திருப்பம்!

 

குமாரிக்கு ஒரே பரபரப்பாக இருந்தது. தன் தந்தையைத் தனியாக விட்டு விட்டுக் கிளம்புவதற்கு, அவளுக்கு இன்னும் இரண்டே நாட்கள்தான் இருந்தன. தினகரனின் காதலை, மாரிசாமி ஏற்க மாட்டார் என்பதை, அவரின் ஜாதிப்பற்றுமிக்க நடவடிக்கைகளிலிருந்து அவள் அறிந்திருந்ததால் தான், அப்படி ஒரு முடிவுக்கு வர வேண்டியதாயிற்று.

தான் செய்வது சரியன்று என்பது அவளுக்குத் தெரிந்துதான் இருந்தது; இருப்பினும், அவளுக்கு வேறு வழி புலப்படவில்லை. குறிப்பிட்ட சூழ்நிலையில், சில தவறுகள் நியாயமானவை என்று அவள் தனக்குத் தானே சமாதானம் கற்பித்துக் கொண்டாள்.

திருப்பம்ஓடிப் போகும் தவறை அவள் செய்யாதிருப்பின், அவள் வாழ்நாள் முழுவதும் அழுதவாறும், இன்னொருவனுக்கு மனதால் துரோகம் செய்யும் தவறைச் செய்பவளாகவும் வளைய வர வேண்டியதிருக்கும் என்பதால், இந்தத் தப்பைச் செய்வது சரிதான் என்று அவள் தனக்குள் சொல்லிக் கொண்டாள்.
அவள் அப்பா வெளியே போயிருந்த நேரத்தில், புடவை, துணிமணிகளை, தன் பெட்டியில் அடுக்கி வைப்பது போன்ற ஆயத்தங்களை, ரகசியமாய்ச் செய்து கொண்டிருந்தாள். சில ஆண்கள் சொல்வது போல், கட்டிய சேலையுடன் வந்தால் போதும் என்று, தினகரன் சொல்லவில்லை.

ஓடிப் போய்த் தங்கப் போகும் அசலூரில், தனக்கு ஒரு வேலை கிடைக்கக் கொஞ்ச நாள் ஆகும் என்பதாலும், தன் கையில் சொற்ப பணம் மட்டுமே இருந்ததாலும், அவள் தன் நகைகளை எடுத்து வந்தே ஆக வேண்டும் என்று சொல்லியிருந்தான்.

பெட்டியைச் சாத்திய கணத்தில், அழைப்பு மணி ஒலிக்க, அவள் எழுந்து போய்க் கதவைத் திறந்தாள். பக்கத்து வீட்டுப் பங்கஜம்மா, புன்சிரிப்புடன் நின்றிருந்தாள்.

“”வாங்கம்மா!”
உள்ளே வந்து உரிமையுடன் ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டாள். அவள் சட்டமாக உட்கார்ந்த தோரணையிலிருந்தே, ஏதோ முக்கியமான விஷயம் பேசத்தான் வந்திருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்ட குமாரி, குழப்பத்துடனும், ஆவலுடனும் அவளை ஏறிட்டவாறு, தானும் அவளுக்கு எதிரே ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டாள்.

“”ஏற்பாடெல்லாம் எந்த மட்டில இருக்கு?” என்று எடுத்த எடுப்பில் அவள் கேட்டதும், குமாரிக்குத் தூக்கித் தான் போட்டது.

“என்னது, இப்படி கேக்குது! எதையோ மோப்பம் பிடிச்ச மாதிரி இல்லே கேக்குது?’

அவளது முயற்சியை மீறி, அவள் முகம் வெளுத்தது.

“”எது பத்தின ஏற்பாடும்மா?” என்று வினவியபோது, குரலின் தடுமாற்றத்தை அவளால் தவிர்க்க முடியவில்லை.

“”என்னம்மா கேக்குறே… வெக்கமா? எல்லாம் உன் கல்யாணத்த பத்தித்தான் கேக்கறேன். கொஞ்ச நாளைக்கு முந்தி, “ஒரு நல்ல பையனா இருந்தாப் பாத்துச் சொல்லுங்க…’ன்னு, எங்க அண்ணன்கிட்ட உங்கப்பா சொல்லிட்டு இருந்தாரு… அவரும், பார்த்துக்கிட்டு இருக்கிறதாச் சொன்னாரு… அதான், ஏதாச்சும் அமைஞ்சுதான்னு கேக்குறேன்…”

“அப்பாடா!’ என்று மனதுக்குள் சொல்லியபடி, நிம்மதிப் பெருமூச்சு விட்ட குமாரி, “”ஒண்ணும் அமையலீங்க… எல்லாரும் ஏகத்துக்கு வரதட்சணை கேக்குறாங்க,” என்றாள்.

“”வரதட்சணை கேக்குற இந்த அநாகரிகம், மேட்டுக்குடிக்காரவுக கிட்டேர்ந்துதான், மத்தவங்க எல்லாரும் கத்துக்கிட்டது! இந்தக் காலத்துலே, காதல், ஊதல்ன்றாங்க… ஆனால், அவங்களும், “எங்க அம்மாவோட நீ நிம்மதியா வாழ்க்கை நடத்தணும்னா, வரதட்சணை குடுத்துட்றதுதான் நல்லது…’ன்னு கூசாம சொல்றாங்க… ஹூம்!”

குமாரி ஒன்றும் சொல்லாதிருந்தாள்.

“”எனக்குத் தெரிஞ்ச ஒரு பொண்ணுக்கு, அவங்கப்பனால காலாகாலத்துல கல்யாணம் பண்ணி வைக்க முடியலே… அதுக்குள்ள எவனோடவோ சிநேகிதம் ஏற்பட்டு ஓடிப் போயிறுச்சு… அவன், அவளோட நகைகளையெல்லாம் பறிச்சுக்கிட்டு, ஒரு லாட்ஜ்ல அம்போன்னு விட்டுட்டுப் போயே போய்ட்டான்… விபசாரக் கேசுன்னு போலீஸ்ல கொண்டுட்டுப் போயிட்டாங்க.

“”ஆனா, நல்லவேளையா, அந்த இன்ஸ்பெக்டர் நல்லமனுஷன். அவளை என்ன, ஏதுன்னு விசாரிச்சு, தன் மனைவியோட அவளைக் கூட்டிட்டு வந்து, அந்தப் பொண்ணோட வீட்டில ஒப்படைச்சுட்டுப் போனாரு. அந்தப் பெண்ணைக் கோவிச்சுக்கக் கூடாதுன்னு, அவளோட அப்பன் காரன்கிட்ட சொல்லி சத்தியமும் வாங்கினாரு.

“”ஆனா, இதுக்குள்ள அது ஓடிப் போன விஷயம், அரசல் புரசலா ஊருக்குத் தெரிஞ்சு போயிருச்சு. அதுக்கு அப்பால, அந்தப் பொண்ணுக்குக் கல்யாணமே ஆகலே. தங்களோட பழைய கதை யாருக்கும் தெரியக் கூடாதுன்றதுக்காக, அவங்க வேற ஊர்ல குடியேறினாங்க. அந்தப் பொண்ணு லாட்ஜ்ல அவனோட ரெண்டு நாளு இருந்துட்டதால, ஒரு குத்த உணர்ச்சியில, வேற யாரையும் கட்டிக்க மாட்டேனிடுச்சு. அதுக்கு அப்பால, அது புருஷனை இழந்துட்ட விதவைங்கிறதா, அவளோட அப்பன்காரன் ஒரு பொய்யையும் சொல்ல வேண்டியதாச்சு… ஹூம்!”

“இந்தப் பங்கஜம்மா எதுக்கு இதையெல்லாம் ஏங்கிட்ட வந்து மெனக்கெட்டுச் சொல்லிட்டு இருக்குது?’ மனதில் எண்ணமிட்டாள் குமாரி.

“”உங்கப்பா ரொம்ப நல்ல மனுஷன், குமாரி! உங்கம்மா செத்துப் போனப்ப, அவருக்கு முப்பத்தாறு வயசு; உனக்கு நாலு வயசு. சிலர், குழந்தைங்களை வளர்க்கிறதுக்கு ஒரு பொம்பளை வீட்டுல வேணுமேன்னு சாக்குச் சொல்லிட்டு, ரெண்டாங் கல்யாணம் கட்டுவாங்க; ஆனா, உங்கப்பா அப்படிச் செய்யலே…

“”எத்தினி பேரு வலை வீசினாங்க தெரியுமா? அவர் மசியவே இல்லியே! மாற்றாந்தாய்ன்னு ஒருத்தி வந்தா, அவ என் ஒரே மகளைக் கொடுமைப்படுத்துவாளோ, என்னவோ! நல்ல பொம்பளைங்களும் இருக்காங்கதான். ஆனா, என்னால அப்படியெல்லாம் விஷப் பரீட்சை பண்ண முடியாது. எம்மகதான் எனக்கு முக்கியம்…’ அப்படினுட்டாரே மனுஷன்!”

பங்கஜம்மாவை, ஒரு புதிய ஆர்வத்துடன் கவனித்தாள் குமாரி.
மிகச் சிறு வயதிலேயே கைம்பெண்ணாகி, அண்ணனின் வீட்டோட இருக்க வந்து விட்டவள் என்று, அவளைப் பற்றிக் குமாரி அறிந்திருந்தாள். “இந்த அப்பா, பக்கத்து வீட்டுக் கைம்பெண்ணை மணந்து, அவளுக்கும் வாழ்வு அளித்திருந்திருக்கலாமே!’ என்று அவளது எண்ணம் இப்போது அர்த்தமற்று ஓடியது.

“”என்ன யோசிக்கிறே?”

“”ஒண்ணுமில்லீங்க!”

“”எனக்கு, சின்ன வயசிலேர்ந்தே புருஷன் இல்லே… உங்கப்பாவுக்கு, பொஞ்சாதி இல்லே! ஹூம்!”

பங்கஜம்மாவிடமிருந்து இன்னும் எத்தனை, “ஹூம்’கள் உதிரப் போகின்றனவோ என்று நினைத்து, மனசுக்குள் சிரித்துக் கொண்டாள் குமாரி.

“”உங்கப்பா மனசு கோணாம நடந்துக்க, குமாரி! உனக்கு ஒரு விஷயம் சொல்லட்டுமா?”

தன் அப்பா மனசு கோணாமல் நடந்து கொள்ளுமாறு, சம்பந்தா சம்பந்தம் இல்லாமல், திடீரென்று பங்கஜம்மா தனக்குச் சொன்ன அறிவுரை, குமாரியை இரண்டாம் முறையாகத் தூக்கிப் போட்டது. தன்னைத் தாக்கிய அதிர்ச்சியில், அவள் வாயடைத்துத் தான் போனாள்.

“”ரெண்டு நாளுக்கு முந்தி நான், எங்க சொந்தக்காரங்க வீட்டுக்குப் போயிருந்தேன்… புரசைவாக்கத்துல இருக்கிறவங்க… ஆனந்த் தியேட்டர்ல படம் பாக்கக் கூட்டிட்டுப் போனாங்க… என்ன அப்படிப் பாக்கறே, குமாரி? நீயும், அந்தப் பையனும் உக்காந்திருந்த சீட்டுக்குப் பின்னால தான் நாங்க உக்காந்திருந்தோம். ஆனா, நீ எனக்குத் தெரிஞ்ச பொண்ணுன்றதை, நான் என்னோட இருந்த அந்தம்மாவுக்குச் சொல்லலேம்மா…

“”ஆனா, நீங்க உக்காந்திருந்த நெருக்கத்தைப் பாத்ததும், எனக்கு மனசு தாளலே! கல்யாணத்துக்கு முந்தி தொடுறவன், நியாயமானவனா இருக்க மாட்டான், குமாரி! நான் இப்படிப் பேசுறது உனக்குப் பிடிக்காது தான்… என்னை மன்னிச்சுடு! உன் நன்மைக் காகத்தான் சொல் றேன்…

“”அவன் உங்க ஜாதி இல்லேங் கிறதையும், அப்பாவுக்குத் தெரியாம ஓடிப் போறது உங்க திட்டங்றதையும், உங்க பேச்சி லேர்ந்து நான் தெரிஞ்சுக் கிட்டேன். என் பக்கத்தில இருந்த அம்மாவுக்கு, காது அவ்வள வாகக் கேக்காது. அதனால, அந்தம்மா வுக்கு எதுவும் தெரியாது…

“”உனக்காக, தன்னோட இளமையைத் தியாகம் பண்ணின உங்கப்பாகிட்ட உண்மையைச் சொல்லி, அவர் சம்மதத்தோட நீங்க கல்யாணம் கட்டுறதுதான் சரிம்மா. “இவளுக்கு என்ன வந்திச்சு…’ன்னு என் மேலே கோபப்படாதடா கண்ணு!”

குமாரி சிறுமைப்பட்டுப் போய் தலை கவிழ்ந்து, முகவாய் நெஞ்சில் இடிக்கிற அளவுக்குக் குனிந்து கொண்டாள். பங்கஜம்மா ஊஞ்சலிலிருந்து இறங்கி, அவளுக்கு எதிரே நின்றாள். ஒரு தாயின் பரிவுடன் அவள் தோள்களை ஆதரவாய்த் தொட்டு அழுத்தினாள்.

“”இவளுக்கு என்ன இவ்வளவு கரிசனம்ன்னு கோவிக்காதே தாயி! “நீங்களும் பொஞ்சாதி இல்லாதவரு; என் தங்கச்சியும் புருஷன் இல்லாதவ. அதனால, நீங்க அவளைக் கட்டலாமே…’ன்னு எங்க அண்ணன் சொன்னப்ப, உங்கப்பா, “என் பொண்ணு விஷயத்துல நான் எந்த விஷப் பரீட்சைக்கும் தயாரா இல்லே… உங்க தங்கச்சி நல்லவளா இருக்கலாம்… ஆனா, அவளைக் கட்டிக்கிட்டு, என் குடும்பத்தைப் பெருக்கிக்க நான் தயாராய் இல்லே…’ன்னு சொல்லியிட்டாரு உங்கப்பா!

“”என் குடும்பம் பெருகினா, குமாரிக்குக் கல்யாணம் பண்ணப் பணம் சேர்க்கிறதெல்லாம் பிரச்னையாயிடும்…’ன்னும் காரணம் சொன்னாரு!

“”இப்படிப்பட்ட அப்பாவுக்கு, அதிர்ச்சியும், வேதனையும் தரக் கூடாதும்மா! உண்மையைச் சொல்லி, அப்பாவோட போராடி ஜெயிக்கப் பாரு! அவ்வளவு பிரியம்னா, உன்னோட ஆளு காத்திருக்கட்டும். இதுக்கு இடையிலே, உங்கப்பா உன்னை வலுக்கட்டாயமா வேற எவனுக்காச்சும் கட்டி வைக்கப் பாத்தாருன்னா, அப்ப நானே, நீ அவனோட ஓடிப் போறதுக்கு உதவி பண்ணுவேன்! அது வரையில, அவனும் பொறுமையாகக் காத்திட்டு இருந்தா, அவனுக்கு உன் மேல உண்மையான – அதென்ன… காதலா, கட்டையா – அது இருக்குன்னு அர்த்தம்! அதுக்குள்ள அவனைப் பத்தி விசாரிச்சு, அவன் நல்லவனான்னு கண்டுபிடிப்பேன். என்ன தாயி சொல்றே?”

முகத்தைப் பொத்திக் கொண்டு அழுதாள் குமாரி. அவளது உச்சந்தலையில் கை பதித்த பங்கஜம்மா, “”என்னைக்கு ஓடி… என்னைக்குக் கிளம்புறதா இருக்கீங்க?” என்றாள்.

“”நாளைக்கு ராத்திரி! அப்பா தூங்கினதுக்கு அப்புறம்!”

“”ரெண்டு பேரும் எங்க சந்திக்கிறதா திட்டம் போட்டீங்க?”

“அவரு, கொல்லைப் புறத்தால வந்து லேசாக் கதவு தட்டுவாரு… நான் பின்கட்டிலேயே இருந்துட்டு, பதிலுக்கு ரெண்டு வாட்டி தட்டணும். ஒரே வாட்டி தட்டினா, எங்கப்பா இன்னும் சரியாகத் தூங்கலைன்னு அர்த்தம்!” என்று திக்கித் திணறிய குமாரி, கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

“”சரி… நீ எதுக்கும் அவனோட விலாசத்தைக் குடு… அவனுக்கு போன் இருக்கா?”

“”இல்லீங்க… விலாசம் மட்டும் தான் இருக்கு; எழுதி தர்றேன்… சரி! நீங்க என்ன செய்யப் போறீங்க… அவரைப் பாத்துப் பேசப் போறீங்களா?”

“”ஆம்!”

ஒரு தாளில், அவனது முகவரியை எழுதிக் கொடுத்தாள் குமாரி.
பல்லாண்டுகளுக்கு முன், ஒரு விடுதியில், காதலனுடன் தங்கி, ஒரு பெண் தன்னை பாழ்படுத்திக் கொண்டதாய் குமாரியிடம் தான் சொன்ன கதையின் நாயகி, பங்கஜமாகிய தானே என்பதை வெளிப்படுத்தாமல், அறிவுகெட்ட முடிவெடுத்த குமாரியைக் காப்பாற்றப் போகும் நிறைவுடனும், அந்த முகவரித் தாளுடனும், விடைபெற்றபடி இறங்கிப் போனாள் பங்கஜம்மா.

- மே 2010 

தொடர்புடைய சிறுகதைகள்
”நேற்றிலிருந்து நானும் கவனித்துக் கொண்டே இருக்கிறேன். என்ன யோசனை அப்படி-ஏதோ பெரிய கோட்டையைப் பிடிப்பதற்கு யோசனை செய்வது மாதிரி?” ஆழ்ந்த உறக்கத்தின்போது உலுக்கி எழுப்பப்பட்டவனுக்குரிய திடுக்கிடலுடன் வள்ளிநாயகம் இலேசான தலைக் குலுக்கலோடும் சட்டென விரிந்து கொண்ட விழிகளோடும் கல்பனாவை ஏறிட்டான். ஓர் அசட்டுப் ...
மேலும் கதையை படிக்க...
மூத்தவன் பங்கு !
வெளியே உறை மீது காணப்பட்ட கையெழுத்தைப் பார்த்ததுமே, அது தன் மாமியாரிடமிருந்து தான் வந்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்ட சரசுவதிக்கு, முகம் சுண்டிப் போயிற்று. எப்போதும் கணவன் அலுவலகத்திலிருந்து திரும்பிய பின், தன் மாமியாரின் கடித உறையைப் பிரிக்காமலே, அவனிடம் கொடுப்பது ...
மேலும் கதையை படிக்க...
‘‘மங்களம்! இன்னைக்கு ராத்திரி பன்னண்டு மணிக்கு ஒரு கிராக்கி வருது. ‘ஜெயில்லேர்ந்து இன்னைக்குத் திரும்பி வந்திருக்குமே, அந்தப் பொண்ணு மங்களம்தான் வேணும்’னு அந்தாளு சொன்னாரு. ஒருக்கா, உன்னோட கேஸ் நடந்துக்கிட்டு இருந்தப்ப கோர்ட்டுக்கு வந்து போயிக்கிட்டு இருந்த ஆளோ என்னமோ! கரெக்ட்டா ...
மேலும் கதையை படிக்க...
நடிகை
ம் முழுவதும் அண்மைக் காலமாகப் பேச்சு. இருவரும் சில படங்களில் இணைந்து நடித்து, அவை வெற்றியும் பெற்றதிலிருந்து படத் தயாரிப்பாளர்கள், இருவரையும் வைத்துப் படங்களை எடுப்பதில் ஆர்வமாயினர். காதல் தோல்வியுறுவதாய் காட்டப்பட்ட ஒரு திரைப்படத்தில், இருவரும் உருகி உருகி நடித்திருந்தனர். "இருவரும் உண்மையாகவே ...
மேலும் கதையை படிக்க...
ஆளுக்கு ஒரு சட்டம்!
சுஜாதாவின் மனம், தாங்க முடியாத பரபரப்பில் ஆழ்ந்திருந்தது. அன்று பிற்பகல், 3 மணிக்கு, எழுத்தாளர் சிவமதியைப் பார்க்க, அவளுக்கு, அவர், அனுமதி வழங்கியிருந்தார். கடந்த, 25 ஆண்டுகளாக தமிழில் மட்டுமல்லாது, இந்தி, ஆங்கிலம் ஆகியவற்றிலும் எழுதிக் கொண்டிருக்கும் பெண் எழுத்தாளர். மூன்று மொழிகளில் ...
மேலும் கதையை படிக்க...
நியாயங்கள் மாறும்
மூத்தவன் பங்கு !
நீயா! – ஒரு பக்க கதை
நடிகை
ஆளுக்கு ஒரு சட்டம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)