Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

தாய்

 

‘அப்பா, இனிமேல் நா அந்த வீட்டுல இருக்கமுடியாது, என்னை இப்பவே வந்து கூட்டிக்கிட்டுப்போங்க’

மகள் யாழினி கூறியதைக்கேட்டதும் அதிர்ந்துதான் போனான் சுப்பரமணியம். தான் ஓட்டிக்கொண்டிருந்த கம்பெனியின் வேனை பி.ஐ.ஈ. நெடுஞ்சாலையின் ஓரமாகச் சிக்னெலைப் போட்டு நிறுத்திவிட்டு,

‘இப்ப என்ன ஆச்சு?’

‘முடியலப்பா,

இனிமே நா அங்க போகமாட்டேன்,

பள்ளி முடிஞ்சு பஸ் ஸ்டோப்புல வேய்ட் பண்றேன்’

அவனின் பதிலுக்குக்கூட காத்திராமல் போனை வைத்துவிட்டாள். என்ன செய்வது என்று அவனுக்குத் தெரியவில்லை. மணியைப் பார்த்தான். மணி 6.30. பள்ளி 2.30க்குத்தான் முடியும். இன்னும் 8 மணிநேரம் இருக்கிறது. பார்த்துக்கொள்ளலாம் என எண்ணியவாறு வேனை மீண்டும் தீவின் விரைவுச் சாலையில் செலுத்தினான். கிளமெண்டியில் இருக்கும் இரண்டு வேலையாட்களை ஏற்றிக்கொண்டுபோய் ஜூரோங் ஐலெண்டில் விட வேண்டும். வேகக்கட்டுப்பாட்டு மணி ஒலித்துக்கொண்டிருந்தாலும் வேன் என்னமோ அதையும் தாண்டி வேகமாக ஓடிக்கொண்டிருந்தது.

சுப்பிரமணியம். வயது 38. ஒரு செக்யூரிட்டிக் கம்பெனியில் சூப்பர்வைசர் வேலை. அதுமட்டுமல்ல டிரைவரும் அவன்தான். சீன முதலாளிக்கு அவனைவிட சின்ன வயசுதான். அப்பா இறந்தபிறகு மகன் முதலாளியானான். அனைத்தையுமே இவனின் பொறுப்பிலேயே விட்டுவிட்டான். வேலைக்குப் புது ஆட்களை எடுப்பது முதல் அவர்களின் சம்பளம்வரை அவனே பார்த்துக்கொள்வான். ஆட்கள் வேலைக்கு வராவிட்டால் அந்த இடத்திற்கு வேறு ஆளைக் கந்திக்குப் (மாற்று ஆள்) போடுவதும் அவனது வேலையாகவே இருந்தது. சில சமயங்களில் யாரும் இல்லையென்றால் அவனே அங்கே போய் வேலை பார்க்கவேண்டியும் வரும். இன்றும் அப்படி ஒரு நிலைமையில்தான் அவன் இருந்தான். இரண்டு பேரை ஜூரோங் ஐலேண்டில் இறக்கிவிட்டு அவன் நேராக காஸ்காடேன் கொண்டோவுக்குப் போகவேண்டிய சூழல். இந்நேரம் பார்த்து மகளின் அழைப்பு.

என்ன நடந்திருக்கும்? இத்தனை நாட்களாக எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நல்லாத்தானே இருந்தாள். இப்போது என்ன வந்தது இவளுக்கு? விருப்பப்பட்டுத்தானே அம்மா பின்னால் போனாள். அவனுக்குள் கேள்விகள் துளைத்துக்கொண்டிருந்தன. குமுதாவிற்கு ஒரு போன் போட்டுக் கேட்டுவிடலாமா என்றுகூட நினைத்தான். அதற்கு அவன் மனம் ஒப்பவில்லை.

விரும்பித்தான் அவளை அவன் திருமணம் செய்துகொண்டான். அந்தத் திருமணம்கூட எளிதில் நடைபெறவில்லை. குமுதாவின் பெற்றோருக்கு ஏனோ அவனைப் பிடிக்கவில்லை. ஒரு படத்தில் தனுஷ் சொல்வதுபோல், பார்த்தவுடனேயே என்னைப் போன்றவர்களை உங்களுக்குப் பிடிக்காது; பழகப் பழகத்தான் பிடிக்கும் ரகம் இவன். கோலாலம்பூரிலிருந்து வந்திருந்த தூரத்து உறவுக்கார அண்ணனைக் கூட்டிக்கொண்டு குமுதாவின் வீட்டிற்கு இவன் பெற்றோர் திருமணம் பேச சென்றபோதுகூட அவர்கள் இவனை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. பொறுத்து பொறுத்துப் பார்த்த அண்ணன்,

‘பொண்ணுக்குப் பையனைப் பிடித்திருக்கு; பையனுக்கும் பொண்ணைப் பிடித்திருக்கு; இரண்டுபேருமே மேஜர். இரண்டுபேருமே அப்பா அம்மா ஆசியோட கல்யாணம் பண்ணனும்னு ஆசைப்படுறாங்க; முறைப்படி கேட்கிறோம். நீங்க ஒத்துக்கிட்டா எல்லார் ஆசிர்வாதத்தோடும் இந்தக் கல்யாணம் நடக்கும். இல்லன்னாகூட இந்தக் கல்யாணம் நடக்கும்; நாங்களே கல்யாணத்தை நல்லபடியா நடத்திடுவோம்.’

எனப் பேசப்போய், அவர்கள் வீட்டார் எகிறிக்குதிக்க, அண்ணனும் பதிலுக்குப்பேசப் பேச, அம்மா அண்ணாவிடம் அமைதியாக இருக்கும்படி கையெடுத்துக் கும்பிடவும் அப்பா நெஞ்சைப் பிடித்துக்கொண்டு கீழே விழவும் சரியாக இருந்தது. அனைத்துப் பேச்சுவார்த்தைகளும் அப்படியே அறுந்துபோய் அண்ணாவின் காரிலேயே அப்பாவை யூனிவர்சிட்டி மருத்துவமனையின் அவசரப்பிரிவில் கொண்டுபோய்ச் சேர்த்தார்கள். ஏற்கனவே இரண்டு முறை இதுபோலவே நெஞ்சுவலி வந்து இதே மருத்துவமனையில் அப்பா எட்மிட் ஆகியிருந்ததால் மருத்துவர்களும் துரிதமாகச் செயல்பட்டு அவரை மருத்துவமனையில் தங்க வைத்து சிகிச்சைக் கொடுக்க ஆரம்பித்தனர். இரண்டொரு நாளுக்குப் பிறகு அப்பா பெயர் வெட்டப்பட்டு வீட்டுக்கு வந்தார். குமுதாவும் அவனோடு தன் வீட்டை விட்டு வந்துவிட்டாள். அவள் வீட்டார் வந்து கூப்பிட்டும் அவள் அவர்களுடன் போக மறுத்துவிட வேறுவழியில்லாமல் அவர்கள் திருமணத்திற்குச் சம்மதித்தனர் ஒரு நிபந்தனையுடன்.

‘எங்களுக்கு விருப்பமில்லாத இந்தத் திருமணத்திற்கு நாங்கள் எந்தச் செலவும் செய்யமாட்டோம்’

‘உங்க சம்மதம் ஒன்றே போதும், மற்றதை நாங்க பார்த்துக்கொள்கிறோம்’

ஏதோ சொல்ல வந்த அப்பாவை ஜாடை காட்டிவிட்டு சொன்னாள் அம்மா.

ஒரு சனிக்கிழமை மாலை கல்சாவில் திருமணம் இனிதே நடந்தேறியது. காதலிக்கும்வரை எல்லாமுமாக இருந்து அவனுக்குள் மகிழ்வைக் கொடுத்தவள் கல்யாணத்திற்குப் பிறகு கொஞ்சம் மாறித்தான் போனாள். அவனின் அப்பா அம்மாவோடு தன்னால் ஒத்துப்போக முடிவதில்லை என தினமும் அவனை நச்சரிக்க ஆரம்பித்தாள். வேலை முடிந்து வீட்டுக்கு வந்தால் கொஞ்சம்கூட ஓய்வு கிடைப்பதில்லை, சமைப்பதற்கும்; அவன் அப்பாவைப் பார்ப்பதற்கும் தான் என்ன இந்த வீட்டு வேலைக்காரியா எனக் கேட்ட ஆரம்பித்தாள்.

அப்பாவுக்கு உடம்பு சரியில்லாமல் போனதிலிருந்து அம்மாதான் அனைத்தையும் பார்த்துக்கொள்கிறாள். துவாஸில் இருக்கும் ஒரு கம்பெனியில் சாதாரண வேலையாளாகப் பணிபுரியும் அம்மா காலையிலையே எழுந்து சமைத்து வைத்துவிட்டு, அப்பாவுக்குத் தேவையான அனைத்தையுமே செய்துவிட்டுத்தான் வேலைக்குச் செல்வாள். காலையில் சென்றால் கூடுதல் வேலையெல்லாம் முடித்துவிட்டு அம்மா வீட்டிற்கு வருவதற்கு இரவு ஒன்பது பத்தாகிவிடும். குளிரூட்டியில் இருக்கும் உணவுகளை மைக்கரோவேவ் அவனில் வைத்து அப்பா சூடாக்கிச் சாப்பிட்டுக்கொள்வார். இவன் பெரும்பாலும் வெளியிலேயே சாப்பிட்டுவிட்டு வந்துவிடுவான். குமுதா தனது பலதுறைத்தொழிற்நுட்பக் கல்லூரியின் பட்டயப் படிப்பை முடித்துவிட்டு ஒரு கப்பல் கட்டுமானத்துறைச் சார்ந்த அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்தவள், வீட்டுக்கு வந்து அவன் அப்பாவிற்கு உணவைச் சூடாக்கிக் கொடுப்பதைக் கூட சிரமமாக இருக்கிறது என்கிறாள். இவள் சமைப்பது என்று சொல்வதுகூட அம்மா சமைத்து வைத்துப்போன உணவுகளைச் சூடாக்குவதும் கழுவி வைப்பதும் மட்டும்தான். நாளுக்கு நாள் அவளின் நச்சரிப்புத் தாங்காமல், அப்பா அம்மாவிடம் சொல்லிவிட்டு ஜூரோங் வெஸ்ட் பகுதியில் ஒரு வாடகை வீடு பார்த்துக் குடிபோனான். அப்பாவின் முகத்தில் கொஞ்சம் கோபமும் வருத்தமும் தெரிந்தது. அப்போதுகூட அம்மா எதுவும் சொல்லாமல்,

‘எங்க இருந்தாலும் நல்லா இருங்க… அது போதும் எனக்கு’

என்றாள்.

தனியாக வந்ததில் குமுதாவிற்குத்தான் அதிக சந்தோஷம். இப்போதுதான் சுதந்திரமாக இருப்பதாக உணர்ந்தாள். யாழினி பிறந்த பிறகு இதுவரை அவ்வளவாகத் தொடர்பில் இல்லாத அவளின் பெற்றோர் இப்போது அதிகமாக உறவாட ஆரம்பித்துவிட்டனர். இவள் அவர்கள் வீட்டிற்குச் செல்வதும் அவர்கள் குடும்பத்தோடு இவன் வீட்டில் தங்குவதும் என புதுசு புதுசாய்க் காட்சிகள் அரங்கேறின. இவனின் அப்பா அம்மா என்றாவது வந்தால் மூஞ்சைத் தூக்கிவைத்துக்கொள்வாள். தன் அறையை விட்டு வெளியேகூட வரமாட்டாள். அவனின் பெற்றோர் தங்களின் வருத்தத்தைக் காட்டிக்கொள்ளாமல் அமைதியாக இருந்து போய்விடுவர்.

‘நான்தான் அப்பவே சொன்னேன்ல, போகவேணான்னு, நீதான் கேட்க மாட்டுற, மகனைப் பார்க்கனும், மருமகளைப் பார்க்கனும், பேத்தியைப் பார்க்கனும்னு… இப்ப பாரு, ஒரு மரியாதைக்காவது வந்து பார்க்கிறாளா… ரூம்லேயா இருக்கா…’

‘பேசாம இருங்க, பையன் காதுல விழுந்து, அவன் மனசு கஷ்டப்படப்போவுது’

அப்பா பேசுவதும் அம்மா அப்பாவை அமைதிப்படுத்துவதும் அவனின் காதில் விழாமல் இல்லை. அவனுக்குக் கோபம் கோபமாக வரும். அவளை ஓங்கி ஓர் அறை விடலாம் போலிருக்கும். அப்பா அம்மாவிற்காகப் பேசாமல் இருந்துவிடுவான். அவர்கள் போகட்டும் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று அமைதியாக இருப்பான்.

அவர்கள் போனவுடனேயே அவசரமா வெளியே வருவதுபோல் வந்து,

‘ஏன் அதுக்குள்ள போயிட்டாங்க, சாப்பிட்டுவிட்டு சாயந்திரம்போல போயிருக்கலாமே, நீங்களாவது சொல்லக்கூடாதா?’

என்பாள்.

‘ஏன் அவர்கள் இவ்வளவு நேரம் இங்குதானே இருந்தார்கள் அப்ப வந்து ஒரு வார்த்தைச் சொல்லியிருக்கலாமே,’

கேட்க நினைப்பான். ஆனால், கேட்கமாட்டான். ஏதாவது கேட்டாலும் சொன்னாலும் இருவருக்குமிடையே வீண் சண்டைதான் வரும் என அவன் பதில் ஏதும் பேசாமல் போய்விடுவான். இந்த தொடர் மௌனத்தின் விளைவால் அவர்களின் உறவில் ஒரு மெல்லிய கீறல் ஏற்பட்டு அதன் அகலமும் ஆழமும் நாளுக்குநாள் நீண்டுகொண்டே போனது. இருவருக்கும் இடையேயான பேச்சும் முற்றாக நின்றுபோன ஒரு பொழுதில்,

‘எனக்கு உங்களோடு வாழப் பிடிக்கல’

‘ஏன்? பிடித்துதானே காதலித்தாய்? கல்யாணம் செய்துகொண்டாய்?’

‘அப்ப பிடித்திருந்தது, இப்ப இல்ல, அறவே பிடிக்கல’

‘ஏன்?’

‘உங்க கேள்விக்கெல்லாம் என்னிடம் பதிலில்லை. ஆனால் ஒன்றில் மட்டும் தெளிவாக இருக்கிறேன். இனி உங்களோடு என்னால் வாழ முடியாது’

‘இதுதான் உன் இறுதியான முடிவா?’

‘ஆமாம்’

‘சரி, யாழினி……’

‘அவளை என்னுடன் வைத்துக்கொள்வேன்’

‘அவள் எனக்கும் மகள்’

‘நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்ளலாம்’

என யாழினையைத் தூக்கிக் கொண்டு கிளம்பிப் போனாள். சில நாட்களுக்குப் பிறகு அவளின் வழக்குரைஞரின் மூலமாக விவாகரத்து மனு ஒன்று அவனுக்கு வந்தது. அம்மா அழுதாள்.

‘அவள் காலில் விழுந்தாவது கூட்டிக்கொண்டு வருகிறேன். நீ இதில் கையெழுத்துப் போடாதே.’

என்றாள். அப்பா எதுவும் செல்லாமல் அனைத்தும் தெரிந்த ஞானியாய் அமைதியாக இருந்தார். அனைத்தும் அவனை விட்டுப் போனது. குமுதா, தான் வேலை செய்த கம்பெனியில் மெரின் இன்ஜினியராக இருந்த ஒரு தமிழ்நாட்டுக்காரனை மணந்துகொண்ட பிறகு மகள் யாழினையைப் பார்ப்பதும் படிப்படியாகக் குறைந்து போனது. தன் புதுக்கணவருக்கு இவன் யாழினியைப் பார்ப்பது பிடிக்கவில்லையெனக் காரணம் சொல்லி ஒட்டிக்கொண்டிருந்த கொஞ்ச நஞ்ச உறவையும் வெட்டிவிட்டாள். அதையும் மீறி யாழினியைப் பார்ப்பதை அவன் விட்டுவிடவில்லை. முன்பிருந்த அடுக்குமாடி வீட்டிற்கு நேரெதிரே தங்கியிருந்த அஞ்சலையின் மூலமாக அம்மா, யாழினி படிக்கும் பாலர் பள்ளியைப் பற்றிய தகவலைச் சொன்னாள். அம்மாவுடன் அவனும் சென்றபொழுது அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் யாழினியைப் பார்க்க அனுமதிக்கவில்லை. ஆனால், அவர்களைப் பார்த்துவிட்ட யாழினி, ‘அப்பா அப்பா’ என்று அழைத்த பிறகே நீண்டதொரு விவாதத்திற்குப் பிறகு, பள்ளியின் நிர்வாகம் அவன் யாழினியைப் பார்த்துப்பேச அனுமதித்தது.

அதன்பிறகு தொடக்கப்பள்ளி முதல் இன்றைய உயர்நிலைப்பள்ளிவரை தனக்கு ஓய்வு கிடைக்கும்போது பார்த்து வருவான். இதற்கிடையில் நடந்த அப்பாவின் மரணமும் அதற்கு அடுத்த ஆண்டிலேயே அம்மாவின் மரணமும் அவன் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. அப்பா அம்மா இருவரின் இறப்புக்கும் குமுதா வரவேயில்லை. அவன் பலமுறைத் தொடர்புகொண்டும் அவள் ஏனோ வரவில்லை. யாழினியையும் அனுப்பவில்லை. மருமகள் முறையில் இருந்து அவள் செய்யவேண்டியவற்றை தூரத்து உறவுக்காரப் பெண்தான் செய்தாள். பேரப்பிள்ளை கொள்ளிவைக்கக் கூட ஆளில்லாமல் அப்பா அம்மாவின் இறுதியாத்திரை அவன் மனத்தைப் பெரிதும் பாதித்தது. இச்சூழலில்தான் அவனின் உறவுகள் அவனை இன்னொரு திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தி அவன் இன்னொரு திருமணம் செய்துகொள்ளவேண்டிய அவசியத்தையும் அவனுக்கு அடிக்கடி சொல்ல ஆரம்பித்தனர்.

‘உன்னை விட்டுட்டுப் போனவ, இன்னொருத்தனை மணந்துகொண்டு மேலும் மூன்று பிள்ளைகளையும் பெத்துக்கிட்டு மகிழ்ச்சியாக இருக்கும்போது நீ ஏண்டா உன்னோடு வாழ்க்கையை இப்படி தனிமையில ஓட்டனும்?’

‘சொந்தக்காரங்க எப்பவும் உன்கூட இருக்கமாட்டாங்க. உனக்குனு ஒரு உறவு இருந்தாதான் நாளைக்கு உனக்கு ஒன்னுனா கூட நிப்பாங்க’

‘இப்படி தனித்து வாழ்ந்து எதைச் சாதிக்கப்போற, இந்த வாழ்க்கை ஒரு தடவதான், வாழ்ந்துட்டுப் போறீயா’

இப்படியாகப் பலதரப்பட்ட பேச்சுக்களைக் கேட்டுக்கேட்டுப் பழகிப்போனவனை ஒருநாள் அவன் மாமா பார்த்து,

‘நம்ம சொந்தத்துல ஒரு பொண்ணு இருக்கு, நல்ல பொண்ணு, உன்ன பத்தி சொல்லியிருக்கேன், நீ சரின்னு சொன்னா பேசி முடிச்சிடலாம்’,

என்றார்.

‘யோசித்துச் சொல்கிறேன் மாமா’

என்றவன், மறுநாளே மறுகல்யாணத்துக்குச் சரியென்றான்.

நாளை சனிக்கிழமை. நல்ல நாள் பெண் பார்க்கப் போகலாம் என்று மாமா சொல்லியிருந்தார்.

ஆனால் யாழினியின் திடீர் தொலைபேசி அழைப்பு அவன் மனத்தை ஏதோ செய்தது. இரண்டு வேலையாட்களை ஜூரோங் ஐலண்டில் இறக்கிவிட்டு, காஸ்காடன் கோண்டாவுக்கு வந்தவன், செய்யவேண்டிய அடிப்படை வேலைகளை முடித்துவிட்டு நாற்காலியில் சாய்ந்தான். மேல் சுவற்றில் ஒரு தாய்ப்பல்லி அதன் குட்டிக்கு உணவாக ஏதோ ஒன்றைக் கொடுத்துக்கொண்டிருந்தது. அக்காட்சியைச் சிறிது நேரமாகவே உற்று நோக்கிக்கொண்டிருந்தவன் தன் தொலைபேசியை எடுத்து மாமாவை அழைத்தான்.

‘மாமா, நாளைக்குப் பொண்ணு பார்க்கப் போகவேண்டாம், நாளைக்கு மட்டுமல்ல இனி என்னைக்குமே’ 

தொடர்புடைய சிறுகதைகள்
இன்று முதல் இரவு. புதிய இடம். புதிய சூழல். முதன்முதலாகப் படுக்கப்போகும் ஒரு கட்டில், மெத்தை, அதன்மேல் வெண்விரிப்பு, போர்வை மற்றும் தலையணை. அனைத்தும் எனக்குப் பழக்கமில்லாதவை. இந்த இடத்தின் காற்றும்கூட எனக்கு வித்தியாசமாகப்பட்டது. உடலில் வேறு விதமான, இதுவரை நான் அறிந்திராத ...
மேலும் கதையை படிக்க...
அப்பா மீண்டும் பழையபடி ஆரம்பித்துவிட்டார். இந்த வார இறுதியில் தஞ்சோங் ஈராவ் கம்பத்துக்குச் சென்றபோது பலகைக் கடைக்காரன் ஆமெங்கின் பேச்சின் ஊடே என்னால் இதை அறிந்துகொள்ளமுடிந்தது. அம்மாவுக்குக் கூட இந்தப்போக்குப் பிடிக்வில்லை. முன்பிருந்தே அண்ணனுக்கும் இது பிடித்ததில்லை. ஏன் எனக்கும்கூட இது பிடிக்கவில்லைதான். ...
மேலும் கதையை படிக்க...
‘அன்பு, நீ இங்க தங்கக்கூட வேணாம், கொஞ்ச நேரம் வந்துட்டாவது போ...அது போதும்’ அந்தக் குரல் அடிக்கடி என்னைத் தொந்தரவு செய்துகொண்டேயிருந்தது. இதுநாள்வரையில் இதைப்பற்றி நான் யோசித்துப் பார்த்ததுகூட கிடையாது. அப்படி யோசிக்க நேரமும் அவசியமும் இருந்ததும் இல்லை. காலையில் அவசர அவரமாக ...
மேலும் கதையை படிக்க...
திரு. பரந்தாமன் அன்றைய மாலைப்பொழுதில் மிச்சமிருக்கும் வயதைத் தூக்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தார். இதுநாள்வரையிலான வாழ்க்கை அவருக்குத் தூக்கிப்போட்டுவிட்டுப் போகும் காகிதக் குப்பைகளாகத் தெரிந்தது. ஏறக்குறைய அவரின் பெரும்பாலான வாழ்க்கையின் பக்கங்கள் எழுதப்பட்டு இறுதி அத்தியாயத்துக்காக மட்டும் காத்திருப்பதாக அவருக்குத் தெரிந்தது. மனம் ...
மேலும் கதையை படிக்க...
ஒரு விடியலின் கிழக்குப்பொழுதுகள்
அப்பாவின் படகு
படையல்
மன அழல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)