Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

துணை

 

”நீ கவிதை எழுதுவியா?” – கேள்வியில் கோபம் அதிகமாக இருந்தது. பத்ரியின் கண்கள் சிவந்திருந்தன. அவனைத் தயக்கத்தோடு பார்த்தாள் புவனா. எழுதுவேன் என்று சொன்னால், அடுத்த விநாடி கன்னத்தில் அறை விழலாம். எழுதத் தெரியாது என்றாலும் அடிக்கலாம். அவனுக்குத் தேவை அடிப்பதற்கான ஒரு பதில்.

”தெரியாது.”

”அப்புறம் எப்பிடிடீ அவனோட கவிதையை திருத்திக்குடுத்த?”- பேச்சின் நடுவிலேயே கன்னத்தில் ஓங்கி அறைந்தான். ”கவிதையைத் திருத்துற அளவுக்குப் பெரிய கவிதாயினியா நீ?” – இந்த முறை இடுப்பில் உதைத்தான்.

”நான் எதுவும் திருத்தலையே?” என்று புவனா ஒடுங்கி நின்றாள். சோபாவில் உட்கார்ந்து பாடம் எழுதிக்கொண்டிருந்த சுரேஷ் பயம் காரணமாக எழுந்து நின்று ”அம்மா” என்றான் மெதுவாக.

”நீ போய்ப் படிடா..!” என்ற பத்ரியின் அதட்டலுக்குப் பயந்து, சுரேஷ் பழையபடி சோபாவில் உட்கார்ந்தான். மீண்டும் புவனாவின் பக்கம் திரும்பிய பத்ரி, ”கவிதையத் திருத்திக் குடுத்துட்டு இல்லைனு பொய் வேற சொல்ற?”

துணை1

புவனாவுக்குக் கடந்த வாரம் மளிகைக்கடையில் நடந்த எல்லாம் ஒரு கணத்தில் நினைவுக்கு வந்தன. அவசரமாக டீத்தூள் வாங்க வேண்டியிருந்தது. பால் குக்கரில் விசில் வருவதற்குள் வாங்கி வந்துவிட வேண்டும் என்று வேகமாக எதிர் கடைக்கு ஓடினாள். காலையில் எழுந்திருக்கும்போதே டீ தயாராக இல்லை என்றால் சில நேரங்களில் கத்துவதோடு நிறுத்தாமல், டம்ளரை எடுத்து முகத்தில் எறிவான் பத்ரி. விசில் சத்தம் வருவதற்குள் டீத்தூளோடு திரும்பிவிட்டாள் தப்பித்தோம் என்று நினைத்தாள்.

டீத்தூள் எடுத்துத் தருகிற விநாடி அவகாசத்தில், கடைக்காரப் பையன் அந்தக் கவிதையை நீட்டினான்.

”நல்லாருக்கானு சொல்லுக்கா!”

”ஓ… கவிதையெல்லாம் எழுதுவியா?”

பூரிப்பும் வெட்கமுமாகச் சிரித்தான்.

‘நிழலாகப் பின்தொடர்வேன்
என்றாய்.
இருள் வந்தாலுமா?’

என்று எழுதியிருந்தான். அபிப்ராயம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. காண்பித்த கடமைக்காக ‘இருள் வந்தாலுமா?’ என்பதை ‘இருளில்?’ என்று ஒரு வார்த்தையாக்கிவிட்டு ‘நல்லா எழுதறே’ என்று ஒரு வார்த்தை சொன்னாள்.

”இருட்லயும் அவன் உன்கூடவே இருக்கணுமா?” என்றான் பத்ரி.

இப்போதும் என்ன பதில் சொன்னாலும் அடிவிழும். பேசாமல் இருந்தால் விழாமல் இருக்க உத்தரவாதம் இல்லை. எதற்கு அடிப்பான்… எதற்கு அடிக்க மாட்டான் என்பதை என்றாவது ஒருநாள் சரியாக யூகித்துவிட முடியுமா என்பதைத்தான், இந்த ஜென்மத்தின் சவாலாக நினைத்தாள் புவனா. இடுப்பின் மீது உதைக்கும்போதுதான் கொஞ்சம் பயமாக இருந்தது. தன் பொருட்டு வயிற்றில் வளரும் இன்னோர் உயிரும் அடிவாங்கும்.

”அந்தக் கடைக்குப் போக வேணாம்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். எதுக்கு அங்கே போனே?” – அடுத்த அஸ்திரம்.

”திடீர்னு டீத்தூள் தீர்ந்துபோச்சு. அவசரத்துக்கு…”

”என்னடி அவசரம்? மொத நாளே தெரியாதா? நான் தூங்கிட்டு இருக்கும்போது கடைக்கு ஓடி கவிதை எழுதறீங்களா… கவிதை?”

புவனாவின் இத்தனை ஆண்டு அனுபவத்தில் இந்த நேரத்தில் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தால், அவன் அடிக்க மாட்டான். புவனா பேசாமல் இருந்தாள்.

செய்தது தவறுதான் என்பதாகத் தலையைக் கவிழ்ந்து நின்றிருந்தாள். ‘தவறை உணர்ந்துவிட்டாள் என்பதாக அவனே ஒரு முடிவுக்கு வந்து, இனிமேல் இந்த மாதிரி செய்யக் கூடாது என்று எச்சரிப்பான். அப்புறம் ஒரு சிகரெட்டைப் புகைத்தபடி டி.வி. பார்ப்பான்’- இப்படித்தான் புவனா யூகித்தாள். ஆனால், எதிர்பாராதவிதமாக அவளுடைய தலையை உயர்த்தி சுவரில் டமார் என அடித்தான். நெற்றியில் இருந்து ஈரமாக முகத்தில் இறங்கியது ரத்தம். சுரேஷ் ஓடி வந்து பத்ரியின் காலைப் பிடித்துக்கொண்டு கதற ஆரம்பித்தான்.

துணை2

”அம்மாவ விட்டுடுங்கப்பா… பாவம்பா அம்மா!”

”நாயே… போய்ப் படிடா. பெரிய மனுஷனாட்டம் நியாயம் பேச வந்துட்டியா?”- சுரேஷை சோபாவை நோக்கித் தள்ளினான். புவனா ரத்தத்தையோ, கண்ணீரையோ துடைக்காமல் இருந்தால், இனிமேல் அடிப்பதை நிறுத்துவான் என்று யூகித்தாள். பத்ரி ஹாங்கரில் தொங்கிக்கொண்டிருந்த சட்டையில் இருந்து சிகரெட்டை எடுத்தான். வெற்றி! டி.வி-யை இயக்கினான். அவனுக்கு இன்றைய பொழுதின் ஆணவம் அலுப்புநிலைக்கு வந்துவிட்டது. இனி, வேறு வகையான உற்சாகத்தைத் தேடுவான். இப்போதைக்கு சிகரெட். இரண்டாம் ஜாமத்தில் எழுப்பி சமாதானக் கொடி பிடிக்காமல் இருந்தால் போதும். ஒரு வேளை நாளை வரைக்கும்கூட அடிக்காமல் இருந்துவிடுவான்.

புவனா வியர்வையைத் துடைப்பதுபோல நெற்றியில் வழிந்த ரத்தத்தை துப்பட்டாவால் அகற்றினாள். வாஷ்பேஷினில் கண்ணீர், ரத்தம் இரண்டும் நீங்கக் கழுவிக்கொண்டாள். உலைவைத்து இறக்கி, ரசமும் உருளைக்கிழங்கு வறுவலும் செய்தாள். பத்ரி டி.வி-யில் ஏதோ ஜப்பான் மொழிப் படம் பார்த்துக்கொண்டிருந்தான். அதில் மனிதர்களைக் கூறுகூறாக வெட்டி சில பகுதிகளை எரித்தும் சில பகுதிகளை மீன்களுக்கு உணவாகவும் போடும் ஒரு மனோவியாதி மனிதனைப் பற்றிக் காட்டிக்கொண்டிருந்தார்கள். பத்ரி அதைப் புன்முறுவல் மாறாமல் பார்த்தான். சமையல் வேலைகளுக்கு நடுவே புவனா அதை அடுத்து என்ன மாதிரி அதிர்ச்சிக் காட்சி வரப்போகிறதோ என்ற அச்சத்தின் காரணமாக மிரட்சியோடு பார்த்தாள். சின்ன வயதிலேயே சுரேஷ் இதையெல்லாம் பார்ப்பது அவளுக்குப் பயத்தை ஏற்படுத்தியது. குழந்தையின் எதிரில் இதுபோன்ற படங்களைப் பார்க்க வேண்டாம் என்று கோரிக்கை வைக்கலாம். ஆனால், அவனாக வேறு சேனலுக்கு மாற இருந்த யோசனையையும் கெடுத்துவிடும்.

பால்வண்ணம் பிள்ளைகளின் உலகம் இது. புதுமைப்பித்தனின் கதை நினைவு வந்தது. கல்லூரி… கவிதை எழுதிய நோட்டுப் புத்தகம்… திருமணமான புதிதில் அதை பத்ரியிடம் காட்டி அவமானப்பட்டது… எல்லாம் போன பிறவியில் நடந்ததுபோல இருந்தது. சூறாவளியிலும் தாக்குப்பிடிக்கும் சிறுமலர் போல மிச்சம் இருக்கும் நினைவுகள் இவைதான்.

அந்த வீட்டில் செருப்பு வைக்கிற ஸ்டாண்டுக்கு இருக்கும் மரியாதைகூட இல்லாமல் ஒரு ஜீவனாக நடமாடுவது, சில நேரங்களில் அதிக வருத்தமாகிவிடும். இறந்துவிடலாம் என யோசித்தால், அம்மா, அப்பாவின் பரிதாபமான முகம் நினைவுவரும். சுரேஷின் முகம்… தன் இழப்பால் வருந்தும் அனைவரையும் நினைத்துப்பார்த்தாள். செத்துத் தொலைப்பதைவிட வாழ்ந்தே தொலைக்கலாம்போல இருந்தது. ‘யாரோ ஒருவரின் நினைவு நம்மை இழந்துவிடாமல் காக்குமென்றால், யாருடைய முயற்சியால் வாழ்கிறேன் நான்?’ என்று ஒரு வரி ஓடி மறைந்தது. மனதில் ஓடிய வரியைப் பிடிக்க முடியவில்லை. ஒருவகையில் புவனாவுக்கு இருந்த ஒரே வசதியே அதுதான். இப்போது எல்லாம் மறந்துவிடுகிறது.

படிக்க விரும்பியதைப் படிக்காமல்போனதை, அணிய விரும்பியதை அணியாமல்போனதை, கேட்க விரும்பியதைக் கேட்காமல்போனதை, வாழ விரும்பியதை வாழாமல்போனதை… அவளால் வசதியாக மறக்க முடிந்தது. கரும்பலகையில் ஒரு கை எழுதிச் செல்லும் வாக்கியத்தை இன்னொரு கை ஈரத் துணியால் அழித்துக்கொண்டே வந்தது. இரண்டொரு முறை நியாயம் கேட்க வந்த அப்பாவையும் இனி வீட்டுப் பக்கம் வரக் கூடாது என்று விரட்டியடித்துவிட்டான். அப்பாவும் அம்மாவும் ஏதாவது கல்யாண வீட்டில் பார்த்தாலும் பேசக் கூடாது என்பது நிபந்தனை. கணவனோடு செல்லும் எல்லாப் பயணங்களும் ஒரு மனக்கசப்பில் வந்து முடிவதால், கல்யாணம் காட்சி என்று போக அவளுக்கு விருப்பம் இருந்தது இல்லை. கொஞ்சம் தீவிரமாக யோசித்துப்பார்த்தால், அவளுக்கு விருப்பங்களே இருந்தது இல்லை என்று சொல்லிவிடலாம்.

அதனால்தான் மறுநாள் அவள் புதிதாக விழித்து எழுந்தாள். நம்பிக்கையே இல்லாததால், எதிர்பார்ப்பும் இல்லை. பத்தடிக் கூண்டுக்குள் சிக்கிய மான்போல வாழப் பழகியிருந்தாள். எப்போது புல்லைச் சாப்பிட வேண்டும்; எப்போது தண்ணீர் குடிக்க வேண்டும் என்று பழகிக்கொள்வதில், பெரிய சிரமம் இருக்கவில்லை.

மறுநாள் காலை சுரேஷ் பள்ளிக்குக் கிளம்பிக்கொண்டிருந்தான். அவனைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பு புவனாவுக்கு. அழைத்துவருவதும் அவளுடைய வேலைதான். அவனுக்குத் துணி துவைப்பது அவளுடைய வேலை. அவனுக்குப் பாடம் சொல்லித்தருவது அவளுடைய வேலை. எல்லா வேலைகளும் அவளுடைய வேலைகளாக இருந்தாலும், இப்படித் தனித் தனியாகப் பிரித்துப் பார்த்து எளிமையாக்கிக்கொள்வாள்.

பத்ரி செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்தான். அசப்பில் பார்த்தால் அவன், ஆண்களின் எல்லாக் கடமைகளையும் நிறைவேற்றுவதுபோல இருக்கும். அதில் ஒன்று, காலையில் செய்தித்தாள் படிப்பது. பள்ளிக்கூடப் பையைத் தூக்கிக்கொண்டு சுரேஷ§க்குப் பின்னால் நடந்தாள் புவனா.

”எதுக்குடா இவ்ளோ புக்ஸு?” என்று பத்ரி, சுரேஷை அதட்டினான்.

சுரேஷ், புவனாவிடமிருந்து பையைப் பிடுங்கி முதுகில் மாட்டியபடி, ‘இன்னைக்கு ஹோம் வொர்க் நோட் சப்மிட் பண்ணணும்பா’ என்றான். சுரேஷ் சொன்ன பதில் பத்ரி காதில் விழுந்த மாதிரியே தெரியவில்லை.

”கொஞ்சம் நோட்டை மத்தியானம் லஞ்ச் கொண்டுவரும்போது…” – புவனா ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு யோசனையை முன்வைக்க முனைந்தாள். சுரேஷ் அதற்குள் மாடிப்படி இறங்கிவிட்டான். விட்டால் தனியாகவே பள்ளிக்குப் போய்விடுவான்போல. புவனா வேகமாக ஓடி அவனைக் கடைசிப் படிக்கட்டுக்கு முன்னால் பிடித்தாள்.

”என்ன அவசரம் உனக்கு?”

சுரேஷ் பதில் சொல்ல மாட்டான். பள்ளிக் குழந்தையைப் போல இருக்காது அவனுடைய நடவடிக்கை. இரவில் பத்ரியின் படுக்கைத் தொல்லைகளின்போது, எழுந்துபோய் அவனா கவே ஹாலில் படுத்துக்கொள்வான். எதையோ கடந்து வந்துவிட்டவன்போலத்தான் நடந்து கொள்வான். தெருவைக் கடந்து வலது பக்கம் திரும்பியதும், ஒரு ஆட்டோவை அணுகி, ”கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் போகணும். வர்றீங்களா அங்கிள்?” என்றான்.

”எதுக்கு கோயம்பேட்டுக்கு?” என்ற புவனாவை ஆட்டோவில் அவசரமாகத் தள்ளினான்.

அவனும் ஏறி அமர்ந்து, ”நாம தாத்தா வீட்டுக்குப் போறோம்!”

”திருச்சிக்கா?”

ஆமாம் என்று அவன் சொல்லவே இல்லை.

”அய்யோ…” பதறினாள்.

ஆட்டோ ஓட்டுபவர் எதேச்சையாகத் திரும்பிப் பார்த்தார். சுரேஷ் கண்களால் புவனாவை எச்சரித்தான். இது என்ன விபரீதம்? பத்ரி பைக்கில் துரத்தி வருவதுபோல இப்போதே திகில் பரவ ஆரம்பித்துவிட்டது புவனாவுக்கு. கட்டியிருந்த புடைவையை ஒரு தரம் நேர்த்தியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டாள். பத்து வயசுப் பையனை நம்பி… காதைப் பிடித்துத் திருகிக் கீழே இறக்க வேண்டும் என்று ஏன் முயற்சி செய்யவில்லை? அவளுக்கு வியர்த் துக் கொட்டியது. இப்படிக் கட்டிய புடைவையோடு போய் நின்றால், அப்பாவும் அம்மாவும் என்ன சொல்லுவார்கள்? உறவி னர், புகுந்தவீடு, சமூகம், குடும்பம்… எதிர்காலம்? எல்லா வார்த்தை களும் அவளை அச்சுறுத்தின.

”பயமா இருக்கு சுரேஷ்…

வீட்டுக்குப் போயிடலாம்டா!” என்று மெதுவாகச் சொன்னாள்.

பாந்தமாக அம்மாவின் கை களைப் பிடித்துக்கொண்டான். எப்படியாவது பயணத்தை நிறுத்தி விட வேண்டும் என்பது மட்டுமே நோக்கமாக இருந்தது. எந்தத் தடயமும் இல்லாமல் மீண்டும் பத்ரியிடம் போய் வழக்கமான அடிகளையும் திட்டு களையும் வாங்கிக்கொண்டு இருந்தால் போதும்போல இருந் தது. அவளுக்குப் பழக்கமான வருத்தங்களோடு வாழ்ந்து விடுவதே பரவாயில்லைபோல நினைத்தாள். ஆனால், தன் கட்டுப்பாட்டில் இல்லாததுபோல மனம் சுரேஷிடம் அந்தக் கேள்வி யைக் கேட்டது.

”ஊருக்குப் போகப் பணம்?”

சுரேஷ் பள்ளிக்கூடப் பையைத் திறந்தான். புவனாவின் கல்லூரிச் சான்றிதழ்கள், நகைப் பெட்டி, பணம். பீரோவில் இருந்து எப்போது இதையெல்லாம் எடுத்து வைத்தான்? சிக்கியிருந்தால் இந்நேரம் என்ன கதியாகியிருப்போம்? ஆட்டோவின் பின்புறம் இருந்த நீள்வட்ட ஜன்னல் வழியே பார்த்தாள். இன்னும்கூடச் சிக்கு வதற்கு வாய்ப்பு இருக்கிறது. பள்ளிக் கூடம்விட்டு அரை மணி நேரத் துக்குள் திரும்பவில்லை என்றால்?

பள்ளிக்கூடத்தில் சில நேரம் ஏதாவது விசாரணைகள் இருக்கும். கொஞ்சம் முன்னபின்னே ஆகும். சில நேரத்தில் அப்படியே காய்கறி வாங்கிக்கொண்டு வருவாள். ஒரு மணி நேரம் வரைகூடத் தேட மாட்டான். பிறகு சந்தேகம் வரும். மளிகைக் கடைப் பையன் மீதும் வரும். அய்யோ கொடுமையே… அதற்குள் சென்னையைவிட்டுப் போய்விட வேண்டும்.

”இதையெல்லாம் எப்ப எடுத்தே?”

”காலையில…”

திருச்சி பஸ் எங்கே நிற்கும் என்று விசாரித்து, கையைப் பிடித்து இழுத்துச் சென்றான். பஸ்ஸில் நல்ல இடமாகப் பார்த்து உட்காரவைத்தான் சுரேஷ். அடிக்கொரு தரம் அவன் முகத்தைப் பார்த்தாள்.

அது குழந்தைக்கான முகம்தான். பெரியவர்களின் செருப்பைப் போட்டு நடக்கும் சிறுவனுடைய பாதம்போல பொருத்தம் இல்லா மல் இருந்தது; ரசிக்கும்படியாகவும் இருந்தது. ரசிப்பதற்கான தருணம் தான் இல்லை. குழாயடிச் சண்டை யில் நிலவைத் தவறவிடுவது மாதிரி தான், தருணங்களும் நெருக்கடிகளும் போட்டி போடுகின்றன.

டிரைவர், அவருக்கான பிரத்யே கக் கதவு வழியாக ஏறி அமர்ந்தார். பஸ் இன்ஜினின் உறுமல். நகரவும் ஆரம்பித்தது.

”ஏன் இப்படி வந்தீங்கனு தாத்தா திட்டினா?”

”திட்டமாட்டார்!”

ஜனத் திரளில் பஸ் ஊர்ந்தது. பிரதான சாலைக்கு வரும்வரைக்கும் பயப்பட வேண்டும்போல மனம் சொல்லியது. நெரிசலில் இருந்து மீண்டு அகன்ற சாலையில் திரும்பி, விரைந்தது பஸ்.

சுரேஷ் அம்மாவின் தோள் மீது சாய்ந்து கொண்டான்.

”திட்டினா..?” என்றாள் மறுபடி.

சுரேஷ் தீர்க்கமாக அம்மாவைப் பார்த்தான்… ”நீயும் திருப்பித் திட்டுமா!”

- ஜூலை 2013 

தொடர்புடைய சிறுகதைகள்
''பாம¢பு ரெண்டு நாளா சாப்பிடல சார்... ஏதாவது தர்மம¢ பண¢ணுங¢க சார்'' - பஸ்ஸின¢ ஜன¢னல¢ ஓரத¢த¤ல¢ இருந¢து குரல் வந¢தது. நான¢ த¤ரும்பிக் குன¤ந¢து பார்ப¢பதை அற¤ந¢து, பாம்புகளைத் தவ¤ர வேறு எதையும¢ பத¢த¤ரப¢படுத¢த¤வைக¢க முடியாத அந்தப் பிரத்யேக மூங¢க¤ல¢ கூடையை ...
மேலும் கதையை படிக்க...
நட்டநடு சாலையின் மஞ்சள் கோட்டில் அவனும் அவளும் நின்றிருந்தனர். அவர்களுக்கு முன்னும் பின்னும் கொக்கியில் மாட்டிய ரயில்பெட்டிகளைப்போல வாகனங்கள் தொடர்ச்சியாகப் போய்க்கொண்டிருந்தன. சாலையைக் கடக்க வழி கிடைக்காமல், ஐந்து நிமிடங்களுக்கு மேலாக நின்றிருந்தனர். அது சாலையைக் கடப்பதற்கான தடம் அல்ல. வாகனங்களுக்கு ...
மேலும் கதையை படிக்க...
சொல்லப்போனால் நான்கு நாட்களும் அவர்களுக்கு ஒரு சிங்கமும் கிடைக்கவில்லை. "அசாமில் சிங்கம் இருப்பதாக யார் சொன்னார்கள்" என்றான் ஆல்பர்ட். "ஆப்பிரிக்காவை விட்டால் குஜராத்தின் கிர் காடுகளில் சில எஞ்சியிருக்கின்றன. அசாமில் இருந்தவற்றை எப்போதோ வேட்டையாடி முடித்துவிட்டார்கள்" என்றான். மற்ற மூவருக்கும் நப்பாசை. கிழக்கு ...
மேலும் கதையை படிக்க...
பெட்டிக்குள் ஏதோ ஒரு பிணம் இருப்பதாக சரவணனுக்கு இரண்டாவது முறையாக கனவு வந்தது. கண்ணம்மா ஆயாவுக்கு கல்யாணத்தின் போது சீதனமாக தந்த பெரிய மரப் பெட்டி அது. அதில் எராளமான துணி மூட்டைகள் இருந்தன. யார் வளர்ந்துவிட்டாலும் அவர்களுக்கு "சின்னதாகிவிட்ட' ஆடைகள் ...
மேலும் கதையை படிக்க...
முட்டையிட்ட பதினெட்டாவது நாள் புறா குஞ்சு பொறிக்கும். அவ்வளவு நீண்ட ஆயுள் எனக்கு இல்லை. நான் இறப்பதற்குள் அந்தப் புறா குஞ்சு பொறித்துவிடுமா? அதற்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. நான் வந்து சேர்ந்து இரண்டாவது முறையாக அது முட்டை இட்டு, வீணடித்துவிட்டது. ...
மேலும் கதையை படிக்க...
இப்படிக்கு பூங்காற்று…
சரஸ்வதியின் முகத்தில் கலவரம் தூக்கலாக இருந்தது. காபி கொடுக்கும்போது, புன்னகைக்க முயற்சி செய்தாள். அது அவ்வளவு இயல்பாக இல்லை. 'ஒரு வாரமாக ஒருவன் தினமும் நேரம் காலம் இல்லாமல் தொலைபேசுகிறான்; தொல்லையாகப் பேசுகிறான். கொஞ்சம் நேரில் வர முடியுமா?’ - இதுதான் ...
மேலும் கதையை படிக்க...
வேறு கிளை… வேறு சுவை!
நான் நான்காம் வகுப்பு படித்தபோது பார்த்த அந்த முகம்தான் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக என்னைப் பொறுத்தவரை மஞ்சு அக்காவுக்கான முகம். ஏனென்றால், அதன் பிறகு அவளை நான்பார்க்க வில்லை. தொடர்வண்டி எத்தனை நிறுத்தங்களைக் கடக்கும்போதும் மாற்றமில்லாமல் தோன்றும் ரயில் நிலையம் ...
மேலும் கதையை படிக்க...
பெட்டிக்குள் ஏதோ ஒரு பிணம் இருப்பதாக சரவணனுக்கு இரண்டாவது முறையாகக் கனவு வந்தது. கண்ணம்மா ஆயாவுக்கு கல்யாணத்தின்போது சீதனமாகத் தந்த பெரிய மரப் பெட்டி அது. அதில் ஏராளமான துணி மூட்டைகள் இருந்தன. யார் வளர்ந்துவிட்டாலும் அவர்களுக்கு 'சின்னதாகிவிட்ட' ஆடைகள் எல்லாம் அதில் ...
மேலும் கதையை படிக்க...
நினைவின் நிழல்
நான் அமைதியாகக் கண் அயர்ந்து இருந்தேன். எனக்கு உயிர் இருக்கிறதா என்பதைப் பலரும் நம்பிக்கையே இல்லாமல் பரிசோதித்துக் கொண்டு இருந்தார்கள். உடலில் ஓர் அசைவும் இல்லை. பத்து குதிரைத் திறன் உள்ள நீர் இறைக்கும் இயந்திரத்தை சுமந்து செல்லக்கூடிய என் தோள்கள் ...
மேலும் கதையை படிக்க...
நம்ம ஸ்கூல்லதான் படிச்சீங்களாமே? சொன்னாங்க'' என்றார் தலைமை ஆசிரியர். நான் சிரித்துக் கொண்டேன். "ஆமா... டென்த் பப்ளிக் எக்ஸாம் வர்றதுக்கு ஒரு வாரம் முன்னாடி நின்னுட்டேன்'' அதை உறுதிப்படுத்துவது மாதிரி சொல்லிச் சிரித்தேன். "என்ன அம்மை போட்டுடுச்சா?'' தலைமயாசிரியர்களுக்கு யார், யார் எதற்கு விடுமுறை ...
மேலும் கதையை படிக்க...
இது பாம்புக்கதை அல்ல
பாஸ்வேர்டு
வார்த்தையுள் ஒளிந்திருக்கும் கிருமி
ஒரு மரப்பெட்டிக் கனவு
கட்டில் தோழன்
இப்படிக்கு பூங்காற்று…
வேறு கிளை… வேறு சுவை!
ஒரே ஒரு கிராமத்துல ஒரே ஒரு நாடகம்!
நினைவின் நிழல்
அம்மை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)