தீர்ப்பு

 

‘இன்னும் எவ்வளவு நேரம்?’

- அந்தக் கேள்வி மட்டுமே திரும்பத் திரும்ப மனதில் எழுந்தது. வேறு எந்த யோசனையிலும் மூளை லயிக்கவில்லை. பித்துப்பிடித்ததுபோல ஒரே கேள்வியின் விடைக்காகக் காத்திருந்தது. அங்கே அந்தச் சிவப்புக் கட்டட வாசலில் நிற்கும் ஆட்களில் ஒருவன் வந்து சொன்னால் போதும்… ‘ஆய்த்து. முகிதோய்த்தூ. ஹோகி.’ (ஆச்சு. முடிஞ்சுபோச்சு. போங்க.) ஜெயம்மா முதுகைச் சொறிந்துகொண்டாள். போர்த்தியிருந்ததைத் துளைத்துக்கொண்டு வெயில் முதுகில் சுட்டது. நேரே பார்க்க முடியாமல் கண்கள் கூசின.

ஜெயம்மா கண்களை மூடிக்கொண்டாள். களைப்பில் தூக்கம் வந்தது. விடியற்காலை நான்கு மணிக்கு ஊரைவிட்டுக் கிளம்பியது. காபி, தேநீர் குடித்து வழக்கம் இல்லை. பக்கத்து வீட்டு மாதம்மா காலை ஐந்து மணிக்கு மேல்தான் பால் கறந்து கொடுப்பாள்.

”பால் காய்ச்சிக் குடிக்க எல்லாம் நேரம் இருக்காது ஜெயம்மா. கையிலே ரெண்டு ராகி முத்தே எடுத்துக்கோ. பசிக்கும்போது சாப்பிடலாம்” என்றான் திம்மப்பா.

மதியச் சாப்பாட்டை முடித்துக்கொண்டே வந்திருக்கலாம் என நினைத்தாள். ஆனால், ஊரில் இருப்பு கொள்ளவில்லை. அதுதான் விஷயம். இன்றைக்குத் தீர்ப்பு வரப்போகிறது எனக் கேள்விப்பட்ட உடனே, நூறாயிரம் நினைவுகளைத் தட்டி எழுப்பிற்று. கருக்கலிலேயே கிளம்பிவிட்டனர், என்னவோ, விடிந்ததும் கோர்ட்டு ஆரம்பித்துவிடும் என நினைத்தவர்கள்போல… அல்லது தீர்ப்பு வழங்கப்படும்போது அது செவியில் விழாமல்போகுமோ எனப் பயந்தவர்கள்போல.

அப்படித்தான் அவர்கள் அந்தக் கட்டடத்தின் வாயிலில், யாரும் உள்ளே நுழைவதற்கு முன்பே வந்து காத்திருந்தார்கள். முதலில் சில போலீஸ் தலைப்பாகைகள்தான் வந்தன. அவர்களது விறைத்த நடைக்கு ஏற்றாற்போல் இருந்த காக்கி சராய்களே கலக்கத்தை ஏற்படுத்தின. போலீஸைப் பார்ப்பதே அபசகுனம் என ஜெயம்மா நினைப்பாள். இங்கேயும் போலீஸ் நிக்குமா? அவள் குழப்பத்துடன் திம்மப்பாவைப் பார்த்தாள். அவன் ஆண்பிள்ளை; விவரம் தெரிந்தவன்.

”ஆமாமா. வருவாங்க. கொலைகாரங்க, திருடங்க இவங்களை எல்லாம் கூட்டிவர்ற இடத்துல என்ன வேணும்னாலும் நடக்கும்ல?” என்றான்.

இவர்கள், அவர்களில் எவரும் இல்லை என்றாலும், இவர்களைக் கண்டதும் போலீஸ் கடுகடுப்புடன், ‘யாரூ, ஏனு பேக்கு?’ (என்ன வேணும்?) என அதட்டியது.

திம்மப்பா வந்த விஷயத்தைச் சொன்னான். அவர்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டார்கள்.

”உங்க வக்கீல் உங்களுக்குச் சொல்வார்… போங்க.”

திம்மப்பா தயங்கியபடி சொன்னான்… ”அநியாயம் நடந்துச்சுனு யாரோ நடத்தறாங்க சாமி. நாங்க வக்கீலைக்கூடப் பார்த்தது இல்லை.”

அவர்கள் பலமாகத் தலையை அசைத்து, அவர்களைக் கூர்ந்து பார்த்தார்கள்… ‘ஐயோ பாவம்’ என்பதுபோல. பிறகு அவர்களில் ஒரு மூத்தவர் சொன்னார், ”அந்தக் கேஸ் இப்பவே வராது. நீங்க அப்பால போய்க் குந்துங்க. மதியத்துக்கு மேலதான் வரும்” என்றார்.

அவளுக்குப் பெருத்த ஏமாற்றமாக இருந்தது. திம்மப்பா பெருமூச்சுவிட்டான். ”தேவரே கதி” என முணுமுணுத்தபடி முன்னால் நகர்ந்தான். ”அந்த போலீஸ் தெரிஞ்சு சொல்லுதோ… தெரியாமச் சொல்லுதோ…” என அனத்திக்கொண்டு அவள் பின்தொடர்ந்தாள்.

வளாகத்தில் இருந்த ஒரு மரத்தின் அடியில் அவர்கள் அமர்ந்தனர். பசிக்க ஆரம்பித்தபோது கட்டி வந்திருந்த கேழ்வரகு உருண்டைகளைச் சாப்பிட்டு, குப்பியில் இருந்த நீரைக் குடித்தனர். திமுதிமுவென ஜனங்கள் வளாகத்தை நிரப்ப ஆரம்பித்தனர். வெயில் ஏறிக்கொண்டே போயிற்று. அவளுடைய கலக்கம் அதிகரித்தது. ‘போய்ப் பாரு… போய்ப் பாரு’ என்ற அவளது நச்சரிப்புக்குப் பணிந்து, திம்மப்பா யாரிடமோ பேசிவிட்டு வந்தான். பிறகு தலையசைத்துக்கொண்டு வந்தான்.

”இப்ப இல்லையாம். மதியம்தானாம்.”

”தேவரே கதி” என்றாள் ஜெயம்மா.

அதை ஆமோதிப்பவன்போல் திம்மப்பா தலையசைத்தான். ஆனால், ‘அந்தக் கடவுளின் எண்ணம் என்ன?’ என அவளுக்குப் புரியவில்லை. கடவுளுக்கு அவர்களது ஞாபகம் இருக்குமோ… என்னவோ? அவளோ, திம்மப்பாவோ பூஜை – புனஸ்காரம் என எதுவும் செய்யும் வழக்கம் இல்லை. ஊரில் ஒரு சின்ன சிவன் கோயில் உண்டு. அதில் ஒரு பூசாரிதான் தினமும் விளக்கு ஏற்றுவதற்காக வருவார். வரும்படி இல்லாத சாமி. பக்கத்தில் ஒரு கன்னிகாபரமேஸ்வரி அம்மன் கோயில் உண்டு. அங்கு வருஷத்துக்கு ஒரு பூஜை போடுவார்கள். ஆரம்பத்தில் அவளும் மற்ற பெண்களுடன் செல்வாள். இப்போது எத்தனையோ வருஷங்கள் ஆயிற்று, அவள் அங்கு போய்.

‘ஏன் ஜெயம்மா, பூஜைக்கு வரலையா?’ என பக்கத்து வீட்டு மாதம்மா கேட்கும்போது எல்லாம் அவள் ஏதாவது சாக்குபோக்கு சொல்லிச் சமாளிப்பாள். பொம்பளை சாமிக்கு சக்தி இல்லையோ என்னவோ என்ற நினைப்பு ஜெயம்மா உள்ளே புகுந்திருந்தது. இருந்தா வந்து காப்பாற்றி இருக்காதா? சிலையின் உருவம் ஞாபகத்துக்கு வரும்போது எல்லாம் துக்கம் வரும். அபயஹஸ்தம் காட்டும் சிலை… ‘நான் இருக்கேன்… ஏன் கவலைப்படறே?’ என்பதுபோல.

பூஜை நாட்களில் நூற்றுக்கணக்கான பெண்கள் நின்றிருப்பார்கள். அவர்களில் எத்தனை பேரை கன்னிகாபரமேஸ்வரிக்கு நினைவு இருக்கும்? யாருக்கு அபயம் அளிப்பாள்? ஜெயம்மா ஓரத்தில் நின்றது அவள் கண்களுக்குத் தெரியாமல்போயிருக்கும். சிவன் கோயிலுக்குப் போயிருக்கலாம். அங்கு கூட்டமே இல்லை. அவள் திம்மப்பாவிடம் இதைச் சொன்னபோது, அவன் அவளை ஒரு வெற்றுப் பார்வை பார்த்தான்.

”இனிமே எந்தச் சாமியைக் கும்பிட்டு என்ன ஆகப்போகுது?”

”உண்மைதான்” என அவள் ஒப்புக்கொண்டாள்.

ஆனால், இப்போது அடிக்கடி ‘தேவரே கதி’ என வாயில் வருகிறது. ஒரே ஓர் எதிர்பார்ப்புதான் இப்போது. மனதில் மூர்க்கமாகத் தேங்கி நிற்பது… ‘நியாயம் கிடைக்கணும்.’

”நாங்க கேஸை எடுத்து நடத்துறோம். இதைச் சும்மா விட்ரக் கூடாது. நியாயம் கிடைக்கும்”

- யாரோ முன்பின் தெரியாதவர்கள் வந்து தேற்றினார்கள்.

அப்போது துக்கம்தான் பெரிதாக இருந்தது. ‘ஐயோ… ஐயோ..!’ எனத் தலையில் அடித்துக்கொண்டு அழத்தான் தெரிந்தது. சாமி மேல், அந்தக் கன்னிகா பரமேஸ்வரி மேல் கோபம் வந்தது. அவள்தான் ஏமாற்றிவிட்டாள் என. ‘ஏமாற்றின உன் சந்நிதிக்கு இனி வர மாட்டேன்’ என சபதம் மட்டும்தான் செய்ய முடிந்தது. அந்த நாட்களை நினைத்தால் உடம்பெல்லாம் பீதியில் நடுங்குகிறது.

வெளியில் வாசலில் நடப்பதற்கே பயமாக இருந்தது. அக்கம்பக்கத்தவர்கள்கூட வெளிப்படையாகப் பேசப் பயந்தனர். நடந்துபோன அநியாயத்துக்குச் சாட்சி சொல்ல வைக்க, அந்த முன்பின் தெரியாதவர்கள் அலைந்தனர்.

திம்மப்பா சற்று தள்ளி, அங்கவஸ்திரத்தை விரித்துப் படுத்துவிட்டான். அவள், அவனையே சற்று நேரம் பார்த்தாள். அவன் முகத்தில் சித்திரக்கோடுகளாகத் தெரிந்த சுருக்கங்கள், திடீரென முளைத்தவை எனத் தோன்றிற்று. அவள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே கிளை விரிவதுபோல விரிந்தன. கண்களில் இருந்து நீர் வழிந்தால் பல நதிகளைப்போல அது ஓடும். திம்மப்பா அழுது வெகு நாட்கள் ஆயிற்று.

கோடிவீட்டு ராமப்பா வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி இருந்தது. அதில் செய்தி கேட்டு, ‘நாளைக்குத் தீர்ப்பு வரப் போவுதாமே?’ என அவர் சொல்லிவிட்டுப் போன பிறகு, முகத்தை மூடிக்கொண்டு திம்மப்பா அழுதான். அவன் அழுவதைப் பார்த்தபோது ஜெயாம்மாவுக்கும் அழுகை வந்தது. கொஞ்ச நேரத்துக்குப் பின் அதுவும் அடங்கிப்போனது வழக்கம்போல. திம்மப்பா வயலுக்குக் கிளம்பினான். அவள், சமையல் வேலைபார்க்க அடுப்படிக்குச் சென்றாள்.

ஜெயம்மா முழங்காலிட்டு அதில் முகத்தை நுழைத்துக்கொண்டாள். கண்கள் இருட்டிக்கொண்டு வந்தன. உண்மையில் எதற்காக இங்கு வந்து காத்திருக்கிறோம் எனக்கூட மறந்துபோயிற்று. படுத்திருந்த திம்மப்பாவை எழுப்பி, ‘போயிரலாம் வீட்டுக்கு’ எனச் சொல்லவேண்டும்போல் இருந்தது.

கட்டிய முழங்காலுக்குள் கும்மென இருண்டு இருந்தது. அவளுக்கு இருளைக் கண்டு பயம் இல்லை. பார்வதிக்குத்தான் பயம். அசட்டுப் பெண். எல்லாவற்றுக்கும் பயப்படுவாள். ஆனால், நிறையச் சிரிப்பாள்… விவஸ்தையே இல்லாமல். என்ன ஒரு சிரிப்பு! கன்னங்கள் குழியும். கன்னங்கள் குழிந்தால் அதிர்ஷ்டம் என்பார்கள். ஓர் இடத்தில் நிற்காமல் பாவாடையை ஒரு கையால் பிடித்துக்கொண்டு ஊர் முழுக்கச் சுற்றுவாள். இப்போதும் அந்த இருளுக்குள் கலகலவென தட்டாமாலையாகச் சுழன்றாள்.

”அடீ, தலை சுத்தி விழப்போறே.”

”மாட்டேன்… மாட்டேன்… பயப்படாதே.”

”இருட்டுடீ. பயப்படுவியே.’

”எனக்கு இப்ப பயமே இல்லே.”

”அம்மா… அம்மா… இங்க பாரு, நீதான் பயப்படுறே… நீதான்!”

- ஜெயம்மா திடுக்கிட்டுக் கண்கள் விழித்தாள். நெற்றியில் இருந்து வியர்வை ஆறாக வழிந்திருந்தது. இருண்ட மடிக்குள் துழாவினாள். பார்வதியைத் தேடுபவள்போல. மெள்ளத் தலை நிமிர்ந்தபோது, உச்சிவெயில் நகர்ந்திருந்தது. கூட்டம் சற்றுக் குறைந்திருந்தது. திம்மப்பாவைக் காணவில்லை. அவளுக்குள் கலவரம் ஏற்பட்டது. ‘எங்கே போய்விட்டான்?’ தண்ணீர்க் குப்பியில் மிச்சம் இருந்த நீரால் முகத்தைக் கழுவி தலைப்பால் துடைத்துக்கொண்டு எழுந்தாள். நீதிமன்ற வளாகம் கிட்டத்தட்ட காலி. அவளுக்குக் கால்கள் பலவீனமாகிப்போயிருந்தன.

‘எத்தனை அசட்டுத்தனம் இது. இன்றைய பொழுதுக்காக இரவு முழுவதும் தூங்காமல் விழித்து, காலை விடியும் முன் கிளம்பி வந்த வேகம் எப்படி மறந்துபோனது? எப்படி அப்படித் தூங்கிப்போனோம்? திம்மப்பா தன்னை எழுப்பாமல் எங்கே போனான்?’ எனப் புரியாமல் அவள் குழம்பினாள்.

யாரைப் போய்க் கேட்பது? முதலில் பார்த்த போலீஸ்காரர்களைக்கூடக் காணவில்லை. பித்துப்பிடித்தவள்போல அவள் வளாகத்தில் திசை புரியாமல் நடந்தவள் சற்று நின்றாள். பள்ளியில் இருந்து திரும்பும் பெண்கள். பச்சையும் வெள்ளையுமான உடுப்பில் கலகலவெனச் சிரித்தபடி வளாகத்தில் அவள் செல்லும் பாதையில் வந்தார்கள். அவளுக்கு இனம்புரியாத மகிழ்ச்சி ஏற்பட்டது. எத்தனை சிரிப்பு? ஒரு பெண் அவளைத் திரும்பித் திரும்பிப் பார்த்தாள். அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது. பார்வதியா?

தீர்ப்பு

அந்தப் பெண் சிரித்தாள். பார்வதிதான். கன்னங்களில் குழிகள் விழுகின்றன. ‘பார்வதி’ என ஜெயம்மா அழைக்க முயன்றபோது, அது தொண்டைக்குள் சிக்கியது. கண்களில் நீர் தளும்பியது. ‘எங்களை விட்டுட்டு எங்க போனே?’ மறுபடியும் அவள் முயற்சி செய்வதற்குள், அந்தப் பெண்கள் வளாகத்தைத் தாண்டிவிட்டனர்.

‘மறுபடியும் ஓடப்பாக்கிறியா… வர்றேன் இரு!’ என, ஜெயம்மா அந்தப் பெண்களைப் பின்தொடர்ந்தாள். என்ன வேகமாக நடக்கிறார்கள். அவள் வியர்க்க விறுவிறுக்கத் தொடர்ந்தாள். திடீரென மற்ற பெண்கள் கண்களில் படவில்லை. அந்தப் பெண் மட்டும், பார்வதிதானே… அது! கன்னங்குழிய சிரித்துக்கொண்டு, அவளைச் சீண்டுவதுபோல திரும்பித் திரும்பிப் பார்த்தபடி வேகமாக நடந்துகொண்டிருந்தாள். ஜெயம்மாவுக்கு அடிவயிற்றில் பீதி பற்றியது.

”பார்வதி… வேண்டாம். தனியா நடக்காதே, ஆபத்து. இரு, அம்மா வர்றேன் துணைக்கு!”

பார்வதி மீண்டும் சிரித்தாள் ‘வா… வா…’ என செய்கை காட்டியபடி. ‘எங்கே அழைச்சுட்டுப் போறா’ எனப் புரியாமல், ஆனால் அது கிளப்பிய ஆவலில், பார்வதியைக் கண்டுபிடித்த மகிழ்ச்சியில் ஜெயம்மா நடந்தாள். முகத்தில் வழிந்த வியர்வையைத் தலைப்பால் துடைத்துக்கொண்டு நிமிர்ந்தபோது அவளைக் காணவில்லை. ஜெயம்மா அலங்கமலங்க விழித்தபடி நின்றாள். பிரதான சாலை ஒன்றில் தான் நிற்பது நிஜமா அல்லது கனவா எனப் புரியவில்லை. பார்வதியைக் கண்டதும் கனவா? பார்வதிதான் அது. சந்தேகமே இல்லை.

எதிரில் விடாமல் அடித்த ஹார்ன் சத்தத்தைக் கேட்டு, அவள் அரண்டு நடைபாதையில் ஓரமாக நின்றாள். ஒரு வண்டி படுவேகமாக வந்தது. ‘என்ன இவன்… பிசாசு மாதிரி ஓட்டுறான்?’ எனப் பக்கத்தில் நின்ற ஓர் ஆள் சொன்னான். ஜெயம்மா நிமிர்ந்தபோது அவளுக்கு வெலவெலத்துப்போயிற்று. அந்த வண்டியை ஓட்டியது… ஐய்யய்யோ பார்வதி மாதிரி இருக்கு. பார்வதியேதான். அவளுக்கு நெஞ்சு படபடவென அடித்துக்கொண்டது. ‘நில்லு… நில்லு…’ அவள் விழிகள் பிதுங்கி நிற்கும்போது வண்டி தாறுமாறாக ஓடி சாலையைக் குறுக்காக வெட்டி, அந்தப் பிரமாண்டமான மரத்தைத் தாக்கி….

வண்டி அப்பளமாக நொறுங்கி, உள்ளிருந்தவர்கள் ஓலம்கூடக் கேட்கவில்லை. தெருவில் இருந்தவர்களின் ஓலம்தான் கேட்டது. போலீஸ் மளமளவென ஓடிவந்தது.

”என் பொண்ணு… என் பொண்ணு…” என ஜெயம்மா மரத்தடிக்கு நகர்ந்தாள். கூட்டத்தை போலீஸ் விரட்டியது.

”ஹோகி… ஹோகி…” (போங்க, போங்க)

”என் பொண்ணுப்பா… அந்த வண்டியில” என்றாள் ஜெயம்மா கண்ணீர் வெடிக்க.

”பொண்ணா? மூணு ஆம்பிள்ளைங்கதான் இதிலே… போங்க.”

”இருந்தாளே, நான்கூடப் பார்த்தேனே…”

”அந்த அம்மாவுக்கு மூளை சரியில்லைபோல… பாவம்.”

”ஹோகி… ஹோகி…”

எல்லோரையும் விரட்டினர்.

அவள் பெரும் குழப்பத்துடன் நின்றாள். உண்மையிலேயே மூளை செயல் இழந்துபோனது போல் இருந்தது. அவள் மெள்ள நடந்து கோர்ட்டின் வாயிலை அடைந்தாள்.

”யாரும்மா அது? இங்க தனியா நிக்கிறீங்க, கூட யாரும் வரலையா?”

குரல் கேட்டு அவள் திரும்பினாள். ஒரு அலுவலர்போல் தெரிந்தது. அவளுக்குச் சட்டென சுயநினைவு வந்தது. கண்கள் நீர் நிறைந்து இருந்தன.

”என் புருஷன் எங்கேனு தெரியலிய்யா.”

”எதுக்கு வந்தீங்க இங்க?”

”இன்னிக்கு ஒரு கொலைத் தீர்ப்பு வரும்னு சொன்னாங்க.”

அவர் அவளுக்குப் பதில் சொல்வதற்கு முன் திம்மப்பாவைப் பார்த்துவிட்டாள். அவன் அருகிலேயே ஒரு படிக்கட்டில் உட்கார்ந்திருந்தான்.

”அதோ… அங்க இருக்காங்க” என்றபடி அவள் விரைந்தாள்.

திம்மப்பா அவளை ஒரு வெற்றுப் பார்வை பார்த்து தலைகுனிந்துகொண்டான்.

”என்ன ஆச்சு?” என்றாள் அவள் பீதியுடன்.

அவன் உதட்டைப் பிதுக்கித் தலையை அசைத்தான்.

”அப்படீன்னா?”

அவன் தலையில் மடேர் மடேர் என அடித்துக்கொண்டான். அவன் உதடுகள் துடிப்பதையும், கண்களில் நீர் ததும்புவதையும் பார்க்க, அவளுக்குப் பயமாக இருந்தது.

”விட்டுட்டாங்க! போதுமான சாட்சி இல்லையாம். நிறைய வருஷங்கள் ஆகிருச்சாம்.”

அவள் கண்கள் விரியப் பார்த்தாள். மனதில் தோன்றிய கெட்டவார்த்தைகளை எல்லாம் கொட்ட வேண்டும்போல் இருந்தது. ஆனால், ஒரு வார்த்தை வெளியில் வரவில்லை. மார்பைப் பிளந்துகொண்டு ஒரு கேவல் எழுந்தது.

அந்த அலுவலர் அங்கேயே நின்றிருந்தார்.

”இந்தாம்மா, இங்க உக்காந்து ஒப்பாரி வைக்கக் கூடாது. மேல் கோர்ட்டுல அப்பீல் செய்யலாம்… போங்க.”

தீர்ப்பு2

ஜெயம்மா விழித்தாள். அந்த ஆள் என்ன சொன்னார் என்றே புரியவில்லை. ‘பத்து வருஷமாக் காத்திருந்தோம் ஐயா’ எனச் சொல்ல நினைத்து, ”பார்வதி செத்துட்டா… கண்ணால பார்த்தேன்” என்றாள்.

அந்த ஆள் ஒரு விநாடி நின்று மெல்லிய குரலில், ”வீட்டுக்குப் போங்கம்மா” என்றார்.

அவள் திம்மப்பாவின் தோளைத் தொட்டு, ”வா போவோம்” என்றாள்.

அந்த ஆள் நகர்ந்த பிறகு, ”ஆமா, பார்வதி இன்னிக்கு மறுபடியும் செத்துப்போனா” என்றான் திம்மப்பா புதிய கோபத்துடன்.

”அந்தச் சண்டாளன் திரும்ப வந்துருவான் ஜெயம்மா. ராஜா மாதிரி நம்ம தெருவிலேயே நடப்பான்.”

நினைவுகளின் தாக்குதலில் அவள் துவண்டுபோனாள். செமத்தியாக அடிபட்டதுபோல உடம்பு பலவீனப்பட்டது. தூக்கத்தில் நடப்பவர்கள்போல அவர்கள் பேருந்து நிலையத்தை அடைந்தனர். பஸ் பிடித்து வீடு போய்ச் சேரும் வரை, எதுவுமே பேச முடியாமல் தத்தம் யோசனையில் ஆழ்ந்தனர். ஜெயம்மாவுக்கு அசதியில் தூக்கம் வந்தது.

நிலம் அதிர வந்தான் அந்தச் சண்டாளன் ராமோஜி. அவள் பார்வையில் படும்படி தெருவில் நடந்தான். ராஜநடை. கண்கள் நிறைய விஷமம். அதில் அழுத்தமான கண் மை வேறு. அவனது கொள்ளிக்கண் படுவதற்கு முன் உள்ளே போகணும்.

”ஏய்… பார்வதி. இங்க வா விளையாடினது போதும். உள்ள வாடி…”

”அட அட… உன் பெண்ணா? நீயே நல்லாத்தான் இருக்கே. பொண்ணை சொர்ணக்கிளி மாதிரில பெத்திருக்கே? அந்த அசட்டு திம்மப்பாவுக்கா?”

வயிறு குபீரெனப் பற்றியது.

”அடத் தூ!”

எங்கு பார்த்தாலும் அந்தச் சண்டாளன். வெற்றிலைக் குதப்பும் வாயும் மையிட்ட கண்ணுமாக. கொள்ளிக்கண்ணு, கொள்ளிக்கண்ணு. பார்வதி, போகாதே கண்ணு… எங்க நீ? கனாவில் சுலபமாகக் காற்றைப்போல ஓட முடிகிறது. பார்வதியைத் தேடிக்கொண்டு புதரில், சகதியில், மண்ணில், மேட்டில்… அதோ தெரிகிறது. பார்வதியின் மஞ்சள் பாவாடை… தொடைக்கு மேல் ஏறி, விறைத்த உடம்பில் ரத்தக் கறை உலர்ந்து.

ஜெயம்மா திடுக்கிட்டு விழித்துக்கொண்டாள். கண்களில் இருந்து நீர் வழிந்தது. திம்மப்பா அசந்து தூங்கிக்கொண்டிருந்தான்.

ஜெயம்மா தனக்குள் முனகிக்கொண்டாள்.எவ்வளவு முட்டிக்கிட்டேன். இந்த ஆளு கேக்கலை.

”இந்த ஊரே சரியில்லை. ஷிமோகாவுக்குப் போயிருவோம். கூலி வேலை செஞ்சு பிழைக்கலாம். பார்வதியை இஸ்கூலுக்கு அனுப்பலாம்.”

”நல்ல கூத்து, இங்க நிலமும் வீடும் இருக்கு. எவன் போவான் பொம்பளை பேச்சைக் கேட்டு?”

உடம்பு பதைக்கிறது; தேகம் நடுங்குகிறது, ஏதோ கெட்டது நடக்கப்போகிறது என. தாயே கன்னிகாபரமேஸ்வரி நீதான் காப்பாத்தணும். பரமேஸ்வரி கல்லாகவே இருந்தாள். அந்தப் பாதகத்தை யார் செய்தது என ஊருக்கே தெரியும். சண்டாளன் ராமோஜி, பார்வதியை அழைத்துக்கொண்டு போனதைப் பார்த்தவன், பிறகு போலீஸைக் கண்டதும் சொன்னதில் யாரோ வந்து வழக்கு போட்டார்கள். சாட்சி சொன்னவர்கள் எல்லாம் முன்னும்பின்னுமாகப் பேசி 10 வருடங்கள் இழுத்தார்கள்.

10 வருடங்கள். பைத்தியக்காரத்தனமான காத்திருப்பு.

வீட்டுக் கதவைத் திறந்துகொண்டே திம்மப்பா அலுப்புடன் சொன்னான்… ”நம்மகிட்ட பணம் காசு இல்லை; நமக்கு சாமியும் இல்லை பூதமும் இல்லே; நியாயம் கிடைக்கும்னு எப்படி எதிர்பார்ப்போம். ஜெயம்மா நீயும் நானும் முட்டாள்கள்.”

முற்றத்துக் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து திம்மப்பா முகத்தை மூடிக்கொண்டு விசும்பினான். ‘இன்னைக்கு பார்வதியைப் பார்த்தேன் எனச் சொல்லலாமா?’ என ஜெயம்மா நினைத்தாள். அது அவனது துக்கத்தை அதிகப்படுத்தும். பேசாமல் சமையல் வேலையைக் கவனிக்கத் திரும்பினாள்… ‘திம்மப்பாவைச் சமாதானப்படுத்துவது தன்னால் முடியாது’ என நினைத்தபடி.

வாசலில் கோடி வீட்டு ராமப்பாவின் குரல் கேட்டது.

”நாங்க தோத்துட்டோம் ராமப்பா” என்றான் திம்மப்பா துக்கம் தோய்ந்த குரலில்.

”தெரியும். செய்தி கேட்டேன்.”

”நாங்க சொன்னதெல்லாம் பொய்னு ஆயிருச்சு.”

ராமப்பா சற்று நேரம் அமர்ந்து சமாதானப் படுத்திவிட்டுச் சென்றான்.

இரவு சாப்பிட்டு முடித்ததும் ஜெயம்மா சொல்ல ஆரம்பித்தாள்.

”இன்னைக்குப் பார்வதியைப் பார்த்தேன். பெரிய பெண்ணா வளர்ந்திருக்கா…”

”ஜெயம்மா வேண்டாம்… பேசாம இரு” என்றான் கோபமாக.

”நிஜம்மா பார்த்தேன்…” கன்னங்கள் குழிய சிரித்தபடி முன்னால் நகர்ந்த பார்வதியை நினைத்தபடி அவள் வார்த்தைகளைக் கோக்க முனையும்போது, ராமப்பா அரக்கப்பரக்க ஓடி வந்தான்.

‘திம்மப்பா, விஷயம் தெரியுமா? ராமோஜி கிளம்பின வண்டிக்கு விபத்து ஆயிடுச்சாம். மரத்திலே மோதி… ஆள் செத்துட்டான்!”

- பெப்ரவரி 2015 

தொடர்புடைய சிறுகதைகள்
கொல்லை முற்றத்துள் இறங்கிய படிக்கட்டில் அமர்ந்தபடி பார்த்தபோது அடர்ந்த வேப்பமரத்தின், மாமரத்தின் இலைகளின் ஊடே வானம் மிக மிக சமீபத்தில் தெரிந்தது. இளநீலத் துணி ஒன்று மரத்தைப் போர்த்தியிருந்த மாதிரி. சற்று எழுந்து கையை நீட்டினால் உள்ளங்கைக்குள் வசப்பட்டு விடும் போல. ...
மேலும் கதையை படிக்க...
சற்றே பெரிய சிறுகதை எப்படி நழுவவிட்டோம் என்று அவளுக்குத் திகைப்பாக இருந்தது. எப்படியோ தன்னை மறந்து அசந்த தருணத்தில் அது நிகழ்ந்திருக்கக்கூடும் என்று சொல்வதிற்கில்லை. நிச்சயமாக மூளை வெகு சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டு இருந்தது. ஒரு பதைப்பு இருந்ததென்னவோ உண்மை. ஆனாலும், சங்கிலிப் பின்னலாக ...
மேலும் கதையை படிக்க...
கதை ஆசிரியர்: வாஸந்தி. அந்தக்கரிய உருவங்கள் அங்குதான் நிழலாடிக்கொண்டிருந்தன. அது அவனுக்கு தெரிந்த விஷயந்தான். அவற்றை அவனால் துரத்த முடியாது. அவை அவனது வாழ்வின் அங்கமாகிப்போனதிலிருந்து அவற்றைத் துரத்துவது என்பது ஒரு அசாத்தியமான விஷயம் என்று அவன் புரிந்துக்கொண்டிருந்தான்.அவற்றிலிருந்து விடுபடுவது எப்படி என்கிற ...
மேலும் கதையை படிக்க...
கதை ஆசிரியர்: வாஸந்தி. நைந்துபோன செருப்பின் ஊடாக பாதையில் இருந்த சிறு கற்கள் உள்ளங்காலில் குத்தி வலியெடுத்தது. இன்னும் கொஞ்ச தூரம்தான் என்றான் ராமப்பா தனக்குள் சொல்லிக்கொள்வதுபோல. வெயில் பொசுக்கிற்று. சாதாரணமாக ராமநவமிக்குப் பிறகுதான் சூடு ஆரம்பிக்கும். யுகாதிகூட இன்னும் முடியவில்லை. அதற்குள் ...
மேலும் கதையை படிக்க...
கங்காவும் சில ரோஜா பதியன்களும்
மொட்டை மாடி கைப்பிடிச் சுவரில் அந்த போஸ்டர் இருந்தது, சமீபத்தில் திரைக்கு வந்த 'கோச்சடையான்’ போஸ்டர். ரஜினி, அதில் இளைஞராகத் தெரிந்தார். கங்காவுக்கு ஆச்சர்யமாக இருந்தது. 'எப்படி வயசு குறைஞ்சுக்கிட்டு வருது?!’ கங்காவுக்கு, ரஜினிகாந்தைக் கண்டால் கொள்ளை ஆசை. அந்தத் திமிர் பிடித்த ...
மேலும் கதையை படிக்க...
தேடல்
யக்ஷன் சொன்ன சேதி!
விடுதலை
நேத்த்திக்கடன்
கங்காவும் சில ரோஜா பதியன்களும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)