துணை!

 

அழுது அழுது கண்கள் சிவந்து, உடல் சோர்ந்து உட்கார்ந்திருந்தாள் சுமித்ரா.
“”அம்மா, அம்மா, அப்பா எங்கம்மா. இனி வர மாட்டாங்களா…” மழலையில் கேட்கும் மகனின் வார்த்தைகள், அவள் சோகத்தைக் கிளற, மகனை மார்போடு அணைத்து தேம்பினாள்.
“”சுமி… என்னம்மா இது, மனசை தேத்திக்கம்மா. சந்திரனின் காரியங்கள் முடிச்சாச்சு. வந்த ஜனமும் கிளம்பி போயிருச்சு. இனியும் இப்படியே இடிஞ்சு போய் உட்கார்ந்திருந்தா, உன் உடம்பு என்னத்துக்காகும். அண்ணன் தம்பி நாங்க மூணு பேரும், என்னைக்குமே உனக்கு துணையாயிருப்போம்.”
சுமித்ராவின் மூத்த சகோதரன் திவாகர் சொல்ல, அதை ஆமோதிப்பது போல், மற்ற இரு சகோதரர்களும், சுமித்ராவின் அருகில் உட்கார்ந்து அவளை ஆறுதல் படுத்தினர்.
துணை!வாசலில் தள்ளாமையால் உடல் மெலிந்து, வயசான காலத்தில், தனக்குக் கொள்ளி வைக்க வேண்டிய மகன், அல்பாயுசில் போய்ச் சேர்ந்ததை ஜீரணிக்க முடியாமல், நிலைகுத்திய பார்வையுடன், ஜடமாக நாற்காலியில் உட்கார்ந்திருந்தார் மோகன்ராம்.
“”மாமா, நீங்களும் இப்படி இடிஞ்சு போயி உட்கார்ந்திருந்தா, அப்புறம் சுமி எப்படி தேறுவா சொல்லுங்க. நீங்கதான் அவளுக்கு நல்ல வார்த்தை சொல்லணும். நாங்க எவ்வளவோ சொல்றோம். அவளால் இன்னும் மீள முடியலை.”
மெதுவாக கண் திறந்து, எதிரில் நிற்கும் சுமித்ராவின் அண்ணன் திவாகரை பார்த்தார் மோகன்ராம்.
“”எப்படிப்பா… நடந்திருக்கிறது எவ்வளவு பெரிய விஷயம்! என் பையன் அல்பாயுசில் போக வேண்டியவனா… ஆஜானுபாகுவாக எவ்வளவு களையாக இருப்பான். படிப்பும், அழகும் சேர்ந்து, ராஜகுமாரனாக வளைய வந்தானே… அந்த பாழாய்ப் போன லாரி, எமன் ரூபத்தில் வந்து, என் மகன் உயிரை நிமிஷமாக குடிச்சுட்டு போயிடுச்சே… என் மருமகளை நான் எப்படித் தேற்றுவேன்… அவங்க வாழ்ந்த சந்தோஷ வாழ்க்கையை பார்த்து, பாவி நானே கண் வச்சுட்டேனே… இனி, எங்களுக்கு யார் இருக்கா?”
“”மாமா என்ன இது, வயசான நீங்க, மனசை பக்குவப்படுத்திக்க வேண்டாமா! நடக்கறது என்னன்னு பாருங்க. இனி, சுமித்ராவுக்கு என்ன வழின்னு யோசிக்கணும். இளம் விதவையாக, அவள் வாழ்க்கை எவ்வளவு போராட்டமாக நகரப் போகுதுன்னு நான் கவலைப்படறேன் மாமா. அவளை இதிலிருந்து மீட்கணும். அதுக்கு ஒரே வழி, நாங்க சுமியை, முப்பதாம் நாள் காரியம் முடிஞ்சதும், எங்க வீட்டுக்கு கூட்டிட்டுப் போறோம். அப்பதான் அவ மனசு தேறும்ன்னு எங்களுக்குத் தோணுது. என்ன மாமா சொல்றீங்க?”
சட்டென்று தலை நிமிர்ந்தார் மோகன்ராம். திவாகரின் கரங்களைப் பிடித்துக் கொண்டவர், “”ரொம்ப சந்தோஷம்பா. தங்கையின் நிலையை உணர்ந்து, அவளை ஆறுதல்படுத்த நினைக்கிறீங்களே… உங்க பாதுகாப்பில் அவள் இருந்தா தான் நல்லது. நல்லா அழைச்சுட்டுப் போங்க. எனக்கும் மனசிலிருந்த பாரம் குறைஞ்ச மாதிரி இருக்கு. என் பிள்ளைக்கு தான் கொடுத்து வைக்கலை. அவள் மனசு தேறி, அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுங்க.”
அந்த சாலையோர பூங்காவின் பெஞ்சில், நண்பருடன் உட்கார்ந்திருந்தார் மோகன்ராம்.
“”என்னப்பா, வரச் சொல்லிட்டு, இப்படி பேசாமலேயே உட்கார்ந்திருக்கியே… உன்னை நினைச்சு எனக்கு எவ்வளவு வருத்தமா இருக்கு தெரியுமா? பறவை கூடு போல், சந்தோஷமாக வாழ்ந்த உன் குடும்பத்தை, ஆண்டவன் இப்படிக் கலைச்சுட்டானே… எனக்கே மனசு ஆறலை. நீயும், உன் மருமகளும், எப்படி தேறப் போறீங்க? மனசு வேதனைப்படுது மோகன்ராம்.”
கண்கள் கலங்க நண்பனை பார்த்தார்.
“”எனக்கொரு உதவி செய்வியா?”
“”என்ன செய்யணும் சொல்லுப்பா.”
“”சுமித்ராவை, அவங்க அண்ணன்ங்க அழைச்சுட்டு போகப் போறாங்க. அவங்களால தான், அவளை பழைய நிலைக்கு கொண்டு வர முடியும். என் ஒருத்தனுக்கு, அவ்வளவு பெரிய வீடு தேவையில்லை. அதை காலி செய்து, வாடகைக்கு விட ஏற்பாடு பண்ணணும். அந்த பணத்தை, என் பேரன் பேரில் வங்கியில் போட்டால், பிற்காலத்தில் அவனுக்கு அது உதவும். அப்படியே, என் கடைசிக் காலத்தைக் கழிக்க, ஏதாவது முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட ஏற்பாடு பண்ணுப்பா. பணம் ஏதும் கொடுக்கணும்ன்னு சொன்னாலும் கொடுத்துடலாம். உனக்கு தெரிஞ்ச நல்ல இடமா பார்த்து சொல்லுப்பா.”
“”மோகன்ராம், நிஜமாத்தான் சொல்றியா? நீ எடுத்திருக்கிற இந்த முடிவு…”
“”வேற வழியில்லைப்பா, நான் ஒருத்தன், தனி ஆளாக வாழ முடியுமா சொல்லு. அந்த ஆண்டவன் கூப்பிடற வரை, இந்த உடம்பை பாதுகாக்கணுமே… என்னை கடைசி வரை வச்சு காப்பாத்த வேண்டிய பிள்ளை… என்னை விட்டு போயிட்டானே… நான் என்ன செய்வேன்?”
மனம் வெதும்பி அழும் நண்பனை தோளில் சாய்த்து, தட்டிக் கொடுத்தார்.
“”அண்ணா, உங்க தங்கச்சி மேலே இவ்வளவு பாசம் வச்சு நீங்க கூப்பிடறது மனசுக்கு நிம்மதியைக் கொடுக்குது,” என்று சொல்லும் சுமித்ராவை பார்த்தான் திவாகர். “”கவலைப்படாதே சுமி. சந்திரன் உனக்கு ஒரு நல்ல கணவனாக வாழ்ந்தான். உன் வாழ்க்கை, இப்படி பாதியிலே அஸ்தமனம் ஆகும்ன்னு நாங்க நினைக்கல. நடந்த சம்பவம், ஜீரணிக்க முடியாதது. இருந்தாலும்… இனி, நாங்க உனக்கு துணையா இருந்து, உனக்கும், விஜய் குட்டிக்கும், ஒரு நல்ல வழியை ஏற்படுத்தித் தருவோம். நீ கிளம்பறதுக்கு ஏற்பாடு பண்ணும்மா. உனக்கு தேவையானதை எடுத்து வச்சுக்க,” என்றான் திவாகர்.
“”அண்ணா, நான் சொல்ல வந்ததை, தவறாக புரிஞ்சுக்காம கேளுங்க. எனக்கும், என் பிள்ளைக்கும், நீங்க துணையா இருக்கலாம். சிறு வயதில், அம்மாவை இழந்த பிள்ளையை, கண்ணும் கருத்துமாக வளர்த்து ஆளாக்கி, வயசான காலத்தில், தன் மகனை ஆதாரமாக நம்பி வாழ்ந்த என் மாமனாருக்கு, இனி யாருண்ணா துணை.
“”இந்த நான்கு வருட தாம்பத்தியத்தில், நாங்க வாழ்ந்த வாழ்க்கை, சொர்க்கத்துக்குச் சமம். அவருடைய எண்ணங்கள், ஆசைகள் எல்லாத்தையும் என்னுள் விதைச்சுட்டுதான் போயிருக்காரு. மகனை நல்லபடியா படிக்க வச்சு, ஒரு பொறுப்புள்ள மனிதனாக உருவாக்கணும். வயசான அப்பாவை, கடைசி வரை நம் பொறுப்பில் நல்லபடியா கவனிச்சுக்கணும்ன்னு, அவர் அடிக்கடி சொல்வாருண்ணா. அதை இனி, அவர் ஸ்தானத்தில் இருந்து நான் நிறைவேத்த முடிவு பண்ணிட்டேன்.
“”நீங்க தங்கச்சிக்கு ஏதும் செய்யணும்ன்னு நினைச்சா, என் படிப்புக்கு தகுந்த ஒரு வேலையை எனக்குத் தேடிக் கொடுங்க. இந்தக் குடும்பப் பொறுப்பை நான் ஏத்துக்கிட்டு, எந்தக் குறையுமில்லாமல், என் மாமனாரையும், மகனையும் பார்த்துப்பேன். வயசு காலத்தில், எனக்கு பாதுகாப்பாக, துணையாக என் மாமனார் இருப்பாரு. அவருக்குப் பின், என் வயசான காலத்தில், என் மகன் எனக்குத் துணையாக இருப்பான். நாங்க ஒருத்தருக்கொருத்தர் துணையாக வாழ்வோம். பிறந்த வீட்டு ஆதரவு, எனக்கு என்னைக்கும் இருக்குங்கிற தைரியத்தோடு, நான், என் வாழ்க்கையை தொடருவேன். தயவு செய்து என்னை புரிஞ்சுக்குங்க அண்ணா.”
கண்ணீர் மல்க, அதே நேரம், உறுதியுடன் பேசும் தங்கையை, பாசத்துடன் பார்த்தான் திவாகர். மருமகள் பேசுவதை, வெளியில் நின்று கேட்ட மோகன்ராம், மனம் நெகிழ்ந்து கண்ணீர் வடித்தார்.

- லாவண்யா பாலாஜி (ஏப்ரல் 2012) 

தொடர்புடைய சிறுகதைகள்
ஒப்பீடு
திவாகர் படித்து முடித்து, புத்தகங்களை எடுத்து பையில் வைத்தான். ""என்ன திவாகர் படிச்சாச்சா... சாப்பிட வர்றியா?'' என்று, கேட்டபடி அங்கு வந்தாள் திலகா. ""இப்ப என்ன மணியாச்சு... அதுக்குள்ள புத்தகத்தை மூட்டைக் கட்டி வச்சுட்டானா... இன்னும் கொஞ்ச நேரம் படிச்சா குறைஞ்சா போயிடும்?'' அப்பா சரவணன் ...
மேலும் கதையை படிக்க...
ஒப்பீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)