தாய்ப்பாசம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 14, 2014
பார்வையிட்டோர்: 10,980 
 

குழந்தை நேஹாவுக்கு இரண்டு வயது ஆகிறது. காலையில் குழந்தையை எழுந்ததும் பல் துலக்கிவிட்டு பால் காய்ச்சி கொடுத்ததாள் துளசி. நேஹாவும் பாலை சமர்த்தாக குடித்துவிட்டு தன் குட்டி மிதிவண்டியில் உட்கார்ந்து விளையாட தொடங்கினாள். துளசி, காலையில் சமைத்து போட்ட பாத்திரத்தை தேய்ப்பதில் தொடங்கி வீட்டை பெருக்குதல் துணி துவைத்தல் போன்ற வேலைகளை செய்தாள். இடையிடையே குழந்தையையும் கவனித்துக்கொண்டாள்.

நேஹவை வீட்டின் வெளியில் அழைத்து சென்று கேட்டிற்கு உள்ளே நிற்கவைத்து காக்கை காட்டி சாதம் ஊட்டினாள். பின் அவளை தொட்டியில் போட்டு தூங்கவைத்தாள். துளசியும் சிறிது நேரம் ஓய்வு எடுக்கலாம் என எண்ணி அமர்ந்தபோது நினைவு வந்தது தான் இன்னும் சாப்பிடவில்லை என்பது. எழுந்து உணவு பரிமாறிக்கொண்டு தனியே அமர்ந்து உண்டு, பாத்திரத்தை கழுவி கவிழ்த்தாள்.

மதியநேரம் கழிவது சற்று சிரமமாய் தான் இருந்தது நாளேடுகளை சற்று நேரம் புரட்டினாள். நமக்கு விருப்பமானவரை எதிர்பார்த்து காத்திருந்தால் பொழுது ஆமைப்போல் நகர்வதை நாம் உணர்திருப்போம் கிட்டத்தட்ட அதே நிலையில் தான் துளசியும் இருந்தாள்.

மணி 4.30 ஆனதும் 5 நிமிட இடைவெளியில் அவள் வீட்டிற்கு வெளியில் வந்து எட்டி எட்டி பார்த்தாள். நடுவில் குழந்தை முண்டுவதை கொலுசின் ஒலியினால் தெரிந்துகொண்டு உள்ளே ஓடிச்சென்று தொட்டியை ஆட்டிவிட்டாள் துளசி. மறுபடியும் வெளியில் வந்து எட்டி பார்த்தாள். ஒரு நாகரீக நங்கை தூரத்தில் இந்த வீட்டை நோக்கி வருவதை கண்ட அவள் சுவிட்ச் போட்ட மின்விசிறியாக சுழன்று உள்ளே சென்று இன்ன நிறம் என்று சொல்ல முடியாத ஒரு வெளுத்து போன ஒயர்கூடையில் தண்ணீர் பாட்டில் மற்றும் செல்போனை எடுத்து வைப்பதற்கும் அந்த பெண் உள்ளே நுழைவதற்கும் சரியாகயிருந்தது. அவளிடம் துளசி, “பாப்பா தூங்குது அம்மா. ஐயா இன்னும் வரல மா. துணியலாம் மடிச்சு வச்சிட்டேன், நான் கெளம்புறேன் மா” பதிலை எதிர்பாக்காமல் சடசடவென கூறிக்கொண்டே காலனியை அணிந்துகொண்டாள். அவளும்,”சரி காலைல சீக்கிரம் வந்துரு” என்றவாறு உள்ளே சென்றாள். பள்ளிவிட்டு வந்து வீட்டில் தனியாக இருக்கும் தன் 6 வயது மகனிற்கு பசிக்குமே என்று எண்ணியவாறே தன் வீட்டை நோக்கி விறுவிறுவென நடந்தாள் துளசி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *