தாயாகிப் போன மகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 8, 2022
பார்வையிட்டோர்: 5,185 
 

(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இந்த முதலாவது தவணை பெண் பார்க்கும் படலத்தி லேயே ஒருவேளை மணப்பெண்ணாக மாறக்கூடிய பவானியை, வழக்கப்படி எவரும் அலங்கரிக்கவில்லை . அவள் தன்னைத் தானே அலங்காரம் செய்யத் துவங்கினாள். இந்த மாதிரிச் சந்தர்ப்பங்களில், கன்னித்தன்மை கழியப் போகும் எல்லாப் பெண்களும் சிணுங்குவது போல் சிணுங்கி, நாணிக் கண் புதைக்கத்தான் செய்தாள் பவானி. “மாப்பிள்ளைப் பையனை எவ்வளவு நேரமாய் காக்க வைக்க உத்தேசமாம்!” என்று கொக்கரித்தபடியே இடுப்பில் கையை வில்லாக்கி கண்ணை நெருப்பாக்கினாள் அண்ணி.

பவானி வெட்கத்தைத் தூக்கிக் குப்பையில் போட்டு விட்டு , சமையலறைக்குள் ஓடினாள். அண்ணிக்காரி நீட்டிய, அவளது கல்யாணப்பட்டை உடம்பில் சுற்றினாள். அந்தப் பச்சைப் புடவைக்கு மஞ்சள் ஜாக்கெட் மேட்சாகவில்லை. இதனால் வருகிற மேட்ச் போய்விடக் கூடாதே….!

மைத்துனி ஜாக்கெட்டைப் பார்ப்பதைப் பார்த்ததும் புரிந்து கொண்ட அண்ணி கனகம், “பரவாயில்லை…சேலையை இழுத்து முடினால் சரியாப் போயிடும். இழுத்துத் தான் மூடணும்” என்றாள்.

பவானி புடவையை ஜாக்கெட் போடாதவள் போல, இழுத்து மூடிக் கொண்டாள். அண்ணிக்காரி இப்போதுதான் கண்ணில் காட்டும் பவுடரை பூசிக்கொண்டாள்.

“மாப்பிள்ளை பையன் சினிமாக்காரின்னு ஓடிப் போறதுக்கா? இவ்வளவு போதும். காதுல விழுகிற முடியை ஒதுக்கணும் கன்னத்தை உப்பி உப்பி பார்க்கப்படாது. காபி கொடுத்தமா வந்தமான்னு வரணும். இங்கே நின்னு அவனை உற்றுப் பார்க்கறது மாதிரி அங்கேயும் பார்க்கப்படாது. மாப்பிள்ளை பொண்ணைப் பார்க்கற ஏற்பாடே தவிர….. பொண்ணு மாப்பிள்ளையை பார்க்கிறதுக்காக இல்ல எனக்கும் கொஞ்சம் பூக் கொடுக்கறது கொடுக்கிற குடும்பத் துப் பொண்ணுக்குத்தானே இதெல்லாம் தெரியும்…”

மகிழ்ச்சியான எதிர்பார்ப்பில் அல்லாடிய பவானி, தலை யில் வைத்த மல்லிகைப் பூவை ஒட்டு மொத்தமாக அண்ணி யிடம் நீட்டிவிட்டு, கையறு நிலையில் தவித்தாள். அந்தத் தவிப்பு தாங்க மாட்டாது அண்ணியிடமே ஆறுதல் தேடுபவள் போல் பார்த்தாள். வெளியறையில் அண்ணனின் கலகலப்பான சத்தம்.

“ஏதோ என் சக்திக்கு ஏற்ப என் ஸிஸ்டருக்கு கண்டிப்பா செய்வேன்”

“என்ன உளறுறாரு – உளறத் தெரியாமல்….. யாருகிட்ட சக்தி இருக்கு … சிவமேன்னு பேசாமல் இருக்காமல், இந்த மனுஷனுக்கு இந்தப் பேச்செல்லாம் எதுக்கு……?”

“எங்களுக்குப் பொண்ணு நல்லா இருக்கணும். குடும்பத் துக்கு அடக்கமாய் இருக்கணும். அதுவும் முக்கியமுன்னு சொல்லல. அது மட்டும் தான் முக்கிய முன்னு சொல்ல வாறேன்”

“யாரு இந்த மாதிரி பேசறது…. பையனோட அப்பா வா….. முருகா , இவன் குணத்தை மறைச்சுடலாம். ஆனால் அழகை மறைக்க முடியாதே இந்த மூஞ்சைப் பார்த்து சம்மதிப்பாங்களா?”

“எங்கப்பா சாதாரண கிளார்க்…. அதுவும் கிம்பளம், லஞ்சமுன்னு வாங்காமல் நேர்மையாய் வாழ்ந்த கிளார்க். இதனால் நானும் கிளார்க்காய்த் தான் வேலையில் சேர முடிஞ்சது….. என் ஸிஸ்டர் எஸ்.எஸ்.எல்.சி.க்கு மேல படிக்க முடியல…”

“அப்பா…. பொல்லாத அப்பா. தன்னோட லட்சியத்த மற்றவங்க கஷ்டத்துல சோதிக்கறதையே தொழிலாய்க் கொண்ட மனுஷன். அவரு புத்திக்குத்தான் இப்போ கட்டிலும் உடம்புமாய் கிடக்காரு. அவர் நடந்துகிட்ட முறைக்கு இவருக்கு ப்யூன் வேலை கூட கிடைச்சிருக்காது. எப்படியோ எங்கப்பா ஏற்பாட்டுல கிடச்சுது. இதுல வேற எங்கப்பாவாம்….. எங்கப்பா… எங்கப்பாவுந்தான் வேலை பார்த்தாரு. கிளார்க் வேலைதான். பங்களா கட்டலியா.. மகன்களை பெரிய பெரிய வேலையில் வைக்கலியா , என் னைத் தான் பாடாதி வீட்ல…”

பவானிக்கு, கோபம் வழக்கமாக வருவது போல் வந்து, அதுவே பின்னர் இயலாமையாய் நெஞ்சுக்குள் போய் நெருப்பாய் எரிந்தது. ‘ஒரு சமயம் வீட்ல வந்து பத்தாயிரம் ரூபாயை வச்சுட்டு ஒருத்தன் கெஞ்சுறான். அவனை உடனே போறீயா, போலீஸ்ல ஒப்படைக்கட்டுமான்னு விரட்டுன எங்கப்பாவையா இப்படிக் கேட்டுட்டே…. ஒன்னைக் கட்டும்போது அதே பத்தாயிரம் ரூபாயை நீட்டுன ஒங்கப்பா வின் கையைத் திருகி , ரூபாயைப் பறித்து, அவரோட சட் டைப் பைக்குள்ளேயே திணித்த எங்கப்பாவையா அப்படிக் கேட்டுட்டே… ? ஒங்கப்பா , எங்கப்பாவை அப்போ கைநீட்டிக் கும்பிட்டதை மறந்துட்டியா , இரு….. இரு….. எனக்குக் கல்யாணம் ஆகி இந்த வீட்டை விட்டுப் போகும்போது ரெண்டு கேள்வியாவது கேட்டுட்டுப் போறேன்.’

பவானியின் அலங்காரம் கால் மணி நேரத்திற்குள் முடிந் தது. அண்ணி திட்ட முடியாத அலங்காரம். இந்த பத் தாண்டு காலத்தில், இன்றைக்கு மட்டுமே உடம்பைச் சுற்றிப் பட்டுப் புடவை. இன்றைக்கு மட்டுமே கொண்டை சுமக்கிற அளவுக்கு பூ மொந்தை …..

***

சதாசிவம் ஒரு ஒழுங்குப் பிரச்னையைக் கிளப்பினார்.

“எப்படியோ அப்பாவைப் பற்றிச் சொல்லிட்டேன். இப்போ அவரையும் இங்கே உட்கார வைக்கணுமே….. என்ன சொல்றே …..? ”

“தத்துப் பித்துன்னு உளறிப்புட்டு என்கிட்டே வந்து பின் யோசனை கேட்டால் எப்படி? படுத்த படுக்கையாய் கிடக்கிறவரை மியூஸியத்தில் காட்டுறது மாதிரி காட்டணு மாக்கும்…. அவங்க அபசகுனமாய் நெனைச்சு ஓடணுமாக் கும்.”

“அதுக்கில்ல …. அவரும் மாப்பிள்ளையை ஒரு தடவை பார்த்தால் நல்லது…. பெண்ணைப் பெற்றவராச்சே ?”

“அதுதான் அதிர்ஷ்ட ம் இருந்தால் மணவறையில் பார்த்துக்கலாமே….?”

“சரி , ஒன்கிட்டே சண்டை போட எனக்கு நேரமில்ல. இந்த ஸ்வீட்ஸை எடுத்துக்கிட்டு வா. பவானி, கடைசியில் காபித் தட்டோட வந்தால் போதும்.”

திருவும் திருமதியுமான சதாசிவங்கள், ஒரு பெரிய டிரே யில் ஸ்வீட் தட்டுகளையும் மிக்ஸர் தட்டுகளையும் சேர்ந்தாற்போல் எடுத்துக்கொண்டு சமையலறையைத் தாண்டிய போது, அவர்கள் பெற்றுப் போட்ட இரண்டு செல்வங்கள், பெற்றோரை வழிமறித்து, ஒரு தட்டைக் கீழே வீழ்த்தி புதிய புறநானூற்றைப் படித்துக் கொண்டிருந்தபோது –

அப்போது தான் அப்பா ஞாபகம் வந்ததற்காக, பவானி சங்கடப்பட்டாள். அதற்காக தன்னைத் தானே தண்டிப்ப பவள் போல், தலையில் அடித்துக் கொண்டாள். அப்பாவை அப்போதே பார்த்து பிராயச்சித்தம் செய்யத் துடித்தவளாய், கொல்லைப்புறத்திற்குப் போகும் வழியில் இருந்த ஒரு சிற்றறைக்குள் போனாள். ஒரு காலத்தில் இது அப்பாவின் பூஜையறை. இன்னும் கூட ஒரு திட்டில் சில சாமி படங்கள் இருந்தன. அப்பா மெத்தையில்லாத ஒரு டேப் கட்டிலில் மல்லாந்து கிடந்தார். கண்களில் கொசு மொய்த்தன. அவற்றை விரட்டி விரட்டி அடித்து களைத்தவர் போல், இரண்டு கைகளையும் மார்பில் போட்டிருந்தார்.

பவானி, பெண் பார்க்கும் படலம் நடக்கப் போகிறது என்ற நினைப்பையும் மீறி பிள்ளை போல் கிடந்த பெற்ற வரை தாய்போல் தவிதவித்துப் பார்த்தாள். அண்ணனை யும தன்னையும் இடுப்புக்கு ஒன்றாக வைத்துக்கொண்டு ராட்டினம் சுற்றியவர். இப்போது அச்சறுந்து குப்புறக் கிடக் கும் குடை ராட்டினம் போல் கிடப்பதைப் பதைபதைத்துப் பார்த்தாள். பத்தாண்டுகளுக்கு முன்பு ரிடையரானவர். “ஒங்களுக்கா ஐம்பத்தெட்டு…. நம்ப முடியாத உண்மை ‘ என்று பிரிவு வழாவில் பேசியவர்கள் எல்லாம் பெரிசாய்ப் பேசினார்கள். மனதைப் போல் வைரப்பட்ட உடம்பு.

எலும்பும் சதையும் ஒன்றாகி, இறுகிப் போயிருந்த அந்த உடம்புக்குள் இருக்கும் இதயத்திற்கும் ஒரு அட்டாக வந்து விட்டது அதுவும் போன மாதம், நீரிழவு இல்லை . ரத்த அழுத்தம் இல்லை . அப்படியும் பயங்கரமான தாக்குதல் ….. அவரை நடமாட விடாமல் செய்துவிட்டன. லேசாய் எழுந்து, கட்டிலில் உட்கார்ந்து சாயலாம். அதுவும் உரிய நேரத்தில் உரிய மருந்தைக் கொடுத்தால் ……

பவானி , வெட்கத்தையும் மீறி எதையோ சொல்லத் துடி துடித்தாள். “எப்பா , எப்பா’ என்று கூட பேசிவிட்டாள். ஆனால் கட்டிலோடு கட்டிலாய் அதன் இற்றுப்போன சட்டம் போல் கிடந்த அந்த மனிதர், தனக்கு எல்லாம் தெரியும் என்பதுபோல், கையைத் தூக்கி , விரல்களைச் சேர்ந்தாற் போல் குவித்தபோது, பவானி அவர் பாதங்களில் முகம் போட்டாள் . அவர் பெருவிரல் தூசியையே திலகமாக்கிக் கொண்டாள். அப்போது –

அண்ணிக்காரி ஓடிவந்தாள். “அம்மாவுக்கு கல்யாணம் செய்துக்கிற நெனப்பு இல்லையா….. பொண்ண வரச்சொல் லுங்கன்னு சொல்றது கேட்கலியா?” என்று பல ‘இல்லியா’க் களைப் போட்டபோது, இல்லை இல்லை என்பது போல் பவானி சமையலறைக்குள் போய், டிசைன் போட்ட பக்கத்து வீட்டு டிரேயை நீட்ட, அண்ணி காபி டம்ளர்களை அதில் வைத்தாள்.

தயங்கி நின்ற பவானி, பிறகு யந்திரமாய் நடந்தாள். ஏதோ பணிப்பெண் போல் எல்லோருக்கும் காபி டம்ளரை நீட்டினாள். மாப்பிள்ளையைப் பார்க்க வேண்டும் என்ற பேரவா எழவில்லை எவனோ ஒருத்தன்….. நல்லவனோ கெட்டவனோ…. கிடைத்தால் போதும். இந்த நரகத்தில் இருந்து விடுபட்டால் போதும்….

***

பவானி ஒவ்வொருவர் முன்னாலும் சற்றே குனிந்து, டிரேயுடன் நின்றாள். பின்னர் – நாணப்படாமல், நளினப் படாமல், சிற்றுண்டி விடுதி சேவகர் போல், மட மடவென்று நடந்து சமையலறைப் பக்கம் வந்து நின்று கொண்டாள். அம்மா இல்லாக் குறையை அழுது தீர்த்தாள். அப்போது –

மாப்பிள்ளைக்குப் பெண்ணை பிடித்துவிட்டது போலும். அப்பாவிடம் எதையோ சொல்ல, அவர் ஆனந்தக்கூத்தாய் சொன்னார்.

“என் மகனுக்குப் பெண்ணை ரொம்பப் பிடிச்சிருக்கு… மிலிடேரிக்காரன் பாருங்க….. சட்டுப் புட்டுன்னு சொல்லிட்டான அவனுக்கு லீவு முடியப் போகுது….. அதனால் அடுத்த வாரம் கல்யாணத்தை வச்சுக்கணும். பெண்ணையும் அவன் லூதியானாவுக்கு கூட்டிட்டுப் போறான். குவார்ட்டர்ஸ் கிடைச்சுட்டதாம். என்னடா சொல்றே!… ஓ அப்படியா… சதாசிவம் ஸார்! பையன் என்ன சொல்றான்னா , இது பெண் விடுதலை காலமாம். அதனால் பெண்கிட்டே நேருக்கு நேராய் கேட்கணுமாம். சரி , பொண்ணைக் கூட்டிட்டு வாங்க.”

பவானிக்கு உச்சி குளிர்ந்தது. சமையலறையில் இருந்து வெளிப்பட்டு அந்த அறையின் பின்சுவரில் சாய்ந்தபடியே , அவரை’ ஓரக்கண் போட்டு பார்த்தாள். ராணுவக்கார னுக்கே உரிய குளோஸ்கட், சிலிர்த்து நின்ற மீசை – லட்ச ணக் கருப்பு – அதாவது பளபளப்பான கருப்பு….

“அப்பா , ஒங்க மகளுக்கும் ஒரு காலம் வந்துட்டு….” என்று சொல்லப் போனாள். “என்னை அவருக்குப் பிடித் திருக்குப்பா” என்பதை எப்படிச் சொல்வது என்று தெரியா மல், கட்டிலின் விளிம்பில் உட்கார்ந்து, தந்தையின் கையை எடுத்து முத்தமிட்டாள். பிறகு, மாத்திரையைத் தூளாக்கி அவர் வாயில் போட்டு, டம்ளரின் விளிம்பிலேயே அவர் உதடுகளைப் பிரித்து மருந்தூட்டியபோது – அண்ணிக்காரி, ஆவேசமாக வந்தாள். ஆத்திரமாகக் கத்தினாள்.

“பொல்லாத அப்பா …. பொல்லாத மருந்து….. மருந்து வாங்கியே இந்த வீடு மட்டமாப்போயிட்டு. மனசு இருந்தால் எழுந்து உட்காரலாம்.”

பவானியும் தந்தையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். திடீரென்று அந்தப் பெரியவர் வாய்க்குள் போய்க் கொண்டிருந்த மருந்தை வெளியே துப்பினார். ஒரு சொட்டு கூட உடம்புக்குள் போகப்படாது என்பது போல், காறிக் காறித் துப்பினார். இதற்குள், “பெண்ணை வரச் சொல்லுங்கள்” என்று ஒரு சத்தம்.

பவானி எழுந்தாள். அப்பாவை லட்சியத்தோடும், உதட்டைப் பிதுக்கி நின்ற அண்ணியை அலட்சியத்தோடும் பார்த்தபடியே நடந்தாள். பிள்ளை வீட்டாருக்கு முன்னால் வந்து, அவர்கள் கேள்வி கேட்கும் முன்னாலேயே பதிலளித் தாள்.

“நான் யாரையும் அவமானப்படுத்தும் நோக்கத்துல பேசல….. இப்போ எனக்கு கல்யாணம் தேவையில்லன்னு தீர்மானிச்சுட்டேன்…. எல்லாரும் என்னை மன்னிக்கணும்”.

பவானி, மனதில் மணவாளனாக சில நிமிடங்களுக்கு முன்பு கற்பிக்கப்பட்டவனைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட் டாள். பிறகு கம்பீரமாய் திரும்பி வந்தாள். அண்ணி அமர்க் களப்பட்டாள். கைகளை நெறித்தாள். அண்ணன், சொல் லாமல் கொள்ளாமல் எழுந்து போன பிள்ளை வீட்டார் பின் னால் சிறிது நடந்துவிட்டு, மீண்டும் வீட்டுக்குள் வந்து தலையில் கைவைத்து நின்றபோது, அவர் கையைப் பிடித் தவள் இப்போது கத்தோ கத்தென்று கத்தினான்.

“இவள் கெட்ட கேட்டுக்கு இந்த மாப்பிள்ளை பிடிக்கலியாக்கும். எவனைக் கூட்டிட்டு ஓட திட்டம் போட்டிருக்கான்னு கேளுங்க. பாவி , நம்மை தலைகுனிய வச்சுட்டாளே… இந்த வீட்டுல இவள் இனிமேல் இருக்கப்படாது.”

பவானி, அண்ணியின் பேச்சை காதில் வாங்காதவள் போல், தந்தையை நெருங்கினாள். அவருக்கு விஷயம் புரிந்துவிட்டது.

செத்துக் கொண்டிருந்த தன் கையைத் தூக்க முடியாமல் தூக்கி, மகளின் இடுப்பில் அடித்தார் அப்பா. சின்னக் குழந்தை பிஞ்சு விரலால் அடித்தால் எப்படியோ அப்படி இருந்தது அந்த பிஞ்சு விரல் பட்டது. பவானி அழுத்தம் திருத்தமாக அத்தனை விளைவுகளையும் எதிர்நோக்கத் தயாராக இருப்பவள் போல் கர்ஜித்தாள். அண்ணன் அண் ணிக்குக் கேட்கும்படி. ஒலித்தாள்.

“உங்களை இந்த நிலையில் விட்டுப் போக எனக்கு மனசு வரலப்பா. வேளா வேளைக்கு மருந்தில்லாமலும், சோறு இல்லாமலும் நீங்க தவிக்கப் போறத நினைச்சால் என்னால் எப்படிப்பா வடநாட்டில் போய் வாழ முடியும்? உங்களைவிட எனக்கு யாரும் உசத்தியில்லப்பா. நான் தாயாகிப் போன மகளப்பா …. இந்த வீட்ல இடமில்லன்னா ….. வேறு எந்த வீட்லயாவது தங்கி கூலி வேலை செய்தாவது. உங்களைப் பாதுகாப்பேன் அப்பா.”

– பூநாகம் (சிறுகதைகள் தொகுப்பு), முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1993, கங்கை புத்தக நிலையம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *