Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

திறம்

 

கொஞ்சம் சும்மா இருக்கிறாயா!

முகத்தைத் தூக்கிவைத்துக்கொண்டுவிட்டாள் மனைவி.

ஆயிற்று அடுத்த அரைமணி நேரத்திற்கு, எல்லாப் பொருட்களுக்கும் கால்முளைத்து தரையை மேசையை அடுக்களை மேடையை என்று செய்யப்போகிற துவம்சத்திற்குத் தம்மை தயார் படுத்திக்கொண்டார் ராவ்.

நாளிதழில் கார் விளம்பரம் காண நேரும்போதெல்லாம் இப்படி ஆகிவிடுகிறது. அநேகமாக எல்லா நாட்களிலும் ஏதாவது ஒரு காருக்கு விளம்பரம் வந்துவிடுகிறது. பத்திரிகைகளில் இருக்கும் அளவிற்கு தாராளமான இடம் சாலைகளில் இல்லை என்பது ஏன்தான் கார் தயாரிக்கும் நிறுவனங்களுக்குத் தெரிவதில்லையோ. பார்க்கப்போனால் யாருமே எதையுமே தெரியாமல் செய்வதில்லை. தெரியாமல் செய்துவிட்டேன் என்பதுகூட தப்பிக்க வழியில்லை என்று தெரியவருகையில், உதட்டளவில் சொல்லும் சால்ஜாப்பாகிப் பல தலைமுறைகள் தாண்டிவிட்டன.

மாநகரத்து நெரிசலில் மோட்டார் பைக்கில் காலைக்கூட தாராளமாய் அகட்ட முடிவதில்லை. இதில் கார் ஒன்றுதான் குறைச்சல். இனிமேல் காரோட்டக் கற்றுக்கொண்டு பத்துதலை ராவணனாய் சாலையின் நீள அகலத்தை ஆக்கிரமித்துக்கொண்டு எவரையும் இடிக்காமல் செல்கிற வித்தை எவ்வளவு சிரமமானது என்பதையெல்லாம் எப்படி கார்மோக மனைவிக்கு சொல்லிப் புரியவைப்பது?

அவள் மட்டும் என்றில்லை, அநேகமாகக் காரில் பயணிக்க ஆசைப்படாதவர்களே கிடையாது. கார்மீதான விருப்பத்தின் அடித்தளம், பயண வசதியைக் காட்டிலும் கவர்ச்சிதான் என்று அவருக்குத் தோன்றியது. வசதியாக இருப்பதாய் வேறு எப்படித்தான் காட்டிக்கொள்வது? அந்தி மயங்கினால் குடியிருப்பு முழுக்க ஒட்டுமொத்த பறவைக்குலமும் தரைக்கு வந்துவிட்டதுபோல ஒரே கார்க்கூட்டம். காரைக் கடனில் வாங்கி அதைக் கட்டி அடைப்பதற்குள் வண்டி பழையதாகிவிடும். பழையதாகிப்போன் கார் மாதாந்தரப் பிடித்தத்தைப்பார்த்துப் பல்லிளிக்கும்.கார் வாங்குவதால் உண்டாகும் பாதகங்கள் அனைத்தையும் எடுத்துச் சொல்லியாயிற்று. வருமானவரியைக் குறைக்க மாதாமாதம் சேமித்து என்ன பிரயோஜனம் போகும்போது அக்கவுண்ட் ஸ்லிப்போடவா போகப்போகிறீர்கள் என்று அலட்சியப்பார்வையை வீசிவிட்டு நொடித்துவிட்டுப் போய்விடுகிறாள்.

இந்த வருடத்திற்கான இன்கம்டாக்ஸ் ரிடர்ன் கொடுக்கக் கெடு நெருங்கிக்கொண்டிருப்பது எண்ண ஓட்டத்தில் குறுக்கிட்டது. அலைபேசியை எடுத்து ராஜசேகருக்கு அடித்தார். நாலைந்து முறைக்குமேல் மணி அடித்துக்கொண்டே இருக்கவே இணைப்பைத் துண்டித்தார். அவனுக்கு ஆயிரம் வேலை. கேட்கும் எவருக்கும் கைவேலையை விட்டுவிட்டு மெனக்கெடுபவன் என்பதால் அவனிடம் தயங்காமல் உதவி கேட்பவர்களும் ஏராளம். இன்கம்டாக்ஸ் என்றில்லை கணினியில் கைதேர்ந்தவன். எக்ஸலில் கில்லாடி. பக்குவமாய்க் கேட்பவர்களுக்குப் பரோபகாரி. அதிகாரமாய்க் கேட்டால் பதில் பேசாமல் காரியம் ஜவ்வாகும். அதிகம் பேசாதவன் அதற்காக சொந்த கருத்து இல்லாதவனென்றில்லை. எப்போதேனும் வெடுக்கென்பான் கொடுக்கு தெரியாமல். அப்போது வலிக்காது பதிந்த கண்கூடப் பார்வைக்குப் படாது. போகப்போக கடுத்து படுக்கையில் புரளவைத்துவிடும்.

சிலகாலம் முன்னால் உதவிஉயர்அதிகாரியாய் இருந்த பெண்மணியொருவர் அவனைத் தம் அறைக்கு அழைத்து சொந்த வேலையொன்றைக் கொடுத்தார். நேரம் சென்றும் ராஜசேகர் வராததால் பொறுமையிழந்து, ’ இன்னுமா முடிக்கவில்லை’ என்று கேட்டபடி அவன் இருக்கைக்கே வந்துவிட்டார். விருட்டென நாற்காலியை இழுத்துப்போட்டு அவன் அருகிலேயே உட்கார்ந்துகொண்டார்.

இவ்வளவு நேரம் எடுத்துக்கொள்வதென்றால் நானே முடித்திருப்பேனே. நீ எக்ஸலில் நிபுணன் என்றார்கள் என்றல்லவா உன்னிடம் கொடுத்தேன்.

சாரி மேடம் இதோ ஆயிற்று… தில்லிக்கு ஒரு அவசர ரிப்போர்ட் போகவேண்டி இருந்தது. அதனால்தான்… வேலையை முடித்து, தங்கள் அறைக்கே கொண்டுவந்து சேர்த்துவிடுகிறேன்.

பரவாயில்லை. எக்ஸைல் எனக்கும் தெரியும் சில கட்டளைகள் தெரிகிறபட்சத்தில் வேலையை விரைவாக முடித்துவிடலாம். பரவாயில்லை நான் இங்கேயே இருக்கிறேன் செய்.

அவன் பாட்டுக்கும் அவர் கொடுத்த வேலையை செய்துகொண்டிருக்கையில் பின்னிருக்கை வண்டியோட்டலாய் இப்படி செய் அப்படி செய் என குறுக்கிட்டுக்கொண்டே இருந்தார் அம்மணி.

அறையிலிருந்த மற்றவர்கள் மும்முரமாய்க் கோப்புகளைப் பார்த்தபடி குசும்பாய் முறுவலித்துக்கொண்டனர்.

இரண்டு மூன்று குறுக்கீடுகளுக்கு பேசாதிருந்தவன், தொடர்ந்த குறுக்கிடலில் அவரைப் பார்த்து அமைதியாகச் சொன்னான்.

மேடம் தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். செய்து முடித்ததும் திருத்தங்களைச் சொல்லுங்கள். உங்கள் விருப்பப்படியே மாற்றங்களையும் செய்து கொடுக்கிறேன்.

தேர்வெழுதி நேராக வேலையில் சேர்ந்திருந்த அவர், என்னதான் அதிகாரி என்றாலும் சின்னப்பெண்தானே, சுருங்கிய முகத்துடன் அமைதியானது.

அதுவரை உபயோகித்துக்கொண்டிருந்த மெளசை ஓரங்கட்டினான் ராஜசேகர். விசைப்பலகையை விட்டுக் கையை எடுக்கவே இல்லை. எக்ஸல் கட்டங்கள் நகர்ந்தும் தாவியும் ஒன்றோடொன்று தொடர்புகொண்டு பாண்டி விளையாடத்தொடங்கின. சுருங்கியிருந்த முகம் சுவாதீனத்திற்கு வந்து மெல்ல பிரகாசமடைந்தது. வேலையை முடித்துவிட்டு, ‘சொல்லுங்க மேடம்’ என்றான்.

ஓய்வாய் இருக்கையில், இதையெல்லாம் எனக்கும் கொஞ்சம் சொல்லிக்கொடுக்க முடியுமா என்று கன்னம் குழிய சொல்லிவிட்டுப்போயிற்று அந்த அம்மாள் என்பது அலுவலகம் முழுக்கப் அன்றைக்குப் பேச்சாயிற்று..

ராஜசேகர் சம்பந்தப்பட்ட இன்னொரு சம்பவத்தில் ராவும் உப பாத்திரமாய் இருந்திருந்தார். சில வருடங்களுக்குமுன் கறையற்ற கைகளுக்குரியவர் என்று பிரசித்தி பெற்றிருந்த, பெளத்தத்தைத் தழுவிய தலித் அதிஉயர்அதிகாரி, அந்த அலுவலகத்திற்கு வந்து பொறுப்பேற்றுக்கொண்டார். அடையாளப்படுத்திக்கொண்டு முண்டிய கூட்டத்தில் முன்னால் போய் இடம்பிடித்தவன் சிவக்குமார். சூளையில் வைத்து சுட்டாலும் சொதசொதப்பு மாறாத பச்சைமட்டை. குறுக்காக அச்சடிக்கப்பட்ட பேப்பரில் காந்தியை மட்டுமே கண்கொண்டு வாசிக்கத்தெரியும். அடுத்தவருட அதிருஷ்ட இருக்கைக்கு ஆகுதி அர்ப்பணிப்பாய் மக்கள் தொடர்பு அதிகாரி என்கிற பெயரில் மராமத்து வேலைகளை மேற்பார்வை பார்த்து ஒப்பந்தப் பணியாட்களை விரட்டிக் கொண்டிருந்தான். அதிகார கேந்திரத்தின் மிக அருகில் இருந்த காரணத்தால் நாளுக்குநாள் குரலில் காட்டம் கூடிக்கொண்டே போயிற்று. மின்தூக்கியில் செல்லும்போது அவன் அடித்த கூத்துகளுக்கு அளவேயில்லாமல் போகத் தொடங்கிற்று. அதிஉயர் அதிகாரிக்காகப் போகிறது என்று மிரட்டி உருட்டி, ஊழியர் அதிகாரிகள் எவரையுமே, லிஃப்ட்டில் ஏறவிடமால தான் தனியாகச் செல்வதில் அப்படி என்ன பெருமையோ. போகும்போது காலியாகத்தானே போகிறது என மீறி ஏறுபவர்களை தள்ளிவிடாத குறையாய் தாண்டவமாடிக்கொண்டிருந்தான்.

அதிகாரிகளின் வண்டிகளுக்கு இடைஞ்சலாய் இருப்பதாய்க் கூறி, திடீரென்று அன்றுமுதல் எல்லா இருசக்கர வாகனங்களும் அடி-தளத்திலோ அல்லது பின்புறமோதான் விடப்படவேண்டும் என்று கட்டளை இட்டான் சிவக்குமார். இதை அறியாத ராஜசேகர், அலுவலக கார்களுக்கு இடைஞ்சலில்லாவண்ணம் எப்போதும் நிறுத்தும் இடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு தன் பகுதிக்கு வந்து வேலையில் முனைந்துவிட்டான்.

சார் உங்க வண்டியை எடுத்துப் பின்னாடி வுடச்சொல்லி பிஆர்ஓ சார் சத்தம்போடறாரு சார் – சேதி சொன்னான் சிப்பாய். இதோ வறேம்பா என்று சொல்லிவிட்டு பாதியில் இருந்த வேலையை முடிப்பதில் கருத்தாயிருந்தான்.

யாருங்க அது ராஜசேகர்? சொன்னா ஒடனே வந்து வண்டியை எடுக்க மாட்டீங்களா? கமிஷ்னர் வேலை. அர்ஜெண்டா வெளிய போயாவணும். கார எடுக்க முடியலை. ஒடனே எடுக்காட்டிக் காத்தப் புடுங்கவேண்டியிருக்கும்.

நடு ஹாலில் நின்று உரக்கக் கூறினான். சுழல் நாற்காலியை லேசாகத் திருப்பி, தலை குனிந்தவண்ணம் கால்களைத் தூக்கிப் பக்கவாட்டிற்குக் கொண்டுபோய் முகம் குறுக எழுந்தான் ராஜசேகர். துவண்ட கால்களுடன் தவழாத குறையாய் பக்கவாட்டுச் சுவரைப் பிடித்தபடி, தலைகூடத் தூக்காமல் கடந்து சென்று படிகளில் இறங்கினான். சிவக்குமார் அவனைக் கடந்து வேகமாய்க் கீழே போனான்.

மூனு சக்கர வண்டிக்கிக் காத்தப்புடுங்குவேன்னு சொல்லுதே மனுஷ ஜென்மமாய்யா இது?

பரமசிவன் கழுத்துப் பாம்பப்பா? எதுத்துக் கேட்டாலும் எடுபடாது.

பெரியவர் அப்ரூவலோடதானே இவன் இவ்ளோ ஆடறான்?

பின்ன, என்ன இருந்தாலும் அவங்காளு இல்லையா?

ஏன் ராஜசேகர் மட்டும் வேற ஆளா?

அட வேலக்காரன் மசுரெல்லாம் வெளிய தெரியுமா? இந்த மாதிரிப் புடுங்கிங்கதான் மேலெடத்துக்கும் வேணும்.

ராஜசேகர்வேற கலரா இருக்காரில்ல. அதான் கன்ஃப்யூஷன்.

ராஜசேகர் மாதிரி வாயில்லாப்பூச்சி, கறுப்பா இருந்தா மட்டும் இந்த நாயி கொரைக்காம வுட்டுறப்போவுதா? போதாக்குறைக்கு செத்துப்போன ஏசி பையன்ங்கற திமிரு வேற.

இதையெல்லாம் பெரியவர் காதுக்குக் கொண்டுபோவணும்யா. அவுருக்குத் தெரியவந்தா ஒட்ட நறுக்கிடுவாரு.

ஆமா, அவுருக்குத் தெரியவந்தா மட்டும் என்னாயிடுங்கறே? எங்காளுங்களுக்கு நான்கூட செய்யாட்டா வேற யார் செய்வாங்கன்னு ஓப்பனா சொன்னவரில்ல அவுரு?

யோவ் அது வெல்ஃபேருக்காக சொன்னது. போஸ்டிங் போடறதுல வேணா, கொஞ்சம் அப்பிடி இப்பிடி இருக்கலாம். ஆனா இதையெல்லாம் ஏத்துப்பாருன்னு எனக்குத் தோணலை. ஆயிரம் சொன்னாலும் நியாஸ்தன்யா அந்த மனுஷன்.

சம்பந்தப்பட்ட எல்லாரும் ஒரே ஆளுங்க என்னாவுதுன்னு பாப்போம்.

பார்த்துக்கொண்டு சும்மா இருக்கவில்லை. ராஜசேகரின் பெயரில் புகார் மனுவை படபடவென அடிக்கத் தொடங்கிவிட்டிருந்தார் ராவ். வண்டியைக் கொண்டுபோய் பின்புறமாய் விட்டுவிட்டு சுற்றிக்கொண்டு வந்த்தில் லேசாக மூச்சிறைத்துக்கொண்டு இருந்தான் ராஜசேகர். தண்ணீரை நீட்டிவிட்டுப் புகார்மனு பற்றிக் கூறினார். படித்துகூடப் பார்க்காமல் கையெழுத்து போட்டு அதை எடுத்துக்கொண்டு லிஃப்டை நோக்கிப்போனான். அதிஉயர் அதிகாரியின் அறை ஐந்தாவது மாடியில் இருந்தது.

படித்துப் பார்த்தவர் சீட்டைவிட்டு எழுந்து ராஜசேரிடம் வந்து கையைப் பிடித்துக்கொண்டார்.

என் கட்டுப்பாட்டில் இருக்கும் அலுவலகத்தில் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்தமைக்காக வெட்கப்படுகிறேன். நீங்கள் சந்திக்க நேர்ந்த சங்கடத்திற்கு உளமாற வருத்தப்படுகிறேன். உங்களிடம் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

ராஜசேகர் அறையை விட்டு வெளியேறியபின், ’நம்மிடம் நல்லபடியாக நடந்துகொள்ளும் மனிதர்கள் பிறரிடம் எப்படி நேர்மாறாக நடந்துகொள்கிறார்கள்? யாரையும் நம்பவே முடியவில்லை’ என்று தனிச்செயலரிடம் புத்தர் வருத்தப்பட்டுக் கூறியதாக செய்தி வெளியே கசிந்தது.

தங்கமான ஆளுய்யா?

என்னாப்பா இது கீழ்வெண்மணியக் கேள்விப்பட்டுக் கோட்டைக்குள்ளக் கதவ சாத்திக்கிட்டுக் கதறி அழுதார்னு சொல்ற கதையா இல்ல இருக்கு.

சேச்சே நிஜமாவே அவுரு பை நேச்சரே ரொம்ப சாஃப்ட்டான ஆளுங்க.

பாத்துகிட்டே இரு சிவக்குமார் மேல ஒரு மயிறு ஆக்‌ஷணும் இருக்காது.

சில தினங்களுக்குள்ளாகவே, அந்தக் கட்டிடத்தின் முன்புறமும் பின்புறமும் இருந்த படிக்கட்டுகளின் ஓரத்தில் ஓராள் ஏறுமளவிற்கு நிரந்தர சரிவுப் பாதைகள் அமைக்கப்பட்டன.

பின்புற படிக்கட்டருகில் தம் வழக்கமான இடத்தில் நின்று ராவ் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார். சரிவுப் பாதையில் குட்டியொன்று பிஞ்சுக் கால்களில் குடுகுடுவென ஓடிவந்து ஏறி மேலே நின்று டாடி என்று கூவிற்று. சற்று தூரத்தில் ராஜசேகர் வந்துகொண்டிருந்தான்.

வணக்கம் சார் என்று சிரித்தபடி அருகில் வந்ததும் நம்ம பொண்ணு சார். சரியான வாலு என்றபடி பாப்பா பேரு சொல்லு என்றான். அது அவர்களுக்கு எதிர்புறத்தில் கீழே கிடந்த எதை நோக்கியோ தத்திச்சென்ற காக்கையை இருந்த இடத்தில் இருந்தபடியே கறுப்பு வளையணிந்த கையை வீசி சூ போ என்று விரட்டியபடி பாப்பா என்றது.

ராவ் வாய்விட்டு சிரித்தார். அவனையும் குழந்தையையும் மாறி மாறிப் பார்த்தபடி உள்ளூர எழுந்த வியப்பு வெளித்தெரியாத வண்ணம், ரொம்ப சூட்டியா இருக்கே? என்றார்.

ஒண்ணாம் நம்பர் வாலு சார். ஒரு நிமிஷம் ஒரு எடமா ஒக்காராது. எப்பப் பார்த்தாலும் ஒரே ஓட்டம்தான், பூரித்த முகத்துடன் கூறினான் ராஜசேகர்.

இதப்பாரு இன்ஸ்பெக்டர் பிரமோஷன் இப்ப பிஹெச்சுக்கும் எலிஜிபிள்னு ஆர்டர் வந்துடுச்சி…

நெஜமாவா சார்?

பின்ன? இந்த வாரத்துல கெஜட்ல வந்துடும்னு டெல்லி நியூஸ். எஸ்ஸி கோட்டாவும் இருக்கறதால சீக்கிரமே உனக்கு பிரமோஷன் கெடைச்சிடும்.

இதெல்லாம் நெஜமாவே நடக்கற காரியமா சார். சைக்கிள் ஓட்டச் சொல்லுவாங்க ஹைட்டு பாப்பாங்க… இதுல்லாம் நமக்கு சரிப்பட்டு வருமா சார். போய்ட்டு அவமானப்படணுமா சார்.

ஹைட்டு கிய்ட்டையெல்லாம் ட்ரிப்யூனல்ல கேஸப்போட்டு ஒடைச்சிடலாம். பிரமோஷனுக்கு ஹேண்டிக்கேப்பைப் பரிசீலிக்கணும்னு சொல்லிட்டு அவனை சைக்கிள் ஓட்டுன்னு சொல்றது குரூரம் இல்லியானு சொல்லியே ’கேட்’ல கேஸை ஜெயிச்சிடலாம். அவசரப்பட்டு குமாஸ்தாக்களை மேய்க்கற மேஸ்திரி போஸ்ட்டுக்குத் தலையாட்டிடாதே. ஒரு தடவை ஒத்துகிட்டா அப்பறம் திரும்ப வாங்கமுடியாது. உன்னைமாதிரி கம்ப்யூட்டர் கிங்கெல்லாம் இன்வெஸ்டிகேஷனுக்கு எவ்ளோ யூஸ்ஃபுல் தெரியுமா?

சரி சார் என்று சொன்னதோடு சரி. கொஞ்ச நாளிலேயே இனிப்பும் கையுமாக வந்து நின்றான்.

என்னையா விசேஷம் இன்னொண்ணா? என்று ராவ் கண்ணடித்தார்.

சார் நீங்க வேற, ஒரு பொண்ணை ஒழுங்காப் படிக்கவெக்க முடிஞ்சாலே பெரிய விஷயம். இதுல இன்னோண்ணா? டிஓஎஸ்ஸா பிரமோஷன் ஆயிட்டேன் சார்.

யோவ் என்னையா இது? அந்த லைனுக்குப் போவாதேன்னு படிச்சி படிச்சி அவ்ளோ சொன்னேனேய்யா.

இல்ல சார் யோசிச்சு பாத்தேன் என்னதான் ஆசை இருந்தாலும் இன்ஸ்பெக்டர்லாம் நமக்கு வேலைக்காவாதுன்னு தோனிச்சி அதான் டிஓஎஸ்ஸுக்கு ஆப்ஷன் குடுத்தேன். ஒடனே பிரமோஷனும் கெடச்சிடிச்சி

போயாக் குருமுட்டை. இன்ஸ்பெக்டர் ஆனா நீ எப்படி ஷைன் பண்ணுவேன்னு உனக்கே தெரியாது. டிபார்ட்மெண்ட்டுக்கு எவ்ளோ பெரிய அசட்டா இருப்பே தெரியுமா? போ போ வருஷாவருஷம் இன்கம்டாக்ஸ் ரிடர்ன் போட்டுகிட்டு தெறமைய எல்லாம் வேஸ்டாக்கிக்கிட்டுக் கெடக்கணும்னு உன் தலைல எழுதியிருந்தா யார் என்ன செய்ய முடியும்?

சின்ன வயசுலையே வேலை கெடச்சிது. கம்மி சர்வீஸ்லையே பிரமோஷணும் கெடச்சிடுச்சி. என்ன சார் எனக்குக் குறை? எனக்கு மேல ஏகப்பட்டபேரு இருக்காங்க. இன்ஸ்பெக்டராக இன்னும் எவ்ளோ வருஷம் ஆவுமோ? அதான் இப்பவே கெடைக்கிற டிஓஎஸ் போதும்னு டிசைட் பண்ணினேன் சார்.

கிழிஞ்சிது. இந்த வயசுலையே போதும்னு நெனச்சிட்டா வாழ்க்கைல என்னத்த சாதிக்கிறது? எனிவே ஆல் தபெஸ்ட்.

அலைபேசி அடித்தது.

ராகசேகர் எப்படி இருக்கே? உன்னைப்பத்திதான் யோசிச்சிகிட்டு இருந்தேன். நீயே பண்ணறே. கட் பண்ணு நான் கூப்பிடறேன்.

ராவ்சார் எப்பிடி இருக்கீங்க? அதனால என்ன சார் பரவாயில்லே. இப்பிடியேப் பேசலாம் சார். மிஸ்டு கால் பாத்தேன். இப்ப எங்க இருக்கீங்க சார்?

நல்லா இருக்கேம்ப்பா. ஞாயித்துக்கெழமையாச்சே தூங்கிகிட்டு இருப்பியோன்னுதான் ரெண்டுமூனு ரிங்கோடக் கட் பண்ணிட்டேன். நல்லாருக்கியா? என்னைத்தான் லாங் ஸ்டேண்டிங்குனு வெளியூருக்குத் தொரத்திட்டாங்களே.

கொஞ்சம் பர்சனல் ஒர்க்கா வெளிய போவேண்டி இருந்துது. டிரைவிங்குல இருந்தனா அதான் மொபைலை எடுக்கலை. சொல்லுங்க சார் என்ன விஷயம்?

வேற எதுக்கு உன்னை தொல்லை பண்ணப்போறேன். இன்கம்டாக்ஸ் ரிடர்ன்தான். நீன்னா,ஆடிட்டே பண்ணமுடியாத மாதிரி பக்காவாப்போட்டுருப்பே. கொஞ்சம் மெயில்ல அனுப்பி வைய்யின்னு கேக்கத்தான் பண்ணினேன்.

இதோ உடனே அனுப்பி வெக்கிறேன் சார்.

ரைட் ரொம்ப தேங்க்ஸ்.

என்ன சார் இதுக்குப்போயி தேங்க்ஸ்லாம் சொல்லிகிட்டு. சார் அப்பறம் நான் கார் வாங்கி இருக்கேன். உஙக கால் வந்தப்ப அதைத்தான் ஓட்டிகிட்டிருந்தேன்.

அட காரோட்ட எப்பைய்யா கத்துகிட்டே?

நான் எப்படி சார், டிரைவிங் ஸ்கூல்ல போயா கத்துக்க முடியும்? மாடிஃபைடு காரை செகண்ட்ஹேண்டுல வாங்கி அப்பிடியே கத்துகிட்டு ஆறுமாசமா நாந்தான் சார் ஓட்டிகிட்டு இருக்கேன்.

இந்த ட்ராஃபிக்குலப்போயி கார் ஓட்றதுன்னா ரொம்ப தைரியம்தான்யா ஒனக்கு. காரோட அகலம் மனசுல ஒக்கார்ரதே கஷ்டமாச்சே.

நம்புளுக்கு என்னா சார் கஷ்டம். ஏற்கெனவே ஓட்டிகிட்டு இருந்தது மூணு சக்கரம்தானே சார். அதைவிட இது இன்னும் கொஞ்சம் அகலம். சைட்வீல் வெச்ச ஆக்டிவா ஓட்டினதைவிட கார் ஈசியா இருக்கு சார்.

ஆல் த பெஸ்ட். சரி இன்கம்டாக்ஸ் ரிடரனை மெய்ல் அனுப்பு என்று சொல்லி இணைப்பைத் துண்டித்த ராவ், மனைவி எங்கே என அனிச்சையாய் சுற்றுமுற்றும் பார்த்தார். குளியலறையில் நீர்விழும் சத்தம் கேட்டது.

ஆங்கில நாளிதழின் ஞாயிறு இணைப்பில் கறுப்பு வெள்ளைப் படங்களுடன் கிரிக்கெட் கட்டுரை வெளியாகியிருந்தது. கண்ணாடியைக் கழற்றி வேட்டியில் துடைத்து அணிந்துகொண்டார்.

[5 பிப்ரவரி 2012] 

தொடர்புடைய சிறுகதைகள்
ராவ்ஜி பல் தேய்த்துக் கொண்டிருந்தார். கீழே பத்தர் வீட்டிலிருந்து ‘ஐயோ மாமா’ என்ற பெருத்த அலறல் கேட்டது. ராவ்ஜியை இந்தக் கூக்குரல் கொஞ்சம் அதிகப்படியாகவே திடுக்கிட வைத்து விட்டிருக்க வேண்டும். கையிலிருந்த பிரஷ் தவறிக் கீழே விழுந்துவிட்டது. அதை தரையில் விழுந்து விடாதபடி ...
மேலும் கதையை படிக்க...
மாம்பலத்தில் பழைய பேப்பர் மற்றும் முட்டை வியாபாரம் செய்கிற நாடார் எனக்குப் பழக்கம். முட்டைக்கும் பழைய பேப்பருக்கும் அப்படி என்ன விநோதத் தொடர்பென்று இன்றுவரை எவ்வளவு யோசித்துப் பார்த்தும் எனக்குப் பிடிபடவில்லை, முன்னதைப் பின்னதில் பொட்டலம் கட்டலாம் என்பதைத் தவிர. நாடார் ...
மேலும் கதையை படிக்க...
எப்போது ஓட்டலுக்குப் போனாலும் சுவரோர இருக்கையாகப் பார்த்து உட்காருவதே கிருஷ்ணமூர்த்தியின் இயல்பு. அலுவலக சகாக்களுடனோ அல்லது குடும்பத்துடனோ போகும்போதுகூட உடகாரும் இடத் தேர்வில் தமக்கே முன்னுரிமை என்பதை எழுதாத சட்டமாகவே அவர் கடைபிடித்து வந்தார். அப்படி அமையாத சமயங்களில் பெரும்பாண்மையான இடம் ...
மேலும் கதையை படிக்க...
தொலைபேசி மணி அடித்தது. மனைவி எடுத்தாள். யாரோ பெரியவர். உங்கள் பெயர் சொல்லிக் கேட்கிறார் என்று கிசுகிசுத்தபடி கொடுத்தாள். நமஸ்காரம். நான் வெங்கடேச ஐயர் பேசறேன். நீங்க என்னைவிடப் பெரியவாளா இருந்தா நமஸ்காரம் இல்லேன்னா ஆசீர்வாதம். எனக்கு வயசு எழுவத்தி மூனு என்ற ...
மேலும் கதையை படிக்க...
கொல்லையில் கறிவேப்பிலை மரம் தளதளவென்று நின்று கொண்டிருந்தது. தெருவிலிருந்து பார்ப்பவர்கள், அந்த வீட்டில் அப்படியொரு மரம் இருக்கக்கூடும் என்று யூகிக்க முடியாது. வீட்டிற்கு ஸ்நோஸிம் அடித்து இருந்தது. வீட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும், சமைந்திருக்கும் பெண்ணின் தாயாரைப்போல, ரொம்ப ஜாக்கிரதையுடன் கண்காணித்து வந்தாள் மாமி. ...
மேலும் கதையை படிக்க...
போர்வை
முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள்
பார்வை
யாசகம்
இலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)