடம்பு ரொம்பப் பதறுது…பொட்டுனு போயிருவன் போல்ருக்கு…

அவள அனுப்பி வைக்கிற போதுல்ல பதறியிருக்கணும்…இப்பப் பதறுது, உதறுதுன்னா எப்டி? பதினொன்றைக்கு வந்த கடைசி வண்டில ஆளில்ல….பார்த்திட்டுத்தேன் வாரேன்….

இந்தப் பேச்சைக் கேட்க சீவன் நினைவில்லை அவளுக்கு. உறங்கிப் போயிருந்தாள்.

தூங்கிட்டியாக்கும்? கவலயில்லாத உசிரு….அதான் இப்டி ஒறக்கம் வருது….ஒங்களயெல்லாம் அந்தக் கோடிக்கர அய்யனாருதான் காப்பாத்தணும்….

அந்தக் கடைசி ரெண்டு வார்த்தைகள் வெள்ளாயியின் உறக்கத்தைக் கலைத்து விட்டன. படுத்த இடத்தில் படக்கென்று எழுந்து அமர்ந்து ஊர்க் கோடி பவழ அய்யனார் சிலையை மனதில் நினைத்துக் கையெடுத்துக் கும்பிட்டுக் கொண்டாள். பதில் பேசினால் இன்னும் பேச்சு வளரும். தூங்கினது தூங்கினதாகவே இருக்கட்டும். பம்மியவளாய் மீண்டும் பதுங்கிக் கொண்டாள். இருட்டுக்குள் மேற்கொண்டு சத்தமில்லாதது பதஞ்சலியும் உறக்கத்தைத் தொட்டிருப்பான் என்று தோன்றியது.

காலையிலிருந்தே சம்பங்கியின் அனத்தலை அவளால் தாள முடியவில்லை…! என்னைப் பேச விட்டாளா? யம்மாடி, அவ வாயை யாரு அடக்குறது?

அதுக்கென்னா தெரியும்? போறவுகளெல்லாம் ஆளில்லயாக்கும்….வேலை செய்ய, கூலி வாங்கன்னு எத்தனபேர் வாராக…?….அந்தக் காசு வந்தா ஆகாதா? எப்பக் காசு சேர்த்து எப்ப நீ என்னக் கட்டிக் கொடுக்கிறதாம்? அதுக்குள்ளயும் நா நூத்துக்கெழவி ஆயிடுவேன்….கெடைக்கிற நாளைக்கு வேலைக்குப் போவுது அது…இப்பத்தான் ஆந்திரா, பெங்குளூரு, கல்கத்தாவுலர்ந்தெல்லாம் ஆளுக வர்றாகளாமுல்ல…கொடுக்கிற கூலிய வாங்கிட்டு சட்டி சொமக்க ஆளா இல்லாமப் போச்சு? அண்ணேன் எம்புட்டுத்தான் முக்குனாலும் அஞ்சு பவுனாச்சும் போடாம என்ன வெளியேத்த முடியுமா? ஒத்தைல கெடந்து அது என்னைக்குச் சேர்க்குறது? நாலு வாட்டி போயிட்டு வந்திட்டன்னா அப்புறம் வாயடைச்சிடும்…அதுட்டச் சொல்லாத..

அடிப் பாவிமவளே…கூடப் பொறந்த பொறப்புட்டச் சொல்லாதன்றாளே? அவெந்தானடி இந்தக் குடும்பத்துக்குக் காவலு? அவன்ட்டச் சொல்லாம? என்ன வெட்டிப் போட்ருவானடீ?

எல்லாப் பழியையும் எந்தலைல போடு….நா பேசிக்கிறேன் அதுகிட்ட….

என்னா தெகிரியமாப் பேசுறா…அம்புட்டுச் செல்லங்குடுத்து வச்சிருக்கான்…? இல்லாட்டி இப்டிப் பேசுவாளா? திரும்பி வரச்சே அவென் முகத்துல முழிக்கிறது நாந்தானடீ….கண்ண நோண்டிப் புடுவானே?

நாலு வரி எழுதி வச்சிட்டுப் போட்டுமா? எழுதப் படிச்சித்தான இருக்கன்….அது வர்றதுக்கே ராப்பொழுது தாண்டீரும்…இன்னைக்கு வருதோ இல்ல நாளைக்கோ…நீ கெடந்து எதுக்கு அடிச்சிக்கிறே….? – சொல்லிக் கொண்டே வேகமாய் நடையைக் கட்டி விட்டாள் சம்பங்கி.

வயசு ஒடம்பு காணும் அசாத்திய அசைவுகளைப் பயந்து நோட்டமிட்டவாறே பின்னாலேயே ஓடினாள் வெள்ளாயி.

செத்த நில்லுடீ…போறதுதே..போற…அந்த சீட்டித் துணிய எடுத்து அழுத்தமா மறைச்சுச் சுத்திக்கிறமாட்டியா? இப்டி சருகச்சேல கணக்கா ஒடம்பெல்லாம் தெரியுதேடீ….?

நீ சும்மாயிரு ஆத்தா….என்னத்தவாவது சொல்லிக்கிட்டு…உன் கண்ணே பொட்டயாகிப் போச்சு….எல்லா கனமாத்தேன் சுத்தியிருக்கேன்…இனிமே சாக்க எடுத்துத்தே போத்திக்கிறணும்…அடிக்கிற வெக்கைக்கு ரொம்பச் சொகமாத்தே இருக்கும்.

மல்லிகா….சாந்தி…பூரணி…..மீனா…..சம்பங்கி…..பெயர்களை வரிசையாய் வாசித்துக் கொண்டே ஆள் ஏறுகிறதா என்று கவனித்தான் ஏஜென்ட் கருணாகரன். அவன் பார்வையே ஒரு மாதிரியிருந்ததைக் கவனித்தாள்.

நல்லா ஞாபகம் வச்சிக்குங்க…உங்க ஒத்தொத்தருக்கும் பத்துப் பத்துப் பேரு…யார் யாருன்னு நீங்கதான் பிரிச்சிக்கிடணும்…அவுக அவுக குடியிருக்கிற ஏரியாப் பிள்ளைகளா பார்த்து வச்சி, பொறுப்பு ஏத்துக்குங்க….யாரும் வரல, போகலன்னு சொல்லக் கூடாது….அங்க வந்து ஆளுக கொறயக் கூடாது…அதயும் சொல்லிப்புட்டேன்…..எல்லாத்துக்கும் கூலிய உங்ககிட்டத்தான் கொடுப்பேன்…நீங்கதான் பிரிச்சிக் கொடுக்கோணும்…அது யேன் வேல கெடயாது…தெரிஞ்சிச்சா? எம்புள்ள வரல்ல, ஒம்புள்ள வரல்லன்னு யாரும் எங்கிட்ட வந்து புகார் பண்ணப்பிடாது…அதுக்கும் நா ஜவாப்தாரியில்ல….

நண்டுஞ்சிண்டுமாய், புலுபுலுவென்ற இரைச்சலோடு பிள்ளைகளைத் தூக்கி வீசாத குறையாய் அத்தனையும் வேனுக்குள் ஏற்றப்பட்டபோது கீழே நின்ற தாய்மார்களின் முகங்களைக் காணச் சகிக்கவில்லை சம்பங்கிக்கு. கையோடு கொண்டு வந்திருந்த வெள்ளைப் பேப்பரி்ல் அத்தனை பிள்ளைகளின் பெயர்களையும் விறுவிறுவென்று கேட்டு எழுத ஆரம்பித்தாள்.

யக்கா…அவுக அவுக சீட்ட அவுக அவுக வச்சிக்குங்க….கொண்டு இறக்கைலயும், திரும்ப வர்றலையும் பேரப் படிச்சு…பிள்ளைங்களச் சரி பார்த்துக்குங்க…..சீட்டு பத்திரம்க்கா….இத நாமளா இப்டிச் செய்தாத்தேன் உண்டு…அங்க யாரும் பொறுப்பு எடுத்துக்க மாட்டாக….இதுக அத்தனையும் நம்மளோட சொத்து…சர்தானா? அப்பத்தான் கூலியையும் கரெக்குட்டா வாங்க முடியும்….இவுக மொகத்துல சிரிப்பப் பார்க்க முடியும்” – கூடிக் கலங்கி நின்ற கூட்டத்தைக் காட்டினாள்.

என் ராசாத்தி…..நீ இருக்கிற தெகிரியந்தேன் எங்களுக்கு…! ஒட்டு மொத்தமாய்க் குரல்கள்.

டீம் லீடர் போல் அவளின் சுறுசுறுப்பு வேன் டிரைவரைக் கவனிக்க வைத்தது. யாரும் இதுனாச்சும் இப்டி செய்ததில்லையே? பலே பொம்பளயா இருப்பா போல்ருக்கு! மீசையை மேல் நோக்கி உருவி விட்டுக் கொண்டான்.

ஆனாலும் இந்தப் பொட்டச்சிக்கு அதிகாரஞ் ஜாஸ்திதேன்….- பெருமையோடுதான் சம்பங்கிபற்றி எண்ணிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள் வெள்ளாயி. அவளுக்கு இருக்கும் தெகிரியம் கூட இந்தப் பயலுக்கு இருக்காது போல்ருக்கே….இவென் என்னப் போட்டுல்ல உருட்டி எடுக்கிறான்? தொட்டதுக்கெல்லாம் பயந்து செத்தா? எப்டிப் பொழைக்கிறதாம்? அவளுக்கு அவிங்ஞ அப்பன் மனசுன்னா இவென் யாரக் கொண்டிருக்கான்?

பொழுது எப்படா விடியும் என்று கிடந்தாள் வெள்ளாயி. ராத்திரி முழுக்க அரையும் குறையுமாய்க் கழிந்ததுதான் மிச்சம். அசந்து தூங்கினோம் என்றில்லை. புருஷன் நெனப்பு வேறு காலமறிந்து வந்து ஒட்டிக் கொண்டது. ஒத்தைல தவிக்க விட்டிட்டுப் போயிட்டாரே மனுசன்…! அல்பாயுசுல போவாருன்னு யாரு கண்டா? மில்லு ஸ்டிரைக், மில்லு ஸ்டிரைக் என்று போராட்டத்தின் முதல் ஆளாய் நின்ற காட்சி அவள் கண் முன்னே. எப்போ போவாரு, எப்போ வருவாருன்னே தெரியாதே அப்போ…!

ஏட்டீ…உம் புருஷன் எங்கே….? ஓடி ஒளிஞ்ச எடம் எங்களுக்குத் தெரியாதுன்னு பார்க்கிறியா? எந்தப் பொந்தாயிருந்தாலும் நோண்டி எடுத்துப்பிடுவோம்…ஸ்டிரைக்கா பண்றீக…ஸ்டிரைக்கு? செட்டு செட்டா ஆளுகள வரிச பண்ணி அனுப்புறானாமே….மறைஞ்சிருந்து செஞ்சா எங்களுக்குத் தெரியாமப் போயிடுமா? தீவாளிக்குத் தீவாளி உம்புருஷனாலதான் பிரச்னையே…. சேர்மன் அய்யா சொல்லிட்டாரு….இனி கண்ணுல பட்டான்னா ஆளு மிஞ்ச மாட்டான்…அப்டியே மிஞ்சினாலும் பொழப்புல மண்ணுதான்….

என்னாங்கய்யா…நீங்கபாட்டுக்கு வந்து நின்னிட்டு என்னென்னவோ பேசுறீக….அப்டி என்னா செஞ்சுப்புட்டாரு….எம்புருசன்…? எல்லார் நன்மைக்கும் பாடுபடுறது தப்பாய்யா?

வெள்ளக்காரன் காலத்துலேர்ந்து ஓடிட்டிருக்கிற மில்லு அது….அவனவன் இஷ்டத்துக்கு தனித்தனியா பேச்சுக்குப் போயி சமாதானம் ஆயிட்டிருக்கைல, உன் வீட்டுக்காரனுக்கு மட்டும் என்னா வந்திச்சு கொடுமை? சங்கம், போராட்டம்னிட்டு கடைசிவரைக்கும் நெட்டுக்குத்தலா நின்னிட்டிருந்தா யாருக்கு நட்டம்? தூக்கி நிறுத்திப்புடுவாரா நட்டமா? பின்னால நிக்குற அம்புட்டுப் பேரும் அப்டியே இருக்காகளான்னு முதல்ல பார்க்கச் சொல்லு…!வயசாக, வயசாக வீர்யம் குறையுமுன்னு பார்த்தா ஜாஸ்தியாயிட்டே போவுது…?

கட்டிக் கொடுக்கைலயே தெரிஞ்சிதான்யா நானே அவர ஒத்துக்கிட்டேன்…நீங்க சொல்லியா தெரியணும் எனக்கு? அவுரு எல்லாம் நியாயமாத்தேன் செய்வாரு….குண்டிக்குப் பின்னாடி போயி காசு பாக்குற ஆளுல்ல என் வீட்டுக்காரரு…!

தில்லாய்த்தான் பேசினாள் வெள்ளாயி. ஆனால் விசாரணைக்குப் போன கணவன் திரும்பி வந்தால்தானே…! பொழுது விடியும் வேளை, ஊரே கோலாகலமாய் வர்ண ஜாலங்களில் ஜொலிக்கையில் அவளின் பொழுது இருண்டு போனது. இன்றுவரை அந்தச் சாவின் மர்மம் விலகவில்லை. பதஞ்சலிக்காவது ஒரு வேலை கிடைக்கட்டும் என்று ஆன மட்டும் போராடத்தான் செய்தாள். கருணை அடிப்படையில் அதையாவது பெற்று, வைத்திருக்கும் ஒரு பெண்ணைக் கரையேற்றலாம் என்று நினைத்தவளின் எண்ணத்தில் மண்தான் விழுந்தது. நிர்வாகம் இதோ அதோ என்று இழுத்து இழுத்தே அதை ஒன்றுமில்லாமல் பண்ணி விட்டது. காலம் எல்லாக் காயங்களையும் ஆற்றி விட்டது. ஆனாலும் உள்ளே கனல் இருந்து கொண்டிருப்பதை அவ்வப்போது உணரத்தான் செய்கிறாள்.

சாணி கரைத்து வாசல் தெளித்துக் கொண்டிருக்கையிலேயே, தெருக்கோடி தனலெட்சுமி விடுவிடுவென்று போய்க் கொண்டிருப்பதைக் கண்டாள் வெள்ளாயி.

ஏண்டீ, ஒரு கொரல் கொடுக்க மாட்டியா? உன் கண்ணு முன்னாடிதான வாசக் கூட்டிக்கிட்டுக் கெடக்கேன்…நீபாட்டுக்குக் கண்டுக்கிடாமப் போறியே….?

அட, நீ வேறே… புள்ளயக் காணமேன்னு தவிச்சிப் போய்க் கெடக்கேன்….

என்னாடி சொல்ற? பையன் வர்றதில்லியா?

பதினஞ்சு நாளாச்சுக்கா….கட்டக் கடேசி குடோன்ல நெருப்புப் பத்திக்கிச்சுன்னு வேறே பேச்சாக் கெடக்குதுக்கா…..பயம்ம்ம்மா இருக்கு….

அய்யய்யோ சாமி…கடவுளே…எம் பொண்ணு வேறே போயிருக்காளே…?

நீ பரவால்லக்கா…நா அடகுல்ல வச்சிருக்கேன்… வச்சாலும் வச்சேன்…அந்தப் படுபாவி வீட்டுக்கே அனுப்ப மாட்டன்றான். அவன்ட்டக் கடன வாங்கிப்புட்டு, அந்தக் காசுல எம்பொண்ணையும் கட்டிக் கொடுத்துட்டு, எம்பையனும் எனக்குக் கெடைக்காம. சந்தில நிக்கிறேன் தாயி…..

இருடீ…இருடீ…நானும் வந்திட்டேன்….. – கையில் வைத்திருந்த பெருக்குமாரை மூலையில் விசியெறிந்தாள் வெள்ளாயி. தனலெட்சுமி சொன்னதில் குலை பதறியது அவளுக்கு. பீடி சுத்தவும், தீப்பெட்டி அடுக்கவும், பஞ்சு பிரிக்கவும், மில்லுக் கூலியென்றும் எத்தனையெத்தனை குடும்பங்கள் ?

பொறுப்பு எடுத்த மாதிரில்ல இந்தச் சிறுக்கி போயிருக்கா…மில்லு வேலை முடிச்சி, அதுகளையும் இழுத்திட்டு? இப்பப் பார்த்து இவ என்னென்னவோ சொல்றாளே…எதுக்கு இந்த வீண் வேல? இதுனால அவளுக்கு இன்னா பிரயோசனம்? – குழம்பித் தவித்தாள் வௌ்ளாயி. இரக்கப்பட்ட அப்பன் புத்தி அவளப் புடிச்சில்ல ஆட்டுது?

சும்மாயிரு ஆத்தா…நம்மள மாதிரிதான அத்தன குடும்பங்களும், நானாச்சும் பெரியவ…பொடிசுகள வேலைக்கு அனுப்புறாகன்னா அந்தக் குடும்பம் கஞ்சிக்கு என்னா பாடுபடுதுன்னு புரிலயா ஒனக்கு? அவுக கண்ணு முன்னாடி பிள்ளைகளப் பார்த்துக்கிறதுக்கு நா இருக்கேன்றப்ப, என்னா சந்தோசம் எல்லாத்துக்கும்? அவுக மனசெல்லாம் வாழ்த்துந்தானே? அது போதும் எனக்கு…..

ஆமாடி எஞ்செல்லம்…நீ எம்பூட்டுப் புத்திசாலி….உன் அப்பன அப்டியே உரிச்சு வச்சிருக்கியேடி…அவுரும் அப்டித்தானடி…இருக்கிற ஆளுகளையெல்லாம் கைகோர்த்துக்கிட்டுப் போன மனுஷனப் பார்த்து பயந்துதான, அவர் கதய முடிச்சிட்டாக…! அவுருக்குள்ள எரக்க மனசு அப்டியே ஒங்கிட்ட இருக்குதடி தாயீ….. – மனசு உருகிப் போனாள் வெள்ளாயி.

எங்குலசாமி அய்யனாருதேன் எல்லாத்தையும் காப்பாத்தணும்…..

உள்ளே பதஞ்சலி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்ததைப் பொருட்படுத்தாமல் கிளம்பினாள். அவன் கண் விழிப்பதற்கு முன் சம்பங்கியை அவன் முன் கொண்டு வந்து நிறுத்தி விட வேண்டும்…என்று அவள் மனம் துடித்தது பின் தொடர்ந்து ஓட்டமெடுத்தாள் வெள்ளாயி.

வெறுமே அவள் மட்டும் போயிருந்தால் மனசு இந்தப் பதறு பதறுமா?. அதுகளச் சாக்கு வச்சுக் கௌம்பி வந்திர மாட்டாளா? சாமர்த்தியக்காரியாச்சே…! வேல முடிச்சவுடனே அத்தனை பொம்பளைங்களையும் ஒரு காலிக் குடோன்ல கொண்டு அடைக்கிறதால்ல சொல்றாக?அங்கதான் படுத்துத் தூங்குவாகளாமுல்ல…என்னா கெரகம்டீ இது! மாட்டுக் கொட்டகையா மனுசங்கள அடைக்கிறதுக்கு?

யாரோ கேர் டேக்கராமுல்ல…அப்டித்தான் சொல்றாகக்கா…அதேன் போலாம்னு முடிவு செஞ்சிருக்கோம்…அவுரு பொறுப்பாம் எல்லாம்…துட்டு மொதக் கொண்டு வாங்கிக் கொடுத்து கணக்கு செட்டில் பண்ணிடுவாராம்….

அவெனத்தேன் சந்தேகமாப் பேசிட்டிருக்காக எல்லாரும்…நீ எங்கிட்டச் சொல்றியாக்கும்? இப்போ சமாதானம் பேசுறே? என்னக் கேட்காம அனுப்பிச்சிருக்கே…..தப்புத் தண்டா ஏதும் நடந்து போச்சின்னா யாரு பொறுப்பாறது? ஒரு பிள்ளய ஒத்தைல எங்கிட்டோ தள்ளிட்டுப் போனானாம்…மில் ஆளுக கவனிச்சுக் கண்டிச்சிருக்காக…இந்த வெவரம் ஏதாச்சும் தெரியுமா ஒனக்கு? வெளில வாசல்ல போற ஆசாமி நானு…எனக்குத்தேன் செய்தி தெரியும். ஆம்பிளன்னு எதுக்கு இருக்கேன் நான்? சம்பங்கிய எப்போ அனுப்பணும், எப்டி அனுப்பணும்னு எனக்குத் தெரியாதா? ….நா கூலிக்குப் போற எடத்துல எம்புட்டுப் பார்க்குறேன்…எங்க மேஸ்திரியெல்லாம் எப்டி ஆளுக தெரியுமா? நெருப்பா இருப்பாரு…வேலைலயும் சரி, பொம்பளைங்கள்ட்டயும் சரி…தாயா புள்ளயா பளகிட்டிருக்கோம் நாங்க…எல்லா எடமும் அப்டிச் சொல்ல முடியுமா? அப்டியிருக்கைல அனுப்பற எடம் எப்டின்னு உறுதி பண்ணிக்கிடுறதுக்கு முன்னாடி அவசரப்பட்டுட்டியே…உம்புருஷன் போனப் பின்னாடி நானென்ன பொலி காளயாவா சுத்திட்டிருக்கேன்…பொறுப்பாத்தான பார்த்துக்கிறேன்….கிடைக்கிற கூலிய அப்டியேதான ஓங்கிட்டக் கொண்டாந்து கொடுக்கிறேன்….என்னைக்காச்சும் வீட்டுல கை நனைச்சிருக்கனா? ஒங்க ரெண்டுபேர் பாடுதான? நா பார்த்துக்க மாட்டனா…? பட்டினியா போட்ருக்கேன்? என்னா ஆத்தா நீ…ஆசையா ஒரு தங்கச்சி…அதப் பத்திரமாப் பாத்துக்க மாட்டாம இப்டிச் செய்திட்டியே வெவரங்கெட்ட தனமா?

பதஞ்சலியின் உருக்கமான பேச்சு வெள்ளாயியை குலை நடுங்க வைத்தது. சித்தம் கலங்கிப் போயிற்று அவளுக்கு.

“புத்தி கெட்டுப் போச்சே…இந்தச் சிறுக்கிக்குப் புத்தி கெட்டுப் போச்சே…குல சாமி…நீதேன் காக்கோணும் அய்யா…..எங்குலவிளக்க நீதேன் காப்பாத்தோணும்…..”

பேதலித்தவளாய்…நெஞ்சில் அடித்துக் கொள்ளாத குறையாய் கால்கள் தடுமாற நாலு ரோடு முக்கு நோக்கி ஓடிக் கொண்டிருந்தாள்.

தூரத்தில் தெரியும் ஆட்கள் கூட்டமும், ரெண்டு மினி லாரிகள் நிற்பதும், ஒரே சளசளவென்ற இனந்தெரியாத கூக்குரல்களும் ஒட்டு மொத்தமாக அவள் காதுகளில் வந்து ஓங்கரிக்க, என்னப் பெத்த தாயீ….நீ வந்திட்டியா மவளே…..என்று கத்திக் கொண்டு முன்னே ஓடும் தனலெட்சுமியைத் தாண்டிக் கொண்டு ஓட்டமெடுத்தாள் வெள்ளாயி.

ரெண்டு லாரிகளிலிருந்தும் கிலு கிலுவென்ற மழலைக் குரல்களோடு கீழே குதிக்கவும், வாரியணைக்கவுமாய் இருந்த பிஞ்சுக் கூட்டத்தினிடையே கடைசியாகவேனும் தன் மகள் சம்பங்கி இறங்குவாள் என்று கண்களைக் கூர்மைப் படுத்திக் கொண்டு பார்த்தபோது தொங்கிக் கொண்டிருந்த பின்பக்கத்துக் கதவை இழுத்து உயர்த்தி அடைக்க வந்து நின்ற அந்த ஆள் சொன்னான்.

சின்னஞ்சிறுசுக எல்லாமும் கரீக்டா வந்திடுச்சில்ல….அவுகவுக குழந்தைகளக் கூட்டிட்டு பத்திரமா வீடு போய்ச் சேருங்க….மத்தவுக எல்லாம் மில்லு வேல முடிச்சு வருவாக….ஏஜென்டய்யா சொல்லச் சொன்னாரு…..

என்னாய்யா இது அநியாயமா இருக்கு…? வருவாகன்னு இப்டி மொட்டயாச் சொன்னா எப்டி? பொட்டப் புள்ளைங்கள உங்ககிட்ட விட்டிட்டு, வயித்துல நெருப்பக் கட்டிட்டிருக்கிறதா நாங்க….? – ஒரு சேரக் குரல் கொடுத்தார்கள் எல்லோரும்…..

அதெல்லாம் எனக்குத் தெரியாது….ஆள் வர்றேல்ல கேட்டுக் கிடுங்க….வாரத்துக்கு ஒருவாட்டிதான் கொண்டு விடுவாகளாம்…-கௌம்பைலயே சொல்லியிருப்பாகள்ல?.. கூட்டத்தைப் பார்த்துக் குரலெடுத்துக்- கத்திவிட்டு “ரைட்“ போலாம்ணே…..என்று வண்டியில் தாவினான் அந்த ஆள்.

புழுதியைக் கிளப்பிக் கொண்டு புயலாய்ப் பறந்து மறையும் அந்த வேனையே பார்த்தவாறு, செய்வதறியாது, பதறிப் போய் நின்றிருந்தாள் வெள்ளாயி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *