தாயின் மீது ஒரு மகனின் குற்றச்சாட்டு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 3, 2015
பார்வையிட்டோர்: 8,095 
 

பக்கத்து தெருவில் ஒரே அமர்க்களம், யாரோ இறந்து விட்டதாக செய்தி காட்டுத்தீ போல் பரவியது. விட்டிலிருந்து தெவில் எட்டிப்பார்த்தால், பெண்கள் குழம்பியபடி, அவசர அவசரமாக நடந்தும், ஓடிக்கொண்டும் இருந்தனர்.

“என்ன ஆச்சு, பிழைத்தாளா?” சிலர் பீதியுடன் கேட்டனர்.

“இல்லை, மகராசி, போய் சேர்ந்துட்டா. ”

“அவ பையன் வந்தானா?” என ஒருவள் கேட்க, “வந்து கீரான், என்ன செய்ய, ரொம்ப ரோசக்காரி, அவன் அழைத்தும் ஒரு நாளும் அவன்கிட்டே போய் இருக்கல…” என விமர்சித்தாள் மற்றொரு பெண்.

யார் அந்த மகராசி என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் எனக்கு உண்டாயிற்று. நானும் கையிலிருந்த வேலையை முடித்துக்கொண்டு, வெளியே அடுத்த தெருவுக்கு கிளம்பினேன். நிறைய பேர், ஆண்களும், பெண்களுமாக ஆங்காங்கே நின்று பேசிக்கொண்டும், வருத்தத்துடன் விமர்சித்துக்கொண்டும் இருந்தனர். இறந்தது பெண் என்றதால், அன்னிய ஆடவர் யாரும் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. ஒரு ஓலமும் இல்லை, ஒப்பாரியும் இல்லை, அமைதியே நிலவிய அந்த விட்டிலும், வெளியிலும் சோக முகங்களே தெரிந்தன. உரக்கமாக பேசாமல் மக்கள், மிகவும் தாழ்ந்த குரலிலேயே பேசிக்கொண்டிருந்தனர். இஸ்லாமிய முறைப்படி, ஜனாஸா வரவழைக்கப்பட்டு, அனைத்து காரியங்களும் முடிவடைந்தன. மாலை ஐந்து மணிக்கெல்லாம் ஜனாஸாவை அருகிலுள்ள பள்ளிவாசலுக்கு கொண்டு சென்று, தொழுகை முடிந்த பின், அடுத்துள்ள கப்ரஸ்தானுக்கு (இடுகாடு) கொண்டு சென்று பிரேதத்தை அடக்கம் செய்தனர்.

எனக்குத்தெரிந்த ஒருவரிடம் விஷயம் கேட்டேன். அவர் மறுநாள் என்னை வரச்சொல்லி, இறந்த அம்மையாரின் மகனுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

“அஸ்ஸலாமு அலைகும், என் பெயர் நயீம், அடுத்த தெருவில், வாடகை வீட்டில் தங்கியிருக்கிறேன். அம்மா இறந்தது தெரிந்து நானும் உங்கள் துக்கத்தில் பங்குகொள்ளவும், உங்களுக்கு ஆறுதல் கூறவும் கடமைப்பட்டுள்ளேன். அம்மாவைப்பற்றி கொஞ்சம் தெரிந்திருந்தாலும், உங்களையும் காணவேண்டும், கண்டு உங்களிடமே விசாரித்து உங்கள் சுக துக்கங்களை பரிமாறிக்கொள்ள ஆசை, அதனால் தான்…”, என்றேன். அவர் கண்கள் கலங்கின, உதடுகள் துடிதுடிக்க சிறிது நேரம் தலை குனிந்தார். பிறகு சமாளித்துக்கொண்டு, தலை நிமிர்ந்தார்.

“தியாகத்தின் சிரகம் தான் தாய்.” கண்களைத்துடைத்துக்கொண்டு அவர் தொடர்ந்தார்… “நான் என் அம்மாவை மட்டும் குறிப்பிடவில்லை, நம் அனைவருக்கும் இறைவன் அளித்த உயிருள்ள சிறந்த பொக்கிஷம் தான் தாய். அவள் அந்தஸ்தை வேறு யாரும் அடைய முடியாது.” என்றார்.

நானும் குனிந்தபடியே அதை ஆமோதித்து தலையசைத்தேன். “நீங்கள் ஜெர்மன் நாட்டில் பணியில் இருப்பதாக கேள்விப்பட்டேனே, எப்பொழுது வந்தீர்கள், அம்மாவின் மரணம் இங்கே நிறைய பேரை பாதித்துள்ளது போல் தோன்றுகிறதே, அவரைப்பற்றி தெரிந்து கொள்ளலாமா?” என கேட்டேன்.

“ஆமாம், ஜெர்மன் நாட்டில் தான் குடியிருக்கிறேன். வந்து இரண்டு நாள் தான் ஆனது, அம்மாவுக்கு பணிவிடை செய்ய எனக்கு பாக்கியம் இல்லை. அவள் போய் விட்டாள்.” அவர் குரல் தழுதழுத்தது. “நீங்கள் அவரை உங்களிடம் அழைக்க வில்லையா?’ நான் அக்கறையுடன் கேட்டேன்.

“இல்லை, அப்படியில்லை, அவர் தொடர்ந்தார், “என் தாய் எப்பொழுதும் உண்மை பேசியதே இல்லை …, அவள் எட்டு தடவை என்னிடம் பொய் கூறினாள்.

இந்த கதை என் பிறப்பிலிருந்து தொடங்குகிறது. நான் ஒரு மிகவும் ஏழை குடும்பத்தின் ஒரே வாரிசு, செல்லப்பிள்ளையாக இருந்தேன். நம்மிடம் உண்பதற்கு ஒன்றுமில்லாமலிருந்தது. எப்பொழுதாவது சாப்பிட ஏதாவது கிடைத்தால், அம்மா தன் பங்கையும் எனக்கே கொடுத்து விடுவாள். “நீ சாப்பிடு மகனே, எனக்கு பசியில்லை”, என்பாள். – இது அம்மாவின் முதல் பொய்யாக இருந்தது.

நான் சிறிது வளர்ந்ததும், வீட்டு வேலையை முடித்து, அருகிலுள்ள குளத்தில் மீன் பிடிக்க செல்வாள். ஒரு நாள், அல்லாஹ்வின் கிருபையால் இரண்டு மீன்களை பிடித்தும் வந்தாள். உடனே துரிதமாக மீன்களை சமைத்து சாப்பிடச்சொல்லி என் முன் வைத்துவிட்டாள். நான் அதை உண்டு, முள்ளில் ஒட்டிக்கொண்டிருக்கும் மீனை அவள் உண்டதைக்கண்டு வருத்தப்பட்ட நான், அடுத்த மீனை அவளிடம் கொடுத்ததற்கு, அதை திருப்பி என்னிடமே கொடுத்து கூறினாள், ” மகனே, நீயே சாப்பிடு, மீன் எனக்கு பிடிக்காதது உனக்கு தெரியுமில்லையா?” – இது அம்மாவின் இரண்டாவது பொய்யாக இருந்தது.

நான் பள்ளிக்கூடத்தில் சேரும் வயதில், அவள் ஒரு ஆடை தாயாரிக்கும் தொழிற்சாலையில் வேலைக்கு அமர்ந்தாள். வீடு வீடாக சுற்றி, ஆடைகளை விற்று வந்தாள். ஒரு நாள், குளிர்கால இரவில் மழையும் அதீகமாக கொட்டிக்கொண்டிருந்த சமயம், அவள் வராததால், நான் அவளை விட்டிலேயே எதிர்பார்ப்பதைவிட்டு, அடுத்த தெருக்களில் தேடினேன். அவள் மற்றவர் வாசலில் நின்று சில பொருட்களை விற்றுக்கொண்டிருந்ததை பார்த்து சொன்னேன், “அம்மா, போதும்மா, களைத்துப்போய் இருப்பீர்கள், குளிரும் கடுமையாக உள்ளது, நேரமும் அதிகமாகி விட்டது, நாளைக்கு மீதிப்பொருள்களை விற்கலாமே.” அதற்கு அம்மா கூறினாள், “நான் களைக்கவில்லை மகனே…” – இது அம்மாவின் மூன்றாவது பொய்யாக இருந்தது.

ஓரு நாள் என்னுடைய ஆண்டுப்பரிட்சையன்று என்னுடன் அவளும் செல்ல அடம் பிடித்தாள். நான் என்னுடைய இன்டெர் பரிட்சை எழுதிக்கொண்டிருக்கும் பொழுது, காயும் வெயிலில் அவள் ஒற்றைக்காலில் நின்று எனக்காக துவா கேட்டுக்கொண்டிருந்தாள். நான் வெளியே வந்தவுடன் என்னை ஆசையுடன் அரவணைத்து, அவள் எனக்காக வாங்கி ரெடியா வைத்திருந்த குளிர்ந்த ஜூஸ் குடிக்கக்கொடுத்தாள். நான் ஒரு மிடறு குடித்து, வியர்வை சிந்திக்கொண்டிருக்கும் அவள் முகத்தைக்கண்டேன். ஜூஸ் டப்பாவை அவளிடம் நீட்டினேன், கொஞ்சம் குடிக்கச்சொல்லி, அனால் அவளோ, “இல்லை மகனே, நீ குடி, எனக்கு தாகம் இல்லை….” என கூறி என்னையே முழுவதும் குடிக்கச்செய்தாள். – இது அம்மாவின் நான்காவது பொய்யாக இருந்தது.

என் தந்தையின் மரணத்திற்குப்பின், அம்மா என்னுடன் தனியாகவே வாழ்ந்து வந்தாள். வாழ்க்கை கடினமாயிற்று. வீட்டு செலவை கவனிக்கும் பொருட்டு நிலைமை பட்டினி கிடக்கும் வரை வந்து விட்டது. என் சித்தப்பா ஒரு நல்ல மனிதராக இருந்தார். அவ்வப்போது ஏதாவது கொடுத்து வந்தார். உற்றார் நமது நிலையைக்கண்டு, அம்மாவை மறு மணம் புரிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தினர், அவள் இளமையில் இருப்பதை நினைவூற்றினர். அம்மா மறுத்தாள், “இல்லை, எனக்கு துணை தேவையில்லை…” – இது அம்மாவின் ஐந்தாவது பொய்யாக இருந்தது.

நான் என் பட்டப்படிப்பை முடித்ததும், எனக்கு ஒரு நல்ல வேலை கிடைத்துவிட்டது. அம்மாவுக்கு இப்பொழுது ஓய்வு தேவை, விட்டு செலவுகளை நான் பொறுப்பேற்று கவனிக்கவேண்டும். அவள் முதுமை அடைந்து விட்டாள். ஆகவே, அவள் வேலை செய்வதை நான் தடுத்தேன். என் சம்பாத்தியத்தில் அவளுக்காக ஒரு பகுதியை ஒதுக்கினேன். அவளோ, “நீ வைத்துக்கொள், மகனே, என்னிடம் இருக்கிறது, எனக்கு பணம் தேவையில்லை…” என கூறி வாங்க மறுத்து விட்டாள். – இது அவளுடைய ஆறாவது பொய்யாக இருந்தது.

நான் என் வேலையுடன், உயர் படிப்பையும் முடித்துக்கொண்டேன். என் சம்பளமும் அதிகமாயிற்று. எனக்கு ஜெர்மனியிலிருந்து வேலைக்கு அழைப்பு வந்தது. நான் ஜெர்மனியில் குடியமர்ந்தபின், அம்மாவை அழைத்து என்னுடன் இருக்கச்செய்ய தொலைபேசியில் தொடர்புகொண்டேன். ஆனால் அவளோ எனக்கு இடையூறாக இருக்கக்கூடாதென நினைத்து, “எனக்கு வெளியே தங்குவது ஒத்துக்கொள்ளாது மகனே, என்னால் இருக்க முடியாமல் போய்விடும்”, என கூறி வர மறுத்துவிட்டாள். – இது அம்மாவின் ஏழாவது பொய்யாக இருந்தது.

அம்மா முதுமையால் மிகவும் தளர்ந்துவிட்டாள். புற்றுநோய் அவளை பற்றிக்கொண்டது. அவளை கவனிக்கும் தேவை ஏற்பட்டதினால், அனைத்து வேலைகளிலிருந்தும் விட்டு விலகி இங்கே வந்தேன். அவள் படுக்கையில் கிடந்தாள். என்னைக்கண்டு புன்னகைக்க முயற்சித்தாள். அவள் நிலையைக்கண்டு என் மனதில் உதிரம் கொட்டியது. அவள் மிகவும் மெலிந்து போய் இருந்தாள். என் கண்கள் கண்ணீர் வடித்தன. அதைக்கண்ட அவள், “அழாதே மகனே, நான் நன்றாக இருக்கிறேன், எனக்கு எந்த கஷ்டமும் கிடையாது.” என்றாள். – இது அம்மாவின் எட்டாவது பொய்யாக இருந்தது. அவள் நான் எட்டாத தூரத்தில் போய்விட்டாள்.

சிறிது நேரம் கழித்து, அம்மா என்றென்றைக்கும் தன் கண்களை மூடிக்கொண்டாள்.

“அம்மா… அம்மா…. ‘இன்னா லில்லாஹி, வ இன்னா இலைஹி, ராஜி’ஊன்.’ (நாம் இறைவனின் பொருளே, அவனிடமே திரும்பி செல்வோம்).” அவரால் தொடர்ந்து பேச இயலவில்லை.

இறைவன் அளித்த அருட்கொடைகளில், தாய் தான் தலை சிறந்தவள்.

தாய் உடையோர் அனைவரும், அந்தப்பொக்கிஷத்தை தொலைத்துவிடும் முன், அருட் கொடையாக மதித்து, அவளை பாதுகாத்து பரிபாலிக்கவேண்டும். தாயற்றோர், அவள் செய்த தியாகங்களை மனதில் கொண்டு, அவளுக்காக பிரார்திப்பது அவசியம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *