தாயாய், தாதியாய்..!

 

(அம்மா, சமூகத்திற்குச் சேவை செய்யத்தான் வேண்டும், ஆனால் எங்களுக்கு நீதான் வேண்டும் – மகளின் ஓலம் அவளது காதுகளில் மீண்டும் மீண்டும் எதிரொலித்தன)

‘அம்மா, நீ கட்டாயம் வேலைக்குப் போகணுமா..?’ அருகே படுத்து இருந்த ஆறு வயது கடைசிப் பெண் சங்கீதா கைகளைப் பற்றிக் கொண்டு கேட்டாள்.

‘ஆமா, கண்ணு கட்டாயம் போகணும், நீ சமத்தாய் தூங்கு. அக்கா பார்த்துக் கொள்ளுவா’

அவளுக்கு ஆறுதல் சொல்லி, தட்டிக் கொடுத்து அணைத்து தூங்க வைத்தாள். பக்கத்துக் கட்டிலில் இரண்டாவது மகள் சுகன்யா எந்தவித கவலையும் இல்லாமல் உறங்கிக் கொண்டிருந்தாள்.

நேரத்தைப் பார்த்துவிட்டு வேலைக்குப் போவதற்காக அவசரமாக எழுந்து உடை மாற்றினாள். யாரோ அவளை அவதானிப்பது போல அவளது உணர்வு சொல்லிற்று. திரும்பிப் பார்த்தாள்.

லாவன்யா! செல்போனும் கையுமாக வாசலில் நின்று கொண்டிருந்தாள்.

‘என்னம்மா வேலைக்குப் போகப் போறியா?’

‘ஆமா..!’ என்று தலையை மட்டும் அசைத்தாள்.

வார்த்தையில் சொல்ல மனதில் பலமில்லை. வாய் திறந்தால் பிள்ளைகளோடு வேண்டாத தர்க்கம் வரும். வேண்டாம், மௌனம் காப்பது நல்லது என்று நினைத்தாள்.

‘பேஸ்புக் பார்த்தியா..?’

‘பார்த்தேன்.’ ஒற்றைச் சொல்லில் பதில் சொன்னாள்.

‘தெரிஞ்சுமா போகணும் என்று அடம்பிடிக்கிறாய்.?’ ஒரு தாய் மகளுக்குச் சொல்ல வேண்டிய கண்டிப்போடு மகளிடம் இருந்து கேள்வி பிறந்தது.

‘வேறு வழியில்லை. நான் போய்த்தான் ஆகணும்.’

‘நாங்க நல்லாய் இருக்கணும் என்றுதானே உன்னுடைய உயிரைப் பணயம் வைச்சு நீ வேலைக்குப் போகிறாய்.?’

‘அப்படி ஒண்ணுமில்லை, இன்றைக்கு ஒன்றும் புதிசு இல்லையே, இத்தனை நாளாய் வேலைக்குப் போய்க் கொண்டுதானே இருக்கிறேன்.’

‘நான் பத்திரிகையில் எல்லாவற்றையும் விபரமாய் படிச்சேனே.’

‘என்ன படிச்சாய்..?’

‘இதைச் சாதாரண நிமோனியா வருத்தம் என்றுதானே நினைச்சிட்டு இருக்கிறாய். நீ நினைப்பது போல இல்லை இந்த கெரோனா வைரஸால பரவுற நோய். எவ்வளவு பயங்கரமான நோய் என்று தெரியுமாம்மா உனக்கு..?’

தெரிந்திருந்தாலும், அவள் மௌனம் சாதித்தாள். வேலைக்குப் போகும் நேரம் வாக்குவாதம் வேண்டாமே என்று நினைத்தாள்.

மூன்று பெண் குழந்தைகளையும் அவளிடம் விட்டுவிட்டு அவள்; கணவர் பிரிந்ததில் இருந்து அவளுக்கு எல்லாமே இவர்கள்தான். இங்கே வளர்ந்த பிள்ளைகள் என்பதால், எந்த முடிவும் எடுக்க முன் பதினாறு வயதே நிரம்பிய லாவன்யாவிடம் தான் ஆலோசனை கேட்பாள்.

லாவன்யாவிற்கு எப்போதுமே சிரித்த முகம். கோபமே வராதோ என்று நினைக்கத் தோன்றும். அம்மாவுக்கு உதவியாய் வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் பொறுப்பாக தன் தலையிலே இழுத்துப் போட்டுக் கொண்டு அவள் செய்யும்போது ‘இந்த சின்ன வயதிலே இப்படி ஒரு பெண்ணா..?’ என்று அவளது செய்கை மற்றவர்களை ஆச்சரியப்பட வைக்கும்.

‘அம்மா எனக்காக ஒரு நிமிஷம் உட்காரேன்;’ என்றாள் லாவன்யா. மறுக்கமுடியாமல் உட்கார்ந்தாள்.

லாவன்யா கையிலே வைத்திருந்த செல்போனில் யாரோ ரெக்ஸ் பண்ணிய செய்தியை உரக்கப் படித்துக் காட்டினாள்.

‘தடிமன் காய்ச்சல் போலத்தான் இந்த கோவிட்-19 என்று புதிதாகப் பெயரிடப்பட்ட ஒரு புதுவகையான கொறோனா என்று சொல்லப்படுகின்ற வைரஸ்ஸாலதான் பரவுகிறது என்று போட்டிருக்கிறார்கள். இதற்கு இன்னமும் தடுப்பு மருந்து இல்லையாம்’ என்றாள்.

‘சார்ஸ் நோய் பரவியதைப் போல இருமல் இருக்கும், மூச்சுவிட கஷ்டமாய் இருக்கும், என்பது போன்ற அறிகுறிகள் காணப்படுமாம். இப்படித்தான் சீனா நாட்டில் உள்ள குவான்டொங் என்ற இடத்தில்தான் சார்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவரை 2002ம் ஆண்டு நவம்பர் மாதம் கண்டு பிடித்திருந்தார்கள். இம்முறை சீனாவின் வுகான் மாகாணத்தில் கொரோனா வைரஸால பாதிக்கப்பட்டவரை டிசெம்பர் மாதம் 2019 இல் கண்டு பிடித்திருக்கிறார்கள். ஆனால் இந்த சொற்ப காலத்தில் பல நாடுகளுக்கு இந்த நோய் பரவி இருக்கின்றது. இது ஒரு ஆட்கொல்லி நோய், மனிதர் மூலம் மனிதருக்குப் பரவுகிறது.’

லாவன்யா தனது சினேகிதி அனுப்பிய ரெக்ஸ் செய்தியைச் சத்தம் போட்டுப் படித்துவிட்டு என்னை நிமிர்ந்து பார்த்தாள்.

‘மிக வேகமாக இந்த நோய் உலகமெல்லாம் பரவுது என்று தெரியும், அதற்கெனன் செய்வது, தாதிகளாய் இருக்கும் நாங்களே பின்வாங்கினால்..?’ என்றாள். வேலைக்குப் போகும் அவசரம் அவளுக்கு.

‘இல்லையம்மா, நீ சாவோடு விளையாடுகிறாய் என்று சொல்ல வர்றேன்.’ அவள் அவசரமாய் இடை மறித்தாள்.

‘இருபது வருஷமாய் இந்த தாதித் தொழிலைத்தானே பார்க்கிறேன். இப்ப மட்டும் ஏன் தடுக்கிறாய்..?’

‘காரணம் இருக்கு. இந்த நோய்க்கு இன்னமும் மருந்தே கண்டு பிடிக்கலை. இது ஒரு ஆட்கொல்லிநோய். உன்னோட வேலை செய்த சினேகிதி எப்படிப்பட்ட நோய் என்று தெரியாமலே, சார்ஸ் நோயாளிக்கு சேவை செய்யப்போய் பலியானதை மறந்திட்டியா, தெரிந்து கொண்டும் இப்ப நீ வேலைக்குப் போகப் போறியா..?’

ஆருயிர் சிநேகிதியை நினைத்துப் பார்த்தாள். எதற்காக இந்த உயிர்த் தியாகம். கடமை உணர்விற்காகவா..?

யாருக்காக அவள் தனது உயிரைக் கொடுத்தாளோ, அவள் இறந்தபோது அவர்கள் யாருமே ஏன் என்றுகூடத் திரும்பிப் பார்க்கவில்லை. சேவையில் இருக்கும்போது ஒரு இராணுவவீரன் இறந்தால், அல்லது ஒரு பொலீஸ் உத்தியோகத்தர் இறந்தால் கொடுக்கும் மரியாதைகூட சேவையின்போது இறந்த அந்த நார்ஸ_க்கோ, அல்லது அப்போது இறந்த அந்த டாக்டருக்கோ கிடைக்க வில்லை. சொந்த பந்தங்களைக்கூட நெருங்கவிடாமல் அனாதைப் பிணம் போல அவர்களது இறுதிக் கிரிகைகள் அன்று முடிந்ததை நினைக்க அவள் மனம் வேதனைப்பட்டது.

‘இப்படி எத்தனையோ புதுப்புது வியாதிகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. பிளேக்நோய் பரவிய போதும் இப்படித்தான் பரபரப்பாக இருந்தார்களாம். கொஞ்ச நாள் போனால் இதற்கும் மருந்து கண்டு பிடித்து விடுவார்கள். தெரிந்துதானே இந்தத் தொழிலை ஏற்றுக் கொண்டோம். எல்லாமே கடந்து போகும், அதற்காகப் பயந்து கொண்டே இருக்க முடியுமா?’

‘புரியுதம்மா, எங்க நிலைமையை நினைச்சுப் பாருங்கோ, நாங்க அப்பாவை ஏற்கனவே இழந்திட்டோம், அந்த வேதனை மனசைவிட்டு இன்னமும் விலகவில்லை, எங்களுக்கென்று யார் இருக்கா, இந்த நிலையிலை உங்களையும் நாங்க இழக்கத் தயாரில்லை. எங்களுக்கு நீங்க வேணுமம்மா..!’

‘கவலைப்படாதே, எனக்கு ஒன்றும் ஆகாது. இந்த நோய் பரவாமல் பாதுகாப்பாக எனக்கு முகமூடியும், அதற்கேற்ற உடையும் கொடுத்து இருக்கிறார்கள். போதிய பாதுகாப்பு வசதிகள் இருக்கின்றன.’

‘எப்படியம்மா கவலைப்படாமல் இருக்க முடியும்? மருத்துவ மனையில் உள்ள நோயாளிகள் மூலம் ஏற்கனவே வைரஸ் கிருமிகள் உனக்கும் பரவி இருந்தால் என்ன செய்ய முடியும்? அப்படி ஒரு நிலையை எங்களால் தாங்க முடியாதம்மா. எங்களுக்கு நீ வேணும். எங்களை அணைக்க, ஆதரவாய் இருக்க எங்களுக்கு நீங்க வேணுமம்மா..!’ அவள் தாயைக் கட்டியணைத்துக் கொண்டு விம்மினாள்.

கண்ணீர்த் துளிகள் கண்ணுக்குள் பூத்து, அவளது பளிங்குக் கன்னத்தில் துள்ளித் தெறித்தன.

‘அம்மா, கொஞ்ச நாட்கள் என்றாலும் ஏதாவது சாட்டு சொல்லிவிட்டு வேலைக்குப் போகாமல் இரேன்’ அவள் கெஞ்சினாள்.

அவளது மனசுக்குள் போராட்டம். யாருக்காக இந்த வாழ்க்கை..?

தொடக்கத்தில் சேவை மனப்பாண்மையோடுதான் இந்தத் தொழிலில் சேர்ந்தாள். ஆனால் காலப்போக்கில் தனித்துப் போனதால், அதுவே குடும்பத்திற்கு கட்டாயம் தேவையான, ஊதியம் தரும் ஒரு தொழிலாகவும் போய்விட்டது. கணவன் பிரிந்தபின் மூன்று பிள்ளைகளையும் வளர்த்து எடுக்க வேண்டிய பொறுப்பு தானாகவே அவளிடம் வந்து விழுந்தது.

இந்த நிலையில் வேலையை விட்டு திடீரென விலகமுடியுமா? பிள்ளைகளுக்கென்ன வேலையை விட்டுவிடு என்று சொல்லுவார்கள், வேலையில்லாவிட்டால் இந்த மூன்று ஜீவன்களுக்கும் யார் படியளப்பது?’

ஒரு தாயாய் பாசம் அவளை இழுத்தது, ஒரு தாதியாய் கடமை அழைத்தது.

சந்தர்ப்ப வாதிபோல, ஏற்றுக் கொண்ட கடமையைச் செய்யாமல் பாதி வழியில் விட்டு விலகி விடுவேனோ என்று அவள் மனசு சங்கடப்பட்டது. முடிவில் கடமை உணர்வே வென்றது. லாவன்யாவை ஒரு மாதிரியாகச் சமாதானப் படுத்திவிட்டு ஆஸ்பத்திரிக்குச் சென்றாள்.

வழமையாக அடிக்கடி சந்திக்கும் முகங்களை அன்று அதிகம் காணமுடியவில்லை. கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள் ஆஸ்பத்திரியைக் கதிகலங்க வைத்துக் கொண்டிருந்தன.

எல்லோரும் முகத்தை மூடி மறைத்துக் கொண்டு இருப்பதில் இருந்து நோயின் வேகமும் தாக்கமும் புரிந்தது. பலி எடுத்தே தீருவேன் என்பது போல மனித வேட்டையில் இறங்கிவிட்டது புதிய கொரோனா வைரஸ். இரண்டு நாட்களின்முன் நோய் கண்ட நோயாளிகள் சிலர், நேற்று ஒரு நர்ஸ், இன்று காலையில் ஒரு டாக்டர், இப்படியே வைரஸின் பழி வாங்கும் படலம் நீடித்தால் இது எங்கே போய் முடியுமோ?

வேலை முடியும் நேரம் திடீரென இருவர் முகத்தை மூடி மறைத்தபடி உள்ளே வந்தார்கள். தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பதற்காக மற்றவர்களிடம் இருந்து அவளை விலத்தி வைப்பதாக சொன்னார்கள். மருத்துவமனை ஊழியர்களுக்கு சுயதனிமைப்படுத்தல் தேவை என்பதைக் குறிப்பிட்டு மருத்துவ மனையிலேயே தங்கியிருக்கச் சொன்னார்கள்.

அவள் தனிமைப் படுத்தப் பட்டாள். இரண்டு நாட்களாக தொலைபேசியில் வீட்டிற்குச் செய்தியைப் பரிமாறினாள். பிள்ளைகள் பயந்து போயிருந்தனர். வீட்டுக்குள்ளேயே இருக்கச் சொன்னாள். கவலைப்பட வேண்டாம், சீக்கிரம் வந்துவிடுவேன் என்று அவர்களுக்கு ஆறுதல் சொன்னாள்.

மறுநாள் லாவன்யா அவளோடு தொடர்பு கொண்டாள். தங்களையும் பாடசாலைக்கு சில நாட்களுக்கு வரவேண்டாம் என்று தடுத்து வைத்திருப்தாகச் சொன்னாள். லாவன்யா வேறு எதையோ சொல்லத் தயங்குவது புரிந்தது.

‘என்னம்மா சொல்லு’

‘வந்.. து சுகன்யா..!’

‘தயங்காமல் சொல்லம்மா.. சுகன்யாவிற்கு என்ன..?’

‘சுகன்யா பருவமடைஞ்சிட்டா என்று நினைக்கிறேன்’

‘கடவுளே..! இந்த நேரத்திலேயா..?’ அவள் ஒரு நிமிடம் உறைந்து போனாள். இயற்கைக்குத் தெரியுமா இவளது நேரகாலம். நல்ல செய்தியைக்கூட சந்தோஷமாகக் கேட்கமுடியாத தனது நிலையை நினைத்து வேதனைப்பட்டாள்.

‘தேவி ஆன்டியைக் கூப்பிட்டிருக்கலாமே?’

‘போன் பண்ணினேன், யாரையுமே எங்க அப்பாட்மென்டுக்கு வரக்கூடாது என்று தடுத்திட்டாங்க, எல்லோரையும் சுயதனிமைப் படுத்தி இருக்கிறாங்க. அதனாலே இங்கே வர அவங்க எல்லோரும் பயப்படறாங்க.’

வேறு வழியில்லை. தொலைபேசி ஊடாக என்னென்ன செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தல் சொன்னாள். லாவன்யா பருவம் அடைந்தபோது அவளுக்கு என்னென்ன செய்தாளோ அதை எல்லாம் நினைவுபடுத்திச் செய்யச் சொன்னாள். சுகன்யாவிற்கும் தொலைபேசியில், ‘பயப்பட ஒன்றுமில்லை, இப்படியான நேரத்தில் பதட்டப்படாமல் சந்தோஷமாக இருக்க வேண்டும்’ என்றும் அறிவுறுத்தல் சொன்னாள்.

உடம்பு சுடுவது போல அசதியாக இருந்தது. மூச்சு முட்டியது. வாயையும், மூக்கையும் மறைத்துக் கொண்டு டாக்டர் ஒருவர் வந்து பார்த்தார். இருமல் இருக்கா, மூச்சுவிட கஷ்டமாக இருக்கா என்றெல்லாம் கேட்டுவிட்டு மருந்துகள் கொடுத்தார். இம்மியூன் சிஸ்டம் என்று சொல்லப்படுகின்ற நிற்பீடனத்தொகுதி பலவீனப்பட சாத்தியக்கூறுகள் இருப்பதாகச் சொன்னார். எதற்கும் பரிசோதனை முடிவுகள் வரும்வரை சில நாட்கள் அங்கேயே இருக்க வேண்டும் என்று தடுத்து வைத்தார்.

சோதனை செய்யும்போது டாக்டரின் முகம் வாடியிருப்பதைக் அவன் கவனித்தாள். பல வருடங்கள் தாதியாக வேலை செய்த அனுபவத்தில் டாக்டரின் முகத்தைப் பார்த்தே, நாடி பிடித்துப் பார்ப்பதுபோல என்ன நடந்திருக்கும் என்பதை ஓரளவு புரிந்து கொள்ளும் அனுபவம் பெற்றிருந்தாள்.

டாக்டர் சொன்னது எதுவும் அவளது காதில் விழுந்ததாகத் தெரியவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக ஏதோ ஒன்று அவளை இயக்குவது அவளுக்குப் புரிந்தது. அவளது நினைவுகள் எல்லாம் பிள்ளைகளைச் சுற்றியே வந்து கொண்டிருந்தன. பிள்ளைகள் தனித்துப் போய்விடுவார்களோ என்ற பயம் திடீரென அவளைப் பிடித்துக் கொண்டது.

‘கணவனால் தனித்து விடப்பட்ட உனது வாழ்க்கைப் போராட்டத்தை ஓயவிடாதே, நீ வாழவேண்டும், துணிந்து போராடு’ என்று உள்மனம் அவளை உத்வேகப்படுத்தியது.

என்னமாய் ஓடியாடித் திரிந்த அவளைக் கண்ணுக்குத் தெரியாத இந்தக் கொரோனா வைரஸ் முடக்கிப் போட்டிருந்தது. நினைவு, தவறுவது போலவும் மீண்டும் திரும்பி வருவது போலவும் மாஜா ஜாலம் காட்டியது.

‘எங்களுக்கு நீ வேணும். எங்களை அணைக்க, ஆதரவாய் இருக்க எங்களுக்கு யார் இருக்கா, நீங்க வேணுமம்மா..!’ திரும்பத் திரும்ப அந்தக் குரல் எதிரொலித்தது.

பிள்ளைகளின் தெளிவற்ற முகங்கள் ஒவ்வொன்றாக மாறிமாறி வந்து போயின.

‘பிள்ளைகளுக்காகவாவது இன்னும் கொஞ்சக் காலமாவது நான் உயிர்வாழவேண்டும் கடவுளே, கடவுளே..!’ அவளது மனம் மன்றாடிப் பிரார்த்தித்தது.

‘உன்னால் முடியும், நம்பிக்கையைக் கைவிடாதே!’

எங்கோ தூரத்தில் ஆம்புலன்ஸ் வண்டியின் சங்கொலி சன்னமாய்க் கேட்டது. 

தொடர்புடைய சிறுகதைகள்
மாலை நேரத்து சப்வேயின் பரபரப்பில் மூழ்கிப் போகாமல் அவன் ஒரு ஓரமாக ஒதுங்கி நின்றான். ஆண்கள் பெண்கள் எல்லோரும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். அனேகமானவர்களின் முகங்களில் புன்னகை தவழ்ந்தது. அவர்களின் கைகளில் இன்று வேலன்டைன்ஸ்டே என்பதைச் சொல்லாமல் சொல்லும் வண்ணமலர்கள் சிரித்தன. குறித்த நேரத்திற்கு ...
மேலும் கதையை படிக்க...
"பிடிச்சிருக்கா?" அவன் அந்தப் புகைப்படத்தைத் திருப்பித் திருப்பிப் பார்த்தான். கல்யாணத்தரகர் கொண்டு வந்த ஆல்பத்தைப் பார்த்து அலுத்துப் போயிருந்த அவனுக்கு ஒரு கவரில் அவர் பிரத்தியேகமாய் எடுத்து வைத்துக் கொண்டு வந்து காட்டிய அந்தப் படங்களைப் பார்த்ததும் பிரமித்துப் போய் விட்டான். இப்படி ...
மேலும் கதையை படிக்க...
தலைப்பு - கண்ணதாசனின் பாடல் வரிகளில் இருந்து.. எதிரே வந்த அவளை என்னையறியாமலே நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் அதைக் கவனித்திருக்க வேண்டும். அவளது நடை மெல்லத் தளர்ந்த போது, கண்களில் தயக்கம் தெரிந்தது. ‘சுருண்டகூந்தல்காற்றினில்ஆட துள்ளும்கால்கள்சிறுநடைபோட மருண்டுநின்றாய்மானெனவிழித்தாய் மஞ்சள்முகத்தைஏனடிகவிழ்த்தாய்’ ஏன் தலை கவிழ்ந்தாள் எனத் தெரியவில்லை. என்னைக் கடந்து ...
மேலும் கதையை படிக்க...
அவளுக்கு ஒரு கடிதம்
அன்று காதலர் தினம். காலேஜ் இளசுகள் மனதிலே இருக்கும் அன்பைப் பரிமாறிக் கொள்ளும் நன்நாள். சுரேஷ_ம் இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தான். எப்படியாவது அவளிடம் அந்த வேலன்டைன் கார்ட்டைக் கொடுத்து விடவேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டான். அவனது நண்பர்கள் நேற்று அவனிடம் வேடிக்கையாகச் ...
மேலும் கதையை படிக்க...
அந்த செய்தி என்னை மிகவும் பாதித்திருந்தது. ஒரு கணம் கணனித் திரையைப் பார்த்தபடி உறைந்து போயிருந்தேன். காரணம் நேற்றுத்தான் ஹரம்பிக்கு ஒரு லைக் போட்டு பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தேன். இப்பொழுதெல்லாம் முகநூல் இருப்பதால் உடனுக்குடன் வாழ்த்துச் செய்தி அனுப்பி எங்கள் விருப்பத்தைச் ...
மேலும் கதையை படிக்க...
தைமாதத்தில் ஒரு நாள். தைப் பொங்கல் தினம். எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. பூம்பனி கொட்டிக் கொண்டிருந்தது. அன்று தான் உன்னை முதன் முதலாகக் கண்டேன். பனிப் பிரதேசத்தில் வாழும் எஸ்கிமோ போல நீயும் குளிர் ஆடை அணிந்து தலையை மூடியிருந்தாய். கோயில் ...
மேலும் கதையை படிக்க...
அவள் வருவாள் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்தது. தொடக்கத்தில் இருந்தே எங்களுக்குள் சின்னச் சின்ன ஊடல்கள் இருந்தாலும் அதை நாங்கள் பெரிது படுத்தவில்லை. அன்று நான் அப்படி நடந்திருக்கக் கூடாதுதான். என்ன செய்வது ஆத்திரத்தில் எழுந்த முன்கோபம் என்னை அப்படிச் செய்ய வைத்து ...
மேலும் கதையை படிக்க...
(செல்போன்கள் பாவனைக்கு வரமுன்பு கனடாவில் நடந்த ஒரு சம்பவம் சிறுகதையாக்கப்பட்டது) வாசலில் அழைப்பு மணி கேட்டது. கதவைத் திறந்து எட்டிப் பார்த்தேன். எட்டு வயது மதிக்கத்தக்க பையன் ஒருவன் வாசலில் நின்றான். முகத்தில் ஒரு துடிப்புத் தெரிந்தது. ‘நைக்கி’ ரீ சேட், நைக்கி சூ, ...
மேலும் கதையை படிக்க...
இரண்டு கடிதங்கள் வந்திருந்தன. ஒன்று அவர் எதிர் பார்த்துக் கொண்டிருந்த டி.என்.ஏ ரிப்போட், மற்றது அழகாக குண்டு குண்டாக அவருக்கு நன்கு பழக்கப்பட்ட கையெழுத்தில் முகவரி எழுதப்பட்டிருந்தது. ஊட்டி கான்வென்ட் ஹாஸ்டலிலிருந்டது எழுதப்பட்டிருந்த அக்கடிதத்தைத்தான் முதலில் பிரித்துப் படித்தார். 'அன்புள்ள அப்பா' பதினைந்து வயது ...
மேலும் கதையை படிக்க...
ஒருவருடைய பெயரை வைத்துக் கொண்டு அவருடைய காலத்தைக் கணிக்க முடியுமா என்று சில சமயங்களில் நீங்கள் யோசிக்கலாம். முடியும் என்று நாங்கள் நம்பினோம். ஒரு காலக்கட்டத்தில் யாழ்ப்பாணத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ஒரேவிதமான முடிவுள்ள பெயர்களைத்தான் பெற்றோர் சூடினார்களோ தெரியவில்லை, அப்படியான தமிழ்ப் ...
மேலும் கதையை படிக்க...
காதலுக்கு இந்தநாள்!
பெண் ஒன்று கண்டேன்
முகத்தை ஏனடி கவிழ்த்தாய்?
அவளுக்கு ஒரு கடிதம்
ஹரம்பி
காதல் வந்திடிச்சோ..
அவள் வருவாளா?
அடுத்த வீட்டுப் பையன்
ஒரு அப்பா, ஒரு மகள், ஒரு கடிதம்!
கனகலிங்கம் சுருட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)