தாய்மை..ஒரு கோணம்

 

நான் ஒரு மெடிக்கல் ரெப்ரெஸன்டேடிவ்.

வெள்ளை உடை உடுத்தி, டை அணிந்து, மருந்து சாம்பிள்கள் அடங்கின கருப்பு கைப்பையை சுமந்து கொண்டு, ஊர் ஊராய்ச் சுற்றுவது என் வேலை.

என் அலங்காரத்தையும், கைப்பையையும் பார்த்தாலே, நான் என்ன வேலை செய்பவன் என்று முகத்தில் எழுதி ஓட்டியிருக்கிறது என நண்பர்கள் கேலி செய்வதுண்டு.

பி.காம். பாஸ் பண்ணியதும் ‘பாங்க் வேலை’ வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றவன்தான் நானும்.

இரண்டு வருஷங்கள் அந்த லட்சியத்தின் காரணமாய் வீட்டில் ஈ ஒட்டின பிறகே, ‘லட்சியமாவது, கிட்சியமாவது! எந்த வேலையானாலும் பரவாயில்லை, வீட்டில் தண்டச்சோறு சாப்பிட்டது போதும்’ என்ற ஞானோதயம் வந்தது.

இந்த மருந்துக் கம்பெனியில் வேலை கிடைத்ததும் அதிர்ஷ்டம்தான்.

நல்ல சம்பளம், பாட்டா, குறை சொல்லும்படி ஒன்றுமில்லை.

ஆனால் இப்படி ஊர் ஊரைச் சுற்றுவதும், கண்டகண்ட உணவை உட்கொள்ளுவதும், சிடுமூஞ்சி டாக்டர்கள் சிலரின் காரணமில்லாத வசவுகளைத் தாங்கிக்கொள்வதும், அவ்வப்போது அலுப்பைத் தருவதால், அக்கடா என்று ஒரு ஊரில் இருக்க மாட்டோமா என்ற நப்பாசை எழுகிறது.

இந்த டவுனுக்கு நான் இன்று காலைதான் வந்தேன்.

ஹோட்டலில் அறை எடுத்து, பெட்டியை வைத்தவன், இதுவரை எட்டு டாக்டர்களைப் பார்த்தாயிற்று. பாக்கியிருப்பவர்கள் நாளைக்குத்தான்.

மாலை ஐந்தைத் தொடுகையில் ரூமுக்கு வந்தேன். பையனைக் கூப்பிட்டுக் காபி கொண்டுவரச் சொல்லிவிட்டு படுக்கையில் சாய்ந்தேன்.

காபி வந்தது. குடித்துவிட்டு, குட்டித் தூக்கம் போட்டேன்.

மறுபடி கண்களைத் திறந்து பார்த்தபோது, மணி ஆறேகால்.

தூங்கினதில் அலுப்பு ஓரளவுக்குப் போயிருந்தது.

முகத்தைக் கழுவினவனுக்கு, சினிமா போனால் என்ன என்று தோன்றியதால், கீழே இறங்கி ஒரு ரவா தோசை சாப்பிட்டு விட்டு, எதிர்ச்சாரியில் இருந்த படக் கொட்டகைக்குள் நுழைந்தேன்.

புதுப்படம்தான். சென்னையில் ‘அடிதடி’ அமர்களத்துடன் ஓடிகொண்டிருக்கும், ஒரு பிரபல கதாநாயகனின் படம்.

பால்கனிக்கு டிக்கெட் வாங்கிக்கொண்டு மாடிக்குப் போனேன்.

தரை மகா ஜனங்களின் ஆர்வம் நடுத்தர வகுப்பினருக்கு இல்லை போலும்!

பால்கனியில் பத்து, பன்னிரண்டு பேருக்கு மேல் இல்லை.

இரண்டாவது வரிசையில், காற்று நன்றாக வருவதற்காக முன் இருக்கையில் அமர்ந்தேன்.

விளம்பர ஸ்லைடுகள் ஓடிக்கொண்டிருந்தன.

‘எல்லாவித சிகை அலங்காரத்துக்கும் வருவீர் முனியாண்டி சலூனுக்கு’ என்ற விளம்பரத்தில் ‘புஸ்’சென்ற தலைமுடியுடன் ஒரு தலை தெரிந்தது. சொந்தக்காரனின் தலையா?.

‘கென்னடி வறுகடலை, பட்டாணிக் கடை’ விளம்பரத்துக்காக, தமிழகத்தின் முன்னணி நடிகை பல்லைக் காட்டிக்கொண்டிருந்தாள்.

‘ராமதாஸ் பூக்கடை’ விளம்பரத்தில், சமிபத்தில் வெளியான ஒரு வெற்றிப் படத்தின் காதல் காட்சி.

வரிசைவரிசையை ஓடிக்கொண்டிருந்த ஸ்லைடுகள் என் பொறுமையைச் சோதிப்பதை உணர்ந்தேன்.

இன்னும் மாடிப்படி விளக்கு அணைக்கப்படவில்லை.

மெயின் படம் ஆரம்பமானதும்தான் அணைப்பார்களோ?

மாடிப்படியில் உரத்த குரலில் பேசியவண்ணம் தடதட வென்று யாரோ வருவது என் கவனத்தைக் கவர்ந்தது.

இரண்டு பெண்கள்-வயது ரொம்ப இருக்காது. இருப்பத்தைந்து, முப்பதுக்குள் தான் இருக்கும்.

மூத்தவளாகத் தெரிந்தவள் கையில் ஒரு குழந்தை. இன்னொருத்தியிடம் ஒரு பிளாஸ்டிக் கூடை.

“படம் ஆரம்பமாயிடுச்சா?” மூச்சிரைக்கப் பேசிக்கொண்டே அவர்கள் விறுவிறுவென வந்து, முதல் வரிசையில் எனக்கு நேர் எதிரில் அமர்ந்தார்கள்.

“ஸ்லைடுதான் ஓடுது…நல்லவேளை…படம் ஆரம்பிக்களைக்கா…” அக்கா, தங்கையா?

“கூடைய அப்படி பக்கத்தில வெச்சுக்க…தண்ணி, துணி எதனாச்சும் வேணுன்னா எடுக்கத் தோதாயிருக்கும்…”

இருவர் கழுத்திலும் தங்க மாலைகளும், காதில் பட்டையாய் வெள்ளைக்கல் தோடும் பளிச்சிட்டன.

வழவழவென்று எண்ணெய் தடவி வாரின தலையில் பாதி கனகாம்பரம், பாதி கதம்பம் எனச் சூடியிருந்தனர்.

***

நியூஸ் முடிந்து படம் ஆரம்பமானது.

கதாநாயகனின் பெயர் திரையில் காட்டப்பட்டதுமே கீழே இருந்து ‘ஹூய்!’ என்ற கரகோஷம், கத்தல்…

சென்னையில் இந்தப் பைத்தியக்காரத்தனமெல்லாம் குறைந்துவிட்டது. நடிகர் மோகத்தைப் பார்க்கவேண்டுமானாலும் இப்படிப்பட்ட ஊர்களுக்கு வர வேண்டுமோ?

முன்னாள் இருந்த பெண்களுக்குக் கதாநாயகன்பால் தனி கவர்ச்சி இருந்தது, டைட்டில் முடிந்து, கதாநாயகன் பாரவண்டி ஒன்றை இழுத்துக்கொண்டே பாடும் பாடலுடன் படம் ஆரம்பமானதும்-இருவரும் சிரித்தும், நாணிக்கோணியும், தங்களுக்குள் ளேயே பேசிக்கொள்வதில் தெளிவானது.

படம் தொடங்கி பத்து நிமிஷங்கள் ஆகியிருக்காது…

குழந்தை சிணுங்கத் தொடங்கினான்.

“யம்மா..யம்மா…” என்று தாயின் தாடையைத் தன்னைப் பார்த்து திருப்பினான்.

“தே..சும்மாயிரு பாபு. அங்கே பாரு, எம்புட்டு அளகா ஆடறாரு பாரு…” குழந்தையின் கவனத்தை அவள் கதாநாயகனிடம் திருப்ப முயன்றாள்.

ஒரு வயசுக் குழந்தைக்கு அதெல்லாம் புரியவில்லை.

“ம்மா..ம்மா…” என்று மெல்லச் சிணுங்கத் தொடங்கினான்.

“தேவகி, அந்த பால்புட்டியை எடு…அதுக்குள்ளாற இவனுக்குப் பசி வந்திடுச்சி…”

பால்புட்டியைப் பையனின் வாயில் சொருகிவிட்டு, மீண்டும் படம் பார்ப்பதில் ஆழ்ந்து போனாள் அவள்.

பாலைக் குடித்த பையன், “ம்மா..பாப்பா..த்தா…” என்று பேசத் தொடங்கினான்.

கொஞ்ச நேரத்தில் பையனுக்குப் படம் அலுத்துவிட்டது.

“ம்மா…ம்மா…” என்று மறுபடி உரக்கவே அழத் தொடங்கினான்.

“பாலைக் குடிச்சிட்டு உறங்கக்கூடாது, சனியன்?. தேவகி, அந்த பொட்டலத்துல பிஸ்கோத்து இருக்கு எடு…”

பத்து நிமிஷத்தில் பிஸ்கோத்தை காலி பண்ணிய குழந்தைக்கு, இருட்டைப் பார்த்ததால் பயமாக இருந்ததோ என்னவோ…

“யம்மா..ம்மா…” என்று பெரிதாகக் கத்த முற்பட்டான்.

“இந்தா, இங்கே பாரு…தோ பாபு…பாபு பையா…”

அம்மாவின் குலுக்கலும் கொஞ்சலும் சரிப்பட்டு வராமல், பையனின் கத்தல் பெரிசாகப் போனது…

“தேவகி, இந்தா…கொஞ்ச வெளியே பொய் வச்சிட்டு வா…எந்திரு…” படத்தை சுவாரஸ்யமாகப் பார்த்துக்கொண்டிருந்த தங்கை, போக மனசில்லாமல் எழுந்திருப்பது புரிந்தது.

வாசற்படியில் நின்று ‘ஹோ..ஹோ…’ என்று பையனைக் குலுக்கியபடியே எட்டிஎட்டிப் படத்தையும் அவள் பார்த்தாள்.

கொஞ்ச நேரத்தில் பையன் சமாதானமடைந்து போகவே, மீண்டும் உள்ளே வந்து அமர்ந்தாள்.

திரையில் கதாநாயகன் நாயகியுடன் கனவுக் காட்சியில் ஆடி, ஓடி, பாடி, கட்டியணைத்து, சாகஸங்கள் புரிந்துகொண்டிருந்தார்.

“என்னமா ஆடறாருக்கா!” என்று தங்கையும்,

“இவருக்கு வயசாயிடுச்சுன்ன நம்பமுடியுதா?” என்று அக்காக்காரியும் கேட்பது எனக்குக் கேட்டது.

இவர்களின் ரசிப்பு குழந்தைக்கு இல்லை.

மறுபடி சிணுங்கத் தொடங்கினான்.

“சூடான டீ..காபி..வடை…” படம் ஓடிக்கொண்டிருக்கையிலே குறுக்கும் நெடுக்குமாய் போன காபி பையனை அழைத்தால் அக்கா.

“பாலு இருக்குதாடா தம்பி?”

“இல்லைங்க..காபி, டீ கொண்டாரவா?”

“ஒரு காபிய இந்த பாட்டில்ல ஊத்திக் கொண்டுவரியா?”

குழந்தையின் பாட்டிலை நீட்டினாள்.

ஐந்து நிமிஷத்துக்குள் காபி வந்தது. அவனிடமிருந்து ஒரு வடை, ஒரு பன் இவற்றையும் வாங்கிக்கொண்டாள் அவள்.

குழந்தை காப்பியைக் கொஞ்சம் குடித்த பிறகு, ‘இனி வேண்டாம்’ என்பது போல வாயிலிருந்து பாட்டிலைத் தள்ளி விட்டு அழத் தொடங்கினான்.

“இந்தா பாபு…பன் வேணுமா, பன்? சனியனே, படம் பாக்க உடாமத் தொந்தரவு பண்ணுதே பீடை…”

தோளில் குழந்தையை சரிந்தவண்ணம் அதன் கையில் பன்னைக் கொடுத்தாள்.

“வூட்ல இந்நேரத்துக்குக் தூங்கிடும்…இன்னிக்குப் பார்த்து ரோதனை பண்ணுவது நாய…சனி…” தாய் மொணமொணப்பது எனக்குத் தெளிவாக கேட்டது.

பன்னைத் தின்றதும் குழந்தைக்குத் தூக்கம் வந்துவிட்டது.

தாயின் தோளில் சாய்ந்தவாறே தூங்கி போனதை, “அந்தத் துணிய தரையில் விரி தேவகி” என்று தங்கையை துணி விரிக்கத் சொல்லி, தரையில் நடைபாதையில் போட்டாள் அவள்.

கொஞ்சம் அமைதியுடன் நான் படம் பார்க்கத் தொடங்கினேன்.

கதாநாயன் ஒருவாறாகப் பத்து எதிரிகளை அடித்து நொறுக்கிக்கொண்டிருந்தார்.

எனக்கு போர் அடித்தது.

கால் அருகில் எதோ குறுகுறுவென்றதால் தடக்கென்று குனிந்து பார்த்தேன். எலி ஒன்று ஓடியது.

கிழே படுத்திருக்கும் குழந்தை கையில் பன் இருந்ததே…அதை எடுக்கப் போய்க் குழந்தையின் கையைக் கடித்துவிட்டால்?

எனக்கு தவிப்பாய் இருந்தது.

***

ல்லவேளை, இடைவேளை வந்தது. எழுந்து பாத்ரூம் பொய் விட்டு வந்தேன். விளக்கு போடப்பட்டதாலும், தாண்டிப்போன ஒருவன் காலை மிதித்துவிட்டதாலும் விழித்துக்கொண்டுவிட்ட குழந்தை அழத் தொடங்கியது.

“தே..தே..பாபு..இங்கே பாருடா…அம்மாடா..தே…” எடுத்துக் கையில் வைத்து ஆட்டத் தொடங்கினாள் தாய்.

குழந்தைக்கு அரைத்தூக்கம்.

பாட்டிலிருந்த ஆறிப்போன காபியைக் குழந்தையின் வாயில் வைத்தாள் அவள். இரண்டு வாய் குடித்துவிட்டு, மீண்டும் குழந்தை அழத் தொடங்கியது.

“இன்னாக்கா இவன்…படம் பாக்கவுடாம ரோதனை பண்றான்?. ஆமா, உனக்குத்தான் படம்னா பிடிக்குமே…இவனை வெச்சுகிட்டு எப்படிப் பாப்பே?”

“அத்தான் வந்தாருன்னா எனக்குக் கவலையில்லே…இன்னிக்கு ‘ஒந்தங்கச்சி ஊர்லேந்து வந்திருக்கே, கூட்டிட்டுப் போ’னுட்டரு…அவரு வந்த, வெளிய வெச்சிகிட்டு நிப்பாரு, எனக்குக் கஷ்டமில்ல…”

அக்கா தங்கை பேச்சிலிருந்து அவர்கள் குடும்ப விவகாரமும் எனக்கு ஓரளவு புரிந்தது.

தாயின் மடியில் உட்கார்ந்து மலங்கமலங்க விழித்த குழந்தையின் வாயில் வடையைக் கிள்ளி வைத்தாள் தேவகி.

குழந்தைக்கு வடையின் ருசி பிடித்து முழு வடையையும் சுவைக்கத் தொடங்கியது.

லைட் அணைக்கப்பட்டு ஸ்லைடுகள் காண்பிக்க ஆரம்பித்தார்கள்.

தோளில் போட்டுக்கொண்டு தட்டித் தூங்க வைக்க நினைத்த தாய், அக் குழந்தையைத் தோளில் சார்த்தின வேகத்தில் குழந்தையின் முகவாய் சீட்டின் பின்பக்கம் இடித்து, வலியின் காரணமாய் குழந்தை வீரிடத் தொடங்கியது.

குழந்தை அழும் காரணம் தாய்க்குப் புரியவில்லை.

“டே ராசா…பாபு..ஏண்டா அழுவறே? வடை கீளே உளுந்திடுச்சா? டேய்…” குழந்தையின் அழுகை குறையவில்லை.

கதாநாயகனும் நாயகியும் திருட்டுத்தனமாய் கல்யாணம் பண்ணிக்கொண்டு, திரையில் முதலிரவைக் கழித்துக் கொண்டிருந்தார்கள்.

“பீடை..மூதேவி…வாயை மூடு…வாயை மூடு சனி…எழவு…” முதலிரவின் இனிமையைப் பார்க்க முடியாத கோபத்தில், குழந்தையைப் ‘பளிச்’சென்று இரண்டு முறை அறைந்தாள் தாய்.

அழுகை பெரிசாகப் போனது. “சனியனைக் கொஞ்சம் வெளியே தூக்கிட்டுப் போயேன் தேவகி…”

“ஐயோ, என்னால் முடியாதுக்கா..சும்மாசும்மா என்னையே சொல்றே? நீ போ…” தங்கை மறுத்துவிட்டாள்.

அக்காக்காரிக்குக் கோபமான கோபம்.

விருட்டென்று எழுந்து வாசலுக்குப் போனாள்.

“வாயை மூடு…மூடு…” மேலும் ஒரு அடி குழந்தைக்குக் கிடைத்தது.

அறையின் வலி காரணமாகக் குழந்தை அலறத் தொடங்கவே, அந்தப் பக்கம் போன சோடாகலர் பையனிடமிருந்து கலர் ஒன்றை வாங்கிக் குழந்தையின் வாயில் மெல்ல அவள் ஊற்றினாள்.

அழுகைக் கொஞ்சம் குறைந்தது.

மறுபடி அவள் உள்ளே வந்து உட்கார்ந்தாள்.

அழுதழுது குழந்தைக்கு விக்கல் எடுத்துவிட்டது.

பால், காபி, பிஸ்கோத்து, வடை, பன், கலர் என்று ஒன்று மாற்றி ஒன்று கொடுத்தது வயிற்றை என்ன பண்ணியதோ…அடுத்த நிமிஷத்தில் கொடகொடவென்று அத்தனையும் வாந்தி எடுத்துவிட்டுப் பெரிதாய் அழத் தொடங்கியது.

திரையில் கதாநாயகன் தாயின் பெருமைகளைக் கூறி, ‘தாயே என் தெய்வம், என் கோயில், என் இதயம்…” என்று பாடத் தொடங்கினார்.

அழுகின்ற குழந்தையின் வேதனையைத் தாங்க இயலாத வனாக நான் எழுந்து, கீழே இறங்கி, கொட்டகையை விட்டு வெளியே வந்தேன்.

- வெளியான ஆண்டு: 1976 

தொடர்புடைய சிறுகதைகள்
அவன் கண்களை மூடிக்கொண்டான். மனசுக்குளே அவளை முழுசாய் நிறுத்திப் பார்க்க முயற்சித்தான். கிட்டத்தட்ட ஒரு மாசமாய் நினைத்துநினைத்துப் பழகி இருந்ததால் கூப்பிட்ட உடன் ஓடிவரும் நாய்க்குட்டி மாதிரி மனசுக்குள் வந்து நின்று கொண்டாள். அவள் ரொம்ப உயரமில்லை. ஐந்து இருநாடு இருந்தால் அதிகம். அந்த உயரத்திற்கு ஏற்ற பருமன். அவளிடம் ...
மேலும் கதையை படிக்க...
அன்று சியாமாவுக்கு இறைச்சி வாங்கிவரும் ஆள் வரவில்லை. வயலில் கரும்பு வெட்டுகிறார்களாம், போய் விட்டான். தேசிய நெடுஞ்சாலையில் அந்த டவுனுக்கு தெற்கே ஒன்றரை கிலோ மீட்டர் தள்ளி அமைந்திருந்த தொழில்சாலையில் எங்கள் இல்லமும் இருந்ததால் ஏதொரு விஷயத்திற்கும் எந்த ஒரு சாமான் வாங்கவும் ...
மேலும் கதையை படிக்க...
தெரு வெறிச்சோடிக் கிடந்தது. வழக்கமாகக் காணப்படும் சந்தடி. ஜன நடமாட்டம் இன்றி அதிசயமாய் அமைதியாய் இருந்தது. வெயிலைப் பொருட்படுத்தாமல் வாசப்படியில் அமர்ந்து தெருவை பராக்குப் பார்த்துக் கொண்டிருந்த கைலாசத்துக்கு அலுப்புத் தட்டியது. எழுந்து உள்ளே போகலாமா என்று நினைத்த நொடியில் ஒன்றின்பின் ஒன்றாகத் தெருக்கோடியில் ...
மேலும் கதையை படிக்க...
சியாமா-எங்கள் நாய்-இரண்டு நாட்களாய் சரியாய்ச் சாப்பிடுவதில்லை; மந்தமாய் இருக்கிறாள். டாக்டரிடம் கொண்டு காட்டினோம். 'நத்திங் டூ ஓர்ரி.. டிவர்ம் பண்ணுகிறேன்... சரியாயிடும்' என்றவர், "எக்ஸசைஸ் கொஞ்சம் கொடுத்துப் பாருங்களேன்; உடம்பு சுறுசுறுப்பாகும்" என்று சொன்னார். என்ன தேகப் பயிற்சி கொடுப்பது! பந்து விட்டெறிந்த பார்த்தேன்-இரண்டு ...
மேலும் கதையை படிக்க...
ப்ரீதி ரொம்ப சுத்தம். இன்றைக்கு என்றில்லை, சின்ன வயசு முதற்கொண்டே இந்த சுத்த உணர்வு ரொம்ப ஜாஸ்திதான். இவளையொத்த பெண்கள் பள்ளி விடுமுறை நாட்களில் ஸ்கூல் எக்ஸ்கர்ஷன், மகாபலிபுரம் போகிறோம். திருநீர்மலை ஏறப் போகிறோம் என்று அலைந்த நாட்களில் கூட, அவள் ...
மேலும் கதையை படிக்க...
ஆசை ஆசை ஆசை
வைராக்கியம்
விழிப்பு
வாக்
சுத்தம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)