Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

தாம்பூலம்!

 

”மம்மி… சீக்கிரம் வாயேன்… டி.வி-யில டாடியக் காட்டறாங்க!”

வெள்ளையில் நீலப்பூக்கள் சிதறிய மார்பிள் ஷிபான் சேலையைக் கட்டி ‘பின்’ பண்ணிக் கொண்டு இருந்த அருந்ததி.. அப்படியே ஓடி வந்தாள்.

டி.வி-யில் விநாயக்கின் முகத்தை க்ளோசப்பில் காட்ட ”ஹை.. டாடி!” என்று குதித்தாள் ஆறு வயது தீபிகா.

விநாயக்கை தெரியாதவர்கள் இருக்க முடியாது. சினிமாவில் ஹீரோவின் அருகிலேயே ஆடும் அழகான டான்ஸர். பிரபலமான டான்ஸ் ட்ரூப்பில் எப்போதும் பிஸியாக இருப்பவன். இப்போது இரண்டு புதுப் படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராக அழைப்பும் வந்திருக்கிறது.

பாட்டு முடியும் வரை கணவரின் ஆட்டத்தை பெருமிதமுடன் பார்த்துக் கொண்டிருந்த அருந்ததி, ”தீபி.. போதும்.. ரிமோட்டைக் கொடு! டாடி வர்றதுக்குள்ளே ஹோம் வொர்க்கை முடிச்சுட்டு கிளம்பு!”

”ப்ளீஸ் மம்மி.. இன்னும் கொஞ்ச நேரம்..!”

”அப்ப சரி.. உன் பர்த்டே டிரெஸ்ஸை நாங்களே பார்த்து செலக்ட் பண்ணிட்டு வர்றோம்..!” என்றதும் எதுவும் பேசாமல் அம்மாவிடம் ரிமோட்டைக் கொடுத்துவிட்டு உள்ளே சென்றாள் தீபிகா.

அருந்ததி, மியூசிக் சேனலிலிருந்து சீரியலுக்கு மாற்றி வைத்துவிட்டு சோபாவில் அமர்ந்தாள்.

பதினைந்து நிமிடம் ஓடியே போக… வாசலில் பைக் சத்தம் கேட்டது. அருந்ததி வாசலுக்கு வருவதற்குள் விநாயக் உள்ளே நுழைந்தான்.

டி.வி-யில் வயதான பெண்மணி ஒருத்தியை படுக்க வைத்து மாலை போட்டு, நெற்றியில் ஒரு ரூபாய் நாணயம் அளவுக்கு பொட்டு வைக்கப்பட்டிருக்க.. சுற்றிலும் ஆண்களும் பெண்களும் கதறி அழுதுக் கொண்டிருந்ததை.. இன்ச் பை இன்ச்சாக காட்டி.. உருக வைத்துக் கொண்டிருந்தார்கள்.

”ஊய்.. ஊஃப்.. ஃபண்ணு!” அவன் வார்த்தை குழறியதை எளிதாக புரிந்து கொண்ட அருந்ததி.. தலையில் அடித்துக் கொண்டே டி.வி-யை அணைத்தாள்.

”ஏங்க.. ஆஃப்.. பண்ணுங்கறதைக்கூட பக்கவாதம் வந்தா மாதிரிதான் பேசணுமா? இந்தக் கண்றாவியை எப்பதான் விட்டுத் தொலைக்கப் போறீங்களோ.. ஸ்மெல் வேற குமட்டுது..!”

”போழி..!” அடிப்பதுப்போல் பாவனை செய்தான்.

”சரி.. சரி.. சீக்கிரம் டிரெஸ் பண்ணிட்டுக் கிளம்புங்க… நானும், தீபியும் ரெடி! நீங்க ஏன் வர்றதுக்கு லேட்டாச்சு?”

விநாயக் வாயில் குதப்பிக் கொண்டிருந்த குட்கா பாக்கை வாஷ்பேஸினில் துப்பி விட்டு, ”நடிகர் சங்கத்துல கொஞ்சம் லேட்டாயிடுச்சு. இதோ.. அஞ்சு நிமிஷத்தில குளிச்சுட்டு ரெடியாயிடறேன்… சூடா டீ போடு..” என்றான்.

”குளிக்கிறது மட்டுமில்லே.. பிரஷ் பண்ணிட்டும் வரணும்!” என்ற அருந்ததி கிச்சனுக்குள் நுழைந்தாள்.

விநாயக் குளித்துவிட்டு வருவதற்குள் டீ ரெடியாக இருந்தது.

”அடடே… என் குட்டிமாவும் ரெடியாயிடுச்சே!” மகளை கொஞ்சியபடி டீயைக் குடித்தான்.

”நேரமாச்சுங்க!”

”ரெண்டே நிமிஷம்.. வந்துட்டேன்!” என்று அறைக்குள் சென்றவன் நான்கு நிமிடத்தில் வந்து விட்டான்.

கணவனைப் பார்த்தவள் முறைத்தாள்.

‘என்ன.. டிரெஸ் நல்லாயில்லையா?’ என்றான் சைகையில்.

”ஏங்க.. ஒரு அஞ்சு நிமிஷம் கூட இந்த கருமாந்திரத்தை மறந்திருக்க முடியலியா? கஷ்டப்படுத்தறீங்க..”

”ஷாரி..!”

”உங்கக்கிட்டே கொஞ்ச நேரமாவது மனசு விட்டு சந்தோஷமாப் பேச முடியுதா? எது பேசினாலும் இந்த மாதிரிதான் பதில் வருது.. சதா இந்த பாக்கை மென்னுக்கிட்டிருந்தா.. வராத நோய்க்கூட வந்துடுமோனு பயமாயிருக்கு. ‘இந்த விஷயத்துல உங்க ஹஸ்பண்ட் ரொம்ப ஓவர்’னு பார்க்கறவங்க எல்லாம் என்கிட்ட அட்வைஸ் பண்ற அளவுக்கு நடந்துக்கறீங்களே.. இதுக்கு பதிலா சுவிங்கம் போடுங்கனாலும் கேக்க மாட்டேங்கறீங்க. வண்டி ஓட்டறப்பதான் போடறீங்கனுப் பார்த்தா.. காலையில எழுந்ததுலேர்ந்து படுக்கையில விழற வரைக்கும் பொக்கை வாயோடதான் இருக்கீங்க.” – அருந்ததி புலம்பி தள்ள.. விநாயக் பெருமூச்சுவிட்டு, வாட்ச்சை காண்பித்துவிட்டு வாசலுக்கு நடக்க..

அருந்ததி, தீபிகாவுடன் பின் தொடர்ந்தாள்.

வழக்கம் போலவே அன்றும் கிழக்கு கடற்கரை சாலையில் சூட்டிங். உப்பிய கன்னங்களுடன் பைக்கில் ‘விர்’ரென பறந்துக் கொண்டிருந்தான் விநாயக்.

காலை நேரம்.. நெரிசலான போக்குவரத்து என்பதால் கிடைத்த இடங்களிலெல்லாம் வளைத்து நெளித்து ஓட்டுவதே சாதனைதான்.

சற்றே இடைவெளி கிடைக்க, இன்னும் வேகத்தை அதிகப்படுத்தி, பழக்க தோஷத்தில் எச்சிலை ‘புளிச்’சென சாலையோரம் துப்பியவன்.. அதிர்ந்துப் போனான்.

பின்னால் வந்து கொண்டிருந்த ஒரு பைக் மனிதரின் வெள்ளை உடையிலும், முகத்திலும் சிவப்பாக.. திட்டு திட்டாக மாடர்ன் ஆர்ட் போல் அவன் துப்பிய எச்சில்!

அந்த நபரும் பைக்கை நிறுத்த.. இவனும் நிறுத்தினான்.

அந்த நபருக்கு ஐம்பத்தைந்து வயதிருக்கும். மரியாதைக்குரிய தோற்றம். வழுக்கைத்தலை, நெற்றியில் பட்டை, நடுவில் குங்குமப்பொட்டு, வெள்ளை பேண்ட், வெள்ளை முழுக்கை சட்டை! அந்த சட்டைதான் இப்போது சிவப்பாக மாறி இருந்தது.
கடந்துச் சென்ற சில வாகனங்களும். வேகத்தை கட்டுப்படுத்தி.. இவர்களை வேடிக்கைப் பார்க்க.. விநாயக் கூசிப் போனான்.

‘இந்த மனிதர் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணுவாரோ? சட்டையைப் பிடித்து அடிப்பாரோ? என்ன பண்ணலாம்?’

‘என்ன பெரிசா.. ஆக்ஸிடன்டா ஆயிடுச்சு? ஆஃப்ட்ரால் எச்சில்! அவ்வளவுதானே… நாம எதுக்கு பயப்படணும்? கத்தினால் நாமளும் கத்த வேண்டியதுதான்! சூட்டிங்குக்கு வேற டைமாயிடுச்சே. இந்தக் கிழவன் வேற நேரம் பார்த்து உயிரை வாங்கறான்! பார்க்கற பார்வையைப் பாரு.. ரமணா விஜயகாந்த் மாதிரி!’

அருகில் வந்த அந்த மனிதர் இவனை ஏற இறங்கப் பார்த்தார்.

”ஸ.. ஸாரி சார்.. தெரியாம..”

”இல்லே தம்பி.. உனக்குதான் நான் நன்றி சொல்லணும். நல்ல காரியம் பண்ணியிருக்கீங்க. மனசு குளிர்ந்துப் போயிருக்கு.. நன்றி தம்பி!”

விநாயக் அந்த பதிலை எதிர்பார்க்கவில்லை. திகைத்தான்.

”இல்லே சார்.. அவசரமா போய்ட்டிருந்தேன்.. நிஜமாகவே கவனிக்கலே..!”

”நானும் அவசரமாதான் போய்ட்டிருந்தேன். என் முப்பது வயசுப் பொண்ணுக்கு இப்பதான் ஒரு வரன் அமையிற மாதிரி இருந்தது. அதைப் பேசி முடிக்கத்தான் போய்க்கிட்டிருந்தேன். சகுனத்துல கண்மூடித்தனமா நம்பிக்கை வச்சிருக்கிற இடம்! ஹ¨ம்.. எப்படியாவது தாம்பூலம் மாத்திடலாம்னு நம்பிட்டிருந்தேன். நீங்க தாம்பூலத்தையே கரைச்சு மேல ஊத்திட்டீங்க. பரவாயில்ல.. நீங்க புறப்படுங்க தம்பி. அவசரம்னு சொன்னீங்களே.. புறப்படுங்க.. உங்க வேலையாவது தடைபடாம இருக்கட்டும்!” – மகளுக்கு நடக்க வேண்டிய நல்ல காரியம் முளையிலேயே கிள்ளி எறியப்பட்ட வேதனை அந்தத் தகப்பனின் முகத்தில் அப்பட்டமாகப் பரவியிருந்தது.

அவர் வார்த்தைகள், விநாயக்கின் உச்சந்தலையில் ஆணியால் அடித்தது போல் இறங்கி வலித்தது.

அன்று முழுக்க… அவனால் எந்தக் காரியத்திலும் முழுமையாக ஈடுபட முடியவில்லை.

அவரின் பெருந்தன்மையான மன்னிப்பு.. அவன் மனதைக் கடுமையாக தண்டித்தது. அதற்கு பதில் அவர் அவனை அடித்தோ, திட்டியோ இருந்திருந்தால்.. இயல்பாக இருந்திருப்பான். மறந்திருப்பான். அவனால் கல்யாண வயதைத் தாண்டிய ஒரு பெண்ணின் வாழ்க்கையல்லவா தடைபட்டுவிட்டது?

அருந்ததிக்கு ஆச்சர்யமாக இருந்தது. ‘என்ன.. இப்போல்லாம் விநாயக் பாக்கை தொடுவதே இல்லையே!’

விநாயக் செல்போனை பாக்கெட்டில் போட்டுக் கொண்டு கிளம்பினான்.

”வர்றேன் அருந்ததி.. சூட்டிங் முடிய லேட்டாகும். எனக்காக வெய்ட் பண்ணாதே.. சாப்பிட்டுடு!

அங்க நான் செல்லை ஆஃப் பண்ணிடுவேன்.. என் ஃப்ரெண்ட் அப்ஸர் வீட்டுக்கு போன் பண்ணினா.. நான் கிளம்பிட்டேன்னு சொல்லிடு.. வரட்டுமா?”

”சரிங்க!”

‘அவர் இப்படி தெள்ளத் தெளிவாக பேசி எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது?’ அருந்ததியின் மனசு காற்றைவிட லேசாய் இருந்தது.

ஆனால், விநாயக்கின் மனசு..?

- ஏப்ரல் 2009 

தொடர்புடைய சிறுகதைகள்
கௌசல்யாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. உள்ளுக்கும் வாசலுக்குமாக நடந்து கொண்டிருந்தாள். இன்று ஞாயிற்றுக்கிழமை. அவள் கணவர் வீட்டுக்கு வரும் நாள்! சமையல்காரப் பெண்மணி எடுபிடி வேலை செய்ய.. சமையலில் மும்முரமாக இருந்த சைலஜா இவளைப் பார்த்துவிட்டு கேலியாக சிரித்தாள். ''பார்த்தியா அங்கே? மேடம், ஐயாவுக்காக பரபரன்னு ...
மேலும் கதையை படிக்க...
ஆதவன் கிழக்கில் உதிக்க, ஈரக் கூந்தலை உலர்த்திய படி பால்கனியில் வந்து நின்றாள் வெண்மதி. பனிப் புகை முற்றி--லும் விலகாத நிலையிலும் மலை மேல் ஏறுபவர்களும், தரிசனம் முடிந்து கீழிறங்கு-பவர் களுமாக.. திருமலை சுறுசுறுப்பாக, பரவசமாக இருந்தது. பிரம்மோற்சவம் நெருங்கிக் கொண்டிருந்த ...
மேலும் கதையை படிக்க...
அம்மா பரிமாறிய இட்லி குட்டி நிலவுகளைப் போன்றிருக்க, ரசனையுடன் ருசித்துச் சாப்பிட்டான் ராகேஷ். மங்களம் எதை சமைத்தாலும் அதில் அபரிமிதமான சுவை இருக்கும். காரணம், சமையலில் அன்பை சற்று தூக்கலாகவே கலப்பாள். ''சேர்ந்து சாப்பிடலாம்னு நினைச்சேன்.. அதுக்குள்ளே சாப்பிட்டே முடிச்சிட்டியாண்ணா!'' என்றவாறே வீட்டுக்குள் நுழைந்த ...
மேலும் கதையை படிக்க...
வசுமதி சடக்கென்று பாம்பைப் போல் தலையை உயர்த்தி, தன் புத்தம் புது கணவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள். ‘‘எ.. என்ன?” "நீ கல்யாணத்துக்கு முன்னாடி யாரை யாவது லவ் பண்ணியிருக்கியானு கேட்டேன்!’’ இயல்பாக, புன்னகை மாறாமல் கேட்ட பிரமோத் வசீகரமாக இருந்தான். ரூம் ஸ்ப்ரே, ஊதுபத்தி, மல்லிகை, ...
மேலும் கதையை படிக்க...
மேற்கில் தோன்றிய உதயம்!
நிம்மதி!
சொல்லாமலே..
நெஞ்சாங்கூட்டில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)