Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

தாம்பத்தியம் = சண்டை + பொய்

 

அதிவேகமாக உள்ளே நுழைந்த மகளைப் பார்த்தாள் வேதா. வழக்கம்போல், ஆத்திரமும், தன்னிரக்கமுமாகத்தான் இருந்தாள் பத்மினி. யாருடன்தான் ஒத்துப்போக முடிந்தது இவளால்!

`ஒரே குழந்தையுடன் நிறுத்திக்கொண்டால் அதிக செலவாகாமல் தப்பிக்கலாம். வேலையும் மிச்சம்!’ என்று எப்போதோ எண்ணியது தவறோ என்ற சிந்தனை உதித்தது. “வேலை முடிஞ்சு நேரா வர்றியா?” அனுசரணையாகக் கேட்பதுபோல் கேட்டாள். “என்ன சாப்பிடறே?”

“ஒரு சொட்டு விஷம்!”

“அதெல்லாம் இந்த வீட்டிலே கிடையாது. தோசை வேணுமா? மாவு இருக்கு. ஆனா, புளிக்கும்”.

“விஷமே சாப்பிடறேன்னு சொல்றேன். என்னமோ, புளிப்பு, அது, இதுன்னு! ஒண்ணும் வேண்டாம், போ!” முணுமுணுத்தபடியே தன் அறைக்குள் நுழைந்தாள் பத்மினி. அவள் கணவன் வீட்டுக்குப் போய் ஒரு வருடம் ஆகியிருந்தாலும், அவள் குணம் புரிந்து, அந்த அறையை அப்படியே விட்டு வைத்திருந்தார்கள்.

உள்ளே நுழைந்தவள் அதே வேகத்தில் திரும்ப வந்தாள்.

“பாத்துப் பாத்து எனக்குப் பண்ணி வெச்சீங்களே, ஒரு கல்யாணம்!” என்று தாயைச் சாடினாள்.

“மாப்பிள்ளைக்கு என்ன குறைச்சல்? படிப்பு இருக்கு. கைநிறைய சம்பளம் வாங்கறார்!”

தனக்குப் பிடிக்காதவருக்கு அம்மாவே வக்காலத்து வாங்குவதா! பச்சைத் துரோகம்! பத்மினி பொருமினாள்.

“தான்தான் ஒசத்தின்னு கர்வமும் இருக்கு. அதை விட்டுட்டியே!”

வேதாவுக்கு அலுப்பாக இருந்தது. வாரம் தவறாமல் இவள் கணவனுடன் சண்டை போட்டுக்கொண்டு தாய்வீட்டுக்கு வந்துவிடுவது எப்போதுதான் நிற்குமோ!

“அவர் செய்யறதுதான் ரைட்டு. நான் என்ன செஞ்சாலும், தப்பு கண்டுபிடிச்சுக்கிட்டே இருக்கணும்மா அவருக்கு!” பத்மினியின் குரல் தழுதழுத்தது.

அதே சமயத்தில், “பத்மினி இருக்காளே, அவ செய்யறது தப்புன்னு ஒத்துக்கவே மாட்டாம்மா. அதுதான் பிரச்னையே!” என்று தன் தாயிடம் முறையிட்டுக்கொண்டிருந்தான் கார்த்தி.

“அவ குணம்தான் புரிஞ்சு போச்சில்ல? என்ன செஞ்சாலும் கண்டுக்காதே,” என்று அறிவுரை வழங்கினாள் மங்களம்.

“அது எப்படி? இன்னிக்கு உப்புமா பண்ணியிருந்தா. பேரிலே உப்பு இருக்குதான். அதுக்காக கரண்டி கரண்டியா உப்பை வாரிப் போடணுமா?”

“அப்படியே தூக்கிக் கொட்டிட்டு, ஹோட்டல்லே போய் சாப்பிட்டிருக்கணும் நீ!”

“தோணிச்சு. ஆனா அவ கத்துவாளேன்னு பயந்து, ரொம்ப கஷ்டப்பட்டு சாப்பிட்டு முடிச்சேன்”.

மங்களத்திற்கு அவனுக்குப் பரிந்து பேசத் தோன்றவில்லை. ஒரே மகன் என்று பார்த்துப் பார்த்து, அவனுக்குப் பிடித்ததாக சமைத்துப்போட்டது ஒரு காலம். இன்று அவன் அவளுக்கு மகன் மட்டுமில்லை. இன்னொரு பெண்ணின் துணைவன். அவனைப்போலவே தானும் சிறுபிள்ளைத்தனமாக, விட்டுக்கொடுக்காமல் இருந்தால் எப்படி!

“நிறைய படிச்ச பொண்ணு வேணும்னு சொன்னே. அவ படிச்சுக்கிட்டே இருந்ததிலே சமைக்க கத்துக்க நேரமில்லாம போயிருக்கும்னு அப்பவே தெரியாம போச்சு! இனிமே என்ன செய்யறது! விட்டுப் பிடி!”

மகன் காதில் அந்த அறிவுரை விழுந்ததாகத் தெரியவில்லை. உப்புமா விஷயத்திலேயே இருந்தான். “நானும் மொதல்லே ஒண்ணும் சொல்ல வேண்டாம்னுதான் பாத்தேன். ஆனா, அவ வாய்க்குப் பயந்து,” என்று சொல்லிக்கொண்டே போன மகனை இடைமறித்தாள் மங்களம். “என்னடா பயம்?” புரியாமல் கேட்டாள்.

“முந்தி ஒரு தடவை பீன்ஸ் பொரியலைக் கறுக்க விட்டுட்டா. அடுப்பிலே எதையாவது வெச்சுட்டு, டி.வியைப் பாத்து யோகா பண்ணப்போனா வேற எப்படி இருக்கும்? `இதை எவன் சாப்பிடுவான்?’னு கத்தினேனா! `எனக்கு இவ்வளவுதான் தெரியும். ஒங்கம்மாமாதிரி சமைச்சுப்போட பொண்டாட்டி வேணும்னா, படிக்காத பொண்ணா பாத்து கட்டியிருக்கணும்,’ அப்படின்னு காளி மாதிரி ஆடினா, பாரு! பயந்துட்டேன்”.

தாய்க்கும் கோபம் வந்தது. இவர்கள் சண்டையில் தன்னை எதற்கு இழுக்கிறாள்?

“ஆபிசிலிருந்து நேரா வர்றியா?” பேச்சை மாற்றப்பார்த்தாள்.

“ஆமா. அவ ஏன் எங்க வீட்டிலே இருக்கப்போறா! அம்மா வீட்டிலே அவளுக்கு ஆசார உபசாரம் நடக்குமில்ல!” சற்றுப் பொறாமையுடன் கூறியவன், “இதுக்குத்தான் அழகில்லாத, அனாதைப் பொண்ணாப் பாத்துக் கட்டியிருக்கணும்கிறது!” என்றான் நொந்த குரலில்.

கட்டியவளுக்கு ஒரு நியாயம், இவனுக்கு ஒரு நியாயமா? கோபம் வந்தால் போக இவனுக்கு அம்மா வேண்டுமாம், அதையே மனைவி செய்தால் ஆத்திரம்! நல்ல பிள்ளை!

சிரிப்பை அடக்கிக்கொண்டு மங்களம் யோசித்தாள். தான் உபசாரம் பண்ணி உணவளிப்பதால்தான், ஒவ்வொரு முறை மனைவி கோபித்துக்கொண்டு பிறந்தகம் போய்விடும்போதும் சாப்பிட இங்கு வந்துவிடுகிறான்!

“எனக்குக் கொஞ்ச நாளா உடம்பே சரியா இல்லே, கார்த்தி. இன்னிக்குப் பெரிசா ஒண்ணும் ஆக்கலே. நீ போற வழியிலே ஏதாவது ஹோட்டல்லே சாப்பிட்டுக்க,” என்று அந்த பிரச்னைக்கு ஒரு முடிவு கட்டினாள்.

தனது ஏமாற்றத்தை மறைத்தபடி, “ஏண்டா கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு இருக்கு! பேசாம, டைவர்ஸ் வாங்கிடறேன்,” என்றபடி எழுந்தான் கார்த்தி.

தியானம் பண்ணுவதாகப் பெயர் பண்ணிக்கொண்டு தன் அறையிலிருந்த அப்பா எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு வெளியே வந்தார். “பசியோட வந்திருக்கான், பாவம்! ஒடம்பு முடியலேன்னு ஏன் கதை விடறே?” என்று மனைவிமேல் பாய்ந்தார்.

“நாம்ப போடாத சண்டையா! அப்புறம் எப்படியோ சமாதானமாகி, நான் இந்த முப்பது வருஷமா ஒங்ககூட குப்பை கொட்டலியா? இந்த காலத்துப் பசங்க ஆஊன்னா, டைவர்ஸ் அது இதுன்னு போயிடறாங்க! உள்ளூரிலே பொண்ணு எடுத்ததே தப்பு!” என்றாள் மங்களம்.

ஹோட்டலைக் கடந்தபோது கார்த்திக்கு விரக்தி எழுந்தது. சமைக்கத் தெரிந்தவன்களெல்லாம் கைநிறையச் சம்பாதிக்கலாம் என்று பேராசையாக வெளிநாட்டுக்குப் போய் சமைக்கிறான்கள். இங்கிருப்பவனோ, முன்னே பின்னே சமையலறைக்குப் போயிருக்க மாட்டான்.

மனைவி மோசமாகச் சமைத்தால் திட்ட முடியும். இங்கு அது நடக்குமா?

பசியுடன் வீடு திரும்பியதும் அவனுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. பத்மினி வீட்டில்தான் இருந்தாள்! அதுவும் அழகாக அலங்கரித்துக்கொண்டு!

அப்படியானால், தான் நினைத்ததுபோல் அவள் கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்குப் போகவில்லையா?

“இன்னிக்கு ரொம்ப வெயில், இல்லே? களைப்பா இருக்கு. நாம்ப ரெண்டுபேரும் வெளியே போய் சாப்பிடலாமா?” என்று பத்மினி அன்பு சொட்டச் சொட்ட கேட்டபோது, `நல்லவேளை, சமைக்கிறேன்னு நீ கிளம்பலே!’ என்ற எண்ணம் எழுந்தது கார்த்திக்கு.

கூடவே, `எவ்வளவு அழகா இருக்கா! இவளோட சேர்ந்து நடந்துபோனா, அவனவன் பொறாமையில சாவான்!’ என்றும் தோன்ற, “நானும் அதைத்தான் சொல்லணும்னு நினைச்சுக்கிட்டே வந்தேன்! உனக்கு வெளியிலேயும் வேலை, வீட்டிலேயும் வேலை, பாவம்! அது நியாயமில்லே,” என்று உருகிவிட்டு, “நல்லா சாப்பிட்டு, ரெஸ்ட் எடு. அப்பத்தானே ராத்திரி..!” என்று கண்களைச் சுழற்றினான்.

`பொய் சொன்னா, சாமி கண்ணைக் குத்திடும்!’ என்று சொல்லி வைத்திருப்பவர் பிரம்மச்சாரியாகவே காலத்தைக் கடத்தியிருப்பார் என்று தோன்ற, சிரிப்பு வந்தது அவனுக்கு. 

தொடர்புடைய சிறுகதைகள்
“ராதிக்குட்டியை இன்னிக்கு டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போகணும்!” என்றாள் அன்னம், முணுமுணுப்பாக. “இப்பத்தானே போனே?” அலுப்பும் எரிச்சலுமாக வந்தது கேள்வி. பத்தாண்டு மண வாழ்க்கைக்குப் பிறகு தவமிருந்து பெற்ற பெண்! பிறவியிலேயே ஏதோ ரத்தக்கோளாறுடன் பிறந்துவிட்டதே என்ற ஆதங்கம் கருணாகரனுக்கு. ஆனால், சிரிப்பும் விளையாட்டுமாக இருந்த மகளின் ...
மேலும் கதையை படிக்க...
தந்தையின் பக்கத்தில் அமர்ந்து, கடந்த முக்கால் மணி நேரமாகப் பஸ்ஸில் பிரயாணம் செய்துகொண்டிருந்த புலியம்மாவின் உள்ளத்தில் ஒரே சமயத்தில் பயமும், குதூகலமும் நிரம்பி இருந்தன. ஆறு வருடங்களாகத் தமிழில் பயின்றுவிட்டு, இப்போது மலாய்ப் பள்ளியில் -- முற்றிலும் புதியதொரு சூழ்நிலையில் -- படிக்கவேண்டுமென்ற ...
மேலும் கதையை படிக்க...
“அம்மா! டான்ஸ் கிளாஸ் போகணும்!” காலில் செருப்பணிந்து, வெளியே கிளம்பத் தயாராக நின்ற லதா கையாலாகாதவளாய் முனகினாள். வன்செயல்களின் கூடாரமாக இருந்த அந்தப் புறம்போக்குப் பகுதியில் ஒரு பதின்மூன்று வயதுப்பெண் தனியாக நடக்க முடியாது. மகளின் ஆர்வத்தைத் தடை செய்வதா, அல்லது கணவனின் ...
மேலும் கதையை படிக்க...
விளையாட்டு வீரரானதால், கட்டுமஸ்தான உடல். எல்லாவற்றையுமே விளையாட்டாக எடுத்துக் கொள்வதுபோன்ற சிரித்த முகம், அன்பு கலந்த கண்டிப்பு, அசாதாரணமான கனிவு... இவை போதாதா ஒருவர்மீது காதல் கொள்ள! விளையாட்டுப் பயிற்சிகளால் அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு பிரபாவைத் தேடி வந்தது. அதனால் அத்தனை ...
மேலும் கதையை படிக்க...
ஒங்களுக்கு எதையாவது ஒழுங்கா பண்ணத் தெரியுதா? கண்ணுக்கு எட்டியவரை நீல வானும், நீலக் கடலுமாக அழகு கொப்பளித்தது அந்த இடத்தில். அந்த இனிமையைக் குலைப்பதுபோல், அபஸ்வரமாக ஒலித்தது விசாலியின் கட்டைக் குரல். தன்னைத் தாக்கிய மனைவியின் குரல் காதில் விழுந்தும், தற்காலிகமாகச் ...
மேலும் கதையை படிக்க...
பயம் X 4
தாந்தித்தாத்தாவும், பொன்னுசாமி கங்காணியும்
பரத நாட்டியமும் சில பெண்களும்
பழி
நெடுஞ்சாலையில் ஒரு பயணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)